சனி, 18 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

சுலோகம் 17

சுலோகம் 17

விஶ்வாயமாந ரஜஸா கமலேந நாபௌ
வக்ஷஸ்த்தலே ச கமலாஸ்தநசந்தநேந |
ஆமோதிதோபி நிகமைர் விபுரங்க்ரியுக்மே
தத்தே நதேந ஶிரஸா தவ மௌளி மாலாம் || .17
.

மாலுந்தி யந்தா மரைமணத்தின் மன்னகலஞ்
சாலுங் களபத் தனி மணத்தின் -- காலடிசேர்
கோல மறை மணத்திற் கோதாயுன் குந்தளஞ்சேர்
மாலையன்றோ மேலா மணம். .17.

பதவுரை:--

விபு: -- ப்ரபுவானவர்; நாபௌ -- உந்தியில்; விஶ்வாயமாந ரஜஸா -- ஓரோர் துளியும் ஒரண்டமாகும் பெருமையையுடைய; கமலேந -- தாமரைப்பூவினாலும்; கமலாஸ்த்தந சந்தநேந -- தாமரையாளின் தனச்சந்தனத்தால்; வக்ஷஸ்த்தலே ச -- திருமார்பிலும்; நிகமை -- வேதங்களால்; அங்க்ரியுக்மே (ச) -- இரண்டு திருவடிகளிலும்; ஆமோதிதோபி -- வாஸனையேறப்பெற்றதும்; தவ -- உன்னுடைய; மௌளிமாலாம் -- சிரோமாலையை; நதேந -- வணங்கிய; ஶிரஸா -- தலையால்; தத்தே -- தரிக்கிறார்.

ஓரோர் துளியும் ஓரோருலகமாக மாறும் பெருமையை உடைய தாமரையாலுந்தியிலும், தாமரையாளின் தனச்சந்தனத்தால் திருமார்பிலும், வேதங்களால் கழலிணையிலும், கந்தம் கமழப்பெற்றும், வணங்கிய தலையால் உன் சிரோமாலையை ப்ரபு தரிக்கிறார்.

அவதாரிகை

(1) பெருமாளை விபு என்றார் முன் சுலோகத்தில். இங்கும் விபுவென்கிறார். எல்லா உலகங்களுக்கும் நாயகன், எங்கும் பரந்துளன். அவன் உந்திக் கமலத்தின் ஓரோர் துளியும் ஓரோர் விச்வமாகும் என்று காட்டி அவன் விபு என்று விளக்குகிறார்.

(2) வைஜயந்தியைக் காட்டிலும் கோதை சூட்டிய மாலையின் ஏற்றத்தைக் காட்டினார். இங்கே உந்திக் கமலத்தினிலும் ஏற்றத்தையும், கந்தத்வாரமான தாமரையாள் தனச்சந்தனத்திலும் வேதவாஸனை ஏறிய திருவடித் தாமரைகளிலும் அதிக வாஸனையைப் பேசுகிறார்.

(3) உலகநாயகன் உன் மாலைக்கு வணங்கி அதை சிரஸால் தரிக்கிறார்.

விஶ்வாயமாந ரஜஸா -- தாமரைப்பூவுக்கு தூளிகளால் வாசனை. ஓரோர் துளி ஓரோர் அண்டமாய் விரிவதால், வாசனை எல்லா அண்டங்களிலும் பரவுவதைக் காட்டுகிறது. வாசனை எத்தனை தூரம் வீசுகிறதோ, அது அதற்கு ஏற்றம். அகிலமான அண்டங்களும் பரவும் உந்திக் கமல வாசனையிலும் மேன்மை (வ்யதிரேகம்)

கமலேந -- தாமரையால். ஓரோர் துளி வாசனை ஓரோரண்டம் பரவியது. எத்தனையோ தூளிகளை உடைய கமலத்தின் வாசனைப் பலப்பை என் சொல்வது?

நாபௌ (ஆமோதிதோபி) -- உந்தியில் வாஸிக்கப்பட்டும்

கமலாஸ்த்தந சந்தநேந -- முன்பு கமலத்தின் வாசனை. இங்கே கமலையின் (தாமரையாளின்) தன வாசனை கலந்த சந்தன வாசனை. அச்சந்தன வாசனையால், பெரிய பிராட்டியாரைத் திருமார்பில் சுமந்துகொண்டு இருவர் திருமார்பிலும் பூசிய சந்தனத்தோடே கோதையைப் பாணிக்கரஹணம் செய்து கொள்ள அவள் மாலையை வணங்கிய முடியால் சுமக்கிறார். ஆண்டாள் வாசனைக்கு ஒப்பாவதற்காக ஸர்வகந்தன் கமலையின் கந்தத்தையும் சேர்த்துக் கொண்டார். பெரியபிராட்டியாரிலும் மணமேற்றமென்று நேராகப் பேசுவதில்லை. கோதையும் அவளுக்குத தனம் போன்ற அவயமாதலால் அவள் தனத்திலும் கோதைக்கு அதிக வாசனையைப் பேசினாலும் அதுவும் கமலையின் ஓர் ஸ்தனவிசேஷத்தின் வாசனைப் பெருமையேயாகுமென்று காட்ட ஸ்தனசந்தனமென்கிறார்.

வக்ஷஸ்தலே ச -- திருமார்பிலும், தாமரையாளும் எங்கும் பரந்த விபுஸ்வரூபம். அவள் வாசனையும் எல்லையற்றுப் பரவியது. (ஆமோதிதோபி -- வாஸிக்கப் பெற்றும்)

நிகமை -- வேதங்களுக்கு நித்யாபூர்வமான வேலாதீதமான திவ்ய வாசனை உண்டு. வேதங்கள் அனந்தங்கள். ஆழ்வார் தமிழ்வேதத்தின் மகிழம்பூவாசனை திருவடிகளில் கங்குலும் பகலும் நித்யகாலமும் ஒட்டிக் கொண்டிருக்கும். அனந்த வேதங்களின் எல்லையற்ற அபூர்வ வாசனைகள் திருவடிகளில் சேர்ந்துள. நிகமமென்று கடைத்தெருவுக்கும் பெயர். விவாஹ காலங்களில் கடைத்தெருவிலிருந்து உயர்ந்த வாசனைகளை வாங்கித் தரிப்பர். இந்த வேதவேத்யனான திவ்யபுருஷனுக்குக் கடைத்தெருவென்ற நிகமங்களின் மணம் பொருந்தாது. வேதமென்னும் நிகமங்களின் வாசனைப்பரப்பே சிறந்தது. கடைத்தெரு வாசனைத்ரவ்யங்களின் மணம் க்ருதரிமம் (செயற்கை), வேதவாசனை அக்ருத்ரிமம் (இயற்கை). இங்கே நிகமங்கள் தங்கள் சிரஸுகளோடு (வேதாந்தங்களோடு) திருவடிகளைத் தொழுகின்றன. பன்மையினால் அனந்தமான வேதங்களைக் காட்டி வாசனையின் எல்லையற்ற பரப்பைக் காட்டுகிறது.

அங்க்ரியுக்மே ச --- திருவடி ஜோடியிலும். உந்திக் கமலத்தில் உலகங்களையெல்லாம் படைக்கும் காரணத் தன்மையைக் கண்டதும், அக்காரணம் லக்ஷ்மீபதியானதால், திருமார்பில் கண் சென்று சேர்த்தியை ஸேவித்து, திருவடிகளில் கண் சென்றது.

விபு: -- ப்ரபு. எங்கும் ஸ்வரூபத்தால் பரந்துளன். எங்கும் வாசனையாலும் பரந்துளன். "ஸர்வகந்த:" என்று நிகமங்களால் புகழ்பவன். ஸ்வயமாகவே எங்கும் பரந்த வாசனையை உடையவர்.

ஆமோதிதோபி -- வாஸனையேறியும். தூரம் சென்று பரவும் வாஸனையை ஆமோதம் என்பர்.

நதேந சிரஸா -- வணங்கின சிரஸால். நெடியோன் வணங்கித்தான் ஆண்டாள் திருக்கையால் மாலையை க்ரஹிக்கவேணும்.

தவ மௌளிமாலாம் தத்தே -- உன் சிரோமாலையைத் தரிக்கிறார்.

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

பாதுகா பட்டாபிஷேகம்
அங்கம் 1 களம் 10ன் தொடர்ச்சி

 

(கைகேயி மரவுரிகளை எடுத்துவந்து, இராமர் கையில் இரண்டும், சீதை கையில் இரண்டும், இலக்ஷ்மணர் கையில் இரண்டுமாகக் கொடுக்கிறாள். இராமர் மரவுரிகளைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, பிறகு உடுத்திக் கொள்கிறார். இலக்ஷ்மணரும் அங்ஙனமே செய்கிறார். சீதை மரவுரிகளை உடுத்திக்கொள்ள அறியாது வெட்கப்பட்டவளாய், இராமனைப் பார்க்கிறாள்.)

கோசலை: (கண்ணீர் விட்டு அழுதுகொண்டு, இராமரைப் பார்த்து) என் கண்ணே இராமா! உன்னோடு சீதையையும் காட்டுக்கு அழைத்துப் போகவேண்டுமென்று தந்தை கட்டளை இடவில்லையே! அவ்வாறாக நீ ஏன் அவளை அழைத்துச் செல்கின்றாய்? வேண்டாம், என் கண்மணி ஜானகியை அழைத்துச் செல்லாதே.

இராமர்: அம்மா! சீதையும், இலக்ஷ்மணனும் என்னுடன் வருவதாகப் பிடிவாதம் செய்கிறார்கள். அவர்களை விட்டுச் செல்ல இயலாது. தாங்கள் வருந்தாதீர்கள்.

வசிஷ்டர்: (கைகேயியைப் பார்த்து) மரியாதையற்ற மடந்தையே! குலத்தைக் கெடுக்க வந்த கொடியவளே! கைகேயி! சிறிதேனும் நாணம், இரக்கம் இன்றி பூவினும் மெல்லிய சீதையிடம் நீ மரவுரியைக் கொடுக்க எவ்வாறு துணிந்தாய்? சீதையும் காட்டுக்குப் போவாள் என்று எண்ணினையோ? அவள் போகாள். அவள் உன்னைப்போல் இராஜ பத்தினிக்குரிய ஒழுக்கங்களை ஒழித்தவளல்லள். புருஷனையே தெய்வமாகக் கொண்டொழுகும் சீதை கற்புக்கு அரசி. இரானுடைய ஆத்மா போன்றவள். நீ பெற்ற வரத்தின்படி இராமன் காட்டுக்குச் செல்வான். ஆனால் அவனுக்குரிய அரசுரிமை அதனால் நீங்கி விடாது. அவனதுயிராகிய இந்தச் சீதை அவனுக்குப் பிரதிநிதியாக இங்கிருந்து இவ்விராச்சியத்தை ஆளுவாள்.

கைகேயி: இராச்சியம் முன்னமேயே பரதனுக்கு உரிமையாய் விட்டதே.

வசிஷ்டர்: (கோபத்தோடு) பாப சொரூபமே! தனது தந்தை மனமொப்பிக் கொடுக்காத இராச்சியம் பரதனுக்கு உரிமையாக மாட்டாது. பரதன் குலாசாரத்தை அறிந்தவன். அவன் ஒரு நாளும் இவ்வரசுரிமையை ஏற்கப் போகிறதில்லை. கள்ளி வயிற்றில் அகில் பிறப்பது போலவும், சிப்பியிலிருந்து முத்து பிறப்பது போலவும் ஏதோ விதிவசத்தால் அவன் உன் வயிற்றிற் பிறந்து விட்டான்.

கைகேயி: தானாகச் செல்லும் சீதையைத் தாங்கள் தடுப்பானேன்?

வசிஷ்டர்: ஆ! கைகேயி! உன் நெஞ்சம் கல்லா, இரும்பா, மரமா! கல்லென்றால் கரையுமே! இரும்பென்றால் தீயில் இளகுமே! மரமென்றால் வளையுமே! கொண்ட கணவர் படும் துன்பத்தைக் கண்டும் கரையாமல், மக்கள் மரவுரி யுடுத்தி நிற்பதறிந்தும் இளகாமல், மந்திரி முதலிய பெரியோர் என்ன கூறியும் வளையாமல் இருக்கும் உனது மனத்தை என்னென்பது! பாவீ! சீதை காட்டுக்குச் செல்வாளானால், இந்நகரம் முழுவதும் அவளைப் பின் தொடர்ந்து போய்விடும்.

கைகேயி: போகட்டும். பிறகு அரசர் பரதனுக்கு எந்த இராச்சியத்தைக் கொடுத்து வரத்தை பரிபாலிக்கிறார் பார்ப்போம்.

இராமர்: (வசிஷ்டரை நோக்கி) சுவாமீ! சீதை தனது விருப்பத்தின்படியே என்னைப் பின்தொடருகிறாள். அவளைத் தாங்கள் தடுக்க வேண்டாம். (தசரதர் இருக்கும் திசையை நோக்கி) பிதா! போய் வருகின்றோம். நமஸ்காரம். (இராமர் இலக்ஷ்மணர் சீதை மூவரும் சிறிது தூரம் போகின்றனர். கைகேயியைத் தவிர மற்றெல்லோரும் கண்ணீர் வடிக்கின்றனர். சிலர் ‘இராமா! இராமா!’ எனவும், சிலர் ‘சீதா! சீதா!’ எனவும் அழைக்கின்றனர். இராமர் முதலிய மூவரும், அவர்கள் அழைப்பதைச் செவி ஏற்காது செல்கின்றனர். தசரதர் உரத்த குரலில் ‘இராமா!’ என்கின்றார். அதுகேட்டு இராமர் நிற்கிறார். அவர் நிற்பதைப் பார்த்துச் சீதையும் இலக்ஷ்மணரும் நிற்கின்றனர்.)

தசரதர்: அடா, என் கண்மணி! இராமச்சந்திரா! இங்கு வாடா! என் செல்லமே!

வாபோகு வாயின்னம் வந்தொருகால்
                             கண்டுபோ மலராள் கூந்தல்
வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா
                             விடையோன்றன் வில்லைச் செற்றாய்
மாபோகு நெடுங்கானம் வல்வினையேன்
                               மனமுருக்கும் மகனே நின்று
நீபோக வென்னெஞ்ச மிருபிளவாய்ப்
                               போகாதே நிற்கு மாறே

காட்டிற்குப் போவதிலும் அவசரமாடா கண்மணீ! வா, மெதுவாய்ப் போகலாம். இன்றே செல்லவேண்டுமென்று நியதியா? இல்லை, நாளைக்குச் செல்லலாம். இந்தப் பாவி முகத்தை ஏறெடுத்துப் பார். ஐயோ! குழந்தை ஜானகியையும் உடனழைத்தா செல்கின்றாய்? என்ன காலக்கொடுமை! என்ன காலக்கொடுமை! தோழியர் பலரிருந்து மலரணிந்து முடித்த அவள் கருங்கூந்தலை, இனி அருங்கானில் யாரிருந்து வாரி வகிர்ந்து முடிப்பார்கள்? காட்டில் அவள் செல்லும்பொழுது மூங்கிலைப் பழித்த அவளது அழகிய தோள்களில் புதராய் வளர்ந்த மூங்கில்கள் உராயுமே! அப்பொழுது அவள் என்ன பாடுபடுவாள்! இராமா! அன்று அவளைப் பெறும் பொருட்டு அரனது பெருவில்லை ஒரு பொருள் செய்யாது முரித்தனையே! இன்று அவளைக் கொடுங்கானத்திற் கழைத்துச் செல்ல, உன் மனம் எவ்வாறு நடுங்குகிறதோ! என் கண்ணிற் கருமணியே! கல்லினை மிதித்துப் பெண்ணாக்கக் கற்றாய்! வில்லினை வளைத்துப் பெண்கொள்ளக் கற்றாய்! கல்லினும் வலிய என் நெஞ்சுருக்கும் வகையும் கற்றாயே! உன்னைப் பிரிந்து நான் எவ்வாறடா ஆற்றியிருப்பேன்! கொடிய மிருகங்கள் வசிக்கும் கடுமையான காட்டிற்கு நீ போக எத்தனித்தும், என் நெஞ்சம் இரு பிளவாய்ப் பிளந்து போகாமல் இருக்கின்றதே!

பொருந்தார்கை வேல்நுதிபோல் பரல்பாய
                                            மெல்லடிகள் குருதி சோர
விரும்பாத கான்விரும்பி வெயிலுறைப்ப
                                           வெம்பசிநோய் கூர இன்று
பெரும்பாவி யேன்மகனே போகின்றாய்
                                           கேகயர்கோன் மகளாய்ப் பெற்ற
அரும்பாவி சொற்கேட்ட அருவினையேன்
                                           என்செய்கேன் அந்தோ யானே

மகனே! காட்டிற் கிடக்கும் கூழாங்கற்கள், பகைவர் எய்யும் அம்பின் நுனியைப்போல, உன் கால்களிற் குற்றுமே! அதனால் மெல்லிய திருவடிகளிலிருந்து இரத்தம் பெருகி ஒழுகுமே! ஒருவரும் விரும்பாத அந்தக் கொடிய காட்டை நீ விரும்பி, வெயிலுக்கும் பசிக்கும், மற்ற வருத்தங்களுக்கும் அஞ்சாது செல்லத் துணிந்தனையே! அது பெரும்பாவியாகிய என்து சொல்லினாலல்லவா? ஐயோ! கேகய மன்னனுக்கு மகளென வந்த ஒரு பழிகாரி பேச்சைக்கேட்டு உன்னைக் காடனுப்பத் துணிந்த மாபாவி இனி என் செய்வேன்? என் மகன் இராமன் யாருக்கு என்ன அபகாரம் செய்தான்? அவன் ஏன் காட்டிற்குச் செல்லவேண்டும்? இராமா! நீ செய்த பாவம், எனக்குப் புத்திரனாய்ப் பிறந்ததோ? வேள்வித்தீயினிற் பெற்ற மகனைக் காட்டுக் கனுப்புகின்றேனே! எனக்குக் கேள்வி முறையில்லையா? இராமா! என் கண்ணே! என் மணியே! என் செல்லமே! நீ வனஞ் செல்லாதே! இங்கு வா. என் அருகில் வந்து உட்கார். நான் வானகஞ் செல்கிறேன். என்னை அனுப்பிவிட்டு நீ கானகஞ் செல். (சோர்ந்து விழுந்து விடுகிறார். இராமர் நின்ற விடத்திலிருந்து கரங்கூப்பி அவரை நமஸ்கரித்து) சென்று வருகின்றேன். (செல்கிறார். தசரதர் தலை நிமிர்ந்து இராமரைப் பார்த்துவிட்டு மூர்ச்சையாய் விழுகிறார். கைகேயியைத்தவிர மற்ற யாவரும் இராமரைச் சூழ்ந்து கொள்ளுகிறார்கள்.)

வசிஷ்டர்: (இராமரைப் பார்த்து) இராமச்சந்திரா! வினையின் வலிமை இனைத்தென்று யாவருரைக்க வல்லார்?

வாழ்வினை நுதலிய மங்க லத்துநாள்
தாழ்வினை யதுவரசீரை சாத்தினாய்
சூழ்வினை நான் முகத் தொருவர்ச் சூழினும்
ஊழ்வினை யொருவரா லொழிக்கற் பாலதோ

இன்றைய தினம், உனது மகுடாபிஷேகத்துக்கு உகந்த நாள் என்று குறிப்பிடப் பட்டது. அவ்வளவு சுபமுகூர்த்தமுடைய இத்தினத்தில், நீ பட்டணிந்து, மணிமுடி தரித்துக் காவலனாகிப் பாராள்வது போக, மரப்பட்டை புனைந்து, சடைமுடி தரித்து, மாதவனாகிக் காடேக நேரிட்டதே! என்ன ஆச்சரியம்! எல்லாம் விதிப் பயன். இன்னாருக் கின்னபடி என்று எழுதுபவன் பிரமன். அவ்வாறு நமக்கெல்லாம் விதியை விதிக்கும அவனை அவ்விதி விட்டதா? அவன் ஐந்து தலைகளுள் ஒரு தலையைக் கொண்டுபோய் ஐம்முகனான அவனை நான்முகனாக்கி விட்டதே! மதியில் வல்லாரும் விதியை வெல்லல் அரிது.

வறியவர் செவ்வராவர் செல்வர்பின் வறியராவர்
சிறியவர் உயர்ந்தோராவர் உயர்ந்துளோர் சிறியராவர்
முறைமுறை நிகழுமீது முன்னையூழ் வினையே கண்டாய்
எறிகதிர் வழங்கும் ஞாலத்தியற்கையு மினைய தன்றோ?

உண்ண இனிய உணவும், உடுத்த நல்ல உடையும் இன்றி இரந்துண்ணும் தரித்திரரும், திடீரென்று தனவந்தராகிறதை நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோமில்லையா? அது மட்டுமல்ல, யாதொரு வகையான புகழு மின்றி மிகவும் சிறுமை யுடையவர்கள், காலகதியால் பேரும் புகழும் படைத்து மிகவும் பெருமை உடையவ ராகிறார்கள். பல்லோர் புகழும் பெருமை வாய்ந்தோர் பலர் கால வேறுபாட்டால் எல்லோராலும் இகழப்பட்டு மிக்க சிறுமையை அடைகின்றனர். இவைகளுக்கெல்லாம் காரணம் விதியேயாகும். இந்த விதியின் செயல்களை நாம் நாடோறும் உலகில் இயற்கையாகக் காண்கிறோமல்லவா? ஆதலால் இன்பத்தில் களிப்புறுதலும் துன்பத்தில் இன்னல் உழத்தலுமின்றி எந்நாளும் ஒருபடித்தாய், ‘எல்லாம் எமையாளும் ஈசன் செயல்’ என்றெண்ணி நிர்ச்சிந்தையா யிருப்பதன்றி நம்மால் செய்யத்தக்கது வேறொன்றுமில்லை. கானகத்தில் ஞானமுற்றிய மாதவர் பலர் வசிப்பார்கள். நீ அவர்களை வழிபட்டு ஞானாபிவிருத்தி செய்துகொள். இலக்ஷ்மணனைத் துணையாகச் சதா உன்னுடன் வைத்துக்கொள். குழந்தை ஜானகியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள். பதினான்கு வருஷங்களையும் இன்பமாகக் கழித்து, க்ஷேமமாய் நீங்கள் மூவரும் திரும்பி வரக் கடவீர்கள். போய் வாருங்கள். (இராமர் முதலிய மூவரும் வசிஷ்டரை நமஸ்கரிக்கின்றனர். பிறகு கோசலை இராமரை நெருங்கி, அவரையும் ஜானகியையும் கட்டி முத்தமிட்டு)

கோசலை: என் கண்மணிகளே! பாவி நான் உங்களைப் பிரிந்து எவ்வாறு சகித்திருப்பேன்! குழந்தாய் இராமச்சந்திரா! உன்னைப் பெற்றேன்; வளர்த்தேன். வளர்த்து நான் பெற்ற பலன் இதுதானோ? என் வீர சிங்கமே! மாற்றுயர்ந்த தங்கமே! உன்னை நொந்து சுமந்து நோவாமலேந்தி வளர்த்ததும் இதற்கோ? முகத்தோடு முகம் வைத்து முத்தாடி ‘எந்தன் மகனே’ என அழைத்த வாயால், ‘காட்டிற்குப் போய்வா’ என்று நான் எங்ஙனம் சொல்வேன்? ஆ! தெய்வமே! என் செயலாவதினி ஒன்றும் இல்லை. எல்லாம் உன் செயலே! வல்லான் வகுத்ததே வாய்க்கால். எல்லாம் வல்ல நீ எது செய்தாலும் உன்னைத் தடுப்பார் யார்? உனது திருவுளமிதுவானால், அங்ஙனமே ஆகட்டும். புதல்வா! தருமஸ்தாபனனாகிய உன்னைத் தடுக்க என்னாலாகாது. நீ கானகஞ் சென்று க்ஷேமமாய்த் திரும்பி வருவாயாக. உனது மனோ தைரியத்தாலும் நியமத்தாலும் எந்த தருமத்தைப் பாதுகாக்கின்றாயோ அந்த தருமமே உன்னைக் காக்கட்டும். நீ உன் பிதாவுக்குச் செய்த பணிவிடையும், உன் தாய்க்குச் செய்த சிஷ்ருஷையும், நீ கைக்கொண்டிருக்கும் சத்தியமும் உனக்கு நீண்ட ஆயுளை அளித்து இரக்ஷிக்கட்டும். உலகம் புகழும் உத்தமனே! காட்டிலுள்ள மலைகளும் மடுக்களும், பறவைகளும் பாம்புகளும், புலிகளும் கரடிகளும், மற்றுமுள்ள காட்டு மிருகங்களும் உன்னைப் பாதுகாக்கட்டும். சாத்தியர்கள், விசுவதேவர்கள், மருத்துக்கள், மகரிஷிகள், தாதா, விதாதா இவர்கள் உனக்கு க்ஷேமத்தைக் கொடுக்கட்டும். துவாத சாதித்தியர், இந்திரன் முதலான லோக பாலகர்கள் உன்னைப் பாலனம் பண்ணட்டும்.

திருமா லரனே திசைமுகன் கரிமுகன்
பொருவேல் முருகன் பரிதி வடுகன்
எழுவகை மங்கைய ரிந்திரன் சாத்தன்
விதியவன் நீலி நிலமகள் மலைமகள்
திருமகள் நாமகள் திகழ்மதி யென்று

வருந் தெய்வங்களே! நீங்கள் அனைவரும் எனது குமாரனுக்குத் துணையாக இருந்து அவனுக்கு யாதொரு விக்கினமும் வராமற் காத்திடுங்கள். வன தேவதைகளே! எனதருமைத் திருமகனுக் கொருகுறையும் வராது பாதுகாத்தருளுங்கள். ஸ்ரீராமா! எல்லாத் தேவர்களாலும் நமஸ்கரிக்கப் பெற்ற இந்திர பகவானுக்கு விருத்திராசுரனைக் கொல்வதற்காக எந்த மங்களம் உண்டாயிற்றோ, அந்த மங்களம் உனக்கு முண்டாகட்டும். முற்காலத்தில் அமிர்தத்தைக் கொண்டு வருதற்குக் கருட பகவான் சென்றபொழுது, அவர் தாயாகிய விநதை அவர்க்கு எந்த மங்களத்தைச் செய்தாளோ, அந்த மங்களம் உனக்கும் உண்டாகட்டும். திருப்பாற் கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுக்கச் சென்ற காலத்தில் அசுரரை வதைப்பவனான இந்திர பகவானுக்கு அதிதி தேவி எந்த மங்களத்தை வேண்டினாளோ, அந்த மங்களம் உனக்கும் உண்டாகட்டும். மூவுலகங்களையும் மூன்றடியில் அளந்த வெற்றி பொருந்திய விஷ்ணு பகவானுக்கு உண்டான மங்களம் உனக்கும் உண்டாவதாக. ருதுக்களும், சமுத்திரங்களும், தீவுகளும், வேதங்களும், உலகங்களும், திசைகளும், மங்களத்திற்கு அதிசயத்தை விளைக்கும் மங்களங்களை உனக்கு அளிக்கட்டும். (இராமன் சிரசின்மீது அக்ஷதைகளைத் தூவி) இராமா! சர்வாபீஷ்டங்களும் கைகூடப் பெற்றவனாய் நீ காட்டிற்கு க்ஷேமமாய்ப் போய்வா. பிதுர்வாக்கிய பரிபாலனம் பண்ணி, நீ திரும்பி வந்து அரசர்க்குரிய ஆடையாபரணங்களை அணிந்து, அணி மணி அரியாசனத்தின்மீது அமர்ந்து அரசு செலுத்துவதை என் இரு கண்களும் குளிரக் கண்டு களிப்படைவேன். என்னால் பூஜிக்கப்பட்ட கடவுளர் உன்னைக் காப்பார்கள். போய்வா. (இராமர் தலை தாழ்த்தித் தாயை நமஸ்கரிக்கிறார். அப்பால் சுமித்திரை, இலக்ஷ்மணனைப் பார்த்து)

சுமித்திரை: புதல்வனே! உன்னைப் பெற்றதாலடையக் கூடிய பலனை நான் இன்று பெற்றேன். நீயும் பிறந்ததால் அடையத்தக்க பலனை இன்று அடைந்தாய். தர்மத்தின் தவப் பயனாய்த் தாரணியில் வந்துள்ள ஸ்ரீராமச்சந்திரனது திருவடிகளை அரை க்ஷணமும் விட்டுப் பிரியாது, தொண்டு செய்திருத்தலைக் காட்டிலும் நீ பெறத்தக்க பேறு வேறு இல்லை. உனது புண்ணிய வசமே இராமன் காடு செல்லவும், நீ அவனைப் பின் தொடர்ந்து செல்லவும் நேரிட்டதென்று நினை. எல்லோரிடத்துமே நீ அன்புள்ளவன். இராமனிடத்தோ அளவிறந்த அன்பும், பூரண பக்தியு முடையவனா யிருக்கின்றாய். உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டுவதில்லை. மாசற்ற மணியே! இன்பத்திலும் துன்பத்திலும் இராமனை விட்டுப் பிரியாதே. மூத்தோர்க்குக் கீழ்ப்படிந்து நடத்தலே சிறந்த ஒழுக்கம். ஆதலால் உனக்கு மூத்தவனாகிய இராமன் காலாலிட்ட வேலையைச் சிரசால் செய்வது உனது கடமையாகும். இராமன் உனது தமையனாயினும் அவனை உனது யஜமானனாகவும், நீ அவர்க்கு அடிமையாகவும் கருதித் தொண்டு செய். இராமனுடைய க்ஷேமத்துக்காக உன் உயிரையே கொடுக்க நேரிட்டாலும் சற்றும் பின்வாங்காது கொடு. இராமன் வாக்கிலிருந்து என்ன வருகின்றதென்று ஜாக்கிரதையாகக் கேட்டு அதை நிறைவேற்று. இன்று முதல் பதினான்கு வருஷங்கள் வரையில் அரணியத்தை அயோத்தியாகவும், இராமனை உனது தந்தையாகவும், சீதையை நானாகவும் பாவித்துக் கொள். பதினான்கு வருஷங்களும் முடிந்து இராமன் க்ஷேமமாய்த் திரும்பி வந்தால் நீயும் அவனுடன் வா. இல்லாவிட்டால் இந்நகரில் அடியெடுத்தும் வையாதே! போய்வா! (இலக்ஷ்மணர் நமஸ்கரிக்கின்றார்)

சுமந்திரர்: (இராமரைப் பார்த்து) இளவரசே! இரதம் வந்து வாசலில் நிற்கின்றது.

இராமர்: அப்படியா! இதோ வருகின்றேன்.

(தொடரும்)

புதன், 15 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி
சுலோகம் 16

 

பாசுர‌ம் 16

த்வந்மௌளிதாமநி விபோ: ஶிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்தகல்பித ஸபீதிரஸ ப்ரமோதா|
மஞ்ஜுஸ்வநா மதுலிஹோ விதது: ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்களதூர்யகோஷம் || .16.

மாலாகி மாலணிதல் வண்கோதாய் வண்டினங்கள்
மாலா முனது குழல்வளைந்த -- மாலையெனச்
சீர்த்தவிசை செய்தல் திருவேநின் மன்றலிசை
வாத்தியத்தி னன்முழக்க மாம். .16.

பதவுரை

விபோ -- விச்வப்ரபுவினுடைய; ஶிரஸா -- சிரஸினால்; த்வந்மௌளிதாமநி -- உன் சிரஸை அலங்கரித்த மாலை; க்ருஹீதே -- க்ரஹிக்கப்பட்டபோது; ஸ்வச்சந்த -- தங்கள் ஸ்வேச்சையாக (இஷ்டப்படிக்கெல்லாம்); கல்பித -- செய்த; ஸபீதரஸ -- ஸஹபான ரஸத்தால்; (எல்லாம் கூடித் தேனைப் பானம் செய்து); ப்ரமோதா: -- அதிக சந்தோஷத்தோடு கூடியனவாக; மஞ்ஜுஸ்வநா: -- இனிய சப்தத்தோடே; மதுலிஹ: -- தேனை ஆஸ்வாதிக்கும் வண்டுகள்; ஸ்வயம் -- தாமாகவே (வேறு ஒருவரும் சொல்லாமல்); ஸ்வாயம்வரம் -- ஸ்வயம்வரமான விவாஹ ப்ரகரணத்திற்குத் தக்கபடி; கமபி -- வர்ணனத்திற்கு அடங்காத மாதுர்யத்தை உடைய ஓர் விசித்ரமான; மங்களதூர்ய கோஷம் -- மங்கள வாத்ய சேவையை; வித்து: -- செய்தன (விதித்துக் கொண்டன)

நீ உன் சிரஸில் சூடிய மாலை ப்ரபுவின் சிரஸால் ப்ரதிக்ரஹிக்கப்படபோது, தேன் வண்டுகள் தங்கள் இஷ்டப்படிக்கெல்லாம் வேண்டியமட்டும் ஸஹபானம் செய்து அந்த ரஸத்தாலே களித்து இனிய சப்தத்தோடே உன் ஸ்வயம்வரத்தில் ஸ்வயமாக ஓர் விலக்ஷணமான மங்களவாத்ய கோஷம் செய்தன.

அவதாரிகை

(1) அனந்தநாதரைப்போல வண்டுக்கூட்டங்கள் தங்கள் சரீரத்தாலேயே குடையாயின. கருடனைப் போலே விசிறியுமாயின என்றார் 14ல். வைஜயந்தியை வண்டுகள் விட்டதைப் பேசினதை உபபாதிக்க முன் சுலோகம் வந்தது. அது முடிந்ததும், மறுபடியும் வண்டுகள் ஆனந்தப்பட்டு ஸ்வயம் செய்யும் வாத்யகோஷ கைங்கர்யத்தை ஸாதிக்கிறார்.

(2) ஸ்வயம்வரத்தில் மங்களவாத்ய கைங்கர்யமும் ஸ்வயமாக வண்டுகளால் வரிக்கப் படுகிறது. எல்லாம் இங்கே ஸ்வயமாகும். வண்டுகள் ஸ்வச்சந்தமாகத் தேனை ஸஹபானம் செய்து களிக்கின்றன. ஒருவரும் அவற்றிற்குத் தேனைப் பானம் செய் என்று தேனை எடுத்துக் கொடுக்கவில்லை, பரிமாறவில்லை. தங்கள் இஷ்டமாகத் தாமே மாலையில் பெருகும் தேனைப் பானம் செய்கின்றன. இந்த ஸ்வயம்வரத்தில் சேஷர்களான யாவரும் தங்கள் தங்கள் இஷ்டத்தை ஆஃவயமாகச் செய்யலாம், போகங்களையும் புஜிக்கலாம். ஸ்வக்ருஹே கோ விசாரோஸ்தி அஸ்யாஜ்ஞா ஸம்ப்ரதீக்ஷ்யதே என்றார் ஜனகர் ஸீதா விவாஹத்தில். "ஸ்வக்ருஹத்தில் யாருக்கு என்ன விசாரம் வேண்டும்? யாருடைய ஆஜ்ஞை எதிர்பார்க்கப் படுகிறது? ஏன் ஸ்வயமாக உங்கள் இஷ்டப்படிக்கெல்லாம் இந்த உத்ஸவத்தில் ப்ரவ்ருத்திக்கலாகாது " என்று ஜனகர் கேட்டார். இங்கே அப்படிப் பேசவே அவஸரம் நேரிடவில்லை. எல்லாரும் ஸ்வயமாகவே விவாஹ மங்களத்திற்கு வேண்டிய கார்யங்களைச் செய்கின்றனர். விவாஹத்திற்கு மருஷ்டாந்ந பானாதிகள் அங்கமாகையால் விவாஹபூர்த்திக்காக அதையும் செய்கின்றன. 'விதது' என்பதால் வாத்யகோஷம் செய்ய ஒன்றையொன்று விதித்தன, கட்டளையிட்டன என்றும் கொள்ளலாம். விதியின் பயன் பிறர்க்கு. பரஸ்மை பதப்ரயோகம்.

த்வந்மௌளிதாமநி -- நீ உன் கூந்தலில் சூடிய மாலையானது உன் உத்தமாங்கத்தில் சூடிய மாலை.

விபோ:ஶிரஸா -- ப்ரபுவின் சிரஸால். உன் உத்தமாங்கத்தில் சூடிய மாலையைத் தம் உத்தமாங்கத்தில் தரிப்பதுதானே இந்த உத்தம ப்ரபுவின் லக்ஷணம்!

ஶிரஸா க்ருஹீதே -- "ஶிரஸா ப்ரதிக்ருஹ்ணாதி வைஸ்வயம்" என்ற வசன க்ரமத்தை இவர் விடாத ப்ரபுவே. எவர் செய்யும் பூஜையையும் இப்படி சிரஸால் க்ரஹிப்பவர். கோதை சூடிய மாலையை இப்படி க்ரஹிக்காமலிருப்பாரோ? தம் ஸ்வச்சந்தமான ஸ்மிருதி வசனப்படி, ஸ்வயமே சிரஸா க்ரஹித்தார். தம்மையே விதித்துக் கொண்டார். இந்த ஸ்வயம்வரத்திலே பெருமாளுடைய சிரஸால் க்ரஹணமும் ஸ்வயம். பெருமாளை ஒருவரும் ப்ரார்த்திக்கவில்லை, விதிக்கவில்லை. அவர் ஸ்வச்சந்தமாக அப்படிச் செய்தார். ராகத்தால் செய்தார். ஸ்வச்சந்த விதானம். மாலையை சிரஸால் க்ரஹித்தபொழுதே "யஸ்யச பாவே பாவ லக்ஷணம்" பாவத்தை இரட்டிக்கும் பாணினி ஸூத்ரமும் இந்த பாவப்ரகரணத்தில் பாவத்தோடு சேருகிறது.

ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸப்ரமோதா: -- பல்லாயிரம் வண்டுகளாக சிரோமாலையில் பெருகும் தேனை ரீங்காரம் பண்ணிக்கொண்டு ஸஹபானம் செயெயும்போது தடுப்பாரில்லை, ஓட்டுவாரில்லை. கூட்டங்களான வ்யக்திகளுக்கு ஒரே காலத்தில் அன்னம் இட்டு அவர்கள் புஜிப்பார்கள். பானகாதிகளைக் கூடிப் பானம் செய்வர். இவை ஸ்வச்சந்தமாய்த் தலைமேலேறி அங்கே ஒரேகூட்டமாய்ப் பானம் செய்கின்றன. குமார ஸம்பவத்தில் தன் பேடையான பெண்வண்டை அநுவர்த்திக்கொண்டு ஆண்வண்டு ஒரே குஸும பாத்ரத்தில் ஸஹபானம் செய்தது என்று காளிதாஸர் வர்ணித்தார். அங்கே பரச்சந்தானுவர்த்தன மென்னும் தாக்ஷிண்யம் காட்டப் பட்டது. இங்கே எல்லா வண்டுகளும் ஏககாலத்தில் ஸஹபானம் செய்தன. பானத்தில் ராகமுடையவர் பலபேர்கூடி ஸஹபானத்தை மிகவிரும்புவர். இங்கே இப்படிப் பல்லாயிரம் வண்டுகளும் வாத்தியம் ஸேவிக்கின்றன. வாத்யக்காரர் எல்லோரும் கூடிச் சேர்ந்து விவாஹ ஸமயத்தில் அன்னபானங்களில் அந்வயிப்பர்.

மஞ்ஜுஸ்வநா: -- பானம் பண்ணின தேனிலும் இனிமையான சப்தத்தோடு தேன் சாப்பிட்ட வாயிலிருந்து சப்தம் தேனாகவே வருகிறது. ராகத்திற்கு எல்லையில்லை, தித்திப்புக்கும் எல்லையில்லை.

விதது: ஸ்வயம் -- ஸ்வயமாகச் செய்தன. ஒருவர் ஆஜ்ஞையால் விதிக்கப்பட்டுச் செய்யவில்லை. ஆஜ்ஞா கைங்கர்யமல்ல, விதிக்கப் பட்டதல்ல. அநுக்ஞா கைங்கர்யம். ராகத்தால் ஸ்வயம் செய்தன. 'ஸ்வயம் விதானம் செய்தன' என்பதில் ரஸமுண்டு. பிறர் விதித்துயவில்லை. தாங்களே ஸ்வயம்விதானம் செய்துகொண்டன. எப்படித் தங்கள் ஸ்வச்சந்தத்தால் ஸ்வேச்சையால் தேனைப் பானம் செய்தனவோ, அப்படியே ஸ்வேச்சையால் இக்கைங்கர்யத்தையும் மிக்க களிப்போடு செய்தன. "களம விரளம் ரஜ்யத் கண்டா: க்வணந்து சகுந்தய" "அவ்யக்த மதுரமாக ஓயாமல ராகம் நிரம்பின கண்டத்தோடு பெண் பக்ஷிகள் சப்திக்கட்டுமே. தேவன் ராமன் ஸ்வயமாக இந்தப் பஞ்சவடிக்கு மறுபடியும் எழுந்தருளியிருக்கிறார்" என்று கோதாவரீதேவி விதித்தாள். அப்படி இங்கு விதிக்க அவஸரமில்லை, ஸ்வயம் ராகமிருப்பதால்.

தே -- உன் வண்டுகள். அந்த வண்டுகள். 14வது ச்லோகத்தில் குடையான வண்டுகள். உன் ஸ்வயம்வர ஸம்பந்தமாக

ஸ்வயம்வரம் -- நீ எப்படி நிரவதிகமான ராகத்தோடு உன் மணாளரை வரித்தாயோ, அப்படியே வண்டுகளும் இந்த மங்களவாத்ய ஸேவையை வரித்தன.

மங்களதூர்ய கோஷம் -- மாலை சிரஸால் க்ரஹிக்கப்படும் க்ஷணத்தில் இப்படி வாத்யகோஷம் செய்தன.

திங்கள், 13 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

சுலோகம் 15

ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி
ராகாந்விதாபி லளிதாபி குணோத்தராபி |
மௌளிஸ்ரஜா தவ முகுந்தா கிரீடபாஜா
கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ || (15)

மல்லிநா டாளு மயிலே வனமாலை
மெல்லியலு நன்மணமு மேவுகினும் -- அல்லனையான்
வேலைநிகர் மார்பமுற வேய்ந்தளக நீதரும்பொன்
மாலைமுடி மன்னியதம் மா.         (15)

பதவுரை

கோதே -- கோதாய்! வைஜயந்தீ -- வனமாலை; ஸதா -- எப்பொழுதும்; ஆமோதவத்யபி -- பரிமளம் நிறைந்து சிரிப்பு விகாஸத்தோடு கூடியிருந்தும்; ஹ்ருதயங்கமாபி -- திருமார்பில் இருந்துகொண்டு மனதை ஹரிப்பதாயிருந்தும்; ராகந்விதாபி -- செவ்வி மாறாமலும் பெருமாள் திருமார்பில் மிக்க ராகத்தோடும்; லளிதாபி -- மிகவும் ஸுகுமாரமாயும்; குணோத்தராபி -- உயர்ந்த குணங்களை (நாறுகளை) உடையது; முகுந்த கிரீட பாஜா -- மோக்ஷஸுகத்தை அளிக்கும் பெருமாள் கிரீடத்தை அடைந்த; தவ மௌளிஸ்ரஜ -- உன்னுடைய கூந்தலை அலங்கரித்த மாலையால்; அதரிதா பவ கலு -- கீழே போனதாக ஆகிவிட்டதல்லவா?

அம்மா கோதாய்! பெருமாள் திருமார்பில் ஸர்வகாலத்திலுமுள்ள வைஜயந்தீ என்னும் வனமாலையானது, எப்பொழுதும் பரிமளத்தோடும், ஸந்தோஷ மலர்ச்சியோடும், செவ்வியோடும் பெருமாள் திருமார்பை அலங்கரிப்பதில் ராகத்தோடும், ச்ரேஷ்ட குணங்களோடும், ஸௌகுமார்யம் என்னும் மார்த்தவத்தோடும் கூடி பெருமாள் திருமார்பிலேயே வசித்துக்கொண்டு மனத்துக்கினியதாயிருந்தாலும், அது அவர் திருமுடியிலுள்ள கிரீடத்தை அடைந்த உன் சிரோமாலையால் கீழாக்கப்பட்டதே!

அவதாரிகை

(1) என்னை ஈச்வரீயென்னலாமோ? எனது உயிரும் அம்சியுமான பெரிய பிராட்டியாரல்லவோ ஈச்வரீ? அம்மா! உன்னை ஈச்வரீ என்று அழைக்க என்ன தடை? மோக்ஷத்தை அளிக்கும் முகுந்தனான ஸர்வேச்வரரின் கிரீடத்தை உன் சிரோமாலை அடைந்ததே? உன் சிரஸுக்கு ஈச்வர கிரீடம் கிடைத்தாலென்ன? உன் சிரோலங்காரமான மாலைக்கு அது கிடைத்தாலென்ன?

(2) ஆண்டாள் சரித்திரத்திலும் திருக்கல்யாணத்திலும் மாலைக்குத்தான் ப்ரதான்யம். அநேகம் ச்லோகங்களில் இங்கே கோதைமாலையின் ஸ்துதிமாலை. இது சூடிக்கொடுத்த மாலையின் துதியென்ன வேணும். அந்த மாலைதானே இம்மிதுனத்தைச் சேர்த்துவைத்த க4டகவஸ்து! புருஷகாரத்திற்கும் புருஷகாரமாயிற்று. க4டகர் சிறப்பினும் மிக்கதுண்டோ? பரமான ப்ரஹ்மவித்யையை ப்ரதிஜ்ஞையுடன் பேச ஆரம்பித்த முண்டகோபநிஷத்து மேலே "ஆகையால் க்ஷேமத்தை விரும்புகிறவன் ஆத்மக்ஞனான ஆசிரியனையல்லவோ அர்ச்சிக்க வேண்டும்" என்றது. 'தஸ்மாத்' என்று ஹேதுபுரஸ்ஸரமாய்ப் பேசுவதோடு த்ருப்தியில்லாமல் 'ஹி' என்று ப்ரஸித்தியையும் ஹேதுவையும் காட்டும் பதத்தையும் சேர்த்துக் கொண்டது. "தஸ்மாத் ஆத்மக்ஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம:" மதுரகவி காட்டும் மதுரமார்க்கம் நல்வழியான தொல்வழி

(3) முன் ச்லோகத்தில் 'நீ சூடிய மாலை வந்து திருமுடியில் ஏறி கிரீடம் பெற்றதும், வைஜயந்தியில் மொய்த்துக் கொண்டிருந்ததை விட்டு, உன் மாலையின் பரிமளாதிகளால் மேலே இழுக்கப்பட்டு அங்கே சூழ்ந்து சுழன்று ஆடிப் பாடுகின்றன' என்றார். புதிதாக கிரீட மாலைக்கு வந்தால் வரட்டும்; கையில் கிடைத்து ஸித்தமான உத்தமமாலையாகிய வைஜயந்தியை அலக்ஷ்யம் செய்து தாழ்வாக்குமோ? இது என்ன பக்ஷபாதப் பேச்சு? பொய்த்துதி? இதற்கும் பதில் கூறுகிறார்.

கோதே! -- நீ பாமாலை பாடிக்கொண்டே பூமாலை தொடுத்துக் கட்டிச் சூடிக்கொடுத்தாய். உன் தோழிகளும் ப்ரஜைகளுமான உன் தோட்ட வண்டுகள் உன் பூமாலையைச் சுற்றி ஆடிப்பாடி வந்தன; உன்னை அநுகரித்தன.

வைஜயந்தீ -- வனமாலையானது பஞ்சபூதங்களையும் அபிமானிக்கும் நித்யஸூரியான சேதன தத்துவம். இப்படிக்கு உத்க்ருஷ்டமான சேதனமாலை உன் பூமாலையால் ஜயிக்கப் பட்டது. ப்ருந்தாவனத்து கோபாலனுக்கு இதுவே திருமார்புக்கு அலங்காரம். ஒருகால் குந்துமணியும் சேரலாம்.

ஸதா -- எப்பொழுதும். ஆமோதவத்யபி -- பரிமளம், ஸந்தோஷவிகாஸம். சேதனமான அபிமானி தேவதையானதால் ஸந்தோஷமும் உண்மையாகும்.

ஹ்ருதயங்கமாபி -- ஹ்ருதய தேசத்திலிருப்பது. ஹ்ருதயத்துக்கு இனிதே.

ராகாந்வி தாபி -- வாடாத மாலை புஷ்பராகம் . மாறுவதேயில்லை. திருமார்பில் ராகம் குறைவதே இல்லை திருமார்பில் ராகமில்லாவிட்டால் இளப்பம் செய்யக் காரணமேற்படலாம்.

லளிதாபி -- மார்த்தவ ஸௌகுமார்யங்கள் குறைவதேயில்லை.

குணோந்ததாபி -- புஷ்பங்களின் உயர்த்தி குறையாவிடினும் மாலையின் நார்கள் (குணங்கள்) கெடுகின்றனவோயென்றால், நார்கள் ஸர்வோத்தரமாகவேயுள.

மௌளிஸ்ரஜா -- ஓர் குறைவுமில்லையென்றால், கீழாவதற்குக் காரணம்தான் என்ன? வைஜயந்தீ பெருமாள் திருமுடியிலும் ஏறவில்லை, உன் மௌளியிலும் ஏறப்பெறவில்லை. இந்த மாலை உன் மௌளியில் சூடப்பட்டுப் பெருமாள் முடியையும் சூடுகிறது. இந்த மாலை ஈச்வரீ ஈச்வரர் இருவர் முடியிலும் சம்பந்தம் பெற்றது. ஸ்தானத்தால் உயர்த்தி பெற்றதல்லவோ! மற்ற தாரதம்யத்தை நாம் நினைக்க வேண்டாம். பேசவேண்டாம். மௌளி உத்தம அங்கமல்லவோ, மார்புக்கு உயர்ந்ததன்றோ?

தவ -- ஈச்வரீயான உன் மௌளி சூடியது, அங்கிருந்து.

முகுந்த கிரீட பாஜா -- பெருமாள் திருமேனியிலேயே யல்லவோ ஸ்தானங்களின் உத்தமத்வமும் அதரத்வமும் காட்டவேணும்! முகுந்தன் மோக்ஷப்ரதன். ஸர்வேச்வரன்தான் மோக்ஷப்ரதன். அவன் கிரீடத்தில் சூடப்பட்டது இம்மாலை. கிரீட ஸம்பந்தம் உத்தமமல்லவோ? மாலைகளுக்குள் ஆதிராஜ்ய ஸூசனம் அந்த ஸம்பந்தம்.

அதரிதா -- கீழாய்ச் செய்யப்பட்டது. திருமுடியில் கிரீடத்திலுள்ள மாலைக்குக் கீழேயுள்ளதுதானே திருமார்பு மாலை?

பவதி கலு -- ஆகிறது அல்லவா? இது எல்லோரும் அறியும்படி ஸ்பஷ்டம்தானே! இங்கே ஓர் ரஸமுண்டு. பகவத் கைங்கர்ய ரஸிகர் மற்றெல்லோருக்கும் தாழ்மையையே ஆசைப்படுவர். தாழ்மை கிடைத்ததும் 'இன்றுதான் பிறந்தோம்' என்கிற நினைப்பு வருவதை 'அதரிதா பவதி' என்று சேர்த்துப் பணிப்பால் விளக்குகிறார். கோதை சூடிய மாலை சேதனமல்லாததால் அதற்கு அந்தத் தாழ்மை ஆசையில்லை. மேலும் பெருமாளாக அதைத் தலையில் சூடிவிட்டார். நித்யஸூரியான வைஜயந்தி தேவதை தாழ்மையையே ஸத்தையாக மதித்தார். (15)