ஏற்கனவே பல முறை இங்கு அடியேன் எழுதியதை மீண்டும் சொல்வதில் சந்தோஷம்தான். எங்களூர் மிகச் சிறிய க்ராமம்தான். அதிக வசதிகளோ, சென்னை போன்ற நகர்களிலே உள்ள அளவுக்கு சம்ப்ரதாய ஞானம் நிறைந்தவர்களோ அல்லது சத்விஷயங்களை இளைய தலைமுறைக்குச் சொல்லிக் கொடுப்பாரோ இல்லாத சிறு பட்டிக்காடுதான். ஆனாலும் எங்களுக்கு இருக்கின்ற பெரிய பாக்யம் மற்ற பெரிய நகரங்களிலே வாழ்வோருக்கு உண்டா என்றால் இல்லை என்றுதான் அடியேன் சொல்வேன்.
மற்ற ஊர்களில் யதிகள் மற்றும் பெரியவர்களை நாம் தேடிச் சென்று ஸேவிக்க வேண்டும். அதற்கு நமக்கு அவகாசம் வேண்டும். அப்படியே போனாலும் யாரைத் தேடிப் போகிறோமோ அவர்களுக்கு நாம் போகும் நேரம் சௌகர்யப் படவேண்டும். இப்படிப் பல பிரச்சினைகள்.
ஆனால் இங்கோ, எல்லாப் பாபங்களுக்கும் ப்ராயச்சித்தமாக, சக்கரவர்த்தித் திருமகன் திருவடிபட்ட ஸ்ரீ ஸேதுவை அனைத்து பூர்வாச்சார்யர்களும் ஏற்றுக் கொண்டதாலே, யதிகள், மகான்கள், மஹாமஹோபாத்தியாயர்கள், பல கலை வல்லவர்கள் என யாராவது ஒருவர் தினமும் இங்கு வராமலிருப்பதில்லை. ஊரோ உள்ளங்கை அளவு. அதனால் யார் வந்தாலும் உடன் தெரிந்து விடும். எனவே அவர்களை ஸேவிப்பது அடியோங்களுக்கு மிக எளிதாகக் கிடைத்த பாக்யம். அதிலும் யதிகள் வரும்போது இன்னும் விசேஷமாக பல நிகழ்வுகள் அடியோங்களுக்குக் கிடைக்கும். 2008ல் ஸ்ரீமத் ஆண்டவன் இங்கு முதன்முறையாக சாதுர்மாஸ்ய ஸங்கல்பம் அனுஷ்டித்த போதும் சரி, இப்போது ஸ்ரீ அஹோபில மட அழகியசிங்கர்கள் இங்கு ஸங்கல்பத்தை அனுஷ்டித்து வருகின்ற இப்போதும் சரி, தினமும் நாங்கள் பார்த்து அனுபவித்து வியந்து மகிழ்கின்ற, ஆச்சார்யனிடம் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று தங்கள் நடத்தையால் அடியோங்களுக்குப் புரிய வைக்கின்ற பலரைச் சந்திக்கின்ற நல்வாய்ப்புகளும் இங்கு அனேகம்.
ஆச்சார்யர்கள் எங்களைத் தேடிவந்து அனுக்ரஹிப்பதின் நோக்கம், இவர்களுக்கு வேறு மார்க்கமில்லை, நம்மை இவர்கள் அவர்களது அஞ்ஞானத்தாலே தேடிவந்து தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் பாவ மூட்டைகளைத் தொலைக்கப் போவதில்லை, எனவே நாமே சென்று அவர்களைக் கடைத்தேற்றுவோம் என்ற அளப்பரிய கருணையால் இருக்கலாம் என அடியேனுக்குத் தோன்றும்.
அப்படி இப்போது ஸ்ரீமத் அழகியசிங்கர் எழுந்தருளியிருக்கும்போது நேற்று இங்கு வந்தவர் திரு நம்பிராஜன் ஸ்வாமியும் அவரது தர்ம பத்தினி ஸ்ரீமதி ரமாவும். காலையில் மாலோலன் முன் மனமுருகிப் பாடிக் கொண்டிருந்தார். ஞானசூன்யமான அடியேனே நெக்குருகிப் போனேன். கண்டிப்பாய் மாலோலன் மிக மிக மகிழ்ந்திருப்பான். ஆஹா! விடலாமோ இவரை! மாமாவிடம் அனுமதி பெற்று அடியேனுக்கும் சில பாடல்களைப் பதிவு செய்து தர வேண்டும் என்று வேண்டினேன். ஏற்றுக் கொண்டாலும், மாலோலனுடனும், கோவிலில் பெருமாள், தாயார், இராமனுடனும் அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இரவு ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் இருந்தவர்களை வேண்டிக் கொள்ள அந்த அவசரத்திலும் ஒரு அரை மணி அவகாசம் ஒதுக்கி ரமா மாமி தேன்மாரியாய் இசை மழை பொழிந்தார். ஆழ்வார்கள் பாடலையே ப்ரதானமாகப் பாடினார். அதிலும் அடையாளப் பத்தை முழுமையாகப் பாடி உருக வைத்தார். [மாமி சொன்னது – இராமன் சந்நிதியில் அடையாளப் பத்து ஸேவிக்க ஆசை. ஆனால் அங்கு வேறு சிரமங்கள் இருந்ததால் ஏக்கமாகவே வந்தேன். அதனால் இங்கு அதை முழுமையாய்ப் பாடினேன். ] [உலகத்தார் எல்லாரும் கேட்கவேண்டும் என்பதற்காகவே இராமன் விட்டுக் கொடுத்தான் போல. ] கேட்கக் கேட்க ஸ்வாமி தேசிகன் ஸாதித்த “தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை” என்பதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. ஸ்ரீராமபாரதியின் சில பாடல்களை எப்போதாவது இணையத்தில் கேட்டு சந்தோஷப் பட்டிருக்கிறேன். ஆனால் இப்படித் தொடர்ந்து கேட்கும் வாய்ப்பு இன்று கிட்டியது. அவர்கள் போட்டோதான் மேலே இருக்கிறது.
அதிலும் கூடுதல் சந்தோஷம், அவர்கள் இருவரும் இரு வழியில் அடியேன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பது. நானும் ஆபீஸ் போகிறேன் என்று போய்க்கொண்டிருந்தேனே, அந்த பிஎஸ் என் எல்லில், மாமா , Dy. Genereal Manager. ஆண்டவன் ஆச்ரமத்தில் அடியேன் மீது பிரியமுள்ள ஒரு சஹோதரி ஸ்ரீமதி வேதா. ஸ்ரீ நம்பிராஜன் அவருக்கு அண்ணா. ஆக அடியேனுக்கும் சஹோதரர் ஆக ஒரு குடும்பமானோம்.
இந்த ரமா மாமி மாதிரி நிறையப் பேர் ஆழ்வார்கள் அருளிச் செயலை எல்லாரும் அனுபவிக்கும் வகையிலே பாடிப் பரப்ப முன் வரவேண்டும். ஸ்ரீவைணவப் பெண்மணிகள் நிறையப் பேர் கச்சேரிகள் செய்கிறார்கள். தியாகைய்யரையும், புரந்தரதாஸரையும், தீக்ஷிதரையும் பாடப் பலருண்டு. ஆழ்வார்களைப் பாடத் தாங்கள் மட்டுமே உண்டு என்று அவர்கள் நினைக்க வேண்டும். தனித் தமிழிசைச் சங்கம் கண்டது போல் ப்ரபந்தம் மட்டும் கச்சேரி என்று நிகழ்ச்சிகள் துவங்க வேண்டும்.
உங்களுடன் ஸ்ரீமதி ரமா மாமி பாடியதைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்,
ஸ்ரீ நம்பி ராஜன் மாமா,
க்ஷமித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு பெரிய பாடகர் என்பது இரவு லேட்டாகத் தான் தெரிந்தது. அடுத்த முறை வால்மீகி தெருவில் சந்திக்கும்போது அதை ஈடுகட்டிக் கொள்வேன்.
ரமா மாமியின் தேனிசை கேட்க
http://www.mediafire.com/?1m1yf5qyr5rsqgu