தசரதர் :-- (இராமரைப் பார்த்து) இராமச்சந்திரா! எனக்கு மூப்பு மேவிவிட்டது. இனி இப்பூபாரத்தைச் சுமக்கச் சக்தியற்றவனாயிருக்கிறேன். ஆதலால் இந்த பந்தத்தினின்றும் நீ என்னை விடுவிக்க வேண்டும்.
உரிமை மைந்தரைப் பெறுகின்ற துறுதுயர் நீங்கி
யிருமை யும்பெறற் கென்பது முன்பினோ ரியற்கை
தரும மன்னநிற் றந்தயான் றளர்வது தகவோ
கரும மென்வயிற் செய்யிலென் கட்டுரை கோடி
உலகத்தில் பெரியோர்கள் தமக்கு உரிமையுள்ள புத்திரர்களைப் பெற விரும்புவது அவர்களால் தமது துயரங்கள் நீங்கி இம்மை மறுமைப் பயன்களைப் பெறுதற் பொருட்டாகும். அவ்வாறாக, தருமமே ஓர் உருவெடுத்து வந்தாலொத்த உன்னை மகனாகப் பெறப்பெற்ற நான் மனந்தளர்வது தகுமோ? என் சொல்வழி நிற்பது உனக்கு முறைமையானால் நான் சொல்வதொன்றுள்ளது. அதைக்கேள்.
இராமர்:-- பிதா! தங்கள் உள்ளத்துள்ளதைப் பணித்தருள் புரியப் பிரார்த்திக்கிறேன்.
தசரதர்:-- குழந்தாய்! சீதை மணவாளா!
முன்னை யூழ்வினைப் பயத்தினு முற்றிய வேள்விப்
பின்னை யெய்திய நலத்தினு மரிதினிற் பெற்றேன்
இன்னும் யானிந்த வரசிய லிடும்பையே னென்றால்
நின்னை யீன்றுள பயத்தினி னிரம்புவ தியாதோ
முன் செய்த நல்வினைப் பயனாலும், பின்செய்த புத்திர காமேஷ்டியாலும் உன்னை மகனாகப் பெற்றேன். பெற்றும் நான் இந்த இராச்சிய பாரத்தைத் தாங்கி வருந்துவதானால் உன்னைப் பெற்றதனால் அடைந்த பயன் யாது? அப்பயனை நான் நுகரும் காலம் நெருங்கி விட்டது. இராஜ்ஜியலக்ஷ்மி உன்னை அபேக்ஷிக்கிறாள். பிரஜானுகூலத்திற்கு நாடு உன்னை நாடுகிறது. உன் ஆதரவின் கீழிருக்க தேசம் உன்னைத் தேடுகிறது. தேசாதிகாரிகளுக்கு உன் அபிமானம் சித்திக்கத் தக்க அதிஷ்ட காலம் வந்துவிட்டது. இந்தச் சிம்மாசனம் உனக்கு இடமாக இச்சிக்கிறது. (சுட்டுவிரலைச் சிரசின் உச்சி வரையில் உயர்த்தி) இந்த மணிமுடி உன் சிரசிலிருந்து பிரகாசிக்கப் பிரியப்படுகிறது. செங்கோல் உன் அங்கையை அடைய அவாவுகிறது. நாளைய தினம் உனக்கு மஞ்சன நீராட்டி மணிமகுட முடிக்கத் தீர்மானித்துள்ளோம். குடிகள் எல்லோரும் முழுமனத்தோடும் உன்னை அங்கீகரிக்கின்றனர். நீ அரசற்குரிய உத்தம குணங்களெல்லாம் பொருந்தியவனா யிருக்கிறாய். ஆயினும் உன்மேல் வைத்த அன்பினால் உனது க்ஷேமத்தை நாடி நான் உனக்கு சில புத்திமதிகளைச் சொல்லுகிறேன், கேள்:--
“ என் உயிரினுஞ் சிறந்த மைந்தா! உலகத்தவர்கள் யாவரும் ஒழுகி உய்தற்காக வருணாச்சிரமங்களும் தருமங்களும் விதிக்கப் பட்டிருக்கின்றன. அவைகள் ஒவ்வொன்றும் அளவில்லாதன வாயிருக்கின்றன. ஆதலால் அவைகளை இப்பொழுது சொல்லாது விடுத்து உனக்குரிய அரசியலுக்குரிய தருமத்தை மாத்திரங் கூறுகின்றேன்.
அரசர்க்கரசனாய், அடியார்க்கு எளியனாய், அநாதி மலமுத்தனாய் ஒரு கடவுள் உண்டென்பதை உள்ளத்தில் உறுதியாகக் கொள்க. அக்கடவுளை வழிபடுவதற்கு ஒரு நாளும் மறவாதே. அவருடைய திருவருளாகிய பெருந்துணை கொண்டே எதையும் முயலுவாயானால் முயன்றது முட்டின்றி முடியும். துறவிகள் கோபிப்பாரானால் கடவுளரும் கலக்க முறுவர். ஆதலால் அவர்களை வழிபடுவதன்றி ஒருகாலும் இகழற்க. கடுஞ்சொல், பொறாமை, கோபம் முதலிய குற்றங்களில்லாமல் தருமத்தைச் செய்க. அதனால் உயிர்களிடத்து அன்புண்டாகும். அன்பினால் வருமின்பமே இன்பம். மற்றவற்றால் வரும் இன்பமெல்லாம் துன்பத்தையும் பழியையும் தோற்றுவிக்கும். இடம் பொருள் ஏவல் என்னுமிவைகளிருந்தாலும், அன்பில்லாதவிடத்து அவை யாவும் எலும்பில்லாத உடம்பு போல இருத்தலால் ஒவ்வோருயிர்களிடத்தும் அன்புடைமை அவசியம் வேண்டும். பிரமச்சாரி, வானப் பிரஸ்தன், சந்யாசி, தென்புலத்தார், குரவர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், பசுக்கள், பிராமணர், கூனர், குருடர், செவிடர், முடவர் முதலிய அங்கஹீனர்கள், நோயாளர், வயோதிகர், குழந்தைகள், தம்மையடுத்தார் என்னும் இவர்களைப் பாதுகாக்க வேண்டும். எந்நன்றி மறக்கினும் செய்ந் நன்றி மறவாதே. மறந்தும் புறங்கூறாதே. அறிவினருக்கு வெறுப்பை யுண்டாக்கி, நகையை விளைத்து, வெளிற்றறிவை யுணர்த்தி, நன்கு மதிப்பைக் கெடுத்து, சிறப்பைச் சிதைத்து, தருமம் முதலியவற்றைப்போற் பயன்களையுங் கொடுக்காது நிற்கும் பயனில்லாத சொற்களைச் சொல்லற்க.
தரும நூலிற் சொல்லியபடி உலகத்தை யரசாள வேண்டுமானால், அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு ஆகிய ஆறும் இன்றியமையாத அங்கங்களாம். ஆதலால் என்றும் இவ்வங்கங்களோடு விளங்கியிரு. அரசர்கள் ஒரு தொழிலைச் செய்யுங் காலத்துப் பயப்படாமையும், அதனைச் செய்வார்க்குப் பொருள் கொடுத்தலும், செய்யுங்காரியத்தில் மனத்தைச் செலுத்தலும், அறிவு கொண்டதனை முடித்தலும், ஆண்மையுடைமையும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும். இவைகளோடு கொலை முதலிய பாவங்களை நீக்குதலும், மானம் முதலிய குணங்களை யுடைமையும் அவசியமாகும். பிரஜைகள் வருத்தமுற்ற காலத்து ஆறிலொரு பங்கு இறையை வாங்காது விட வேண்டும். தங்கள் குறையை வந்து முறையிடுவார்க்குத் தடையின்றி வெளிப்பட்டு அவர்கள் குறையைத் தெளிவுறக் கேட்டு, இனிய சொற்களைச சொல்லிக் குற்றமுள்ளாரைத் தண்டித்துத் தீர்ப்புச் சொல்லக் கடவாய். யுத்தகளத்தில் பகை அரசரைக் கொன்றும், அரசரிடத்தில் திறை வாங்கியும், நாட்டைக் காத்துக் குடிகளிடத்து இறை வாங்கியும் பொருள் சேகரிக்க வேண்டும். திருடர் முதலியவர்களால் நாட்டுக்குக் கெடுதியுண்டாகாமற் காத்து, உயிர்கள் அறம் முதலிய உறுதிப் பொருள்கள் அடையும் வண்ணம் ஆட்சி செலுத்துதலே செங்கோலுக்குரிய மாட்சியாகும்.
மைந்தா! தவத்தர், ஆசாரியர், அந்தணர், உயர்ந்தோர், இவர்களிடத்து வணக்கமில்லாமையும், அகங்காரமும், செலவு செய்யவேண்டிய விடத்து செலவு செய்யாமையும், காமமும், கோபமும், கண்ணோட்டமும், ஆகிய இத்தீக் குணங்களைக் கொள்ளற்க. குற்றஞ் செய்யாமலிருந்து பிறர் குற்றங்களைக் கடியவேண்டும். சிறிதாயினுங் குற்றஞ் செய்யின் சிறுநெருப்பு மலைபோன்ற வைக்கோற் போர்களை அழிக்குமாறு போல பெருவாழ்வையும் அழிக்கும். பகைவர்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கும். பெருநோயில் வருந்தச் செய்யும். கோபமுறாத பெரியோரையுங் கோபிக்கச் செய்யும். ஆதலால் குற்றமற்றவனாய் நடந்து வருக. நன்மை பயக்காத தொழிலைச் செய்யாதே. மழை மிகுதியினாலும், மழைக் குறைவாலும், காற்றினாலும், நெருப்பினாலும், நோயினாலும் உலகிற்கு வருந் துன்பங்களை யெல்லாம் தவர்களைக் குறித்தும் உயர்ந்தோரைக் குறித்தும் செய்யுஞ் சாந்திக் கிரியைகளினால் நீக்குக. பகைவர்களாலும், தீவினை செய்யுங் கூட்டத்தாராலும் வருகின்ற தீமைகளைச் சதுர்வித உபாயங்களினாற் போக்குக. உனக்கு வருகின்ற தீவினைகளை உற்பாதங்களினாலறிந்து அவற்றால் வருத்தப்படாது நடக்க வேண்டும்.
பகைவர்களுடைய வலியையும், அவரை வெல்லுங் காலத்தையும், வெல்வதற்கு வேண்டிய வினையையும், அது தொடங்குந் தன்மையினையும், அவ்வினைக்கு வருகின்ற இடையூறுகளையும், அவைகளை விலக்கும் வழியையும், வெற்றி கொள்ளுந் தன்மையினையும், வெற்றியால் வரும் பிரயோசனத்தையும், இன்னும் உனக்கும் பகைவர்க்கும் உள்ள பல நிலைகளையும் அறிந்து யோசித்துத் தெளிந்து வினை செய்ய வேண்டும். பகைவனை வெல்லுங்காலம் வருமளவும் புலியைப்போற் பதுங்கியிருந்து வினை முடிக்க. பகையரசன் செய்யத்தகாத குற்றங்களைச் செய்யினும் வெல்லுங்காலம் வரும் வரையும் அப்பகையை வெளியிற் காட்டாமல் நல்ல குணத்தோடு அளவளாவி சிரித்து உவகை கொள்ளுஞ் சுற்றத்தார்போல ஒழுகவேண்டும். காலம் வந்துவிட்டால் கருதிய வினை யவ்வளவையுஞ் சிறிதுந் தவறாது முடிக்கக் கடவை. நமது மந்திரிகளோ,
உற்றது கொண்டு மேல்வந் துறுபொரு ளுணருங் கோளார்
மற்றது வினையின் வந்த தாயினும் மாற்ற லாற்றும்
பெற்றியர் பிறப்பின் மேன்மைப் பெரியவ ரரிய நூலுங்
கற்றவர் மான நோக்கிற் கவரிமா வனைய நீரார்.
கண்டதொன்றனைக் கொண்டு இனிவருவதறியு மியல்பினர். விதியையும் வெல்லும் மதியுடையார். நற்குடிப் பிறந்தவர். அரிய நூல்கள் பலவும் கற்றுத் தெளிந்தவர்கள். மயிரொழிந்தால் வாழ்வொழிக்கும் கவரிமானைப்போல மானம் கெட்டவிடத்து உயிர் வாழாதார். அன்றியும்,
தம்முயிர்க் குறுதி யெண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர்
செம்மையிற் றிறம்பல் சொல்லாத் தேற்றத்தார் தெரியுங் கால
மும்மையு முணர வல்லா ரொருமையே மொழியு நீரார்.
அரசன் தம்மைக் கோபித்த காலத்திலும், அவன் கோபத்தைப் பொறுத்துத் தமக்கு நன்மையைக் கருதாது, நீதியைக் கைவிடாமல் எதிர்நின்று கூறும் வீரத்தன்மை யுடையவர். நடுவுநிலை மாறா நெறியுடையவர். முக்காலமும் உணர்ந்து சொல்லத் தக்கவர். எல்லார் மனத்துக்கும் ஒற்றுமையான மொழிகளையே உரைப்பவர். ஆதலால் எக்காலத்து எதைச் செய்யினும் இம்மந்திரிகளைக் கலந்து ஆராய்ந்து தெளிந்து செய்க. அதர்ம நெறி நிற்கும் அரசன் ஒருவனை அரசாட்சியினின்றும் விலக்க வேண்டுமானால், முனிவரையும், புரோகிதரையுந் தூதாக அனுப்பி “இந்த அரசன் தருமவழியில் நிற்பவனல்லன்; இவனை நீக்கி தரும வழியில் நிற்கும் வேறோர் அரசனை நியமிக்க நினைத்துள்ளோம். இது எவர்க்குமொப்பா யுள்ளது. நும்முடைய கருத்தென்ன?’’ என்று மற்ற சிற்றரசர் ஒவ்வொருவரையும் வினாவி அவருட் பலர் சம்மதப்படி அதனைச் செய்க.
பெருமிதம், பெருஞ்செல்வம், பேரழகு, மிக்க களிப்பு இவைகளில் முழுகியிருக்கின், குழந்தாய், இராமச்சந்திரா! பொச்சாப்பு, சோம்பல் முதலியவற்றால் உன்னைக் காத்துப் பகையை வெல்லுதல் அரிதரிது. குற்றஞ் செய்தோர் யாவரா யிருந்தாலும் கண்ணோட்டம் பாராது, நீதியையறிந்து தருமந் தப்பாமல் தண்டஞ் செய்தலே செங்கோலெனப்படும். களவாடுவோர், ஆறலைப்போர், பிறன்மனை நயப்போர், உயிர்க்கொலை செய்வோர் முதலியவர்களைத் தக்கபடி தண்டித்தல் பாவமன்று. அது பயிர் வளர்ச்சிக் கிடையூறாய் நிற்கும் களைகளைக் களைதல் போலாம். நியாயந் திறம்பி நடப்பாரைத் தண்டித்து அவர்களிடத்துள்ள பொருளையுங் கவர்ந்து கொள்ளுதல் அரசர்க்குத் தருமமேயாகும்.
இங்ஙனம் அரச தருமங்கடவாது ஆட்சி புரியும் அரசனை அவன் செங்கோலே காக்கும். முறைப்படி அரசு புரியாதவனை அப்பாவமே கெடுக்கும். அளவுகடந்த தண்டனை , நடுநிலையில்லாமை, முகமலர்ச்சியின்மை, மந்திரி பிரதானிகளோடு ஆலோசித்துச் செய்யாமை இவைகள் தீங்கை விளைக்கும். அதிகாரத்தை வெவ்வேறாகப் பிரித்து இராஜாங்க உத்தியோகஸ்தர்கள் பலர்க்கும் கொடுக்க வேண்டும். நீயே நேராக அதிகாரம் நடத்த வேண்டிய விஷயங்களில் அவ்வாறு நடத்தியும், அமைச்சர் முதலான மற்ற அதிகாரிகள் மூலமாக நடத்த வேண்டியவைகளை அவர்கள் மூலமாக நடத்தியும் எல்லா வகை உபாயங்களினாலும் உனது குடிகளைச் சந்தோஷப்படுத்தும் வழிகளை எப்பொழுதும் தேடிக் கொண்டே யிருக்க வேண்டும். ஆயுதசாலையையும், பொக்கிஷத்தையும் மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டும். புத்திரா! அரசியற் குரிய இலக்கணங்கள் இவைபோலப் பலவுள. அவற்றை விரித்துரைக்கின் மிகப்பெருகு மாதலின் மநுஸ்மிருதி முதலிய நூல்களிற் கண்டு தெளிக. குலக்குமரா! நான் இதுகாறும் கூறிய நீதிகளையும், உன் நுட்ப மதியையும் கலந்து அநுஷ்டித்து இச்செங்கோலைத் தாங்குவாயானால் நாட்டின் க்ஷேமம் நாளும் ஓங்கும். என் துயரமும் நாளையே நீங்கும். இராமச்சந்திரா! இனி நாளை மகுடாபிஷேகத்திற்கு நீ அனுசரிக்கவேண்டிய விரதங்களை நம் குலகுரு வசிஷ்டரிடம் கேட்டுத் தெளிக.
வசிஷ்டர்:-- இராமா, இன்றிரவு உனது பத்தினியுடன் தருப்பைப் படுக்கையில் படுத்து நித்திரை செய்யவேண்டும்; இருவரும் ஒன்றும் புசியாமல் உபவாசமாயிருக்க வேண்டும். நாளைக் காலையில் மங்களாபிஷேகத்திற்கு மந்திரி முதலானவர்கள் உன்னை உபசாரத்தோடு அழைக்க வருவார்கள் . போய் வா.
(இராமர் வணங்கிப் போகிறார். சபை கலைகிறது)
……. இரண்டாம் களம் தொடரும்……..