திங்கள், 19 செப்டம்பர், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

19-09-2016 அன்று நடந்த

நாட்டேரி ஸ்வாமியின்

54 ஆவது டெலி உபந்யாஸம்





அல்லது


ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இராம நாடகம்

பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 1  களம் 7

ஏழாங்களம்

இடம்:--        சுமித்திரையின் அரண்மனைக்குச் செல்லும் வழி
காலம்:--       காலை
பாத்திரங்கள்:--  இராமர், இலக்ஷ்மணர்

இலக்ஷ்மணர்:-- (மிகுந்த கோபாவேசத்தோடு) என்ன அநியாயம் இது! ஒரு பெண்ணால், சகல சற்குண சம்பன்னராகிய எனது அண்ணா தமக்குரிய அரசை இழந்துவிடுகிறதா? வெகு நன்றாயிருக்கிறது! மன்னவர்க்கு மோகம் மண்டை கொண்டுவிட்டது போலிருக்கிறது! இருக்கட்டும் பாதகமில்லை. காரியம் கைமிஞ்சுவதற்குள் என் காதிற்கெட்டிவிட்டது. ஸ்ரீராமபிராற் கிளையவன் ஒருவன் உள்ளானென்பதை உலகமறியக் காலம் கிட்டிவிட்டது. என் கைவில்லிற் பூட்டிய நாணியும், தோளில் மாட்டிய அம்பறாத் தூணியும் உள்ளவரையில் ஸ்ரீராமபிரான் திருமுடியை அபகரிக்க ஒருவராலுமாகாது. பரதா, உன்னைப் பதற அடிக்கிறேன், சீக்கிரம் கேகய நாட்டிலிருந்து வா. சிங்கக்குட்டிக்கிடும் இரையை நாய்க்குட்டிக்கு ஊட்ட எண்ணினாளே அந்த அறிவற்ற பேதை! என்ன கால விபரீதமிது!
புவிப்பாவை பரங்கெடப் போருவந் தோரை யெல்லாம்
அவிப்பானு மவித்தவ ராக்கையை யண்ட முற்றக்
குவிப்பானு மெனக்கொரு கோவினைக் கொற்ற மௌலி
கவிப்பானு நின்றேனிது காக்குநர் காமின் வந்தே
.
அடி கைகேயி! உனது மகனும் உன் உற்றார் உறவினரும் கூடி வந்தாலும் வாருங்கள். ஸ்ரீராமபிரானுக்குத் துணைவனும் உடன்பிறந்தானும் யார் தெரியுமா? சண்டை செய்யவந்தவர்களைச் சின்னாபின்னப்படுத்திப் பூமி தேவியின் பாரமொழியச் சாடுவோன்; சாடி, அவர்கள் பிணங்களை ஆகாயமளவும் எட்டும்படி குவியல் குவியலாகப் போடுவோன்; உலகிற் கிறைவனும், எனக்குத் தலைவனுமான ஸ்ரீராமச்சந்திரருக்கு முடி சூடுவோன்; அவனே இராமாநுஜன். அவன் உள்ளளவும் முறையற்ற பரதன் நாடாளான்; முறையுள்ள முதல்வன் காடேகான்; மாதின் சூழ்ச்சியும் வெல்லாது; மன்னவன் பேச்சும் செல்லாது; கோசலா தேவியின் துயரமும் மாறும்; இராமபட்டாபிஷேகமும் நிறைவேறும்.
இராமர்:-- (புன்னகையோடு வருகிறார்; இலக்ஷ்மணர் நிற்கும் நிலையைக் கண்டு சற்றுப் பின்வாங்குகிறார். இலக்ஷ்மணர் அவர் பாதத்தில் வந்து பணிகிறார். இராமர் அவரைப் பார்த்து) இலக்ஷ்மணா, உனக்கு மங்களமுண்டாகக் கடவது. என்ன இது! சாந்த சொரூபியாகிய நீ இந்தக் கோலத்தோடு நிற்பதென்ன காரணம்? நாணி பூட்டிய வில் எதற்கு?பாணம் மாட்டிய தூணி எதற்கு? யார்க்கென்ன நேரிட்டது? ஏனப்பா இந்தப் போர்க்கோலம் பூண்டாய்?
இலக்ஷ்மணர்:-- அண்ணா! அயோத்திக்கரசே!
விண்ணாட்டவர் மண்ணவர் விஞ்சையர் நாகர் மற்றும்
எண்ணாட்டவர் யாவரும் நிற்கவோர் மூவராகி
மண்ணாட்டுநர் காட்டுநர் வீட்டுநர் வந்த போதும்
பெண்ணாட்ட மொட்டேனினிப் பேருல கத்து ளண்ணா!
சொர்க்க, மத்திய பாதாளம் ஆகிய மூவுலகத்தார்களானாலும், வேறெவ்வுலகத்தவர் களானாலும், உலகைப் படைத்துக் காத்து அழித்து வரும் மும்மூர்த்திகளானாலும் வரட்டும்; என்னைத் தடுக்க அவர்களால் ஆகாது. அண்ணா! இனி இந்த உலகத்தில் பெண்களைத் தலையெடுக்க வொட்டேன். தலைவா! தங்களுக்கு வியாகூலம் வேண்டாம்.
இராமர்:-- இலக்ஷ்மணா! யார் உனக்கு என்ன கெடுதல் செய்தார்கள்? ஏன் இந்த பதஷ்டம்? பொறுமையைக் கைவிடாதே.
இலக்ஷ்மணர்:-- அண்ணா, என்ன அநியாயம் இது? பொறுமை எதுவரையும் பொறுக்கும்?
மெய்யைச் சிதைவித்து நின் மெய்ம்முறை நீத்த நெஞ்ச
மையிற் கரியாளெதிர் நின்னைநன் மௌலி சூட்டல்
செய்யக் கருதித் தடைசெய்குநர் தேவ ரேனும்
துய்யைச் சுடுவெங் கனலிற்சுடு வான்று ணிந்தேன்.
அரசர் உலகறியக் கூறிய மொழியைப் பொய்யாக்கவும், உண்மையில் தனக்கேற்பட்ட அரசுரிமையை நீக்கவும் கருதிய அந்த வன்னெஞ்சக் கள்ளிக்கெதிரே, தங்களுக்குத் திருமுடி நான் சூட்டுகிறேன். இதைத் தடை செய்யத் தேவர்களே வந்தாலும் வரட்டும். அவர்களைப் பஞ்சையழிக்கும் தீப்போலத் தகித்துவிடுகிறேன். இது நிச்சயம். அண்ணா! பரதனுடைய பக்ஷத்தைச் சேர்ந்தவனாவது அவருக்கு நன்மை தேடுகிறவனாவது இருந்தால் அவன் இருந்த இடமே தெரியாமல் செய்து விடுகிறேன். பொறுமை, பொறுமை என்கிறீர்கள். பொறுமை போதிப்பதற்கு இதுவல்ல சமயம். நாம் அடக்கமாய் இருப்பதனாலேதான் பிறர் நம்மை அலக்ஷியம் செய்கிறார்கள்கைகேயியின் சொல்லைக்கேட்டு நமது தந்தை நமக்கே பகைவராயிருப்பாரானால், அவரையும் சத்துருவாகவே எண்ணி அதற்குத் தகுந்தபடி நடத்த வேண்டியதுதான். தங்களுக்கு உரிய பதவியைத் தங்களுக்குக் கொடுக்க அவர்தாமோ வேண்டும்? அண்ணா!
வலக்கார் முகம்என்கைய தாகவவ் வானு ளோரும்
விலக்கா ரவர்வந்து விலக்கினு மென்கை வாளிக்
கிலக்கா யெரிவித்துல கேழினோ டேழு மன்னர்
குலக்கா வலுமின்றுனக் கியான்றரக் கோடி நீயே
என் கையில் வில்லுள்ளளவும் தேவர்களும் என்னை வந்து தடுக்க மாட்டார்கள். ஒருக்கால் தடுத்தாலும் அவர்களை என் கைவாளுக்கிரையாக்கி, ஈரேழுலகமும் காக்கும் அரசர்க்கதிபதியாய் தங்களுக்கு நான் முடி தருகிறேன். தாங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். புருஷ சிங்கமே! நியாயப்படி தங்களுக்குச் சொந்தமான இந்த நிலத்தை எந்த பாத்தியதையால் அரசர், கைகேயியின் புத்திரனுக்குக் கொடுக்க விரும்புகிறார்? இராச்சியத்துக்கு உடையவர் தாம், உமக்கு உடையவன் நான். நம் இருவரையும் பகைத்துக்கொண்டு பாராள்பவன் எவன்? என் உயிரைக் கொடுத்தானாலும் நான் உங்களுக்கு நாட்டைக் கொடுப்பேன். இது சத்தியம்.
இராமர்:-- தம்பீ! இலக்ஷ்மணா! தாய் சொற்றுறந்தொரு வாசகமில்லை”, “தந்தைசொல் மிக்க மந்திரமில்லைஎன்ற முதுமொழிகளை நீ அறியாதவனல்ல. களர் நிலத்தில் விதை முளைத்ததுபோல உன்னிடத்தில் இந்தக் கோபம் வந்தது ஆச்சரியமாயிருக்கிறதே!
இலக்ஷ்மணர்:-- அண்ணா! இந்த இராச்சியம் முழுதும் தங்களுக்கே என்று தந்தை கூறியிருக்க அதை மாற்றி ஒருத்தி தங்களை வனம்போக்குவதை விடவா நான் கோபம் கொண்டது ஆச்சரியம்?
இராமர்:-- இலக்ஷ்மணா! என்ன பதஷ்டமாகப் பேசுகிறாய்! ஒருத்தி யென்கிறாயே, அது யார் தெரியுமாநம்மைப் பிரியமாய் போற்றுந் தாய்.
இலக்ஷ்மணர்:-- தெரியாமற் சொல்லுகிறீர்கள்! அவள் தங்களைப் பிடித்தாட்ட அரண்மனையை வெகுநாளாய்ச் சுற்றிக்கொண்டிருந்த பேய்.
இராமர்:-- இலக்ஷ்மணா! வேண்டாம் அவ்விதமான துஷ்ட வார்த்தைகள்
இலக்ஷ்மணர்:-- அண்ணா! தங்களுக்கு முடிசூடுகிற வரையில், தாங்கள் சொல்லுவது ஒன்றும் என் செவிக்கேறாது. தங்களிடத்துப் புத்திரன் என்ற வாத்ஸல்யம் சிறிதும் இல்லாத ஒரு தந்தை தங்களைக் காட்டுக்கேகும்படி சொல்வது! தாங்களும் அப்படியே காடு செல்வது! இவைகளையெல்லாம் பார்த்துக்கொண்டு நான் இந்த அற்ப சரீரத்தை வைத்துக்கொண்டு உயிர் வாழ்வதோ! வெகு நன்றாயிருக்கிறது. நான் உயிரோடிருந்தால், என் கண்ணெதிரே தங்களுக்கு இராச்சியத்தைத் தருவதாகச் சொல்லிப் பின் இல்லையென்ற மன்னனுக்கும் எனக்கும் என்ன பேதம்? அண்ணா! அந்தக் கொடியோளாகிய கைகேயியின் சூழ்ச்சி வெல்லுமா? அவள் கேட்டதென்ன இரண்டு வரங்கள்தாமே? அவைகளும் தற்காலம் கொடுக்கப்பட்டன அல்லவே! தந்தை அவளுக்கு சம்பராசுர யுத்தகாலத்தில் வரம் கொடுத்தார். அப்பொழுது நாம் பிறக்கக்கூட வில்லை. அங்ஙனமாக அவ்வரங்கள் நம்மை உபாதிக்க ஏதுவேது? ஒருகால் ஏதுவிருப்பதாக வைத்துக்கொண்டாலும், இரண்டு வரங்கள் கேட்டு எத்தனை வரங்கள் பெறுவது? தங்களுக்கு முடிசூட்டக் கூடாதென்பது ஒரு வரம். பரதனுக்கு முடிசூட்ட வேண்டுமென்பது மற்றொரு வரம். ஆக இரு வரங்களும் சரியாய்ப் போய்விட்டனவே, அதற்குமேல் தாங்கள் காட்டுக்குப் போகவேண்டுமென்பது மூன்றாவது வரம். அதுவும் இன்றே போக வேண்டுமென்பது நான்காவது வரம். காட்டில் பதினான்கு வருஷம் வசிக்க வேண்டுமென்பது ஐந்தாவது வரம். இப்படியே, இரண்டு வரங்கேட்டவளுக்குக் கணக்கில்லாதபடி எத்தனை வரங்கள் கொடுப்பது? அன்றியும் அவ்வரங்களிலொன்று தங்களை வனவாஸம் செய்யும்படி எங்ஙனம் வற்புறுத்தும்? பிள்ளைகள் பெற்றோருக்கு அடிமைகளா? அல்லது அறிவற்ற மிருகங்களா? இவைகளைச் சற்றும் யோசியாது தங்களை வனம் போகச் சொன்னது என்ன மூடத்தனம்!
இராமர்:-- அப்பா, இலக்ஷ்மணா! என்மீது குற்றத்தை வைத்துக்கொண்டு இந்த வீண்வாதங்கள் பேசுதல் தவறு. அம்புங் கையுமாக நிற்குந் தம்பீ! தந்தைமீது ஏது குற்றம்? அரச பாரம் குற்றமும் சுமையும் உண்டாக்கத் தக்கது. இதையறியாமல், நான் தந்தை முடிசூட்டுவதாகச் சொன்னமாத்திரத்தில் தடையின்றி சூடிக் கொள்ளுவதாக ஒப்புக்கொண்டது என் குற்றமல்லவா? தாயைக் கோபிப்பதிலும், தந்தையை வெறுப்பதிலும் சிறிதும் பிரயோஜனமில்லை. இலக்ஷ்மணா! நீ என்மீது வைத்திருக்கும் அன்பும், ஆதரவும் அளவிடற்கரிய வென்பதை நான் அறிவேன். உனது புஜபல பராக்கிரமம் போருக்கஞ்சா வீரம், பொறுத்தற்கொண்ணாத் துயரம் யாவையும் நன்றாய் அறிவேன். அறிந்திருந்தும், அவைகளோடு அடக்கத்தின் அருமையையும், உண்மையின் உயர்வையும் மிகவும் தெளிவாக அறிந்திருக்கின்றேன். ஆதலால் நான் தந்தைக்கடங்காப் பிள்ளையாயிருந்து தரணியாளவும் இசையேன். என்னால் எனது தந்தையின் வாக்குண்மை வழுவவும் சம்மதியேன். மேலும் இவ்வுலகத்தில் நம்மால் ஆவதொன்றுமில்லை. அவனன்றி ஓரணுவும் அசையாது. விதிவழியே எதுவும் நடக்கும். அதற்கு வருந்துவதால் வரும் பயன் சிறிதுமில்லை.
நதியின் பிழையன்று நறும்புன லின்மை யற்றே
பதியின் பிழையன்று பயந்து நம்மைப் புரந்தாள்
மதியின் பிழையன்று மகன்பிழை யன்று மைந்த
விதியின் பிழைநீ யிதற்கென்னை வெகுண்ட தந்தோ
தம்பீ! யார்மேற் குற்றமென்று நீ சீர்மாறிச் சினங்கொள்ளுகின்றாய்? நன்னீரில்லாதது நதியின் குற்றமல்ல; அதுபோல நான் வனஞ்செல்லுவது தருமசொரூபியான தந்தையின் குற்றமுமல்ல; நம்மை வளர்த்தெடுத்த அன்னையினது அறிவின் குற்றமுமல்ல; வேறு எதனால் வந்த குற்றம் என்பையோ? விதியால் வந்த குற்றம். விதியை விலக்க விண்ணவராலுமாகாது. இதை அறியாது நீ வருந்தலாமோ? இந்த அரசும், இந்த வாழ்வும் ஒரு நிலையோ? எல்லாம் கண்மயக்கு.
தெய்வச் சிதம்பரத் தேவோன்தன் சித்தந் திரும்பிவிட்டாற்
பொய்வைத்த சொப்பனமா மன்னர் வாழ்வும் புவியுமெங்கே?
மெய்வைத்த செல்வமெங்கே? மண்ட லீகர்தம் மேடையெங்கே?
கைவைத்த நாடக சாலையெங்கே? இதுகண்மயக்கே.
சிதாகாசத்தில் கலந்து மறைந்துள்ள அவ்விறைவனது சித்தம் சிறிது மாறுமானால், எல்லாம் சொப்பனம்போல் பொய்யாக மாறிவிடுமே! அப்பால் மன்னர்கள் வாழ்வெங்கே? அவர்கள் போற்றும் செல்வமெங்கே? அவர்கள் இருந்தரசு புரியும் கொலு மண்டபமெங்கே? அவர்கள் மனமினிக்க நடிக்கும் நாடகசாலைகளெங்கே? யாவும் கண்கட்டி வித்தையாய் மாறிவிடுமே! இவ்வளவு மாயமாகிய வாழ்க்கையை மெய்யென்று எண்ணி ஏமாறுவோ ரல்லவா காட்டைவிட நாடு நல்லதென்றும், நாட்டைவிடக் காடு கொடியதெனவும் வருந்துவர்? ஞானம் நிறைந்த மாதவர்க்குக் காடும் நாடும், ஓடும் பொன்னும், உறவும் பகையும் ஒன்றே. பலவகைத் துன்பங்களைப் பயக்கும் பொருளை, அறிவிற் பெரியோர் ஒரு பொருட்படுத்தார்.
தீயாலோ நீராலோ தேர்வேந்தர் தம்மாலோ
மாயாத தெவ்வர் வலியாலோ -- யாதாலோ
இப்பொருள்போய் மாய்கின்ற தென்றுபொருள் வைத்தார்க
ளெப்பொழுது நீங்கா ரிடர்
.   
பொருள் படைத்தவரைத் துன்பம் பற்றிக்கொண்டே யிருக்கும். நாம் அருமையாய்த் தேடிப் பெருமையாய் வைத்துத் திறமையாய்ப் பாதுகாத்து வருந் திரவியம், தீயாலழிகிறதோ? நீராலழிகிறதோ? அல்லது அதை மாற்றரசர் வந்து மாயமாய்க் கொண்டுபோகின்றனரோ? பகைவர் சூழ்ந்து நம்மைப் பதற அடித்துப் பறித்துப் போகின்றனரோ? அன்றி வேறெவ்வகையால் இதற்கு என்ன கேடு வருமோ? ‘ என்று செல்வர்கள் எந்நாளும் ஏங்கி உயிர் மடிவார். இந்தப் பொருளை ஈட்டுவதும் துன்பம், அதைக் காத்தலும் துன்பம். காத்த பொருள் கெட்டாலோ கணக்கில்லாத துன்பம். சீ! சீ! இந்தப் பொருளை அறிவுடையோர் அடைய விரும்புவரோ? விரும்பார்.
ஈண்ட லரிதாய்க் கெடுத லெளிதாகி
நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம்
மாண்பி னியற்கை மருவி லரும்பொருளை
வேண்டா தொழிந்தார் விறலோ விழுமிதே.
தேடுவதற்கு அரியதும், கெடுவதற்கு எளியதும், பலதுன்பங்களை விளைவிப்பதும், இயற்கையாகத் தனக்கு ஒரு பெருமையு மில்லாததான செல்வத்தை வெறுத்தவர்கள் பெருமையே பெருமை! இந்த அரசையும், இதினால் வரும் சுகசௌக்கியங்களையும் உண்மையென்று நான் ஒருபொழுதும் நினைத்ததில்லை. இதை உண்மையென்று எண்ணியிருந்தாலல்லவா, இப்பொழுது இதை நான் இழந்துவிட்டதாக எண்ணி வருந்தக்கூடும்? ஆதலால் இதைவிட்டுச் செல்வதால் நான் இறையும் வருந்துவேன் என்று எண்ணாதே.
தீதுற்ற செல்வமென் தேடிப் புதைத்த திரவியமென்
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே
பலவகையான தீங்குகளைத் தருவதாகிய செல்வம் எதற்கு? பாடுபட்டுத் தேடிப் புதைத்துவைத்த திரவியம் எதற்கு? நாம் இப்பிறப்பொழித்து இறந்து செல்லுங்கால் காதற்ற ஊசியும் நம்மோடு துணையாக வரப்போவதில்லை. இத்துணைக் கேவலமாகிய செல்வத்தை நீத்து நான் செல்வதை நினைத்து வருந்தாதே. நான் சென்று வருந்துணையும் மனம் ஆறி தம்பியோடுகூட இராச்சியத்தைப் பார்த்திரு.
இலக்ஷ்மணர்:-- (இருகாதையும் பொத்திக்கொண்டு) அண்ணா! அடியேன் காதில் நாராசத்தைக் காய்ச்சி ஊற்றுவதுபோல என்ன வார்த்தை சொல்லுகிறீர்கள்? ! கொல்லன் உலைக்களத்துத் தீயைப்போல் எனக்குப் பெருமூச்சு வருகிறதே! மனம் கொதிக்கிறதே! எவ்வாறு நான் இதை ஆற்றுவேன்! இவ்வளவு கெடுதல்களுக்கும் காரணமாயிருக்கும் அந்தக் கைகேயியின் அறிவுக்கு அறிவு புகட்டுவதும், விண்ணவர்க்கும் விலக்கரிய விதியை விலக்கும் விதியுமாகிய எனது வில்லாண்மையை இன்றே காட்டுகிறேன். தங்களுக்கு முடி நானே சூட்டுகிறேன். வலியற்ற விதியை வலியுள்ளதென்று தாங்கள் சொல்வது தவறு. தந்தையும் கொடியர். தாயேன வந்த அந்தக் கைகேயியும் கொடியள். தங்களுக்கு ஏன் இது புலப்படவில்லை? தர்மவான்களைப் போல் வேஷம் பூண்டு தமது குற்றத்தை மறைப்பவர்களைத் தாங்கள் பார்த்ததில்லையா? தாயும் தந்தையும் தீங்கு நினையாதவர் களாயிருந்தால் முன்னமே தந்த வரம் முன்னமேயே நிறைவேறியிருக்கும். மூத்த குமாரராகிய தங்களைத் தள்ளிவிட்டு இளையானாகிய பரதனுக்குப் பட்டங்கட்ட உலகத்தார்தாம் ஒப்புவரா? தாங்கள் தருமத்தால் மயங்கி வனஞ்செல்லச் சம்மதித்தது சரியல்ல. இதைப் பொறுக்க என்னால் ஆகாது. என் கையில் அம்பும் வில்லு மிருப்பது அழகுக்கல்ல. இதோ அரை நொடியில் எதிர்த்து வந்தவர்களை வதைத்தெறிந்து, தந்தை தாயர் எண்ணத்தை அறுத்தெறிந்து, தங்களுக்கு நான் ஒருவனே நின்று பட்டங்கட்டுகிறேன். இதைத் தாங்கள் க்ஷமித்தருள வேண்டும்.
இராமர்:-- இலக்ஷ்மணா! என்ன யோசனை உனது யோசனை! சந்தோஷத்தாலோ கோபத்தாலோ தாய்தந்தையர் ஒன்று சொன்னால் அதைப் பொறுமையாய் ஏற்றுக்கொள்வதன்றோ சற்புத்திரர்களுக்கழகு! வாயில் வந்தபடி யெல்லாம் பேசிவிடலாமா? நீ வேதவிதியை உணர்ந்தவனல்லவா? தாய் தந்தை மேற் சலித்துக்கொள்வது தகுமா? வேண்டாம், உன் கோபத்தை விட்டுவிடு.
இலக்ஷ்மணர்:-- அண்ணா, எனக்குத் தாய் யார்? தந்தை யார்? வேறொருவருமில்லை. தாயுந் தந்தையும் தலைவரும் தாங்களே! எனக்குத் தெய்வமுந் தாங்களே! தங்களுக்கொருவர் தீங்கு இழைக்க நான் பொறுக்க மாட்டேன். பரதன் பலத்தையும், தந்தை கொடுத்த வரத்தையும் பார்க்கிறேன்.
இராமர்:-- தம்பி! இலக்ஷ்மணா! பதறாமற்கேள். பரதன் என் செய்வான்? தந்தை வரம் கொடுத்தார். வரத்தின்படி அவனுக்கு இந்நிலம் சொந்தமாயிற்று. எனக்கு ஏற்பட்டது வனவாசம். அதை நான் அனுசரிக்க வேண்டியது முறைமை. இதற்கு அவர்களை வெறுப்பானேன்? தம்பியைப் போரில் தொலைத்து, தந்தைக்கு மன வேதனையைக் கொடுத்து, தாயை எதிர்த்து, தேசத்தை ஆள்வதா? சீ! என்ன அபவாதத்திற்கிடமான காரியம்! தருமத்திற்குப் பகையான யோசனை! ஆகாது! ஆகாது! தந்தை சொல்லைக் கடந்து அரசாள்வது எனக்கும் தகுதியல்ல. உனது தந்தையும், தாயும், தலைவனும், தமையனுமாகிய என் சொல்லைக் கடந்து செல்வது உனக்கும் ஏற்றதல்ல. முறைமையறிந்து பொறுமையோடிருக்க வேண்டும். சுமித்திரை அன்னையைப் பார்த்துவிட்டுச் சீதையின் அந்தப்புரம் போகவேண்டும். வா.

(இராமர் போகிறார். இலக்ஷ்மணர் ஒன்றும் பதில்கூறத் தோற்றாதவராய் அடங்கி யொடுங்கி அவரைப் பின்பற்றிச் செல்கிறார்)

.......................      எட்டாங்களம் தொடரும்    ......................................