சனி, 21 ஜூலை, 2007

ஸ்ரீ வேதாந்ததேசிக வைபவப்
பிரகாசிகைக் கீர்த்தனைகள்

தரு - இராகம் - அடாணா - தாளம் - ஆதி
பல்லவி
கண்டாவதாரருக்கே தொண்டானபேரைக்கண்ணாற்
கண்டாலும்வாணிவிலாஸ முண்டாகுமே.
அநுபல்லவி
கொண்டாடிவைநதேயர் விண்டாரந்தமந்த்ரத்தைக்
கொண்டார்தாமுருவேற்றிக் கண்டாரயக்கிரீவரைக்
குதிரைமுகமுடனே யெதிரேவரவுமிக
மதனிலிசைபெருகு மதுரஅமுதையுண்டு (கண்)

சரணங்கள்

பன்னுகலைநால்வேதப்பொருளை யெல்லாமென்று
பரிமுகமாயருளியஎம்பரமன் காண்பனென்றுஞ்
சொன்னவகையேஸகலகலாதி தெய்வமென்றுந்
துதிமிகவேசெய்திடவும்பிர ஸன்னமாகிநின்றும்
பின்னும்வெள்ளைமுகத்தின் மன்னும்லாலாரூபமா
மென்னுமமுதமது தன்னைக்கொடுக்கவுண்டு
பெரியதிருவடிக ளருளாமிதுவெனவே
பெருகுகவிமழைகள் சொரியநினைவுகொண்டு (கண்)

வெள்ளைப்பரிமுகர்மீதில் துதியானதுரைத்து
விளங்கும்வைநதேயர்மீதிற் றுதியுமைந்துபத்துத்
தெள்ளியநகர்த்திருவஹீந்திர புரத்துத்
தெய்வநாயகரருள்செயலங்கே யைந்துபத்து
விள்ளுவார்பலபொரு ளுள்ளும்பிராகிருதபாஷைக்
குள்ளச்சுதசதகந் தெள்ளுமும்மணிக்கோவை
வெகுவிதகலையின திகளுமிசையவொரு
முகமதெனவருமத் தகைமையவர்தெரிய (கண்)

ஊஞ்சற்றிருநாளினி லூஞ்சற்பாட்டுப்பாடி
ஒருநாட்பெருமாள்பிராட்டி தமக்கம்மானைபாடி
வாஞ்சையுடனேயிருவர் களுக்குங்கழற்கோடி
வரிசைபந்துப்பாட்டேசல் வகைகளெல்லாஞ்சூடி
ஆஞ்சநவரத்தினமாலை தாஞ்சொன்னதிவையொன்பது
வாம்ஜகபிரஸித்தமான லாஞ்சனந்தேவநாயகர்
அவர்திருவடிதனி லிவருமுரைசெய்தது
கவிகளிவரைநிக ரிவரேகுருதிலகர். (கண்)

விருத்தம்

அங்குபதினெட்டுமதத்தருந்தர்க்கிக்க
அவர்களுடன்தர்க்கித்துச்செயித்துவாதி
பங்கமுறவேமணிப்பிரவாளமாகப்
பரமதபங்கமதொன்றையருளிச்செய்து
மங்கலஞ்சேர்சக்கரவர்த்தித்திருமகன்மேன்
மகாவீரகத்தியநூலருளிச்செய்து
துங்கவரைக்குடையெடுத்தகோபாலன்மேற்
சொல்லினாரிருபதுமேற்சொல்லினாரே.

இதுவுமது

பத்தியதிசதுரராயிருக்குநாளிற்
பரவாதியர்களாலேயேவப்பட்ட
கொத்தனவன்மாளிகையின்வாசல்வந்து
குறுகியுமக்கேஸகலதந்திரங்கள்
உற்றுவருமேகிணறுகட்டுமென்று
வுரைசெய்யக்கிணறுகட்டியவனைவென்றார்
துத்தியஞ்செய்தெல்லாரும்பணியவந்த
தூயனார்வேதாந்ததாயனாரே.

தரு - இராகம் -- பந்துவராளி - தாளம் -- ஆதி

பல்லவி

சறுவதந்திரசுதந்திர ரென்றாரேகி
ணறுகட்டிக்கொத்தனையும்வென்றாரே.

அனுபல்லவி

உறுதியுடன்கருடனயக்கிரீவருபாசனை
திறமைவேதாந்தகுருதிருவஹீந்திரபுரத்தில் (சருவ)

சரணங்கள்
கொத்தனானவனுமொ ருத்தன்பரவாதிக
ளெத்தியனுப்பவந்தெ திர்த்துவிருதுபேச (சருவ)
கணகணவெனவொலி மணியேயவதாரஞ்செய்
துணர்வுமிகுந்தவரைக் கிணறுகட்டுவீரென்றான் (சருவ)
நல்லகல்லுகள்கொடுத் தெல்லையுடனேகட்டச்
சொல்லவன்கிணறு வில்லுவளைதலாக (சருவ)
கோணற்கல்லுப்பொறுக்கி யூணிக்கொத்தன்கொடுக்கக்
காணும்வேதாந்தகுரு பாணிகொண்டுதிருத்தி (சருவ)
நீதியறியாப்பர வாதிசொற்கொண்டுவந்தேன்
பேதமைதவிர்த்தாளும் வாதிசிங்கரேயென்றான். (சருவ)

வெண்பா

கொத்தனைவென் றெங்கள் குருவேதாந் தாரியரும்
வித்தையத னாலெங்கு மேன்மையராய்ச் - சுற்றித்
திருக்கோவ லூர்கச்சி சேர்ந்து வளருந்
திருப்பதியும் வந்திப்பதே.

இராகம் - உசேனி - தாளம் - ஆதி

பல்லவி
தூப்புற்பிள்ளைவைபவமென்னசொல்லுவேன் - எங்கள்
தோதாரம்மனு மேதானேதருந்
தூப்புற்பிள்ளைவைபவமென்னசொல்லுவேன்

அனுபல்லவி
வாய்ப்பதாந்திருக் கோவலூரிலே
வந்துமாயனைத் திருவடிதொழச்
சேர்ப்பவங்கவர் விஷயமாகவே
தேகளீசஸ்துதி யையுஞ்செய்தருள் (தூப்)

சரணங்கள்
பெருமாள்கோவிலை நாடியே -எங்கள்
பேரருளாளரைப் பாடியே
ஒருபஞ்சாசத்துச் சூடியே - இன்ன
முள்ளமீதன்பு நீடியே
திருச்சின்னமாலை சாத்தியே
தினசரிதைசொன் னேர்த்தியே
திருமண்காப்பிலனு சந்திக்கவே
திருத்துவாசநாமப் பாட்டுஞ்
சரணியனிடத்திற் பண்ணிநல்ல
சரணாகதிமாலை நாட்டுந் (தூப்)
அர்த்தபஞ்சக சங்க்ரஹ - மின்னம்
அத்திகிரிமாகாத் மியகம்
இத்தனைபிரபந் தஞ்சகங்--களில்
இசையுமஷ்டபு ஜாஷ்டகம்
வைத்தேயாளரி மேற்பதி
வாகானகாமஸி காஸ்துதி
மெத்தசொன்னவண்னஞ் செய்தபெருமால்மேல்
வேகாசேதுஸ்துதியையுங் காட்டினார்
உத்தமவிளக்கொளி யெம்பெருமான்மீதி
லுஞ்சரணாகதி மாலையைச்சூட்டினார் (தூப்)

புல்லும்புட்குழிப்பே ரற்றதே - ரண
புங்கவர்மீதினிழல் சாய்த்ததே
வல்லோர்மனதன்புக் கேற்றதே - பர
மார்த்தத்துதியையும் பார்த்ததே
நல்லவிச்வாமித்திர கோத்ரா
ராமாநுஜதயா பாத்ரா
செல்லுமொருகாலப் பெரியோர்களுக்கங்கே
சீதச்சுரம்வந்து வாதிப்பதுந்தீர்க்கச்
சொல்லும்படிதிரு வாழியாழ்வான்மீதிற்
சோடசாயுதத் துதியையுஞ்செய்தருள் (தூப்)

விருத்தம்
காதலாமலகம்போல்வேதாந்தத்தைக்
கரைகண்டகண்டாவதாரர்நாளும்
நிரதராய்க்கச்சியைச்சூழ்திவ்யதேச
நிலையெல்லாஞ்சேவித்துநிதமுந்தாமே
விரதராய்ப்பேரருளாளரையுமின்னம்
வெண்பரிமுகத்தரையுமாராதித்தே
வரதர்திருவடிச்செந்தாமரையைவாழ்த்தி
வந்திப்பார்திருமலையைச்சிந்திப்பாரே.

இராகம் - சாவேரி - தாளம் - ரூபகம்
கண்ணிகள்

திருவேங்கடமுடையானைத்
திருவடித்தொழ நாடித்
திருவுள்ளமாய்ப்பயணங்கொண்டு
சென்றேயன்பு நீடி
வண்டுவிளங்கு - நறுநீள்சோலை
வண்பூங்கடிகை யென்றே
கொண்டதாங்கடிகை - மலைதன்னைக்
குணமாயேறி நின்றே
மிக்கானை யென்றனுசந்தித்து
மேநாரசிங் கனுமாந்
தக்கானைத் திருவடிபணி
தலைக்கொண்டவன் பனுமாம்
கடிகாத்துதியருளிச்செய்து
கண்டும்மங்கே தீர்த்த
சடகோபனை முதலாம்வரி
சைகளைப்பெற்று மேற்ற
அனுமப்புரத் தினிலேயெழுந்
தருளிப்பத்தோ சிதரை
மனதாய்மங்களாசாஸன
வரிசைசெய்தற் புதரை
ஸவர்ணமுகி நதியைக்கிட்டித்
தொடுத்தங்கனே பணிந்து
அவகாசித்தருளி யூர்த்துவபுண்
டராதிகளை யணிந்து
திருமலையை நோக்கியங்கே
சிந்தைசெய்கு வாரே
திருமாது மணாளாவென்றே
திருவாய்மலர் வாரே
கண்ணனடி யிணையெமக்குக்
காட்டும்வெற்பன் றெடுத்துப்
பண்ணோடிசை திருவாய்மொழிப்
பனுவலதைத் தொடுத்து
ஆழ்வார் தீர்த்தம திலெழுந்
தருளிநீராடி யேத்தி
வாழ்வார்கேச வாதிதிருநா
மங்களையுஞ் சாற்றி
தருணங்கண் டாழ்வாரைமங்களா
சாஸஞ்செய் தருளித்
திருமலையடி வாரத்திலெங்கள்
தேசிகரெழுந் தருளித்
திருப்பதியே யெழுந்தருளிச்
சித்ரகூடத்தின் செல்வர்
விருப்பாய்மங்களாசாஸனம்
வேண்டியிசை சொல்வர்
கூட்டமாகிய தொண்டர்களுடன்
கூடிமலை மீது
காட்டழகிய சிங்கர்ஸேவையுங்
கண்டாரே யப்போது.

விருத்தம்

வேங்கடேசதேசிகரிப்படியேதானே
வேங்கடாத்திரிமீதிலேறிச்சென்று
தாங்குதிவ்யநகரத்தைச்சேவித்தானந்
தநிலயமாந்திவ்யவிமானத்தைச்சேவித்
தோங்கியவைகுந்தத்திருவாசல்சேவித்
துறுவவாவறச்சூழ்ந்தான்வாசல்சென்று
பாங்குடனேசாஷ்டாங்கவந்தனந்தான்
பண்ணினார்கோனேரிநண்ணினாரே.

இதுவுமது

பணிந்துதிருக்கோனேரிதனினீராடிப்
பன்னிரண்டுதிருநாமமணிவடங்கள்
அணிந்தருளிச்சொலிக்கின்றவடிவாய்க்கொண்டு
அருள்ஞானப்பிரானுடனேவராகர்தம்மை
வணங்கியேவலமாகக்கோயில்மீத
வாவறச்சூழ்ந்தான்வாசல்வழியாய்ச்சென்று
தணிந்துதிருப்புளியாழ்வாரையுஞ்சேவித்த
சாந்தர்தாமுபயவேதாந்தர்தாமே.

வெள்ளி, 20 ஜூலை, 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக்

கீர்த்தனைகள்


தரு - இராகம் - சவுராஷ்டிரம் -தாளம் - ஆதி

பல்லவி
வேங்கடநாதர்தேசிகராய்வந்த வேதாந்தகுருவைப்பணிவோம்
அனுபல்லவி>

தீங்குகள்யாவையும் நீங்கிடவேயரு
ளோங்கியசீர்புகழ் தாங்குகண்டாவதார (வேங்)

பொருந்தியவாண்டுநிறை கலியாணஞ்செய்து
புனிதவனந்தாசார்யர் மைந்தனையே
பெருந்தேவியாருடனே புருஷாகாரமான
பேரருளாளற்கு வந்தனையே
திருந்தவுஞ்செய்துவைக்கப்பேரருளாளருஞ்
செல்வநம்பிராமாநு ஜன்றனையே
இருந்திணைசொலவுமே வருந்தரிசனமும்வ
ளரும்படிபிரவர்த்தகன் தருங்கிருபையதும் பெறும் (வேங்)
பக்ஷமதாகியமூன்றாம்வருடத்திற்
பரிந்துசவுளமது பண்ணுவித்து
அக்ஷரவாரம்ப மதுதான் ஸாமிக்கு
ஐந்தாம் வருடத்தி லறியவைத்து
சிக்ஷைசொல்ல இவர்வாசிக்குநாளையிற்
சேர்ந்தபுதுமைவெகு
லக்ஷணமேவிய கக்ஷிகண்மேல்வெகு
கக்ஷிகளே சொல்லி சக்ஷணரேவரு (வேங்)
ஆதிக்கமாகியவம்மாள்கிடாம்பி
அப்புள்ளாருடனே கூடிநல்ல்
மேதினிபுகழும்நடாதூர்பெரியவம்மாள்
வ்யாக்யானகோட்டியின் மீதுசெல்ல
சாதகமாகவே சேவித்திருக்கும்போது
சந்தேகமொன்றுதான் தெளிந்துசொல்ல
ஓதினபேர்களு மீதென்னபுதுமையென்
றேதலைதானசை வேதசிரோமணி (வேங்)

விருத்தம்

நடுத்தெரிந்துசந்தேகந்தீர்க்கக்கண்டு
நடாதூரம்மாளாகும்வரதாசார்ய
ரெடுத்தணைத்துமடியில்வைத்துமிக்குழந்தை
யிவ்வுலகிற்புராணஸம்ஹிதாகர்த்தாவாய்த்
தொடுத்துமுன்னே புலஸ்தியர் பராசரர்க்கே
சொன்னதுபோலவவதாரவிசேஷமென்று
கொடுத்திவரைசிக்ஷிக்கத்தக்கதென்று
கொள்ளார்தாங்கிடாம்பியினப்புள்ளார்தாமே.

இதுவுமது

செப்பமாயிவரையுநீர்நம்மைப்பற்றிச்
சிக்ஷித்துச்சகலகலைசொல்லுமென்றே
அப்புள்ளார்கையிற்காட்டிக்கொடுத்தா
ரக்ஷராரம்பமுதலவர்தாமேசெய்
விப்பவேயுபநீதராகிப்பின்னும்
வேதாத்தியானமதுபண்ணும்போதும்
அப்படித்தானேற்றோதுமிடங்களென்றார்க்
காராவாராளவந்தார்நேராவாரே.


தரு இராகம் - கல்யாணி - தாளம் - ஆதி

பல்லவி

சருவதந்திரசுவதந்திரசுவாமி -- கண்டாவதாரவே
தாந்தகுருசேவடிசிந்தைசெய்மனனே.

அனுபல்லவி

நறுமலர்ச்சோலைசூழ்தூப்புல் நகரமனந்தசூரி
நந்தனராகவேவந்தனர்பாரிலு யர்ந்தனர்மேனி
சிறந்தனரேயிவர்நலவுபயமறையி னிலைகள்
தெளியவுரைசொலவுமதுரமிகு சலநிதியெனவரு (சருவ)
புண்டரீகாக்ஷநாமகரான சோமயாஜி - உயர்
புண்ணியபவுத்திரரெனவருமவரேத யாம்புராசி
மண்டலமெச்சுநடாதூரம்மாள் கிருபைவாசி -- மாதுலர்
வாதிஹம்ஸாம்புதாசார்யரிடமே விசுவாசித்
தண்டியேசாங்கமாகவேதந்தனையு மோதினாரே
அதிநிபுணதையாக விதிகர்ப்பசூத்திரங்கள்
துதிசப்ததர்க்கமீமாம் ஸைதிலியசாஸ்திரங்கள்
அலங்காரங்காவ்ய நலம்பெறும்ஜோதிஷம்
பலங்களினுல்களுஞ் சொலும்திறமாகிய (சருவ)
சாங்கியயோகமென்னுங்கபிலமதத்தை முதற்காட்டி - குருமதஞ்
சைவஞ்சயினமொடுசாங்கரபாஸ் கரமுஞ்சூட்டி
ஓங்கும்பவுத்தமதம்யாதவமத மென்றுநாட்டிச் - சொல்லு
முலகிற்பரமதங்களானவற்றின் கருவமோட்டி
பாங்கதாயிராமாநுஜஸித்தாந்தநிலை நிறுத்தவே
படிதனிலேயுயர் நெடியவனேயிவர்
வடிவெனவேசொலும் படியதுவாய்வரு
பவரிவரெனவிசை யெவர்களுமுறைசொல
நவநலமுடனும திவளரவளர்பவர் (சருவ)
இதிஹாஸபுராணங்கள்தருமசாஸ்திரங்க ளினீதி -- கரைகண்டு
மிவைகளையெல்லாமப்புள்ளார்ஸன்னி தியிலோதி
விதிமுறைப்படியாகவேபஞ்சஸமுஸ் காராதி - யதுகொண்டு
வேதாந்தபாஷ்யமும்பாஷ்யகாரர்பிர பந்தரீதி
அதிகரித்தருளித்திருக்குருகைப்பிரான் புள்ளானிட்ட
வாறாயிரப்படி பேராம்ரகஸியம்
மாறாமலேவர நாராயணர்திரு
அருளதுபெருகிய பொருளிதுவெனவுரை
தருவுபயநிகம குருமணியெனவரு (சருவ)

விருத்தம்

இருபதெனுந்திருநக்ஷத்திரத்துக்குள்ளே
யிப்படியேஸகலகலாநிபுணரானார்
விரதஸமாவர்த்தனமுஞ்செய்திசைந்து
விவாகஞ்சத்குலத்திற்செய்தருளிமேலும்
பெருமாள்கோயினிலேவாழ்ந்திருக்குநாளிப்
புள்ளாராம்வாதிஹம்ஸாம்புதாசார்யர்தாம்
கருடமந்த்ரம்விதிமுறையாய்விண்டுசொல்லக்
கண்டிட்டாருபதேசங்கொண்டிட்டாரே.

இராகம் - காம்போதி - தாளம் - சாப்பு

கண்ணிகள்
மேதினிதனிலெங்கும் புகழ அவதரித்த
வேதாந்தகுரு ஆத்ம யோகருக்கே
மாதுலருமாகி யாசாரியருமான
வாதிஹம்ஸாம்பு வாகர்
திருத்தந்தையாகிய பதுமநாபர்தமக்குத்
திருவாய்மலர்ச்சிசெய்த பொருளே எல்லாந்
திருத்தியருளியாச்சான் சாம்ப்ரதாயங்களெல்லாந்
திருவுள்ளம்பற்றிட அருளே
தெரிசனப்ரவர்த்தக ராகும்படிகடாக்ஷஞ்
செய்யக்கொண்டாரேகவி வாதி சிங்கர்
பெருமாள்கோயில்தனி லெழுந்தருளியிருந்த
ப்ரபலஞ்சொல்லுவாரெங்குங் க்யாதி
பகர்பேரருளாளரை மங்களாசாசனம்
பண்ணிக்கொண்டங்குள்ள பேர்க்கு எல்லாம்
ஸகலசாஸ்திரங்களையும் பிரவசனம்பண்ணிக்கொண்டு
தாமேயிருந்துமுறை வார்க்கு
ஆசாரியர்ப்ரஸாதித்த கருடவுபாஸனையை
யனுஷ்டிக்கவேண்டியுள்ள மதிலே யெண்ணித்
தேசாதேசம்புகழுஞ் செழுநதிவயல்புகுந்
திருவஹீந்திரபுர மதிலே
கடுகியெழுந்தருளி நிகமாந்ததேசிகருங்
கருடநதியிலேநீ ராடி யங்கே
அடியவர்க்குமெய்யனா கியதெய்வநாயகனை
அணிமங்களாசாசன நீடி
ஏகாந்தஸ்தலமான அவுஷதாத்ரிமேலே
யேறியருளியந்தத்
தேகமதைப்பிளந்த அழகியசிங்கர் சன்னி
தியிலேயரசினிழ லிடத்தே
அசையா மனத்தராகிக் கருடமந்திரத்தையே
அனுசந்தித்துக்கொண்டிருந் தாரே யரு
ளிசைந்து பெரியதிரு வடியினாரங்கே
யெழுந்துப்ரச்சன்னராய்வந் தாரே.

விருத்தம்

தோதாநாயகிபாலர்திருமுன்பாகத்
தோன்றியேபெரியதிருவடிநயினாரும்
வேதாந்தஸித்தாந்தப்ரவர்த்தகந்தான்
விளங்குமிராமாநுஜன்றன்தரிசனத்தை
யேதானேவளர்த்திடவேவேண்டியிங்கே
யிவருக்கேஹயக்ரீவமந்திரத்தை
ஸாதாரணமதாகவுபதேசம்பிர
ஸாதித்தார்மூர்த்தியையும்சாதித்தாரே.

வியாழன், 19 ஜூலை, 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்

தரு - இராகம் - தோடி - தாளம் - ஆதி .
பல்லவி
தரிசனபரம்பரைகளின்னந் - தெரியச்சொல்கிறேன்.
அனுபல்லவி
தரணிமீதினிலரங்கமாநகர் வருமெதீந்த்ரரைப்பரவிவந்திடும் (தரிசன)
சரணங்கள்
உபயவேதாந்த விபவங்களெல்லா
மபிவிர்த்தியாகிச் சுபகுணந்தந்து
நிபிடசீடர்கள் ப்ரபலமேகொண்ட
சபையெதீந்த்ர தபோநிதியவர் (தரிசன)
மாம்பலாக்கனி தேன்பொழிவைப்போற்
றாம்பிரசாதிக்குஞ் சம்பிரதாயமே
லாம்பிரகாசர்கி டாம்பியாச்சானென்
றாம்பிரபாகர ராம்புராதன (தரிசன)
ஆத்திரேயர்தன் கோத்திரத்தினில்
வாய்த்தனர்பிரண தார்த்தியபஞ்சனர்
சாத்திரரீதிகள் பார்த்தெதிராச
நேத்திரராகவே காத்திருந்தவர் (தரிசன)
விருத்தம்
மண்டலமெலாம்புகழுமெதீந்திரர்க்கே
மகாநசிகராகவந்தகிடாம்பியாச்சான்
தொண்டுசெய்துரகசியத்தின்பொருளையெல்லாஞ்
சொலக்கேட்டுத்தமக்குற்ற குமாரபாக்யம்
கண்டிடவிராமா நுஜன்றானென்றே
கருணையாய்த்திருநாமஞ்சாத்திப்பின்னும்
பண்டையுடையவர்பிரசாதித்ததெல்லாம்
பாலிப்பார்மிகவுமனுகூலிப்பாரே.
இதுவுமது விருத்தம்
மேதாவிராமா நுஜப்புள்ளானும்
மேதினியிற் ப்ரசித்தராயுபயமான
வேதாந்தப்ப்ரவர்த்தராமவர்குமாரர்
விபுதர்பத்மநாபரென்போர்கருணைதன்னா
லேதாரணியில்வந்துபிரபலங்கொண்டா
ரேராமாநுஜப்புள்ளானென் றோர்மைந்தன்
தோதாநாயகியெனுங்குமாரத்தியாருஞ்
ஜொலிக்கின்றார்பிறந்துபிரபலிக்கின்றாரே.
இதுவுமது
கண்ணிகள் - இராகம் - சௌராஷ்டிரம் - தாளம் - ஆதி.
பூமாதிருக்குங்கிடாம்பிபற்பநாபர்
புண்ணியசாலிகுமாரர் - எங்கும்
ராமாநுஜபுள்ளானென்றுசொல்லுந்திரு
நாமந்தரித்தவர்பேரர்.
வாலவயதுதொடங்கிச்சதுரராய்
மண்டலயீதினிலோங்கத் - தந்தை
பாலிற்சகலங்களானகலைஞான
பாரங்கதப்பெயர்தாங்க
சத்தமுந்தர்க்கமுமீமாஞ்சாதியாஞ்
சாஸ்திரமதிகரித்தாரே -- தம்மைப்
பெற்றவராலேயறிந்தபின்வேதாந்தா
பேக்ஷையுடனிருந்தாரே
இங்கிதைக்கண்டுமங்குள்ள பெரியோ
ரிவருமப்புள்ளாரோவென்றே -- அரு
ளங்ஙனேசெய்தாரேயன்றுமுதலாக
வப்புள்ளாராயினரன்றே.
இங்கிப்படித்தாமேசீரங்கப்புள்ளா
ரெனும்பத்மநாபருக்குவாய்த்த -- வேத
புங்கவரப்புள்ளார்தாமுமிருந்தார்
பொருந்துங்கதையின்ஞ்ஸசாற்ற.
செய்ய எதீந்த்ரர்க்குஞானபுத்திரரான
திருக்குருகைப்பிரான்புள்ளான் -- அவர்
துய்யவனாகியஎங்களாழ்வானுக்குச்
சொல்லவுமேமனதுள்ளான்.
மாறாதபாஷ்யமுதலானவேதாந்த
மார்க்கந்திருவாய்மொழிக்குத் -- துன்னு
மாறாயிரப்படியிட்டாரேயின்ன
மநேகபிரபந்தம்விழிக்கு
பாத்திரராக்கிரகசியமெல்லாம்
பரிந்துபிரசாதித்தாரங்கே -- மன
தேத்திப்பணிவிடைசெய்துமிருந்தாரே
யெங்களாழ்வானவரிங்கே.
எம்பெருமானாருடன்பிறந்தான்பிள்லை
யென்றுஞ்சரஸ்வதிபீடம் -- தானே
யம்புவிமீதினிற்பாஷ்யஸிம்ஹாஸன
வாதிக்கம்பெற்றவிசேடம்.
தேசப்பிரசித்தநடாதூ ராழ்வானுக்குச்
சேருந்திருப்பேரனாம் -- தேவ
ராஜப்பெருமாளுடையகுமாரர்
நடாதூரம்மாளென்னும்பேராம்.
சகலசாத்திரபாரங்கதத்துவமே
தாவிநடாதூராழ்வாரே -- உயர்
ஜெகப்பிரசித்தருமாகியிருந்து
சிறந்துபாரில்வாழ்வாரே.
அவர்தமையனாங்கந்தாடைத்தோழப்ப
ரனுமதிதானேகண்டு -- வெகு
சவரணையாகஎங்களாழ்வானுக்கே
தானபுத்திரகீர்த்தியமுங்கொண்டு.
சந்தேகநீங்கும்ஸ்ரீபாஷ்யமுதலான
தத்துவதரிசனரீதி -- இன்ன
மந்திரமுமாகியவாறாயிரப்படி
மற்றுமெல்லாந்தாமேயோதி.
எங்களாழ்வானைநடதூ ரம்மாளவ
ரிப்படியாசிரயித்தாரே -- புவி
யெங்கும்பிரசித்ததரிசனராகி
யிருந்துமகிமைபெற்றாரே.
நடாதூரம்மாள் - தரிசனம் - விருத்தம்
சீராகுநடாதூரம்மாளுந்தாமே
சிறந்திடுங்கிடாம்பியாப்புள்ளார்தமக்குஞ்
சீராமப்பிள்ளைதிருப்பேரனராஞ்
ஜெயவாக்கால்வென்றபட்டர்திருக்குமாரர்
பேரானதிசைவியாசபட்டருக்குப்
பின்னும்ஸ்ரீபாஷ்யமப்பங்கார்க்குந்தாமே
நாராயணன்றிருவடிப்பிரவர்த்தி
காட்டினார்ஸகலகலைநாட்டினாரே.
இதுவுமது -விருத்தம்
செப்பமாநடதூரம்மாள்சீர்பாதஞ்
சேர்ந்துவேதாந்தமெல்லாந்தெளிந்தேயேங்க
ளப்புள்ளார்தரிசனத்தைவளர்க்குநாளி
லவனியெங்குங்கொண்டாடவிருந்தாரிப்பால்
மைப்புயலிற்றிருமேனிமுதல்வனெங்கள்
வரதராஜப்பெருமாள்மகிழ்ச்சிபொங்கி
யெப்பொழுதும்வளர்பதியேகாஞ்சியென்ன
வேத்துவார்முனிவரெலாம்போற்றுவாரே.
காஞ்சி - மகிமை
தரு -இராகம் - எதுகுலகாம்போதி தாளம் - ஆதி
பல்லவி
காஞ்சிபுரி வாஞ்சி -- தந்தானே
காக்ஷிவரதர்காணியாக்ஷி
அனுபல்லவி
காஞ்சனநவரத்தினமே லாஞ்சிறைப்பாலி
கன்னல்சென்னல் - தென்னஞ்சோலைகதிகபுண்ணியவேலி (காஞ்சிபுரி)
சரணங்கள்
ககரமெனுமக்ஷரங் கமலாஸனன்பேரே
கண்டடைந்தாரிதானே காஞ்சியென்னுநேரே
தகைமைபெருகுமி தேதானத்திகிரியென்பாரே
ஸகலபாபங்கள் விமோசனஞ்செய்யுஞ்சீரே. (காஞ்சி)
எண்ணுவீரத்திகிரி யாமிந்தமலைமேலே
யெம்பெருமானைப் பிரமன்பூஜையொருகாலே
பண்ணினார்யாகமத்திலவிர்ப்பாகங்கொண்டார்பாலே
பரமபத்தராழ்வார்கள் பாடினதினாலே (காஞ்சி)
சூடியாரயோத்தியும் மதுரைமாயாநகர்
சொல்லுங்கச்சியவந்தி நந்துவாரகைப்பிரகாசி
நாடிமுத்திதாயகமாய் நாட்டியேழும்பேசி
நல்லவர்களெந்நாளு மேகொண்டவிசுவாசி (காஞ்சி)
கல்லுயர்ந்தநெடுமதில்சூழ் கச்சியென்றுங்கூடும்
காமருபூங்கச்சியென்று கண்டிசைகள்பாடும்
சொல்லுமணிமாடங்கள் சூழ்ந்ததிருநீடும்
தூயமுத்திப்பிரதமென்றேதொண்டர்கள் கொண்டாடும் (காஞ்சி)
புண்டரீகாக்ஷகர் அவதாரம்
விருத்தம்
சுயமதுரகனிசிறந்தமரமேலெங்குந்
தூயகுயில்கூவுமிளஞ்சோலைசூழ்ந்தெ
வயல்களெல்லாங்கரும்புசங்குசெந்நெல்வேயின்
மணிபரவிவேகவதிவடபாற்கொண்டே
சயிலவரமெனுமத்திகிரியாங்காஞ்சி
ஸத்யவிரதநாமக்ஷேத்திரம்விளங்க
வுயர்புண்டரீகாக்ஷதீக்ஷிதார்ய
ருண்டானார் ஹரிபதத்திற்றொண்டானாரே.
தரு - இராகம் - புன்னாகவராளி - தாளம் - ஆதி
பல்லவி
உண்டானாரேவரதர்பொன்னடித்தொண்டானாரே.
அனுபல்லவி
மண்டலமீதினில்வரும் பண்டிதர்களாலேபுகழ்
கொண்டதிருநாமம்பெற்ற புண்டரீகாக்ஷதீக்ஷிதர் (உண்)
சரணங்கள்
அனன்னியப்பிரயோசனராய் -- வருணாச்சிரமாசார
மதநிலைகள்தவறார்
மனநிலையின்மாறாமலேகனநியமமாயரியை
யனுதினமுநேராயாராதனவிதிகள்தாமேசெய்பவர் (உண்)
செகம்புகழுஞ்சோமயாசி -- அக்னிஷ்டோமாதிவெகு
மகஞ்செய்வதினாற் பிரகாசி
பகவன்றன்னை நாரணனை மிகவந்தனைசெய்து வேதாந்
தகைவலியநாடி வாழ்வேமிகைவுள்லவராகவேதாமும் (உண்)
வபாபரிமளவுல்லாச -- வாசந்தருமதா
ஸபானனவரதராஜ
கிருபாநிதி யிலரேவசுதேவபாலக்ருஷ்டிணமூர்த்திபரம
புருஷராமெனவேதுதிஞானப்பிரபாகரருமிவரேயெனவந்து (உண்)
அநந்தசூரி அவதாரம் - விருத்தம்
ஆனைமலைவரதனுக்கேபிரீதியாக
வநேகயாகங்கள் செய்தார் ஸோமயாஜி
தானதனாற்சரீரவாரோக்கியமின்னந்
தழைக்கின்றபோகங்களயிஸ்வரியங்கள்
ஞானங்கண் மேன்மேலா வரதர்தந்து
நல்லகுமாரனையு மங்கேதந்தாரந்த
வானுஷங்கிகப்பலமாய்வந்தவேத
வாரிதான் உயரனந்த சூரிதானே.
தரு - இராகம் - சங்கராபரணம் - தாளம் - சாப்பு
பல்லவி
உதயஞ்செய்தனரே -- அநந்தசூரிய -- ருதயஞ்செய்தனரே
அனுபல்லவி
உதயஞ்செய்துகச்சிவ ரதர்தந்தகிருபைகொண்டுன்
னதபுண்டரீகாக்ஷ தீக்ஷிதர்தந்தசுகுமாரர் (உதயம்)
சரணங்கள்
தாதைசெய்தசோம யாகத்தின்பலனே
தழைக்குங்கச்சிவரதர் தருங்கிருபைநலனே
மேதினிதனிலெங்கும் வேதமானதுவிளங்கி
நீதிசாரமிதுவென்றே க்யாதியாயறிந்திடவே (உத)
ஜொலிக்குந்காந்தியுள்ள சுகிருதஞ்செய்தேகஞ்
சுபக்கிரக பலமிக்க குருசந்திரயோகம்
பலிக்குமவரெங்கும்பிர பலிக்கும் வரதரையஞ்
சலிக்குந் திருக்கையாளர் கலிக்குப்புதுமையாக (உத)
சுருதிதன்னிலேபாரங் கதராகினரே
தொடுத்தெல்லாஞ்சித்தாந் தரீதியறிந்தனரே
குருகுலவாசமது உரிமையாகவேசெய்து
பிரமசாரிவிரத மருவினவருமிங்கே.
விருத்தம்
இப்படியேசித்தாந்தரீதியெல்லாம்
இசையநந்தாசாரியர்க்குத்தந்தையானார்
செப்பமாங்கிடாம்பிபத்மநாபரென்னும்
ஸ்ரீரங்கவப்புள்ளார்குமாரியாகி
அப்புள்ளார்தங்கையுமாய்வந்ததோதா
ரம்மனையேதிருக்கலியாணந்தான்செய்து
வைப்பவேதர்மபத்னியுடனேகூடி
வருகின்றார்வரதரருள்பெறுகின்றாரே.
கலிநிலைத்துறை
பண்கண்டேயறிவதற்குமரியராய்ப்பத்தபராதீனராகி
விண்கண்டதேவர்கட்குந்தேவரா மிவரெனவேவேங்கடத்துட்
டண்கண்டகோனேரித்தென்கரைமேற் கலியுகத்திற்சகலபேற்குங்
கண்கண்டதெய்வமென்றே வேங்கடாசலபதியைக்கருதுவரால்.
தரு - இராகம் - பூரிகல்யாணி - தாளம் - ஆதி.
பல்லவி
தெள்ளியார்வணங்குமலை - திருவேங்கடமலை
ஸ்ரீநிவாஸனுறைமலையே.
அனுபல்லவி
வெள்ளிநிறங்கொண்டபுள்ளிமானோடியோடித்
துள்ளிவேங்கைப்புலியைத்தள்லிவிளையாடுமலை.
சரணங்கள்
விளங்கும்பிர்மாண்டத்திலொருபக்கத்திலுமிந்த
வேங்கடாத்திரிக்கு நிகரேது
வளங்கொண்டளவில்லாதசருவரத்தினமய
கிரிமண்டலத்திலபுண்ணிய ஸ்தலமீது
களங்கமில்லாஸ்வயம்புஐந்துபனிடபரூப
வேங்கடபூதரமென் றெங்குமோது
உளங்கொண்டபிரிதிநாராயணர்க்கிந்தமலை
யுன்னதப்பிரஸன்னமிகுசொன்னமுயர்நன்னளினம் (தெள்ளி)
பாற்கடல்வைகுந்தமிரவிமண்டலமத்தி
பகருமிந்தமூன்றெனுந் தானம்
பார்க்கிலதிகமெங்களலர்மேன்மங்கைரமண
பரமபுருஷர்க்கு நிதானம்
தீர்க்கமிதுவரமென்றேயாழ்வார்கள்பாடல்பெற்ற
திவ்யதேசம்விளங்கும் விமானம்
ஏற்குங்கோனேரித்தீர்த்தமகிமையுமதிந்தென்பா
லெந்தாதைவைகுந்தாதிபனந்தாவிலாசந்தானிது (தெள்ளி)
கலியுகத்தினிலிந்தவுலகந்தனிலேயார்க்குங்
கண்கண்டதெய்வமாக நின்றே
வலியடிமைகொண்டுவினையெல்லாந்தீர்த்துமவர்
மனதபீஷ்டந்தருவ தொன்றே
பலவும்வேங்கடத்தாய்நால்வேதப்பண்ணகத்தாயென்று
பரமபத்தர்பாடினா ரென்றே
சொலவும்பூமகளுடன்கூடிக்கண்ணன்வளருஞ்
சுந்தரமிகுந்துபலகிரந்தமறையிந்தமலை (தெள்ளி)
விருத்தம்
திசைதிசையின் வேதியர்கள்சென்றிறைஞ்சுஞ்
திருவேங்கடத்தானே தெய்வமென்றே
அசையாதாராதனஞ்செய்திருந்தாரெங்க
ளநந்தாசாரியரிப்பால்வேங்கடேசன்
உசிதமாந்தரிசனத்தின்விரோதமெல்லா
மொழிப்பதுநாவுடையராலாகவேண்டி
இசையுள்ளதிருமணியாழ்வானையிப்ப
டிச்செய்தாரவதரிப்பிக்கச்செய்தாரே.
கலிநிலைத்துறை
திருவாழிதிருச்சங்கைத்தொண்டமான்
சக்கரவர்த்திக்கீந்தேயச்சத்
துருவெல்லாந்துடைத்ததுபோல்வேங்க
டேசனம்மநந்தசூரிபாலே
அருள்செய்துதிருமணியாழ்வாரை
யவதரிப்பிக்கவன்பாயெண்ணி
யொருநாளிராத்திரிச்சொப்பனத்தி
லெழுந்தருளியதும்யோகந்தானே.
தரு - இராகம் - மத்தியமாவதி - தாளம் - ஆதி
பல்லவி
மனந் தனில்மறவேனே - மகிமையை
மனந் தனில்மறவேனே.
அனுபல்லவி
மனந்தனில்மறவாதவநந்தாசாரியர்சொப்
பனந்தனிலெழுந்தருளி நந்தநந்தனர்வந்தார் (மன)
சரணங்கள்
நீர்நம்மைத்திருவடி தொழவாருமலைமேலே
நிறந்தகிருபைசெய்தும்மை யாள்கிறோம்பரிவாலே
சேர்வைதந்துசந்தானந் தருவோமென்றதனாலே
தெளிந்தநந்தாசாரியருந்தேவிகட்குச்சொன்னதாலே (மன)
தம்பதியிவர்கள்தாமே நலமாஞ்சொப்பனம்பண்டு
தரிசனத்தையனுசந்தித் திருந்தாரன்புகொண்டு
எம்பெருமானந்த இரவினிற்கண்முன்கண்டு
இவர்கட்கருள்செய்தாப்போ லெவர்களிடத்திலுண்டு (மன)
அதிசயமிதுவென்று பெருங்கூட்டத்துடன்கூடி
அநந்தாசார்யருந்தேவிகளு
மன்பரசுநாடி
பதியென்னுந்திருமலைக் கெழுந்தருளிகொண்டாடி
பண்பார்ஸ்ரீநிவாசனைப் பணிந்தவகையைப்பாடி (மன)
விருத்தம்
திறமைசேரநந்தாசாரியர்க்குந்தோதா
தேவிகட்குஞ்சொப்பனத்தில்வேங்கடேசன்
சிறுபிள்ளையாய்கோயினின்றும்வந்து
தேவனையீர்நம்மைநிகர்புத்திரன்றன்னை
உறுதியாயுங்களுக்குத்தந்தோமிந்த
வுயர்ந்ததிருமணியைக்கைகொள்வீரென்ன
மறைவல்லோர்திருமணியையிருகையேந்தி
வாங்கினாரற்புதமெய்ப்பாங்கினாரே.
இதுவுமது
திருமணியாழ்வாரையிவர்கையில்வாங்கித்
தேவிகள்கையிற்கொடுக்கவவரும்வாங்கி
யொருமையாய்நிற்கிறபோதிந்தப்பிள்ளை
யும்மணியைவிழுங்கெனவேவிழுங்கக்கண்டார்
இருவர்களுமிப்படிக்கேகண்டதாக
விசைந்துமனதன்புடனேயுற்றார்கட்கே
அருமையெல்லாமருள்செய்தார்வேங்கடேச
ராட்கொண்டார்நல்லதிருநாட்கொண்டாரே.
தரு - இராகம் - கலியாணி - தாளம் - ஆதி
பல்லவி
அதிசயமின்னமென்னசொல்லுவேன் -- கண்டாவதார
அதிசயமின்னமென்னசொல்லுவேன்
அனுபல்லவி
துதிசெய்யுமநந்தாசாரியருக்குந்தோதாநாயகிதமக்குமேதிருப்
பதிவேங்கடேசன்கிருபைசெய்தார்புண்ணியபலமும்
நலமுங்குலமும்பலமும்
சரணங்கள்
தாரணிக்கொருபுதுமையானது சொல்லுகிறேன்மாலே -- வேங்கடபதி
சந்நிதியிலேதிருமணியாழ் வானில்லாமையாலே
பேருயர்ந்திடுஞ்சந்நிதிநம்பி மார்களின்மேலே -- அதிசங்கைபண்ணிப்
பிரபலராநந்தகொத்துப் பரிசனங்களுமொருக்காலே
பாரிக்கும்படியாகமுன்னமே பண்புபெரியகேள்விஜீயர்க்கு
நேரிட்டநந்தாசாரியர்கொண்டரீ திநீதிசாதித்தோதிய (அதி)
சுத்தராகியதானத்தரர்களுக் கெம்பெருமானே -- முன்னிராத்திரிச்
சொப்பனத்திலேயருளிச் செய்ததிப்படித்தானே
ஒத்திருந்ததால்தேசபதிகளுக்கின்னஞ்சொல்வானே -- நம்பிக்கைகொண்டு
உண்மைமானுஷலீலைசெய்தது வேங்கடக்கோனே
பத்தியுடனேதம்பதிகளின் பாக்கியவிசேஷங்களைச்சொல்லியே
மற்றுமெல்லாருங்கூடிவாழ்த்திடு மங்களங்களெங்குமெங்குமே (அதி)
எண்ணின்பலன்பலித்ததம்பதி யிவர்களுந்தேறிப் -- பெருமாள்கோயிலுக்
கெழுந்தருளியேவேங்கடபதி மகிமையைக்கூறி
புண்ணியவதிதோதாநா யகிதவமதுவீறி -- மணிவிழுங்கின
பொருந்துநாள்முதற்றிரு வயிறதுவுரப்பதுமீறி
கண்ணனைமணிவண்ணனை நேமிக்கையனைநீலமெய்யனையுயர்
பண்ணகத்தனைமனதி லிருத்திப்பாடிக்கூடிநாடித்தேடிய (அதி)
விருத்தம்
தேவகிபிராட்டியார்தாமுமுன்னா
டிருவயிற்றினாரணனைத்தரித்தாப்போலும்
பாவனையாய்க்காந்தினியச்மகரையின்னம்
பராசரரைத்தரித்தாற்போற்பன்னிரண்டாண்டு
பூவுலகிற்றிருமணியாழ்வாரையெங்கும்
புகழ்தோதாநாயகியுந்தரித்தாரிப்பால்
நாவுடையரானகண்டாமணியாழ்வாரும்
நண்ணினாரவதாரம்பண்ணினாரே.
தேசிகர் திருவவதாரம்
தரு - இராகம் -சாவேரி - தாளம் -- ஆதி
பல்லவி
அவதாரஞ்செய்தாரே -- கண்டாமணியாழ்வார்
அவதாரஞ்செய்தாரே.
அனுபல்லவி
புவனமெங்குஞ்செழிக்கப் புண்ணியவான்கள் பிழைக்கச்
செவையாய் ராமாநுஜ சித்தாந்தமெங்குந்தழைக்க (அவ)
சரணங்கள்
கருணைமிகப்பெருகி விபவமென்னும் வருஷத்தில்
கதிக்கும்வளமிகுந்த கன்னியென்னுமாதத்தில்
திருவேங்கடமுடையான் ப்ரசன்னசன்னிதானத்தில்
திருக்கலியாணத்தில் தீர்த்தவாரித்திருவோணத்தில் (அவ)
அல்லும்பகலுந்துதிப் பார்பவங்கள்போக
அவனியில்பிர்மத் துவேஷிகள்நிவாரணமாக
சொல்லுந்தரிசனவி ரோதநிரசிதமாகத்
தூப்புற்குடியநந்தா சார்யர்குமாரராக (அவ)
சர்வதந்த்ரசுதந்த்ரர் தாமென்றுகாட்டவே
சகலகலைஞானமுந் தன்னுரைநாட்டவே
உறுதிகொண்டுதான்பர வாதிகளைஓட்டவே
உபயவேதாந்தகுரு வென்னும்பேர்சூட்டவே (அவ)
சீதாராமரிவர்க ளெனவேபுகழ்சிறந்து
திருவநந்தாசார்யார் தமக்குமனதுகந்து
தோதாரம்மன்வருஷம் பன்னிரண்டுஞ்சுமந்து
சுகிர்தமதனாற்பெற்ற சுகுமாரராகிவந்து (அவ)
விருத்தம்
அவதரித்த குமாரருக்கு ஜாதகன்ம
மன்பாகச்செய்தருளியநந்தாசார்யர்
தவமறைதேர்பூசுரோத்தமர்களேத்தத்
தான்றிருவேங்கடமுடையான் திருநாமத்தை
இவருக்கே திருநாமமாகச்சாத்தி
யிசைசங்குவாய்வைத்துக்காதுகுத்திக்
கவிவாதிகேசரியைச் சூரியன்முன்
காட்டினாரன்னையுஞ் சீராட்டினாரே.
இதுவுமது
ஆறாகமூன்றானமாதந்தன்னி
லருக்கன்றந்தரிசனமுநாலாமாதம்
மாறாமற்சந்த்ரதரிசனமுமின்னம்
வருமன்னதரிசனமுஞ்செய்துவைத்தே
ஆறானமாதத்திலன்னமீந்து
மதற்குமேலாண்டு நிறைகலியாணந்தான்
பேறாகச்செய்துவைக்கவளர்ந்தார்தூப்புற்
பிள்ளைதான் வேதாந்தக்கிள்ளைதானே.