எழுபத்தி ஒன்றாவது ஸர்க்கம்
[ஸ்ரீராம ஸபைக்கு, யமுநாதீர வாஸிகளான முனிவர்களின் வருகை,
அவர்களை வரவேற்று உபசரித்து, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக,
ஸ்ரீராமன் பிரதிஜ்ஞை செய்வது, அவர்கள் ஸ்ரீராமனைப் போற்றுவது.)
வஸந்த பௌர்ணமி கழிந்த மறுநாள், காலை ஸ்ரீராகவன் தனது, நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ராஜ்ய காரியங்களை கவனிக்கச் செல்ல ஆயத்தமாயினன். அதுஸமயம், ஸுமந்திரர் அங்கு வந்து ராகவனை வாழ்த்தி - “ஸ்ரீராகவ! நமது அரண்மனை வாயிலில், யமுனாதீர வாஸிகளான முனிவர்கள், பார்கவரையும் ச்யவனரையும் முதன்மையாகக் கொண்டு, தங்களை தரிசிக்க வந்துள்ளனர்” என்று கூறினார். அது கேட்ட ரகுநந்தனன், 'உடனே அவர்களை அழைத்து வரவும்' எனக்கூற, ஸுமந்திரர் சென்று. அவர்களை வணங்கி அழைத்து வந்தார். நூற்றுக்கும் அதிகமான அம் முனிவர்கள், தமது கைகளில், புண்யதீர்த்தங்கள் நிறைந்த கலசங்களையும், கனி கிழங்கு வகைகளையும், ஏந்தியவர்களாய், ஸ்ரீராம ஸபைக்குச் சென்று, ஸ்வஸ்தி வசன பூர்வமாக, அவைகளை ஸ்ரீராமனிடம் ஸமர்ப்பித்தனர். அவைகளை வணக்கத்துடன் ஏற்றுக் கொண்ட ஸ்ரீராகவன், அவர்களைப் பார்த்து. -ராகவன் அஞ்ஜலி செய்து கொண்டு, ''முனிவரர்களே! அடியேனால் உங்களுக்கு ஆகவேண்டிய காரியம் யாது? தாங்கள் யாது விரும்பினாலும், அதனைச் செய்து முடித்தற்குச் சித்தனாயிருக்கிறேன். இந்த ராஜ்யம் முழுமையும், இத்தேகத்தினுள்ளிருக்கும் உயிரும், ஆன்மாவும் அந்தணரின் பொருட்டேயன்றி வேறன்று. இது ஸத்தியமே" என்று கூறினன். அது கேட்டு யமுனாதீர வாஸி களான முனிவர்கள் யாவரும், "நன்று, நன்று” என்று கொண்டாடி ஸ்ரீராகவனை நோக்கி, "ராஜ ராஜன்! உனது கருணையே கருணை, இதுவரை யாம், இப் பூமியில், பூபதிகள் பலரிடம் சென்றோம். அவர்கள் எங்களுக்கு, இத்தகைய உறுதியைக் கொடுத்திலர். நீயோ அவ்வாறின்றி அந்தணர்களிடமுள்ள கௌரவத்தையே முதன்மையாகக் கொண்டு, எங்களுக்கு அபயமளித்தனை. ஆதலால் முனிவர்களுக்கு நேர்ந்துள்ள பயத்தைப் போக்கி, அனைவரையும் நீயே ரக்ஷிக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டனர்.
எழுபத்தியிரண்டாவது ஸர்க்கம்
(முனிவர்கள், லவணாசுரனைப் பற்றிக் கூறியதும், அவனிடமிருந்து தங்களை ரக்ஷிக்க வேண்டியதும்,]
இப்படிக் கூறிய முனிவர்களைப் பார்த்து, ஸ்ரீராமன், “மஹரிஷிகளே! உங்களுக்கு உண்டான ஆபத்தைக் கூறவும், அதைப் போக்குகிறேன்" என்றான். இவ்வாறு ஸ்ரீராகவன் கூறியதும், பார்கவ முனிவர் ஸ்ரீராமனைப் பார்த்துப் பின்வருமாறு கூறலானார்-
“ஹே ராமபத்ர! முன் கிருதயுகத்தில், 'லோலை' என்பவளுக்கு மூத்த குமாரனான, மது எனப் பெயர் கொண்ட மகாசுரன் ஒருவனிருந்தான். தைரிய சௌர்ய பராக்ரமங்களுடன் கூடினவனாகவும், தர்மத்திலும் அதிகம் பற்றுள்ளவனாகிப் பல ஆண்டளவு பரமசிவனைக் குறித்துத் தவம் செய்தான். அதனால் பிரீதியடைந்த பரமசிவன், அவனிடம் கருணை கொண்டு, அவனுக்கு உயர்ந்த வரங்களை யளித்தான். மேலும் தனது சூலாயுதத்தினுடைய சக்தியை ஆரோபித்துச் சிறந்த வீரியமும் சிறந்த சோதியுமுடையதான சூலாயுதமொன்றையும் அவனுக்களித்தனன். பின்னும் அச்சிவன் அவ்வசுரனை நோக்கி, “நீ எவ்வளவு காலம் தேவர்களுடனும், பிராம்மணர்களுடனும் பகைமை கொள்ளாது இருக்கின்றனையோ; அதுவரையுமே இச்சூலாயுதம், உன்னுடையதாகும். மாறு கொள்வாயாயின் உடனே இஃது உன்னைக் கைவிட்டு அகன்று விடும். நீ சிறந்த ஒழுக்கங்களை உடையவனாயிருக்கும் வரையில் உன் மீது எவன் எந்த ஆயுதத்தை எய்தவளவிலும், அவ்வாயுதத்தை இந்தச் சூலாயுதம் சென்று எரித்துச் சாம்பலாக்கி, உடனே உன்னிடம் சேர்ந்து விடும்' என்று அருளிச் செய்தான். இப்படிக் கூறிய சிவபிரானை,மதுவென்னும் அவ்வசுரன் மறுபடியு மடிபணிந்து - “ஸ்வாமின்! அடியேனுக்கு மற்றொரு வரமருள வேண்டும்; அதாவது இவ்வாயுதம் அடியேனுக்கு மாத்திரமின்றி, அடியேனது வம்சத்தவர்க்கும் உரியதா யிருக்குமாறு அருள வேண்டுகிறேன்' என்று பிரார்த்தித்தான். அதைக் கேட்ட ருத்திரன், அங்ஙனம் ஒருபோதுமாவதில்லை. ஆயினும் உன்னிடம் யான் அதிகமாகப் பிரீதியுற்றவனாதலால் உனது மைந்தன் ஒருவனுக்கு மாத்திரம் இது ஆயுதமாகக் கடவது. இச்சூலாயுதம் எவ்வளவு காலம் கையில் இருக்கிறதோ அவ்வளவு காலம் உனது குமாரன் ஓருவராலும் வெல்லக் கூடாத வலிமை பெற்றவனாவான்' என்று கூறி மறைந்தான்.
மகாதேவனிடம் இவ்விதமான வரம் பெற்று, அவ்வசுரன் ,மிக்க களிப்பெய்தி மிகவும் சிறந்ததான மாளிகை யொன்று நிர்மாணஞ் செய்து, அதில் ஸந்தோஷத்தோடு வாழ்ந்திருந்தனன். இம்மதுவினுடைய மனைவியான, கும்பீனஸியிடம் (மால்யவானது பெண் வயிற்றுப் பேத்தி, ராவணனது அரைச்சகோதரி) அவனுக்கு மிக்கக் கொடியவனும் மகாவீர்யமுடையனுமான, லவணன் என்னும் குமாரனொருவன் பிறந்தனன், அவன் சிறுபிராயம் முதற் கொண்டு மகா துஷ்டனாகிப் பாவங்களையே செய்து வந்தனன். புத்திரன் இப்படி துஷ்டனாக இருப்பது கண்டு மது கோபமும் சோகமுமடைந்தவனாகி, அவனிடமொன்றும் பேசமாட்டாமல், சூலத்தை அவன் கையில் கொடுத்துத்தான் பெற்ற வரத்தின் பெருமையையும் அவனிடம் கூறி, இவ்வுலகத்தை விட்டு, வருணலோகம் சென்றனன்.
அன்று முதல் லவணாசுரன், சூலத்தின் மகிமையாலும், தனது இயற்கையான கொடுமையாலும் மூவுலகங்களையும் மிகவும் வருத்தி துன்புறுத்துகின்றனன். அதிலும் முக்கியமாக, முனிவர்களையே மிகவும் துன்புறுத்துகின்றனன். ஸ்ரீராம! அவனால் நாங்கள் அடைந்து வரும் துன்பத்திற்கு அளவேயில்லை. இனி நீயே எங்களுக்குத் தஞ்சம். உன்னை யன்றி மற்று எவராலும் லவணாசுரனை அடக்க முடியாது. இனி எங்களை ரக்ஷிப்பது உனது பாரம், என வேண்டி விண்ணப்பித்தனர்.
எழுபத்தி மூன்றாவது ஸர்க்கம்
[ஸ்ரீராமன். முனிவர்களிடம், லவனாசுரனின், உணவு, செய்கை, இவைகளைப் பற்றிக் கேட்டலும்,
அவனை வதம் செய்ய சத்ருக்னன் உடன்படுவதும்.]
இவ்வாறு முனிவர்கள் கூறக் கேட்ட ஸ்ரீராகவன் அவர்களைப் பார்த்து - “முனிபுங்கவர்களே! அந்த லவணாசுரன் எப்படிப்பட்ட உணவை உட்கொள்பவன்? அவனது நடவடிக்கைகள் எப்படியானவை? அவன் வஸிப்பது எங்கு? இவற்றைக் கூறவும்'' என்று கேட்டனன். அதற்கு முனிவர்கள்--"ஸ்ரீராம! அவனது உணவு ஸமஸ்த பிராணிகளாம். அவற்றுள் முக்கியமானது தபஸ்விகளே. அவனது செய்கைகளோ மிகவும் கொடுமையானவையே. அவன் வஸிப்பது "மது வனம்' என்னும் காடேயாகும். அவனைக் கண்டாலே பிராணிகள், வாயைத் திறந்து கொண்டு வரும் யமனென்றே எண்ணி நடுங்குகின்றனர்'' என்றனர். இதைக் கேட்ட ரகுநந்தனன் அம்முனிவர்களைப் பார்த்து-"இனி உங்களுக்குப் பயம் வேண்டாம், அவ்வசுரனை நான் வெல்லுகிறேன்'' என்று கூறினன்.பிறகு, தனது பிராதாக்களை அருகிலழைத்து, ''தம்பிகாள், இப்பொழுது மது வனம் சென்று வீரனான லவணாசுரனை வதைக்கும், புண்ணியத்தை ஏற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர் யார்?'' என்று கேட்டனன். உடனே, பரதன் எழுந்து "அண்ணா! இந்தக்காரியத்தை, அடியேன் சென்று, செய்து தலைக்கட்டுகிறேன், எனக்குக் கட்டளை யிடுவீராக" என்று வேண்டினன். இது கேட்ட சத்ருக்னன், தனது சிங்காதனத்தினின்று சடக்கென வெழுந்து, "ஸ்வாமின்! இந்த பரதன், முன்பே பெரிய காரியஞ்செய்துள்ளனன். அதாவது- முன்பு தேவரீர், வனவாஸமெழுந்தருளியபோது, இந்நகரத்தைப் பரிபாலிப்பதாகிய பெரிய பாரத்தைத் தாங்கினன். தவிர அக்காலத்தில் இப்பரதன் மரவுரியும் சடை முடியுமாய்க் காய்கனிகளையே உணவாகக் கொண்டு, நல்ல பாய் படுக்கையின்றி, பதினான்கு வருடங்கள், பலவிதமான துன்பங்களை யனுபவித்துக் கொண்டு நந்திக் கிராமத்தில் வாஸம் செய்தனன். எனவே இவனை மீண்டும் கஷ்டப்படுத்துவது நன்றன்று. அடியேன் இதோ காத்துக் கொண்டிருக்கின்றேன். அடியேனை அனுமதிக்கவும்" என வேண்டினன்.
இவ்வாறு சத்ருக்னன் கூறியது கேட்டு ராமன், அவனை நோக்கி, "சத்ருக்ன! அவ்வாறே ஆகட்டும். நீயே சென்று லவணாசுரனை வென்று வருவாயாக. ஆயினும் அதனுடன் நில்லாது நீ மற்றொரு காரியமும் செய்ய உடன்பட வேண்டும், எவனொருவன். பகைவனை வதைத்த பின். அந்த ராஜ்யத்தில், பிரஜைகளைப் பரிபாலிக்க, மற்றொரு அரசனை நியமிக்க வில்லையோ, அவன் நரகத்திற்கு ஆளாகுவான். ஆதலால், மதுவினது உயர்ந்த நகரத்திற்கு அரசனாக உன்னை இவ்விடத்திலேயே யான் அபிஷேகம் செய்து விடுகிறேன். நீ, லவணனை வென்ற பின், 'அந்த ராஜ்யத்தை அங்கிருந்து கொண்டு, நீதி முறை தவறாமல் நன்கு பரிபாலித்து வருவாயாக. எனது சொல்லை மீறாது செய்க. மூத்தோர் சொன்னவாறு செய்தல் இளையோரது கடமையல்லவா? வஸிஷ்டர் முதலான முனிவர்களைக் கொண்டு, விதி முறைப்படி யான் இப்பொழுது செய்விக்உம் மகுடாபிஷேகத்தை நீ ஏற்றுக் கொள்ளுக" எனக் கட்டளையிட்டனன்.
எழுபத்தி நாலாவது ஸர்க்கம்
[மூத்தோனிருக்க இளையோன் பட்டஞ்சூடிக் கொள்ளுவது நன்றன்று என வுரைத்த, சத்ருக்னனை,
ஸ்ரீராமன் ஸமாதானம் செய்து, பட்டஞ்சூட்டுதல், லவணனை வதம் செய்யுமுபாய முரைத்தல்.]
இப்படி ஸ்ரீராமச்சந்திரனால் நியமிக்கப்பட்ட சத்ருக்னன், அவரைப் பார்த்து -“அண்ணா! மூத்தவனான பரதனிருக்கச் செய்தே எனக்குப் பட்டம் சூட்டுவது தர்மமாகுமா? இப்படிப்பட்ட அதர்மத்திற்கு அடியேன் இலக்காகாமலிருக்க விரும்புகிறேன், முன்னமேயே 'பரதன் நான் லவணனை வதம் செய்கிறேன்'. என்று கூறிய பொழுது அதைத் தடுத்து, நானே வதம் செய்கிறேன், என்று நான் கூறியது முதலாவது தவறு. அதற்கே நான் தண்டிக்கப்பட வேண்டியவனாயுள்ளேன், இப்பொழுது உமது கட்டளையை மறுக்க நினைப்பது இரண்டாவது பிழையாகும், இது விஷயத்தில் செய்வதறியாது திகைப்புற்று இருக்கிறேன். தேவரீர் திருவுள்ளமெதுவோ, அதன்படிச் செய்யவும்”, என வேண்டி நின்றான்.
அது கேட்டு ஸந்தோஷமடைந்த ஸ்ரீராமன், பரதன், லக்ஷ்மணன் இவர்களைப் பார்த்து, வஸிஷ்டர் முதலிய ரிஷிகளைக் கொண்டு, பட்டாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்விக்கும்படி கட்டளை யிட்டனன். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
புரோஹிதர், ரித்விக்குகள், மந்திரிகள், பிரதானிகள், நகரத்திலுள்ளப் பிரபுக்கள் பிராம்மணர்கள் முதலானோர் அனைவரும் வந்து சேர்ந்ததும், வஸிஷ்ட மஹரிஷி இராமனது விருப்பத்தின்படி, சத்ருக்னனுக்கு முடிசூட்டினார். யமுனா தீரவாஸிகளான முனிவர்களனைவரும், சத்ருக்னன் அபிஷேகம் செய்யப்பட்ட பொழுதே லவணன் உயிரிழந்தனனென்று எண்ணி உள்ளம் மகிழ்ந்தனர்.
பிறகு, பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்ட சத்ருக்னனை, ஸ்ரீராம பிரான், கட்டியணைத்துத் தன் மடிமீதமர்த்தி, "தம்பீ! இதோ இந்த அம்பைப் பார். இது, கார்மேனியன், பிரளய காலத்தில் பாற்கடலின் மீது பள்ளி கொண்டிருந்த பொழுது அந்தப் பரமபுருஷனால் படைக்கப்பட்டது. பிரம்மதேவன் இதனாலேயே தோல்வியடையவில்லை. தேவாஸுரர்களும் இதனைக் கண்ணெடுத்தும் பார்க்கச் சக்தியற்றவர்கள். இது ஒருவர் கண்ணுக்கும் புலப்படாது; அப்படி பெருமை கொண்டது. உலகங்களுக்குப் பெரிய விரோதம் செய்த துராத்மாக்களான மதுகைடபர்களிடத்தில் மிகக் கோபங்கொண்டு. அவர்களையும், மற்றுமுள்ள ராக்ஷஸர்களையும், ஸம்ஹாரம் செய்யும் நிமித்தம் இது ஸ்ருஷ்டிக்கப்பட்டது. இதனைப் பிரயோகித்தால் உலகமெங்கும் அல்லோலகல்லோலமாகு மென்றஞ்சி, இராவண யுத்தத்தில் கூட நான் இதனைப் பிரயோகஞ் செய்யாது காப்பாற்றி வைத்திருக்கிறேன். சத்ருக்னர் அந்த லவணாசுரனிடம் சிவபிரானுடைய சூல மொன்றிருக்கிறது. அதனை அவன் தனது அரண்மனையில் வைத்துப் பூஜித்து தனியே பல திசைகளிலும் சென்று திரிகின்றனன். அவன் சூலத்தைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஸமயத்தில், அவனை வெல்ல ஒருவராலும் முடியாது. ஆகையால் அவன் கையில் சூலமின்றி வெளியில் சென்றிருக்கும் ஸமயத்தில் நீ அவனை ஆயுதமும் கையுமாக எதிர்த்துப் போர் புரியவும். வேறுவிதமாக அவனை வெல்லுவது அஸாத்யமானது. சிவனுடைய சூலாயுதமானது மிக்க வலிமை வாய்ந்தது. இதை நீ நன்கு மனதிற் கொண்டு செயல்பட்டு வெற்றி வாகை சூடவும்" என்று கூறினன்.