வெள்ளி, 13 ஜனவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.

சுலோக‌த்தின்

த‌மிழாக்க‌ம்

"ஸ்ரீ ஆண்டாள் மாலை"
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)

 

சுலோகம் 12

ப்ராயேண தேவி பவதீவ்யபதேசயோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .12.

கோதா யுனதுபெயர் கொண்டதனா லன்றோவக்
கோதா வரிதனது கோளகற்றித் - தீதோடச்
சார்ந்தார் பவமுந் தரங்கிணியின் றன்பவமுந்
தீர்ந்தோடச் செய்யுமென்பர் தேர்ந்து. .12.

பதவுரை

தேவி -- ஏ கோதாதேவியே! பவதீவ்யபதேஶயோகாத் -- உன் பெயரைப் பெற்ற ஸம்பந்தத்தால் (பாக்யலாபத்தால்), கோதாவரீ -- கோதாவரி நதியானது; இதம் ஜகத் -- இவ்வுலகை; பயஸா -- தன் தீர்த்தத்தால்; ப்ராயேண -- மிகவும்; புநீதே -- பரிசுத்தப்படுத்துகிறது. யஸ்யாம் -- எந்த கோதாவரி நதியில்; ஸமயேஷு -- புண்ய காலங்களில்; பாகீரதி ப்ரப்ருதயோ அபி -- கங்கை முதலிய புண்ய நதிகளும் ; ஸமேத்ய -- சேர்ந்து; சிரம் நிவாஸாத் -- வெகு காலம் கூடி வஸிப்பதால்; புண்யா: -- பரிசுத்தங்களாக; பவந்தி -- ஆகிறார்களோ.

அம்மா கோதா தேவியே! உன் பெயரை வஹித்த ஸம்பந்தத்தாலும், பாக்யத்தாலும் கோதாவரீ நதி இவ்வுலகத்தைத் தன் தீர்த்தத்தால் மிகவும் புண்யமாக(சுத்தமாக)ச் செய்கிறாள். எந்த கோதாவரீ நதியில் கங்கை முதலிய புண்ய நதிகளும் சில புண்ய காலங்களில் கூடி நீண்டகாலம் வஸிப்பதால், பரிசுத்தமாகின்றார்களோ.

அவ -- தென் திக்கின் ஓர் கோணத்தில் நீ அவதரித்தாய் என்ற வஸ்து ஸம்பந்தமாவது அந்தத் திக்குக்கு உண்டு. அந்த ஸம்பந்தம் லேசமுமில்லை கோதாவரீ நதிக்கு. உன் பெயரைத் தன் பேராகப் பெற்ற ஸம்பந்தந்தானுண்டு. பேர் ஒற்றுமை என்ற சப்த ஸம்பந்தம் நாமமாத்ர ஸம்பந்தம் தானுண்டு. அந்த ஸம்பந்தத்தாலும், அந்நதி ஸர்வோத்தரமான (உத்தமமான) பரிசுத்தியை உடையது. உலகத்தையெல்லாம் பரிசுத்தமாக்குகிறாள். உலகத்தை எல்லாம் புனிதமாக்கும் புண்யநதிகளையும் தன் சேர்க்கையால் புண்யமாகச் செய்யும் சக்தியை அடைகிறாள். பெருமாள் ஸ்ரீபாததீர்த்தமான கங்கையும் கோதாநதியில் தீர்த்த யாத்திரை செய்து அங்கே க்ஷேத்ரவாசம் செய்து அசுத்தியை நீக்கிப் புண்யமாகிறாள். அதெல்லாம் உன் திருநாமத்தைப் பெற்ற பாக்கியத்தின் மஹிமை. "நாமவஹனம்" ஓர்விதமான தாஸ்யமாகும். 'த்வத்தாஸ தாஸீகண" என்பதுபோல. கோதாநதீ என்னும் தேவீ தாஸீகணத்தில் சேர்வாள், உன் திருநாமத்தை வஹிப்பதால்.

தேவி -- கோதாதேவியே! கோதாவரீதேவி, பாகீரதீதேவீ முதலிய புண்யநதீதேவிகள் உன் விபூதிகள், உன் தாஸிகள்.

பவதீவ்யதேஶயோகாத் -- உன் திருநாமம் தனக்கும் பெயரான ஓர் ஸம்பந்தத்தால், பெயர் ஸம்பந்தத்தால் மாத்ரம். யோகம் என்பதற்கு 'ஸம்பந்தம்' என்று பொருள். அது கிடைக்காதது கிடைப்ப தென்னும் அலப்த லாபத்தையும் சொல்லும்.. அநவாப்தபூர்வமானதைப் புதிதாக அடைதலைச் சொல்லும். உன் திருநாமம் தனக்கும் அமையப் பெறும் பாக்கியம் அலப்ய லாபமே. 10இல் "உன் தாதைக்கு முன்பு கிடையாதது உன்னால் கிடைத்தது" என்றார். 11இல் "மஹாபுண்ய பரிபாகத்தால் லப்யம் உன் அவதார ஸம்பந்தம்" என்றார். இங்கும் "யோகாத்" என்பதால் உன் பெயர் தனக்கும் அமையப்பெற்ற (கிடையாதது கிடைத்த) பாக்கியத்தால் என்றுஉ விளக்குகிறார். எல்லாம் இங்கே பாக்யமும் புண்யமும், இலப்ய லாபமும், பரிசுத்தி லாபமுமாகவே இருக்கின்றன. நிகண்டுவில் "கோதா" என்பது 'கோதாவரீ நதிக்கும்' 'விஷ்ணுசித்தர்' ஆத்ரஜைக்கும் பெயர் என்று சேர்த்துப் படிக்கப்பட்ட சப்த ஸம்பந்தந்தான். வேறு வஸ்து ஸம்பந்தமில்லை. நிகண்டுவில் ஸஹயோகந்தான். சப்தமாத்ரமான ஸம்பந்தத்திற்குக்கூட இத்தனை மஹிமையுளது. உன் பிதாவான ஆழ்வார் 'பெரிய ஆழ்வாராவது' என்ன ஆச்சரியம்! இப்படி கைமுத்யங்களால் அதை ஸமர்த்திப்பதில் திருவுள்ளம்.

கோதாவரீ -- 'கோதாவரீ' என்பது நதிக்கு மட்டும் பெயர். 'கோதா' என்பது உங்களிருவருக்கும் நிருநாமம்.

இதம் ஜகத் -- இவ்வுலகனைத்தையும். தீர்த்த ஸ்நானம் எல்லோருக்கும் பொது. உன் ஸரஸ்வதீ நீராட்டமும் எல்லோர்க்கும் பொது.

பயஸா ப்ராயேண புநீதே -- தீர்த்தத்தால் விசேஷமாய்ப் பரிசுத்தமாக்குகிறாள். தீர்த்தத்தால் சுத்தமாக்குகிறாள். நீ உன் நாமமாத்ரத்தாலும் கோதாவரீ நதிக்கு ஸர்வோத்தரமாகும் மஹிமையை அளிக்கிறாய். ப்ராயேண -- அநேகமாய்ப் பரிசுத்தமாக்குகிறாள் கோதாவரீ. பூர்ணமாக, ஏகாந்தமாக சுத்தமாவது உன் ஸரஸ்வதீ நீராட்டத்தினால்தான்.

யஸ்யாம் -- எந்த கோதாவரீ நதியில். ஸீதைப்பிராட்டி சிர காலம் பஞ்சவடியில் அந்நதியில் நீராடி அதைப் புண்யமாக்கினாள். 'ஹநகதநயா ஸ்நான புண்யோதகேஷு' என்று காளிதாஸர் கோதாவரீ தீர்த்தங்களைப் புகழ்ந்தார்.

ஸமயேஷு -- சில புண்யகால விசேஷங்களில்.

ஸமேத்ய -- சேர்ந்து. 'நதிகளின் சங்கமம்' உயர்த்தி என்பர். இங்கே மற்ற புண்ய நதிகள் தங்களுக்கு நேர்ந்த பல பாபிகளின் ஸம்பந்தத்தால் வந்த அசுத்தியைப் போக்குவதற்காக கோதாவரீ நதிக்குத் தீர்த்த யாத்திரையாக வந்து, அங்கே சேர்ந்து பஹுகாலம் வஸித்து அதனால் சக்தி பெறுகிறார்கள். தீர்த்தங்கள் செய்யும் தீர்த்த யாத்திரை, தீர்த்தவாஸம்.

சிரம் நிவாஸாத் -- சிர காலம் வஸிக்கிறார்கள். உன் பெயரைப் பெற்ற நதியென்னும் அந்த உன் ஸம்பந்தத்தால் மஹா பரிசுத்தமான நதியென்னும் கௌரவம். 'தே புந்யேந்துருகாலேந' 'ஜலமயமான தீர்த்தங்கள் வெகுகாலத்தால் பரிசுத்தியைச் செய்கின்றன' என்கிற வசனப்படி நதீஸாமான்ய வாஸனையால் சிரகாலம் வஸிக்கிறார்கள்.

பாகீரதீ ப்ரப்ருதயோபி -- கங்கை முதலிய மஹாநதிகளும். பகீரத ப்ரயத்தினத்தின்பேரில் ஸ்வர்க்கத்திலிருந்து இங்கே அவதீர்ணமான கங்கையும், உத்தம புண்ய நதிகளும். "கங்கை கங்கையென்ன வாசகத்தாலே கடுவினை களைந்திடுகிற்கும் கங்கையின் கரைமேல்", "எழுமையும் கூடி யீண்டிய பாவமிறைப் பொழுதளவினிலெல்லாம் கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல்" என்றபடி பிறர் பாவங்களைக் கழுவினாலும், அந்தப் பாபங்கள் தங்களோடு சேர்ந்து தமக்கே செய்த அசுத்தியைத் தாமே கழுவச் சக்தியில்லை.

புண்யா: பவந்தி -- புண்யங்களாக (பரிசுத்தங்காள) ஆகின்றார்கள். இதனால் புண்யநதிகளெல்லா வற்றிலும், கோதாவரீ, உன் திருநாம ஸம்பந்த மாத்ரத்தால், ஸர்வோத்தரமான புண்ணியநதி யாகிறாளென்று ஸூசனம். வடக்குத் திக்கிலுள்ள கங்கா யமுனா நதிகளிலும் கோதாவரீயென்னும் தென் நதி உத்தரமாகின்றாள். கோதாவரீ தீரத்தில் பிறந்த பவபூதி கவியும், உத்தரராம சரிதத்தின் இரண்டாமங்கம் முடிவில் "தக்ஷிணதேச மலைகளின் குஹைகளில் கோதாவரீ தீர்த்தங்கள் புகுந்து சப்திக்கின்றன" என்று வர்ணித்திருக்கிறார். கோதாவரீ நதியை அவர் தக்ஷிணதேச நதியென்றார். முராரி நாடகத்தில் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குச் செல்லும் பெருமாள் "கோதாவரீயை வந்தனம் செய்" என்று ஸீதைக்குச் சொன்னார். .12.