வெள்ளி, 17 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

IMG_0002

 

நான்காங் களம்

இடம்: அயோத்தி அரண்மனையில் கைகேயியின் அந்தப்புரம்

காலம்: பிற்பகல்

பாத்திரங்கள்: கைகேயி, மந்தரை, தசரதர், இராமர்,சுமந்திரர், வாயில் காப்போர் முதலியோர்.

{கைகேயி மஞ்சத்தில் நித்திரை செய்கிறாள். மந்தரை வருகிறாள். கைகேயி உல்லாசமாய்ப் படுத்து உறங்குவதை உக்கிரத்துடன் பார்க்கிறாள். முக்கிய சமயத்தில் நித்திரை பங்கஞ் செய்வதால் தோஷமில்லையென்று திடங்கொண்டு, 'அம்மா' அம்மா' என்று பலமுறை கூப்பிடுகிறாள். எழுந்திராததைக் கண்டு கையைத்தட்டிச் சத்தமிட்டு எழுப்புகிறாள். கைகேயி உறக்கந்தெளிந்து எழுந்து உட்கார்ந்து, உறக்க மயக்கத்தோடு)

கைகேயி:-- என்னடி வெகு அவசரமாய்த் தட்டி எழுப்பி விட்டாய்!IMG

மந்தரை (கோபத்தோடு):-- அவசரமா! உங்கள் வாழ்வைத் தொலைக்க வருகிறதம்மா ஒரு சரம். அதனால்தானம்மா அவ்வளவு அவசரம். தலைக்கு மேல் வந்துவிட்டது வெள்ளம்! கலங்குகிறதே என் உள்ளம்! சௌயபாக்கியங்களெல்லாம் தங்களை விட்டு ஓடுகின்றனவே! எல்லாப் பாக்கியங்களும் கோசலையை நாடுகின்றனவே! பரதனில்லாச் சமயம் பார்த்துப் படுகுழியை ஆழமாய்ப் பறித்து விட்டார்களே! அவன் வாழ்வை நாசமாக்க நாளுங் குறித்து விட்டார்களே! ஊரெங்கும் பாருங்கள் பெருமுழக்கம்! உங்களுக்கின்னுமா உறக்கம்! தங்களைச் சூழ்ந்துள்ள இடரின்னதென்று அறியாதிருக்கிறீர்களே, இதற்கு நானென்ன செய்வேன்!

கைகேயி:-- என்னடி உளறுகிறாய்?

பராவரும் புதல்வரைப் பயக்க யாவரும்
உராவருந் துயரைவிட் டுறுதி காண்பரால்
விராவரும் புவிக்கெலாம் வேத மேயன
இராமனைப் பயந்தவெற் கிடருண் டாங்கொலோ

எனக்கேதடி இடர்? உலகமெலாம் புகழும் புத்திரசிகாமணிகள் நால்வர் க்ஷேமமாயிருக்கும்போது எனக்கு என்னடி குறை? சர்வஜீவர்களுக்கும் வேதம்போல் விளங்கும் ஸ்ரீராமச்சந்திரனைப் பெற்ற எனக்கென்னடி துன்பம்? உலகம் முழுகிப் போய்விட்டதுபோலப் பதறி என் உறக்கத்தைக் கலைத்து ஏதேதோ உளறுகிறாயே என்னடி? என்னடி மோசம் வந்தது? யாருக்கு என்ன அபாயமடி விளைந்தது? சமுத்திரம் பொங்கி விட்டதா? எனக்கு வந்த தாழ்வென்ன? அக்காள் கோசலைக்கு வந்த வாழ்வென்ன? குழந்தை இராமன் வில்லுண்டையா லடித்ததை ஒரு பெருங்குறையாக முன் ஒருதரம் என்னிடம் சொல்லவந்தையே, அவ்விதமான பெருங்குறையேதேனும் இப்பொழுது வந்துவிட்டதா? அவசரப் படாமல் நிதானித்துச் சொல்லு.

மந்தரை:-- எனக்கொன்றும் குறை நேரவில்லை யம்மா.

வீழ்ந்தது நின்னலம் திருவும் வீய்ந்தது
வாழ்ந்தனள் கோசலை மதியினா லந்தோ!

தங்கள் வாழ்வுதான் தாழ்ந்தது. தங்கள் கௌரவந்தான் குலைந்தது. தங்கள் க்ஷேமந்தான் தொலைந்தது. தங்கள் பாக்கியந்தான் உலைந்தது. எனக்கென்ன குறைவந்தால் தானென்ன? வேறு யாருக்கு என்ன குறை வந்தால்தான் எனக்கென்ன? உங்கள் நிலைமை உங்களுக்கே தெரியாமல் என்னை நிதானித்துப் பேசச் சொல்லுகிறீர்களே!

கைகேயி:-- மந்தரை! நீ சொல்லுகிறதொன்றும் நன்றாய் விளங்கவில்லையே. விஷயம் இன்னதெனச் சற்று விளக்கமாகச் சொல்லமாட்டாயா?

மந்தரை: -- விஷயமென்ன?

ஆடவர் நகையுற ஆண்மை மாசுற
தாடகை யெனும்பெயர்த் தைய லாள்படக்
கோடிய வரிசிலை இராமன் கோமுடி
சூடுவன் நாளைவாழ் விதுநீ அறிதியோ?

புருஷர்கள் பார்த்துச் சிரிக்கவும், ஆண்மை பழுதுபடவும், தாடகை யென்னும் பெயருடைய ஒரு பெண்ணைக் கொல்ல, வில்லை வளைத்தானே உன் சக்களத்தி மகன் இராமன், அவனுக்கு நாளைய தினம் பட்டங்கட்டத் திட்டமாயிருக்கிறது. இது தெரியாமல் தாங்கள் நித்திரை செய்கிறீர்களே!

கைகேயி:-- (அகங்குளிர்ந்து, முகமலர்ந்து புன்னகை கொண்டவளாய்) என் மகன் இராமனுக்கா பட்டாபிஷேகம்! மெத்தச் சந்தோஷம். மந்தரை! இச்செய்தி கேட்டு என் இரு செவிகளும் குளிர்ந்தனவடி. இனிதானடி இந்த நாட்டுக்கு க்ஷேமாபிவிருத்தி; இனிதான் என் காதலருக்கும் கஷ்டநிவர்த்தி; ஜனங்களுக்கும் இனிதானடி மனத்திருப்தி. இராமனுக்குப் பட்டாபிஷேகமென்று முதன்முதல் எனக்குச் சொல்லவந்த உனக்கு, நான் என்ன வெகுமதி செய்யப் போகிறேன்! (கழுத்திலிருந்த முத்தாரத்தைக் கழற்றி) இந்தா, இந்த முத்தாரத்தை அணிந்துகொள். (மந்தரையிடம் ஆரத்தைக் கொடுக்கிறாள்)

மந்தரை:-- (முத்தாரத்தைப் பிடுங்கி எறிந்துவிட்டு), அம்மா, உங்களைப்போல் ஒரு பெண்ணை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இராமனுக்குப் பட்டாபிஷேகமென்று கேள்விப் பட்டதும், உங்களுடைய க்ஷேமத்தை எண்ணி நான் அடைந்த துயரத்துக்களவில்லை. நான்கு புறமும் தீப்பற்றி எரிய நடுவே நிற்பவளைப்போல, நான் வயிறெரிந்து, மனமெரிந்து வந்திருக்கிறேன். நீங்கள் சந்தோஷம் கொண்டாடுகிறீர்கள். சமயமல்லாத சமயத்தில் சந்தோஷமா? துன்ப சாகரத்தின் மத்தியில் நீங்கள் இருப்பது உங்களுக்கே தெரியவில்லை. உங்களுக்கு வந்திருக்கும் ஆபத்தை நினைக்க எனக்குத் துயரம் பெருகுகிறது. உங்கள் மடமையைப் பார்க்க ஒருபக்கம் சிரிப்பும் வருகிறது. நீங்கள் க்ஷேமமாயிருந்தால் உங்களையடுத்த எங்களுக்கு க்ஷேமமுண்டு. இராமன் முடி சூடிக்கொண்டால் கோசலை பாடு கொண்டாட்டம். பிறகு உங்கள் பாடும், உங்களையடுத்த எங்கள் பாடுமே திண்டாட்டம். அப்புறம் உங்களுக்கு வாழ்வேது? நீங்களும் உங்கள் மகனும் அவளுக்கு அடிமையாய் இருக்க வேண்டியதுதான். அவள் தாதிக்கும் தோழிக்கும் அடிமையாய் இருக்க என்னால் முடியாதம்மா!

கைகேயி:-- என்னடி, பித்தங்கொண்டவள் போல் மெத்தப் பிதற்றுகிறாய்? க்ஷத்திரிய தருமப்படி மூத்த பிள்ளைக்கே பட்டமென்பது உனக்குத் தெரியாதா? எனது குழந்தைகள் நால்வருள்ளும் இராமனன்றோ மூத்தவன். அவனுக்குப் பட்டங்கட்டுவதைத் தடுப்பதற்கு நீ யாரடி? இராமன் மூத்த குமாரன் என்ற ஒரு யோக்கியதை மட்டும் உடையவனல்ல; உத்தம குணங்களெல்லாம் ஒத்து ஓர் உருவெடுத்து வந்தாற் போல்பவன். அவன் விஷயத்திலா நீ இப்படி நினைப்பது? அடி பாவி! நீ கூறியதைக் கேட்ட பிறகும் உன் எண்ணத்தை அறிந்த பிறகும் உன்னைக் காணக் கண் கூசுதடி. பரதனைவிட அவனிடத்தில் எனக்குப் பிரியம் அதிகம். அவனுக்கும் கோசலையை விட என்னிடத்திற் பற்றுதல் மெத்தவடி. இராமனுக்குப் பட்டமானால் அது பரதனுக்குப் பட்டமானது போலத்தான். பரதன் தமையனிடம் மிகவும் பற்றுதலுடையவன். இவை ஒன்றையும் யோசியாது ஏன் கண்டபடி பிதற்றுகிறாய்?

(மந்தரை தொடர்ந்து பேசி
கைகேயியின் மனதை மாற்றுவது
19-06-2016ல் தொடரும்)

புதன், 15 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

(மந்தரை வந்தாளே)

அங்கம் 1

மூன்றாங்களம்

இடம்: அயோத்தி நகர் வீதி

காலம் : மாலை

பாத்திரங்கள் : மந்தரை, சில மனிதர்கள்

(வீதிகள் புஷ்பம், தோரணம், கொடி, இலை முதலியவைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன. ஜனங்கள் ஸ்நானம் பண்ணி விபூதி திருமண்கள் தரித்துத், தட்டில் மாலைகளையும் பலவிதப் பலகாரங்களையும் வைத்து ஏந்திக்கொண்டு போகின்றனர். பிராமணர்கள் வேதம் ஓதிக் கொண்டு நடக்கின்றனர். நானாவித வாத்தியங்கள் முழங்குகின்றன. மந்தரை வருகிறாள்.)

மந்தரை: என்ன விசேஷம்? அரண்மனையில்தான் ஒருநாளும் இல்லாத திருநாளாயிருக்கிற தென்றிருந்தேன். எங்கும் அப்படியே இருக்கிறதே. வீதிகளெல்லாம் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன. எங்குப் பார்த்தாலும் சந்தோஷ முழக்கம் மிகுதியாயிருக்கிறது. ஜனங்கள் ஸ்நானம் செய்து வெண்பட்டு உடுத்தி வெகு ஆசாரமாகப் போகின்றனர். புஷ்பமாலை முதலிய புனிதப் பதார்த்தங்களைக் கொண்டு செல்கின்றனர். வாத்தியகோஷம் எங்கும் நிறைந்திருக்கிறது. அரண்மனையில் கோசலை வெகு ஆனந்தத்துடன் ஜனங்களுக்குப் பணத்தைப் பிடிபிடியாக அள்ளி வீசுகிறாள். அவள் எப்பொழுதும் பணத்தை இறுகப் பிடிக்கிறவள். அப்படிப்பட்டவள் இன்று இப்படிச் செய்வதற்குக் காரணம் தெரிய வில்லை. நல்லது, யாரோ இருவர் பேசிக்கொள்கிறார்கள். அதைக் கவனிப்போம்.

(ஒருவன் அதிவேகமாகப் போகிறான். மற்றொருவன் அவனை வழிமறித்துப் பேசுகிறான்.)

ஒருவன்: -- என்னையா ஓடுகிறீர்; எங்கே இவ்வளவு வேகமாய்?

மற்றவன்:-- போகவேண்டியிருக்கிறது.

முன்னவன்:-- எங்கே?

மற்றவன்:-- அடுத்த கிராமத்தில் நம்முடைய பெண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை அழைத்துவரப் போகிறேன்.

முன்னவன்:-- அதற்கென்ன இவ்வளவு அவசரம்?

மற்றவன்:-- என்னைய்யா? அயல்நாட்டிலிருந்து இப்பொழுதுதான் வந்தவர்போல் பேசுகிறீர். நாளைக் காரியமாயிருக்கிறது. அந்தக் காட்சியை அவர்களும் பார்க்க வேண்டாமா?

முன்னவன்:-- ஓகோ, இராம பட்டாபிஷேகத்துக்கா? அது நாளை எந்நேரத்தில் நடைபெறும்?

மற்றவன்:-- அதிகாலையில்

முன்னவன்:-- ஏது இவ்வளவு அவசரத்தில் வைத்துக் கொண்டார்கள்?

மற்றவன்:-- அந்த விவரமெல்லாம் பேசிக்கொண்டிருக்க இதுதானோ சமயம்? எல்லாம் நாளைமறுதினம் பேசிக்கொள்வோம். இப்பொழுது என்னை விடும். (போகிறான். மற்றவன் வேறுவழியாகப் போகிறான்)

மந்தரை:-- அப்படியா செய்தி! ஓகோ, இதற்குத்தானா வீதிகளில் இவ்வளவு விமரிசை! இதற்குத்தானா அரண்மனையில் இவ்வளவு கொண்டாட்டம்! கோசலையின் பூரிப்பு இதனால்தானா! சக்கரவர்த்தியின் வஞ்சம் இப்படியா இருக்கிறது? அடி கோசலை! உன் மகன் பட்டத்துக்கு வரப்போகிறானென்ற செருக்கா? சந்தோஷப்பெருக்கா? அடி, அரண்மனைச் சேடியர்களுக்கெல்லாம் வாரிவாரி இறைத்தையே! அப்பொழுது நான் அங்கு வந்து நின்றது உன் கண்ணுக்குத் தெரியாமலா போயிற்று! நாளைக்கு உன் மகனுக்குப் பட்டமானால் இன்றைக்கே உனக்குக் கண் குருடாகவா போய்விட்டது! அடி! அற்பமதியினளே! இதுவொரு வாழ்வா?

சிறியரே மதிக்கு மிந்தச் செல்வம்வந் துற்ற ஞான்றே
வறியபுன் செருக்கு மூடி வாயுள்ளார் மூக ராவர்
பறியணி செவியு ளாரும் பயிறரு செவிட ராவர்
குறிபெறு கண்ணு ளாருங் குருடராய் முடிவ ரன்றே.

வாழ்வுந்தாழ்வும் ஒருநிலையல்லவடி. “செல்வம் சகடக்கால் போல வரும்” என்ற பழமொழியைக் கேட்டதில்லையா? அற்பர்தாம் இந்தச் செல்வத்தைப் பெரிதாக மதிப்பர். ‘இந்தச் செல்வம் வந்தடைந்தால் வாயுள்ளவரும் ஊமையராவர்; காதுள்ளவருஞ் செவிடராவர்; கண்ணுள்ளவருங் குருடராவர்’ என்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை இன்று பிரத்தியக்ஷமாக உன்னிடத்தில் தானடி கண்டேன். அடி இந்த செல்வம் உனக்கு நிலைக்குமா? இதை நிலையென் றெண்ணி உன்னைப்போல் மயங்கும் பேதையர் எத்தனை பெயரோ?

அம்பொற் கலத்து ளடுபா லமர்ந்துண்ணா வரிவை யந்தோ
வெம்பிப் பசிநலிய வெவ்வினையின் வேறாயோ ரகல்கை யேந்திக்
கொம்பிற் கொளவொசிந்து பிச்சையெனக்கூறி நிற்பாட் கண்டும்
நம்பன்மின் செல்வ நமரங்கா ணல்லறமே நினைமின் கண்டீர்.

என்றபடி இந்த அற்பமதி படைத்த கோசலையைப்போல பொற்கிண்ணத்திற் பாலுஞ்சோறும் உண்டு களித்த ஒருத்தி காலகதியினால் உடல்வாடி, பசியால் வருந்தி மட்சட்டிக் கையிலேந்தி பிச்சையெனக் கூவித் திரியும்படியும் நேரும். அடி கோசலை! ஏன் இப்படிக் கெட்டுப் போகிறாய்? திடீரென்று அதிர்ஷ்டம் வந்துவிட்டதால் உனக்குத் தலைகால் தெரியவில்லை போலிருக்கிறது! அடிமதியில்லாதவளே! அடி அற்ப சந்தோஷி! சக்களத்தியின் தாதியாயிருந்தா லென்னடி? அவளண்டை வைத்திருக்கும் மாற்சரியத்தை என்னிடத்துமா காட்டவேண்டும்? மகனுக்கு மகுடாபிஷேகமென்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் இவ்வளவு துவேஷத்தைக் காட்டி விட்டாயே! அபிஷேகமாகித் தேசம் உன் மகனுக்குச் சுவாதீனப்பட்டு விட்டால் என்ன செய்யமாட்டாய்? உன் சக்களத்தியையும் அவள் உற்றார் உறவினர்களையும் உடனே கொன்று விட்டுத்தானே மறுவேலை பார்ப்பாய். அடி, நான் இருக்கும் வரையில் உன்னை அவ்வளவு தூரம் மிஞ்ச விடமாட்டேன். உனக்கு வந்த செல்வம் நிலைத்துவிட்டதாக எண்ணாதே! அந்த நினைப்பால் பல பல யோசனைகள் பண்ணாதே!

பல்கதிர் விரித்துத்தோன்றிப் பாடுசெய் கதிரே போல
மல்லனீ ருலகிற் றோன்றி மறைந்திடு நும்மை விட்டுச்
செல்வமென் றுறுவதற்குஞ் செல்வமென் றுரைக்கும்பேர்நன்
றல்லலை விளைப்ப தாகா தரும்பெறற் செல்வம் பாவாய்.

அடிபாவாய்! ஜகஜோதியாய்த் தோன்றுகின்றானே சூரியன், அவன் என்றும் அப்படியே இருக்கின்றானா? முப்பது நாழிகையில் மறைந்து போகின்றானில்லையா? உன் வாழ்வும் அவனைப் போன்றதுதான். முப்பது நாழிகைக்குள் உனக்கு வந்த செல்வம் ஒழிந்தாலும் ஒழிந்துவிடும். செல்வம் என்று பெரியோர் இதற்கு ஏன் பெயரிட்டார்கள் தெரியுமா? இது யாரைப்போய் அடைகிறதோ, அவர்களிடத்து ‘நாங்கள் செல்வம், போய்விடுவோம், உன்னிடத்தில் தங்கமாட்டோம்’ என்று சொல்லிக்கொண்டே போய் அடைகிறது. ஆதலால்தான் இதைச் ‘செல்வம்’ என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். இதனால் மக்களுக்கு வருந்துன்பங்களுக்குக் கணக்கில்லை. ஆனதால் இதை நிலையாக எண்ணி இறுமாப்படையாதே. உன் மகன் இராமனுக்குப் பட்டந் தகுமா? அவனுக்கு அரசகாரியங்கள் என்ன தெரியும்? அந்தச் சித்திராங்கி சீதையோடு நாளெல்லாம் கொஞ்சிக் கொண்டிருக்கத் தெரியும். என்னைப்போல் ஒரு கூன்விழுந்த கிழவியகப்பட்டால் அவளை வில்லுண்டையால் அடித்துப் பரிகசிக்கத் தெரியும். அவன் வில்லாண்மைகளெல்லாம் பெண்களிடத்தில்தான்; தாதியாகிய என்னை வில்லாலடித்தான்; தாடகை யென்னும் ஒரு பெண்ணை வில் வளைத்து அம்பெய்து கொன்றான். சிவன் தனக்கு உபயோகமில்லையென்று எறிந்த சொத்தை வில்லைப் பக்குவமாய் வளைக்கத் தெரியாமல் முறித்தெறிந்தான். ஞானப் பைத்தியங் கொண்ட ஜனகன் வயலிற் கண்டெடுத்த ஒரு நாதியற்ற பெண்ணை விவாகஞ் செய்து கொண்டான். இவனுக்குப் பட்டம் ஒரு கேடா? பட்டாபிஷேகத்துக்குக் குறித்த லக்கினம் நல்ல லக்கினம் போலிருக்கிறது! அதுமுதல் இராமனுக்கு வரும் இடையூறுகள் பல; அதுமுதல் நானும் என் உதவியைக் கோரினவர்களும் பெறும் லாபங்கள் பல. சரி, இனி நான் அலக்ஷியமாய் இருப்பது தவறு; திரும்பவும் அரண்மனை செல்லுகிறேன். கைகேயியைக் கண்டு அவள் மனதைக் கரைத்துக் காரியத்தை முடிக்கிறேன். (போகிறாள்)

கைகேயியின் மனதை மந்தரை கரைக்கும் நாலாவது களம் 17-06-2016  முதல் தொடரும்.

திங்கள், 13 ஜூன், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

இன்று (13-06-2016) அன்று நடந்த சொல்லாமல் சொன்ன இராமாயணம் டெலி உபந்யாஸம் (40ஆவது உபந்யாஸம்)

https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!2166&authkey=!AJ_ZbsQxRgHoKl4&ithint=file%2cmp3

அல்லது

http://www.mediafire.com/download/v8iky4u6oh1vogd/040_SSR_%2813-06-2016%29.mp3

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 1 களம் 2

 

இரண்டாங்களம்

இடம்;-- சீதையின் அந்தப்புரம்

காலம் ;-- பிற்பகல்

பாத்திரங்கள்;-- இராமர், சீதை, தோழி மாணிக்கமாலை.

மாணிக்கமாலை :-- (சீதையைப் பார்த்து) அம்மா, என்ன ஏதோ யோசனையிலிருக்கிறீர்களே?

சீதை:-- மாணிக்கமாலை! சில நாழிகைகளாக என் இடது கண் துடித்துக் கொண்டிருக்கிறது. என்ன காரணமாயிருக்கு மென்று யோசித்தேன். வேறொன்றுமில்லை.

மாணிக்கமாலை:-- இடதுகண் துடிப்பது நற்சகுனமாயிற்றே! கூடிய சீக்கிரத்தில் ஏதேனும் சுபசமாசாரம் கேட்பீர்கள். இதைப்பற்றித்தானே யோசித்தீர்கள்?

சீதை :-- ஆம்

மாணிக்கமாலை :-- வேறு மனக்குறை ஒன்றுமில்லையே?

சீதை;-- தோழீ! நீ கேட்பது அதிசயமாயிருக்கிறதே. எனக்கு மனக்குறை எப்படி வரும்? பெண்ணாய்ப் பிறந்தவர்களுள் என்னைப்போற் பாக்கியவதியும் உண்டோ? நலமுங் குலமுங் குணமும் ஒருங்கமைந்த உத்தம ரொருவரைப் புருஷராகப் பெற்றேன். அவர்க்கு என்மீதுள்ள அன்பினும் நான் விரும்பத்தக்க பொருள் எது? அவ்வன்பு மாறாதிருக்கும் வரை எனக்கு மனக்குறை ஏதடி, தோழீ!

மாணிக்கமாலை:-- அம்மணீ! தாங்கள் கூறுவது உண்மையே. தங்கள் நலங்களுக்கேற்ற நாயகரைப் பெற்றீர்கள். அழகிலுங் குணத்திலும் அவருக்குச் சமானமேனும் உயர்வேனும் உள்ள புருஷர் பிறர் ஒருவரை நான் இதுவரையிற் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.

சீதை:-- அடி மாணிக்கமாலை! மிதிலையிற் கன்னிமாடத் தருகே அவரை முதன்முதற் கண்டபொழுது, அவர் அழகு ஒன்றையுமே கண்டு கரைகடந்த காதல் கொண்டேன். ஆனால் அப்பொழுது அவ்வழகுக் கேற்ற குணமுடையவராயிருப்பா ரென்று அநுமானித்திருந்தேன். இப்பொழுது இவரிடத்து நான் பிரத்தியக்ஷத்திற் காணும் குணாதிசயங்கள் அப்பொழுது அறிந்திருப்பேனாயின் வில்லை முறிக்குந் துணையுங்கூட அவரைப் பிரிந்து ஆற்றியிருந்திருப்பேனோ? தோழீ! அவர் என் ஆருயிரென்பேனோ, உலகைப் படைத்துண்டு உமிழ்ந்து வாமனனாகி ஈரடியாலதை யளந்த மாயவரென்பேனோ, பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமரென்பேனோ, அன்றி மனிதர்க்கும் தேவர்க்குந் தேவரென்பேனோ,

பங்கயக் கண்ண னென்கோ பவளச்செவ் வாய னென்கோ
அங்கதி ரடிய னென்கோ அஞ்சன வண்ண னென்கோ
செங்கதிர் முடிய னென்கோ திருமறு மார்ப னென்கோ
சங்குசக் கரத்த னென்கோ சாதி மாணிக் கத்தையே.

மதித்தற்கரிய மாணிக்கம் போன்ற அவரை, தாமரைக்கண்ண ரென்பேனோ, செம்பவள வாயரென் பேனோ, செந்திருவடிய ரென்பேனோ, கார்நிற வண்ணரென்பேனோ, அன்றி என் கண்ணுக்கினிய கதிர்முடியுடையரென்பேனோ, அல்லது சங்குசக்கர பாணியாய்த் திருமகள் தங்கிய மார்பினராகிய நெடுமாலென்பேனோ! அவரை எவரென்றெண்ணி எவ்வாறு புகழ்வேன்! ஆ, என் மனங்கொண்ட மணவாளரைத் தினங்கண்டு உரையாடி உடனிருந்து பணிவிடை செய்யும் பெரும்பாக்கியத்தைப் புண்ணிய வசத்தால் எய்தப் பெற்றேன். என் ஆயுளளவும் இவ்வின்பம் மாறாதிருக்க இறைவன் திருவருள் புரிய வேண்டும்.

மாணிக்கமாலை ;-- அம்மணீ! இறைவன் அங்ஙனமே திருவருள் புரிவாரென்பதிற் சந்தேகமில்லை. அம்மா, நாயகர் இப்பொழுது எங்குச் சென்றுள்ளார், தெரியுமோ?

சீதை:-- தெரியாது. என்னுடன் இன்னுரையாடி யிருந்தவரை மந்திரி சுமந்திரர் வந்து அழைத்துச் சென்றார். சென்று நாலைந்து நாழிகை யாய்விட்டது. இன்னும் திரும்பி வரவில்லை.

மாணிக்கமாலை :-- எதற்காக மந்திரி வந்து அழைத்துச் சென்றிருப்பார்?

சீதை;-- ஏதாவது இராஜாங்க காரியமாயிருக்கும். தோழீ! இந்த நாலைந்து நாழிகையும் எனக்கு நாலைந்து வருஷங்களாகத் தோன்றுகின்றன. வருகிறாராவென்று எழுந்து பார்த்து வா.

மாணிக்கமாலை :-- (எழுந்து சென்று வழியைப் பார்த்து விட்டு வந்து) இல்லையம்மா, அவர் வரவில்லை.

சீதை:-- என் கண்ணாளருக்குச் சகல நலங்களும் பொருந்தியிருக்கின்றன. ஆனால் ஒரு குறை மட்டுமிருக்கிறது.

மாணிக்கமாலை:-- அதென்ன குறையம்மா?

சீதை:-- சக்கரவர்த்திக்கு மூத்த குமாரராய்ப் பிறந்திருக்கின்றாரே, அந்த ஒரு குறைதான்.

மாணிக்கமாலை: -- அம்மணீ! அதுவும் ஒரு குறையோ?

சீதை:-- தடையென்னடி தோழீ! அதனாலல்லவோ இராஜாங்க விஷயமாய்ச் சில சமயங்களில் என்னைவிட்டு அவர் பிரியும்படி நேரிடுகிறது? இல்லாவிட்டால் என்றும் என் உடனிருப்பாரன்றோ? இந்த ஒரு குறைதான் சில சமயங்களில் என் மனத்தை வருத்துகிறது. ஆ, இதோ அவர் வருகிறார் போலிருக்கிறதே தோழீ! நீ சற்றே வெளியே சென்றிரு. (மாணிக்கமாலை போகிறாள். இராமர் வருகிறார். சீதை அவரை எதிர்கொண்டு அழைக்கிறாள். இருவரும் ஆசனத்தில் அமருகின்றனர்.) நாதா! ஏன் இவ்வளவு நாழிகை தாமதித்து விட்டீர்கள்? சென்ற காரியமென்ன? அடியாள் அறியக் கூடியதாயிருக்குமோ? தங்கள் முகத்தில் மகிழ்ச்சியும் விசனமும் கலந்து காணப்படுகின்றனவே.

இராமர்:-- கண்மணி! சீதா! உனக்கு அதிஉன்னத பதவியொன்று வந்தால் என்மனம் மகிழாதா?

சீதை:-- காதல! இதுவரை எனக்கில்லாத பதவி இனி என்ன வரப்போகிறது?

இராமர்:-- சீதா! இதுவரை நீ சக்கரவர்த்தியின் முதல் மருகியாய் இருந்தாய். நாளைமுதல் நீ சக்கரவர்த்தினியாகப் போகின்றாய்.

சீதை;-- பிராணபதி! அடியாளுக்கு ஒன்றும் விளங்கவில்லையே

இராமர்:-- காதலீ! நாளையதினம் உன் கொழுநனுக்கும் உனக்கும் பட்டாபிஷேகமாகப் போகின்றது.

சீதை:-- தங்களுக்குப் பட்டாபிஷேகமா? மாமா அவர்களுக்கு என்ன நேர்ந்தது?

இராமர்:-- உன் மாமனார் மூப்படைந்து விட்டாராதலால் தவஞ் செய்யக் காட்டிற்குச் செல்லப் போகிறார்.

சீதை:-- நாதா! தாங்கள் சொல்வது நூதனமாயிருக்கிறதே! நம்மைப்போல் இளம்பருவத்தினரல்லவா காட்டின் வனப்பைக் கண்டு களித்து அதில் ஆனந்தமாய் உலாவித் திரிந்து காலங்கழித்தற்குரியவர்! மாமா அவர்கள் மூப்புக் காலத்தில் தம் மனைவியரும் மருகியரும் உடனிருந்து உபசரிக்க நாட்டிலிருந்து சுகமாகக் காலங்கழிக்க வேண்டியவரன்றோ?

இராமர் (புன்னகையுடன்):-- என் உயிரே! ஆசிரமத் தருமங்களையே மாற்றப் பார்க்கின்றாயே!

சீதை:-- நாயக! நான் என் சிறுமதிக்குத் தோற்றியதைத் தங்களிடம் தெரிவித்தேனே யொழிய வேறில்லை. நாதா! தங்களுக்குப் பட்டாபிஷேகம் ஆனபிறகு நான் அடிக்கடி தங்களைவிட்டுப் பிரிந்திருக்கும்படி நேருமல்லவா?

இராமர் :-- காதலீ! குடிகளுடைய க்ஷேமத்தைக் கருதி அடிக்கடி வெளியே சென்று இராஜாங்க விஷயங்களைக் கவனிக்கும்படி நீயே என்னைத் தூண்டமாட்டாயோ?

சீதை:-- (சற்று யோசித்துவிட்டு) என் காதலா! குடிகள் குறை தீர்ப்பதற்குத்தானே தங்களை அரசராக நியமிப்பது! அதற்கு நான் சிறிதும் இடையூறாயிரேன். தங்கள்மீதுள்ள பிரியத்தால் தங்களைப் பிரிந்திருப்பதற்கு நான் வருந்தினாலும், குடிகள் க்ஷேமத்தை எண்ணி அவ்வருத்தம் ஒழிவேன். அன்றியும் இராஜாங்க காரியங்களில் உழைத்துத் தாங்கள் அயர்வடையுங் காலத்தில் அடியாள் தங்கள் உடனிருந்து என்னாலான பணிவிடைகளைச் செய்து தங்கள் அயர்வை ஆற்றுவேன்.

இராமர்:-- ஜானகி! உன் உத்தமக் குணமல்லவோ என்னை இவ்வில்லறத்தில் இழுத்தது! நான் ஜன்மாந்தரத்திற் செய்த நல்வினையின் பயனாலல்லவோ நின்னை மனைவியாகப் பெற்றேன்.

சீதை:-- பிராணேசா! பட்டாபிஷேகத்தைக் குறித்து மகிழ்ச்சி ஒருபுறமிருக்கத், தங்கள் முகத்தில் சிறிது விசனக்குறியும் தோற்றுகிறதே?

இராமர்:-- காதலீ! ஒரு தேசத்தை அரசாள்வதென்றால் சாமானியக் காரியமல்ல

கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியுங்
கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை
மன்னுயி ரெல்லா மண்ணாள் வேந்தன்
தன்னுயி ரென்னுந் தகுதியின் றாகும்.

அரசன் நியாயந் தவறுவானாகில் கிரகங்கள் நெறி நில்லா; கிரகங்கள் தவறுமாயின் மழை வளங்குன்றும்; மழை வளங்குன்றினால் உலகத்துயிர்களுக்குக் கெடுதியுண்டாகும்; அவ்வாறானால் உலகத்துயிர்களெல்லாம் அரசன் உயிரென்னும் தன்மை கெட்டுவிடும். ஆதலால் இதைவிட தாங்கற்கரிய பாரமெது? சீதா, அரசநீதி செலுத்துவதில் ஒருகால் தவறி விடுவோமானால் அதனால் வரும் பாபங்களுக்கெல்லாம் ஆளாக வேண்டுமே என்ற விசனந்தான் எனக்குச் சிறிதுள்ளது.

சீதை:-- நாயகா! தங்கள் அறிவையும் ஆற்றலையும் தாங்களே அறியாதிருக்கின்றீர்கள். நீதிக்கிருப்பிடமான தங்களால் செவ்வையாய் நீதி செலுத்த முடியாதென்றால், வேறு எவராலாகும்? அதைப்பற்றிச் சிறிதும் யோசனை வேண்டாம். காதல! இனி என் கிளிகளுக்குத் தங்களைச் சக்கரவர்த்தி என்று கூப்பிடக் கற்றுக் கொடுக்கட்டுமா?

இராமர்:-- உன் இஷ்டம்போற் செய். இனி நான் உன்னைச் சக்கரவர்த்தினீ என்றழைக்கட்டுமா?

சீதை:-- பிராணபதீ! தங்கள் திருவாக்கால் என்னைச் சீதா என்று அழைப்பதைவிட எனக்கு வேறொன்று இனிதாகத் தோற்ற வில்லை.

இராமர்:-- ஆனால் சரி; அப்படியே அழைக்கிறேன், சீதா!

சீதை:-- நாதா!

இராமர்:-- இன்று உனக்குச் சொல்லவேண்டிய விஷயம் வேறொன்றுள்ளது.

சீதை:-- அது என்னவோ?

இராமர்:-- நாளைய தினம் பட்டாபிஷேகமாதலால் இன்றைய தினம் நாம் இருவரும் உபவாசமாயிருந்து, இரவு, தருப்பை புல்லிற் சயனித்திருக்க வேண்டும்.

சீதை:-- அடியாள் உபவாசமிருக்கவும் தருப்பைப்புல்லில் சயனித்திருக்கவும் ஆக்ஷேபமில்லை. தாங்கள் பட்டினியிருக்க எவ்வாறு ஆற்றுவீர்கள்? தங்கள் அருமைத் திருமேனி தருப்பையில் படுக்கலுற்றால் வருந்தாதோ!

இராமர்:-- மாந்தளிரினும் மெல்லியளாகிய நீ இவ்விரதங்களை எவ்வாறு அநுஷ்டிப்பாய் என்றெண்ணி யல்லவோ நான் இதுவரை இதை உனக்குச் சொல்லத் தாமதித்தது. எனக்கு இவ்விரதங்களை அநுஷ்டிப்பது எளிதே யாகும். எவ்வாறானாலும் சற்காரியங்களுக்கு தம்பதிகள் விரதமனுஷ்டிக்க வேண்டுமென்பது பெரியோர் கொள்கை யாதலால் நாம் அவைகளை அநுஷ்டித்தே தீரவேண்டும்.

சீதை:-- நல்லது, ஆனால் அப்படியே செய்வோம். பிராணேசா! தங்களை விவாகக் காலத்திற் கண்டதுபோல், சர்வாபரணலங்கிருதராய் நாளைய தினமும் காண்பேன். இயற்கையாகவே மனோகரமான தங்கள் திருவுருவம், ஆடையணிகளால் சிறப்புற்றால் கண்ணுக்கு எவ்வளவு இன்பமாக விருக்கும் !

இராமர்:-- நாயகி ! நீயும் நாளையதினம் சர்வாபரணலங்கிருதையாய்க் காணப்படுவையல்லவா?

சீதை:-- ஆம்; நாதா ! இப்பொழுது எனக்கொன்று ஞாபகம் வருகிறது. (கழுத்திலணிந்திருந்த கற்களிழைத்த பதக்கார மொன்றினைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு) இந்தப் பதக்கம் என் தந்தை எனக்கு விவாகக் காலத்தில் கொடுத்தது. இதில் அருமையான பலவகைக் கற்கள் அமைந்திருந்தாலும் தங்கள் நிறத்துக்கீடாக ஒரு நீலக்கல் இல்லாதது என் மனத்திற்கொரு குறையாயிருக்கிறது. நாளைய தினத்திற்குள் இதின் நடுவே ஒரு நீலக்கல் வைக்கமுடிந்து வைத்தால், பட்டாபிஷேகச் சமயத்தில் அணிந்து கொள்வதற்கேற்றதா யிருக்கும்.

இராமர்:-- ஆனால் சரி. அதை இங்கே கொடு. இன்றைய தினமே உன் விருப்பப்படி அதில் நீலக்கல் ஒன்று வைத்துப் பதித்து வரச் செய்கிறேன். (பதக்கத்தை வாங்கக் கையை நீட்டுகிறார்)

சீதை:-- (சற்றுப் பின்வாங்கிக்கொண்டு) பதக்கத்தைத் தங்கள் கையில் தரமாட்டேன்.

இராமர்:-- சீதா ! நீயே தருவதாகச் சொல்லிவிட்டு இப்பொழுது ஏன் மறுக்கிறாய்?

சீதை:-- என் பிராணேசா ! இப்பதக்கத்தில் பல கற்கள் அமைந்துள்ளனவே !

இராமர்:-- இருந்தாலென்ன?

சீதை:-- நன்றாய் சொன்னீர்கள் ! மிதிலைக்கு வரும் வழியில் தங்கள் பாதம் பட்டுக் கல்லொன்று பெண்ணுருவாய் விட்டதே ! இங்கே தங்கள் அஸ்தம்பட்டு இப்பதக்கத்துள்ள கற்களெல்லாம் பெண்ணுருவடைந்து விட்டால் என்ன செய்கிறது !

இராமர் :-- (சிரித்துக்கொண்டு) அதற்கா அஞ்சுகிறாய் ! ஆனால் அப்பதக்கத்தை நீயே வைத்துக்கொள். மந்திரியிடம் சொல்லி உன் விருப்பப்படி செய்விக்கிறேன். (எழுந்து போகின்றனர்)

மூன்றாம் களம் 15-06-2016 அன்று தொடரும்