சடகோபரந்தாதிவிளக்கம்: முத்தமிழ்: சிறப்பு: பொது:
“தோன்றாவுபநிடதப்பொருள்” என்னும் சடகோபரந்தாதிப் பாடலின் விளக்கம்:- மேலே கூறியபடி இறைநிலை உணர்தற்கு அரிது என்று சடகோபர் விளம்பியதற்குத்தக, “உபநிடதப்பொருளை தோன்றா உபநிடதப் பொருள்” என்றார். சடகோபர் திருவாய்மொழியே அவ்வரிய உபநிடதப்பொருளை, உபநிடதம்வல்லார் தமக்கும் சால விளக்கிக்காட்டும் தனிச்சான்றாய்த் திகழ்தலை “தோன்றலுற்றார் தமக்கும் சான்றாம் இவை” என்றதாற் கூறினார். இத்துணைமாட்சித்தாகிய திருவாய்மொழிக்கு வேறு பெருமை யாது வேண்டும், என்று இச்சிறப்புத் தோற்ற “மற்றென்” என்றார். “செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே”1 என்ற இம்மஹாதேசிகர் திருவாக்கு இவ்வந்தாதிப் பாடற்பொருளை மெய்ப்பிக்கும் நலம் காண்க. தோன்றா உபநிடதப் பொருளை உற்றார் தமக்கும் தோன்ற விளக்கியவாறு யாதெனின் “நினைந்து” விளக்கினார் என்று குறித்தார். ஒப்பற்றதோர் திவ்யயோகஸமாதியில் “திருமாலால் அருளப்பட்ட”2 வராய் என்றுமுள்ள “முந்தை ஆயிர”3 த்தை “தோற்றங்களாயிரம்”4 எனக்கண்டு தந்த வரலாற்றைச் சொன்னார். திருமால் என்றுமுள்ள வேதத்தை நினைந்து தருவது போல் சடகோபர் என்றுமுள்ள திருவாய்மொழியை நினைந்து தந்தார் என்றது கருத்து. இது ஆக்கிய நூலல்ல, நோக்கிய நூலே, என்றுமுள்ள எழுதாமொழியாகிய திருவாய்மொழியென்னும் தமிழுபநிடதம் என்றது இதனாற் கூறிற்றாயிற்று. தமிழ்வேதமாகிய திருவாய்மொழி ஆயிரம் பாடல்களை “இவை” என்றார். இத்திருவாய்மொழி ஒன்றே வேதங்கள் நான்குமாம் என்றது தோன்ற “இவை” என்று பன்மையிற் கூறினார் என்னவுமாம். “தமிழ்ச்செஞ்சொற்களால் பலவேதமும் மொழிந்தான்”5 “குறையாமறையின் திடலைக் கலக்கித் திருவாய்மொழியெனும் தேனைத் தந்தான்”6 என்னும் இவ்வந்தாதிப்பாக்களை நோக்குக. சடகோபர் திருவாய்மொழி ஒன்றே நான்கு வேதங்களாயும் வேதமுடித்துணிபாகிய சாரீரகநூற்பொருளின் ஸாரமாயும் திகழ்தலை வேதாந்ததேசிகர் த்ரமிடோபநிஷத்தாத்பர்யரத்நாவளி7யில் விளக்கியிருத்தல் காண்க. இப்பொருளை “பின்னுரைத்த தோர் திருவாய்மொழி”8 என்று ப்ரபந்தஸாரத்திலும் காட்டினார். ஆகையால் திருவாய்மொழி ஆயிரத்தை இம்மஹாதேசிகர் “த்ரமிடோபநிஷத்” என்றார். கம்பர் “தென்றலைத் தோன்றுமுபநிடதம்”9 “திருவாயிரமோக்கமாலை”10 என்றார். திவ்யப்ரபந்தங்களுட்போல் சடகோபர் தாமே பாடியருளிய ப்ரபந்தங்களுள்ளும், சரமப்ரபந்தமாகிய தமிழுபநிடதம் என்னும் திருவாய்மொழி தலைமை வாய்ந்தது, ஆதலால் திருவாய்மொழியே நான்கு வேதங்களாயும் உபநிடதமாயும், மோக்கமாலையாயும் திகழும் தனிச்சிறப்புத் தோன்ற திருவாய்மொழி ஆயிரம் பாடல்களை “இவை” என்றார். “முனைவன் கண்டது முதனூலாகும்”11 என்ற இலக்கணம் திருமால் அருளிய திருமறைக்கும் திருமாலால் அருளப்பட்ட திருமாறன் அருளிய திருவாய்மொழிக்கும் ஒக்கப் பொருந்தியது என்றது கருத்து. இருவரும் “முனைவர்கள்” ஆதலால், இம்மஹாதேசிகர் சடகோபரை “மறைநூல் தந்த ஆதியர்” என்றார். சடகோபர் திருவாய்மொழி ஆயிரம் முதனூல் என்றது கருத்து. அம்முதனூலைக் கண்ட முனைவராதலால் சடகோபரை “ஆதியர்” என்றார். சடகோபரை “திருவாய்மொழி (தமிழுபநிடதம்) கண்டவர்” என்று இவர் பன்னி உரைத்திருத்தல் காண்க12 திருமாலைப்போல் திருமாலால் அருளப்பட்ட சடகோபர், முதனூல் தந்த ஆதியர் என்ற இக்கருத்தை, கம்பர் “குருகைப்பிரான் எம்பிரான்” என்றதாற் காட்டினார். “வகுளவனமாலை எம்பெருமான் குருகூர்மன்னன் வாய்மொழியே”13 என்ற பாடலுக்கும் கருத்து இதுவே. வனமாலையன் வாய்மொழியாகிய உபநிடதமும் வகுளமாலையன் வாய்மொழியாகிய திருவாய்மொழியும் ஒன்றிக் கமழும் மணத்தை உணர்த்தியவாறு. வகுளவனமாலையனாகிய குருகைப்பிரான் விளக்கிய உபநிடதநுண்பொருள் யாதெனின், தத்துவமும்மை என்னும் விசிட்ட இறை நிலை உண்மை என்றார். அதை, “தம்மன் மூன்று ஆயின” என்றார். சித்து, அசித்து, இறை என்னும் மூன்றினாலாகிய தத்துவமும்மை என்றபடி அவற்றுக்கு எந்நிலையிலுமே உற்றுள்ள வேற்றுமை தோற்ற “தம்மில்” என்று பன்மை கொடுத்தார். இறைப்பொருளின் தனித்தலைமை தோற்ற “தம்மில் மூன்றாயின” என்றார். பொருளைம்மையும் (அர்த்த பஞ்சகமும்) தத்துவமும்மையில் அடங்கும் என்றது தோற்ற உம்மை கொடுத்தார். சித்து, அசித்து என்னும் தத்துவங்கள் இறைத்தத்துவத்தின் ப்ரகாரங்கள் என்றும், அம்முத்தத்துவங்களின் சரீராத்மபாவரூபசம்பந்த உண்மையை ஆரணம் (உபநிடதம்) ஒன்றே உணர்த்தும் தனிச்சான்று என்றும் அவ்வுபநிடதத்தின் தெள்ளிய தமிழே திருவாய்மொழி என்றும் ஆதலால் சடகோபர் திருவாய்மொழி ஆயிரம் “ஆரணத்தின் மும்மைத் தமிழ்” என்றும் சடகோபர் அருளிய திருவாய்மொழியின் முத்தமிழ்த் தன்மையை விளக்கினார். அருள்மிகுத்த அன்னையாய்த் தமிழுபநிடதமாகிய முத்தமிழைத் தவம் செய்து திருமாலிடத்தினின்று பெற்றுக் கரவாது உலகத்துக்கு நல்கிய சடகோபருடைய வள்ளன்மை தோற்ற “ஈன்றான்” என்றார். ஈன்றதாய் சடகோபர் என்றதால், வளர்த்த இதத்தாய் எம்பெருமானார் (இராமாநுஜர்) என்றது பெற்றாம். “ஆதியர்” என்றது எம்பெருமானார்க்கும் ஆதல் காண்க. “ஆன்ற தமிழ்மறைக ளாயிரமும் ஈன்ற, முதல்தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமாநுசன்” என்ற திருவாய்மொழித்தனியன் இப்பாடற்கு விளக்கமாதல் காண்க. “மிக்க விறைநிலையு மெய்யாமுயிர்நிலையும், தக்கநெறியுந் தடையாகித்-தொக்கியலு, மூழ்வினையும் வாழ்வினையுமோதுங் குருகையர்கோன், யாழினிசை வேதத்தியல்” என்ற தனியனும் அர்த்தபஞ்சகம் அடங்கியுள்ள தத்துவமும்மையை உணர்த்தும் ஆரணத்தின் மும்மைத் தமிழாகிய திருவாய்மொழியின் ஒண்மையை விளக்கியபடி. வேதத்தியலே திருவாய்மொழியிசை என்ற பொருளை “குருகைப்பிரான் எம்பிரான்தன் இசைக்கவியே” என்றார். “எம்பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி ஒன்றைத் திரித்து அன்று எரித்த திருவிளக்கு”14 என்ற அமுதனார் திருவாக்கை இங்கு ஒப்புநோக்குக. “குருகைப்பிரான் தமிழாற் சுருதிப்பொருளைப் பணித்தான்”15 “இழைத்தாரொருவருமில்லா மறைகளை இன்தமிழாற் குழைத்தார்”16 என்று கம்பர்தாமே இப்பொருளைக் காட்டினார். “செய்யன் கரிய னெனத் திருமாலைத் தெரிந்துணர (இறைநிலைதெரிந்துணர) வையம் கரியல்ல, மாட்டாமறை, மதுரக்குருகூரய்யன் கவியல்லவேல்”17 என்றும், “நம்பிமாறனைப் போல், எவரே திருவாயிரமோக்கமாலை இசைத்தனரே”18 என்றும் உபநிடததத்துவமும்மைத் தமிழே சடகோபர் அருளிய இசைக்கவியாம் முத்தமிழ்த்திருவாயிரமோக்கமாலை என்று பின்னும் நன்கு விளக்கினார். அஃதே மூலமந்திரப்பொருள் என்றதை “மூலத்தெளியமுது”19 என்றார். வேதம் உணர்த்தும் சித்து அசித்து இறை என்னும் முத்தத்துவத்தை விளக்கும் “ஆரணத்தின் மும்மைத் தமிழ்” முத்தமிழ், அது திருமந்திர மறைநூலாகிய திருவாய்மொழி என்று கம்ப நாட்டாழ்வர் இச்சிறப்புப் பொருளை விளக்கியுள்ளது இவ்வாறு காட்டப்பெற்றது.
இயல் இசை நாடகம் என்ற பொதுவும் முத்தமிழாகிய திருவாய்மொழியில் அமைந்துள்ளதை “மறையென்று பல்லோ ரெண்ணப்படச் சொற்றிகழச் செய்தான் இயலோடிசையின் வண்ணப்படைக்குத் தனித்தலை வேந்தன்.... குருகூர்வந்த சொற்கடலே”20 “உயர்நாற்கவியும் பின்னை உரைக்கப்படுவதல்லால் இயற்கும் இசைக்கும் சிகாமணியே”21 “குருகைப்பிரான் தன் இயலிசைக்கே”22 “இயலைத்தொடுத்து இன்னிசையைப் புணர்த்து எம்மை இப்பிறவிமயலைத் துடைத்தபிரான்”23 “இயலோடிசையிற் பொருளிற் சிறந்த அலங்காரவல்லியிற் போக்கிலுள்ளம் தெருளிற் கரும்பொக்கு மாயிரம்பாப் பண்டு செய்தவரே”24 என்று காட்டியுள்ளது காண்க. இவ்வந்தாதியில் இயல் இசை இரண்டையுமே வெளிப்படையாய்க் கூறி நாடகத்தை “பாவகத்தாற் றன்திருவவதாரம் பதினொன்றென்று இப்பூவகத்தா ரறியாதவண்ணம் தன்னையே புகழ்ந்து நாவகத்தாற் கவியாயிரம் பாடி நடித்தளித்த, கோவகத்தான்”25 என்று குறித்துள்ளது நோக்குக. இவ்வாறு திருவாய்மொழி சிறந்ததோர் நாடகத்தமிழ் என்றது காணலாம். “என்னாகியே, தப்புதலின்றித் தனைக்கவிதான் சொல்லி”26 “என்னால் தன்னை வன்கவிபாடும் என்வைகுந்தநாதன்”27 “மறப்பிலா என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே”28 “என்னைமுற்றும் தானேயாய் நின்றமாய அம்மான்”29 என்ற திருவாய்மொழிப்பொருளை இச்சடகோபரந்தாதிப் பாடல் உட்கொண்டுள்ளது காண்க. “இன்று நன்கு வந்து என் உள்ளே புகுந்து, வேதங்களினுள்ளடங்காத, தனக்குங்கூடவடங்காத, கவிகளைப்பாடின என்வைகுந்தநாதனை என்று மறப்பன் என்கிறார்”27 என்றும் “என்னைக் கொண்டு பிராட்டியும் தானுமாகத் திருவாய்மொழிபாடின இம்மஹோபகாரத்தை முன்புசொன்ன ஸர்வோப கரணயுக்தனாய்க் கொண்டு பூதபவிஷ்யத்வர்த்தமான காலமெல்லாம் அனுபவித்தாற்றானார்வனே என்கிறார்”28 என்றும் திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவாறாயிரப்படியில்; பாஷ்யம் அருளிச் செய்தது கண்டு. திவ்யதம்பதியார்களாகிய திருமாமகளும் திருமாலும் சடகோபராய் நடத்தளித்த திவ்யநாடகத்தமிழே திருவாய்மொழி என்ற பொருள் தெளிக. இவ்வாறே “முத்தமிழ்த்துறையின் முறை போகிய உத்தமக்கவி”30 “புவியினுக்கணியாய் ஆன்ற பொருள் தந்து புலத்திற்றாகி, அவியகத்துறைகள் தாங்கி ஐந்திணை நெறியளாவிச் சவியுறத் தெளிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர்கவியெனக் கிடந்த கோதாவரி”31 “பாவருங்கிழமைத் தொன்மைப்பருணிதர் தொடுத்தபத்தி, நாவருங் கிளவிச்செல்வி நடைவரு நடையள்”32 என்ற கவிச்சக்ரவர்த்தியின் இராமாவதாரத் திருவிருத்தங்கள் பொதுவாயும், சிறப்பாயும் முத்தமிழ்ப் பொருளை விளக்கும் அழகு காண்க. “புவியினுக் கணியாய்”31 என்றதன் இனிமையை இத்தேசிகமாலைத்திருப்பாடல் ஒன்று கொண்டு நன்கு சுவைக்க இது கார்மேனி அருளாளர் கச்சியை வருணிக்கும் பாடல். முத்தமிழ்ப் பொருளுக்கும் இப்பாடல் அணியாய் விளங்குதலால் இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது:-
திண்மணிகள் பொன்னுடனே சேர்த லாலுஞ்
சிதையாத நூல்வழியிற் சேர்த்தி யாலும்
வண்மையெழு மீரிரண்டு வண்ணத் தாலும்
வானவர்க்கும் வியப்பான வகுப்பி னாலும்
உண்மையுடை வாசியொளி யோசை யாலும்
ஒருகாலு மழியாத வழகினாலும்
மண்மகளார்க் கலங்கார மென்ன மன்னும்
மதிட்கச்சி நகர்கண்டு மகிழ்ந்திட் டாளே.33
சிதையாத நூல்வழியிற் சேர்த்தி யாலும்
வண்மையெழு மீரிரண்டு வண்ணத் தாலும்
வானவர்க்கும் வியப்பான வகுப்பி னாலும்
உண்மையுடை வாசியொளி யோசை யாலும்
ஒருகாலு மழியாத வழகினாலும்
மண்மகளார்க் கலங்கார மென்ன மன்னும்
மதிட்கச்சி நகர்கண்டு மகிழ்ந்திட் டாளே.33
என்றது. இவ்வாறு இருமறைப்பேராசிரியராகிய தேசிகர்பெருமானும் கவிச்சக்ரவர்த்தியாகிய கம்பநாட்டாழ்வாரும் முத்தமிழ் என்பது சடகோபர் திருவாய்மொழி ஆயிரம் என்ற சிறப்புப்; பொருளை விளக்கியவாறு காட்டப்பட்டது
-------------------------------------------------------------------------------------------------------------
1.அதிகாரஸங்க்ரஹம் 1; 2. திருவாய்.8.8.11; 3. ௸ 6.5.11; 4.௸6.5.11; 5. சடகோபரந். 12; 6. ௸16; 7. த்ரமிடோபநிஷத்தாத்பர். 5; 8. ப்ரபந்தஸாரம் 6; 9. சடகோபரந். 62; 10. ௸ 94; 11.நன்னூல் பொதுப் பாயிரம் 6; தொல்காப்பியம், பொருள், மரபியல் 94; 12. பாதுகாஸஹஸ்ரம் 3, 456, 820, 920; த்ரமிடோபநிஷத் 10, 66, 113, 119; ஸ்தோத்ரரத்நபாஷ்யம் 5; 13. சடகோப.4. 14. இராமாநுசநூற்றந்தாதி 8; 15. சடகோப 56; 16. ௸59; 17. ௸32; 18. ௸ 94; 19. ௸ 8; 20. ௸ 15; 21. ௸ 55; 22. ௸ 79; 23. ௸ 80; 24. ௸ 93.; 25. ௸ 78; 26. திருவாய் 7.9.4; 27. ௸ 7.9.6; 28. ௸ 7.9.9; 29. ௸ 10.7.5; 30. இராமாவதாரம், பால, சிறப்பு 9; 31. ௸ ஆரணிய சூர்ப்ப 1; 32. ௸ கிட்கிந்தா, நாட 64; 33. அத்திகிரி மான்மியம் 10.