ஞாயிறு, 12 டிசம்பர், 2021

அடைவு அமைக்கும் அற்புதன் 8

வேதாந்த ஸாரார்த்தம்.

"வேதங்கள் மௌலி விளங்க வியாசன் விரித்த நன்
னூல் பாதங்களான பதினாறு" (பரமதபங்கம் 22) என்றபடி
ஆமூலாக்ரம் பகவத்கல்யாணகுண ப்ரதிபாதகங்களான
வேதாந்தங்கள் சங்காலேசமுமின்றிக்கே விசதமாக ஸ்வார்த்தத்தை ப்ரதிபாதிக்கைக்காக பரம காருணிகனான பாதராயண ப்ரும்மர்ஷியாலே ப்ரணீதமான சாரீரக சாஸ்த்திரத்தினுடைய நாலத்யாயங்களுக்குமுள்ள பதினா றான பாதங்களில் பதினாறு கல்யாணகுணங்கள் அடைவே பதினாறு சரணங்களினாலே ப்ரதிபாதிக்கப்படுகின்றன வென்று ஒரே பாசுரத்தில் அமைத்து அருளிச் செய்திருக்கும் பேசுபய வேதாந்த தேசிகனின் வல்லமைக்கு நிகருண்டோ? நிகமாந்தாசாரியனே இங்ஙனம் இயம்ப இயலும். அத்விதீயமான அத்திருப்பாசுரம் அறிஞர் அநுபவத்துக்காக இங்கு தரப்பெறுகின்றது.


சித்தசித்தென விரித்துரைத்தன
     அனைத்தமைத் துறையுமிறைவனார்
     சிறிய பெரிய வுருவுடைய வுடலமென
     நடல மில திலகு நிலையினார்
சித்திரத் தொழிலை யொத்த பத்தரொடு
     முத்தர்பித்தியெனுமுணர்வினார்.
     சிதைவின் மறைநெறியிலெறிய வுரு முறைகள்
     முறிய சிறையரிய நிறைவினார்
கத்துவிக்கவல தத்துவித்தை வழி
     கற்றவர்க்கசைவின் மாயனார்
     கபிலர் கணசரணர் சுகதர் சமண ரரர்
     வழிகளழியு மருண்மொழியினார்
கத்திலக்கிலு மருக்குலத்திலும்
     அசித்தி லொக்குமொரு முதல்வனார்
     கரணமிடு கடிய பதினொரிருடிகமும்
     அடைய முடியுமடி யிருடியார்
ஒத்தனைத் துலகு மொற்றியொற்றி வரும்
     இப்பவத்திசை யினிசைவினார்
     உருவ மருவமெனு முலகின் முடகிலதில்
     உவமை யில திலகு தலைவனார்
உத்தமப்படி வகுத்த வித்தைகளில்
     உத்தரிக்க வுணர் குணவனார்
     உரிய கிரிசைகளிலரியதொரு விரகு
     தெரிய விரையு மவர் பரிவினார்
சத்தசத்தெனு மனைத்தணைத்தவினை
     தொத்தறுக்கவல துணிவினார்
'    சரியுமளவிலுரி யவரையறிவரிய
     தமனி நெறி சொருகு விரகினார்
தத்துவத்திரளு தைத் துதைத் தடவு
     தத்துவிக்குமவர் தலைவனார்
     தருகவுணருமவர் சரணமனுகவிட
     லரிய வருள் வரதரடியமே.
         - (அத்திகிரி மான்மியம், 19)

சாரீரக சாஸ்த்ர ஷோடசபாதீ ப்ரதிபாத்ய குணங்களை
'ஸ்ரஷ்டா தேஹீஸ்வநிஷ்டோ நிரவதி மஹிமா பாஸ்த தோஷ ச்ரிதாப்த:   காத்மா தெரிந்த்ரியாதே ருசித ஜநந க்ருத்ஸம்ஸ்ருதௌ தந்த்ரவாஹீ| நிர்த்தோஷ த்வாதி ரம்யோ பஹுபஜநபதம ஸ்வார்ஹ காம்ப்ரஸாத்ய: பாபச்சித் ப்ரஹ்மநாடீ கதிக்ருத திவஹந் ஸாம்யதச் சாத்ரவேதய:
என்பது அதிகரண ஸாராவலி உபக்ரமத்திலே அநுக்ரமித்த படி.  இப்பாசுரத்தில் இதன் அடைவை அமைத்துள்ள அழகினைக் காட்டுவாம்.
 
(1) "சித்து அசித்து என விரித்து உரைத்தன அனைத்து
அமைத்து உறையும் இறைவனார் - சேதனங்கள் அசேதனங்கள் என்று விஸ்தரித்துச் சொல்லப்பெற்றவை யான எல்லா வஸ்துக்களையும் ச்ருஷ்டித்து அவற்றில் வஸிக்கும் ஈசுவரன். இத்தால் முதல் பாதத்தின் அர்த்தம் என்று ஸங்க்ரஹிக்கப்பட்ட "ஸ்ரஷ்டா " (சிருட்டிப்பவன்) என்பது அருளிச் செய்யப்பட்டதாயிற்று.

(2) "சிறிய பெரிய உரு அடைய உடலம் என நடலம்
இலது இலகு நிலையினார்" - ஸூக்ஷ்மங்களான ஸ்தூலங்களான ரூபங்களையுடைய வஸ்துக்களெல்லாம் சரீரம் என்னும்படி தோஷம் இல்லாமல் விளங்கா நிற்கிற ஸ்திதியையுடையவர். இரண்டாம் பாதார்த்தமான தேஹி" (ஸகல சேதனாசேதனங்களையும் தனக்கு சரீரமாக வுடையவன்) என்பது நிரூபிதம்.

(3) "சித்திரத் தொழிலை ஒத்த பத்தரொடு முத்தர்
பித்தி எனும் உணர்வினார்"- சித்திரம் எழுதுவதாகிய வியாபாரத்தோடே ஸத்ருசமான பக்த ஜீவர்களுடன் முக்தர் களான - ஜீவர்களும் சுவர் என்று சொல்லப்படுகிற (இவற்றிற்கு ஆதாரமாகிய) ஸங்கல்ப ரூபஜ்ஞானத்தை உடையவர். மூன்றாம் பாதார்த்தமான "ஸ்வநிஷ்ட:" (தன்னை யொழிந்த மற்ற எல்லா வஸ்துக்களையும் தன்னுடைய ஸ்ங்கல்பத்தின் ஏகதேசத்தினால் தாங்கிக் கொண்டிருப்பவன்) என்பது நிரூபிக்கப்பட்டதாகின்றது.

(4) "சிதைவில் மறைநெறியில் எறிய உருமுறைகள்
முறிய சிறை அரிய நிறைவினார் "-அபௌருஷேய மாகையாலே ப்ரமம் முதலிய தோஷங்களினால் சிதைவில்லா . வேதமார்க்கத்திலே ஆரூடங்களான அசேதனங்களுடைய கிரமங்கள் (ஸங்கோசம், விகாசம், விகாரம், நாசம் முதலியவை முறிந்துபோகுமாறு (அவை தன்னிடத்தில் இருக்காதவாறு ஸங்கோசம் செய்யமுடியாத குணபூர்த்தியை உடையவர். இத்தால் நாலாவது பாதார்த்தமான"நிரவதி மஹிமா" ("நினைந்தஎல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே ... உன் பெருமை" என்கிறபடியே எல்லையில்லாத பெருமையுடையவன்) என்பது நிரூபிக்கப் பெற்றதாகிறது.

(5) "கத்துவிக்கவல கத்துவித்த வழி கற்றவர்க்கு அசைவில மாயனார்" - ஜல்ப விதண்டாவாதங்களைச் செய்ய ஸாமர்த்யத்தையுடைய அப்படிப்பட்ட வாதங்களை அப்யஸித்தவர்கட்கு அவர்கள் வாதங்களினால் அசைக்க முடியாத விசித்திர சக்தியுடையவர். ஐந்தாவது பாதார்த்த மாகிற அபாஸ்த பாத:" (யுக்திகளினாலும் 'ஸாங்க்யஸ்ம்ருத் யாதிகளினாலும் சலிப்பிக்க முடியாதது) என்பது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

(6) "கபிலர் கணசரணர் சுகதர் சமணர் அரர்வழிகள்
அழியும் அருள் மொழியினார்" - கபிலருடைய மதாநுஸாரிக
ளான ஸாங்க்யர்கள், கணாதமதாநுஸாரிகள், பௌத்தர் கள், ஜைனர்கள், பாசுபதமதாநுஸாரிகள் இவர்களுடைய வழிகள் நசிக்கும்படியான கிருபையினால் சொல்லப்பட்ட வார்த்தையையுடையவர். (கபிலாதிகளுடைய மதங்கள் வேதவிருத்தங்களானபடியால் அப்படி விரோதமின்றிக்கே தன்னை ஆச்ரயித்தவர்களிடத்தில் கிருபையினால் தன்னால் உபதேசிக்கப்பெற்ற சாஸ்த்ரத்தை யுடையவர். எனவே கபிலாதி சாஸ்த்ரங்களைக் கொண்டு அநாச்ரிதர்களை மோஹிப்பிப்பதும் ஸாத்விகமான பாஞ்சராத்திர சாஸ்த்ரத்தைக் கொண்டு தன் ஆச்ரிதர்களை ரக்ஷிப்பதும் செய்கிறான்) இத்தால் ஆறாவது பாதத்தின் அர்த்தமான
'' ஶ்ரிதாப்த:" (தன்னுடைய ஆச்ரிதர்களுக்கு ஆப்தன்) என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.

(7) 'கத்து இலக்கிலும் அருக்குலத்திலும் அசித்தில் ஒக்கும் ஒரு முதல்வனார்''-- இந்திரியங்களில் லக்ஷ்யங்களான
(இந்திரியங்களால் அறியப்படுமவைகளான ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்களிலும்) இந்திரியங்களால் அறியப்படாத ஜீவவர்க்கத்திலேயும் கீழ்க்கூறப்படாத மஹான் முதலிய அசேதன வஸ்துக்களிலும் ஸமமாயிருக்கிற அத்விதீயமான காரணபூதர் (பிரகிருதியுடைய ஸாக்ஷாத் விகாரமான மஹத் தத்வத்திலே போல பரம்பராவிகாரமான பூததந்மாத்ர பஞ்சகத்திலேயும் விகாரமில்லாத ஜீவ வர்க்கத்திலேயும் ஸாக்ஷாதேவ நிமித்தோபாதாந பூதரானவர்) இத்தால் ஏழாம் பாதத்தினுடைய அர்த்தமான "காத்மா தேருசித ஜநந க்ருத்" என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.


(8) 'கரணம் இடு கடிய பதினொரு இருடிகமும் அடைய முடியும் அடி இருடியார் -- சக்ஷுராதி இந்திரியங்களை பிரவேசிக்கும்படி செய்வதற்கு அசக்யங்களான (அவற்றிற்கு விஷயமில்லாத) பதினொரு இந்திரியங்களும் எல்லாம் நசிக்கும்படியான ஆதிகாலத்தில் கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களை ஸாக்ஷாத்கரித்துக் கொண்டிருக்கும் ரிஷி யாகிய பகவான். -இத்தால் எட்டாம் பாதத்தின் அர்த்தமான 'இந்த்ரியாதே ருசித ஜநந க்ருத்' என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.


(9) "அனைத்து உலகும் ஒத்து ஒற்றி வரும் இப்பவத்து இசையும் இசைவினார்" - ஸமஸ்த லோகங்களிலேயும் ஸமமாக இருந்து மேன்மேலென விருத்தி அடைந்து வருகிற (ஒன்றை அநுஸரித்து மற்றொன்றாக கர்மம், அவித்யை, வாஸனை, ருசி, ப்ரக்ருதிஸம்பந்தம் என்பவை சக்கரம் போல் ஒன்றின் பின் ஒன்றாய் வருகிற) இந்த ஸம்ஸாரத்தில் தானும் அவற்றுடன் சேர்ந்திருக்கும்படியான அங்கீகாரத்தை யுடையவர். (அவரவர்களுடைய கர்மாநுகுணமாக அவரவர்கள் ஸம்ஸரிக்கும் பொழுது தானும் கூட இருந்து நடத்துபவன்). இத்தால் ஒன்பதாம் பாதத்தின் அர்த்தமான ஸம்ஸ்ருதௌ தந்தரவாஹீ என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.

(10) "உருவம் அருவம் எனும் உலகில் முடகு இல் எனில் உவமை இலது இலகு தலைவனார்" -- ரூபத்தையுடைய சேதனவஸ்துக்கள் ரூபம் இல்லாத அசேதன வஸ்துக்கள் என்று சொல்லப்படுகிற லோகங்களில் இருக்கச் செய்தே ஸங்கோசம் இல்லாதவன் என்கிற விஷயத்தில் உபமானம் இல்லாதபடி விளங்குகின்ற பிரதாநபூதர். (சேதனாசேதன வஸ்துக்களுடன் கலந்திருக்கச் செய்தேயும் அவற்றினுடைய தோஷங்கள் தன்னிடத்தில் தட்டாதபடி பிரகாசிக்கிறான்.) இத்தால் பத்தாம் பாதத்தின் அர்த்தமாகிற நிர்தோஷத்வாதி ரம்ய;  என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.

(11) "உத்தமப்படி 'வகுத்த வித்தைகளில் உத்தரிக்க உணர் குணவனார்"-- உத்தம ப்ரகாரத்தாலே (பரம புருஷார்த்த ஸாதனமாக) பிரித்துச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு ப்ரும்ம வித்யைகளில் ஸம்ஸாரத்தில் நின்றும் உத்தாரணம் செய்வ தற்காக அந்தந்த வித்யா நிஷ்டர்களினால் அநுஸந்திக்கப் படுகிற குணத்தையுடையவர். பதினோராம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட பஹுஜன பதம் (அநேகம் விதங்களான உபாஸனங்களுக்கு விஷயமானவர்) என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.

(12) " உரிய கிரிசைகளில் அரியது ஒரு விரகு தெரிய விரையுமவர் பரிவினார்'' -- அவரவர்கள் வர்ணாச்ரமத்திற்கு உசிதமான நித்ய நைமித்திக காம்ய கர்மங்களில் அநுஷ்டிக்க முடியாததான ஒரு உபாயத்தினால் (பலாபி ஸந்தியில்லாமல் ஸாத்விக த்யாகத்துடன்    அநுஷ்டிப்பதினால்) தன்னை உள்ளபடி அறிந்து கொள்ள த்வரிக்குமவர்களிடத்தில்  கிருபையை உடையவர். இத்தால் பனிரெண்டாம் பாதத்திற்கு அர்த்த மான ''ஸ்வார் ஹ கர்ம ப்ரஸாத்ய:" என்பது நிரூபிக்கப்பட்ட தாகிறது.

(13) ' சத்தசத்தெனு மனைத்தணைத்தவினை தொத்தறுக்க வலதுணிவினார் -- புண்ணிய ரூபங்களான ஸத்துக்கள் பாப ரூபங்களான அசத்துக்கள் என்று சொல்லப்பட்ட ஸமஸ்தங்களான ஆத்மாவைச் சூழ்ந்து கொண்டிருக்கிற இரண்டு வித கர்மங்களுடைய ஸம்பந்தத்தை சேதிக்கச் சக்தமான நிச்சயத்தையுடையவர். (இவனுடைய ஸங்கல்பமுண்டாகில் வேறு தடுப்பாரில்லை). இத்தால் பதின்மூன்றாம் பாத அர்த்தமான 'பாபச்சித் என்பது நிரூபிக்கப்பட்ட தாயிற்று.

(14) "சரியுமளவில் உரியவரை அறிவரிய, தமனிநெறி சொருகுவிரகினார்" --- தேகந்தளருங் காலத்திலே (சரீர விச்லேஷ சமயத்தில்) அர்ச்சிராதி கதியாலே போகக்கூடிய யோக்யதை யுடையவர்களை பகவத் கடாக்ஷத்தாலன்றி அறிய முடியாததான நூற்றோராவதான ப்ரும்ம நாடியில் பிரவேசிக்கும்படியான உபாயத்தை அறிந்தவர்.  இத்தால் பதிநாலாம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட "ப்ரஹ்ம நாடீ கதிக்ருது'' என்பது நிரூபிக்கப்பட்டதாகிறது.

(15) "தத்துவத்திரள் உதைத்து தைத்து அடைவு தத்து விக்கு மவர் தலைவனார்" -- பிராகிருத தத்துவங்களினுடைய ஸமூஹத்தை பாதங்களாலே ஆக்ரமித்து கிரமத்தில் பிரகிருதி மண்டலத்தைத் தாண்டுவிக்குமவரான அர்ச்சிஸு முதலிய ஆதிவாஹிகர்கட்கு நியாமகர். இத்தால் பதினைந்தாம் . பாதார்த்தமான அதிவஹந்' என்பது நிரூபிக்கப்பெற்றது.

(16) "தருக வுணருமவர் சரணம் அணுக விடல் அரிய அருள் வரதர்" -- தங்களுக்கு அவன் திருவடிகளிலே அது பாவ்யமாகக் கொடுப்பதற்காக ந்யாஸோபாஸனாதிகளைச் செய்யுமவர் அவனுடைய திருவடிகளைக்கிட்டி அநுபவிக்கும் பொழுது விடுவதற்கு அசக்யமான கிருபையாலே ஸகல புருஷார்த்த ப்ரதரான பேரருளாளர். இத்தால் பதினாறாம் பாதத்தின் அர்த்தமாக ஸங்க்ரஹிக்கப்பட்ட "ஸாம்யத:" என்பது நிரூபிக்கப் பட்டதாகிறது.
     பரமபதத்தில் பகவானுடைய கல்யாண குணங்களுக்குத் தோற்று அடிமை செய்தாலும் அபஹதபாப்மத்வாதி குணங்களின் ஆவிர்பர்வத்தினால் பரமாத்மாவுக்கு ஸத்ருசனாகவிறே இவன் இருப்பது என்று தாத்பர்யம்.

    வேதாந்த சாரார்த்தத்தை என்றும் பதினாறெனத் திகழும் வண்ணம் வேதாந்தாசாரியனே இங்ஙனம் செந்தமிழ்க் கவியில் கவினுற வமைத்துள்ளார்.