பங்குனி உத்ஸவத்தின் ஆறாம் நாளான இன்று பெருமாள் தாயார் திருக்கல்யாணம். மற்ற எல்லா இடங்களிலும் பங்குனி உத்திரத்தன்று தானே சேர்த்தி? இங்கு மட்டும் ஏன் முன்னால்? மற்ற ஊர்களிலில்லாத ஒரு தனிப் பெருமை எங்கள் தாயாருக்கு! பெருமாளால் தாயாரைப் பார்க்காமல் ஒரு வாரத்துக்கு மேல் தாங்காது. பிரதி வெள்ளிக்கிழமை தோறும் தாயார் ஸந்நிதிக்கு ஓடி வந்து அன்று பூராவும் தாயாரிடம் இருந்து மகிழ்ந்து இரவில் ஊஞ்சல் ஆடிக் களித்து நம்மையும் பரவசப்படுத்தி ஆஸ்தானம் திரும்புவார். அதனால் பிற ஊர்களில் உத்திரத்தன்று சேர்த்தியும், ப்ரளய கலகமும் நடந்தால், இங்கோ அன்று ப்ரளய கலகம் மட்டும், அதுகூட சில வருடங்களில் மறுநாள்கூட, நடக்கும். சரி!திருக்கல்யாணத்துக்கு வருவோம்.
மாலையில் பெருமாள்
மானவி லிறுத்து மிதிலாபுரிச் சனகேசன்
மகளை முன்மணம் புணர்ந்து
மாதங்கமே றியேமாதவர் துதிக்க நீ
மணிமருகில் வந்த தென்னத்
தான மும்மதமொழுகு மதயானை யேறியே
தாமரைக் காடு பூத்துத்
தயங்குமொரு பச்சைப்பருவ முகில் வருவ
போற் தாரணியெலாம் வழுத்த
மேனகை திலோத்தமை யிந்திராணி யுருவசி
வெண்கவரிவீச மென்பூ
மேலிருந்தவளை நன்மணம் புணர்ந்தே தும்பை
வேரி மணமாலை சூட்டித்
தேனலரு நறுமலர் விதான நாற்றியமணிச்
சிறு சாளரங்கள் சூழ்ந்த
செம்பொன் மணிமேடை சூழ்புல்லாணி வீதி
களிலே
திருவீதிப்புறப்பாடு கண்டு கோயில் திரும்பி தன்னை எதிர்பார்த்துக் காத்திருந்த தாயார் எதிரில் வந்து நிற்க, இராமநாதபுரம் ஸமஸ்தானம் திவான், மணமகன், மணமகள் இருவருக்கும் புத்தாடைகள், ஆபரணங்கள் கொண்டு வந்து சமர்ப்பிக்க, பெருமாளிடமிருந்து புது வஸ்திரங்களும், திருமாங்கல்யமும் பெற்று அர்ச்சகர்கள் அதை தாயாருக்கு சேர்த்து மீண்டும் தாயாரிடமிருந்து மாலைகள் பெருமாளுக்கு சமர்ப்பித்து திருக்கல்யாணம் இனிது நிறைவு பெற்றது. அவ்வளவுதானா! என ஆச்சர்யப்பட வேண்டாம். மிகச் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். நேரில் பார்த்து ஆனந்தப் பட வேண்டும்.
ஆனால் எங்கள் ஊர் திருக்கல்யாணத்தின் மூலம் பெருமாள் உலகுக்கு உணர்த்தும் முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அந்த நாளில் மிக விவரம் அறிந்தவர்கள் நிறைந்திருந்த நாளில் மிக விரிவாக, இப்போது பல இடங்களில் நடப்பதுபோல், ஹோமங்கள் செய்து திருக்கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்தியிருக்க முடியும். ஏன் செய்யவில்லை? பெருமாளின் திருவுளம் ஆடம்பரம் ஒழிமின் என்று உலகத்தார்க்கு அறிவுறுத்துவதற்காகவே இப்படி படு சிம்பிளாகத் தனது திருக்கல்யாணத்தை நடத்திக்கொள்கிறான் போலும்.
அவன் எவ்வளவு கருணாவத்ஸலன் பாருங்களேன். முந்தைய பதிவில் ஆந்திர மாநில ஸேவார்த்திகளை ஊக்குவிப்பார் யாருமில்லை என எழுதியிருந்தேன் இல்லையா? இது அவன் திருச்செவி சாற்றிக் கொண்டான் போலிருக்கிறது. திருக்கல்யாணத்துக்கு இராமநாதபுரத்திலிருந்து சுமார் 400 பேர் திரண்டு வந்திருந்தனர். LIC நாராயணன் என்று ஒருவர். இராமநாதபுரம் ஸ்ரீகோதண்டராமன் ஸந்நிதியில் ஸ்ரீராமபக்த சபை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் பிரமிக்கத்தக்க கைங்கர்யங்களை அனாயாஸமாகச் செய்து வருபவர். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே தினம் வந்துகொண்டிருந்த ஸேவார்த்திகள் இன்று தினமும் நூற்றுக்கணக்கில் வருகிறார்களென்றால் இவரது அபார முயற்சியே காரணம். தான் மட்டும் செய்வதில்லை. எல்லோரையும் ஊக்குவித்து அனைவரையும் கைங்கர்யங்களில் ஈடுபட வைப்பது இவர் ஸ்பெஷாலிடி. இந்த நாராயணன் பிரசாரத்தாலே திருக்கல்யாணம் ஸேவிக்க வந்தவர்கள், ஆந்திர மாதர்களின் கோலாட்டங்களைப் பார்த்து வியந்து பாராட்டி அவர்களை உற்சாகப் பட்டுத்தி அவர்களை மன நிறைவடையச் செய்தனர்.
வீடியோக்கள் தொடரும். எங்கள் ஊர் மேல் “ஆற்காட்டார்” விசேஷ கவனம் செலுத்துவதால் இரவில் போன கரண்ட் இப்போதுதான் வந்தது. போன பாரா எழுதும்போது போய் விட்டது.