26. பண்டைத் தமிழ் நோன்பு
கண்ணன் சிங்காசனத்தில் வீற்றிருக்கின்றான் – சிங்கத்தின் மேல் சிங்கம் வீற்றிருப்பதுபோல. 'நீங்கள் "பறை தருதியாகில்" என்று வேண்டுகிறீர்களே, அது எதற்காக? எந்த விரதத்தை எப்படி அனுஷ்டிக்கப் போகிறீர்கள்' என்று கேட்கிறான் பெண்களை நோக்கி. அதற்குப் பெண்கள் பதில் சொல்லும் பாசுரம் இது.
ஆய்ச்சியர் இப்பொழுது 'மாலே!' என்று கண்ணனை விளிக்கிறார்கள். இதுவரை அவனிடம் தங்களுக்குள்ள ஆசையைத்தான் பிரஸ்தாபித்தார்கள். இப்போது சிங்காசனத்திலே யசோதை இளஞ்சிங்கத்தைக் கண்டதும், தங்கள் மீது கண்ணன் கொண்டிருக்கும் காதலே ஒரு கடல் என்பதையும், கடல் குடத்திற்குள் அடங்கிக் கிடப்பது போல் அந்தக் காதல் வடிவுகொண்டு வீற்றிருப்பதையும் உணருகிறார்கள். 'நாம் வரும்வரை இவன் தன் ஆசையை எப்படித்தான் அடக்கிக் கொண்டிருந்தானோ? அந்த ஆசைக்கு என்ன சமாதானம் சொல்லி வந்தானோ? என்ன நம்பிக்கை காட்டி வந்தானோ?' என்றெல்லாம் எண்ணத் தொடங்குகிறார்கள்.
இவ்வளவு உணர்ச்சியையும் உள்ளத்திலே கொண்டுதான் 'மாலே!' என்கிறார்கள்;'மணிவண்ணா!' என்றும் அழைக்கிறார்கள். இதற்குமுன் நாராயணன், பரமன், தேவாதிதேவன் என்றெல்லாம் அழைத்தார்கள். அந்தப் பெயர்கள் எல்லாம் பகவானுடைய பரத்துவம் என்ற மேலான நிலையைச் சுட்டிக் காட்டின. ஆனால் இப்போது கண்ணனுடைய எளிமையும் காதலுமே இவர்களை மோகிக்கச் செய்கின்றன.
இவர்களது அழைப்பைப் பேரன்புடன் செவியில் போட்டுக்கொண்ட பெருமான் இவர்களை நோக்கி, "நான் என் தாய்க்கு மணிவண்ணன்தான்; 'என் மணிவண்ணன்' என்று யசோதை அம்மா என்னைப் பாராட்டுவது உண்டு. இப்போது உங்களுக்கும் இனிய மணிவண்ணனாகி விட்டேன்; நல்லது, இனி உங்கள் மணிவண்ணனிடம் வந்த காரியத்தைத் தாராளமாகச் சொல்லலாமே; அந்தப் பறை குறித்த விவரங்களைச் சொல்லலாமே இப்போது" என்கிறான்.
உடனே இவர்கள் 'மார்கழி நீராடுவான்' என்று தொடங்குகிறார்கள். கண்ணன் குறுக்கிட்டு, 'அது என்ன, மார்கழியாவது, நீராட்டமாவது?' என்று கேட்கிறான். இவர்கள் செய்ய விரும்பிய காரியத்திற்கு ஆதாரம் கேட்கிறான். பெண்கள்,
மாலே! மணிவண்ணா! மார்கழிநீர் ஆடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
என்று மேலே சொல்லுகிறார்கள்.
முதல் முதல் சங்குகள் வேண்டும் என்கிறார்கள்; பிறகு பறை வேண்டும் என்கிறார்கள். அப்பால் பல்லாண்டு பாடுவாரும் தேவை என்கிறார்கள். மேலும், விளக்கு கொடி விதானம் முதலியவை வேண்டும் என்று அடுக்கிக்கொண்டே போகிறார்கள். இவையெல்லாம் ஏன் தேவைப்படுகின்றன?
நல்ல சங்குகள் வேண்டும் என்கிறார்கள். நடுங்க ஒலி செய்யும் பாஞ்சசன்னியம் என்ற கண்ணன் சங்கை ஒத்த சங்குகள் வேண்டும் என்கிறார்கள்.
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சனியமே
போல்வன சங்கங்கள்
தங்களுக்குத் தேவை என்று இவர்கள் சொன்ன போதிலும் பிறரை நடுங்கச் செய்வதற்காக இவர்கள் அத்தகைய சங்குகள் வேண்டுமென்று சொல்லவில்லை. உறங்குபவர்களை விழிக்கச் செய்யும் பள்ளியெழுச்சிச் சங்குகளே வேண்டும் என்கிறார்கள்.
ஏற்கனவே பறையைத் தான் இந்த நோன்பிற்குச் சிறப்பான உபகரணமாகக் குறிப்பிட்டார்கள். அந்தப் பறைகளை பெரும் பறைகள், மிகவும் பெரிய பறைகள் என்று குறிப்பிடுகிறார்கள். பேரோசை உடைய பறைகள் வேண்டும் என்கிறார்கள். பள்ளியெழுச்சிச் சங்குகள் வேண்டும் என்றவர்களுக்குப் புறப்பாட்டுப் பறைகளும் வேண்டும் என்கிறார்கள். இந்தச் சங்குகளும் பறைகளும் அன்பர்களுக்கு --- மார்கழி நீராட்டத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு --- ஊக்கமும் உற்சாகமும் கொடுப்பதுபோல், மார்கழி நீராட்டத்திற்கு எதிரிகளாய் இருப்பவர்களை ஒரு கலக்குக் கலக்கி விடும் என்று இந்தச் சிறுமியர்கள் கருதுகிறார்கள் என்று கொள்வதும் தவறாகாது.
பறைகளை முழக்கிக் கொண்டு புறப்படும்போது எதிரே நின்று பல்லாண்டு பாடுகிறவர்களும் வேண்டும்; அவர்களையும் அனுப்பிவைக்க வேணும் என்று கண்ணனைப் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள் இவர்கள். எதிரே நின்று பல்லாண்டு பாடுகிறவர்கள் இந்த நோன்பு கொண்டாடுபவர்களுக்கு மங்களம் உண்டாகும்படி வாழ்த்துகிறவர்கள் ஆவர் என்பது குறிப்பு.
மங்கள தீபம் வேண்டும் என்கிறார்கள்; அதிகாலை இருட்டில் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரிவதற்காகத்தான். கொடி வேண்டுமாம்; தூரத்திலே இருப்பவர்களுக்கும் இந்தப் பெண்கள் கூட்டம் வருவது தெரிய வேண்டுமல்லவா? விதானம் என்ற மேற்கட்டி வேண்டுமாம்; அதிகாலையில் புறப்பட்டுப் போகும்போது தலைமேல் பனி விழாமல் தடுப்பதற்குத்தான்.
இவற்றையெல்லாம் கண்ணன் அருள்கூர்ந்து தரவேணும் என்கிறார்கள்.
நோன்பிற்கு வேண்டியவை
மாலே! மணிவண்ணா! மார்கழிநீர் ஆடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
விளக்கம்
கண்ணன் ராஜசிங்கம் போல் சிங்காசனத்தில் வீற்றிருந்து, 'பெண்களே, நீங்கள் பறை என்று சொல்லி வேறொன்றை வேண்டுகிறீர்களே, அதைத் தெளிவுபடுத்த வேண்டும்' என்று கேட்கிறான். அது குறித்து விவரிப்பதுதான் இந்தப் பாசுரம்.
கண்ணனுடைய கேள்வியிலிருந்தே அவனுக்கு அன்பர்கள் மீதுள்ள ஆசை புலனாகிறது என்பதை இப்பெண்கள் தெரிந்து கொள்கிறார்களாம். எனவே 'மாலே! மணிவண்ணா!' என்று அழைத்துப் பதில் சொல்லுகிறார்கள்.
முன்னோர்கள் அனுஷ்டித்த மார்கழி நோன்பு குறித்துப் பேசுகிறார்கள். மார்கழி நீராட்டத்தை முக்கிய அம்சமாக உடைய இது ஒரு வைதிக நோன்பு அல்ல, தமிழகத்தில் முன்னோர்கள் சிஷ்டாசாரமாக அனுஷ்டித்து வந்தது என்று கூறிப் பின் விவரிக்கிறார்கள்.