சனி, 15 ஜூன், 2013

ச்ராத்தம் உண்டானது எப்படி?

உலகில் முதலில் ச்ராத்தம் உண்டானது எப்படி என்று அறிந்துகொள்வது அவசியம்.

அது ஸ்ரீமன் மஹாபாரதத்தில் அநுசாஸன பர்வத்தில் 138வது அத்யாயத்தில் பரக்க நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.

அதைப்பற்றி ‘ஸ்ரீவேதாந்த தீபிகை’யில் அடியேன் படித்த ஒரு கட்டுரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ப்ருஹ்மாவிடமிருந்து அத்ரி என்னும் ஒரு மஹரிஷி உண்டானார். அந்த மஹரிஷிக்கு தத்தாத்ரேயர் என்னும் ஒரு பிள்ளை பிறந்தார். அவருக்கு நிமி என்னும் ஒரு புத்ரனுண்டானார். அவர் மிகவும் தபஸ்வி. அவருக்கு ஸ்ரீமான் என்று ஒரு புத்திரர் பிறந்தான். அவன் மஹா தபஸ்வியாயிருந்து ஒரு ஆயிரம் வருஷம் தபஸ் செய்துகொண்டிருக்கையில் ஒரு நாள் அவன் காலமாய்விட்டது. நிமி புத்ர சோகத்தால் மனவருத்தமுற்று மிகவும் வருந்தி அவனுடைய சரீரத்தை ஸம்ஸ்காரம் செய்து தனக்கு நேர்ந்த ஆபத்தை நினைத்து வருந்திக் கொண்டிருந்தார். சதுர்த்தசியன்று அநேக த்ரவ்யங்களைச் சேர்த்து அன்று ராத்திரி துக்கப்பட்டே நித்ரையை அடைந்தார். விடியற்காலத்தில் எழுந்து என்ன செய்கிறது என்று யோசிக்கத் தொடங்கினார். அப்பொழுது அவர் மனதில் சில பிராஹ்மணர்களை அழைத்து, போஜனம் செய்வித்தால் தன் பிள்ளையின் ஆத்மாவுக்குத் திருப்தி உண்டாகும் என்று ஓர் எண்ணம் உண்டாயிற்று. அதை யோஜித்துப் பார்க்க மிகவும் சரி என்று அவர் மனதில் பட்டது. பொழுது விடிந்ததும் அமாவாஸ்யை அன்று தன் பிள்ளைக்கு எந்த எந்த பதார்த்தங்களிலிஷ்டமோ அவை அவ்வளவையும் சேகரித்து அவைகளை அவனுக்கு இஷ்டமானபடி பாகம் செய்வித்து, ஏழு ப்ராஹ்மணர்களை அழைத்து, அவர்களுக்கு அர்க்ய, பாத்ய, ஆசமநீயம் கொடுத்து, தர்ப்பாஸனத்தில் அவர்களை உட்காரவைத்து, ச்யாமாகான்னத்தையும் இன்னும் ஸித்தம் பண்ணிவைத்த எல்லா   பதார்த்தங்களையும் உப்பு இல்லாமல் போஜன பாத்ரத்தில் பரிமாறி அமுது செய்வித்து, அவர்களுக்குப் பக்கத்தில் தர்ப்பத்தைத் தெற்குநுனியாக வைத்து அதன்மேல் (தன் பிள்ளையின் கோத்ரத்தையும் பெயரையும் சொல்லி) அன்னத்தால் செய்த பிண்டங்களை வைத்துத் தத்தம் செய்தார். எல்லாம் முடிந்து ப்ராஹ்மணர்களும் அவரவர்கள் க்ருஹங்களுக்குப் போனபிறகு, நிமிக்கு இதுவரை ஒருவராலும் அனுஷ்டிக்கப்படாத கார்யத்தைச் செய்தோமே, அது சரியாகுமோ ஆகாதோ என்று பச்சாத்தாபமும், ருஷிகள் இதைக்கண்டு தன்னைச் சபித்துவிட்டால் என்ன செய்கிறது என்று பயமுமுண்டாயிற்று. இந்தத் துக்கத்தால் மிகவும் வருத்தமுற்று, தன் வம்சகூடஸ்தரான அத்ரிமஹரிஷியை த்யானம் செய்தார். இந்த வருத்தத்தை அறிந்த அத்ரிமஹரிஷியும் உடனே நிமி முன் ப்ரத்யக்ஷமாகி, புத்ர சோகத்தால் வருந்தும் நிமிக்கு ஸமாதானம் பண்ணி ஆதரவான வார்த்தைகளைச் சொல்லி, “ உன் மனஸில் தோன்றி, பிறகு நீ அனுஷ்டித்த கர்மாவானது பித்ருக்களுக்குச் செய்த யாகம்; நீ பயப்படாதே, நீ தபோதனன் அல்லவா, இறந்துபோனவர்களுக்கு இவ்விதம் கர்மா செய்யவேண்டுமென்று ப்ருஹ்மாவாலேயே வெகுகாலத்துக்கு முன் ஸங்கல்பிக்கப் பட்டிருந்தது. நீ செய்த காரியம் ப்ருஹ்மாவால் முன்னமே ஸங்கல்பிக்கப் பட்டதுதான். உன் தபோபலத்தால் உன் மனதில் தோன்றும்படி அவர் அனுக்ரஹித்தார். ஆகையால் நீ செய்தாய். ப்ருஹ்மாவைத்தவிர எவர் இந்தக் கர்மாவை ஏற்படுத்த முடியும்? ச்ரத்தையுடன் செய்கிற கர்மாவாகையால் இதற்கு ச்ராத்தம் என்று பெயர்” என்று சொல்லி, பிறகு அவருக்கு ச்ராத்தம் செய்யும் ப்ரகாரத்தை விஸ்தாரமாய் உபதேசித்துவிட்டு ப்ருஹ்மலோகம் போய்ச்சேர்ந்தார். பிறகு நிமி அதேமாதிரி அனுஷ்டிக்க ஆரம்பித்தார். இவரைப் பார்த்து மற்ற எல்லா ருஷிகளும் செய்யத் தொடங்கினார்கள். அதுமுதல் ச்ராத்தம் உலகத்தில் செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

பிறகு, பித்ருக்கள் என்பவர்கள் எவர்? ஏன் அவர்களுக்கு அந்தப் பெயர் வந்தது? என்று விசாரிப்போம். முன் ஒரு காலத்தில் ப்ருஹ்மா தேவர்களை ஸ்ருஷ்டித்து நீங்கள் என்னை யஜ்ஞங்களால் ஆராதித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். இவர்கள் ப்ருஹ்மா கட்டளையிட்டபடி செய்யாமல் தங்களுடைய இந்திரியங்களை த்ருப்தி செய்துகொண்டு காமபரவசர்களாகி ஜ்ஞான சூன்யர்களாகி விட்டார்கள். இவர்களுடைய நடத்தையைப் பார்த்து ப்ருஹ்மாவும் ஜ்ஞானமில்லாமல் போகக்கடவீர்களென்று சபித்துவிட்டார். அவர்களிருந்த லோகமும் இவர்களைப்போல் ஜ்ஞானமில்லாமல் ஆகிவிட்டது. இந்தத் தேவர்கள் பிறகு வெட்கத்துடன் ப்ருஹ்மாவைச் சரணாகதி செய்தார்கள். அவர் நீங்கள் சரியான நடத்தை யில்லாதவர்களாயிருந்ததால் தபோதனர்களான உங்களுடைய பிள்ளைகளிடம் போய் ப்ராயச்சித்தம் செய்து ஜ்ஞாநோபதேசம் செய்துகொள்ளுங்கள் என்று உத்தரவு செய்தார். தேவர்களும் அப்படியே அவர்களுடைய பிள்ளைகளை ப்ராயச்சித்தம் செய்யும்படி வேண்டிக்கொள்ள, அவர்கள் தங்களுடைய தகப்பனார்களான தேவர்களுக்கு ப்ராயச்சித்தமும் ஜ்ஞாநோபதேசமும் செய்து, “பிள்ளைகளே, போங்கள்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். தேவர்கள், தங்களுடைய பிள்ளைகள் தங்களைப் புத்திரர்கள் என்று சொன்னதால் கோபங்கொண்டவர்களாய் ப்ருஹ்மாவிடம் முறையிட, அவரும் “அவர்கள் செய்ததும் சரிதான். நீங்கள் அவர்களுடைய சரீரத்தை உண்டாக்கினீர்கள். அதனால் நீங்கள் அவர்களுக்குப் பிதாக்கள். ஆனால் அவர்கள் உங்களுக்கு ஜ்ஞானத்தைக் கொடுத்ததால் அவர்கள் உங்களுக்குப் பிதாக்கள் . ஆகையால் அவர்கள் சொன்னது சரிதான் . இதுமுதல் அவர்கள் ஜ்ஞானத்தால் உங்களுக்குப் பிதாவானதால் அவர்கள் பித்ருக்கள் என்று வழங்கப்படட்டும். நீங்கள் தேவர்களென்று வழங்கப்படுவீர்கள்” என்று ஆணையிட்டார். அதுமுதல் அவர்கள் பித்ருக்களானார்கள்.

இந்தப் பித்ருக்கள் ஏழுகணங்கள் அல்லது ஸமூஹங்கள். அவர்களில் நான்கு கணத்தார் உருவை உடையவர்கள். மூன்று கணங்கள் மூர்த்தி இல்லாதவர்கள். ஸுகாலர்கள், ஆங்கிரஸர்கள், ஸுஸ்வதர்கள், ஸோமபர்கள் என்று நாலு கணத்தார்களும் மூர்த்தியையுடையவர்கள். இவர்கள் கர்மத்தால் பிறந்தவர்கள். வைராஜர்கள், அக்னிஷ்வரத்தர்கள், பர்ஹிஷதர்கள் என்று மூன்று கணத்தார்கள் மூர்த்தி இல்லாதவர்கள். தங்களுடைய தர்மபூத ஜ்ஞானத்தால் விபுவாயுமிருப்பார்கள். அணுவிலேயும் ப்ரவேசிக்கச் சக்தி உள்ளவர்கள். தங்களுக்கு இஷ்டமான ரூபங்களை எடுத்துக்கொண்டு ஸஞ்சரிக்கிறவர்கள். இவர்கள் வஸிக்குமிடத்துக்கு ஸநாதன லோகம் என்று பெயர். அதற்குப் பித்ரு லோகம் என்றும் பெயர். இவர்களுக்குப் பித்ருகணங்கள் என்று பெயர்.

நம்மால், நம்முடைய இறந்துபோன பிதா, பாட்டன், ப்ரபிதாமகன் முதலானவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஹவிஸ்ஸு எப்படி அவர்களுக்குப் போய்ச்சேருகிறது? என்றால் இறந்துபோன பந்துக்களுக்கு நேராகப் போவதில்லை. அவைகள் பித்ருக்களுக்குப் போகின்றன. அவர்கள் தங்களுடைய யோகபலத்தால் பூர்புவஸ்ஸுவ: என்னும் பெயருள்ள மூன்று லோகங்களிலிருக்கும் தேவ கந்தர்வ மனுஷ்யர்கள் முதலிய எல்லாப் பூதங்களுக்கும் அவர்கள் எவ்விடத்திலும் எந்த ரூபத்திலிருந்தாலும் அவர்களுக்குச் சேரும்படி செய்கிறார்கள். பீஷ்மர் அவருடைய தகப்பனாருடைய ச்ராத்தம் செய்து பிண்டதானம் செய்யும்போது பூமியைப்பிளந்துகொண்டு ஒருகை வெளியில் வந்து பிண்டத்தைக் கொடு என்று கேட்டது. அதில் அநேக ஆபரணங்களும் கேயூரங்களும் அணியப்பட்டிருந்தன. அந்தக்கை அவருடைய தகப்பனாருடையது. அவர் செத்துப்போவதற்கு முன்னிருந்ததுபோலவே இருந்தது. பீஷ்மரும் இந்தக் கல்பத்தில் பிதா கையில் பிண்டதானத்தைச் செய்வது சரியில்லையென்று நினைத்து பூமியில் தர்ப்பத்தைப் போட்டு அதில் தத்தம் செய்தார். தர்மம் தெரிந்து நடந்ததற்கு அவர் தகப்பனார் சந்தோஷப்பட்டு அவருக்கு ஸ்வச்சந்த மரணம் உண்டாகட்டும் என்று அனுக்ரஹம் செய்து மறைந்துவிட்டார். ஆகையால் நாம் செய்யும் பிண்டதானமும், ஹவிஸ்ஸும், மேற்கூறிய பித்ரு தேவதைகளுக்குப்போய் அவர்களால் இறந்துபோன பந்துக்களான ஜீவாத்மாக்களுக்குச் சேர்ப்பிக்கப் படுகின்றன. இந்த ரஹஸ்யம் மார்க்கண்டேயருக்கு ஸநத்குமாரரால் சொல்லப்பட்டது என்று ஹரிவம்சத்தில் முதல் பர்வத்தில் 16, 17வது அத்யாயங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

நிமி ஏற்படுத்தின ப்ரகாரம் எல்லாரும் ச்ராத்தம் செய்ததும், பித்ருக்கள் ஏராளமான ஹவிஸ்ஸை புஜித்து அஜீர்ணமுண்டானவர்களாய் சந்த்ரனிடம் முறையிட்டார்கள். அவர் ப்ருஹ்மாவிடம் போகும்படி சொல்ல, பித்ருக்கள் ப்ருஹ்மாவிடம் போய்த் தங்களுடைய கஷ்டத்தை நிவிர்த்திக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். அவர் அக்னி பகவான் உங்கள் குறையை  நிவர்த்திப்பார் என்றார்.  பிறகு பித்ருக்கள் அக்னியை வேண்ட, அவரும் இனி ஹவிஸ்ஸுக்களை என்னுடன் புஜியுங்கள், அதிகமான பாகங்களை நான் சாப்பிட்டுவிடுகின்றேன் என்று சொன்னார். அதுமுதல் அக்னியில் ஹவிஸ்ஸானது ஹோமம் செய்யப்பட்டு வருகிறது.

ஆதலால் ச்ராத்தமென்பது ஆதிகாலத்திலேயே வேதங்களான ப்ரமாணங்களைக் கொண்டு, ப்ருஹ்மாவால் அறியப்பட்டு, அவருடைய ப்ரபௌத்ரனாகிய நிமிக்குத் தபோமஹிமையால் ப்ரகாசித்து, அதை, இது ப்ருஹ்மாவினுடைய இஷ்டத்தை அனுஸரித்ததுதான் என்று அந்த நிமி தெரிந்து, தான் அனுஷ்டித்து, பிறரை அனுஷ்டிக்கும்படி செய்த முக்யமான கார்யம். இதில் ப்ராஹ்மணர்களுக்குக் கொடுக்கப்படுகின்றனவும் அக்னியில் ஹோமம் செய்யப்படுகின்றனவுமான த்ரவ்யங்கள் எல்லாம் பித்ருகணங்களென்று சொல்லப்படும் தேவதைகளின் வழியாக நம்முடைய இறந்துபோன பந்துக்களுக்கு எந்த லோகத்திலும் எந்த ஜன்மத்திலும் போய்ச்சேர்ந்து அவர்களுக்கு த்ருப்தியை உண்டாக்குகிறதென்று சாஸ்த்ரங்களில் ஏற்பட்ட வ்யவஸ்தை.  இது இப்படிநிற்க, இறந்துபோன பந்துக்கள் ப்ரபன்னர்களாய் மோக்ஷத்தை அடைந்தவர்களாய் இருந்தால் அவர்களுக்குப் பசி, தாஹம் முதலியது ஒன்றுமில்லாமலிருந்தபோதிலும் சாஸ்த்ரங்களில் ஏற்பட்ட மரியாதையை ஒருவனும் குலைக்கக்கூடாது என்று பகவத்கீதை பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முதலியவைகளில் சொல்லப்படுகிறபடியினால் பகவானுடைய ஆராதனமாக எண்ணி ச்ராத்தங்களைச் செய்யவேண்டியது. அதனால் பகவான் தானே த்ருப்தியடைகிறார். அப்படிச் செய்யாதவர்களுக்குப் பொதுவான சாஸ்த்ர மரியாதையைக் குலைப்பதினாலுண்டாகும் பகவானுடைய கோபமும் அதனால் சிக்ஷையும் வருமென்று பூர்வாசார்யர்களுடைய தீர்மானம்.    

திங்கள், 10 ஜூன், 2013

Saranagati Deepikai Tele-upanyasam (9-6-13)

Natteri swamy’s tele-upanyasam on slokam 17 of Saranagati deepikai can be directly listened to from here

The upanyasam can also be downloaded from this MediaFire link http://www.mediafire.com/listen/bckddqk79gwaxdv/25_Saranagati_Deepilai_(09-06-2013).mp3