இந்த 22வது திருநாமமான தேவதாபாரமார்த்யவித் என்பதற்கு தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் மிக நீளமான வ்யாக்யானம் அமைந்திருக்கிறது. வ்யாக்யானம் மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் சற்று கடினமாக உள்ளது.
22. தேவதாபாரமார்த்ய வித்
( देवतापारमार्थ्यवित्) देवता – தேவதையினுடைய, पारमार्थ्य = உண்மையை, वित् == அறிந்தவர். பரதேவதை ஸ்ரீமந்நாராயணனென்கிற உண்மையையறிந்தவ ரென்றபடி. ஸ்ரீமந்நாராயணன் தான் பரதேவதையென்று சொல்வது கூடுமோ, சிவனன்றோ பரதேவதையென்று ஓதப்படுகிறது. எங்ஙனே யென்னில்; காரணவாக்கியங்களில் ஜகத்காரணமாகச் சொல்லப்பட்ட "ஸத் ப்ரம்மம்' இது முதலான சப்தங்கள் ஸாமாந்ய சப்தங்களாகையால் ஒரு விசேஷத்தில் பர்யவஸாநம் பண்ணவேணும், இப்படியானால் ஜகத்காரண மான வஸ்து த்ரிமூர்த்திகளிலொருவராயிருக்கவேணுமேயொழிய வேறு ஒருவருக்குங் கூடாதாகையால் ஜகத்காரணமாகச் சொல்லுகிற 'ஸத், ப்ரம்மம்” இதுமுதலான ஸாமாந்யசப்தங்கள் த்ரிமூர்த்திகளிலொருவரையே விசேஷித்துச் சொல்லுகின்றனவென்று சொல்லவேண்டுமாகையால் த்ரிமூர்த்திகளில் எவரென்று விசாரித்தால் த்ரிமூர்த்திகளிலொருவனான சிவனையே ஜகத்காரணமாகச் சொல்லுகிற அச்சப்தங்கள் கூறுகின்றன வென்று சொல்லவேணும்; எப்படியெனில் ச்வேதாச்வதரோபநிஷத்தில் ஜகத்காரணமென்றும், எல்லாவற்றிற்கும் மேலானவரென்றும், மோட்சத்தைக் கொடுப்பவனென்றும் சிவனையே விசேஷித்துச் சொல்லுகிறது, ஆகையால் ஜகத்காரணமான வஸ்துவைச்சொல்லுகிற அச்சப்தங்கள் சிவனையே சொல்லுகிறது. ஆனதினால் பரதேவதை சிவனென்றதாயிற்று. அவ்வுபநிஷத் தில் சிவனுக்கு ஜகத்காரணத்வம் முதலியவைகள் சொல்லி யிருக்கிறதோ வென்னில்; அவ்வுபநிஷத்தில் புருஷ ஸூக்தத்தில் சொல்வதுபோல் ஸகல குண விசிஷ்டனான பரமபுருஷனைச்சொல்லி, பின்பு அவனுக்கு மேலான வொரு வஸ்துவுண்டென்றும், அது தான் மோட்சத்தைக் கொடுக்குமென்றுஞ் சொல்லி, அவ்வஸ்து யாரென்றால் “सर्वगतश्शिवः” என்று விசேஷித்து சிவனையே சொல்லுகிறபடியால் அவ்வுபநிஷத்தில் ஜகத்காரணமென்றும் பாமபுருஷ னுக்கும் மேலானவரென்றும் மோட்சத்தைக் கொடுப்பவனென்றும் சிவனையே சொல்லுகிறதென்று விளங்குகிறது. பின்னும் சாந்தோக்கியோப நிஷத்து. தைத்தரீயோபநிஷத்து முதலிய உபநிஷத்துக்களிலும் சிவனை பரமபுருஷனுக்கு மேலானவரென்று ஓதப்படுகிறது. எங்கனேயெனில்; சாந்தோக்கியத்தில் தஹாவித்யையில் ஹ்ருதயத்துக்குள்ளிருப்பவனான பரமபுருஷனை ஆகாசசப்தத்தினால் சொல்லி, அப்பரமபுருஷனுக்குள்ளிருப் பவன் முமுக்ஷுக்களினால் உபாஸ்யனென்று சொல்லுகையாலும், தைத்தரீ யத்தில் தஹரவித்யையில் சாந்தோக்கியத்தில் போலவே சொல்லி; முமுக்ஷு களினால் உபாஸ்யனானவன் "महेश्वरः '' என்று சிவனுக்கு அஸாதாரணமான பெயரினால் சிவனை விசேஷிக்கிறதினாலும், ப்ருஹதாரண்யகோபநிஷத் தில் ஆகாசசப்தவாச்சியனான பரமபுருஷனிடத்தில் சயனித்துக் கொண்டிருக்கிறான் சிவன் என்கையாலும், அதர்வசிகையில் சிவன் “ஆகாச மத்யத்தில் த்யாநம் பண்ண வேண்டுமவன் ' என்று சொல்லியிருக்கையாலும் பரமபுருஷனுக்குள்ளிருப்பவனென்று சொல்லியிருக்கையால் அவனுக்கு அந்தர்யாமியாயிருக்குமவன் சிவனென்றே ஆகிறது. மேலும் அதர்வ சிரஸ்ஸில் தேவர்கள் ஸ்வர்க்க லோகம் போய் உருத்திரனைப் பார்த்து நீர் யாரென்று கேட்க, அவரும் நான் தான் முன்னுமிருக்தேன், இப்பவு மிருக்கிறேன், இனிமேலுமிருக்கப் போகிறேன், எனக்கு மேலான தில்லை'' என்று உருத்திரனே தன் ஐச்வரியத்தைக் கூறினான் பின்பு தேவதைகள் உருத்திரனை த்யாநம் பண்ணினார்களென்றும் ஸ்துதி செய்தார்களென்றும் சொல்லி, பின்பு " அவனே உருத்திரன், அவனே ஈசாநன், அவனே மஹேச் வரன், அவனே மஹாதேவன்'' என்று சிவநாமங்களைச் சொல்லி பின்பு ''பஸ்மத்தையெடுத்து உடம்பைத் துடைத்து அங்கங்களைத்தொட வேண்டி யது ' என்று அவனுடைய உபாஸந ப்ரகாரத்தைச் சொல்லியிருக்கையால் பசுபதியே மேலானவரென்றதாயிற்று, ஆகையால் பரதேவதை நாராயண னென்று சொல்வதெப்படியென்னில் ; ஸ்ரீமந்நாராயணன் தான் எல்லாவற் றிற்கும் மேலானவர், அவர் தான் பர தேவதையென்று சொல்வது கூடும். எப்படியெனில்; காரணவாக்கியங்களில் ஜகத்காரணமாகச் சொல்லப் பட்ட ''ஸத், ப்ரம்மம்' இது முதலான சப்தங்களையும் உபாஸனாவாக்கியங்களில் த்யானம் செய்யவேண்டியதாகச் சொல்லப்படுகிற "சம்பு, ஹிரண்யகர்ப்பன், சிவன்,” இது முதலான சப்தங்களையும், ஸாமாந்நியசப்தங்களாகையால் ஒரு விசேஷத்தில் பர்யவஸாநம் பண்ணவேண்டும், அவ்விசேஷம் எதென்று விசாரித்தால், " ஸ்ருஷ்டிக்கு முன்பு பிரமனில்லை, சிவனில்லை , பூமியில்லை, ஆகாசமில்லை, நாராயணன் ஒருவன் தானிருந்தான்'' என்று சொல்லுகிற சுருதிகளால் பிரமன் சிவன் இவ்விருவருக்கும் காரணமாகச் சொல்லப்படுகிற நாராயணனையே காரணவாக்கியங்களில் சொல்லப்பட்ட அச்சப்தங்கள் விசேஷித்து சொல்லுகின்றனவென்று சொல்லவேண்டுமாகை யால் நாராயணனே பரதேவதை யென்றதாயிற்று. காரணவாக்கியங்களில் ஜகத்காரணமாகச் சொல்லப்பட்ட 'ஸத்'' இது முதலான சப்தங்கள் ச்வேதாச் வதரோபநிஷத்தில் ஜகத்காரணமாகச் சொல்லப்பட்ட சிவனையன்றோ சொல்லுகிறதுகளென்று சொன்னோமேயென்ன. அவ்வுபநிஷத்தில் சிவனுக்கு ஜகத்காரணத்வம் சொன்னாலன்றோ ஸர்வகாரணவாக்கியங் களாலும் சிவனுக்கு காரணத்வம் சொல்லலாம், அவ்வுபநிஷத்தில் நாராயணனுக்கன்றோ ஜகத்காரணத்வம் உபாஸ்யத்வம் முதலியவைகள் சொல்லுகிறது. அவ்வுபநிஷத்தில் முதலில் நாராயணனை ப்ரதிபாதித்து அவருக்கு மேலானவர் ஒருவருண்டென்றும், அவர் சிவனென்றும் விசேஷித்துச்சொல்லியிருக்கிறதென்று சொன்னோமேயென்ன; அவ்வுப நிஷத்தில் ஆரம்பம் முதல் முடியும் வரையில் நாராயணனை ப்ரதிபாதிக்கிற தொழிய வேறொருவரையும்ப்ரதிபாதிக்கவில்லை. எப்படியெனில்; அவ்வுப நிஷத்தில் “நான் அறிகிறேன் பெரியவனான புருஷனை'' என்று துடங்கி பரமபுருஷனென்றும், ஸூர்யகாந்திபோன்ற காந்தியுடையவனென்றும், ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்புறத்திலிருக்கிறானென்றும், “ அவனை இந்த ப்ரகாரம் அறிகிறவன் முக்தனாகிறானென்றும், அவனொழிய வேறொரு உபாயம் மோட்சத்துக்குக் கிடையாது என்றுஞ்சொல்லினதை உபபாதித்துக் காட்டுகிறதற்காக யாதொருவனைக்காட்டிலும் வேறு உயர்ந்த வஸ்து ஒன்று மில்லையோ '' என்று அவனுக்கு உயர்ந்தவனும், ஸமமானவனுமில்லை யாதலால் அவனே ஸர்வேச்வரரென்றும் வேறொருவருக்குமிப்படிப்பட்ட ஸர்வைச்வர்யம் கிடையாதென்றுஞ்சொல்லி "ततोयदुत्तरतरं' என்று சொல்லி யிருக்கிறது. இவ்விடத்தில் பூர்வபக்ஷிகள் “தத:” கீழச்சொன்ன பரம புருஷனைக் காட்டிலும் “उत्तरतरं” உயர்ந்தது. என்று பரமபுருஷனைக் காட்டிலும் மேல்பட்ட வஸ்துவை த்யானம் பண்ணினால் மோட்சமுண்டென் றும் அவ்வஸ்து सर्वगतश्शिवः என்று முடிவில் சிவனென்று சொல்லுகையால் இச்சுருதி சிவபரமென்று சொல்லுகிறார்கள். அப்படிச் சொல்வது உசித மன்று. ஏனெனில் ; முதலில் புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட குணங் களோடு கூடியவனையே இவ்விடத்திலுஞ்சொல்லி அவனை உபாஸித்தால் தான் மோட்சமென்றும் அவனைக்காட்டிலும் மேலான வஸ்து வொன்று மில்லையென்றும் சொல்லியிருக்கிறது. பிறகு "ततोयदुत्तरतरं''' என்று அவனைக்காட்டிலும் வேறுவஸ்துவுள்ளதென்று சொல்வது கீழ்ச்சொன்ன திற்கு விருத்தமாகும். ஆகையால் இச்சுருதிக்கு " தத:” அப்படிப்பட்ட ஸர்வைச்வர்யமுடையவனாகையாலே, उत्तरतरं எல்லாவற்றிற்கும் மேல்பட்ட வன்'' என்று அர்த்தம் சொல்வதே உசிதமாகும். ஆகையால் இந்த சுருதி வாக்கியம் பரமபுருஷனுக்கே ஸர்வேச்ரத்வத்தை நிகமனம் பண்ணுகிறது. இவ்விடத்தில் “ஶிவம் ‘' என்கிறது மங்களங்களான குணங்களோடு கூடியவ னாயும், முதலில் மோட்சத்தைக் கொடுப்பவனாகச் சொல்லப்பட்டவனான நாராயணனையே சொல்லுகிறது. பின்னையும், ஸத்வகுணத்தை ப்ரவர்த் தனம் பண்ணுகிறவனென்றும், சஹஸ்ர சிரஸ்ஸையுடையவனென்றும் புருஷ ஸூக்தத்தில் சொன்ன ப்ரகாரமாக இவ்விடத்திலுஞ் சொல்லியிருக்கை யாலும் அப்புருஷஸுக்தம் நாராயண பரமாகையால் இச்சுருதியும் நாராயணபரந்தான். புருஷஸுக்தமும் சிவனை ப்ரதிபாதிக்கிறதென்ன வொண்ணாது; ஆதர்வணத்தில் வைஷ்ணவ கர்மாவில் புருஷ ஸுக்தத்தை விதித்திருக்கையாலும், இலக்ஷ்மீபதித்வஞ் சொல்லியிருக்கையாலும், கல்ப ஸூத்திரகாரருடைய வாக்கியத்தாலும், "புருஷனான ஹரியினுடைய ஸூக்தம்' என்கிற ஸ்மிருதியாலும் புருஷ ஸூக்தம் நாராயணபரமென்று ஸித்தமாகிறது. சாந்தோக்கியத்தில் தஹர வித்யையில் ஆகாசசப்தத்தினால் பரமபுருஷனைச்சொல்லி, அவனிடத்திலிருக்கிறதான அபஹதபாப்மத்வம் முதலிய எட்டுகுணங்களையுஞ்சொல்லி இக்குண விசிஷ்டனான பரம புருஷனை தியானஞ்செய்யவேண்டுமென்று சொல்லுகிறதேயொழிய பரம புருஷனைக்காட்டிலும் மேல்பட்டவனொருவனிருக்கிறாளென்றும், அவனை த்யானம்பண்ணவேண்டுமென்றும் சொல்லவில்லை. தைத்தரீயத்தில் தஹர வித்யையிலும் குண விசிஷ்டனான நாராயணனையே உபாஸநம் பண்ண வேண்டும், அவனே பரமைசுவரியத்தோடு கூடினவனென்றும் சொல்லுகிறது. அதர்வசிகையிலும் சம்புவென்று எல்லாவற்றிற்கும் க்ஷேமத்தைச் செய்பவ னான நாராயணனைபே சொல்லுகிறது. அதர்வசிரஸ்ஸிலிலும் நாராய ணனையே சொல்லுகிறது. எப்படியெனில் ; தேவதைகள் ஸ்வர்க்கலோகம் போய் தபஸ்வியான உருத்திரனை “நீ யார்” என்று கேட்க உருத்திரன் தான் பகவானுக்கு விட்டுப்பிரியாதவன் என்கிற புத்தியினாலே தன்னைச் சொல்லுகிற சப்தங்கள் பரமாத்மாவைச்சொல்லுகிறதுகளென்று நிச்சயித்து , தனக்குச் சொன்னவைகள் எல்லாம் பரமாத்மாவினிடத்தில் பர்யவஸிக்கு மென்கிற புத்தியினாலே ஸ்ருஷ்டிக்கு முன்பு நான் தானிருந்தேனென்றும், மூன்று காலத்திலும் நான் தானிருக்கிறேனென்றும் சொல்லுகிற வார்த்தை உருத்திர சரீரியான பரமாத்மாவையே சொல்லுகிறது ஈசாநநெனென்றும் மஹாதேவனென்றும், மஹேச்வரனென்றும், உருத்திரனென்றும் சொல்லு கிறதுகளெல்லாம் கார்யனாயும், கர்மவச்யனாயுமிருக்கிற சிவனைச் சொல்லுகிறதில்லை. நாராயணனையே சொல்லுகிறது. இவ்விடத்தில் ''நான்'' என்று சொன்ன சிவவாக்கியங்கள் ': अहंमनुरभं '' என்று சொன்ன வாமதேவர் ப்ரஹ்லாதர் முதலானவர்களைப்போலே விசேஷ்யமான பரமாத்மாவான நாராயணனையே சொல்லுகின்றன. பஸ்மோத் தூளநம் சொன்னதும் உருத்திரனைச் சரீரமாகவுடைய பரமாத்மோபாஸநவிஷயம். ஆகையால் ஸர்வகாரணவாக்கியங்களும் உபாஸநவாக்கியங்களும் நாராயணாநு வாகத்தையடியொற்றி நாராயண பரங்களாகவே ஆகிறது. இவ்வர்த்தங் களை பரதேவதையின் உண்மையையறிந்தவர்களான பராசர சுகசளநகர் முதலானவர்கள் நன்றாகச் சொன்னார்கள். இலக்ஷ்மீபதியாய், ஞானஸ்வரூபமாய், ஆனந்தஸ்வரூபமாய், ஜகத்காரணமாய், ப்ராப்யமாய் உபாஸ்யனாயிருக்கிற பரமாத்மா ஸ்ரீமந்நாராயணனே. அவனை யொழிந்தமை அவர தத்வம். சிவனும் அவனுக்கு கார்யபூதனென்றும், கர்ம வச்யனென்றும், அவனுக்கு சரீரபூதனென்றும், அவனையாச்ரயித்த வனென்றும், பகவச் சேஷபூதனென்றும், அவன் கொடுத்த ஞானம் முதலானதுகளைக்கொண்டு அவனுக்கு ஏவல் தேவை செய்கிறானென்றும் சுருதி ஸ்மிருதிகளில் பாவத்தையறிந்தவர்கள் ப்ரதிபாதித்தார்கள். இவ்விடத்தில் தத்வஸாரம் பரதேவதாபாரமார்த்யாதிகாரம், வேதாந்த கௌஸ்துபம் முதலான கிரந்தங்களை யநுஸந்திப்பது .