செவ்வாய், 26 ஜூலை, 2016

இராம‌ நாட‌க‌ம் பாதுகா ப‌ட்டாபிஷேக‌ம்

அங்க‌ம் 1 க‌ள‌ம் 4 தொட‌ர்கிற‌து

தசரதர்:- ஏ, படுபாவி! நீயே மதிமயங்கி இவ்வாறு கூறுகின்றனையா? வேறு துன்மார்க்கர் எவரேனும் இப்படிக் கேட்கும்படி உன்னைத் தூண்டினார்களா? என் மேலாணை, உண்மையைக் கூறடி!

கைகேயி:- எவர் போதனையைக் கேட்டும் நான் மதிமயங்கப் போகிறேன்?

திசைத்தது மில்லை யெனக்கு வந்து தீயோர்
இசைத்தது மில்லை முனீந்த விவ்வ ரங்கள்
குசைப்பரி யோய்தரி னின்று கொள்வ னன்றேல்
வசைத்திற நின்வயின் வைத்து மாள்வெ னீண்டே

நான் மதிமயங்கவுமில்லை. துன்மார்க்கர் எவரும் வந்து எனக்குப் போதிக்கவுமில்லை. அவ்விதமான அபாண்டமான பழிகள் ஒன்றையும் என்மீது சுமத்தவேண்டாம். சம்பராசுர யுத்தத்தில் தங்களுக்குச் சாரதியாக இருந்தேன். அப்பொழுது வேண்டும்போது பெற்றுக் கொள்ளும்படி இரண்டு வரங்கள் கொடுத்தீர்கள். அவைகளை இப்பொழுது கேட்டேன். கொடுக்க இஷ்டமிருந்தால் கொடுங்கள், இல்லாவிட்டால் ‘இல்லை’ என்று சொல்லிவிடுங்கள். நான் தங்களை அதற்குமேல் ஒன்றுங்கேட்க வில்லை. கொடுத்த வரங்களைத் தராத பழியும், இராமன் மீதுவைத்த ஆணையையும் மறந்து, சொன்ன வாக்குறுதியை இழந்த பழியும் தங்களைச் சேருமே யொழிய, எனக்கொரு கெடுதலுமில்லை.

தசரதர்:- அடி பாவீ! அநேக மந்திரங்களுடன் அக்கினி சாக்ஷியாக நான் பற்றிய உனது கரத்தை இன்று முதலாக விட்டேன். உன்னுடன் உனது மகனையும் இன்றுமுதல் விட்டுவிட்டேன்.

வீய்ந்தா யோநீ வெய்யவ ளேயென் உரைமாறா
தீந்தேன் ஈந்தேன் இவ்வரம் என்சேய் வனமேக
மாய்ந்தேன் நான்போய் வானுல காள்வேன் வசைவெள்ளம்
நீந்தாய் நீந்தாய் நின்மக னோடு நெடிதேநாள்!

ஏ, கொடியவளே! உயிர் துறக்கப் போகிறேனென்றனையே! துறந்தே விட்டாயோ! பாவீ! என் உரை தவறாது உனக்குத் தருவதாகச் சொன்ன வரங்களிரண்டையும் தந்துவிட்டேன். தந்துவிட்டேன். என் மகன் ஸ்ரீராமன் கானகஞ் சென்றுவிடுவான். நான் வானகஞ் சென்று விடுவேன். நீயும் நின் மகனும் பாவத்திற்கும் பழிக்கும் ஆளாகி நெடுநாள் வாழ்ந்திருங்கள். (மூர்ச்சையாகிக் கீழே விழுகிறார். கைகேயி ஒருபுறமாகப் படுக்கிறாள். சுமந்திரர் வருகிறார்; வாயிலினின்று)

சுமந்திரர்:-- சக்கரவர்த்தீ! மந்திரி சுமந்திரன் அஞ்சலி செய்கிறேன். இரவு கழிந்தது. நித்திரை நீங்கி எழுந்திருங்கள். விரைவாக நல்ல ஆடையாபரணங்களை அணிந்து மேருகிரியின் சிகரத்தைவிட்டுச் சூரிய பகவான் எழுவதுபோல இவ்விடத்தைவிட்டுத் தாங்கள் எழுந்திருங்கள். சூரியன், சந்திரன், சிவன், குபேரன், வருணன், அக்கினி, இந்திரன் ஆகிய இவர்களெல்லாம் தங்களுக்கு வெற்றியைக் கொடுக்கக் கடவர்கள். தாங்கள் எழுந்திருந்து செய்யவேண்டிய காரியங்களைச் செய்யுங்கள். பட்டாபிஷேகத்திற்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் வந்து விட்டன. நாட்டார், நகரத்தார், அரசர், அந்தணர் யாவரும் வந்துள்ளார்கள். உலகமெல்லாம் தொழுதேத்தும் முனிசிரேஷ்டராகிய வசிஷ்ட பகவான், அநேக அந்தணர்களுடன் தங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரமாக இராம பட்டாபிஷேகச் சடங்குகளைச் செய்ய எழுந்திருங்கள்.

தசரதர்:-- (தரையிற் கிடந்தபடி, தீன ஸ்வரத்துடன்), சுமந்திரரே! உம் அழைப்பு கலங்கிய என் மனத்தைக் குழப்புகிறதே

சுமந்திரர்:-- சக்கரவர்த்தீ! சமயமறியாது தங்களை அழைத்ததற்காக மன்னியுங்கள். நமஸ்காரம், சென்று வருகிறேன். (போக எத்தனிக்கிறார்)

கைகேயி:-- (படுக்கை விட்டெழுந்து வாயிலண்டை வந்து சுமந்திரரைப் பார்த்து) சுமந்திரரே! சற்று நில்லும். இராமருக்கு நாளைத்தினம் பட்டாபிஷேகம் என்ற சந்தோஷத்தால் இரவு முழுவதும் அரசர் விழித்துக்கொண்டே இருந்தார். அதனால் அவருக்கு இன்னும் தூக்கந் தெளியவில்லை போலிருக்கிறது. நீர் சீக்கிரம் சென்று இராமனை இங்கு அழைத்து வாரும். உமக்கு மங்களமுண்டாகுக, செல்லும்.

சுமந்திரர்:-- அம்மணீ! அப்படியே சென்று அழைத்து வருகிறேன். (போகிறார்)

(இராமர் வருகிறார். கைகேயி மஞ்சத்தின்மீது சாய்ந்து நிற்பதையும், தசரதர் தரையிற் படுத்திருப்பதையும் பார்த்துத் திகைத்துச் சற்றுப் பின்வாங்குகிறார். பிறகு கைகேயிக்கு அஞ்சலி செய்கிறார். பின்னர் தசரதரை நோக்கிக் கரங்களைக் கூப்பி ‘தந்தாய்! நமஸ்காரம். தங்கள் புதல்வன் இராமன் வந்திருக்கின்றேன்’ என்கிறார். தசரதர் ஒன்றும் பேசாமைகண்டு கூப்பிய கரத்துடன், கைகேயியை நோக்கி)

இராமர்த—அன்னையே! என் தந்தையாருக்கு உற்றதென்ன? அவர் என் வரவைக்கண்டு ஏன் ஆனந்திக்கவில்லை? கோபங்கொண்டிருந்தாலும் என்னைக் கண்டவுடன் தமது கோபம் மாறி அன்புடையவராவாரே!

கைகேயி:-- இப்பொழுதும் அந்த அன்பாலேதான் துன்பப்படுகிறார்.

இராமர்:-- அம்மணீ! என்மீது வைத்த அன்பாலேயோ அவர் துன்பப்படுகிறார்? அறியாமையாலேனும் நான் அவர்க்கு ஒரு குற்றமும் செய்ததில்லையே. அவர் கோபிக்கத் தக்கதாக நான் ஒருபொழுதும் ஒரு சிறு பிழையும் இழைத்ததில்லையே. என்மீது கொண்ட அன்பால் துன்பமுறுகின்றார் என்று தாங்கள் கூறுவது பொருத்தமுடையதாகத் தோற்றவில்லை.

கைகேயி:-- இராமா! அரசர்க்குத் தம் உயிரினும் உயரிய பொருள் உன்னையன்றி வேறுண்டோ? உன்னைத்தவிர வேறு யாரை எண்ணி அவர் துயருழப்பார் என்று கருதுகின்றனை?

இராமர்:-- என் அருமை அன்னாய்! அரசர்க்கு என்மீது அன்பு மிகுதியுமுள்ள தென்பதை யான் அறிவேன். அதனால்தான் அவர் கோபத்திற்கோ அல்லது தாபத்திற்கோ நான் காரணனாயிரேன் என்று எண்ணுகிறேன்.

கைகேயி:-- குழந்தாய்! பின்னர் யாரால் அவர் இன்னற்கு ஆளாயிருக்கின்றாரென்று எண்ணுகிறாய்?

இராமர்:-- என்னை அன்போடாதரிக்கும் அன்னையே! இடையறா இன்பம் இன்பமாகா; பசியின்றிப் போஜனம் பயனுடைத்துமாகா; சுவையுடைத்துமாகா. இவ்வுண்மையைத் தாங்கள் செவ்வையாய் அறிவீர்கள். ஆதலால் அரசர்க்கு இன்பத்தை அதிகப்படுத்தவேண்டி தீங்கற்ற துன்பம் சிறிது தரத்தக்கதாகத் தாங்கள் ஏதேனும் கூறி இருப்பீர்களோவென்று ஐயுறுகிறேன்.

கைகேயி:-- மைந்த! அக்கருத்தோடு நான் அவரிடத்து ஏதும் கடுஞ்சொல் கூறினேனல்லேன். ஆனால் உனது க்ஷேமத்தை நாடி ஒன்று கூறினேன். அதை உனக்குத் தீங்கிழைப்பதாக உன் தந்தை பிறழக்கொண்டு வருந்துகிறார்.

இராமர்:-- அதற்காக வருந்துவானேன்?

கைகேயி:-- குமாரா! சக்கரவர்த்தி சம்பராசுரனோடு ஒரு போர் புரிந்தபோது நான் அவருக்கு ஒரு பேருதவி செய்தேன். அதற்காக அவர் எனக்கு இரு வரங்கள் கொடுத்தார். அவைகளை இன்று கேட்டேன். அவர் தருவதாக வாக்களித்தார். அதன்மேல் நான் அவ்வரங்கள் இரண்டையும் கூறினேன். அவை உன்னாலாக வேண்டியவை. ஆனால் அரசர் அதை உனக்குரைக்க அஞ்சுகிறார். உனக்குரையாவிட்டால் எனக்குரைத்த உரை தவறுமே என்று ஏங்குகிறார். இவ்வாறு ஒருபாற்படாது இருபாற்பட்டு இடையூசலாடி மனம் மிக வாடி வருந்துகிறார். வேறொன்றுமில்லை.

இராமர்:-- மாதா! என்னால் தந்தைக்கு இவ்வருத்தமென்று காதாற் கேட்கவுமாயிற்றே! தந்தை வார்த்தையைத் தடுத்து நான் வாதா புரிவேன்? ஏன் அவர்களுக்கு என்னிடம் கூறுவதில் அச்சம்? அவர்கள் கூறக் கூசினாலும் அதைத் தாங்களேனும் வாய்விட்டுக் கூறக்கூடாதா? அம்மணி! தந்தையார் விருப்பம் என்ன கூறுங்கள். இக்கணம் அதை நிறைவேற்றுகின்றேன்.

கைகேயி:-- உண்மைதானா?

இராமர்:-- தாயே! சிறியேனிடத்தில் தாங்கள் இவ்வளவு ஐயமுறக் காரணமென்ன?

எந்தையே யேவ நீரே யுரைசெய வியைவ துண்டேல்
உய்ந்தன னடியே னென்னிற் பிறந்தவ ருளரோ வாழி
வந்ததென் றவத்தி னாய வருபயன் மற்றொன் றுண்டோ
தந்தையும் தாயும் நீரே தலைநின்றேன் பணிமி னின்னே

தந்தையெனக்கொரு கட்டளையிட அதைத் தாங்களே கூற நேர்ந்தது. இதனினும் நான் பெறத்தக்க பேறேது? உய்ந்தேன், உய்ந்தேன். இப்பெரும் பாக்கியத்தைப் பெற அடியேனைப்போற் புண்ணியஞ் செய்தவர் பிறரொருவர் உண்டோ! யான் செய்த தவத்தின் பயனை இன்றுதான் எய்தப் பெற்றேன். பெருமகிழ்வுற்றேன். அம்மணீ! எனக்குத் தந்தையும் தாயும் தாங்களே! தாங்கள் சிறிதும் ஐயப்பட வேண்டாம். ‘விஷத்தைக் குடி’ என்றாலும் குதிப்பேன். ‘கடலிற்குதி’ என்றாலும் குதிப்பேன். ‘நெருப்பில் நட’ என்றாலும் நடப்பேன். அதிலும் தாங்கள் சொல்வது என் பிதாவின் கட்டளை என்றால் அதை நிறைவேற்றுவதில் தாமதமுங் கொள்வேனோ? எனக்குத் தந்தையவர், தடுத்தாட் கொண்ட குருவும் அவர். என்னை ஆண்டருளும் அரசரும் அவர். ஆகையால், அன்னாய்! தந்தையாருடைய கருத்தைச் சொல்லும். அவசியம் அதைச் செய்து முடிப்பேன். வரங்களெவை? வாய் மலர்ந்தருள வேண்டுகிறேன்.

கைகேயி:-- இராமச்சந்திரா! விஷயம் அற்ப விஷயந்தான். உன் க்ஷேமத்தை நாடியதுதான். ஆனால் உன் பிதாவுக்குத் தோற்றியதுபோல உனக்கும் அது பெரிதாகவும் தீதாகவும் தோற்றினால் --?

இராமர்:-- அன்னாய்! அவ்விதம் தோற்ற நியாயமில்லை. அது எதுவாயிருந்தாலும், அற்பத்திலும் சொற்பமாகவும், தீதற்ற வேதத்தின் கோதற்ற சொல்லாகவும் எண்ணிக் கொள்வேன்.

கைகேயி:-- குழந்தாய்! இவ்வளவு சிறு வயதில் உனக்கு மகுடாபிக்ஷேகம் எதற்காக?

இராமர்:-- (முகமலர்ந்து) வேண்டுவதில்லை.

கைகேயி:-- கொஞ்ச காலத்திற்குமுன் நீ விசுவாமித்திரருடன் காட்டுக்குச் சென்றிருந்தாயல்லவா?

இராமர்:-- ஆம்.

கைகேயி:-- அதனால் உனக்கு என்ன கெடுதல்கள் உண்டாயின?

இராமர்:-- ஒன்றுமில்லை.

கைகேயி:-- கெடுதல் இல்லாதது மட்டுமல்ல. அநேக நன்மைகள் உண்டாயினவல்லவா?

இராமர்:-- ஆம். விசுவாமித்திரரிடம் அருமையான இரு மந்திரங்களைக் கற்றுக் கொண்டேன்.

கைகேயி:-- அம்மட்டுந்தானா? தாடகையைக் கொன்று யாகத்தைக் காத்தாயல்லவா?

இராமர்:-- முனிவர் துணையால்

கைகேயி:-- மகரிஷிகளது ஆதரவைப் பெற்றாயல்லவா?

இராமர்:-- ஆம், இக்குலத்துதித்த மகிமையால்

கைகேயி:- கல்லைப் பெண்ணாக்கிக் கௌரவமும், கௌதமர் அனுக்கிரகமும், பெற்றாயல்லவா?

இராமர்:-- ஆம், ஊழ்வினைப் பயன் அவ்வாறு இருந்தது.

கைகேயி:-- சிவதனுசை ஒடித்துச் சீதையை மணமுடித்துப் புகழ் பெற்றாயன்றோ!

இராமர்:-- அம்மணீ! தங்கள் ஆசீர்வாதத்தால்!

கைகேயி:-- நீ மணமுடித்துக் கொண்டது மட்டுமல்ல, உன் சகோதரர்களுக்கும் மணமுடித்து வைத்தாயல்லவா?

இராமர்:-- எல்லாம் காலபலன்.

கைகேயி:-- அயோத்திக்கு மிதிலையினின்று மீண்டு வருங்கால், வாதிட்ட பரசுராமரோடு போரிட்டு, அவரைப் பங்கம் செய்து பெருமையும் புகழும் பெற்றாயல்லவா?

இராமர்:-- அன்னாய்! உண்மை. பெரியோர் அனுக்கிரகமிருந்தால் யாதுதான் அரிது?

கைகேயி—மதிநுட்பமுடைய மைந்தா! இவ்வளவு அரும் பெரும் காரியங்கள் கௌசிகரோடு நீ காட்டிற்குச் சென்றிராவிட்டால் உனக்குச் சித்தித்திருக்குமா?

இராமர்:-- அன்னையே! ஒருகாலும் சித்தித்திருக்க மாட்டா.

கைகேயி:-- இவ்வளவு காரியங்களும் வெகு சொற்ப காலம் நீ வனமுறைந்ததால் அடைந்தாயன்றோ? அதை எண்ணி நான் அடிக்கடி மகிழ்வதுண்டு. அன்றியும் உனக்குப் பட்டமாவதற்குமுன் உன்னைச் சிலகாலம் வனசஞ்சாரம் செய்யச் சொல்லலாமென் றெண்ணியிருந்தேன். ஏனெனில் அதனால் நீ இன்னும் அநேக சித்திகளையும் மாதவர் அனுக்கிரக சம்பத்தையும் பெற்று வருவாய். மேலும் காட்டில் வாழும் வேடர், மறவர், தவசிகள் முதலியோருடைய குறை முறைகளை நேரிற் கண்டும் கேட்டும் வந்தால், அரசனாகிய பிறகு அவைகளைத் தீர்க்க ஏதுவாகும். இன்னும் பலவித நன்மைகளை அடைவா யென்பது எனது எண்ணம்.

இராமர்:-- தாயே, சிறியேன்மீது தாங்கள் இவ்வளவு அன்புங் கருணையும் வைத்திருக்கும்பொழுது எனக்கென்ன குறை? தங்கள் எண்ணத்தைத் தாங்கள் என் தந்தையிடம் தெரிவித்துப் பட்டாபிஷேகத்தைச் சிறிது காலம் பொறுத்து வைத்துக் கொள்ளச் சொல்லலாகாதா? அது என் மனத்துக்கு மிகவும் திருப்திகரமாயிருக்குமே?

கைகேயி:-- கண்மணி! உனக்கது திருப்திகரமான விஷயமாயிருக்கும் என்பதை நான் நன்கறிவேன். ஆனால் உன் தந்தை விசுவாமித்திரருடன் உன்னை அனுப்பவே பயந்திருந்தாரே, தனியாய் அனுப்புவாரா என்றெண்ணிச் சிறிது தாமதித்தேன்.

இராமர்:-- என் துரதிஷ்டமே அது!

கைகேயி:-- குழந்தாய்! உனதுதுரதிஷ்டமல்ல, அது என் புத்திக் குறைவு. எவ்வாறாயினும் உனக்கு நன்மையைத் தரும் விஷயத்தில் நான் பிறகு ஜாக்கிரதையாய் விட்டேன். இராமா! என்னை யோசியாது ஒரு காரியமுஞ் செய்யாத உன் தந்தை கால வித்தியாசத்தாலோ வேறெதனாலோ, என்னைக் கேளாமலே உனக்கு மகுடஞ் சூட்டத் தீர்மானித்து விட்டார். பிறகு என்னிடம் வந்து தெரிவித்தார். உடனே நான் எண்ணியிருந்தவாறே உனக்கு வனசஞ்சார பாக்கியம் கிட்டாமற் போகிறதே, இனி என் செய்வது என்று மனம் வருந்திச் சிந்தித்தேன்.

இராமர்:-- அம்மணீ! தங்களைத் தாயாகப் பெற்ற என் பாக்கியமே பாக்கியம்.

கைகேயி:-- இராமா! இப்பொழுதுள்ள நிலையில், ஏற்படுத்திய மகுடாபிஷேகத்தை நிறுத்திவைக்கும்படி சாதாரணமாய்க் கேட்டால் உன் தந்தை சம்மதிப்பாரோ, அல்லது விபரீதமாய் எண்ணி என் சொல்லை அவமதிப்பாரோ என்று ஐயங்கொண்டேன். ஆதலால் நான் கேட்பதைத் தருவதாக முன்னதாக உறுதி வாங்கிக் கொண்டேன்.

இராமர்:-- நல்ல காரியஞ் செய்தீர்கள்.

கைகேயி:-- பிறகு நான் முன் உனக்குக் கூறியபடி அவர் சம்பராசுர யுத்தத்தில் எனக்குக் கொடுத்த வரங்களிரண்டையும் தரும்படி கேட்டேன்.

இராமர்:-- அவ்வரங்கள்?

கைகேயி:-- இராமா! அவ்வரங்களை உன் தந்தையும் கொடுத்து விட்டார். அவைகளால்,

ஆழிசூ ழுலக மெல்லாம் பரதனே யாள நீபோய்த்
தாழிருஞ் சடைகள் தாங்கித் தாங்கரும் தவமேற் கொண்டு
பூழிவெங் கான நண்ணிப் புண்ணியத் துறைகளாடி
ஏழிரண் டாண்டின் வாவென் றியம்பின னரசன் கண்டாய்

நீ பதினான்கு வருஷம் வனஞ் சென்று வசித்து, தவஞ் செய்து, புண்ணிய நதிகளில் தீர்த்தமாடித் திரும்பி வரவேண்டுமென்றும் அதுவரையில் பரதன் இந்நாட்டை ஆளவேண்டுமென்றும் கூறினேன். அவரும் அவ்வரங்களைக் கொடுத்து விட்டார். பரதன் நாடாளும்படிக் கூறியதெதனாலென்றால், பட்டாபிஷேகத்துக்கென்று சகலமும் சித்தமாயிருக்கின்றன, வெளிதேசத்து அரசர்களெல்லாம் வந்து காத்திருக்கின்றனர். ஆதலால் சேகரமாயிருக்கும் பொருள்கள் வீணாகாமலும், வந்திருக்கும் அரசர் முதலியோர் மனம் வருந்தித் திரும்பிச் செல்லாமலும் குறித்த முகூர்த்தத்தில் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டுமென்றும் சொன்னேன். வேறொன்றுமில்லை.

இராமர்:-- அம்மணீ!

மன்னவன் பணியன் றாயி னும்பணி மறுப்ப னோவென்
பின்னவன் பெற்ற செல்வ மடியனேன் பெற்ற தன்றோ
என்னினி யுறுதி யிப்பா லிப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கான மின்றே போகின்றேன் விடையுங் கொண்டேன்.

தாங்கள் செய்தது மிகவும் யுக்தமாகவே இருக்கிறது. என் மனத்துக்கும் சந்தோஷத்தைத் தருகிறது. பரதனுக்கு முடி சூடுவதில் நான் பிகவும் மகிழ்கிறேன். அரசர் கூறவேண்டுவதென்பதில்லை. தாங்கள் ஒரு கட்டளையிட்டால் நான் மறுப்பேனோ? இன்றே கானகஞ் செல்கிறேன். விடை கொடுங்கள்.

கைகேயி:-- நல்லது, இராமச்சந்திரா! விடை கொடுத்தேன். செல்லலாம்.

(இராமர் போகிறார்.)

அங்க‌ம் 5 தொட‌ரும்

சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்

ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி நிக‌ழ்த்தி வ‌ரும் “சொல்லாம‌ல் சொன்ன‌ இராமாய‌ண‌ம்” டெலி உப‌ந்யாஸ‌த்தின் 46ஆவ‌து உப‌ந்யாஸ‌ம் (25-07-2016 அன்று ந‌ட‌ந்தது) இங்கு உள்ள‌து.

https://1drv.ms/u/s!AhaOONCkz1Ykkg8RNl2VJhEFP7Mx

and also at

http://www.mediafire.com/download/lbeofbrnfbip406/046_SSR_(25-07-2016).mp3