திருவல்லிக்கேணியிலிருந்து யாராவது இந்த வலையின் பக்கம் வருபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். ஸ்ரீ ராஜகோபாலன் என்று திருவல்லிக்கேணியில் ஆசிரியப் பணி புரிந்து கொண்டிருந்தவரையோ அல்லது அவர்கள் வாரிசுகளையோ உங்களில் யாருக்காவது தெரியுமென்றால், அந்த ஸ்ரீ ராஜகோபாலன் ஸ்வாமி எழுதி 1972ல் வெளியான 'வைணவ ஆசாரியர்கள்' என்ற நூலை இங்கு இடுவதைத் தெரிவிக்க வேண்டுகிறேன். அருமையான அந்நூல், இன்றைய இளைய சமுதாயத்துக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற ஆசையினால் மட்டுமே இங்கு வெளியிடுகிறேன். அப்படி உங்களில் யார் மூலமாவது அவருக்கோ அவர் வாரிசுகளுக்கோ தகவல் தெரிந்து அவர்களுக்கு ஏதாவது ஆக்ஷேபணை இருந்தால் அடியேனுக்குத் தெரிவிக்கச் சொல்லுங்கள். இனி நூலின் முதல் பகுதியான காப்பு மற்றும் பாயிரம் இவற்றைத் தொடர்ந்து படியுங்கள். நாதமுனிகள் வரலாறு இனிய தமிழ்ப்பாக்களாக நாளை முதல் இங்கு வெளி வரும்.
வைணவ ஆசாரியர்கள்
காப்பு
பதும முகமலர்த்தும் பாவை நகையலர்த்தும்
பதும நயனத்தான் பாதப் – பதுமத்தின்
தேன் காட்டுஞ் செல்வக் குரவன் திருவடியே
தான்வாட்டிச் சார்வினையின் தாள். .1.
திருமகள் கேள்வனாகிய இறைவனின் திருவடிகளின் இனிமையைக் காட்ட வல்லன, குருவின் திருவடிகள்; இவையே நமக்குத் தஞ்சமென்பது குறிப்பு. பதும முகம் அலர்த்தும் பாவை – திருமகள்; இவள் தோன்றப் பதுமம் அலர்ந்தது. பதும நயனத்தான் – செங்கண்மால். இப்பாவையின் நகை இறைவனது நயனங்களாகிய பதுமங்களை அலர்த்தும் என்றும், இவனது நயனங்கள் இவளது நகையை அலர்த்தும் என்றும் இருவிதங்களிற் பொருள் அமைந்தது. தேன் – இனிமை; அப்பொழுதைக்கப்பொழுது ஆராவமுதமான இவனது திருவடிகள்; குரவன் செய்வது – சார்வினையின் தாளை அறுத்துப் பாத பதுமத்தின் தேன் காட்டுவது. சார்வினை – நம்மைச் சாரும் புண்ணிய பாவங்கள்; இவை நீங்கித்தான் நாம் இறைவனை அடைய இயலும் என்பது இங்கு நோக்கு; தாள் – நாளம், பாதம். இதனை அறுத்தால், வினைகள் அறவே மாயும். செல்வன் – இறையவன் திருவடிகளைக் காட்டிக் கொடுத்தலால்.
வேறொன்று மின்றி யெங்கும்ப ரந்த
வெள்ளத்தி னாலி னிலைமேல்
ஊறொன்று காண கிலனாகி நன்ன
ருறங்குஞ்சி றுக்க னொருவன்
வீறொன்று கொண்டு புவனங்க ளுண்டு
வெளியிட்டு மாந்த ருயர
மாறொன்றி லாத நெறியோது மின்ன
மாலோன்க ழல்கள் தொழுவாம். .2.
மக்களிடம் மட்டில்லாப் பரிவு கொண்ட திருமால், மக்கள் உய்யச் செய்தவை, பிரளய காலத்தில் உயிர்களைத் தனது வயிற்றில் ஒடுக்கிக் காத்ததும், பின்பு வெளியிட்டதும், உய்வதற்கு அறநெறி ஓதியதும். வேறு ஒன்றும் இன்றி – வெள்ள நீர் நீங்கலாக வேறொன்றும் இல்லாமல். ஊறு – விளையும் தீமை. தான் ஒரு குழந்தையாய்ப் பெரு வெள்ளத்தில் துயிலும்போது அஞ்சாது துயில் கொள்வான் இறைவன். சிறுக்கன் – மிகச் சிறுவன். ஒருவன் – நிகரில்லாதவன். வீறு – பெருமை, வெற்றி. மாறு – ஒப்பு.
பரிவுற்ற வன்னை தனின்மீப்ப ரிந்து
படியிற்பி றந்த பரமன்
விரிவுற்ற வெய்ய கலியேக லங்க
மெய்யன்பர் தோற்றி யிவர்வாய்
பொருவற்ற செய்ய மொழியிற்பொ லிந்த
போதம்பு கன்று மகிழும்
உருவுற்ற தெங்கு முயர்ஞான மென்று
முள்ளங்கு ளிர்ந்து புகழ்வாம். .3.
இறைவன் பின்னும் பயந்த நலன். தான் பல பிறவிகள் பிறந்தும் பயனிலாமை கருதி, இறைவன் ஆழ்வார்களைத் தோற்றுவித்து இவர்கள் வாயிலாகத் தமிழ்மறையை வெளியிட்டான். அன்னைதனின் –அன்னையினும். மீப்பரிந்து -- மிகவும் பரிந்து. படி – பூமி. மெய்யன்பர் தோற்றி –ஆழ்வார்களைத் தோற்றுவித்து. இவர்வாய் – இவர் மூலமாக. செய்ய – அழகிய, இனிய. மொழி – தமிழ். உயர்ஞானம் எங்கும் உருவுற்றது, உள்ளம் குளிர்ந்து என்றும் புகழ்வாம் என்றியைக்க.
வரையேயி லாத சுடரிற்பி றங்கு
மாலோன்கு ணங்க ளயுதம்
உரையேயி லாத வுருவோடு மாமை
யொளியோடு செல்வ மினைய
புரையேயி லாத தமிழிற்பு னைந்த
ஆழ்வார்கள் பொன்னி னடியே
கரையேயி லாத கடலாம்பி றப்பி
லெழுகின்ற கட்டு மிதவை. .4.
இவனது அருளினாலே தமிழ்மறையை அருளிய ஆழ்வார்களது பொன்னங் கழல்கள், பிறவியாகிற கடலைக் கடக்கப் பயன்படும் தோணியாகும். வரையே இலாத சுடர் – வைகுந்தத்தில் நிலவும் ஒளி. குணங்கள் அயுதம் – கணக்கில்லாத கல்யாண குணங்கள். அயுதம் –பதினாயிரம். உரையே இலாத – விவரிக்க ஏற்ற சொற்கள் இல்லாதவாறு விளங்குகின்ற. மாமை – மேனி, அழகு, நிறம். இனைய – இன்னவற்றை. புரை – ஒப்பு. பொன் இன் அடி—பொன்போற் சிறந்த திருவடிகள். கட்டு – வலியதான. மிதவை—தெப்பம்.
பரிவிற்சி றந்த படிவர்க ளோது
பாவாய தேற லிதனைத்
தெருளிற்சி றந்த முதுவோன்மு கந்து
செகத்துவ்வ வென்று நிகரில்
அருளிற்ப ரப்ப விதுதன்னை யன்பர்
மாந்திக்க ளிக்க வடரும்
இருளைச்சி தைத்த வெதிகட்கி றைவ
னடியிற்ப டிந்து தொழுவாம். .5.
பாவாகிய இவ்வமுதை நாதமுனிகள் திரட்டி அளித்தார்; அறிவின்மையாகிய இருள் மாய்வதற்கு இதனை யதிராசன் –இராமாநுச முனிவன் – உலகினில் வளர்த்ததால் ,இவரது திருவடிகளை நாம் தொழுவோம், நமது நன்றியைத் குறிக்க. படிவர் – தவத்தினர், ஆழ்வார்கள்; தெருள் – சிறந்த ஞானம், முதுவோன் – புலவன், நாதமுனி. முகந்து – நம்மாழ்வார் தமிழ்மறைகளையும் அங்கங்களையும் ஓத, இவற்றை ஏற்று, பட்டோலை கொண்டு. அருளில் பரப்ப – தமது அருளினாலே உலகமெங்கும் பரவச் செய்ய. மாந்தி – நாதமுனி திரட்டிய அமுதினைப் பருகி அழியாத வீட்டின்பம் பெறுமாறு. அடரும் இருள் – எங்கும் நிறைந்த அஞ்ஞான இருள். இருளைச்சிதைத்த ....இறைவன் என்றியைக்க. துவ்வ – உட்கொள்ள, பருக.
பாயிரம்.
மாதவ னளியினில் வளையொடு திண்கதை வாளொளிர் சக்கரமும்
மேதகு தானையர் தம்முதல் நன்மணி வீயிறை வனமாலை
மாதுறு மச்சமும் வரிசிலை யென்றிவண் வந்தவ ரையிருவர்
தாதர ருங்கழல் தகைவன நம்முடை முப்பெருந் தாபமெலாம். .1.
ஆழ்வார்களது அருளிச் செயல்கள் மறைந்திட, இவற்றை வெளியிட்ட நாதமுனி, இவற்றைப் பரப்பிய இராமாநுச முனிவன், இவர்களின் அடியார்களாகிய ஆசாரியர்கள் இவர்களைப் பற்றியது இந்நூல். இவர்களது பெருமையைக் கூறுவதற்கு முன் ஆழ்வார்களது மேன்மை கூறுவது இச்செய்யுள். இறைவனது சங்கம், கதை, வாள், சக்கரம், சேனைத்தலைவன், கௌத்துபம், கருடன், வனமாலை, ஸ்ரீவத்ஸம், சார்ங்கம் இவற்றின் அமிசமாக அவதரித்தவர்கள் பொய்கையாழ்வார் முதலான ஆழ்வார் பதின்மர். அளியினால் –அருளினால். வளை -- சங்கம். கதை –கௌமோதகீ. வாள் – நாந்தகம். நன்மணி – கௌஸ்துபம். வீ – பறவை; வீ இறை – கருடன். வனமாலை –வைஜந்தீ என்பது. மாது உறு – அழகுள்ள. இவண் – பூமியில். ஐயிருவர் – ஆழ்வார் பதின்மர். தாதர் அரும் கழல், தாபம் எலாம் தகைவன என்றியைக்க. பெரும் தாபம் – ஆத்யாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதிதைவிகம் எனப் பெறுந் தாபங்கள்.
மாற னருளினில் வளர்தரு பத்தியி லின்னவர் வண்டமிழாம்
தேற லிருங்கடல் தன்னொடு செறிதரு செம்பொருள் நல்குமவன்
ஏறு புகழினன் எண்ணிலர் மேதைய ரிறையவன் நாதமுனி
தேறு சிந்தைய ருளந்தனில் திகழ்தரு தெய்வத நற்சுடரே. .2.
இவர்களது அருளிச் செயல்களை நம்மாழ்வார் மூலமாகப் பெற்ற நாதமுனியின் பெருமையைக் கூறுவது. இன்னவர் – இந்த ஆழ்வார்களது. தேறல் இருங்கடல் – அமுதமாகிய பெருங்கடல். செறிதரு செம்பொருள் – இக்கடலில் ஆழ்ந்துள்ள உயர்ந்த பொருட்கள் (இரத்தினங்கள்). ஏறு புகழினன் – நாடோறும் உயர்ந்துவரும் புகழ் வாய்ந்தவன். மேதையர் – புலவர். தெய்வத – தெய்வத்தன்மை வாய்ந்த
கலியிருள் மாய்தர விச்சுடர் காட்டிய முந்தைய ரறநெறியே
வலியுற வந்தவர் பங்கய விழியினன் மதியுடை யிராமவரன்
பொலிவுறு புந்திய னியாமுனன் புண்ணிய னெதிபதி யென் றிவர்தம்
மலரடி நல்குவ வளமுடை ஞானமும் மாசில நல்லறமும். .3.
நாதமுனியாகிய இச்சுடர் காட்டிய அறநெறியை விரித்தவர்களை வாழ்த்துவது. முந்தையர் அறநெறி – தொன்றுதொட்டு வந்த வேத நெறி. பங்கய விழியினன் – பங்கஜநேத்ரர் எனப் பெறும் உய்யக்கொண்டார், நாதமுனியின் சீடர். இராமவரன் – ராமமிச்ரர் என்ற மணக்கால் நம்பி; உய்யக்கொண்டாரின் சீடர். இயாமுனன் – யாமுனாரியர்; நாதமுனிகளின் பௌத்திரர்; மணக்கால் நம்பியின் சீடர். இவரது அருளைப் பெற்றவர் இராமாநுசமுனி. இப்பெரியோர்களது திருவடிகள் நமக்கு ஞானத்தையும் நல்ல நெறியையும் நல்குவன.
மகந்தனி லெழுந்த மாலோன் வருகவென் றழைக்க வாங்கே
உகந்தினி தால வட்டத் தொண்டிலே யூன்றி யென்றும்
அகந்தனி லன்பு பொங்க அவனுடன் குலவு மான்றோன்
சகந்தனக் கீச னன்னான் தாளிணை தலையி லேற்பாம். .4.
யாமுனாரியரது சீடராகிய திருக்கச்சி நம்பியை வாழ்த்துவது. மகம் – வேள்வி. மகந்தனில் .... மாலோன் --- பேரருளாளன். வருக என்று அழைக்க – திருக்கச்சி நம்பியைத் தன்பால் அழைத்துத் திருவாலவட்டத் தொண்டிலே ஏவ. குலவும் – இறைவனோடு உரையாடும் பெருமை பெற்றது இங்கு நோக்கு. சகம் – உலகு. சகம் தனக்கு ஈசன் அன்னான் தாளிணை எனப் பிரிக்க.
படியோடு பரந்த விண்ணும் பரவிடு மெதிபன் றாள்கள்
படிதரு முதலி யாண்டான் பாவனன் கூரத்தாழ்வான்
அடுபுல னகைத்த வெம்பா ராமிவ ரடியை யேத்த
மடிதரும் மருளொ டோங்கு மறனதும் பிறப்பு மின்றே. .5.
இராமாநுச முனிவரது திருவடிகளில் பணிந்துய்ந்த சீடர்களை வாழ்த்துவது. படி – பூமி. பரந்த விண் – வைகுந்த நாடு. எதிபன் – எதிபதி. எதிகளுக்கிறைவன், இராமாநுசன். முதலியாண்டான் – இவரது சீடர்களுள் தலைவர், தாசரதி என்ற திருநாமம் வாய்ந்தவர். கூரத்தாழ்வான் – இராமாநுசனது சீடர். அடுபுலன் அகைத்த – மக்களை வாட்டும் ஐம்புலன்களை அடக்கிய. எம்பார் – கோவிந்த பட்டர் என்ற திருநாமம் வாய்ந்தவர். இவருக்குத் துறவறம் அளித்த இராமாநுசமுனி இவரை எம்பார் என்றழைத்தார். மருள் – அறிவின்மை, மயக்கம். மறம் – பாவம்.
நாமுறு நலனை யெல்லாம் நாடுறு மிறைவ னன்பில்
பாமரு தமிழை நல்கி யதுதனைப் படிவர் மூலம்
தேமுறப் பரப்பி நின்றான் சிறந்தது சிந்தை தானும்
ஆமிவ னடிய ரோடு மகந்தனில் தேக்கு தற்கே. .6.
இவ்வாறு ஏற்றமுடைய இந்த ஆசாரியர்கள் இறைவனது அருளினாலே நம்மை உய்விப்பதற்குத் தோன்றியதால், இறைவனுடன் இவர்களை நமது மனத்தினில் தேக்குதல் நாம் செய்வதாம். நாம் உறும் நலனை எல்லாம் – நம்மை உய்விப்பதையே. பாமரு தமிழ் – பாக்களாகிய தமிழ் மறையை. அதுதனை – இந்த மறையை. படிவர் – தவத்தினர், இதுவரையில் கூறிய ஆசாரியர்கள். பரப்பி தேம் உற நின்றான் – உலகில் (ஆலயங்களிலும் வீடுகளிலும்) மகிழ்வோடு மன்னினான் இறைவன்; ஆதலால் நமது சிந்தை சிறந்தது. ஆகலின், நம் அகந்தனில் இவன் அடியரோடு தேக்குதற்கு ஆம் என்றியைக்க. அகம் – மனம்.
கடிபொழில் சூழுங் கண்ண புரந்தனில் தோய்ந்த கண்ணன்
அடியவர் நலன்க ளெல்லாம் அகந்தனி லடர நோக்க
அடியவர்க் கடிய னாமி ராசகோ பால னன்பாற்
படர்புகழ்க் குரவர் தங்கள் வரவினைப் பகர்ந்தனன் காண். .7.
இப்பெருமை வாய்ந்த ஆசாரியர்களது நலனைக் கண்ணபுரத் தெம்பெருமான் நான் உணருமாறு நோக்கியருள, இவர்களைப் பற்றிய இந்நூலை வரைந்துளன். அகம் – மனம். அடர – நிரம்ப. நோக்க – திருக்கண்களால் நோக்க.
மங்கிய மறையை யுயர்த்தவன் நாத
முனிவனும் மதிய னியாமுனனும்
பொங்கிய புகழ னிலக்குவ முனிவன்
புண்ணியன் கச்சி நம்பியொடு
மாண்பன் முதலிகள் தலைவன்
கூரநல் லிறையு மெம்பாராம்
புங்கவர் வாழ்க இன்னவர் நாமம்
புவனியில் வாழ்க நீடூழி. .8.
இந்நூலில் வரும் ஆசாரியர்களை வாழ்த்துவது. மங்கிய மறையை – காலத்தால் மறைந்த தமிழ் மறையை. இலக்குவ முனி –இராமாநுசமுனி. முதலிகள் தலைவன் – முதலியாண்டான். கூர நல் இறை – கூரத்திற்கு அதிபதியாகிய ஆழ்வான். புங்கவர் -- சிறந்தவர். இன்னவர் – இவ்வாறு பெருமை பெற்றவர்களது.
தொன்மறை முடிவும் தமிழ்மறை நயனும்
சுவையெழ வுலகுக் களித்தருளித்
தொன்மறை நெறியைத் துயக்கற வோதித்
தூயவ னரங்கன் செல்வமெலாம்
தன்மனம் படர வளர்த்துல கெங்குந்
தமரினம் வாழ வந்தமுனி
நன்மனம் பொங்க நவின்றிடு மாணை
நானில மெங்கும் நனிவளர்க. .9.
இராமாநுச முனிவனது ஆணை இப்புவியில் என்றும் ஓங்குக என்று வாழ்த்துவது இப்பா. தொன்மறை முடிவும் – அநாதியான வேதமும், வேதாந்தமும். தமிழ்மறை நயனும் – ஆழ்வார்களது அருளிச் செயலின் வளமும். சுவை எழ – மக்கள் நன்கு அநுபவிக்குமாறு, ஸ்ரீபாஷ்யம் முதலிய நூல்களைச் செய்தும், அருளிச் செயல்களுக்கு வியாக்கியை அளிக்குமாறு பணித்தும். துயக்கு அற – சோர்வில்லாமல், மாறுபாடில்லாமல். அரங்கன் செல்வம் எலாம் – திருவரங்கனுக்கு நித்ய நைமித்திகங்கள், இவற்றிற்கென வாய்ந்த நிலங்கள், செல்வம் இவற்றை நன்கு பரிபாலித்து, நன்கு இயங்க ஆணை பிறப்பித்து. திருவேங்கடம், திருநாராயணபுரம் முதலிய திவ்விய தேசங்களில் புரிந்துள்ள தொண்டுகளும் இங்கு நோக்கு. தன் மனம் படர – தான் களிக்க. உலகு எங்கும் தமர் இனம் – திவ்ய தேசங்களிலே அடியார்களது குழாங்கள் மலிந்து, நன்னெறி வளர்ந்து வருவது குறிப்பு. நவின்றிடும் ஆணை – ஸ்ரீரங்கத்தில் கைங்கர்யங்கள் நிகழுங் கிரமத்தை ஓதியது; ஸ்ரீரங்கஸ்ரீ நாடோறும் ஓங்குக என்று அடியார்கள் வாழ்த்துகின்றனர். அடியவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்று ஓதிய பத்து ஆணைகளும் ஈண்டு நோக்கெனவுங் கொள்ளலாகும். "ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா வர்த்ததா மபிவர்த்ததாம்" என்று நாம் என்றும் இறைஞ்சுகின்றோம்.