ஞாயிறு, 26 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 1
களம் 4
(தொடர்கிறது)

 

[ மந்தரை போகிறாள். கைகேயி முகம் வாடிக் கண்ணீர் சிந்தித் தரையிற் படுத்தபடியே கிடக்கிறாள். தசரதர் வருகிறார். படுக்கையிற் கைகேயியைக் காணாமல், கோப அறையிற் சென்று பார்க்கிறார். அங்கே அவள் தரையில் தலைவிரி கோலமாய்க் கிடைப்பதைப் பார்த்துத் திகைத்து நிற்கிறார்; பிறகு முழங்காலிட்டு உட்கார்ந்து அவளை வாரி எடுக்கிறார். கைகேயி அவர் பிடியைத் திமிறி உதறிவிட்டுப் பெருமூச்செறிந்து வேறு புறமாகத் திரும்பிப் படுத்துக்கொள்ளுகிறாள். தசரதர் மறுபடியும் அவள் கையைப் பிடித்துக்கொண்டு]

தசரதர்:-- என் காதற் கனியே! கேகயன் மகளே! ஏன் இந்த அலங்கோலம்? உனக்கு வந்ததென்ன வியாகூலம்? உன் மதிமுகங் கருகுவானேன்? மலர்க்கூந்தல் அவிழ்ந்து சோர்வானேன்? மலர்க்கண் திறந்து உன் பதிமுகத்தைப் பாராயா? என்னோடின்னுரையாட வாராயா? வேர் களைந்தெறியப்பட்ட கொடிபோலவும், தெய்வலோகத்திலிருந்து கீழே விழுந்த தேவகன்னி போலவும், நீர்நீத்த பொய்கையின் நடுப்பூத்த கமலம் போலவும், கணைபட்டுச் சோர்ந்த பிணைமான்போலவும் நீ கிடப்பதைப் பார்த்து என் மனம் பதைக்கிறதே! பெண்மணியே! பெண்கள் சிகாமணியே! விண்ணோர் சிந்தாமணியே! என்னாவியே! அருமைச் சஞ்சீவியே! உனக்கேதும் பிழையிழைத்தேனோ பாவியேன்? என்மேல் ஏதும் கோபமோ? வேறு யார் மீதேனும் மனஸ்தாபமோ? ஏதேனும் நோயால் வருந்துகிறாயா? அடி மட அன்னமே! மாற்றுயர்ந்த சொன்னமே! வாய்விட்டுச் சொன்னால் உன் நோய் விட்டுப்போக நான் மார்க்கம் தேடேனோ? உனக்கித்தனை பாடேனோ? உனக்குத் தீங்கிழைத்தவர் யார்? சொல், இந்த க்ஷணமே அவர்களைத் தண்டிக்கிறேன். யாரையாவது சிரச்சேதம் செய்யவேண்டுமா? மரணதண்டனை விதிக்கப் பெற்றவர் எவரையேனும் மன்னிக்க வேண்டுமா? இந்த நிமிஷமே நீ விரும்புவதை முடிக்கின்றேன். நீ உன் பவளவாய் திறந்து உன் குறையை மொழியடி பெண்ணே! கொண்ட துன்பம் ஒழியடி கண்ணே! உன் மனதிற்கு மாறாக நடப்பவர் எவருளர்? ஏன் வீணாக வருந்துகிறாய்? என் கட்டிக் கரும்பே! உன் முகத்தில் ஏன் இப்படி வியர்வை அரும்புகிறது? (அவள் முகத்தை வஸ்திரத்தால் துடைக்கிறார்)

கைகேயி:-- (சித்தப்பிரமை கொண்டவள்போல் முகந்துடைத்த கையைத் தள்ளிவிட்டுப் புரண்டு பெருமூச்செறிந்து) ஐயோ! என்னை யார் தொந்தரை செய்கிறது? என் அருகில் ஒருவரும் வராதீர்கள். நான் எக்கேடுங்கெட்டுப் போகிறேன். என்னைச் சும்மாவிடுங்கள். உங்களுக்குப் புண்ணியமுண்டு.

தசரதர்: -- காதலி! நான் இன்னானென்று தெரியவில்லையா? உன் அபிமானமே உருவெடுத்து வந்த உத்தமனல்லவா? உன் சுகதுக்கங்களைக் கலந்தனுபவிக்க பாத்தியப்பட்டவனல்லவா? யோக்கியர்களுக்குள் சிலாக்கியனல்லவா? கோசல நாடாளுங் கோமானல்லவா? ஸ்ரீராமனைப் பெற்ற சீமானல்லவா? பல்லாயிரம் பிரஜைகளுக்குக் கர்த்தாவல்லவா? சற்று நிதானித்து எழுந்திரு, உன் குறைகளைக் கூறு. தேனினுமினியாளே! என் கண்மணியனையாளே! எழுந்திரு.

கைகேயி:-- தங்கள் கண்மணியனையாளாய் நானிருந்தால் எனக்குத் துன்பம் ஏது?

தசரதர்:-- கண்மணீ! நீ கூறுவது விபரீதமாயிருக்கிறதே! விபரீதமாயிருந்தாலும் உன் வாயிலிருந்து வந்ததால் இன்பமாகவுமிருக்கிறது. சற்று எழுந்து உட்கார். உன் குறைகளை விளங்கச் செல்லு. (அவளைப் பிடித்துத் தூக்கி உட்கார வைக்கிறார். கைகேயி உட்காருகிறாள். பிறகு வேறு புறமாக முகத்தைத் திருப்பிக்கொண்டு)

கைகேயி:-- உபசாரத்திற்குக் குறைவில்லை. இந்த உதட்டுறவெல்லாம் கைகேயினிடத்திலா? இராமனுக்குப் பட்டம் செய்தாலென்ன? எனக்குத் தெரியக்கூடாதா? தெரிந்தாலென்ன, நான் அதைத் தடுத்து விடுவேனா? அல்லது கெடுத்து விடுவேனா? வைதீக காரியங்களிலாகட்டும், லௌகீக காரியங்களிலாகட்டும் என்னை யோசியாமல் இதுவரையில் எந்தக் காரியம் நடந்தது? மந்திரிகளையும் புரோஹிதர்களையும் கலந்து யோசிப்பதற்கு முன்னமேயே எந்த விஷயத்திலும் என்னைக் கலந்து யோசிப்பது வழக்கமல்லவா? எந்த விஷயமும் என்னிடம் பேசி முடிவான பிறகுதானே சபையேறும்? அப்படியிருக்க அயோத்தியில் இராஜ பட்டாபிஷேகமாகி அறுபதினாயிரம் வருஷங்களாயிற்று. அவ்வளவு நீண்ட காலத்துக்கு இப்பால் நடக்கவிருக்கும் பட்டாபிஷேகத்தைப் பற்றி எல்லாருக்கும் தெரிவிக்கப்பட்டு எங்கும் கொண்டாடப்பட்டு சலித்த பின்னையா நான் கேள்விப்படுகிறது? வேண்டுமென்றே எனக்கிந்த அவமானம் செய்ததைவிட ஓர் ஆற்றில் குளத்தில் என்னைத் தள்ளிவிடுவது உத்தமமாயிற்றே! இனிமேல் இந்த வாழ்க்கை எதற்காக? இதுவரையில் உயிர் விட்டிருப்பேன். காரணத்தை அறிவியாமல் உயிர் நீப்பது பிசகென்று கருதியிருந்தேன். அதைத் தெரிவித்தாயிற்று. இனி இந்த வாழ்வு ஏன்?

“மயிர் நீப்பின் வாழாகவரிமா வன்னா
ருயிர்நீப்பர் மானம் கெடின்”

மயிர் நீத்தால் கவரிமான் உயிர்வைத்திருக்குமோ? மானமழிந்த பின் அறிவுடையோர் வாழ்வாரோ? வாழார். கொண்ட கணவன் என்னை அற்பமாய் மதித்ததால் நான் மானங்கெட்டவளாய்விட மாட்டேன். இதோ என் உயிரைத் துறக்கின்றேன். (கழுத்தில் முந்தானையால் சுருக்கிட்டுக்கொள்ள எத்தனிக்கிறாள். தசரதர் அவளைத் தடுத்து)

தசரதர்: -- ஆ! என் ஆருயிரே! என்ன காரியஞ் செய்யத் துணிந்தனை? உன் உயிருக்கொரு கெடுதல் நேரிட்டால் அது எல்லோரையும் பீடிக்குமே! உன் உயிரும் என் உயிரும் ஒன்றன்றோ! நீ உயிர் துறந்தால் நான் உயிர் துறப்பேன். நான் உயிர் துறந்தால் நாளை பட்டாபிஷேகம் நின்றுவிடும். அதனால் தேசமெல்லாம் கலவரப்படும். இவைகளையெல்லாம் யோசியாது காரணமின்றி வியாகூலப் பட்டு உயிரையும் துறக்கத் துணிகிறாயே! இதுதானோ அழகு? இராம பட்டாபிஷேகம் உனக்கு அறிவிக்கப்படவில்லை யென்கிறாய். உன்னை அலட்சியமாக எண்ணி அறிவியாதிருக்கவில்லை. எல்லாருக்கும் சேவகர்கள் மூலமாய்ச் செய்தி தெரிவிக்கப்பட்டது. உனக்கும் அவ்விதமே தெரிவிப்பது கௌரவமாகாதென்று நானே நேரில் சொல்ல எண்ணி இங்கு வந்தேன். இராஜ சபை கலைந்ததும் உன்னையே நாடி வந்திருக்கின்றேன். இன்னும் குறைதானோடி கண்மணி?

கைகேயி:-- ஆ! என்ன கௌரவம்! சகல காரியங்களையும் முடித்துக்கொண்டு என்னிடம் வந்து சொல்வது மகாகௌரவந்தான்! சாதாரண காரியமா? மகுடாபிஷேகம். அது விஷயத்தில் என்னை யோசியாமல் சகல காரியங்களையும் முடிவு செய்து விடுகிறது! பிறகு வந்து கண்ணே, மணியே என்று கொஞ்சுகிறதா? வெகு நன்றாயிருக்கிறது! பட்டாபிஷேகம் யாருக்கு? இராமனுக்கு! இராமன் யார்? என் மகனல்லவா? வயிற்றில் பிறந்தால்தானா புத்திரன்? அவன் விஷயத்தில் நான் எவ்வளவோ கவலை கொண்டவளாய், அவன் க்ஷேமாபிவிருத்திக்காக எவ்வளவோ காரியங்களை உத்தேசித்து வைத்திருக்கிறேன். அவன் நன்மையை உத்தேசித்து நான் எண்ணியிருக்கும் எண்ணங்களை திடீரென்று வெளியிட்டால் விபரீதமாகத் தோன்றும், ஆதலால் அவன் பட்டாபிஷேக விஷயம் நம்மிடம் யோசனைக்கு வரும், அப்பொழுது கூறலாமென்றெண்ணியிருக்க, என் எண்ணமெல்லாம் மண்ணுண்டு போக, என்னிடம் சிறிதும் தெரிவியாமல் நாளைக்கே பட்டாபிஷேகம் செய்வதாக முடிவு செய்து சகல காரியங்களையும் நடத்திவிட்டு என்னிடம் வந்து தெரிவிப்பதில் கௌரவமொன்றா?

தசரதர்:-- காதலீ! உண்மையில் நான் உன்னை அகௌரவப்படுத்த எண்ணினவனல்லன். இராமன் விஷயத்தில் நீ எண்ணியுள்ள எண்ணங்கள் எனக்குத் தெரியாது. அவன் பட்டாபிஷேக விஷயத்தில் உனக்கொன்றும் ஆக்ஷேபணை இராதென்றறிந்தே நான் உன்னை ஆலோசியாமல் முடிசூட்டத் தீர்மானித்து விட்டேன். அது தவறாகில் பொறுத்துக்கொள். அத்தவறுதலுக்குப் பரிகாரமாக நீ எதை வேண்டுமானாலும் கேள், தடையின்றித் தருகிறேன்.

கைகேயி:-- உண்மைதானா இது?

தசரதர்:-- உண்மைதானடி கண்மணி!

கைகேயி:-- என்னைக் கேளாமல் ஒரு பெரிய காரியத்தைச் செய்ய முடிவு செய்துவிட்டு இப்பொழுது அதற்குப் பல குயுக்தியான சமாதானங்கள் சொல்ல வருகிறவர் வாக்கை எப்படி நம்புகிறது?

தசரதர்:-- அடிமானே! என் வாக்கிலும் உனக்குச் சந்தேகம் ஏற்பட்டுவிட்டதா? ஆ! என்ன விபரீதம்! உயிர்போனாலும் உரைத்த உரை மாறாச் சூரிய குலத்தில் வந்தவனடி நான்! மக்களைப் படைத்த மனுக்குலத்தில் வந்த மன்னனடி நான்! மெய்யை நிலைநிறுத்த நாடிழந்து, நகரிழந்து, மனைவியை விற்று, மகனை விட்டு, மயானஞ்சென்று, புலையனுக்கடிமை யாகிப் பொய்யாத கீர்த்தியை மெய்யாலடைந்த அரிச்சந்திர மன்னன் மரபில் வந்த தசரதனடி நான்! நன்மை தீமையாக மாறினாலும், நடுநெறி மாறினாலும், வில்லானது இராமன் கையைவிட்டு வேறெங்கே மாறினாலும், அல்லது இப்பொழுது குறித்துள்ள பட்டாபிஷேகம் மாறினாலும், நான் சொன்ன சொல் மாறேனடி மாதரசே! என் வாக்கிலும் உனக்குச் சந்தேகமா? ஆனால் சரி. என்னைச் சோதிக்கும் சுடர் விளக்கே! என் ஆருயிர் அனையவள் நீ ஒருத்தியே. என் ஆருயிரினுஞ் சிறந்தவன், என் அருமைத் திருமகன், கோசலை பெற்ற குலமகன், உன் உளத்துக்கினிய பெருமகன் இராமன் ஒருவனே! அவனினுஞ் சிறந்தார் எனக்கு இம்மண்ணுலகிலும் இல்லை. இனி வரும் விண்ணுலகிலுமில்லை. அந்த இராமன் மேலாணை. நீ எது கேட்கின்றாயோ அதை இப்பொழுதே கொடுக்கின்றேன், கேள்!

கைகேயி:-- நல்லது. (ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து) ஏ தேவர்களே! திக்குப் பாலகர்களே! சூரிய சந்திரர்களே! நவக்கிரகங்களே! நீங்கள் அனைவரும் இதற்குச் சாக்ஷி. மிக்க உண்மையும் உறுதியும் தருமமுடைய அயோத்தி அரசர் நான் கேட்டதை இப்பொழுதே தருவதாகத் தம் மகன் இராமன்மீது ஆணையிட்டுக் கொடுத்திருக்கிறார். (தசரதரைப் பார்த்து) அயோத்திக்கரசே! முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு யுத்தம் நடந்ததல்லவா? அக்காலத்தில் அசுரர்கள் தங்கள் உயிர் ஒன்றைவிட்டுத் தங்கள் பலமுழுவதும் வாங்கிவிட்டார்களன்றோ? அப்பொழுது நான் தங்கள் அருகிலிருந்து இரவும் பகலும் கண்ணிமையாமல் தங்களைப் பாதுகாத்தேனன்றோ? அந்த உபகாரத்திற்கு ஈடாகத் தாங்கள் இரண்டு வரங்கள் கொடுத்தீர்களல்லவா? அவைகள் இரண்டையும் இப்பொழுதே கொடுங்கள்.

தசரதர்:-- என் இஷ்டநாயகீ! இதுதானா ஒரு பெரிய காரியம். அவ்வரங்களை நீ எப்பொழுது கேட்டபோதிலும் கொடுத்திருப்பேனே. உன் விருப்பப்படியே அவ்வரங்கள் இரண்டையுங்கூறு.

(இப்படி மோகத்தால் மயங்கி கைகேயியிடம் சிக்கிக் கொண்ட தசரதன் புலம்பித் தவிப்பதை வரும் வாரங்களில் தொடர்ந்து படிக்கலாம்)