தொண்ணூற்றியிரண்டாவது ஸர்க்கம்
அகஸ்தியர் மேலும் கூறத்தொடங்கி, ஸ்ரீராம! தண்டகனென்னு மவ்வரசன் இப்படியாக அனேக வருஷ காலம் இனிது ஆட்சி புரிந்து வருகையில், ஒரு கோடை கால மாலைப் பொழுதில், அழகியதான சுக்கிராசாரியருடைய ஆச்ரமத்திற்குச் சென்றனன். அதுபோது அங்கு மிக்க அழகு வாய்ந்த கன்னிகையான சுக்கிராசாரியாருடைய மகளைக் கண்டு. அரசன் அறிவிழந்து காமனுக்கு வசமாயினன் அவன் அக் கன்னிகையை விளித்து -' அழகிற் சிறந்த பவழக் கொடியே! நீ யார்? உன்னைக் கண்டதும் எனது மனம், பஞ்சபாணனுக்குத் தஞ்சமாகியது. என்னை யணைந்து இன்பமூட்டுவாயாக' என்றனன். அவள் அது கேட்டு தண்டகனை நோக்கி, 'நான் உனது ஆசாரியரின் மூத்த மகளான அரஜை என்பவள். உனக்கு என்னிடம், காதலுண்டானதாயின், தர்மமான நேர்வழியில், எனது தந்தையிடஞ் சென்று, வரித்து வேண்டிக் கொள்க. அவ்வாறின்றி அக்கிரமஞ் செய்வாயாகில், உனக்கு மிகக் கொடிய சாபம் நேரிடும். தவ வலிமை பெற்ற எனது தந்தை முனிவராதலால், மூவுலகங்களையும் எரித்து விடுவார்', என்று வணக்கமாகக் கூறினாள்.
அரஜை இப்படி நயமாகக் கூறிய போதிலும், தண்டகன் அதனை லக்ஷ்யம் செய்யாமல், காமாதுரனாகி, முடி மீது கைவைத்து அஞ்சலி செய்து 'பெண்மணி! என் மீது கருணை கொள். காலதாமதஞ் செய்யாதே. மிக்க முகவழகுள்ள மாதே! உன்னைப் புணர்ந்த பின்னர் எனக்கு மரணம் நேரிடினும் நேரிடுக. அதினும் மிக்க சாபம் நேரிடினும் நேரிடுக' என்றுகூறி, நடுக்கமுற்று நினற அப்பெண்மணியைத் தனது கைகளால் பிடித்திழுத்து, அவளுடன் தன் இஷ்டம் போல் வலியப் புணர்வானாயினன். பிறகு தண்டகன் தனது நகரம் செல்ல, அரஜை ஆச்ரமத்தினருகே அழுத வண்ணம் தந்தையின் வரவை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தனள்.
தொண்ணூற்றி மூன்றாவது ஸர்க்கம்
(தண்டகன் சாபம் பெற்றது)
ஹே ராமச்சந்திர! பிறகு சுக்கிராசாரியர் தமது ஆச்ரமத்திற்கு வந்து; தண்டகன் தனது மகளுக்கிழைத்த கொடிய செயலைக்கேட்டு, மிக்க கோபங் கொண்டு, 'துஷ்ட புத்தியும், பாபச் செயலுமுடையவனான இவ்வரசன், ஏழு தினங்களில், சேனை முதலிய பரிவாரங்களுடனும், வாகனங்களுடனும், மரணமடைவானாக மதகேடனான இவனது ராஜ்யத்தில், தேவேந்திரன் மிகக் கொடியதான மண்மாரி பொழிவித்துச் சுற்றிலும் நூறு யோசனை தூரம் இதனையழித்து விடுவானாக. அம்மண்மாரியினால், இந்த ராஜ்யத்திலுள்ள ஸகலமான ஸ்தாவரஜங்கமங்களும் நாசமுறுமாக எனக் கொடிய சாப மிட்டனர்.
பிறகு சுக்கிராசாரியார், அந்த ஆச்ரமத்திலுள்ளோரனைவரையும் நோக்கி, நீங்களனைவரும், இத்தேசத்தின் எல்லைக்கப்பால் சென்று விடுங்கள். என்று கட்டளையிட்டனர். பின் அரஜையைப் பார்த்து- “மதிகெட்டவளே துன்மார்க்கனின் பாபச் செயலுக்கு நீ உடன்பட்டாயாதலால் அப்பாபத்தை யொழிப்பதற்கு இந்த ஆச்ரமத்திலே இருந்து கொண்டு தவம் செய். இந்த ஆச்ரமமும், இங்கிருக்குமிந்தத் தடாகமும், இவ்வாறே என்றைக்கும் அழியாதிருக்கக் கடவன. நீ இங்கேயே மனக் கவலையற்று உனது நற்காலத்தின் வரவை எதிர் நோக்கி இனிது வாழ்க. மண்மாரி பொழியுமிரவில் உன்னருகில் எந்தெந்த பிராணிகள் இருக்கின்றனவோ அவற்றிற்கு அதனால் அழிவு உண்டாகாது”, என்றார்.
பிறகு ஏழு நாட்களுக்குள் தண்டகனது ராஜ்யமானது சுக்கிரரது சாபத்தினால் நாசமாயிற்று. அசுர குருவினால் இப்படி சபிக்கப்பட்ட இவ்விடம் தண்டகாரண்யம் எனப் பிரஸித்தி பெற்றது. பிறகு இதில் தபஸ்விகள் பலர் வந்து சேர இது ஜனஸ்த்தான மாகியது" என்று கூறி முடித்து, ராமனை, ஸாயம் ஸந்த்யாவந்தனம் செய்ய அழைத்தனர்.
தொண்ணூற்றி நாலு, தொண்ணூற்றி ஐந்தாவது ஸர்க்கங்கள்
(ஸ்ரீராமன் அயோத்யை சென்று, அச்வமேத யாகம் செய்தது)
அகஸ்திய முனிவர் இப்படிக் கூறக்கேட்டு, ஸ்ரீராமன் மிக்க ஆச்சர்யமடைந்தவராய் ஸாயம் ஸந்த்யாவந்தனத்தை முடித்துக் கொண்டு, ரிஷியினால் அளிக்கப்பட்ட அம்ருதோபமான நல்ல கந்த மூலங்களையும் பழங்களையும் சாப்பிட்டு, அன்றிரவு அந்த ஆச்ரமத்திலேயே படுத்துத் தூங்கினன். மறுநாள் பொழுது விடிந்ததும், ஸ்ரீராமன் துயில் நீங்கி எழுந்து, ப்ராதானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, முனிவரை வணங்கி, அவரிடம் விடைபெற்று அயோத்திக்குப் புறப்பட்டனர். அன்று நடுப்பகலில் அயோத்தியை யடைந்து, அங்கங்கே பலரும் கொண்டாடிப் புகழத் தனது அரண்மனையை சேர்ந்து, அதன் நடுவிலுள்ள சபாமண்டபத்தில் கீழேயிறங்கி, புஷ்பக விமானத்தை வாழ்த்தி விடைகொடுத்தனுப்பிவிட்டு. வாயில் காப்போனை யழைத்து, பரத லக்ஷ்மணர்களை சீக்கிரம் அழைத்து வருமாறு கட்டளையிட்டனன்,
அச்வமேத யாகம் செய்தல்-
உடனே பரத லக்ஷ்மணர்கள் அங்கு வந்ததைக் கண்ட ஸ்ரீராமபத்ரன் அவர்களை அன்புடனே ஆலிங்கனம் செய்து கொண்டு அவர்களைப் பார்த்து - 'சகோதரர்களே! நான் பிரதிஜ்ஞை செய்தபடி காரியம் செய்து வைதிகன் மகனை உயிர்பெறச் செய்தேன். இனி ராஜ தர்மம் மேன்மேலும் வளருவதற்கு ஹேதுவான ராஜஸூய யாகம் செய்ய நினைத்துள்ளேன். இந்த யாகம் செய்வதனால் ஸகலமான பாபங்களும் நாசமடையுமாதலால், உங்களிருவருடன் சேர்ந்து அந்த யாகத்தைச் செய்ய விரும்புகிறேன். ராஜாக்களுக்கு அழியாப் புகழ் உண்டாவதற்கும், இந்த ராஜஸூய யாகமே காரணமாகும். மித்திரன் என்பவன் இந்த யஜ்ஞத்தைச் செய்து, சத்ருக்களை வென்று வருணபதம் பெற்றனன். ஸோமன் இதைச் செய்து என்றுமழிவற்ற சாச்வதமான பதம் பெற்றனன். ஆதலால் இப்பொழுது, நீங்கள் என்னுடன் கூடி, ஆலோசித்து உசிதமானதைக் கூற வேண்டும், என்றனன்
அது கேட்டு, பரதன் கைகூப்பிக் கொண்டு 'ஸ்வாமின்! தேவரீர் இவ்வுலக முழுமைக்கும் சக்கரவர்த்தியாகயிருக்கிறீர். ப்ரஜைகள் உம்மை பிதாவைப்போல் மதிக்கின்றனர். இப்பூமண்டலத்திற்கும். இதிலுள்ள ஸகலப் பிராணிகளுக்கும் புகல் தேவரீரேயன்றி வேறில்லை.
இப்படிப்பட்ட தேவரீர் இந்த யாகத்தைச் செய்ய நினைக்கும் காரணம் யாதோ? இதனை தேவரீர் செய்வது தான் தகுதியோ? ஏனெனில் இதன் நிமித்தம் இப்புவியில் - பல ராஜ வம்சங்கள் அழியவேண்டி வருமே. அரசே! ஸோமன் ராஜஸூய யாகஞ் செய்தவளவில் ஆகாசத்திலுள்ள நக்ஷத்திரங்கள் கோரமான யுத்தம் செய்யலாயின. அரிச்சந்திரன் ராஜஸூயஞ் செய்த காலததில் க்ஷத்ரியாகள் அனைவரும் நாசமடைந்தனர். தேவேந்திரனது ராஜஸூய யாகத்நில் மிகக் கொடிய தேவாஸுர யுத்தம் நடந்தது. அனேகப் பிராணிகள் நாசமுற்றன. புருஷச்ரேஷ்டரான தேவரீர் இதனை நனகு ஆராய்ந்து ப்ராணிகளின் ஹிதத்தைச் சிந்திதது உணரவேண்டும்” என்றனன். ஸ்ரீராமன் பரதனது இனிய சொல்லைக் கேட்டு, மிகக் களிப்படைந்து, அவனை நோக்கி, “பரத! தா்ம மார்க்கததையனுஸரித்து நீ கூறிய வார்த்தை முற்றும் நன்றே. இது யாவருக்கும ப்ரீதியையும் ஆனந்தத்தையும் விளைவப்பதன்றி நன்மை பயக்குவதுமாயுமுள்ளது. நீ கூறியவாறு உலகத்திற்கு உபத்திரவமான கார்யம் உத்தமர்கள் ஒரு பொழுதும் செயயத் தகுந்ததன்று. ஆதலால் நான் உனது விருப்பப்படி ராஜஸூயம் செய்யவேண்டுமென்னும் எனது மனோரதத்தை மாற்றிக்கொள்கின்றேன். நீ சிறியோனாயினும், உனது வார்த்தைகள நியாயமும் தருமமும் தவறாதனவாயிருததலால் ஏற்றுக் கொளளத் தக்கவையே” என்று கூறினன்.