வெள்ளி, 21 ஜூலை, 2017

ஸ்வாமி தேசிகன் காட்டிய நம்மாழ்வார் வைபவம்

சேட்லூர் ஸ்ரீ நரசிம்மாசாரியாரின் அத்யந்த சிஷ்யராக விளங்கிய கோமடம் ஸ்ரீ எஸ்.எஸ். அய்யங்கார் ஸ்வாமி ஸ்வாமி தேசிகனின் திருவுள்ளக் கருத்தை முற்றிலும் அனுஸரித்து சந்தமிகு தமிழ்மறையாம் நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களை நாலு தொகுதியாக 1962ல் திருவஹீந்த்ரபுரத்தில் தேசிக சம்ப்ரதாயஸ்தர்களில் தலைசிறந்து விளங்கிய அறிஞர்கள் முன்னிலையில் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு தொகுதிக்கும் முன்னுரையாக அவர் எழுதியிருப்பவை பொன்னே போல் பாதுகாத்து ரசிக்க வேண்டியவை. அவற்றில் மூன்றாம் பாகமான திருவாய்மொழிக்கு முன்னுரையாக நம்மாழ்வார் வைபவத்தை ஸ்வாமி தேசிகனின் த்ரமிடோபநிஷத் ஸாரத்தைக் கொண்டு அவர் விளக்கியுள்ளது மிக அருமையான ஒன்று. இன்றுமுதல் அந்த நம்மாழ்வார் வைபவத்தைத் தட்டச்சிட்டு இங்கு பகிர ஆரம்பிக்கிறேன். கூடுமான மட்டும் தினமும் அந்த 75 பக்க வைபவம் சிறிது சிறிதாக இங்கு வளரும்.

|| ஸ்ரீ: ||
ஆழ்வார் திருவடிகளே சரணம்.
சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
நம்மாழ்வார் வைபவம்.

1. திருவவதார க்ரமம்.

       இவ்வாழ்வார்  ஆழ்வார் திருநகரி  எனப்படும் திருக்குருகூரில் கலி முதல் வருஷமான ப்ரமாதி ௵ வைகாசி ௴ பௌர்ணமி, வெள்ளிக்கிழமை விசாக நக்ஷத்திரம் கூடிய சுப தினத்தில் ஸ்ரீ ஸேநேசருடைய அம்சமாய்க் காரி என்பவருக்குத் திருக்குமார்ராகத் திருவவதரித்து அருளினார். இவர் வேளாளர் குலத்தில் திருவவதரித்தருளியவர்.

2. திவ்ய சரித்திர விசேஷங்கள்.

        முன் ஜென்மத்தில் செய்த கர்மம் முதலியவற்றை மறக்கும்படி செய்கிற சடவாயுவைத் தம்முடைய திருவவதார காலத்திலேயே நிராகரித்துவிட்ட பெருமையுடையவர் இவர். ஆனாலும் லோகத்திலுள்ள மற்றைக் குழந்தைகள் போல வெளித் தோற்றத்தில் காணப்பட்டாலும் தாயின் பால் முதலிய ஆஹாரம் ஒன்றும் உட்கொள்ளாமலேயே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துகொண்டு வந்தார். பேசவேண்டிய பருவத்தில் பேசவே இல்லை. இதைக்கண்ட இவருடைய பெற்றோர்கள் இவரை அந்த திவ்ய தேசத்து எம்பெருமான் திருமுன்பே கொண்டுபோய் விட்டு, குழந்தை பேசும்படி அனுக்ரஹம் செய்தருளும்படி ப்ரார்த்தித்தார்கள். ஆனால் அக்குழந்தை எம்பெருமான் ஸந்நிதி ப்ராகாரத்தின் வழியாக ப்ரதக்ஷிணமாகச் சென்று, அங்கிருந்த ஒரு திருப்புளி மரத்தின் கீழே படுத்துக்கொண்டு அங்கேயே யோகத்தில் ஆழ்ந்திருந்தார். மதுரகவியாழ்வார் இவரை ஆச்ரயிக்க, அவரைக் கடாக்ஷித்தருளி, மீண்டும் யோகத்தில் நம்மாழ்வார் ஈடுபட்டிருந்தார். தம்முடைய பகவதனுபவத்தின் போக்குவீடாக இவரனுஸந்தித்தருளிய பாட்டுக்களை அவர் (மதுரகவியாழ்வார்) பட்டோலை கொண்டருளினார். இவர் திருநாட்டை அலங்கரித்தருளிய பிறகு, ஸ்ரீமதுரகவிகள் இவருடைய அர்ச்சா விக்ரஹத்தை ப்ரதிஷ்டை செய்தருளி வருஷந்தோறும் உத்ஸவாதிகளை நடத்திவந்தார். இதுவிஷயமான மற்ற அம்சங்களை குருபரம்பரா ப்ரபவாதிகளில் காணலாம்.

3. இவர் வெளியிட்டருளிய ப்ரபந்தங்கள்
1.  திருவிருத்தம்          பாட்டுக்கள்        100
2. திருவாசிரியம்   பாட்டுக்கள்                 7
3. பெரிய திருவந்தாதி    பாட்டுக்கள        87
4. திருவாய்மொழி பாட்டுக்கள்              1102
       ஆக மொத்தம் பாட்டுக்கள்           1296

4. தத்துவ ஹித புருஷார்த்த நிரூபண ப்ரகாரம்

   திருவாய்மொழியின் முதலடியிலேயே 'உயர்வற உயர்நலமுடையவன்' என்றாரம்பித்து ஸமஸ்த கல்யாண குணகண பரிபூர்ணனான பகவான்தான் பரதத்துவம் என்றும், அவனுடைய 'துயரறு சுடரடி தொழுகை'யே உபாயம் என்றும், அப்படி 'எழுகையே' புருஷார்த்தம் என்றும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

5. ப்ரபந்தார்த்த ஸங்க்ரஹம்.

நான்கு ப்ரபந்தங்களினுடைய பொது ஸங்க்ரஹம்.
        ஆழ்வாருடைய நான்கு ப்ரபந்தங்களிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் அர்த்த விசேஷங்கள் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் 126-ம் சுலோகத்தில் ஆசார்யனால் அனுஸந்திக்கப் பட்டிருக்கின்றன. இதன் கருத்து:-

        தம்முடைய முதல் ப்ரபந்தமாகிய திருவிருத்தத்தில் ஸம்ஸாரத்தினுடைய பொறுக்க முடியாமையை அருளிச் செய்தார். இரண்டாவது ப்ரபந்தமாகிய திருவாசிரியத்தில் பகவானுடைய ஸ்வரூப ஸ்வபாவாதிகளை ப்ரத்யக்ஷத்தில் போலே கண்டு அனுபவித்தார். மூன்றாவது ப்ரபந்தமான பெரிய திருவந்தாதியில் பகவானை விசேஷித்து அனுபவிக்கும் விஷயத்தில் தமக்குண்டாயிருக்கும் மிகவும் அதிகமான த்வரையை நிரூபித்தார். நான்காவது ப்ரபந்தமாகிய திருவாய்மொழியில் பரம புருஷனை உள்ளபடியே ஆழ்வார் தாம் தம்முடைய திருவுள்ளத்தாலே அனுபவித்து, அவ்வனுபவஜனிதமான நிரவதிக ப்ரீதியாலே அவனை அனுபவித்தபடியே பேசி, தம்முடைய விடாயெல்லாம் தீரும்படி பகவான் வந்து சூழ, நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகராய் அவனைப் பெற்றபடியை அருளிச் செய்தார்என்பது.

        பகவானை அனுபவிக்கப்புகும் பாகவதர்களுக்கு உண்டாகும் க்ரமம் இதுவே என்பது பகவத் பக்தர்களின் முன்னணியில் நிற்கும் ஸ்ரீபரதாழ்வான் விஷயத்திலும் கூறப் பட்டிருக்கிறது. எங்ஙனே என்னில்

        அயோத்திக்குத் திரும்பி வந்ததும் ஸ்ரீராமன் பிராட்டியுடனும் இளையபெருமாளுடனும் காட்டுக்கு எழுந்தருளினதையும், சக்கரவர்த்தி இறந்துவிட்டதையும், தம்முடைய தாயார் தனக்காக ராஜ்யத்தை வாங்கி வைத்திருக்கிறாள் என்பதையும் கேட்டவுடன் ஸ்ரீபரதாழ்வானுக்கு உண்டாகிய துக்கத்தால் பகவானைவிட்டுப் பிரிந்து அயோத்தியில் இருப்பது அதிதுஸ்ஸஹமாயிருந்த நிலைமை திருவிருத்தத்தில் ஆழ்வாருடைய நிலைமைக்கு ஸமமாக இருக்கும்.

        பகவானை நேரில் ஸேவித்து அவனை ராஜ்யத்திற்கு எழுந்தருளும்படி ப்ரார்த்தித்துத் தம்முடைய துக்கத்தைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று அவர் பாரித்த நிலைமை திருவாசிரியத்தில் குறிப்பிடப்பட்ட நிலைமையாகும்.  

        இந்த ஆசை வ்ருத்தி அடைந்து ஸ்ரீராமனை உடனே சென்று ஸேவிக்கவேண்டுமென்று பாரித்தபடி பெரிய திருவந்தாதியில் ஆழ்வாருக்கு உண்டாகிய நிலைமையாயிருக்கும்.

        அப்படியே சித்திரகூடம் சென்று ஸ்ரீராமனை ஸேவித்துத் தம்முடைய பாரதந்த்ரியத்தை விண்ணப்பம் செய்து, அவனை விட்டுப் பிரிந்து இருக்க முடியாமையைப் பலபடிகளாலும் வற்புறுத்தியபோதிலும் பகவான் தன்னுடைய ப்ரதிஜ்ஞையை மாற்றமுடியாதென விளக்க, அவனுடைய திருவுள்ளப்படி மீண்டும் ராஜ்ய பரிபாலனம் செய்தருளியதை ஒத்திருக்கும் திருவாய்மொழியில் ஏற்பட்ட நிலைமை. ஆழ்வார் ப்ரபத்தி செய்து பகவானை அடைய த்வரித்தருளிய போதிலும் இவரைக்கொண்டு ஸம்ஸாரி சேதனர்களைத் திருத்த வேண்டுமென்கிற பகவானுடைய திருவுள்ளத்தை அனுஸரித்திறே அவர் இந்த ஸம்ஸாரத்தில் இருக்க இசைந்து அருளியது!

        இஸ்ஸம்ஸாரத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு பகவானை அடைவதற்கு மார்க்கங்களான பரபக்தி, பரஜ்ஞாநம், பரமபக்தி, ப்ரபத்தி என்கிற நான்கு படிகளும் முறையே நான்கு ப்ரபந்தங்களிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் என்றும் கூறலாம்.

        சிலர் இந்த நான்கு ப்ரபந்தங்களும் முறையே ரிக், யஜுஸ், ஸாம அதர்வண வேதார்த்தங்களை ப்ரதிபாதிக்கின்றன என்பர்கள். இந்த ப்ரபந்தங்கள் ஒவ்வொன்றும் ஓரொரு வேத்த்தின் அர்த்தத்தை மட்டும் ப்ரதிபாதிக்கின்றன என்பது வேதங்கள் ஒவ்வொன்றுமே அறியப்படவேண்டிய எல்லா அர்த்தங்களையும் சொல்லுகின்றன என்றும், அவைகள் எல்லாம் பகவானே அடையத் தகுந்தவன் என்கிற ப்ரதானார்த்தத்தைக் கூறுகின்றன என்றுமுள்ள ப்ரஸித்தியுடன் முரண்படுமாகையாலும், அப்படிப் பூர்வர்கள் ஒருவரும் வ்யாக்யானத்தில் உபபாதிக்கவில்லை யாகையாலும், மேலே நிரூபிக்கப்படப் போகிறபடியே சில எண்ணிக்கைகளின் ஸாம்யத்தைக்கொண்டு திருவாய்மொழி நான்கு வேதங்களுக்கு ஸமமாயிருக்கும் என்கிறாப் போலே நான்கு என்ற எண்ணிக்கை வேதங்களுக்கும் ஆழ்வார் ப்ரபந்தங்களுக்கும் ஸமமா யிருப்பதைக்கொண்டு இப்படி நிரூபிக்கப்பட்டிருக்கிறது எனக் கொள்ளுவது உசிதமெனத் தோன்றுகிறது.  

தொடரும்.