மதுரகவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதுரகவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஊர்ப்பதிகம்

||ஸ்ரீ:||

செந்தமிழ்த் தென்பாண்டி நன்னாட்டு
அநுமந்த நகரம் மதுரகவி
ஸ்ரீ உ. வே. ஸ்ரீநிவாஸய்யங்கார் ஸ்வாமி
இயற்றிய

ஊர்ப்பதிகம்

திங்களூர் மாடந் திகழுமூர் தெய்வமெலா
நங்களூ ரென்று நவிலுமூர் -- பங்கயத்தோன்
பூசித்துப் போற்றும் புருடோத்த மன்றுயிலும்
ஆசற்ற வூரரங்கமாம்.                                                                    .1.
 

நாடிப் புலவர் நணுகுமூர் நற்பதின்மர்
பாடிப் பணிந்து பரவுமூர் -- சூடிக்
கொடுத்தாள் விருப்பங் கொளுமூர் பூஞ்சோலை
யுடுத்தா ரியஞ்சிறந்த வூர்.                                                             .2.

பொன்னியிரு பாலும் பொலிந்தவூர் போகமெலா
மன்னுமூர் சோழன் வழுத்துமூர் --- மன்னரங்கன்
றென்னிலங்கை நோக்கித் திருக்கண் டுயிலுமூர்
ஒன்னலரும் போற்றுமணி யூர்.                                                     .3.

ஏத்துபுகழ்க் கம்பனரங் கேற்றுமூ ரெண்பதின்மர்
தோத்திரப்பா மாலை துலங்குமூர் -- சாத்துவிகப்
பத்திநெறி யாளர் பயிலுமூர் பண்டைமறை
யுத்தமர்கள் வாழ்ந்துறையு மூர்.                                                   .4.

மேனோக்கு புண்டரத்தார் வேதாந்த விற்பனர்முக்
கோனோக்குஞ் சீயர் குழாமுறையூர் -- வானோக்கி
யேழ்புரிசை யோங்கி யிருக்குமூ ரும்பர்கண
மூழ்கடிய வந்துறையு மூர்.                                                            .5.

வாதூர் புறச்சமைய வல்லிருட்கு மித்திரனாம்
பூதூர் முனிவன் புகழுமூர் -- தாதூரும்
செம்பதும மாலைச் செழுமறையோர் போற்றுமூர்
உம்பர் குறையிரக்கு மூர்.                                                             .6.

மட்கி மதிவெய்யோன் மறுவொழிப்பான் றம்பெயராற்
புட்கரணி யாற்றிப் புகழுமூர் -- உட்கரணம்
நன்றறிந்த வீடணனார் நாடோறும் வந்துபணிந்
தென்றும் புகுமூ ரிது.                                                                      .7.

வேதம் புகழுமூர் வேதாந்தம் வேட்குமூர்
மாதந் தொறுஞ்சாறு மன்னுமூர் --- ஆதுலர்க்கு
வண்மை திகழ வழங்குமூர் மாதரெலா
முண்மை வழங்கிவரு மூர்.                                                             .8.

மாலூர் வளனூர் மணியூ ரணியூர்தண்
சேலூர் பழனந் திகழுமூர் – நாலூரான்
பன்னிப் புகழ்ந்துட் பரவிப் பணியுமூர்
உன்னற் கரியதுநம் மூர்.                                                                .9.

திருவரங்கஞ் செல்வந் திகழரங்கஞ் செய்யாண்
மருவரங்க மன்பர் வரங்கள் --- தருவரங்கம்
தேன்றுளிக்குஞ் சோலைத் தெருவரங்கஞ் செய்யபுகழ்
ஊன்றரங்க மென்றுரைக்கு மூர்.                                                    .10.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

திருவரங்கர் தத்தை விடு தூது

மன்னிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.

சில தினங்களுக்கு முன் இங்கு மதுரகவி ஸ்ரீநிவாச அய்யங்காரின் “திருவரங்கர் தத்தைவிடு தூது” நூலை பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.  ஆனால் வீட்டில் ஏற்பட்ட சில அசாதாரணமான சூழ்நிலையால் என்னால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை.  எனவே அந்நூலைத் தட்டச்சிட்டு இங்கு பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக நூலை முழுவதுமாக வருடி இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  நூலை இங்கு படிக்கவும் செய்யலாம். அல்லது தரவிறக்கி பின்பும் நிதானமாகப் படிக்கலாம்.

thiruvarangar thatthaividu thoothu திருவரங்கர் தத்தைவிடு தூது by api_11797_rajamragu

புதன், 5 டிசம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது 5

                            ……………..காரிகையார்
சொற்பாங்கியர் தமக்கும் சொற்றிடேன்
கற்பாங் கியல்தரும்என் காமவிடாய் தீராத
சொற்பாங் கியர்தமக்கும் சொற்றிடேன் – நற்பாங்கின்          .45.

பூங்குயிற்கும் ஆசை புகன்றிடேன்
ஆங்குயிர்க்கும் அன்னைதனக்(கு) அல்லாற்பின் தாய்க்குதவாப்
பூங்குயிற்கும் ஆசை புகன்றிடேன் – தேங்குயற்சீர்ப்           .46.

என்னெஞ்சுக்கு இன்னல் எடுத்துரைப்பேன்
பொன்னெஞ் சுவக்கும் புயல்பாற் பொஒருந்தியுற
என்னெஞ்சுக்(கு) இன்னல் எடுத்துரைப்பேன் – துன்னும்சீர்         .47.

மாலிலியாய் நின்று வருந்துவேன்
மாலிலியாய்நின்று வருந்துவன் மன்மதன் தேர்க்
காலிலியாய் நிற்போற்கென் கட்டுரைப்பேன் –  வேலைஎன        .48.

கள்ளருந்து வார்க்கு என் கழறுகேன்
விள்ளருந்துன் புற்று மெலிகுவேன் வேரிமலர்க்
கள்ளருந்து வார்க்கென் கழறுகேன் – தெள்ளறநீர்             .49.

ஓடும் கயல்மீன் உறாதனவேல்
ஓடுங் கயல்மீன் உறாதனவேற் உள்ளமிக
வாடுங் குருகினுக்கெவ் வாறுரைப்பேன் – பீடுபெறும்      .50.

45. காரிகையார் – பெண்களின்; கற்பாங்கியல் தரும் –கல்லைப் போன்ற கடினத்தன்மை கொண்ட; என் காமவிடாய் – என் விரகதாபம், தீராத – தீர்க்காத, சொற்பாங்கியர் தமக்கும் –இன் சொற்றோழியரிடமும், சொற்றிடேன் – கூறவில்லை, நற்பாங்கின் – நல்ல இணக்கம் உடைய.

46. ஆங்குயிர்க்கும் – அங்கே என் நிலை கண்டு பெருமூச்செறியும், அன்னைதனக்கு –தாய்க்கும், அல்லால் பின் – அல்லாது, தாய்க்குதவா – தன்னை முட்டை இட்ட தாய்க்கு உதவாமல் காகக்கூட்டில் பிறக்கும், பூங்குயிற்கும் – அழகிய கோகிலத்துக்கும், ஆசை – என் ஆவலை, புகன்றிடேன் – கூறவில்லை, தேங்குழற்சீர் – இனிய கூந்தல் சிறப்புடைய.

47. பொன் – திருமகள், நெஞ்சுவக்கும் – மனம் மகிழும், புயல்பால் – மேக வண்ணனிடம், பொருந்தியுற – சேர்ந்தடைய, என் நெஞ்சுக்கு – என் மனத்துக்கு ஏற்பட்ட, இன்னல் – தாபம், எடுத்துரைப்பேன் –எடுத்துக் கூறுவேன், துன்னும் சீர் – சிறப்பமைந்த.

48. மாலிலியாய் நின்று – மயக்கமுடையவளாயிருந்து, வருந்துவேன் – துன்புறுவேன், மன்மதன் தேர் –மன்மதன் இரதமாம், காலிலியாய் – காலற்ற தென்றற் காற்றாக, நிற்போற்கென் கட்டுரைப்பேன் – நிற்பவருக்கு (வருந்தும் தலைவருக்கு) என்ன கூறுவேன், வேலை என – கடல் போல.

49. விள்ளரும் – கூற அரிய, துன்புற்று – இடரடைந்து, மெலிகுவேன் – வாடுவேன், வேரி மலர்க் கள்ளருந்து வார்க்கென் கழறுகேன் – பூந்தேன் நுகரும் வண்டுகளுக்கு என்ன கூறுவேன், தெள்ளற நீர் – தெளிவற்ற நீரில்

50. ஓடும் கயல் மீன் – விரைந்து செல்லும் மீன், உறாதனவேல் –கிடைக்காவிடில், உள்ளம் மிகவாடும் குருகினுக்கு – மனம் மிகுதியாக வாட்டமுறும் கொக்கினுக்கு, எவ்வாறு உரைப்பேன் – எவ்விதம் கூறுவேன் – எவ்விதம் கூறுவேன், பீடு பெறும் – புகழ் பெறும்.

வியாழன், 29 நவம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது 5

…………………………………………………………………………………….நஞ்சமன                               34

பாவம் திகைப்புள்ளே பாராயோ
மேவந் திகைப்புறும்என் மேனிவெதும் பாமல்அருட்
பாவந் திகைப்புள்ளே பாராயோ – சேவகஞ்சேர்                    .35.

வண்காற் பவள வரிச்சுகமே வான் பொதிய
வண்காற் பவள வரிச்சுகமே வான்பொதியத்
திண்காற் கொழுந்தடங்கச் செய்யாயோ –எண்பாவு              .36.

பொற்கீரமே நீ புரியாயோ
நற்கீர மேயபதம் நான்அருந்து மாறுசிறைப்
பொற்கீர மேநீ புரியாயோ – எற்கீரம்                                      .37

மெல்லலகை மேய விழுப்புள்ளே
இல்லலகை யாய இருட்பிழம்புக் (கு) என்புரிவல்
மெல்லலகை மேய விழுப்புள்ளே – புல்லியமை                      .38.

அஞ்சாருவே துதித்தேன் ஆளாயோ
நஞ்சாரு மேக நவையகற்றச் சாருதிஎன்(று)
அஞ்சாரு வேதுதித்தேன் ஆளாயோ – தஞ்சாரு                       .39.

அன்னப்புள்  மேவ உள்ளம் ஆராய்ந்து
மன்னப்புள் மேவும் வனசமலர் மீதுறையும்
அன்னப்புள் மேவஉளம் ஆராய்ந்து – நன்னிறத்துப்               .40.

அப்பாலதனை ஓர்ந்து பகர்ந்திடேன்
பாலயனை வேறாய்ப் பகுத்தமையப் பண்ணுறும்அப்
பாலதனை யோர்ந்து பகர்ந்திடேன் – சீலமுறப்                      .41.

பெட்டோகை இல்லாப் பிணிமுகம் என்றோர்ந்து
பெட்டோகை யில்லாப் பிணிமுகம்என் றோர்ந்துமணிக்
கட்டோகை கண்டு கழறிடேன் – உட்டேறித்                           .42.

தாராதரம் எனவே தான் அறிந்து
தாரா தரம்எனவே தான்அறிந்து நீர்கலுழுந்
தாரா தரங்கண்டு சாற்றிடேன் – நேராருஞ்                              .43.

சாரிகை கொண்டு எங்கும் தலைப்படரும் தன்மை
சாரிகைகொண் டெங்குந் தலைப்படருந் தன்மையினாற்
சாரிகைக்கும் உள்ளன்பு சாற்றிடேன்.                                       .44.

குறிப்பு;-
34. நஞ்சமன – விடமனைய கொடிய உளத்தில்.
35. மேவ – பொருந்த; அந்தி – மாலை; கைப்புறும் – கசக்கும்; என் மேனி வெதும்பாமல் – என் உடல் வாடாமல்; அருள் – அருள் செய்; பாவ அம் திகை – பரவிய அழகிய தேமலை ; புள்ளே – கிளியே; பாராயோ – பார்க்க மாட்டாயா; சேவகம்சேர் – வணக்கம் சேரும்.
36. வண்காற் பவள – பவழம்போற் சிவந்த வலிய கால்களை உடைய; வரிச்சுகமே – வடிவுடைக்கிளியே; வான் பொதியத் திண்காற் கொழுந்து – வானளாவும் திண்ணிய பொதிகை மலையின் இளம் சுடர் (தென்றல்) அடங்க- தணிய; செய்யாயோ – செய்யமாட்டாயோ; எண் பாவும் – உளம் பரவிய
37. பதம் மேய  -- திருவடியிற் சார்ந்த; நற்கீரம் – நல்ல பாலை; நான் அருந்துமாறு – நான் பருகும்படி; சிறைப் பொற் கீரமே – பொன் சிறகுள்ள கிளியே; நீ புரியாயோ – நீ செய்ய மாட்டாயா; எற்கு ஈரம் இல் – என் பாலிரக்கமற்ற
38. அலகையாய – பேயான, இருட் பிழம்புக்கு – செறிந்த இருளுக்கு, என்புரிவல் – என் செய்வேன், மெல் அலகைமேய –மென்மையான மூக்கை உடைய, விழுப்புள்ளே – சிறந்த பறவையே, புல்லியமை – கருமை தழுவிய.
39. நஞ்சாரும் – விடம் பொருந்திய, ஏகம் – ஒரே, நவையகற்ற – குற்றம் நீங்க, சாருதி என்று – அடைக என, அம்சாருவே – அழகிய கிளியே, துதித்தேன் – தொழுகின்றேன், ஆளாயோ –ஆட்கொள்ளாயோ, தஞ்சாரும் – தான் சார்ந்துள்ள.
40. மன்னப்புள் – பட்சிராஜன், கருடன்; மேவும் –விளங்கும்,(தலைவனை நீங்காது), வனசமலர் மீதுறையும் – தாமரை மலர் மேலுள்ள, அன்னப்புள் – அன்னப்பறவை, மேவ – அடைய, உளம் ஆராய்ந்து – மனம் தேர்ந்து, நன்னிறத்து – நல்ல வெள்ளை நிற.
41. பால் அயனை – பாலையும் நீரையும், வேறாய் – வேறு வேறாக, பகுத்தமைய –பிரித்தமைய, பண்ணுறும் – செய்யும், அப்பாலதனை – அத்தன்மை கருதி, ஓர்ந்து பகர்ந்திடேன் – தேர்ந்து தூதாகக் கூறவில்லை, சீலமுற – குணமுற.
42. பெட்டோகை இல்லா – தோகையற்ற பெண், பிணிமுகம் என்றோர்ந்து – மயில் என நினைந்து, மணி – அழகிய, கண் – விழியுடைய, தோகை கண்டு – மயிலினைப் பார்த்து, கழறிடேன் – கூறவில்லை. உட்டேறி – மனம் தெளிந்து.
43. தாராதரம் எனவே தானறிந்து – ஆதரவு தாராது என்பது உணர்ந்து, நீர் கலுழும் – நீர் சிந்தும், தாரா – வாத்தின், தரங் கண்டு – தன்மை நோக்கி, சாற்றிடேன் – கூறவில்லை, நேராரும் – நேர்மை கொண்ட,
44. சாரிகை கொண்டு – வட்டமிட்டுச் செல்லுந் தன்மையுடன், எங்கும் – எவ்விடத்தும், தலைப்படரும் – வாழ்வித்திருக்கும், தன்மையினால் – குணத்தால், சாரிகைக்கும் – பூவைப் பறவைக்கும், உள்ளன்பு – என் உள்ளத்துப் (தலைவன் பாலுள்ள) பிரியத்தை, சாற்றிடேன் – கூறவில்லை.  

திங்கள், 26 நவம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது 4

மந்தாரச்சோலை வளரும்
பசும் கிள்ளாய்
மந்தாரச் சோலை வளரும் பசுங்கிள்ளாய்
சந்தாபம் எய்தித் தளர்வுற்றேன் –நந்தாத                     .21.
அந்தரங்க மந்திரம் சொல் அஞ்சுகம் முந்தரங்கம் கண்டு முடிச்சோழன் சீர்பொருந்த
அந்தரங்க மந்திரஞ்சொல் அஞ்சுகமே – நந்தணியும்   .22.
நற்புதுவை ஆண்டாள் நற்புதுவை ஆண்டாள் நலங்கனியும் பொற்றொடிக்கை
பொற்பமைய வீற்றிருக்கும் பூங்கிளியே—அற்புதஞ்சேர். .23
சோலைக்குள்ளே வீற்றிருக்கும் தென்றல் சோலைக்கு ளேபிறந்துசோலைக்கு ளேவளர்ந்து
சோலைக்குள் வீற்றிருக்கும் தோன்றலே – சோலைப்   .24.
படைவீட்டு மாரன் பரி படைவீட்டு மாரன் பரியேஅம் மாரன்
படைவீட்டு மாறென் பரியே --  நடையாற்றும்              .25.
அஞ்சுகமே ஓரிரவும் அஞ்சுகமாம் அஞ்சுகமே ஓரிரவும் அஞ்சுகமா ஆதரவாய்
அஞ்சுகமே காணல் அரிதாமே – நெஞ்சுகக்குந்             .26.
தத்தையே நீக்குக தத்தையே நீக்குக என் தத்தையே யுற்றவருத்
தத்தையை மேவுமனத் தத்தையே – உத்தமமாம்           .27.
காமன் மலரம்பு பட்டு
உடல் வருந்தினேன்
வன்னியே காமன் மலரம்பு பட்டுடலம்
வன்னியே ஒப்ப வருந்தினேன் –மன்னியசீர்க்                .28.
தென்றலும் சங்கீரணமே கீரமே ஒத்தமனக் கீரமே கொண்டுகிளர்
கீரமே தென்றலுஞ்சங் கீரணமே – ஊரறிய                    .29.
பேசு புகழ் ஏசியே ஏசியே வன்னகண்ணா ரேசிலசொற் கூறலுனக்(கு)
ஏசியே கூறலுளம் ஏறாதோ – பேசுபுகழ்க்                       .30.
கொள்ளையே கொள் ளும் நிலாக்கொள்ளை கிள்ளையே மாரன்மனக் கிள்ளையே என்றனுயிர்
கொள்ளையே கொள்ளுநிலாக் கொள்ளையே – வள்ளைவிழிச்       .31.
சாருமலர்ப் பூங்குழலார் சாருமலர்ப் பூங்குழலார் தங்களுரை போலுமொழி
சாருமதி ரூபமணிச் சாருவே – கூருநயந்                           .32.
தேருஞ் சுவாசகமே தேறுஞ் சுவாசகமே தேறாதிருக்கும் எனைச்
சேருஞ் சுவாசகமே தேற்றாயோ – மாரனடர்
                  .33.
அஞ்சிறைக் கிள்ளாய் வெஞ்சிறையி னின்றும் விடுவிப்பாய் என்றிருப்பேற்(கு)
அஞ்சிறைக் கிள்ளாய் அருளாயோ --                               .34.

21. மந்தாரச் சோலை –கற்பகச்சோலை; வளரும் –வாழும்; பசுங்கிள்ளாய் –பச்சைக்கிளியே; சந்தாபம் எய்தி – மன்மதபாணம் தைக்க, தளர்வுற்றேன் –மெலிந்தேன், நந்தாத—குறைவுபடாத
22. முந்து – முன்பு, அரங்கம் கண்டு –திருவரங்கம் உண்டாக்கி, முடிச்சோழன் –முடியுடைச் சோழமன்னன், சீர் பொருந்த – சிறப்புற, அந்தரங்க மந்திரஞ்சொல் – இரகசிய மந்திரம் கூறும், அஞ்சுகமே – கிளிய, நந்தணியும் – சங்கு வளை புனையும்
23. நற்புதுவை ஆண்டாள் –நல்ல வில்லிபுத்தூர்க் கோதையின், நலங்கனியும் –நலம் பெருகும், பொற்றொடிக்கை  -- பொன்வளையல் புனைந்த கரத்து, பொற்பு அமைய – அழகு அமைய, வீற்றிருக்கும் – அமர்ந்துள்ள, பூங்கிளியே – மென்மையான கிளியே, அற்புதம்சேர்—ஆச்சரியம் அமைந்த,
24 – 25.  சோலைக்குளே பிறந்து – பொழிலின் உள்ளே தோன்றி, சோலைக்குளே – பொழிலகத்து, வளர்ந்து – வாழ்ந்து, சோலைக்குள் வீற்றிருக்கும் –பொழிலிடை அமர்ந்திருக்கும், தோன்றலே –வருபவளே, சோலைப்படை வீட்டு மாரன் – பொழிலே படைவீடாய்க் கொண்ட , பரியே – வாகனமே, அம் மாரன் – அந்த மன்மதன், படை – சேனையை, வீட்டுமாறு – வீழ்த்தும் வழி, என் – என்ன, பரியே –பரிந்து கூறுக, நடையாற்றும் – மெல்நடை பயிலும்.
26. அஞ்சுகமே – கிளியே, ஓரிரவும் – ஒவ்வொரு இராத்திரிப் பொழுதும், அஞ்சுகமா – ஐந்து யுகமாம், ஆதரவாய் – அன்பாக,  அஞ்சுகமே காணல் – அழகார் இன்ப நலம் காண்பது, அரிதாமே – அருமையாம், நெஞ்சு(உ)கக்கும் – மனம் மகிழும்,
27. தத்தையே – கிளியே, நீக்குக என் தத்தையே – என் துன்பத்தை மாற்று, உற்ற – அடைந்த, வருத்தத்தையே – துன்பத்தையே, மேவுமனத் தத்தையே – என் மனத்து விளங்கும் அத் துன்பத்தையே, உத்தமமாம் –நலமாம்
28. வன்னியே – கிளியே, காமன் மலரம்பு பட்டு – மன்மதன் பூங்கணை தைத்து, உடலம் –மெல்லிய சரீரம், வன்னியே ஒப்ப—அக்கினி நிகராக, வருந்தினேன் – துன்புற்றேன், மன்னியசீர் –சிறப்புப் பொருந்திய.
29. கீரமே ஒத்த –பாலை நிகர்த்த, மனக்கு ஈரமே கொண்டு கிளர் – உள்ளத்தில் இரக்கம் கொண்டு விளங்கும், கீரமே – கிளியே, தென்றலும் – தென்றல் காற்றும், சங்கீரணமே – அசுத்தமாம், ஊரறிய – ஊரில் உள்ளோர் அறியும்படி.
30. ஏசியே – பழித்து, வன்ன கண்ணாரே –கொடிய பார்வையர்களே, சில சொற் கூறல் – சில வார்த்தை பேசுவது, ஏசியே – கிளியே, கூறல் – சொல்வது, உனக்கு உளம் ஏறாதோ – உன் உள்ளத்து ஏறவில்லையா, பேசு புகழ் – சிறப்பாகப் பேசப் பெறும்
31. கிள்ளையே – கிளியே, மாரன் – மன்மதன், மனக்கிள் –உள்ளத்தில் நெருடல், ஐயே – ஐயோ, என்றனுயிர் – என் ஆவி, கொள்ளையே கொள்ளும் –கவர்ந்து கொள்ளும், நிலாக் கொள்ளையே – சந்திரனைப் போன்ற குளிர்ந்த, வள்ளை விழி – கொடிபரந்த கண்களும்
32. சாருமலர்ப் பூங்குழலார் – புஷ்பங்கள் கூடிய கூந்தலும் உடைய பெண்கள், தங்கள் உரை போலும் – தம் இன்சொல் நிகர்ப்ப, மொழி சாரும் – உரை பேசும், அதி ரூப – மிக்க வடிவமுள்ள, மணிச் சாருவே – அழகிய கிளியே, கூருநயம் – மேன்மை மிக்கவை
33. தேரும் – தெளியும், சுவாசகமே –கிளியே, தேறாதிருக்கும் எனை – ஆறுதலின்றி இருக்கும் எனக்கு, சேரும் –அடையும், சுவாசகமே – நல்ல வாக்கினால், தேற்றாயோ – ஆறுதலளிக்க மாட்டாயோ, மாரன் அடர் – மன்மதன் வலிய
34. வெஞ்சிறையினின்றும் – கொடும் சிறைச் சாலையிலிருந்து, விடுவிப்பாய் – விடுதலை அளிப்பாய், என்றிருப்பேற்கு – என இருக்கும் எனக்கு, அஞ்சிறைக்கிள்ளாய் – அழகிய சிறகுள்ள கிளியே, அருளாயோ – தயை புரிய மாட்டாயோ.    

புதன், 21 நவம்பர், 2012

மதுரகவி திருஅரங்கன் தத்தைவிடு தூது 3

மண்நாட்டிலும் விண்நாட்டிலும் மண்நாட்டில் யாரும் மதிக்கும்வணம் மேவுதலால்
விண்நாட்டில் வாழ்வோர் விரும்புதலால் – எண்ணாட்டும் .9.
பரீட்சித்து மன்னன் மேன்மை பெற பாரகலை எல்லாம் பரீட்சித்து மேன்மைபெற
ஆரமுதம் நாண அறைதலால் – நீரமையும்                         .10.
நாரியரும் நாணாமல் நண்ணுதலால் நாரியரும் நாணாமல் நண்ணுதலால் நன்மையிலாப்
பூரியர்பாற் செல்லாப் புலமையான் – ஆர்வமுடன்            .11.
வனக்காட்டிடை வாழ்ந்து களித்தல் நாட்டிடையே யன்றிஎந்த நாளும்இனி தாகவளக்
காட்டிடையே வாழ்ந்து களித்தலால் --- வேட்டுருகிக்       .12.
கூடுவிடுக்
கூடு பாயும்
கூடுவிட்டுக் கூடு குடிபுகும்அக் கொள்கையினால்
பாடுபெறும் அஞ்சிறையிற் பற்றுறலால் – நீடுதவ            .13.
மாசுக நல் ஞானம் மாசுகநல் ஞான வளம்பெருகு நாமமொடு
நீசுகனாய் வாழ்தல் நிசமன்றோ – தேசுபெறும்                 .14.
வாசம் சிறந்த வனம் வாசஞ் சிறந்தவனம் மன்னுதலால் மாதவத்தோர்
பேசுநய வாணி பிறங்கலால் – காசினியின்                        .15.
மன்னும் குரம்பை வளன் மன்னும் குரம்பை வளனமையத் தான்படைத்துத்
துன்னும்ஒரு நான்முகமுந் தோன்றலால் – முன்னியநற்    .16.
அருள் வாய்ந்த வேள்வி கேள்விமறை யோர்புகலுங் கீதமறை ஓதுதலால்
வேள்வியருள் வாய்ந்த விதிஒப்பாய் – நீள்ஒளிசேர்          .17.
வண்ணக் கனி வாய் மருவுதல் வண்ணக் கனிவாய் மருவுதலால் வான்உலகில்
நண்ணிப் பயில்வோரும் நட்புறலால் --- ஒள்நிறஞ்சேர்     .18.
அஞ்சுவண வன்னம் அமைதல் அஞ்சுவண வன்னம் அமைதலால் ஆங்கெதிர்வோர்
நெஞ்சுவந்து கோடல் நிகழ்த்தலால் – நஞ்சவிழி               .19.
விந்தை நிகர் ஆயிழையார் விந்தைநிக ராயிழையார் மேவிவிளை யாடலினால்
ஐந்தருவை நீநிகராம் அன்றோகாண் --- சுந்தரஞ்சேர்       .20

9. மண் நாட்டில் – நிலவுலகில், யாரும் – எவரும், மதிக்கும் வணம் – புகழும்படி, மேவுதலால் – விளங்கலால், விண் நாட்டில் வாழ்வோர் – வானவர்கள், விரும்புதலால் –நேசிப்பதால், எண்நாட்டும் – உளத்தில் பதித்த

10.பாரகலை எல்லாம் – பெருங் கலைகள் யாவும், பரீட்சித்து மேன்மை பெற – பரீட்சித்து மன்னன் உயர்வு பெற, ஆரமுதம் நாண—அரிய அமுத மும் நாணும்படி சுவை பெற, அறைதலால் – கூறுவதால், நீரமையும் –நீரில் பொருந்திய (நீராடிய)

11. நாரியரும் – பெண்களும், நாணாமல் – வெட்கமுறாமல், நண்ணுத லால் – அடைதலால், நன்மையிலா – நலமில்லாத, பூரியர் பாற் செல்லா – அற்பர்களிடம் சென்றடையாத, புலமையால் – ஞானத்தால், ஆர்வமுடன் – அன்புடன்.

12. நாட்டிடையே யன்றி – மக்கள் வாழும் நாடுகளில் அல்லாமல், எந்த நாளும் – எப்போதும், இனிதாக – இன்பமாக, வளக்காட்டிடையே – செழித்த கானகத்தில், வாழ்ந்து – வசித்து, களித்தலால் – மகிழ்வதால், வேட்டுருகி – விரும்பி உருகி.

13. கூடுவிட்டுக் கூடு குடி புகும் அக்கொள்கையினால் – அட்டசித்துக் களுள் ஒன்றாம் ஒரு உடலை விட்டு வேறுடல் செல்லும் (பரகாயப் பிரவேசம்) அத்தன்மையால், (சுகர்), கூடு விட்டுக் கூடு மாறும் தன்மையது (கிளி), பாடு பெறும் – துன்பமுறும், அஞ்சிறையில் – அழகிய சிறைச் சாலை யில், (சுகர்) அழகிய சிறகில் (கிளி), பற்றுறலால் – பற்றி இருத்தலால், நீடு தவ --- நீண்ட தவத்தால்.

14. மா சுக நல் ஞான வளம் பெருகும் – பேரின்ப ஞான வளம் பெருகிய, நாமமொடு – சுகர் என்ற பெயருடன், நீ சுகனாய் வாழ்தல் – நீ கிளியாக (சுக மகரிஷியாக) வாழ்தல், நிசமன்றோ – உண்மை அன்றோ, தேசு பெறும் – ஒளி பெறும்.

15. வாசம் சிறந்த அனம் மன்னுதலால் – சிறந்த அன்ன வாகனத்தில் விளங் குவதால் (பிரமன்), வாசனை மிக்க சோறு உண்பதால் (கிளி), மாதவத் தோர் – மகரிஷிகள், பேசும் – புகழும், நயவாணி – எழிலார் சரசுவதி, பிறங்கலால் – விளங்குவதால் (பிரமன்), மாது – தலைவி, அவத்து – துயரில், ஓர் – ஒரு, பேசுநய வாணி – நயமாகப் பேசும் பேச்சால், பிறங்கலால் – விளங்கலால்(கிளி), காசினியின் –உலகில்.

16. மன்னும் – பொருந்தும், குரம்பை – சரீரத்தை (பிரமன்), கூடு (கிளி), வளனமைய – சிறப்பாக, தான்படைத்து – தான் சிட்டித்து, துன்னும் – விளங்கும், ஒரு நான்முகமும் – ஒப்பற்ற சதுர் முகங்களும் (பிரமன்), நாற்புறமும் (கிளி), தோன்றலால் – உண்டாவதால், முன்னிய – நினைந்த, நல் –நல்ல

17. கேள்வி மறையோர் – கேள்வி ஞானமுள்ள வேதியர், புகலும் – பிரமன் அருளும் (பிரமன்), கூறும், (கிளி), கீதமறை – இசைசார்வேதம், ஓதுதலால் –கூறுதலால் (பண்டிதர்கள் பன்னாளும் பயின்றோதும் ஓசை கேட்டு வேரிமலி பொழிற் கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலை யாமே  --சம்பந்தர் தேவாரம்) வேள்வி யருள் வாய்ந்த – யாக அனுக்கிரகம் பொலிந்து, விதி ஒப்பாய் – பிரமன் நிகராவாய், நீள் ஒளி சேர் – பெருஞ் சோதி சேரும்.

18 – 20. (கற்பகத்தரு – கிளி சிலேடை) வண்ணக் கனிவாய் மருவுதலால் – பல நிறப் பழங்கள் பொருந்துவதால் (ஐந்தரு) நல்ல நிறமுள்ள பழம் போன்ற வாய் உள்ளதால் (கிளி), வானுலகில் – தேவலோகத்தில், நண்ணி – அடைந்து, பயில்வோரும் – விளங்குபவர்களும், நட்புறலால் – நேயமுறலால், ஒள்நிறஞ்சேர் – ஒளிவண்ணம் சேரும், அஞ்சுவண வன்னம் – அழகிய பொன்நிறம் (கற்பகத்தரு) பஞ்சவர்ணம் (கிளி), அமைதலால் – பொருந்துவதால், ஆங்குஎதிர்வோர் – அங்கு எதிர்வருபவர், நெஞ்சுவந்து – மனம் பொருந்தி, கோடல் – கொள்ளுதல், நிகழ்த்தலால் – நடத்துவதால், நஞ்சவிழி – விஷத்தன்மை சேர் கண்களுடைய, விந்தை நிகர் – வீரலட்சுமி அனைய, ஆயிழையார் – மகளிர், மேவி – சார்ந்து, விளையாடலினால் – களியாடலால் (பொது) ஐந்தருவை – கற்பகச் சோலைக்கு, நீநிகராம் அன்றோ காண் – பார், நீ ஒப்பாவை அன்றோ, சுந்தரஞ் சேர் – எழில் பொருந்திய

ஞாயிறு, 18 நவம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது

Untitled-11

நூல்

பூமகளும், புவிமகளும், நீளையும் போற்ற அரவணையில்
பள்ளிகொள்ளும் அரங்கன்

பூமகளும் செல்வப் புவிமகளும் நீளையெனும்
மாமகளும் பைந்தாள் மலர்வருடப் – பாமருவும்           .1.
வண்ண மணிக்கடிகை வாளரவப் பாயலின்மேல்
எண்ணுந் துயில்புரியும் எம்பிரான் – தண்ஒளிசேர்      .2.
சோலைக்கிளியே பச்சைமணி மேனிப் படிவம்எனப் பாய்ஒளியார்
இச்சையுறுஞ் சோலை இளங்கிளியே – உச்சிதஞ்சேர்                .3.
வண்டினங்கள் பாடும் சோலை கந்தாரம் பாடிக் களிவண் டினங்கஞலும்
மந்தாரச் சோலையகம் வைகலாற் – சந்தாரக்              .4.
கோதை நல்லார் கூறும் மொழிகள். கோங்குமுலை வாங்குமிடைக் கோதைநல்லார் கூறுமொழி
யாங்குருகக் கூவிநலம் ஆர்தலால் – ஓங்கெழிலார்      .5.
இந்த்ராணி இடும் முத்தம் தந்த்ராணி எல்லாம் தளர்ந்தழியத் தான் விளங்கும்
இந்த்ராணி முத்தம் இடுதலால் – நந்தாத                      .6.
கோட்டுமா ஏறிக் குலவுதலால் கோட்டுமா வேறிக் குலவுதலால் கோதையர்கை
நீட்டுமா நின்று நிலவலால்—வேட்டுருகும்                   .7.
ஆயிரம் கண் நாட்டம் அமைதல்

ஆயிரங்கண் நாட்டம் அமைதலால் அம்புவியில்
நீயமரர் வேந்தன் நிகரன்றோ—பாய்திரைசூழ்             .8.

(நம் அகத்துக் குழந்தையிடம் ஒரு சிறு வேலையைச் சொல்லும்போது கூட, “என் கண்ணே! நீ கட்டிச் சமர்த்தாச்சே! அப்பாவுக்கு ரொம்ப செல்லமாச்சே” என்று பலபடியாய் குளிரப் பேசினால்தான் வேலை நடக்கிறது. இங்கோ கவிஞர் ஆசைப்படுவதோ பெரிய காரியம்! கிளியை தூது அனுப்புகிறார். அதுவும் அரங்கனிடம்! கிளியே போய்ச் சொல்லு என்றால் கிளி கேட்குமோ கேட்காதோ! அதனால் கிளியைப் புகழ்ந்து பாட ஆரம்பிக்கிறார்.

கிளியின் வண்ணத்தைப் , பச்சைமாமலைபோல் மேனி கொண்டு அறிதுயில் கொள்ளும் திருமாலுடனும், இந்திரனுடனும் ஒப்பிட்டுப் புகழ்வது மேலே உள்ளது. திரு கம்பன் வழங்கும் குறிப்புரை கீழே)

1. பூமகளும் – மலர்மகள் திருவும், செல்வப் புவி மகளும் – திரு மிகு பூமிதேவியும், நீளை எனும் மாமகளும் – அழகிய நீளா தேவியும், பைம்தாள் மலர் வருட –பசுமையான திருவடி மலர்களைத் தடவிக் கொடுக்க , பாமருவும் – பிரபை வீசும்
2. வண்ணமணிக்கடிகை – பலநிற மணிகள் பதித்த தோள் வளையுடன், வாளரவப் பாயலின்மேல் – ஒளிசேர் அரவணையில், எண்ணும் துயில் புரியும் --- நோக நித்திரை புரியும், எம்பிரான் – எம் தலைவன், தண் ஒளி சேர்—குளிர்ந்த பிரகாசம் சேரும்.
3. பச்சை மணி மேனிப் படிவம் என – மரகத உருவம் போல, பாய் ஒளி ஆர்---பரவும் ஒளி சேர், இச்சை உறும் – விருப்பமுடைய, சோலை – பொழிலில் உள்ள, இளங்கிளியே – இளமை சேர் கிளியே, உச்சிதம் சேர் – தகுதி சேரும்
4. கந்தாரம் பாடி – காந்தாரப் பண் இசைத்து, களி வண்டினம் கஞலும் –மதுவுண்ட வண்டினங்கள் மிகுந்திருக்கும், மந்தாரச்சோலை – கற்பகக்கா, அகம் – உள்ளே, வைகலால் – இருத்தலால், சந்த ஆர – சந்தனம் பொருந்திய
5. கோங்கு முலை –கோங்கில வரும்பனைய தனங்கள், வாங்கும் இடை – தாங்கும் இடுப்புடைய, கோதை நல்லார் – பெண்கள், கூறுமொழி – சொல்லும் உரைகள், ஆங்கு – அங்கே, உருக – அவர்கள் உள்ளம் நெகிழ, கூவி – உரைத்து, நலம் ஆர்தலால் – நன்மை உறலால், ஓங்கெழிலார் – மிக அழகுள்ள மகளிர்.
6. தந்த்ராணி எல்லாம் – (தன் த்ராணி) தம் சக்தி யாவும், தளர்ந்து அழிய – சோர்வுற்று நீங்க, தான் விளங்கும் – ஒப்பற்றுப் பொலியும் , இந்த்ராணி – இந்திரன் மனைவி, முத்தம் இடுதலால் – முத்தம் கொடுப்பதால், நந்தாத – குறைவற்ற
7. கோட்டுமா ஏறி – கொம்புகளுடைய மாமரத்திலே ஏறி, குலவுதலால் – விளங்குதலால், கோதையர் கை நீட்டுமா – அரம்பையர்கள் கை நீட்டுமாறு, நின்று நிலவலால் – இருந்து விளங்குதலால், வேட்டுருகும் – அகம் விரும்பி உருகும்.
8. ஆயிரங்கண் நாட்டம் அமைதலால் – ஆயிரங் கண்ணுடையான் பார்வை படுதலால் (இந்திராணி), ஆயிரக்கணக்கானோர் பார்வையில் படுவதால் (கிளி), அம்புவியில் – உலகில், நீயமரர் வேந்தன் – இந்திரன், நிகரன்றோ – எப்பல்லவா, பாய்திரை சூழ் –பாய்ந்துவரும் அலைகடல் சூழும்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

திருஅரங்கர் தத்தைவிடு தூது 2

Untitled-11

3. நம்மாழ்வார் துதி.

விடையனங்கை யிரவமல விழியருளால் அறருளும்
                                       விமலன் வெள்வேற்
படையனங்கை யிரவமலர் பார்வைநடை வாய்ப்பதுமப்
                                        பாவை கேள்வன்
அடையனங்கை யிரவமல னகற்றரங்கன் அடியிணைமே
                                         லறையும் பாடற்(கு)
உடையநங்கை யிரவமல முறவுயிர்க்கும் தனிக்கதிர்எற்(கு)
                                          உதவும் மாதோ

விடையன் – இடப வாகனச் சிவன், அங்கை இரவ – கையிலேற்கும் பிச்சைத் தொழிலை, அமலவிழி அருளால் –குற்றமற்ற  கண்ணருளால்,  அற- நீங்குமாறு, அருளும் –அனுக்கிரகிக்கும், விமலன் – இறைவன், வெள்வேல் படை – ஒளி செய் வேல் ஆயுதம், அனம் – அனப் பறவை, கையிரவமலர் – ஆம்பல் மலர், (முறையே), பார்வை நடை வாய் – விழி நடை வாய், பதுமப்பாவை – தாமரைச் செல்வி (திருமகள்)யின், கேள்வன் – கணவன், அடையனங்கு – மன்மதனால் அடையும், அயிர் – ஐயம், அவம் – துன்பம், மலன் – பாவங்கள், அகற்று – நீக்கும், அரங்கன் – ஸ்ரீரங்கநாதன், அடியிணை மேல் – திருவடிகளின் மீது, அறையும் – சொல்லும், பாடற்கு – பாடலாம் தத்தை விடு தூதுக்கு, உடைய நங்கை – காரி மாறன் மனைவி, இரவு – பிறவி இருள், அமலம் உற – மாசற்ற தன்மை உற, உயிர்க்கும் – ஜனித்த, தனிக் கதிர் – ஒப்பற்ற சோதி, எற்கு – எளியேனுக்கு, உதவும்—உதவி புரியும், மாதோ – அசை.

4. குரு வீரராகவர் துதி.

மானவ னத்தத்தை யாயுதம் ஏந்திய மாயப்பிரான்
தீனவ னத்தத்தை மாற்றரங் கேசன் திருவடிமேற்
கானவ னத்தத்தை சொற்றரு தூதுக்குக் காப்புரைக்கில்
வானவ னத்தத்தை மாசிவந் தான்கழல் மாமலரே.

மானவன் – பெருமைக்கு உரியவன், அத்தத்து – கரத்தில், ஐ ஆயுதம் ஏந்திய – பஞ்சாயுதங்கள் தரித்த, (அழகிய சக்கரம் ஏந்திய எனலும் ஆம்) மாயப் பிரான் – திருமால், தீனவன் – கஜேந்திரனாம் எளியவன், அத்தத்தை – துன்பத்தை, மாற்று – நீக்க, அரங்கேசன் –திருவரங்கநாத இறைவன், திருவடி மேல் – சரணங்களில், கானவன் – இசை சேர் பொழிலில் உள்ள, அத்தத்தை – அக்கினி, சொல் தரு – உரையாகப் பாடும், தூதுக்கு – தூது ப்ரபந்தத்துக்கு, உரைக்கில் –கூறில், வானவன் – சூரியன், தத்து – விரும்பும், அத்தை—அந்த மகர மாதத்தில், மாசி வந்தான் – மக நட்சத்திரத்தில் உதித்தவன், கழல் – திருவடிகளாம், மாமலரே – தாமரை மலர்களே, காப்பு – இரட்சையாகும். (நூலாசிரியரின் குரு கோடி கன்னிகாதானம் வீரராகவ சுவாமி தை மாதம் மக நாளில் தோன்றியவர் போலும்)

                                                          தொடரும்…..,,,

வியாழன், 15 நவம்பர், 2012

திருஅரங்கர் தத்தைவிடு தூது

ஹம்சத்தைத் தூது விட்டார் ஸ்வாமி தேசிகன். மேகத்தைத் தூது விட்டான் கவி காளிதாஸன். நம் மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்காரோ (ஏற்கனவே லக்ஷத்துக்கும் அதிகமான கவிதைகள் இயற்றிய இவரைப் பற்றிப் பலமுறை இங்கே எழுதியிருக்கிறேன். ) திருஅரங்கனுக்கு கிளியைத் தூது அனுப்பியிருக்கிறார். தமிழறிந்த பலரும் இதை முன்பே படித்து ரசித்திருக்கலாம். இன்றுதான் இந்நூலைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. காப்புரிமை இருக்கிறது. என்றாலும் நல்ல தமிழை, அரங்கனிடம் ஈடுபாட்டால் இன்னமுதாய்ப் பொங்கிவந்திருக்கும் ஒரு அருமையான நூலை அனைவரும் படித்து மகிழவேண்டும் என்ற ஆசையால் காப்புரிமையை மீறத் துணிந்திருக்கிறேன். இங்கு படிப்பவரில் ஒரு சிலராவது காப்புரிமை வைத்திருக்கும் திரு கோவிந்தராஜனை (எண்8, நர சிம்மபுரம்,மைலாப்பூர், சென்னை) அணுகி நூலை வாங்கிப் படிக்க இது ஒரு தூண்டுதலாக அமைந்தால் மிக மகிழ்வேன். வழக்கமாக மதுரகவி நூல்களுக்குச் சிறு குறிப்புகள் வழங்கி உதவும் திரு. ‘கம்பன்’ இந்நூலுக்கும் எழுதியுள்ள குறிப்புகளுடன் இனி நூலைப் படித்து ரசியுங்கள். வழக்கம்போல், தினம் கொஞ்சம்.  

மதுரகவி
திருஅரங்கர் தத்தைவிடு தூது.

காப்பு

1.மாருதி துதி

சீர்மருவுந் தென்னரங்கர் சேவடிமேற் செந்தமிழால்
தார்மருவும் வாசிகையான் சாற்றுதற்கு – நீர்மருவும்
அஞ்சத்தான் எண்புயத்தான் ஆகத்தான் வந்தருளுங்
கஞ்சத்தார் மாருதிதாள் காப்பு.

சீர்மருவும் தென்அரங்கர் – சிறப்பு அமைந்த அழகிய அரங்கநாதப் பெருமாளின், சேவடிமேல் – சரணங்களில், செந்தமிழால் – செவ்விய தமிழ் மொழியால், தார் மருவும் –மலர்கள் பொருந்திய, வாசிகை – மாலை, யான் சாற்றுதற்கு – நான் உரைப்பதற்கு, நீர் மருவும் – நீரில் பொருந்திய, அஞ்சத்தான் – அன்னவாகனன் பிரமன், எண்புயத்தான் – சிவபெருமான், ஆகத்தான் – ஆகும்படிதானே, வந்து –தோன்றி, அருளும் – அனுக்கிரகிக்கும், கஞ்சத்தார் – தாமரை மலர்கள் பொருந்திய, மாருதி தாள் – அனுமன் திருவடிகள், காப்பு – சரணம்.

2. எதிராசர் துதி

செல்லியலுஞ் சோலை திருவரங்க நாதனுக்குச்
சொல்லியதோர் தத்தைவிடு தூதுக்கு – நல்அரணாம்
வாதூர் புறஇருட்கு மன்னுகதி ராகிவரும்
பூதூர் முனிஇருதாட் போது.

செல் இயலும் – மேகம் தவழும், சோலை – பொழில்களை உடைய, திருவரங்க நாதனுக்கு – ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு, சொல்லிய – கூறிய, ஓர் தத்தை விடு தூதுக்கு – ஒரு கிளி விடு தூது என்னும் சிற்றிலக்கியத்துக்கு, வாது ஊர் புற இருட்கும் – வாதம் தவழும் புறச்சமயமாம் இருளுக்கும், மன்னு – விளங்கும், கதிராகி, சூரியனாகி, வரும் – ஒளி செய்து வரும், பூதூர் முனி – எதிராசர், இருதாள்போது – இரு மலர்ச் சரணங்கள், நல் அரணாம் – நல்ல காப்பாகும்.

செவ்வாய், 7 ஜூலை, 2009

நப்பின்னை


அடியேன் மீது மிகப் பிரியம் கொண்டவர்களில் ஒருவரான டெல்லி அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி சில தினங்களுக்கு முன் அனுப்பிவைத்த 100க்கும் அதிகமான புத்தகங்களில் மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்கார் எழுதிய "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம் " என்னும் அருமையான நூலும் ஒன்று.
நப்பின்னையைப் பற்றி அவள் கண்ணனை மணந்த வரலாறு பற்றி அய்யங்கார் மதுரமாக எழுதியதற்கு "கம்பன்" ஒரு அற்புதமான முன்னுரை வழங்கி, பாடல்களுக்கு எளிமையான அர்த்தங் களும் அளித்துள்ளார். அவசியம் எல்லாரும் படிக்க வேண்டிய நூல் ஸ்க்ரைப்டுவில் மின் புத்தகமாக . பல நேரங்களில் மூல நூலைக் காட்டிலும் முன்னுரைகளே ஸ்வாரஸ்யமாக அமைவதுண்டு. இந்த முன்னுரை அதற்கு ஒரு உதாரணம்.

Nappinnai pirattiyar thirumanam

வெள்ளி, 3 ஜூலை, 2009

ஏக சந்த: க்ராஹி

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். மன்னிக்க வேண்டுகிறேன். மீண்டும் மீண்டும் மதுரகவியா என்று நினைக்க வேண்டாம். சமீபத்திலே அடியேனை மிகவும் லயிக்க வைப்பவை, படிக்கும் போதெல்லாம் இப்படி ஒரு அற்புதக் கவி தமிழக மக்களிடையே நன்கு அறிமுகமாக வில்லையே என்ற ஆதங்கம் மிகுதியாகிறது.

ஏகசந்தக்ராஹி என்றால் எதையும் ஒரு முறை ஒரே ஒரு முறை படித்தாலும், கேட் டாலும் பசுமரத்தாணி போல் நினைவில் கொள்பவர் என்பது எல்லாரும் அறிந்தது தான். அப்படி ஒரு அசாத்தியத் திறமை காரணமாகவே கூரத்தாழ்வாரால் அவர் ஒருமுறை கேட்ட போதாயன வ்ருத்தியை நினைவில் கொண்டு பாஷ்யகாரருக்கு உதவ முடிந்தது என்பது சரித்திரம். இப்போது எத்தனை பேர் அப்படி இருக்கி றார்களோ தெரியாது. சில வருடங்களுக்கு முன் இருந்த அஷ்டாவதானிகள் கூட இப் போது காணோம். ஆனால் நம் மதுரகவி அப்படி ஒரு ஏகசந்தக்ராஹியாக இருந்து அதற்கும் ஒருபடி மேலே போய் ஒரு முறை கேட்டவற்றை உடனே தன் வழியில் கவிதைகளாகப் பொழிந்துள்ளார். அதிலும் நோய்வாய்ப்பட்டு தனது இறுதி நாட்களில் இருந்த சமயத்தில்கூட  ஸ்வாமி தேசிகன் அருளிய கோதாஸ்துதியை தமிழாக்கவேண் டிய அன்பரின் விருப்பத்தை ஏற்று மூலத்தை  ஒருமுறை படிக்கச் சொல்லி அதைத் தமிழில் பாடிக் கொடுத்து பிரமிப்பை ஏற்படுத்தியவர்.

  டெல்லி அன்பில் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி அனுப்பி இன்று காலை எனக்கு வந்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்களில் அந்த கோதாஸ்துதியும் ஒன்று. இந்நிகழ்ச்சியின் போது உடனிருந்த ஒருவர் கூறுவதை இங்கு படங்களாகக் கொடுத்துள்ளேன். படத்தின்மீது க்ளிக் பண்ணி படித்துப் பாருங்கள்.

 

002001

 004

003

005

சனி, 27 ஜூன், 2009

மீண்டும் உ.வே.சா. பிறக்க வேண்டும்.

ஒரு கவிதை எப்படி இருக்கவேண்டும் ?
அதுவே கனிந்து அங்கிருந்து
அதுவே நழுவிஅது விழுந்து
அதுவே கவியாய் நற்சீராய்
அதுவே அமைந்ததென் றக்கால்
முதுமா மறைக்கு முதல்வோனும்
முகுந்தன் எனுமிந் திரனும்
புதிதாம் என்ன அதிசயிப்பார்
புத்தகத் தைக்கற் றோரே.
(விலக்ஷணானந்த ஸ்வாமிகள்)
அந்தக் கவிதை எப்படி உருவாகிறது? அதன் பயன் என்ன?
பாடிய பாடகன் ஓடி மறைந்தும்
பாட்டால் அவனை நாட்டார் அறிவார்
அதுவே கவியின் அழியா உயிராம்
..... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
ஆர்வத் தீயால் அன்புள் ளுருகி
அருவி போல வருவது பாட்டாம் !
குரலும் சுருதியும் கூடிக் குழைந்து
கமகமும் தாளமுங் கனிவுறப் பொருந்தி
பாட்டின் கருத்துப் பளிச்சென விளங்கக்
கேட்டா டுள்ளங் கிளர்ச்சி கொள்ள
உணர்ச்சி ததும்ப உள்ளங் குழைய
நவரஸ பாவனை நயமுற நாட்டி
பரவையும் வசந்தப் பறவையும் போலக்
கலையின் னுள்ளம் கடவுளைக் காட்ட
வீடு திருந்த நாடு சிறக்கவே
இயல்பா யிசைத்தல் இசையென லாமே !
இன்பப் பொருளே இசையின் பயனாம் !
(கவியோகி சுத்தானந்த பாரதி)
எல்லாராலும் ஏற்றப் படும் கவிதை உலகிலே ஒப்பார் மிக்கார் இன்றி நினைத்தநேரத்திலே,நினைத்தபொருளைப்பற்றி அருவியாய், கவிதைகள் ஆயிரம் ஆயிரமாய்ப் பொழிந்தவர் கம்பம் அனுமந்தன்பட்டி மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்கார். (ஆசு கவி எனப் படாமல் மதுரகவி விருது மட்டும் கொடுத்ததும் ஏனோ தெரிய வில்லை. ) மேலே சொன்னபடி இவரது ஒரு லக்ஷத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் அமைந்திருப்பது பிரமிக்க வைப்பது. படைத்தவன் அவரை அந்த நாள் மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே படைத் திருந்தால் அவர் உலகப் பெருங் கவிகளுள் முதல்வராகி, இன்று நமக்குத் தெரிந்த சக்கரவர்த்திகளையும், பேரரசுகளையும் வெறும் குறுநில மன்னர்கள் ஆக்கியிருப்பார். ஆனால், இவர் பிறந்து வாழ்ந்ததோ, அவரே வருத்தப்பட்டபடி ஆங்கில மோகத்தால் நம்மவர்கள் தமிழைப் புறக்கணிக்க ஆரம்பித்த அந்தக் காலத்தில் ! பாடியவைகளோ படைத்தவனைப் பற்றியே ! அவ்வப்போது வைத்தியம், சோதிடம் பற்றியும் ! ஆனால் மறந்தும் மானிடர் பற்றிப் பாடவே யில்லை . பட்டங்கள் வேண்டிப் பாடினாரா என்றால் அதுவும் இல்லை! யாராவது அவரை அணுகி பெருமாளைப் பற்றிப் பாடச் சொன்னால் அந்த இடத்திலேயே பாடல்களை இயற்றி கேட்டவர்களிடமே கொடுத்து மகிழ்ந்த அற்புதர். தான் இயற்றியவற்றை நகலைக் கூடத் தன்னிடம் வைத்துக் கொள்ளாத விந்தைக் கவிஞர். அதனால், அவர் இயற்றிய பாடல்களில் பாதியைக் கூட அவர் வாரிசுகளால் கண்டுபிடித்து வெளிச்சத்துக்குக் கொண்டு வர முடியவில்லை. கிடைத்தவற்றையும் முழுமையாக அச்சேற்ற இயல வில்லை. மத்திய அரசு உதவி பெற்று சில நூல்கள் பதிப்பிக்கப் பட்டுள்ளன. [மத்திய அரசின் உதவி பெறுவதற்கு யாஹூ குழுமங்களிலும், கூகுள் சந்தவசந்தம் குழுவிலும் நன்கு அறிமுகமான டெல்லி அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி பங்கும் குறிப்பிடத் தக்கது]

அவர் இயற்றியதாகத் தெரிந்தவற்றுள் தங்களிடம் இல்லாதது அல்லது கிடைக்காதவை என்று அவர் வாரிசுகளுக்குத் தெரிந்திருப்பதன் பட்டியல் இது ! நூல் பெயருக்கு அருகில் இருப்பது நூலில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.

1. அயக்கிரீவர் மாலை 10
2. அலங்காரக் கிருஷ்ணன் பதிகம் 11
3. அலர்மேலு மங்கை நாச்சியார் மாலை 10
4. அவதார ரகசியங்கள் 20
5. அன்பில் மாலை 30
6. அனுமன் அந்தாதி 110
7. அனுஷ்டான மாலை 30
8. அஷ்ட ஐஸ்வர்ய மாலை 10
9. ஆசாரியன் அருளமுதம் 1250
10. ஆண்டாள் கல்யாணம் 10
11. ஆண்டாள் மாலை 10
12. ஆதிகேசவன் மாலை 10
13. ஆராவமுதன் மாலை 30
14. ஆழ்வார்கள் அமுதம் 4000
15. இரகுநாதன் தூதன் கோவை 100
16. இராசக் கிரீடை 16
17. இராதாகிருஷ்ண தத்துவமாலை 21
18. இருக்கை இருந்த பெருமாள் மாலை 10
19. உருக்குமணி கல்யாணம் 16
20 உலகளந்த உத்தமன் பதிகம் 15
21. ஒப்பில்லா அப்பன் மாலை 10
22. திரிகூடல் திரு அந்தாதி 105
23. திருக்கோஷ்டியூர் மாலை 10
24. திருத்தங்கல் அப்பன் மாலை 10
25. திருநாராயணபுரம் செல்லப் பிள்ளை பதிகம் 10
26. திருப்பதி மாலை 10
27. திருவில்லிப்புத்தூர் மாலை 10
28. திருமாலிருஞ்சோலைப் பலசந்தமாலை 110
29. திருவரங்கன் நீரோஷ்டக கொம்பில்லாயமகவந்தாதி 101
30. திருவரங்கப் பதிகம் 10
31. திருவள்ளூர்த் திருப்பதி மாலை 20
32. திருவில்லிபுத்தூர் மான்மியம் 1250
33. தினசரி வாழ்வு 200
34. தேர்வண்டிக்கால் சரித்திரம் 410
35 தேசிகன் மாலை 10
36. தேவநாதன் மாலை 10
37. நவதிருப்பதி மாலை 10
38. நாராயண வெண்பா 3000
39. நாரத கானம் 30
40. நாமக்கல் ஆஞ்சநேயர் பதிகம் 21
41. நூற்றெட்டுத் திருப்பதி சிலேடை வெண்பா 110
42. பத்மநாபன் மாலை 10
43. பத்திரிப் பதிகம் 10
44. பழமுதிர்ச் சோலைப் பதிகம் 10
45. பத்ராசலப் பெருமாள் பதிகம் 10
46. பரிமளரங்கன் பதிகம் 10
47. பக்தி யோகம் 50
48. பார்த்தசாரதி மாலை 10
49. பாகவத வெண்பா 3501
50. பிரபத்தி மார்க்கம் 50
51. பிரபந்த சாரம் 10
52. பிருந்தாவனப் பேறு 1250
53. புத்தூர்ப் புராணம் 1250
54. மதுராபுரி மாயக் கண்ணன் மாலை 10
55. மங்களா சாசன மகிமை 121
56. மகாபாரத சாரம் 501
57. வாக்குண்டாம் மாலை 103
58. விவாக மாலை 10
59. வில்லிபுத்தூர் வெண்பா 225
60. வியூக சுந்தர ராஜப் பெருமாள் சந்திரகலாமாலை 17
61. வைணவ வைபவம் 101
62. வைணவ இரகசியம் 401

இவை தவிர 1653 பாடல்கள் அடங்கிய 11 அனுபவ சோதிட நூல்கள், 8020 பாடல்கள் கொண்ட 21 சித்த வைத்திய நூல்கள் என இவர் இயற்றி இப்போது கிடக்காத நூல்களின் பட்டியல் விரிகிறது. மேலும் வடமொழியிலிருந்து தமிழாக்கிய பாதுகா சஹஸ்ரம் (506), கிருஷ்ண கர்ணாமிருதம் (105) , கோதாஸ்துதி(123), அஷ்டபதி (25), கீதை வெண்பா (601), தயாசதகம் (105) என இன்னொரு பட்டியல் .

இவையெல்லாம் யாரிடம் எங்கே உள்ளனவோ ? ஒருவேளை இதைப் படிக்கும் உங்கள் வீட்டுப் பரணில் கூட இருக்கலாம். ஆனால் யார் இவற்றின் பெருமை அறிந்து தேடி வெளிச்சத்துக்குக் கொண்டுவரப் போகிறார்கள்! மீண்டும் தமிழ்த் தாத்தா உ.வே.சா பிறந்து வந்தால்தான் உண்டு. அவர் மீண்டும் பிறக்க தமிழ்த் தாயையே பிரார்த்திப்போம்.