திங்கள், 17 செப்டம்பர், 2012

கண்டதில்லை திருப்புல்லாணி!

2012 செப்டம்பர் 12,15, 16 தினங்கள் திருப்புல்லாணி வரலாற்றில் காணாத தினங்களாக அமைந்தன என்றால் மிகையாகாது.
ஸ்ரீ அனந்த பத்மநாபாச்சார்யார் ஸ்வாமி (இனி அ, ப ஸ்வாமி ) ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரதாம மஹா யக்ஞத்தை திருப்புல்லாணியில் நடத்திய தினங்கள் அவை.
2002ல் திருப்புல்லாணி ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் ஆலய சம்ப்ரோக்ஷணத்துக்குப் பிறகு பெருமளவில் ஜனத்திரள் கூடியது இந்த நிகழ்ச்சிக்குத்தான் என்பது உண்மை. இந்தக் கணக்கில் ஆடி, தை அமாவாஸை தினங்களைச் சேர்க்கக் கூடாது.
14ம் தேதி துவங்க இருந்த யஜ்ஞத்துக்கு 10ம் தேதி வரை எந்த அடையாளமும் இல்லை. யாக சாலை அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அப்போதுதான் கால்களில் இரும்பு ஆணிபோல் குத்தும் பழைய சிமிண்ட் சாலைக்கு மேல் நடைபாதைக் கற்கள் பரப்பப் பட்டிருந்தன. எங்களுக்கெல்லாம் அதை எப்படித் தோண்டி பந்தல் அமைக்க அனுமதி கிடைக்கும் என்று ஒரே குழப்பம். ஆனால் , ஸ்ரீ அனந்த பத்மநாபாச்சாரியாருக்கு ஒரு அற்புதமான ஆத்மபந்து. கோவை ஸ்ரீ ஜெகந்நாத பாகவதர் அவர். One man army என்பதற்கு சரியான உதாரணம். ஒரு வாரத்துக்கு முன்னேயே இங்கு வந்து விட்டார். உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் திரு முனியசாமியை தனது அணுகுமுறையால் கவர்ந்து, இருந்த இடத்தை விட்டு அசையாமலேயே சகல ஏற்பாடுகளையும் செய்து விட்டார் என்பது பின்னரே தெரிந்தது. (என்ன பெயர் பொருத்தம். ஸ்ரீ அ. ப. ஸ்வாமிக்கு எங்கள் பெருமாளே தன் அனுக்ரஹத்தை இப்படிக் காண்பித்தார் போலும்)
11ம் தேதி மாலை மதுரையிலிருந்து பந்தல் காண்ட்ராக்டர் வந்து பேசி முடிவு செய்து, 12ம் தேதி பகலில் அவர் வேலையை ஆரம்பித்து இரவுக்குள் முடித்து 14ம் தேதி காலையில் ஸ்ரீ  அ. ப. ஸ்வாமி வரும்போது 5000 ச.அடி பந்தலும் அதற்குள் யாக குண்டமும் ரெடி. மயன் வேலை என்பது இதுதானோ? புதிய சாலைக்கு துளிக்கூட சேதம் இல்லாமல் இரும்பு பில்லர்களால் சில மணி நேரங்களில் அமைக்கப்பட்ட அந்தப் பந்தல் இந்த வழியில் நிரந்தரமாக இப்படி ஒரு பந்தல் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று எங்களை யோசிக்க வைத்திருக்கிறது.
14ம் தேதி காலையிலேயே சிறிது சிறிதாகக் கூட ஆரம்பித்த கூட்டம், 15ம் தேதி காலையில் சுமார் ஆயிரம் பேர்  சேர்ந்து   16ம் தேதி கிட்டத்தட்ட 1500க்கும் மேல் திருப்புல்லாணி சமாளிக்க முடியாத அளவுக்குக் கூடியது. ஸ்ரீமதாண்டவன் ஆச்ரமம் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சிக்காம பல மாதங்களுக்கு முன்பேயே பதிவு செய்யப்பட்ட நிலையில் பழைய மடத்திலும் புதிய மாலோல பவனத்திலும் மட்டுமே இடமிருந்த சூழ்நிலையில், இராமநாதபுரத்தில் சில கல்யாண மஹால்களில் வந்திருந்தோர் தங்க வைக்கப்பட்டு அவர்கள் வருவதற்கும் போவதற்கும் வசதிகளும் செய்யப் பட்டிருந்தன. வந்திருந்தோரில் பெரும்பாலோர் கோயமுத்தூர் மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
வந்திருந்தோரும் இட வசதி, சாப்பாடு பற்றியெல்லாம் பெரிதும் கவலைப்படாமல் பூரண ஒத்துழைப்பு கொடுத்தது பாராட்ட வேண்டிய ஒன்று.
இந்த மூன்று நாட்களிலும் எங்கள் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அனுக்ஞை அன்று ஸ்ரீ அஹோபில மடத்திலிருந்து , இந்த யக்ஞத்துக்காவே இஞ்சிமேட்டிலிருந்து எழுந்தருளிய பெருமாளை, திருவீதி ப்ரதக்ஷிணமாக யாகசாலைக்கு எழுந்தருளப் பண்ணி, ஸ்ரீ ஆதி ஜகந்நாதப் பெருமாள் ஆலய அச்வத்த மரத்தினடியிலிருந்து ம்ருத்சங்கரஹணத்துக்காக மண் கொண்டுவந்து அனுக்ஞையுடன் யஜ்ஞம் ஆரம்பித்து, விஷ்ணு சஹஸ்ர நாம ஜபத்துடன் ஹோமம் ஆரம்பித்தது. ஸ்ரீ அ. ப. ஸ்வாமிக்கு, ஸ்ரீ மடத்தில் ஆராதன கைங்கர்யம் செய்த வடுவூர் ஸ்வாமி, ஸ்ரீ துரை ஸ்வாமி, இஞ்சிமேடு பாலாஜி, பாம்பே சேஷாத்ரி, என ஏராளமான வேதம் வல்லார் பலர் உதவியாக வந்திருந்தனர். மூன்று நாட்களும் திருப்புல்லாணியே சஹஸ்ரநாம கோஷத்தால் நிறைந்தது.
இரண்டாம் நாள் காலை ஒரு லக்ஷம் காயத்ரிஜப ஹோமம். 130 பேர் அமர்ந்து செய்து முடித்த பிறகு,   ஹோமங்கள் முடிந்து பூர்ணாஹுதிக்குப் பிறகு பெருமாள் தீர்த்தவாரிக்கு சேதுக்கரைக்கு எழுந்தருளினார். பிரமிக்க வைத்த நிகழ்ச்சி அது.
கீழே கால் வைத்தால் ரோடோடு ஒட்டிக் கொள்கிற வகையில் வறுத்தெடுத்த வெய்யில். 4 கி.மீ. போக வேண்டும். ஆனால் ஸ்ரீ அ. ப. ஸ்வாமியோ உடன் வந்த மற்றவர்களோ மலைக்கவில்லை. தயங்க வில்லை.   தோளுக்கினியானில் வெறுங்காலுடன் நடந்நே அந்த தூரத்தை அநாயாசமாகக் கடந்து பெருமாளை சேதுவுக்கு எழுந்தருளப் பண்ணினர்.  பெருமாளை .சில நூறு பேர்கள் பின் தொடர்ந்தனர். அவர்களில் பலர் வெய்யிலே படாமல் ஏ.ஸி அறைகளிலே வாழ்பவர்கள், சமுதாயத்தில் பல உயர்ந்த நிலைகளில் இருப்பவர்கள் என்பது ஒரு ஆச்சரியம்.
சேதுக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயன் ஸன்னிதியில் பெருமாள் ஏளி, அங்கு திரண்டிருந்த அனைவருக்கும் ஸங்கல்பங்கள் செய்து வைக்கப் பட்டு பெருமாள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கண்டருளினார்.
மாலையில் ஹோமங்கள் தொடர்ந்தன. யஜ்ஞத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டவர்களுக்கு ரக்ஷாபந்தனம் ஆகி அதன் பின்1008 கலச ஸ்தாபனம் (சஹஸ்ர நாமத்தின் ஒவ்வொரு பெயராலும் ) நடை பெற்றது. முதல் நாள் ஆரம்பித்த விபீஷண சரணாகதியை மறுநாளும் மிக அற்புதமாக ஸ்வாமி உபந்யஸித்தார்.
இறதி நாளான 16ம் தேதி, ஹோமங்கள் முடிந்து மஹா பூர்ணாஹுதி முடிந்து, 1008 கலச தீர்த்தத்தாலும் பெருமாள், சக்கரத்தாழ்வாருக்குத் திருமஞ்சனங்கள் நடந்து அதன் பின் சக்கர தீர்த்தத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கண்டருளி …..சுபம்
அடியேனைப் பொறுத்த மட்டில் ஒரு ஏமாற்றம். இந்த மூன்று நாட்களாகவே என் காமிராவுக்கு ஏதோ ஆகி விட்டது. (கூட்டத்தைப் பார்த்து மிரண்டு விட்டது போலும்) ஒரு சில படங்கள் எடுத்தவுடன் மேற்கொண்டு தொடர முடியவில்லை. அதனால் ஒரு சில படங்களே இந்த மூன்று நாட்களும் எடுக்க முடிந்தது. தவிர ஆச்ரமத்தில் நடந்த நிகழ்ச்சி மிக நெருங்கிய உறவினர் விசேஷம் என்பதால் அங்கேயே பெரும்பகுதி இருக்க வேண்டி வந்ததும், எப்போதோ நடக்கும் இந்த யஜ்ஞத்தை முழுமையாகக் காணும் வாய்ப்பையும் பதிவு செய்கிற வாய்ப்பையும் இழந்தமைக்குக் கூடுதல் காரணங்கள். அது மட்டுமில்லை. முதல் நாள் உபந்யாஸத்தை பதிவு செய்து விட்டுப் பார்த்தால் முன்பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் பதிவாகாமல் பின்னால் பதிவாகி இருக்கிறது.
எடுத்த சில படங்கள் இங்கு இருக்கின்றன.