கண்ணன் வருகையும் ராஸ லீலையும்
வார்கொள் மென்முலை மடந்தையர்,
தடங்கடல் வண்ணனைத் தான் நயந்து ஆர்வத்தால்
அவர் புலம்பிய புலம்பலை அறிந்து,
அணி மேருவின் மீது உலவும் குன்றுசூழ் சுடர் ஞாயிறும்
அன்றியும் பல சுடர்களும்போல் மின்னு நீள்முடி,
ஆரம், பல்கலன், உடை எம்பெருமான்,
திருச்செய்ய கமலக்கண்ணும், செவ்வாயும்,
செவ்வடியும், செய்ய கையும், திருச்செய்ய கமல உந்தியும்,
செய்ய கமல மார்பும், நீலமேனியும், செய்ய உடையும் திகழ,
தேன்துழாய்த்தாரானும், மின்னு நூலும், குண்டலமும்,
மார்பில் திருமறுவும், நீண்ட புருவங்களும்,
பாங்கு தோன்றும் பட்டும்,
மைவண்ண நறுங்குஞ்சிக் குழல் பின்தாழ,
மகரம்சேர் குழை இருபாடு இலங்கி ஆட,
பல்நெடும்சூழ் சுடர் ஞாயிற்றோடு பால்மதி ஏந்தி
ஓர் கோலநிலவில், நெடுங்குன்றம் வருவது ஒப்பு,
மன்னிய சீர்மதனன் வந்து முன் நிறக,
இளமங்கையரும் வந்து சுற்றும் தொழுது
இடைஇடை தன் செய் கோலத் தூது செய்
கண்கள் கொண்டு ஒன்று பேசி,
தூமொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி,
பேதுரு முகம் செய்து நொந்து அது மொழிந்து,
முதுமணற் குன்று ஏறி, குழலால் இசை பாடி,
குரவை கோத்து கூத்து உவந்து ஆடி
உள்ளம் குழைந்து, எழுந்து, ஆடி
பெருமையும் நாணும் தவிர்த்து பிதற்றி,
உலோகர் சிரிக்க நின்று ஆடி, தொல்புகழ் பாடி,
கும்பிடு நட்டம் இட்டு ஆடி, பண்கள் தலைகொள்ளப்பாடி,
எழுந்தும் பறந்தும் துள்ளி
ஓர் இரவு ஏழ் ஊழியாய் நீண்டதால்
வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்த
கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து
கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை,
அருங்கல உருவின் ஆயர் பெருமான்
அவனொருவன் குழல் ஊதினபோது,
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி மனம் உருகி
மலர்க்கண்கள் பனிப்பத்தேன் அளவு செறி கூந்தல்,
அவிழச் சென்னி வேர்ப்பச் செவிசேர்த்து நிற்க,
ஏதம்இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல்
முழவமோடு இசை திசை கெழுமி,
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள், கெந்தருவர் மாதவர்,
சாரணர் இயக்கச் சித்தரும் மயங்கினர்
மின்அனைய நுண்ணிடையார்,
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர்
அவர் வெள்கி மயங்கி வானகம்படியில் வாய்திறப்பு இன்றி,
ஆடல் பாடல் இவை மாறினர்.
நன்நரம்பு உடைய தும்புருவோடு நாரதனும்
தம்தம் வீணை மறந்து,
கின்னர மிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோம் என்ன
அத்தீம்குழற் ஊதக் கேட்டவர்கள் இடர் உற்றனர்.
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்
அமுதகீத வலையால் சுருக்குண்டு
நம்பரம் அன்று என்று நாணி மயங்கி, நைந்து,
சோர்ந்து, கைம்மறித்து நிற்ப!
குழல்ஓசை அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப,
அவியுணா மறந்து வானவர் எல்லாம்
ஆயர்பாடி நிறையப் புகுந்து,
ஈண்டிச் செவி உணாவின் சுவைகொண்டு மகிழ்ந்துவிடாது நிற்ப
பறவையின் கணங்கள் கூடுதுறந்து
வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
கவிழ்ந்து இரங்கிச் செவி ஆட்டகில்லாவே;
திரண்டு எழு தழை முகில் வண்ணன்,
செங்கமல மலர்சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல்தாழ்ந்த முகத்தான்,
ஊதுகின்ற வேய்ங்குழல் ஓசைவழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து,
மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர,
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
எழுது சித்திரங்கள் போல் நிற்ப,
மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும், மலர்கள் வீழும்,
வளர்க்கொம்புகள் தாழும், இரங்கும் கூம்பும்
திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.
திருஆர் பண்ணில் மலிகீதமொடு பாடி அவர் ஆடலொடு கூடி,
பொறிஆர் மஞ்ஞை பூம்பொழில் தொறும்
நடம் ஆடநின்று நன்று இசைபாடியும் ஆடியும்
பலபல ஊழிகள் ஆயிடும்.
இது ஒரு கங்குல் ஆயிரம் ஊழிகளே.