ஆறாங் களம்
இடம்: கோசலை யரண்மனை
காலம்: காலை
பாத்திரங்கள்: இராமர், தோழிகள், கோசலை.
[ அக்கினி குண்டம் நிருமிக்கப்பட்டிருக்கின்றது. அதன் ஒருபக்கமாக பூரண கும்பங்களும், சிறு சிறு தங்க வட்டில்களில், அக்ஷதை, தயிர், நெய், பாயசம், பொரி, அவிசு (உப்புப் போடாத வெண்பொங்கல்), மோதகம் முதலியவைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கோசலை விரதானுஷ்டானத்தோடு சூரிய பூசை செய்து அக்கினிக்கு முன் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாள். இராமர் வருகிறார். கோசலை அவரைக்கண்டு முகமலர்ந்து எழுந்து எதிராகச் செல்கிறாள். இராமர் நமஸ்காரம் செய்கிறார்.]
கோசலை:-- (தனக்குள்ளாக) இதென்ன நமது குமாரன் சிரம் செம்பொன் முடி புனையப் பெறவில்லை.! குஞ்சி,மஞ்சனப் புனித நீரால் நனையப் பெறவில்லை! அவனுக்கிருபுறத்திலும் இராஜசின்னமாகக் கவரி வீசப்படவில்லை. வெண்கொற்றக் குடையையும் காணேன். ஏதோ விசேஷம் தெரியவில்லை. எல்லாவற்றையும் பொறுமையாய் விசாரிப்போம். இப்பொழுது வணங்கிய என் செல்வனை வாயார வாழ்த்துகின்றேன். (இராமரை உச்சிமோந்து கண்குளிர நோக்கி) மைந்த! நீ அஷ்ட ஐஸ்வர்ய சம்பன்னனாய், ஆயுராரோக்கிய திடகாத்திரனாய் நீடூழி காலம் வாழ்ந்து, நெறி திறம்பாது செங்கோல் செலுத்திப் புகழும் புண்ணியமும் பெறக்கடவை. உனது தந்தை சூரிய சந்திரர் திசை மாறினாலும் சொன்ன சொல் தவறாத தர்மிஷ்டர். உனக்குப் பட்டாபிஷேகம் செய்வதாக அவர் கூறியபோதே, உனக்குப் பட்டாபிஷேக மாய்விட்டதாக நான் நிச்சயித்து விட்டேன். இனி என் மனக்குறைகள் அனைத்தும் மாறிவிட்டன. கண்மணீ! அபிஷேக காலம் நெருங்கிவிட்டதே! நீ மஞ்சன நீர் ஆடவேண்டாமா? மற்றும் சடங்குகள் பல செய்ய வேண்டாமா? உனக்கு இன்று முழுவதும் ஒழியா வேலையாயிருக்குமே! ஏது இவ்வளவு தூரம் ஒழிவாக என்னை நாடி வந்தாய்? என்னுடைய ஆசீர்வாதத்தைப் பெறவேண்டி வந்தனையா? வேறு விசேஷம் ஏதேனும் உண்டா? உன் பவளவாய் திறந்து சொல்லடா என் செல்வமே!
இராமர்:-- அம்மணீ! தங்களுடைய ஆசீர்வாதத்தை நான் பெறுவதற்கு மட்டுமல்ல இங்கு வந்தது. தங்களுடைய காதற்குமரன் பரதன், சீக்கிரம் கேகய நாட்டிலிருந்து வருவான், அவனையும் தாங்கள் ஆசீர்வதிக்கவேண்டும். சிறுவனாதலால், உங்களுடையவும், மற்றும் அரண்மனைப் பெரியோர்களுடையவும் ஆசீர்வாதத்தாலேயே அவன் இவ்விராச்சிய பாரத்தைச் சுமக்கத் தகுதியுள்ளவனாவான்.
கோசலை:-- குழந்தாய்! நீ கூறுவதென்ன, விந்தையாயிருக்கிறதே! உனக்குப் பட்டாபிஷேகமானால் இராச்சிய பாரத்தைச் சுமக்க வேண்டியது நீதானே! பரதன் உனக்குத் துணையாயிருந்து உதவி புரிவான். அவனுக்கு என்ன சுமை வரப்போகிறது?
இராமர்:-- அம்மணீ! என் தம்பி பரதனுக்கே இன்று பட்டாபிஷேகமாகப் போகிறது, எனக்கல்ல.
கோசலை: -- என்ன? பரதனுக்குப் பட்டாபிஷேகமா?
இராமர்:-- ஆம்
கோசலை:-- யார் உரைத்தது?
இராமர்:-- தந்தை இட்ட கட்டளையம்மா. பரதனுக்குப் பட்டமாவதில் தங்களுக்கு ஏதும் அதிருப்தியுண்டோ?
கோசலை:-- இராமா!
முறைமை யன்றென்ப தொன்றுண்டு மும்மையின்
நிறைகு ணத்தவ னின்னினு நல்லனே
பரதன் உன்னிலும் மும்மடங்கு நற்குணம் நிறைந்தவன்; என் மனத்துக்கினியவன். தமயனாகிய உன்னிடத்து மிகவும் பயபக்தி பூண்டவன். அவனுக்குப் பட்டமாவதைக் குறித்து எனக்கு யாதொரு ஆக்ஷேபமுமில்லை. ஆனால் அவன் அரசர்க்கு மூத்த குமாரனாய்ப் பிறக்கவில்லை. குலத்தில் மூத்தவர்க்கே முடி சூடுவது நம் சூரியகுல மரபு, ஆதலால் அந்த வரன்முறை வழுவுமே என்று மட்டும் எண்ணுகிறேன். இருந்தாலும்,
ஒன்று கேளிது மன்னவ னேவிய
தன்றெ னாமை மகனே யுனக்கறன்
நன்று நும்பிக்கு நானில நீகொடுத்
தொன்றி வாழுதி யூழி பலவிருந்து.
நான் ஒரு சூழ்ச்சி சொல்லுகிறேன் கேள். அரசரே தமது மூத்த குமாரரைத் தள்ளிவிட்டு இளையனாகிய பரதனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்தார் என்று வேண்டாம். அரசரிடமிருந்து நீயே முறைப்படி இராச்சியத்தைப் பெற்றுக்கொண்டது போலப் பெற்றுக்கொண்டு, பிறகு பரதனுக்கு நீ பட்டாபிஷேகஞ் செய்து, இருவரும் நெடுநாள் ஒருமித்து வாழ்ந்திருங்கள். இதனால் அபவாதத்திற்கு மிடமில்லாமல் போகும்.
இராமர்:-- அம்மணீ! தாங்கள் கூறுவது மெத்தவும் உத்தமமான நெறியே. ஆயினும் நான் அதை நிறைவேற்ற ஏலாதவனாயிருக்கின்றேன். ஏனெனில் தந்தையார் எனக்கிட்ட கட்டளை வேறொன்றுண்டு; அதை நிறைவேற்ற வேண்டும்.
கோசலை:-- அதென்ன கட்டளையடா கண்மணீ!
இராமர்:-- அன்னாய்!
ஈண்டு நைத்தய ணியென்னை யென்பையேல்
ஆண்டொ ரேழினோ டேழகன் கானிடை
மாண்ட மாதவ ரோடுடன் வைகிப்பின்
மீண்டு நீவரல் வேண்டுமென் றுரைத்தனன்
அந்தக் கட்டளை என்ன என்பீர்களேல், சொல்லுகின்றேன் கேளுங்கள். விசுவாமித்திரரோடு முன்னம் வனம் சென்று பெரும்பேறு பெற்றேனாதலால், அத்தகைய ரிஷீஸ்வரர்கள் கூட்டுறவால் நான் இன்னம் அதிகப் பேறு பெற வேண்டு மென்பது தந்தையாரது விருப்பம். ஆதலால் நான் ஈரேழு வருஷம் வனவாசஞ்செய்து, அங்குள்ள முனிசிரேஷ்டர் களுடைய ஆசீர்வாதத்தையும் பெற்று அனுக்கிரகத்தையும் பெற்றுத் திரும்பி வரவேண்டுமென்று அவர் கட்டளை யிட்டிருக்கிறார். அங்ஙனமே நான் வனஞ் செல்வதற்குத் தங்களிடம் உத்தரவு பெற்றுக்கொள்ள வந்தேன். அடியேனை ஆசீர்வதித்து அனுப்புங்கள்.
கோசலை:-- ஆ, மகனே! (மூர்ச்சித்துக் கீழே விழுகிறாள்; திரும்பவும் எழுகிறாள்; கையைக் கையோடு நெரிக்கிறாள். வயிற்றைப் பிசைந்து கொள்ளுகிறாள். இராமரைப் பார்த்து) கண்மணீ! என்ன கால வித்தியாசமடா இது! உன்னைப் பிரிந்து நான் எங்ஙனமடா உயிர் வாழ்வேன்? என் ஐயா, பெற்ற வயிறு பற்றி எரிகிறதடா! யார் செய்த கொடுமை இது? என் மனம் நடுங்குகின்றதே! என் உயிர் ஒடுங்குகின்றதே! யாருக்காக நான் இனி உயிர் வாழ்வது? ஐயோ, மாதவஞ் செய்யவோ உன்னை மாதவம் செய்து பெற்றேன்! வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்ததுபோலப் பட்டாபிஷேகமாகுந் தருணத்தில் இந்த உற்பாதமுண்டாக வேண்டுமா? குழந்தாய்! தந்தையா உன்னை வனஞ் செல்லுமாறு கட்டளையிட்டார்! ஆ!
வஞ்ச மோமக னேயுனை மாநிலம்
தஞ்ச மாகநீ தாங்கென்ற வாசகம்
நஞ்ச மோவினி நானுயிர் வாழ்வெனோ
அஞ்சு மஞ்சுமென் னாருயி ரஞ்சுரால்.
மகனே! நேற்று உன்னை அழைத்து "நாளைய தினம் உனக்கு முடிசூட்டப் போகின்றேன். இனி இவ்வுலகத்தைத் தாங்க வேண்டியது உன் பொறுப்பு" என்று கூறினாரே உன் தந்தை, அவ்வாறு கூறியது வஞ்சகமா? குழந்தாய், நீ கூறிய மொழிகள் நஞ்சுபோல் என்னை வருத்துகின்றனவே. இனி நான் எவ்வாறு உயிர் வாழ்வேன்? என் நெஞ்சம் அஞ்சி நடுங்குகின்றதே! அரசர் தரும நெறி வெகு நன்றாயிருக்கிறது! என்றைக்கடா குழந்தாய், நீ காட்டுக்குப் போகின்றனை? ஏ, தெய்வங்களே! எனக்கு நீதியில்லையா? தருமமில்லையா? என் ஆருயிர்ச் செல்வன் ஆரணியஞ் செல்வது உஙகளுக்கும் சம்மதம்தானோ? அடா, என் அருமைப் புதல்வா! 'அன் பிழைத்த மனத்தரசர்க்கு நீ என் பிழைத்தனை'? கூறடா. அவர் உன்னை வெறுக்கத் தக்கதாக நீ ஏதேனும் பிழை செய்திருப்பையோ?
இராமர்:-- அப்படி என் மனமறிய நான் ஒரு குற்றமும் செய்ததில்லையம்மா.
கோசலை:-- ஆனால், உன்மீது மிகவும் பிரியம் வைத்திருந்த அவர், திடீரென்று உன்னை வெறுக்க நேரிட்ட காரணம் என்ன?
(தொடரும்)