வெள்ளி, 30 டிசம்பர், 2022

ராமாயணம் -- உத்தர காண்டம் 17

இருபத்தெட்டாவது ஸர்க்கம்

[பிறகு ஒரு ஸமயம் ராவணன், மேற்கு ஸமுத்திரத்தில் ஒரு த்வீபத்தில் கபிலரைக் கண்டது. அவரை யுத்தத்திற்கு அழைப்பது,அவரால் அடிபட்டு விழுவது, பிறகு அவரைத்தேடி பாதாள லோகம் செல்வது முதலியன இதில் உள்ளன.]

பின்பொரு ஸமயம் ராவணன் தனது மந்திரிகளுடன் யுத்த மதம் கொண்டவனாய் மேற்கு ஸமுத்திரத்தின் பக்கமாகச் சென்றான்.  அங்குள்ள ஒரு தீவில் அக்கினிக்கொப்பான தேஜஸ்ஸை உடையவரும், உருக்கிய தங்கம் போன்ற நிறமுடையவரும், ஊழிக் காலத்தீயினுக்கு நிகரானவரும், தேவர்களில் இந்திரன் போன்றவரும். க்ரஹங்களில் சூர்யன் போலவும், காட்டு மிருகங்களுள் ஸிம்ஹம் போலவும், யானைகளுள் ஐராவதம் போலவும், மலைகளுள் மஹாமேரு போலவும் உள்ள ஒரு புருஷனைக் கண்டான்.

          மிகவும் கம்பீரமாகவும் மிகுந்த பாஹுபலமுள்ளவராகவும் காணப்பட்ட தன்னந்தனியரான அந்த மஹாபுருஷர் அருகில் சென்ற ராவணன், “ என்னுடன் போர் புரிய வருக" என்று கர்ஜித்தான். அவனுடைய இந்த வார்த்தையைக் கேட்ட அந்த மஹாபுருஷன் சிறிதும் கலக்கமின்றித் தமது கையினால் விளையாட்டாக ஓர் அடி அடித்தார்.  அந்த அடியைத் தாங்க முடியாத ராவணன் மூர்ச்சையுற்றுக் கீழே சாய்ந்தான். ராவணன் கீழே சாய்ந்ததும் மற்றவர்களை அதட்டி ஓடச் செய்து, பத்மமாலையை அணிந்த அந்த மஹாபுருஷர் மலைபோல அசைந்து சென்று பாதாளத்தை அடைந்தார்.

          சிறிது நேரம் கழிந்தவாறே ராவணன் தன்னிலையை அடைந்து மந்திரிகளைப் பார்த்து, "இங்கு நின்ற புருஷன் எவ்வழிச் சென்றான்?'" என வினவினான், அவர்கள் வாயிலாக அந்தப்புருஷன் பாதளலோம் சென்றதை அறிந்து, வேகத்துடன் உருவிய கத்தியைக் கைக்கொண்டவனாய், பிரம்மவரத்தினால் கர்வமுற்றவனாகிப் பாதாள லோகம் சென்றான். அங்கு அவன், நீலமலை போன்றவர்களும், தோள்வளைகளை அணிந்தவர்களும், செஞ்சந்தனம் பூசியவர்களும், அநேக வித பூஷணங்களை உடையவர்களும்; நான்கு கைகளை யுடையவர்களும், முன்பு கண்ட புருஷளைப் போன்ற உருவத்தை உடையவர்களுமான மூன்று கோடிப் புருஷர்களைக் கண்டான். அவர்களைக் கண்டதும் ராவணனுடைய மயிர்கள் குத்திட்டு நின்றன. அவர்கள் அனைவரும் ஆடிப் பாடி மகிழ்ந்திருந்தனர். அவர்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல், தான் தேடி வந்த புருஷன் எங்கு உள்ளான் என்று அறியும் பொருட்டு அங்கிருந்து மறுபுறம் சென்றான்.

          " அங்கோர் இடத்தில், பாம்பணையில் பள்ளி கொண்டவனும் உயர்ந்த கௌஸ்துபமணியை அணிந்தவனும், நெருப்பால் (ஜ்வாலையால்) சூழப் பட்டவனுமான ஒரு புருஷனைக் கண்டான். அவனருகில் உயர்ந்த மாலையை அணிந்தவனும், அநேக ஆபரணங்களால் அலங்க்ருதையாயும், மூவுலகங்களுக்கும் அணிகலம் போன்று விளங்குபவளும் விசிறியைக் கையிற்கொண்டு அந்தப் புருஷனுக்குப் பணிவிடை புரிகிறவளுமான ஸ்ரீமஹாலக்ஷ்மியையும் கண்டான்.

          மஹாலக்ஷ்மியைக் கண்டதும் ராவணன் மதிமயக்கம் கொண்டவனாகி, அந்தத் தேவியை அபஹரிக்க எண்ணி அருகிற் சென்றான். இவனது கெடுமதியை அறிந்த பரமபுருஷன், அவனை நோக்கிக் குலுங்க நகைத்தான். ராவணன் அந்தப் புருஷனது தேஜஸ்ஸினால் தஹிக்கப் பட்டு. அவனது மூச்சுக்காற்றினால் தூக்கியெறியப்பட்டு வேரற்ற மரமெனக் கீழே சாய்ந்தான். ஒரு முஹுர்த்த காலஞ் சென்றபின் தெளிந்தெழுந்த ராவணன், அந்தப் புருஷனிடம் பயந்து, அகங்குலைந்து, "ஹே புருஷ! இவ்வளவு உயர்ந்த சௌர்யமும் தேஜஸ்ஸும் உடையவரான தேவரீர் யாவர்? கருணை கூர்ந்து அருளுக" என வேண்டினான்.

          அந்த மஹாபுருஷன் அவனை நோக்கி, ராக்ஷஸனே! நீ இப்போதே என் கையால் கொல்லப்பட விரும்புகின்றனையா?"எனக் கேட்டான். ராவணன் அந்தப் புருஷனை நோக்கி, “ ஸ்வாமி! நான் பிரம்மதேவனிடம் பெற்ற வரத்தின் பெருமையால் மரணமடைந்தேன் அல்லேன், எனக்கு இணையான ஒருவன் தேவர்களிலும் இதுவரை பிறந்த வனல்லன். இனியும் பிறக்கப்போவதுமில்லை. ஆதலால் எனக்கு எவராலும் மரணம் உண்டாகாது. அப்படி ஒருகால் மரணம் ஏற்படினும், அது தேவரீராலேயே ஏற்படும்.. வேறொருவரால் நேரிடாது. தேவரீரால் எனக்கு மரணம் ஏற்படுமாயின் அது எனக்குப் புகழும் பெருமையுமாகும்" என்று மொழிந்தான். இப்படி அவன் கூறியபோது, ராவணன், அந்த மஹாபுருஷனது திருமேனியில் மூவுலகங்களும் ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், மருத்துக்கள்,அச்வினீ தேவர்கள், சித்தர்கள், யமன் குபேரன், கடல்கள் மலைகள் அக்னிகள் வேதங்கள், க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள் சூரிய சந்திரர்கள் முனிவர்கள், கருடன், தைத்யர்கள் தானவர்கள் இராக்கதர் முதலியவர்களும், சூக்ஷ்ம ரூபங்களாக இருப்பதைக் கண்டு, அந்தப்புருஷன் ஸாக்ஷாத், ஸ்ரீமந் நாராயண மூர்த்தியே என்றும், ஆங்கு அவன் கண்ட மூன்று கோடி புருஷர்களும் நித்யஸூரிகளே என்றும் தேர்ந்து உடனே இலங்கைக்குத் திரும்பினான் என்று அகஸ்திய முனிவர். கூறியதும், ராமன் அகஸ்த்யரைப் பார்த்து, ''ஸ்வாமி! உண்மையிலேயே அந்தப் புருஷன் எவன்? பாம்பணையான் யாவன்?" என வினவினார்.

          அதற்கு அகஸ்தியர், "ராம! பரம புருஷனான ஸ்ரீமந்நாராயணனே தீவில் நின்றவன். கபிலன் எனப் புகழ் பெற்றவன். அவனே பாம்பணையானாகவும் காணப்பட்டவன்" என்றார்.

          இதைக் கேட்ட ஸ்ரீராமனும் கூட இருந்தவர்களும், ஆச்சரியம், ஆச்சரியம் எனக் கொண்டாடினர். பக்கத்தில் அமர்ந்திருந்த விபீஷணன் இதைச் செவியுற்று, "முன்பு நடந்தவற்றை இப்போது மறுபடியும் சொல்லக் கேட்ட நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்" என்று கூறினான்.

புதன், 28 டிசம்பர், 2022

ராமாயணம் -- உத்தர காண்டம் 16

இருபத்தாறாவது அத்தியாயம்

[ராவணன் சந்திரலோகம் செல்லும் வழியில் மாந்தாதாவுடன் போர் புரிந்தது.)

          அன்றிரவை மேருமலையில் கழித்த ராவணன் மறு நாள் காலையில் சந்திர லோகம் செல்லலானான். வழியில் ஒரு மஹாபுருஷன் உயர்ந்த மாலைகளை அணிந்தவனாகவும், திவ்யமான சந்தனத்தைப் பூசியவனாகவும், அப்ஸரஸ்த்ரீகளால் சூழப்பட்டவனாகவும், உயர்ந்த ரதத்தில் அமர்ந்தவனாகவும் வானவீதியில் செல்வதைக் கண்டான். அவனைக் கண்டு ஆச்சரியமடைந்த ராவணன், அங்கு வந்த "பர்வதா’ என்ற முனிவரை வணங்கி, ''ஸ்வாமி! இவன் யார்?'' என வினவினான், பர்வதர் - ராவண! இவன் உயர்ந்த தவத்தைச் செய்துள்ளான். புண்யலோகங்கள் இவனால் ஜயிக்கப்பட்டுள்ளன. இவன் பிரம்மதேவனைத் தவத்தால் மகிழ்வித்து அவனது அருளால் மோக்ஷலோகத்திற்குச் செல்கிறன் என்றார். அதே ஸமயம் அங்கு மற்றெரு ரதத்தில், மிக்க காந்தியுள்ளவனாகவும், ஸுவர்ண ஆபரணங்களை அணிந்தவனாயும், அனேக வாத்யகோஷங்களுடன் செல்கிறவனைக் கண்டு, “தேவரிஷியே! இவன் யாவன்?” எனக் கேட்டான். அதற்குப் பர்வதர் -- "இவன் மஹாவீரன். யஜமான விச்வாஸமுள்ள இவன் யுத்தத்தில் பல வீரர்களைக் கொன்று வீர மரணமடைந்தவன், இவன் ஸ்வர்க்க லோகம் செல்கிறான்'' என்றார். இவற்றைக் கேட்ட ராவணன் ---“மகரிஷியே! இவை இருக்கட்டும். இங்கு அனேகம் பேர்கள் செல்கிறார்களே, இவர்களில் யாராவது என்னோடு யுத்தம் செய்பவர்களாக இருக்கிறார்களா? சொல்லும்'' என்றான். அதற்கு அவர், "ராவண! இவர்கள் அனைவரும் செய்த புண்யத்தின் பலனை அனுபவிக்க ஸ்வர்க்கம் செல்கின்றனர். உன்னுடன் போர் புரியமாட்டார்கள். நீ யுத்தத்தை விரும்புகிறபடியால் ஒன்று சொல்கிறேன், கேள் - ஏழு த்வீபங்களுக்கும் அதிபதியான மாந்தாதா என்ற அரசன் ஒருவன் இருக்கிறான் அவன் மகாவீரன் அவன் உன்னோடு போர் செய்யத் தக்கவன்'' என்றார்.

          இதைக் கேட்டதும் ராவணன், "அப்படியா? அவன் எங்கேயிருக்கிறான்? உடனே அவனிருப்பிடம் செல்கிறேன். சீக்கிரமாகக் கூறும்' என்றான். அதற்குப் பர்வதர், 'ராவண! யுவனாச்வனின் குமாரனான மாந்தாதா இதோ உயர்ந்த ரதத்தில் செல்கிறவன்தான். ஸமுத்ர பர்யந்தங்களான ஏழு த்வீபங்களையும் ஜயித்து 'இப்போது ஸ்வர்க லோகத்திற்குச் செல்லுகிறானென்று மாந்தாதாவைச் சுட்டிக் காட்டினார்;

          பிரம்மதேவனின் வர பலத்தால் கர்வம் கொண்ட ராவணன் உயர்ந்த ரதத்தில் அமர்ந்து செல்பவனும், மகாவீரனும், ஸ்வர்ண வஜ்ர வைடூர்ய முக்தாமணி கணங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான மாந்தாதாவின் எதிரில் சென்று, ''என்னுடன் யுத்தம் செய்" என்று கூறினான். இதைக் கேட்ட மாந்தாதா பெரிதாகச் சிரித்து "உயிரின்மீது உனக்கு ஆசை இல்லையேல் என்னோடு யுத்தம் 'செய்'' என்றான்.

          மாந்தாதாவின் இந்த வார்த்தையைக் கேட்ட ராவணன் “வருணன் குபேரன் யமன் :இவர்களுடன் போர் புரிந்து நான் கொஞ்சமும் வருத்தமடையவில்லை. அப்படியிருக்க மானுடனான உன்னால் என்ன செய்ய முடியும்? உன்னிடம் எனக்கு என்ன பயம்?'” என்று கூறி, தன் மந்திரிகளை மாந்தாதாவுடன் போரிடச் செய்தான். அவர்கள் மாந்தாதாவின் மீது அநேக பாணங்களை பொழிந்தனர். அவற்றை மாந்தாதா தடுத்து, அவர்கள் மீது கூரான நாராசங்களைப் பிரயோகித்து ஹிம்ஸித்தான். அவர்கள் அனைவரும் தீயினால் தஹிக்கப்பட்ட விட்டிற்பூச்சிகள் போலக் கஷ்டப்பட்டனர்.

          பிறகு மாந்தாதா ஐந்து தோமரங்களால் ராவணனை அடித்தான். அது முன்பு ஸ்கந்தன் க்ரௌஞ்சாஸுரனை அடித்தது போலிருந்தது. உடனே ஓர் உலக்கை என்ற ஆயுதத்தை எடுத்து சுழற்றி ராவணன் மீது ப்ரயோகித்தான். அதனால் அடிக்கப்பட்ட ராவணன் மயங்கி இந்த்ரத்வஜம் போல் ரதத்திலிருந்து கீழே விழுந்தான். அதைக் கண்ட மாந்தாதா சந்திர கிரணங்களால் தொடப்பட்ட ஸமுத்ரஜலம் போல ஆனந்தக் கூத்தாடினான்.

          ராக்ஷஸர்கள் அனைவரும் மயங்கிய ராவணனைச் சூழ்ந்து நின்றனர் வெகு நேரங் கழித்து ஆச்வாஸப்படுத்தப்பட்ட ராவணன் தெளிந்து எழுந்தான்.

          பிறகு கோபம் கொண்ட ராவணன் அநேக பாணங்களால் மாந்தாதாவை அடித்துப் பீடித்தான். அவனது தேரையும் அழித்தான், உடனே மாந்தாதா வேறொரு ரதத்தில் அமர்ந்துகொண்டு, ராவணன் மீது சக்த்யாயுதத்தைப் பிரயோகித்தான். ராவணன் அதைச் சூலத்தினால் அழித்தான். அத்துடனல்லாமல் ராவணன் யமனிடமிருந்து பெறப்பட்ட நாராசத்தினால் மாந்தாவைக் கடுமையாக அடித்தான். அடிபட்ட மாந்தாதா மூர்ச்சையடைந்து தேர்த்தட்டில் விழுந்தான். அதைக் கண்ட அரக்கர்கள் ஸந்தோஷ ஆரவாரம் செய்தனர். ஒரு முஹூர்த்த காலத்தில் மூர்ச்சை தெளிந்த மாந்தாதா ராவணனை பாணவர்ஷங்களால் மறைத்தான். இருவருக்கும் மறுபடி மிக்க கோரமான யுத்தம் நடைபெற்றது. பிறகு கோபம் கொண்ட ராவணன், பிரம்மாஸ்திரத்தை மாந்தாதாவின் மீது பிரயோகிக்க நினைத்து, தநுஸ்ஸில் ஸந்தானம் செய்தான். அதைக் கண்ட மாந்தாதா அதற்குப் பிரதியாக பாசுபதாஸ்திரத்தை பிரயோகிக்க எடுத்தான். மிக்க பயங்கரர்களான இருவரும், பயங்கரங்களான இரு அஸ்த்ரங்களையும் பிரயோகிக்கக் கைக்கொண்டவளவில் மூவுலங்களும் நடுங்க ஆரம்பித்தன! தேவர்களும் நாகர்களும் 'அழிந்தோம்' என அஞ்சினர். இந்தக் கொடுமையை ஜ்ஞானபலத்தினால் கண்டறிந்த காலவரும் புலஸ்த்யரும் அங்கு வந்து அவ்விருவரையும் சாந்தப்படுத்தி அனுப்பினார்கள். இருவரும் சாந்தர்களாய் வந்த வழியே திரும்பினர்.

இருபத்தேழாவது ஸர்க்கம்

          [ராவணன் சந்திரமண்டலம் செல்வதும், அங்கே சந்திரனுடைய சீதகிரண ஸ்பர்சத்தை ஸஹிக்க முடியாமல் அவனது மந்திரிகள் பயப்படுவதும், சந்திரனோடு போரிட நினைத்த ராவணனை பிரமன் நல்லது கூறித் தடுப்பதும்.)

          புலஸ்த்ய காலவ ரிஷிகளால் ஸமாதானப்படுத்தப்பட்ட ராவணன், முதலாவதான வாயுமார்க்கத்தை யடைந்தான். அது பத்தாயிரம் யோஜனை உயரமுள்ளது. அதில் பரமஹம்ஸர்கள் குடி கொண்டுள்ளனர். புஷ்பக விமானத்தின் மூலம் அதைக் கடந்து இரண்டாவதான வாயு மார்க்கத்தையடைந்தான். அங்கு ஆக்னேயம், பக்ஷஜம் பிராம்மம் என்று மூன்று விதங்களான மேகங்கள் ஸஞ்சரிக்கின்றன. அதுவும் பத்தாயிரம் யோஜனை உயரம் கொண்டது. அதையும் தாண்டிச் சென்றான். அதற்கும் மேலாக மூன்றாவதான வாயு மார்க்கம், அங்கு ஸித்தர்களும் சாரணர்களும் நித்யவாஸம் செய்கிறார்கள். அதுவும் முன்போன்ற உயரமுள்ளதே. அதற்கும் மேலே நான்காவதான மண்டலம், அதில் பூதங்களும் விநாயகர்களும் வஸிக்கிறார்கள்.. இதுவும் முன்போன்ற அளவுள்ளதே. அதற்கும் மேலாக ஐந்தாவது மண்டலம். அங்கு நதிகளுள் ச்ரேஷ்டையான கங்கையும், நாகங்களும் இருக்கின்றன. மலை போன்ற அந்த நாகங்கள் (யானைகள்) தங்களது துதிக்கைகளால் கங்காஜலத்தை வாரி இறைக் கின்றன. அவற்றின் துதிக்கைகளினின்றும் வெளிவிழும் கங்கா ஜல லவங்கள் (திவலைகள்) காற்றில் கலந்து பனியாக ஆகின்றன. அதற்கு மேலே ஆறாவது வாயு மண்டலம். அங்கேதான் கருடவாஸம். அதற்கும் மேலே ஏழாவது ஸ்தானம். அதில் புண்யக்ருத்துக்களான மகரிஷிகள் வஸிக்கிறார்கள். அதற்கும் மேலே எட்டாவது வாயு ஸ்தானம். அதில் ஆகாச கங்கை நித்யமாக உள்ளது. அது சூரிய மார்க்கத்தை அடைந்துள்ளது. அதை வாயுபகவான் தரித்துள்ளார். மிக்க வேகமுடையதும் சப்திப்பதுமாக உள்ளது. அதற்கும் மேலாக எண்பதாயிரம் யோஜனை உயரத்தில் சந்திரமண்டலமுள்ளது. அங்கு தான் சந்திரன் க்ரஹங்களுடனும், நக்ஷத்ரங்கள் புடை சூழவும் அமர்ந்துள்ளான். அவனுடைய நூறு நூறாயிரம் கிரணங்கள் உலகில் பரவி ஒளியூட்டுகின்றன; பிராணிகளை மகிழ்விக்கின்றன.

          அந்த இடத்தை அடைந்து நின்றான் தசக்ரீவன், தனது மந்திரிகளுடன்.

          இவர்களைக் கண்ட சந்திரன் மிகவும் கோபத்துடன் தனது சீத கிரணங்களால் அவர்களை நடுக்கமுறச் செய்தான். ராவணனின் பரிவாரங்கள் அதைச் சகிக்க முடியாமல் கஷ்டப்பட்டன. பிரகஸ்தன் ராவணனைப் பார்த்து, '' அரசே! இந்தக் குளிரைக் தாங்க முடியவில்லை. ஆகவே இங்கிருந்து திரும்பிச் சென்று விடுவோம்" என்றான். இதைக் கேட்ட ராவணன் மிகவும் கோபமடைந்து பாணங்களால் சந்திரனை ஹிம்ஸிக்க ஆரம்பித்தான்.

          அது கண்ட சதுர்முகன் அவ்விடம் வந்து "ராவண! நீ செய்வது நன்றன்று, உலகிற்கு நன்மையைச் செய்யும் சந்திரனைப் பீடிக்காதே. உனக்கு நான் ஓர் உயர்ந்த மந்தரத்தை உபதேசிக்கிறேன். பிராணனுக்கு ஆபத்து நேரிடுங்கால் அதை அநுஸந்தானம் செய்தால் மரணம் நேரிடாது'' என்றார். இதைக் கேட்ட ராவணன், பிரமனைக் கைகூப்பி வணங்கி, 'அப்படியே ஆகட்டும், எனக்கு அந்த மந்த்ரத்தை உபதேசியுங்கள்'' என்றான். பிறகு பிரம்மா அவனுக்கு சிவநாம அஷ்டோத்ரத்தை உபதேசித்து, "இதைப் பிராண ஆபத்து நேரும் காலத்தில் மட்டுமே ஐபிக்க வேண்டும்'' என்று கூறினார்,

          இப்படியான வரத்தை அளித்து, பிரம்மா தனது லோகத்திற்குச் சென்றார். ராவணன் மிகுந்த ஸந்தோஷத்துடன் தன் இருப்பிடம் ஏகினான். வரும் வழியில் தனது கண்களுக்கு இலக்கான மானிட, தேவ, ரிஷி கன்யகைகளை அபஹரித்துக்கொண்டும் சென்றான்.