திருவருட்சதகமாலை ---நேற்றைய தொடர்ச்சி
பாந்த ளெனுங்கொடி வேந்தவை யார்ந்திடு
பாண்டவ ரின்கொடியைப்
பூந்துகில் வாங்கிட வாங்குட னோங்கிடு
பூந்துகி லீந்தவனூர்
சேந்தனொ டார்ந்துமை காந்தனு நான்மறை
தேர்ந்த வயன்சுரர்கள்
வேந்தனு மீங்குறு மாந்தரு மேய்ந்திடு
வேங்கட மாமலையே!
[ சந்தவிருத்தம் 97 ]
நேத னாதிப சீரக யாதவா!
கீத மோகன வாடவ மாதவா!
வாத மாவட வானக மோதகீ
வாத யாகர சீபதி நாதனே!
[மாலைமாற்று, மஹாவித்வான் ஸ்ரீ அனந்தகிருஷ்ணையங்கார்
திவ்யதேசப் பாமாலை]
மரகத விகசித வொளிதவ என்ற சந்தம்
அரதன மணிநிறை சினகர மதினொளி
யவிர்தரு மரகத சிலையென வுறைதரு – மாதி செக சோதி
அரயனய னிமையவர் முனிவரர் திரளொடும்
அனுதின முறையிட அருள்புரி திருவுறை – யாகன் பட நாகன்
வளையொடு மனலுமிழ் திகிரிகை யிடவல
மருவிட வருளன வரதமு நிலவிய – மாயன் அச காயன்
தளையவிழ் துளவொடு பரிமள மலரணி
தருமது கரநிரை தழுவிய மலர்புரை—தாளன் கதிர் வாளன்
ததியெது வெதுவென அகலிட முறைபவர்
சமரச நிலையொடு வழிபட வருள்பிர – தாபன் பத்ம நாபன்
மதிமுக வனிதையர் மயிலென வனமென
மடநடை பயில்தர மருவினர் பணிமணி – வண்ணன் என தெண்ணன்
கதியென முறையிடு கரிமுகம் விரைவொடு
கரவடு மொருமுத லெனவரு மறைபகர் – கத்தன் பரி சுத்தன்
கணபண மணியுர கரும்வெரு விடவரு
கருடன திருபுய மலைமிசை யுறையதி – காரன் அவ தாரன்
மணமரு வியதரு வுறைபவர் புகழொடு
மறையென வருதமிழ் மறைகளை யுதவிய – மாயன் றிரு நேயன்
குணமணி நவமணி சுரமணி யழகிய
குலமணி செபமணி மரகத மணியருள் – கண்டோன் புவி யுண்டோன்
திருமக ணிலமகள் அலர்மக ளெனுமிவர்
திரண்முலை நெருடிய அழகிய புயமுறு – தேசன் பவ நாசன்
உருவென அருவென ஒருவகை யிலதென
உயர்வற வுயர்நல முடையவ னெனமறை – யோதும் எந்தப் போதும்.
[ அனுமந்தன்பட்டி மதுரகவி ஸ்ரீநிவாஸ ஐயங்கார், திருமலைச்சிந்து]
உலகில் மானிடப் பிறவியை யெடுத்து மூவிரண்டறிவுடைய சேதனருக்கு அன்னையாய் அத்தனாய் நின்று இன்றியமையா வின்பத்தையும் இதத்தையும் சிந்தித்து நடத்தி வருகின்றவன் திருவின் கேள்வனாகிய திருநாராயணன். அவனே அகாரவாச்யன். அவனே உயர்வறவுயர் நலம் உடையவன். அவன்தான் அயர்வரும மரர்கட்கதிபதி. அவ்வெம் பெருமானால் இடப்பட்டுள்ள கட்டளையைச் சற்றேனும் பொருட்படுத்தாமல் உல்லங்கனஞ் செய்வதின் காரணத்தினாலேயே ஜீவராசிகள் மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து வருந்துவதல்லாமல், கரை காண அரியதொரு துக்கத் தாலும் துடிக்க நேரிடுகின்றது.
இவ்வாறு இடுக்கணுற்று அல்லலால் திரிகின்ற சேதன வர்க்கத்துக்கு அவசியம் தேடிக் கொள்ளவேண்டுவது அப்பரந்தாமனது திருவடிப் பேறேயாகும். திருமகளோ டொருகாலும் பிரியாநாதனும், எண் பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறிலவண் புகழ்த் திருநாரணனும் ஆகிய அத்திருமாலின் திண்கழலே சேதுவெனச் சேர்தலே சிற்றுயிர்க்குற்ற நற்றுணை. உள்ளம், உரை, செயல் என்ற இம்மூன்றும் ஒன்றிச் செய்யும் வழிபாடே நற்பயனளிக்கும். திருமாலே பரனென்றுணர்ந்து அவ்வெம் பெருமான் பாதாம்புயத்தைப் பற்றுவதே கற்றதனாலாய நற்பயன். அத்திருவடிப்பேறே பரமபோகமானதும் போக்கியமானதுமல்லாமல் வேறொருதுணையில்லை யென்பது அனைவரும் நன்றாக அறிந்தவையே யாகும்.
அச்செங்கண்மால் திருவுள்ளக் களிப்படைந்தாலன்றி, நமக்கு அவன் கருணையுண்டாகாமை திண்ணம். அவ்வறத்தின் மூர்த்தியினது கருணையை அடைவதற்கு உரிய சன்மார்க்கத்தை நமது மூதாதையர்களும் முற்றத் துறந்த முனிச்சிரேட்டர்களும், சாத்திரங்களினாலும் புராண இதிகாசங்களினாலும் ஐயந்திரிபறக் காட்டியுள்ளனர். ஆயினும், அச்சான்றோர்களினாலே காட்டப்பெற்றுள்ள சிரவணம், மனனம், தியானம் என்கின்ற மூவகையதான உபாயங்களில், சிரவணமும் மனனமும் சிறந்த உத்தம அதிகாரியாக விருப்பவர்களுக்கே பெரிதும் பயன்படுவதாகும். அவ்வாறன்றிப் பொதுவாக அனைவருக்கும் அவை பயனளிக்க வியலாமையைச் செவ்வனே அறிந்த நமது முன்னோர்கள் தாமே வெகு நாட்களாக ஆய்ந்து அறிந்து, பள்ளத்தில் விழுந்து பரிதபிக்கும் நம்மைக் கரையேற்றக் கருதிக் காருணியம் ததும்பிய கள்ளமில்லாவுள்ளத்தினராய் ஸ்தோத்திரம் என்ற ஒரு நல்விளக்கை ஏற்றி வைத்தனர். இங்ஙனம் ஏற்றி வைத்த ஞானச்சுடர் விளக்கை வைத்தும் போற்றுவதற்கும் அதிகாரி பேதம் கிடையாது. வைராக்யாதி அனுஷ்டானங்களுக்குந் தேவையில்லை. இத்தோத்திரங்களைப் படிக்கத் தொடங்குகையிலேயே விலக்ஷணமான ஒரு பக்தி விசேஷம் மனத்திலே தோன்றி பரமானந்தத்தை அளிக்கின்றது. இவ்வானந்தமே எம்பெருமானது மனத்தை அதிசுலபமாகக் கரைத்துக் களிப்பினைத் தர வல்லதாகும். இதன் பெருமையை வேதங்களும் இதிஹாஸங்களும் புராணங்களும் உத்கோஷித்து உரைக்கின்றன.
ஆயின், பல நூல்களை ஆராய்ந்தறியின் ஒவ்வொரு யுகங்களில் ஒவ்வொரு உபாயமே தலை சிறந்து விளங்கி எங்கும் பிரகாசமாயுள்ள கடவுளை யடையச் சாதகமாக விருந்ததெனப் புலனாகின்றது. கடையுகமான இக்கலி யுகத்திலோ ஸ்துதிப்பதே சிறந்ததென்று நூல்களிலே கூறப்படுதல் இங்கே அறிதற்பாலது. அவ்வாறு அறிதற்கண்ணும், நவீனமாய்த் தான்தோன்றியாகச் சிற்சில சொற்களை வரிசைப்படத் தொடுத்து, இது சொற்சுவை பொருட்சுவை கொண்டு மிளிர்வதென வியந்து துதிபுரிவதைக் காட்டினும், அறிவானும், ஆசாரத்தானும், தெளிவானும் மங்காப் பெருமையுற்று விளங்கிய ஆழ்வார்கள் ஆசாரியர்கள் பரமகிருபாதிசயத்தாலே திருவாய் மலர்ந்தருளிப் போந்த அருளிச் செயல் ஸ்தோத்திராதிகளைக் கொண்டு போற்றுவதே அரவிந்த லோசனனது அருட்கும் மனத்திற்கும் பெரியதொரு மிக்க உகப்பை அளிப்பதாகும். ஆகையால், ஞான பக்தி வைராக்யாதிகளினாலே 'குன்றின் மேலிட்ட விளக்கு' எனப்பொலிந்த நம் தொல்லாசிரியர்கள் திருவாக்கிலிருந்து வெளிப்போந்த ஸ்தோத்ர ப்ரவாகத்திலேயே நாம் தலைமண்டிக் கிடப்போமாயின் அரியதொரு பேற்றையடைவது மல்லாமல் இம்மை இன்பத்தினும் எழில் பெற்று வாழலாம்.
உலகம் வாழவேண்டுமென்ற உத்தம நோக்கத்துடன் சீரார் தூப்புற்றிருவேங்கடநாதன், பிராகிருதம், ஸம்ஸ்கிருதம், தமிழ் முதலிய பாஷைகளில் பாலர் முதல் கற்றுக் கடைத்தேறும் வண்ணம் அநேக கிரந்தங்கள் அருளிச் செய்துள்ளார். இம்மறைமுடித் தேசிகனார் வடசொற்கெல்லை தேர்ந்தவராகலின் வடமொழி வல்லார் சந்தமிகு தமிழ்த்திறனை அறிந்துய்தற் பொருட்டு, இத்துறைகள் தாங்கி நிற்கும் தோத்திரங்களை வடமொழியில் யாத்துள்ளார். அவற்றைத் தமிழ் மக்கள் உணர்ந்து இன்புறுவதற்காக சில தோத்திர நூல்களைச் செய்ய தமிழ் மாலைகளாக முன்னரே இத்திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தார் வெளியிட்டுள்ளனர். அவற்றுள் "திருவருள்மாலை" (வெளியீடு 13. 14-11-1942) என்பது ஒன்று. அம் மாலைப் பிரதிகள் செலவாகி விட்டபடியாலும் அன்பர்கள் அம்மாலையை நோக்க அவாவுறுதலானும் அங்குள்ள "முகவுரை" "முன்னுரை" இரண்டும் இங்கு தரப் பெறுகின்றன.