வியாழன், 1 டிசம்பர், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 33

வினா 64.- குந்தி கிருஷ்ணனோடு சொல்லிவிட்டதையும்‌, பகவான்‌ கர்ணனோடு சொன்னதையும்‌, யார்‌ திருதிராஷ்டிரனுக்குத்‌ தெரிவித்தது?

விடை.- குந்தி சொன்ன விஷயங்களை பீஷ்மரும்‌ துரோணரும்‌, திருதிராஷ்டிரனுக்கும்‌ துர்யோதனனுக்கும்‌ தெரிவித்து, மறுபடியும்‌ ஸமாதானம்‌ செய்யவேண்டியது அவசியம்‌ என்று வற்புறுத்தினார்கள்‌. ஸஞ்சயர்‌ கர்ணனுக்கும்‌ பகவானுக்கும்‌ நடந்த ஸம்பாஷணையை ஆதியோடந்தமாகச்‌ சொன்னார்‌.

வினா 65.- பகவான்‌ பாண்டவரிடம்‌ சென்றதும்‌, கர்ணனுக்கு வேறு யார்‌ புத்திமதி கூறியது? அதற்குக்‌ கர்ணன்‌ என்ன பதில்‌ சொன்னான்‌?

விடை... விதுரரால்‌ ஏவப்பட்டுக்‌ குந்தி, கர்ணனுக்குப்‌ புத்தி கூறச்‌ சென்றாள்‌. கர்ணனை நோக்கி நீயும்‌ அர்ஜுனனும்‌ சேர வேண்டியது அவசியம்‌. நீ இப்படிச்‌ செய்தால்‌ உன்னைப்‌ பாண்டவர்கள்‌ மரியாதை செய்வார்கள்‌ என்று சொன்னாள்‌. இவ்வாறு குந்தி சொன்னதும்‌, ஸுூர்யனும்‌ குந்தி சொல்லியபடி அவசியம்‌ செய்யவேண்டும்‌ என்று வற்புறுத்தினான்‌. கர்ணன்‌, குந்தியை நோக்கித்‌, 'துர்யோதனாதியரை இந்தக்‌ கஷ்டகாலத்தில்‌ நான்‌ விட்டுப்‌ பிரியமாட்டேன்‌. நீ என்னிடம்‌ வந்ததற்காக நான்‌ ஒரு உபகாரம்‌ உனக்குச்‌ செய்கிறேன்‌. அர்ஜுனனைத்‌ தவிர நான்‌ மற்றைய தம்பிகளைக்‌ கொல்லமாட்டேன்‌. என்‌ கையில்‌ அவர்கள்‌ அகப்பட்ட போதிலும்‌, அவர்களை உயிரோடு விட்டு விடுகிறேன்‌ என்று சொல்லத்‌ தாயும்‌ பிள்ளையும்‌ பிரிந்து போனார்கள்‌.

வினா 66.- பகவான்‌ உபப்லாவ்யம்‌ சென்றதும்‌ அங்கு என்ன நடந்தது? ‌

விடை. பீஷ்ம துரோணாதிகளும்‌, தாமும்‌ எவ்வளவோ சொல்லிப்‌ பார்த்தும்‌ துர்யோதனன்‌ கேட்காததையும்‌, அங்கு இன்னும்‌ நடந்த விசேஷங்களையும்‌ பகவான்‌ யுதிஷ்டிரரிடம்‌ ஆதியோடந்தமாக எடுத்துச்‌ சொல்லி, இனிமேல்‌ தாமதியாமல்‌ யுத்தத்திற்குத்‌ தயாராக வேண்டும்‌ என்று உத்தரவு கொடுத்துவிட்டார்‌.

வினா 67.- இப்படிப்‌ பகவான்‌ யுத்தத்திற்கு ஸந்நாகமாகும்படி உத்திரவு கொடுத்ததும்‌ பாண்டவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை... யுதிஷ்டிரர்‌ தமது 7 அக்ஷோகினி ஸேனைகளையும்‌, வியூகங்களாகப்‌ பிரிக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு, ஸேனாதிபதிப்‌ பட்டம்‌ யாருக்குக்‌ கொடுப்பதென்று, தம்பிமார்‌, பகவான்‌, முதலானவர்களோடு ஆலோசித்தார்‌. அப்பொழுது ஸஹாதேவன்‌ விராடராஜனையும்‌, நகுலன்‌ துருபத ராஜனையும்‌, அர்ஜுனன்‌ திருஷ்டத்யும்னனையும்‌, பீமன்‌ சிகண்டியையும்‌ ஸேனாதிபதியாக விருக்கத்‌ தகுந்தவர்கள்‌ என்று சொன்னார்கள்‌. கடைசியில்‌ யுதிஷ்டிரர்‌ பகவானைக்‌ கேட்க, அவர்‌ திருஷ்டத்யும்னனே தகுந்தவன்‌ என்று சொல்ல, அவனுக்கே இந்தப்‌ பட்டங்‌ கொடுத்தார்கள்‌. இதற்குள்‌ பாண்டவஸேனை, அணிவகுக்கப்பட்டுத்‌ தயாராய்‌ நிற்க, பாண்டவர்கள்‌ தமது படைகளை அழைத்துக்கொண்டு குருக்ஷேத்திர பூமி வந்து அங்‌குத்‌ தண்டிறங்கினார்கள்‌.

வினா 68.- பகவான்‌ யுத்தம்‌ தொடங்கவேண்டும்‌ என்ற தீர்மானத்துடன்‌ உபப்லாவ்யம்‌ சென்றதும்‌, யுத்த விஷயமாய்‌ ஹஸ்தினாபுரியில்‌ என்ன யத்தனங்கள்‌ நடந்தன? தர்மபுத்திரர்‌ இதற்கேற்ற ஏற்பாடு என்ன செய்தார்‌?

விடை... துர்‌மந்திரிகளாகிய கர்ண துச்சாஸன சகுனிகளால்‌ தூண்டப்பட்டத்‌ துர்யோதனன்‌ யுத்தத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள்‌ செய்யத்‌ தொடங்கினான்‌. பீஷ்மருக்கே அவன்‌ தன்‌ பக்கத்தில்‌ ஸேனாதிபதிப்பட்டம்‌ கொடுக்க அவரும்‌ அதை ஒப்புக்கொண்டு விளங்கினார்‌. இதன்‌ பின்பு துர்யோதனனது 11 அக்ஷோகினி ஸேனைகளும்‌ யுத்தத்திற்குத்‌ தயாராயின. தர்மபுத்திரரும்‌ இதை அறிந்து, தமது 7 அக்ஷோகினி ஸேனைக்கும்‌ 7 ஸேனைத்தலைவர்களை ஏற்படுத்தி, அர்ஜுனனை இவ்வேழுபேருக்கும்மேல்‌ அதிபதியாக்கினார்‌. அதன்பின்பு பகவானுக்குப்‌ பொதுவான ஆதிபத்தியம்‌ கொடுத்தார்‌.

வினா 69.- இவவாறு பாண்டவர்கள்‌ யத்தனம்‌ செய்துகொண்டிருக்கையில்‌ அவர்களைப்‌ பார்க்க யார்வந்து என்ன சொன்னார்‌? பின்‌ அவர்‌ என்ன செய்தார்‌?

விடை. குருக்ஷேத்திரத்தில்‌ பலராமர்‌ பாண்டவர்களிடம்‌ வந்தார்‌. அப்பொழுது யாவரும்‌ எழுந்து பலராமருக்கு வந்தனம்‌ செய்தார்கள்‌. அப்பொழுது பலராமர்‌, தான்‌ ஒருவர்‌ பக்கத்திலும்‌ சேருவதில்லை என்றும்‌, இந்த யுத்தத்தில்‌ எல்லா க்ஷத்திரியர்‌களும்‌ இறக்கப்போகிறார்கள்‌ என்றும்‌, கடைசியில்‌ ஜயம்‌ பாண்டவர்களுக்கு வருமென்றும்‌ எடுத்துரைத்த பின்பு தீர்த்த யாத்திரைக்காகச்‌ சென்றார்‌.

வினா 70.- வேறு யார்‌ பலராமரைப்போல நடந்து கொண்டது? ஏன்‌?

விடை... விதுரரும்‌ ஒரு பக்கத்திலும்‌ சேராது, இத்தருணத்தில்‌ தீர்த்த யாத்திரைக்குப்‌ புறப்பட்டார்‌. பகவான்‌ தூது வந்து சென்றதும்‌, ஒருநாள்‌ இரவில்‌, விதுரர்‌ திருதிராஷ்‌டிரனோடு வெகு நாழிகை துர்யோதனன்‌ முரட்டுத்தனத்தைப் பற்றிப்‌ பேசிக்‌ கொண்டிருக்கையில்‌, அவனை மாத்திரம்‌ சிறையிலடைத்துப்‌ பாண்டவர்களோடு ஸமாதானம்‌ செய்துகொண்டால்‌தான்‌ கெளரவர்கள்‌ பிழைப்பார்கள்‌, இல்லாவிடில்‌ எல்லோரும்‌ யுத்தத்தில்‌ மாண்டு போக வேண்டியதுதான்‌ என்று சொல்லிமுடித்தார்‌. இவைகள்‌ எல்லாவற்தையும்‌ ஒளிந்து கேட்டுக்கொண்டிருந்த துர்யோதனன்‌ கோபாவேசத்தோடு வெளியில்‌ வந்து, விதுரரை வாயில்‌ நரம்பில்லாது திட்டி தன்‌ ஊரைவிட்டே போய்விடும்படி கட்டளையிட்டான்‌. இந்தத்‌ தருணம்‌ வரவேண்டும்‌, துராத்மாவான துர்யோதனனிடமிருந்து பிரியவேண்டும்‌ என்று காத்திருந்த விதுரர்‌ தமது அம்பறாத்‌ தூணியையும்‌, வில்லையும்‌ அங்கேயே வைத்துவிட்டு பாண்டவர்கள்‌ பக்கம்‌ தனக்குச்‌ சோறிட்டவனுக்கு விரோதமாய்‌ அந்த ஆபத்காலத்தில்‌ போக மனம்வராதவராய்‌, பலராமர்போலத்‌ தீர்த்த யாத்திரைக்குப்‌ புறப்பட்டார்‌.

வினா 71.- பலராமர்‌ இவ்வாறு தீர்த்தயாத்திரை சென்றதும்‌, குருகேஷேத்திரத்தில்‌ என்ன நடந்தது?

விடை... கிருஷ்ண பகவானது மைத்துனனான ருக்மி என்பவன்‌, பாண்டவர்களுக்கு ஸகாயம்‌ செய்யவந்து தன்பலத்தைப்பற்றி பெருமை பாராட்டினான்‌. அப்பொழுது அர்ஜுனனுக்குக்‌ கோபம்வர, அவன்‌ ஸகாயம்‌ தன்‌ பக்கத்தில்‌ வேண்டுவது அவ்வளவு அவசியமில்லை என்றான்‌. உடனே ருக்மி கோபத்தோடு துர்யோதனன்‌ பக்கம்‌ சேரலாம்‌ என்று போய்‌ அங்கும்‌ முன்போல பெருமை பேசினான்‌. இதைக்‌ கேட்டதும்‌, துர்யோதனனுக்குப்‌ கோபம்‌ வர தனக்கும்‌ அவன்‌ ஸகாயம்‌ வேண்டுவதில்லை என்று தள்ளிவிட, ஒரு பக்கத்திலும்‌ சேராது ருக்மி தன்னூருக்குப்‌ போனான்‌.

வினா 72.- இதன்‌ பின்பு துர்யோதனன்‌ என்ன செய்தான்‌?

விடை... துர்யோதனன்‌ உலூகன்‌ என்ற ஒருவனை அழைத்து தர்மபுத்திரர்‌, பகவான்‌, திருஷ்டத்யும்னன்‌, சிகண்டி முதலிய பிரதான மனுஷ்யர்களுக்கு மனதில்‌ தைக்கும்‌ படியான தகாதவாக்கியங்களைத்‌ தூதாகச்‌ சொல்லி அனுப்ப, இவர்கள்‌ ஒவ்வொருவரும்‌ அவரவர்களுக்காகச்‌ சொல்லி அனுப்பிய வாக்கியங்களுக்குத்‌ தகுந்தபடி வீரத்தனமான மறுமொழிகளைச்‌ சொல்ல அவைகள்‌ எல்லாவற்றையும்‌ உலூகன்‌ துர்யோதனனிடம்‌ வந்துசொன்னான்‌. உடனே தூர்யோதனன்‌ படையை அணி வகுத்து நிற்கும்படி ஏற்பாடு செய்ய, யுதிஷ்டிரரும்‌ தமது ஸேனையை அணி வகுத்து, அப்பாகங்களை நிறுத்த வேண்டிய இடங்களில்‌ நிறுத்தினார்‌. அப்பொழுது திருஷ்டத்யும்னன்‌ கெளரவர்களில்‌ சிறந்தவர்களோடு இன்ன இன்னார்‌ யுத்தம்‌ செய்வது என்று ஏற்படுத்திச்‌ சண்டைக்கு எதிர்‌ பார்த்திருந்தான்‌.

வினா 73- இப்படிப்‌ பாண்டவர்கள்‌ யுத்த ஸந்நாகமாய்‌ இருக்கையில்‌ துர்யோதனாதிகள்‌ பக்கத்தில்‌ என்ன நடந்தது? ‌

விடை.- பீஷ்மர்‌ தனது பக்கத்திலும்‌ பாண்டவர்கள்‌ பக்கத்திலும்‌ உள்ள ரதர்‌, அதிரதர்‌ முதலிய வீரச்சிரேஷ்டர்களைச்‌ சொல்லிக்கொண்டு வருகையில்‌, கர்ணனை அர்த்தரதன்‌ என்று சொன்னார்‌. அப்பொழுது கர்ணனுக்கு அதிக கோபம்வர, பீஷ்மர்‌ உயிரோடிருக்கும்‌ வரையில்‌, தான்‌ சண்டை செய்வதில்லை என்று மறுபடியும்‌ சபதம்‌ செய்தான்‌. அப்பொழுது பீஷ்மருக்கு வந்த கோபத்தை துர்யோதனன்‌ அடங்கும்படி செய்தான்‌. பின்பு துருபதராஜன்‌ பிள்ளை சிகண்டியைப் பற்றிச்‌ சொல்லுங்கால்‌ பீஷ்மர்‌ அவன்‌ தம்மை அடிக்க எண்ணி எதிரே வந்த போதிலும்‌, அவனைத்தாம்‌ கொல்லப்போகிறதில்லை என்றார்‌.

வினா 74.- சிகண்டி விஷயத்தில்‌ பீஷ்மர்‌ இப்படி இருக்கக்‌ காரணம்‌ என்ன?

விடை.- இந்த சிகண்டி துருபதராஜனுக்குக்‌ குழந்தையாகப்‌ பிறந்ததும்‌, இவன்‌ முதலில்‌ பெண்ணாக இருந்து பின்பு ஆண்பிள்ளையாக மாறியவன்‌. ஆகையால்‌ இவனோடு சண்டைசெய்ய பீஷ்மருக்கு மனம்‌ வரவில்லை.

வினா 75.- சிகண்டி முதலில்‌ பெண்ணாய்‌ இருந்து எதற்காக ஆணாக மாறினான்‌? எவ்வாறு?

விடை.- துருபதராஜனுக்குப்‌ பெண்பிறந்ததும்‌, அதைப்‌ பிள்ளை என்று அவர்‌ எல்லோருக்கும்‌ சொல்லிவிட்டார்‌. இது உண்மை எனப்‌ பலரும்‌ நம்பிவிட, இச்சிகண்டிக்கு கல்யாணமாயிற்று. இவன்‌ பெண்சாதிக்கு, உடனே, தனது நாயகன்‌ ஒரு பெண்‌ என்று தெரிந்துவிட, தனது தகப்பனிடம்‌ சொல்லியனுப்பினாள்‌. உடனே இவள்‌ தகப்பன்‌. துருபதனைத்‌ தண்டிக்கப்‌ படை எடுத்து வந்தான்‌. அப்பொழுது தன்னால்‌ தன்‌ தகப்பனுக்கு கேடுவந்தது என்று மனம்‌ நொந்து சிகண்டி தற்கொலை செய்துகொள்ளக்‌ காட்டிற்குச்‌ செல்ல, அங்கு குபேரனது வேலைக்காரனாகிய ஸதூணாகர்ணன்‌ என்ற யக்ஷனைக்‌ கண்டான்‌. அவன்‌, இவனுக்குத்‌ தன்‌ ஆண்‌ தன்மையை கொடுத்துவிட, சிகண்டி கூடிய சீக்கிரத்தில்‌ தன்‌ பெண்‌ தன்மையை வாங்கிக்கொள்வதாகச்‌ சொல்லிவிட்டுத்‌ தன்‌ ஊர்‌ போய்ச்‌ சேர்ந்தான்‌.

வினா 76.- துருபதன்‌ கதி என்னமாயிற்று? சிகண்டி ஏன்‌ தன்‌ வாழ்நாள்‌ முழுதும்‌ ஆணாகவே இருந்து விட்டான்‌?

விடை... சிகண்டியின்‌ மாமனார்‌, ஊருக்கு வெளியில்‌ வந்து தண்டிறங்கி, சிகண்டியின்‌ தன்மையை அறிந்துவர ஆள்களை அனுப்பினான்‌. அவர்கள்‌ சிகண்டி, ஆண்பிள்ளை தான்‌ என்று வந்து கூற தனது ஸேனையை அழைத்துக்‌ கொண்டு தண்டிக்கவந்த அரசன்‌ தன்‌ ஊரை நோக்கிச்‌ சென்றான்‌. இதற்குள்‌ குபேரன்‌ தன்‌ வேலைக்‌காரனது செய்கையை அறிந்து, சிகண்டி சாகிறவரையில்‌ அவன்‌ ஆணாகவும்‌ தன்‌ வேலைக்காரன்‌ பெண்ணாகவும்‌ இருக்கும்படி சபித்தான்‌. இதனால்‌ சிகண்டிக்கு ஆண்தன்மை உயிருள்ளவரையில்‌ நிலைத்தது.

வினா 77.- இம்மாதிரி சிகண்டி பீஷ்மருக்கு விரோதியாய்‌ வருவானேன்‌?

விடை. சிகண்டி பூர்வ ஜன்மத்தில்‌ காசிராஜன்‌ புதல்வியாகிய அம்பாவாக இருந்தான்‌. அம்பா பட்டபாட்டை ஆதிபர்வத்தில்‌ ஒருவாறு சொல்லி இருக்கிறது. கடைசியாய்‌ பீஷ்மரைக்‌ கல்யாணம்‌ செய்துகொள்ள வேண்டும்‌ என்று இவளுக்கு ஆசை வந்தது. இதன்படி பீஷ்மர்‌ நடக்கமுடியாது என்று ஒரே பிடிவாதமாய்ச்‌ சொல்ல, முதலில்‌ அம்பாவுக்கு பீஷ்மரிடம்‌ விரோதம்‌ பிறந்தது.

வினா 78.- இந்த விரோதம்‌ பிறந்ததும்‌ அம்பா என்ன செய்தாள்‌?

விடை.- அம்பா பீஷ்மர்மேல்‌ கோபத்துடன்‌ ஸந்நியாஸினியாய்‌ மிகுதியான காலத்தைத்‌ தள்ளித்‌ தான்‌ மறுஜன்மத்திலாவது பீஷ்மரைக்‌ கொல்லவேண்டும்‌ என்ற எண்ணத்துடன்‌ காடுகளில்‌ திரிந்துவருகையில்‌ பரசுராமரிடம்‌ வந்து தனது கஷ்ட காலத்தைத்‌ தெரிவித்துக்‌ கொண்டாள்‌.

வினா 79.- பரசுராமர்‌ அம்பாவுக்காக என்ன செய்தார்‌? அது எப்படி முடிந்தது?

விடை... பரசுராமர்‌ அம்பாவை அழைத்துக்கொண்டு பீஷ்மரிடம்‌ சென்று, அவளைக்‌ கல்யாணம்‌ செய்துகொள்ளும்படி எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்‌. பீஷ்மர்‌ எவ்வளவோ விநயமாய்‌ தமது பிரம்மசரிய விரதத்திற்குக்‌ கேடுவரும்‌, ஆகையால்‌ தம்மால்‌ யாரையும்‌ கல்யாணம்‌ செய்து கொள்ள முடியாது என்று சொல்லியும்‌ பரசுராமருக்குக்‌ கோபம்வர, பீஷ்மரைக்‌ கொன்றுவிடுவதாகத்‌ தீர்மானித்து அவரைப்‌ பரசுராமர்‌ சண்டைக்கழைத்தார்‌. குருவானபோதிலும்‌ சண்டைக்கு அவரே முன்பு அழைத்தவுடன்‌ க்ஷத்திரிய தர்மப்படி பீஷ்மர்‌ யுத்தத்திற்குத்‌ தயாரானார்‌. இருவரும்‌ குருக்ஷேத்திரத்திற்கு வந்து சண்டைக்காக எதிர்த்தார்கள்‌. அப்பொழுது கங்கை வந்து தனது பிள்ளையைச்‌ சண்டைக்குப்‌ போகக்‌ கூடாது என்று தன்னாலானமட்டும்‌ தடுத்துப்‌ பார்த்தாள்‌. பீஷ்மர்‌ தன்‌ தாயின்‌ வாக்கியத்தைக்‌ கவனியாது க்ஷத்திரிய தர்மப்படி யுத்தத்திற்கு ஆரம்பித்துவிட்டார்‌.

வினா 80.- சண்டையில்‌ நடந்த விசேஷங்கள்‌ என்ன? அது என்னமாக முடிந்தது?

விடை.- முதலில்‌ பீஷ்மர்‌ தமது பாணங்களால்‌ பரசுராமரை பிரஜ்ஞை தவறும்படி செய்தார்‌. உடனே தமது குருவை இவ்வாறு செய்ததால்‌ பீஷ்மருக்கு மனவருத்தம்‌ வந்து விட்டது. கொஞ்ச நாழிகையில்‌ பரசுராமர்‌ எழுந்து பீஷ்மரை மூர்ச்சை அடையும்படி செய்ய, அவரது ஸாரதி தேரை ஒதுக்கிக்கொண்டு போனான்‌. உடனே பீஷ்மர்‌ எழுந்து சண்டைக்குத்‌ தயாரானார்‌. பரசுராமர்‌ பீஷ்மரது ஸாரதியைக்‌ கொன்றுவிட, அஷ்டவஸுக்கள்‌ பீஷ்மர்‌ முன்‌ தோன்றி அவரைத் தைரியப்‌ படுத்தினார்கள்‌. கங்காதேவிவந்து தன்‌ பிள்ளைக்கு ஸாரத்யம்‌ செய்யத்‌ தொடங்கினாள்‌. பீஷ்மர்‌ கங்கையைப்‌ போகச்சொல்லி விட்டுப்‌ பரசுராமரோடு சண்டைக்குத்‌ தொடங்கினார்‌. அப்பொழுது பரசுராமர்‌ கண்ணில்‌ துர்ச்சகுனங்கள்‌ பட்டன. அஷ்டவஸுக்கள்‌ பீஷ்மருக்கு பிரஸவபாஸ்திரத்தை ஞாபகப்படுத்த, அவர்‌ இதை பரசுராமர்மேல்‌ பிரயோகிக்கத்‌ தொடங்கினார்‌. அப்பொழுது நாரதர்‌ வந்து இதை விடக்கூடாது என்று தடுக்க பீஷ்மர்‌ நிறுத்தி விட்டார்‌. உடனே பரசுராமரது பிதிர்க்கள்‌ பீஷ்மரிடத்தில்‌ போய்‌ சண்டையை நிறுத்தச்சொல்ல, அவர்‌ நிறுத்த ‌ முடியாது என்று சொல்லிவிட்டார்‌. மறுபடியும்‌ இவர்கள்‌ பரசுராமரிடம்‌ வந்து சண்டையை எப்படியாவது நிறுத்த வேண்டுமென, அவர்‌ தாம்‌ அபஜயம்‌ அடைந்ததாகச்‌ சொல்ல இனிமேல்‌ க்ஷத்திரியனை சிஷ்யனாகக்‌ கொள்ளுவதில்லை என்று சபதம்‌ செய்துவிட்டு தமது இருப்பிடம்‌ சென்றார்‌.

வினா 81.- இதன்‌ பின்பு அம்பாவின்‌ கதி என்னமாயிற்று?

விடை.- அம்பா கதியற்றவளாய்ப்‌ போக, அவளுக்குப்‌ பீஷ்மரிடம்‌ இருந்த வெறுப்பு அதிகமாய்‌ விட்டது. உடனே மஹாதேவரைக்‌ குறித்துத்‌ தபஸு செய்ய அவர்‌ பிரத்யக்ஷமாக, அவரை நோக்கி நான்‌ எப்படி பீஷ்மரைக்‌ கொல்லதக்க நிலையை அடைய வேண்டும்‌' என்று கேட்க அவர்‌, 'அடுத்த ஜன்மத்தில்‌ நீ, புருஷனாகி பீஷ்மரைக்‌ கொல்லப்‌ போகிறாய்‌' என்று சொல்லி மறைந்தார்‌. உடனே அம்பா அக்கினிப்‌ பிரவேசம்‌ செய்ய துருபதராஜனுக்குப்‌ பெண்ணாக வந்து பிறந்தாள்‌. வினா 82.- இவ்வாறு பீஷ்மர்‌ சிகண்டியைத்‌ தான்‌ கொல்லாதிருப்பதற்குக்‌ காரணம்‌ சொல்லத்‌ துர்யோதனன்‌ ஸபையில்‌ என்ன நடந்தது?

விடை.- துர்யோதனன்‌ தனது பக்கத்திலிருக்கும்‌ ஸேனைத்‌ தலைவர்களது வீரியத்தை அதிகப்படுத்த, ' உங்களைத்‌ தனியே சண்டைக்கு விட்டால்‌ எவ்வளவு காலத்தில்‌ பாண்டவ ஸேனைகளை அழிப்பீர்கள்‌' என்று கேட்டான்‌. அப்பொழுது பீஷ்மர்‌ தமக்கு ஒருமாதம்‌ வேண்டும்‌ என்றும்‌, கிருபர்‌ தமக்கு இரண்டு மாதம்‌ வேண்டுமென்றும்‌, அசுவத்தாமா தனக்குப்‌ பத்து நாள்‌ வேண்டும்‌ என்றும்‌, கர்ணன்‌ ஜந்து நாள்‌ வேண்டும்‌ என்றும்‌ சொல்லப்‌ பீஷ்மர்‌ கர்ணனது தற்புகழ்ச்சியை நிந்தித்துப்‌ பேசினார்‌.