பலர் படிக்காத
ராமாயண கதைகள்
(உத்தர காண்டம்]
உப. வித்வான் அத்தி நரஸிம்ஹாசார்ய ஸ்வாமி -திருவுள்ளூர்
முன்னுரை:-
ஸ்ரீவால்மீகி மஹர்ஷி அருளிச் செய்தது ஸ்ரீமத்ராமாயணம். . இது ஆதிகாவ்யம் என்று ப்ரஸித்தி பெற்றது. வேத வேத்யனான பரமபுருஷன் ஸ்ரீராமபத்ரனாக அவதரித்ததும் வேதமானது வால்மீகி மூலமாக ஸ்ரீராமாயண ரூபமாக அவதரித்ததாம். அந்த ஸ்ரீமத் ராமாயண ரூபமான வேதம் ஏழு காண்டங்களாக விளங்கி வருகிறது. அதில் முதல் ஆறு காண்டங்களில் ஸ்ரீராமனின் அவதாரம் முதல் பட்டாபிஷேக பர்யந்தமான சரிதம் வர்ணிக்கப் பட்டுள்ளன. இந்தக் கதாபாகங்கள் அநேகமாகப் பலரால் அறியப்பட்டும். ப்ரவசனம் செய்யப்பட்டும் வழக்கத்திலும் கடைசிக் காண்டமான உத்தர காண்டம் சிலர் அறியப்படாமலேயே ப்ரஸசனத்திலும் கையாளப்படாமலேயே அநேகமாக இருக்கிறது. இதை யாவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு ஸ்ரீவால்மீகி அருளியபடி கதை எழுதப் படுகிறது.
முதல் ஸர்க்கம்
ஸ்ரீராமபிரான் பட்டாபிஷேகம் செய்துகொண்டு ராஜ்ய பரிபாலனம் செய்து வரும் போது ஸ்ரீராமபிரானைக் கொண்டாடும் பொருட்டு மஹரிஷிகளின் வருகையும் ஸம்பாஷணமும் மேலே தொடங்குகின்றன.
ராவணனை வதம் செய்து, அயோத்தியில் பட்டாபிஷேகம் செய்துகொண்டு சுகமாக ராஜ்ய பரிபாலனம் செய்துகொண்டிருந்த ஸ்ரீராம சந்திரனைப் புகழ்வதற்காக மஹர்ஷிகள் பலர் அயோத்யா பட்டணத்திற்கு வந்தனர். அவர்களாவர்-கௌசிகர், யவக்ரீதர், கார்க்யர், காலவர், கண்வர் (மேதாதிதியின் புதல்வர்). இவர்கள் கிழக்குத் திக்கு வாஸிகள்; ஸ்வஸ்த்யாத்ரேயர் நமுசி, ப்ரமுசி, அகஸ்த்யர், அர்ரி, சுமுகர், விமுகர் இவர்கள் தென்திசை வாஸிகள். மேற்குத் திக்வாஸிகளான ந்ருஷத், கவஷர், தெளம்யர், கௌஷேயர் இவர்கள் தத்தம் சிஷ்யர்களுடனும், வடக்குத் திக்கிலுள்ள வசிஷ்டர், கச்யபர், விச்வாமித்ரர், ஜமதக்நி, பரத்வாஜர் முதலியவர்களும் வந்திருந்தார்கள்.
அகஸ்தியர் தலைமையிலான இந்தமஹர்ஷிகள் ஸ்ரீராமனது அரண்மனை வாயிலை அடைத்ததும் வாயிற்காப்பானிடம் அகஸ்த்யர் “என் ப்ரதீஹாரியே! நீ ராமபிரானிடம் சென்று 'உமது தர்சனத்திற்காக ஸ்ரீராகவனிடம் மஹர்ஷிகள் வந்திருக்கிறர்கள்' என்று தெரிவிக்கவும்' என்று கூறினார். வாயிற்காப்போனும் உடனடியாக ஶ்ரீராகவனிடம் சென்று மஹர்ஷிகனின் வருகையை விஜ்ஞாபித்தான். நீதிமானாயும் ஸமயமறிந்து கார்யம் செய்வதில் நிபுணராயும், ஸமர்த்தராயும், தைர்யசாலியுமான ராமன். ப்ரதீஹாரியின் வார்த்தையைக் கேட்டதும் முனிவர்களின் வருகையை அறிந்து ஸந்தோஷமடைந்தவராய் அவர்களை அழைத்து வர ஆஜ்ஞாபித்தான். ப்ரதீஹாரியும் அந்த மஹர்ஷிகளை உள்ளே அழைத்து வந்தான்--முனிவர்களைக் கண்டதும் ஸ்ரீராமன் ஆஸனத்திலிருந்து எழுந்திருந்து கைகளைக் கூப்பிக்கொண்டு நல்வரவு கூறியும். அவர்களுக்குப் பாத்யம் அர்க்யம் முதலியவைகனால் உபசரித்தும், மதுபர்க்கம் ஸமர்ப்பித்தும். ப்ரீதியுடனும் வணக்கத்துடனும் நின்றுகொண்டு அவர்களை ஆஸனங்களில் அமரச்செய்தார். அந்தமஹர்ஷிகளும் ஸ்வர்ணமயமாயும், பெரியதும், உயர்ந்ததும், தர்பவிஸ்த்ருத மாயும், மான்தோல் அமைக்கப்பட்டதுமான ஆஸனங்களில் ஸந்தோஷத்துடன் அமர்ந்தனர்..
பிறகு ஸ்ரீராகவன் மஹர்ஷிகளின் குசலத்தை விசாரிக்க அவர்களும், நாங்கள் அனைவரும் ஸர்வ விதத்திலும் க்ஷேமம் உள்ளவர்கனாக இருக்கிறோம், மேலும் நாங்கள் அனைவரும் பெரிய பாக்ய விசேஷத்தால் தங்களை ஜயசீலனாகக் காண்கிறோம். சத்ருக்களை எல்லாம் வென்றுவிட்டாய். உன்னால் உலகுக்கெல்லாம் கஷ்டத்தைக் கொடுத்து வந்த ராவணன் வெல்லப்பட்டான். கையில் கோதண்டத்தைக் கொண்ட நீ மூவுலகங்களையுமே அழிக்க ஸமர்த்தனே. இதை நாங்கள் அனைவருமே அறிவோம். இதில் ஸந்தேஹமே இல்லை தெய்வாநுக்ரஹத்தால் நாங்கள் செய்த புண்யபலத்தால், ஸீதாதேவியுடனும், உனது ஹிதத்தையே தனது ஹிதமாகக் கொண்ட லக்ஷ்மணனுடனும் பரத சக்ருக்னர்களுடனும், கௌஸல்யை சுமித்ரை கைகேயி இவர்களுடனும் கூடிய உன்னை நாங்கள் இப்போது கண்டு களிக்கும் பாக்யத்தைப் பெற்றோம்.
உனது பராக்ரமத்தால், ப்ரஹஸ்தன், விகடன், விரூபாக்ஷன் மஹோதரன், அகம்பனன் முதலான அரக்கர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவருமே சரீரத்தாலும் பலத்தாலும் மேம்பட்டவர்கள். மிக்க பராக்கிரமசாலியான கும்பகர்ணனும் உன்னால் கொல்லப்பட்டான். திரிசிரஸ், அதிகாயன், தேவாந்தகன், நராந்தகன் முதலிய மேலும் மிக்க பராக்ரமசாலிகளும் அழிக்கப்பட்டனர். மிக பயங்கர உருவமுள்ள கும்பன் நிகும்பன் என்கிற கும்பகர்ணனின் மகன்களும், யஜ்ஞகோபன் தூம்ராக்ஷன் முதலானவர்களும் வதம் செய்யப்பட்டனர்.
நேருக்கு நேர் என்கிற கணக்கில் யுத்தம் செய்து தேவர்களாலும் ஜயிக்க முடியாத ராவணனை ஜயித்தாய். இதில் எல்லாம் எங்களுக்கு ஆச்சரியப்பட விசேஷம் எதுவுமில்லை. பின்னே எது ஆச்சர்யகரம் என்றால் ராவணனின் புதல்வனான இந்த்ரஜித்தை லக்ஷ்மணனைக் கொண்டு வதம் செய்தாயே, அதுதான் மிக மிக ஆச்சர்யகரமாக உள்ளது. அவனுடன் யுத்தம் செய்த காலனே தோற்று ஓடிப் போன விஷயம் அனைவரும் அறிந்ததே. நேராக நின்று யுத்தம் செய்யாமல் மாயாயுத்தம் செய்வதில் அவன் மிகவும் ஸமர்த்தன். அப்படிப்பட்டவனை நேரடியாக யுத்தம் செய்வித்து மாண்டு போகும்படிச் செய்வித்தாய். அப்படிப்பட்ட இந்த்ரஜித்தினுடைய வதத்தைக் கேள்விப்பட்ட நாங்கள் மிக மிக மகிழ்ந்தோம். இப்படிக் கொடிய அரக்கர்களைக் கொன்று எங்களுக்கும் உலகிற்கும் அபய ப்ரதானம் செய்து விளங்கும் நீ என்றும் மங்களத்துடன் வாழவேண்டும் என்றனர்.
இப்படி ரிஷிகள் கூறக் கேட்ட ரகுநந்தனர் மிகவும் ஆச்சர்யத்துடன் இருகரம் கூப்பி ரிஷிகளை வணங்கிப் பின்வருமாறு கூறினார் - ரிஷிகளே! மஹாபராக்ரம சாலிகளான ராவணன், கும்பகர்ணன், மஹோதரன், ப்ரஹஸ்தன், விரூபாக்ஷன், தேவாந்தகன், நராந்தகன், அதிகாயன் முத்தலையன், தூம்ராக்ஷன் இவர்களைக் கொண்டாடிப் பேசாமல், ராவணனின் பிள்ளையான இந்த்ரஜித்தை உயர்த்திப் பேசு கிறீர்களே. ஏன்? இந்த இந்த்ரஜித் எப்படிப்பட்டவன்? அவனுடைய ப்ரபாவம் எப்படிப்பட்டது? அவனது பலம் என்ன? அவனது பராக்ரமம் எப்படிப்பட்டது? எதனால் அவன் ராவணனைவிட மேற்பட்டவனானான்? இவையெல்லாம் நான் அறியக்கூடு மாகில் தேவரீர்கள் க்ருபை செய்து எனக்கு அருளிச்செய்ய வேண்டும். அடியேனது ஆஜ்ஞையன்று, விஜ்ஞாபனம். தேவேந்த்ரனும் தோற்று ஓடிப் போனான் என்பது வியப்பாக உள்ளது. எப்படி அப்படிப்பட்ட வரத்தைப் பெற்றான்? மகன் பலவானாகவும் தகப்பன் அவனுக்கு நிகரில்லாதவனாக இருந்ததும் வியப்பாக உள்ளது என்று.
இரண்டாவது ஸர்க்கம்
(இப்படி ஸ்ரீராமன் கேட்டதும் அகஸ்த்யர் அதற்கு உபோத்காதரூபமாக ராவண குல மூலபுருஷர்களைக் கூறுகிறார்.)
ஸ்ரீராமபிரான் இப்படிக் கேட்டதும் அகஸ்த்ய மஹர்ஷி “ஸ்ரீராகவ! இந்தரஜித்தினுடைய வரலாறு கூறப்படுவதற்கு முன்பு ராவணனுடைய குலம், பிறப்பு அவன் பெற்ற வரம் முதலியவற்றைக் . கூறுகிறேன்.
முன்பு க்ருதயுகத்தில் பிரம்ம தேவனுக்குப் 'புலஸ்த்யர்' என்ற புதல்வர் இருந்தார். பிரம்மரிஷியான அவர் பிரம்மாவைப் போலவே விளங்கினார். அவருடைய குணங்கள் வர்ணிக்கைக்கு நிலமற்றிருந்தன. அநுஷ்டானமும் பழுதற்றிருந்தது. பிரம்மபுத்ரன் என்று மட்டுமே புகழ இருந்தார். பிரம்மபுத்ரரானபடியால் தேவர்களும் அவரை விரும்பினர். தனது நற்குண நல்லொழுக்கங்களால் எல்லோராலும் போற்றப்பட்டவராய் விளங்கினார்.
அவர் மேருமலைச் சாரலில் த்ருணபிந்து... என்ற மஹர்ஷியின் ஆச்ரம எல்லையில் ஆசிரமம் அமைத்துக்கொண்டு வேதபாராயண சீலராய்த் தவம் செய்து வந்தார். அந்த ஆச்ரமத்தைச் சார்ந்த வனம் எப்போதும் பூத்துக் குலுங்கும் புஷ்பச் செடிகளுடனும், ஸதாகாலமும் பழம் கொடுக்கும் வ்ருக்ஷங்களுடனும் விளங்கி வந்தது.
எனவே அங்கே தேவ கன்யகைகள், நாக கன்யகைகள், ராஜரிஷி கன்யகைகள். அப்ஸரஸ்த்ரீகள் முதலிய ஸ்த்ரீகள் வந்து ஆடிப் பாடி இந்த மஹரிஷியின் தவத்திற்கு இடையூறு செய்து வந்தனர்.
இது கண்ட புலஸ்த்ய முனிவர் மிகவும் கோபம் கொண்டு இவ்விடத்தில் எவரேனும் இனி எனது தவத்தின்போது என் கண்களுக்கு இலக்காவீராகில் அவர்கள் கர்ப்பவதியாவீர்கள் என்று சாபமிட்டார். அது கேட்ட கன்யகைகள் பயந்தவர்களாய் அங்கே செல்வதைத் தவிர்த்தனர்.
த்ருணபிந்து மஹர்ஷிக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் இந்த விஷயத்தை அறியாதவள். ஒரு நாள் அவள் தன் தோழியுடன் விளையாடச்சென்றாள், தோழி எங்கோ சென்றமையால் அவளுடைய வரவிற்காகக் காத்துக்கொண்டிருந்தாள். அது ஸமயம் அங்கே தபஸ் செய்துகொண்டிருந்த புலஸ்த்யர் வேதத்தை ஓத ஆரம்பித்தார். அந்தச் சப்தத்தைக் கேட்ட ரிஷிகுமாரி அவ்விடத்திற்குச் - சென்று அவரைக் கண்டாள். அவருடைய தர்சனத்தால், அவர் இட்ட சாபப்படி இவளுடைய சரீரத்தில் கர்ப்பஸ்த்ரீகளுக்கு உண்டாகும் அடையாளங்கள் தோன்ற ஆரம்பித்தன. அதாவது சரீரம் வெளுத்தல் முதலியன. இப்படித் தன் சரீரத்தில் ஏற்பட்ட மாறுதலைக் கண்டு பயந்த அந்தப் பெண் தன் தந்தையினுடைய ஆச்ரமத்தை அடைந்து நின்றாள். தன் மகளின் சரீர மாறுதலைக் கண்ட த்ருணபிந்து மஹரிஷி ஏனம்மா என்று கேட்டார். அதற்கு அவள் இருகைகளையும் கூப்பிக்கொண்டு தந்தையிடம் பின்வருமாறு கூறினாள் - பிதாவே! இதற்கான காரணத்தை நான் அறியேன். ஆனால் சிறிது நேரத்திற்கு முன் எனது தோழியைத் தேடிக்கொண்டு புலஸ்தியருடைய ஆச்ரம ஸமீபம் சென்றேன். ஆனால் தோழியைக் காணமுடியவில்லை எனது சரீரம் இவ்வாறு மாறுபாட்டை அடைந்து விட்டது என்று.
இதைச் செலியுற்ற த்ருணபித்து மஹர்ஷி, தியானத்தால் நடந்ததை அறிந்தார். உடனே தனது குமாரியை அழைத்துக்கொண்டு புலஸ்த்யரிடம் சென்றார். அவரைப் பார்த்து, "மஹர்ஷே! இதோ நிற்கும் இவள் எனது குமாரி. உமக்கு அநுகுணமான குணநலன்களை உடையவள். இவளை பிக்ஷையாக உமக்கு ஸமர்ப்பிக்க விரும்புகிறேன். ஸ்வீகரிக்க வேண்டும். தபஸ்செய்து களைப்புறும்போது உமக்குப் பணிவிடைகளை இவள் செய்து உம்மைக் களிப்புறச் செய்வாள்' என்றார். இதைக்கேட்ட புலஸ்த்யர் அப்படியே ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டார். பிறகு த்ருணபிந்து மஹர்ஷி முறைப்படி அவருக்கு மகளை விவாஹம் செய்து கொடுத்துவிட்டுத் தமது ஆச்ரமத்தை அடைந்தார்.
அந்தப் பெண் புலஸ்த்யருடைய கருத்திற்கொப்பப் பணிவிடைகளைச் செய்து பர்த்தாவைக் களிப்புறச் செய்து வந்தாள். அவளுடைய குணங்களாலும் நடத்தையாலும் ஸந்தோஷமடைந்த புலஸ்த்யர் அவளை நோக்கி '”அழகியவளே! உனது நன்னடத்தையால் நான் மிகவும் ஸந்தோஷமடைந்துள்ளேன். எனவே நம்முடைய குலம் விளங்க, எனககுச் சமமான புத்திரன் ஒருவன் உனக்கு உண்டாக வரமளிக்கிறேன். எனது வேதகோஷதைக் கேட்டு நீ கர்ப்பம் தரித்த படியால் உனக்குப் பிறக்கப்போகும் புதல்வன் விச்ரவஸ் என்ற பெயருடன் உலகில் ப்ரஸித்தனாக இருப்பான்'' என்றார். அவளும் இதைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தாள். தகுந்த காலத்தில் அவள் ஒரு புதல்வனைப் பெற்றாள். அந்தப் புதல்வன் (விச்ரவஸ் எனகிற அவன்) மூவுலகங்களிலும் பேரும் புகழுங்கொண்டு, வேதமனைத்தையும் கற்றவனாகவும், தந்தையைப் போல் அருந்தவத்தோனாகவும், எல்லா ப்ராணிகளிடத்தும் ஸமநோக்குடையவனாகவும் விளங்கினான்.
மூன்றாவது ஸர்கம்
(விச்ரவஸ்ஸிடமிருந்து குபேரனின் -பிறப்பு. அவன் இலங்கையில் குடிபுகுந்தது முதலியன)
புலஸ்த்யரின் புதல்வனான விச்ரவஸ், தபஸ்வியாயும் ஸத்ய ஸந்தனாகவும் விளங்கி வருவதை அறிந்த பரத்வாஜ முனிவர் தனது புதல்வியும், அப்ஸரஸ் ஸ்த்ரீ போன்று அழகுடையவளுமான தேவவர்ணிநீ என்பவளை அவருக்கு மணஞ் செய்வித்தார். விச்ரவஸும் ஸந்ததியை விருத்தி செய்வதற்காக அப்பெண்ணை மணந்தார். உசித காலத்தில் அவளிடத்தில் சிறந்த புத்திரன் பிறந்தான். அக் குழந்தையின் பிறந்த கால நிலையை நன்கு கணிசித்த பிதாமஹரான புலஸ்த்யர் இவன் பிற்காலத்தில் தனாதிபதியாக ஆவான் என்பதை உணர்ந்தார். பிறகு தேவர்கள் ரிஷிகளின் முன்னிலையில் - இந்தக் குழந்தை விச்ரவஸ்ஸுக்குப் பிறந்தபடியாலும், தந்தையைப் போல் உருவ ஒற்றுமை இருப்பதாலும் இவன் வைச்ரவணன் என்று பெயர் பெற்று விளங்குவான் என்று கூறினார்.
அந்த வைச்ரவணனும் தவம் செய்ய விரும்பிக் காநகமேகினாள், அங்கு அவன் ஆயிரம் வர்ஷ காலம், கடும் தவம் புரிந்தான். சில ஸமயம் தண்ணீரையே ஆஹாரமாகவும், சில ஸமயம் காற்றையே ஆஹாரமாகவும், சில ஸமயம் ஆஹாரமேதுமின்றியும் கடுந்தவம் புரிந்த அவனது தவத்தால் ப்ரீதியடைந்த ப்ரம்ஹதேவன் இந்த்ராதி தேவர்கள் புடைசூழ அவன் முன் தோன்றினார். அவனைப் பார்த்து ''குழந்தாய், உனது தவத்தினால் மிகவும் ஸந்தோஷமடைந்தேன். நீ விரும்பும் வரத்தைக் கொடுக்கிறேன். கேட்கவும்" என்று கூறினார். இதைக் கேட்ட வைச்ரவணன். ப்ரம்மதேவனை வணங்கி "ஸ்வாமிந் நான் லோக பாலகர்களில் ஒருவனாகவும் தனாதிபனாகவும் ஆக விரும்புகிறேன், அநுக்ரஹிக்கவும்'' என்று வேண்டினான். அதற்கு ப்ரம்மாவும் "அப்படியே ஆகக்கடவது, நானே நான்காவது லோக பாலகனை ஸ்ருஷ்டிக்க விரும்பியிருந்தேன். யமன்-இந்த்ர வருணன் ஆகிய மூவருடன் சேர்ந்து நீ நான்காவது-லோக பாலகனாக விளங்குவாய். தனத்திற்கு அதிபதியாகவும் ஆகக் கடவாய். மேலும் இந்த புஷ்பகம் என்னும் விமானத்தையும் உனக்கு அளிக்கிறேன். இது சூரியனைப் போல் ப்ரகாசமுடையது. இதில் அமாந்து கொண்டு தேவதைகளைப் போல் இஷ்டப்படி ஸஞ்சரிப்பாய்" என்று சொல்லி ஆசீர்வதித்து தேவர்களுடன் சென்று விட்டார்.
பிறகு ஸந்துஷ்டனான வைச்ரவணன் தன் தந்தையிடம் சென்றன். அவரை வணங்கி "பிதாவே! ப்ரம்மதேவன் நான் வேண்டியபடி வரத்தை அளித்து புஷ்பகம் என்ற விமானத்தையும் அளித்தார். ஆயினும் நான் வஸிப்பதற்கான ஸ்தானத்தை நியமிக்கவில்லை. ஆகையால் தேவரீரே எங்கு நான் வஸிக்கலாம், எனது வாஸத்திற்குத தகுந்த ஸ்தலம் எது? எனது வாஸத்தினால் இதரப்ராணிகளுக்கு இடையூறுகளிலிருக்கக் கூடாது, அப்படிப்பட்ட ஸ்தானத்தை நிர்தேசிக்க வேண்டும்'' என்று ப்ரார்த்தித்தான்.
அதற்கு விச்ரவஸ் - “வைச்ரவண! நீ வாஸம் செய்ய ஒரு ஸ்தலத்தைக் கூறுகிறேன் - தெற்கு ஸமுத்திரத்தின் கரையில் த்ரிகூடம்' என்றொரு பர்வதமிருக்கிறது. அந்த மலையின் உச்சியில் விசாலமானதும், தேவலோகமான அமராவதிக்கு ஒப்பானதுமான பட்டணமொன்று உள்ளது, அதன் பெயர்தான் லங்காபுரி என்பதாகும். அது முன்னொரு காலத்தில் தேவதச்சனான விச்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது. ராக்ஷஸர்கள் வஸிப்பதற்காகக் கட்டப்பட்ட அந்த நகரம் பொன் மயமான மதிள்களை உடையதும், வஜ்ர வைடூரியங்களிழைக்கப்பட்டதும், யந்த்ரரூபங்களான அஸ்த்ர சஸ்த்ரங்கள் நிறைந்து ரமணீயமாக விளங்கியது. அங்கு வஸித்து வந்த ராக்ஷஸர்களனைவரும் ஒரு ஸமயம் மஹாவிஷ்ணுவின் தாக்குதலுக்கு அஞ்சி அந்நகரத்தை விட்டுப் பாதாள லோகத்திற்குச் சென்று ஒளிந்தனர். இப்போது அந்நகரம் வஸிப்பவரின்றியிருக்கிறது. ஆகையால் நீ அங்கு சென்று சுகமாக வஸிப்பாயாக என்று கூறினார்.
அதைக் கேட்ட வைச்ரவணன் மிகவும் ஸந்தோஷமடைந்தான். அநேகமாயிரம் நைருதர்களுடன் கூட லங்காபுரியை அடைந்து அதில் வஸிக்கலானான். சீக்கிரமாகவே அவனுக்கு அங்கே ஸகல விதமான ஐஸ்வர்யங்களும் வேண்டிய அளவு உண்டாயின. தனாதிபதியான வைச்ரவணன் இவ்வாறு கடலால் சூழப் பெற்ற இலங்காபுரியில் நைருருதர்களானவர்க்கும் தலைவனாய் ஸந்தோஷமாக வாழ்ந்து வருமபோது அடிக்கடி புஷ்பகமேறி தேவர்களும் கந்தர்வர்களும் போற்றிப் புகழவும், அப்ஸரஸ்ஸ்த்ரீகள் ஆடிப்பாடி அழகு செய்யவும், கிரணங்கள் சூழப் பெற்ற சூரியனை விளங்குவனாகிதாய், தந்தையரை நாடி அடிபணிந்து அவரகமகிழச் செய்து கொண்டு சுகமாய் வாழ்ந்து வந்தான்.
நான்காவது ஸர்கம்
(குபேரனுக்கு முன்பே இலங்கையில் ராக்ஷஸர்கள் வஸித்து வந்தார்களென்று கூறக் கேட்ட ராமன் அது விஷயமாக ப்ரச்நம் செய்வதும். அவ்விருத்தாந்தமும் இதில் கூறப்படுகிறது.)
இப்படி அகஸ்த்தியர் கூறக்கேட்ட ராமன் மறுபடியும் அகஸ்த்தியரைப் பார்த்து- ஸ்வாமிந் இந்த லங்காபுரி, முன்பும் அரக்கர் வசமிருந்தது என்பதைக் கேட்டதும் மிகவும் ஆச்சரிய முண்டாகிறது. ஏனெனில், அரக்கர் குலம் புலஸ்த்யரை மூலமாக உடையது என்று மட்டுமே நானறிவேன். இப்போது வேறு விதமாகவும் உள்ளது அறியப்படுகிறது. யார் அந்த அரக்கர்கள்? அவர்கள் ராவணன் கும்பகர்ணன்-ப்ரஹஸ்தன்-விகடன் இந்த்ரஜித் இவர்களைக் காட்டிலும் பலசாலிகளா? அவர்களுக்கெல்லாம் மூலருபுஷன் யார்? அவனுடைய ஸாமர்த்யம் எப்படிப்பட்டது? அவர்கள் எந்த விதமான. தவற்றைச் செய்து மஹாவிஷ்ணுவால் துரத்தப்பட்டனர்? இவைகளை விஸ்தாரமாகக் கூறவும், என்று வேண்டினார்.
ஸ்ரீராகவனுடைய இந்த வேண்டுதலைக் கேட்ட அகஸ்த்தியர் புன்சிரிப்புடையவராய் பின்வருமாறு கூறினார். ரகுநந்தன! ஆதிகாலத்தில் மஹாவிஷ்ணுவின் நாபீகமலத் துதித்த ப்ரம்மா முதன் முதலாக தண்ணீரைப் படைத்தார். அதைப் பாதுகாப்பதற்காக அநேகம் ப்ராணிகளையும் படைத்தார். அவ்வாறு படைக்கப் பட்ட ப்ராணிகள் மிகுந்த பசிதாக முடையவர்களாகி தங்களைப் படைத்த பிரமனிடஞ் சென்று, நாங்கள் செய்ய வேண்டிய கார்யம் யாது? என்று வினவினர். ப்ரம்மாவும் அவைகளை நோக்கிப் புன்னகையுடன் -ப்ராணிகளே! நீங்கள் இந்த ஜலத்தை யத்நத்துடன் - ஜாக ரூகர்களாக ரக்ஷிக்கக் கடவீர்'' என்று கூறினார். இதைக் கேட்ட ப்ராணிகளிற் சிலர் பசியில்லாதவர்கள் ரக்ஷாம-ரக்ஷிக்கிறோம் என்றும் கூறினர். இதைச் செவியுற்ற பிரமதேவன் - உங்களில் யார் ''ரக்ஷிக்கிறோம்'' என்றீர்களோ அவர்கள் ராக்ஷஸர்கள் ஆகுக என்றும், எவர் பக்ஷிக்கிறோம் என்றீர்களோ அவர்கள் யக்ஷர்களாகுக என்று கூறினார். அவர்களுமப்படியே ஆயினர். (இங்கு பக்ஷாம் என்றவர்கள் பக்ஷர்களாகத்தானே சொல்லப்பட வேண்டும், எப்படி யக்ஷர்களெனப்படுகிறார்கள் என்கிற சங்கை உண்டாகலாம்.இங்கு- ச்லோகம் பின்வருமாறு. ஜக்ஷாம இதி யை ருக்தம் யக்ஷா ஏவ பவந்து வ:, யை: ஜக்ஷாமேத்யுக்தம் தே யக்ஷா பவந்து; . வர்ண வ்யத்யய: ஆர்ஷ:'' ஜ என்கிற எழுத்தின் ஸ்தானத்தில் "ய" என்று மாறுதல் ரிஷிப்ரோக்தம்'' என்று ஸ்ரீ கோவிந்த ராஜீய வ்யாக்யாநம், யஜயோர பேதஸ்ய தாந்த்ரிகத்வாத் யக்ஷேதி ஜக்ஷணே இத்யுக்தி, என்று மொரு வ்யாக்யாநம்)
அந்த ராக்ஷஸர்களில் ஹேதி -ப்ரஹேதி என்று இரு ராக்ஷஸர்கள் ஸஹோதரர்களாக இருந்தனர். அவ்விருவரும் மது கைடபாஸுரர்களுக் கொப்பானவர்களாக விளங்கினர். சத்ருக்களை அழிப்பதில் ஸமர்த்தர்களாகவுமிகுந்தனர். ப்ரஹேதி என்பவன் தர்மிஷ்டனாகவுமிருந்தான். அவன் தபஸ் செய்ய நினைத்துக் கானகம் சென்றான். ஹேதி என்பவன் இல்லறத்தை விரும்பி யமனுடைய ஸஹோதரியான பயை என்பவளை மணந்து கொண்டான். தானே விரும்பி மணந்து கொண்டவளோ பெயருக்கேற்ப பயங்கரியாகவே இருந்தான். அந்த ஹேதி என்கிற அரக்கன் பயையினிடத்தில் விதயுத்கேசன் என்கிற புத்ரனை உண்டு பண்ணினான். அந்த புத்ரனும் சூரியன் போன்ற தேஹ காந்தியை உடையவனாயும், ஜலமத்யத்தில் உருப் பெரும் மேகம் போலவும் வளர்ந்து வந்தான். யௌவனப் பிராயத்தை அடைந்தவளவில் பிதாவான ஹேதி அவலுக்கு மணம் செய்விக்கக் கருதினான். ஸந்த்யை என்பவளின் பெண்ணான *ஸாலகடங்கடை"யை அவனுக்கு மனைவியாக்கினான். அவளை மணம் புரிந்து கொண்ட வித்யுத்கேசன் அவனுடன் இந்த்ராணியுடன் இந்த்ரன் மகிழ்வது போல மகிழ்ந்தான். சில காலங் கழிந்ததும் ஸாலகடங்கடை கர்ப்பமுற்றாள். ப்ரஸவ காலம் நெருங்கியதும் மந்தர மலைச் சாரலை யடைந்து அங்கே ப்ரஸவித்தாள். அழகான ஆண் குழந்தையாகப் பிறந்த அதை, அங்கேயே விட்டு விட்டு, பர்த்தாவுடன் இன்ப சுகமனுபவிக்கச் சென்று விட்டாள்.
அவளால் விடப்பட்ட அந்த சிசு சரத்கால மேகம் போன்ற சோதியை உடையதாகி வாயில் விரலை வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தது. ஆகாசத்தில் வ்ருஷபாரூடராய் பார்வதீதேவியுடன் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த சிவபெருமான் இக்குழந்தையின் அழுகையைக் கேட்டு மனமிரங்கியவராய். அக்குழந்தையின் தாயாருக்கு அப்போது என்ன வயதோ அதே வயது அந்தக் குழந்தைக்கு அப்போதே உண்டாக வேண்டுமென்றும், தேவர்கள் போல அக்குழந்தை என்றும் மரணமில்லாதிருக்குமாறும் அநுக்ரஹித்து, பின்னும் பார்வதீ தேவியின் ப்ரீதிக்காக ஆகாசத்தில் எழுந்து செல்லக்கூடிய பட்டணமொன்றையும் அளித்தார். அப்போது பார்வதியும் "ராக்ஷஸ ஸ்த்ரீகள் கருவுற்ற உடனேயே கர்ப்பம் முற்றி ப்ரஸவ முண்டாகவும், ப்ரஸவித்த போழ்தே குழந்தை தாயின் வயதிற்குச் சரியான வயதுள்ளதாகவும் ஆகவேண்டும்” எனவும் அரக்கர்களுக்கு வரமளித்தாள்.
சுகேசன் என்று பெயர் பெற்ற அவ்வரக்கன் இவ்வாறு பரமசிவ தம்பதிகளருள் பெற்று, அதனால் அஹங்காரம் கொண்டு, வானவீதியில் எழுந்து செல்லும் தனது நகரத்துடனே தேவேந்த்ரன் போல் எங்கும் ஸஞ்சரிக்கலாயினன்.
ஐந்தாம் ஸர்க்கம்
[சுகேசனின் விவாகம், அவனது புத்ரோத்பத்தி, அவர்களின் லங்காப் ரவேசம் முதலியன கூறப்படுகின்றன]
சிவபெருமானருள் பெற்றவனும் தர்மிஷ்டனுமான சுகேசனுக்கு, விச்வாவஸுக் கொப்பான க்ராமணி என்னும் கந்தர்வன், மஹாலக்ஷ்மி போன்ற தேவவதீ என்கிற தனது பெண்ணைக் கன்யகாதானம் செய்து கொடுத்தான். அவளும் தனமற்றவன் மிகுந்த தனத்தை அடைந்தது போல் அவனை அடைந்து மிகவும் ஸந்தோஷத்தை அடைந்தாள். சுகேசனும் அவளை அடைந்து மிகவும் மகிழ்ந்தான் இவ்விருவர். களுக்கும் மூன்று குமாரர்கள் பிறந்தனர். அவர்கள் மால்யவான், சுமாலீ, மாலீ என்று அழைக்கப்பட்டனர். இம்மூவரும் மிகுந்த பலசாலிகளாகவும். முக்கண்ணன் (சிவன்) போன்ற பராக்ரமசாலிகளாகவும், மூவுலகங்களைப் (பூர்-புவ:-ஸுவ:) போல் ப்ரஸித்தர்களாகவும், மூன்று அக்கினி (கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி) களைப் போல் தேஜஸ்விகளாவும்,மூன்று மந்த்ரங்களைப் (மூன்று வேதங்கள் அல்லது- மந்த்ர சக்தி, ப்ரபு சக்தி, உத்ஸாஹ சக்தி) போல் ஸமர்த்தர்களாகவும், மூன்று வ்யாதிகளைப் (வாதம்,பித்தம், ச்லேஷ்மம்) போல் பயங்கரர்களாகவும் வளர்ந்து வந்தனர்.
அந்த மூவரும் தனது தகப்பனாருக்கு ஈச்வரனுடைய அநுக்ரஹம் பெறக் கருதி மேருமலைக்குச் சென்று கடுந்தவம் புரிந்தனர். அவர்கள் செய்த தவத்தைக் கண்டு ஸகலமான ப்ராணிகளும் நடுங்கின. ஏன், மூவுலகங்களுமே நடுங்கின.
அவர்களுடைய கடும் தவத்தால் ப்ரீதியடைந்த நான்முகன் இவர்கள் முன் தோன்றி, வேண்டும் வரங்களைப் பெறும்படி அருளினார்.
அவர்களும் நான்முகனை வலம் வந்து வணங்கி, "ஸ்வாமிந்! எங்களுடைய தவத்தினால் தேவரீர் ப்ரீதியடைந்தவராயின் நாங்கள் எவராலும் வெல்ல முடியாதவர்களாகவும், சத்ருக்களை வெல்லச் சக்தியுள்ளவர்களாகவும். சிரஞ்ஜீவி களாகவும், மிகுந்த பராக்ரமமுள்ளவர்களாகவும், நாங்கள் ஒருவர்க்கொருவர் அன்பு மாறாதவர்களாகவும் விளங்கும்படி வரமளிக்க வேண்டும்" என ப்ரார்த்தித்தனர். பிரம்மாவும் 'அவ்வாறேயாகுக' என்று வரமளித்து, தாம் வந்தபடியே இந்த்ரன் முதலான தேவர்களுடன் சென்றுவிட்டார்.
ப்ரம்மாவினால் அளிக்கப்பட்ட வரத்தினால் மிகவும் கர்வமடைந்த அம் மூவரும் எவரிடத்திலும் பயங் கொள்ளாமல், தேவர் அசுரர் ஆகிய அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினர். (ஸுராஸுராந் ப்ரபாதந்தே ) அவர்களால் துன்புறுத்தப் பட்ட தேவர்கள், சாரணர்கள், ரிஷிகணங்கள் ஆகிய அனைவரும் தம்மை ரக்ஷிப்பவரின்றி வருந்தலாயினர்.
ஹே ராகவ! பிறகு அவ்வரக்கர்கள் சில்பிகளுள் ச்ரேஷ்டனான விச்வகர்மாவை அழைத்து, மிகுந்த ஸந்தோஷத்துடன்,' "விச்வ கர்மாவே! பெரியோர்கள், பலசாலிகள். ச்ரேஷ்டர்கள், மஹான்கள் இவர்களுக்குத் தக்கபடி வாஸ ஸ்தானத்தை நிர்மாணம் செய்வதில் நீரே ஸமர்த்தரென்று யாம் அறிவோம். எனவே நீர் நாங்கள் வாஸம் செய்வதற்குத் தகுந்தபடியாக ஹிமயமலையிலோ மேருமலையிலோ மந்தர பர்வதத்திலோ உமது புத்தி ஸாமர்த்யத்தை ப்ரயோகித்து உயர்ந்த ஸ்தானத்தை (க்ருஹத்தை) நிர்மாணம் செய்யவும் அந்த வாஸ ஸ்தானமானது கைலாஸத்திற் கொப்பானதாக இருக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர் .
இப்படி ஆஜ்ஞாபிக்கப்பட்ட விச்வகர்மா அவர்களைப் பார்த்து. 'தலைவர்களே! தெற்கு ஸமுத்திரக் கரையிலே த்ரிகூடம்' என்றொரு பர்வதம் இருக்கிறது அம்மலையின் சிகரத்தின் மத்யத்தில் பக்ஷிகளாலும் உட்புக முடியாதபடியுள்ளதும், ஈட்டி முதலிய ஆயுதங்கள் பொருத்தப்பட்ட மதிள்சுவரை உடையதாயும் உள்ள நகரமொன்று முன்பே என்னால் இந்திரனுடைய உத்தரவினால் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. அதன் பெயர் இலங்கை என்பதாகும். அது முப்பது யோஜனை அகலமும், நூறு யோஜனை நீளமும் உள்ளது. அது ஸ்வர்ண மயமான மதிள்களையுடையதாயும். ரத்தினங்களிழைக்கப்பட்ட தோரணங்களை உடையதாகவும் விளங்குகிறது. சத்துருக்களை அழிப்பதில் ஸமர்த்தர்களே! நீங்கள் அங்கே சென்று, உங்களது படைகள் சூழ வாழ்ந்து வாருங்கள். எப்படித் தேவேந்திரன் தேவலோகமான அமராவதியில் குறைவற வாழ்கிறானோ அவ்வாறே நீங்களும் இலங்காபுரியில் வாழலாம்” என்று கூறினான்.
இவ்வாறான விச்வகர்மாவின் வார்த்தையைக் கேட்ட அரக்கர்கள் ஆயிரக் கணக்கான பந்துமித்ரர்களுடன் குடிபுகுந்து வஸிக்கலாயினர்.
ஹே ராகவ! இப்படி இவர்கள் அங்கு வஸிக்கும் காலத்தில் நர்மதை என்ற பெயரையுடைய கந்தர்வ ஸ்திரீ, தனது அழகிற் சிறந்த மூன்று பெண்களையும் மூன்று ராக்ஷஸர்களுக்கும் முறைப்படி விவாஹம் செய்வித்தாள். அம் மூன்று பெண்களும். ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி இவர்களுக்கொப்ப அழகு வாய்ந்தவர்கள். விவாஹம் நடைபெற்ற தினம் உத்தரபல்குனீ நக்ஷத்திரம் கூடிய சுபதினமாயிருந்தது. மூவரும் அழகிய மனைவியரை அடைந்து அப்ஸரஸ்திரீகளுடன் கூடி மகிழும் தேவர்களைப் போல் கூடிக் களித்தனர்.
மூத்தவனான மால்யவானுக்கு அவனுடைய மனைவியான சுந்தரியினிடத்தில் வஜ்ரமுஷ்டி, விரூபாக்ஷன், துர்முகன், யஜ்ஞகோபன், மத்தன், உன்மத்தன் என்கிற புதல்வர்களும், அனலை என் று பெயருடைய ஒரு பெண்ணும் பிறந்தனர். சுமாலியின் மனைவியான கேதுமதீ என்பவள் ப்ரஹஸ்தன், அகம்பனன், விகடன், காலகார்முகன், தூராக்ஷன், தண்டன், ஸுபார்ச்வன். மஹாபலன், ஸம்ஹ்ராதி. ப்ரகஸன், பாஸகர்ணன் என்கிற புதல்வர்களையும், ராகா-புஷ்போத் கடா - அழகிய இடையையுடையவளான கைகஸீ, கும்பீநஸீ என்கிற கன்யகைகளையும் பெற்றாள். மாலிக்கு அவன் மனைவியான வசுதை என்பவளிடத்தில் அநலன் அநிலன், ஹரன், ஸம்பாதி என்று நான்கு புதல்வர்கள் பிறந்தனர், அந்த நால்வரே, விபீஷணனுடைய மந்த்ரிகளாக விளங்கினார்கள்.
இவ்வாறு மூன்று ராக்ஷஸர்களும் பல மக்களைப் பெற்ற பின்னர் தமக்கு உள்ள பலத்தினால் கர்வம் கொண்டவர்களாய், தேவர்களையும் ரிஷிகளையும் ஹிம்ஸித்துக் கொண்டும், யாகங்களை அழித்துக் கொண்டும் உலகில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.
ஆறாம் ஸர்க்கம்
[அரக்கர்களால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் பரமசிவனைச் சரண மடைவதும், அவர் நாராயணனைச் சரணமடையும்படி கூறுவதும் முதலியன.)
இப்படி அரக்கர்களால் துன்பமடைந்த தேவர்களும் ரிஷிகளும் மிகவும் பயந்தவர்களாய், மஹேச்வரனான சங்கரனைச் சரணமடைந்து அஞ்ஜலிஹஸ்தர் களாய், 'காமனை அழித்தவனே! முப்புரமெரித்தவனே! முக்கண்ணனே! பிரம்மதேவனின் வரத்தினால் கர்வமடைந்த சுகேசபுத்திரர்களால் நாங்கள் மிகவும் துன்புறுத்தப்படுகிறோம். எங்கள் வாஸஸ்தானங்களெல்லாம் அபஹரிக்கப்பட்டு அழிக்கப் பட்டன. ஸ்வர்க்கலோகத்திலிருந்து தேவர்கள் விரட்டப் பட்டனர். அங்கு அரக்கர்கள் கொட்டமடிக்கின்றனர். மேலும் அவர்கள், 'நானே விஷ்ணு, நானே ருத்ரன், பிரமனும் நானே. தேவேந்திரனும் யமனும், வருணனும், சந்திரனும், சூர்யனுங்கூட நாங்களே' என்றெல்லாம் கூறித் திரிகின்றனர். ஆகவே பயந்தவர் களான எங்களுக்கு அபயமளிக்கவும். சிவனான (மங்கள ஸ்வரூபனான) தேவரீர் அசிவனாக (ரௌத்ரரூபியாக) ஆகி அவர்களை அழிக்க வேண்டும்" என்று தழுதழுத்த குரலில் வேண்டி நின்றனர்.
இப்படிப் பிரார்த்திக்கப்பட்ட கபர்தியானவர் அவர்களைப்பார்த்து 'ஹே தேவரிஷிகளே! நான் அவர்களை வதம் செய்யச் சக்தியற்றவன். ஏனெனில், அவர்கள் என்னால் கொல்லப்படக் கூடாதவர்களாக உள்ளனர். அப்படி ஒரு வரம் என்னால் சுகேசனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்களை வெல்லும் உபாயத்தைக் கூறுகிறேன். நீங்களெல்லோரும் இப்படியே ஸ்ரீமந்நாராயணனைச் சரணம் அடையுங்கள். அவர் அவர்களை ஸம்ஹரித்து உங்களை ரக்ஷிப்பார்'' என்று கூறினார்.
அதைக் கேட்ட தேவரிஷிகள் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் சென்று வணங்கித் துதித்து, "ஹே சங்க சக்ர கதாபாணியே! சுகேசனின் புதல்வர்கள் மூவராலே நாங்கள் மிகவும் துன்புறுத்தப்படுகிறோம். த்ரிகூட மலை மீதுள்ள லங்காபுரியை வாஸஸ்தானமாகக் கொண்ட அவர்களை நீர்தாம் ஸம்ஹரித்து எங்களை ரக்ஷிக்க வேண்டும். உம்மைத் தவிர வேறு யார் உள்ளனர் எங்களை ரக்ஷிக்க? 'தேவரீர் சக்ராயுதமேந்தி அவர்களை யமனுக்கு அதிதிகளாக அனுப்பி வைக்கவும். இப்படி அவர்களை ஸம்ஹரித்து எங்களை ரக்ஷிக்கவும். எங்களுடைய பயத்தைப் போக்கவும்' என்று வேண்டினர்.
சத்ருக்களுக்குப் பயத்தைக் கொடுப்பவனும், சரணமடைந்தவர்களுக்கு அபயத்தைக் கொடுப்பவனுமான ஸ்ரீமந்நாராயணன், தேவர்களுக்கு அபயமளித்து தேவர்களே! நீங்கள் இனி வருந்த வேண்டாம். சுகேசனைப் பற்றியும் அவனது புதல்வர்களைப் பற்றியும் நான் நன்கு அறிந்துள்ளேன். வரம்பு மீறி அட்டூழியம் செய்யும் அவர்களை நான் நிச்சயமாக தண்டிக்கிறேன். நீங்கள் இனிப் பயமற்றவராக இருங்கள்’ என்றார். நாராயணனிடமிருந்து அபயம் பெற்ற தேவரிஷிகன் ஸந்தோஷத்துடன் தம்தம் இருப்பிடம் சென்றனர்.