உபாய ப்ரதிபந்தகங்களான பாபங்களைப் பகவானைப் போலவே பிராட்டியும்போக்குகிறாள் என்பது ‘வேரி மாறாத பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே’ (4 - 5 - 11) என்று அருளிச் செய்யப்பட்டது. ‘இத்திருவாய்மொழி வல்லாருடைய ஸ்மஸ்த துக்கங்களையும் பகவதாச்ரித வாத்ஸல்யாதி கல்யாணகுணைகபோயான பெரியபிராட்டியார் போக்கும்’ எனத் திருவாறாயிரப்படியிலே வ்யாக்யாநம்.
ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி பத்தாம்பாட்டில் ஆழ்வார் ஸ்வானுஷ்டான முகமாக சரணாகதி செய்யும் ப்ரகாரத்தை நிரூபித்தி ருக்கிறார். அது த்வய விவரணமென்பது ஸம்ப்ரதாயம்.
‘உலகமுண்ட பெருவாயா’ ( 8 - 10 ) திருவாறாயிரத்தின் அவதாரிகையில் ‘இப்படி திருநாட்டிலே கேட்கும்படி கூப்பிட்டழைத்தும் அவனைக் காணப் பெறாமையாலே, இனி அவனைக்காண்கைக்கு உபாயம் இவன் திருவடிகளைச் சரணம் புகுகை போக்கி மற்றென்று மில்லை என்று பார்த்து, இவனுடைய காருண்ய வாத்ஸல்யாதி குணங்களைப் பற்றாசாகச் சொல்லிக் கொண்டு பிராட்டி புருஷகாரமாக ஸர்வலோக சரண்யனான திருவேங்கடமுடையான் திருவடிகளைச் சரணம் புகுகிறார்’ என்றும், அகலகில்லேன் பாட்டு அவதாரிகையில் " உன் திருவடிகளை அநந்ய சரணனான அடியேன் அநந்யப்ரயோஜநனாய்க் கொண்டு பெரிய பிராட்டியார் புருஷகாரமாகச் சரணம்புகுந்தேன். இப்போதே நிரஸ்த ஸமஸ்த ப்ரதிபந்தகனாய் உன் திருவடிகளிலே ஸர்வ காலமும் ஸர்வ கைங்கர்யமும் அடியேன் பண்ணப் பெறவேணும் " என்றும், இதனுடைய வ்யாக்யானமான 24000 படியில் ‘இங்கு பிராட்டிக்குப் புருஷகாரத்வம் சொன்னது இவளுடைய ஸித்தோபாய விசேஷண பாவத்திற்கும் உபலக்ஷணம் அல்லது அவ் விசேஷண பாவத்தை வ்யவச்சேதித்தபடியன்று. த்வயத்திலும் த்வய விவரணமான கத்யத்திலும் இப்பாட்டிலும் இவளுக்கு ஸித்தோபாய விசேஷணத்வம் சப்தஸ்வாரஸ்யத: ப்ராப்த மாயிருக்கையாலே அத்தை இங்கே வ்யவச்சேதிக்கக்கூடாதிறே. ஆகையால் இவ்விசேஷண பாவத்தை எடாதே புருஷகாரபாவத்தை எடுத்தது எம்பெருமானிற் காட்டில் இவளுக்குள்ள ஏற்றம் சொல்லுகைக்காகவத்தனை’ என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது,
இப்படிக் கொள்ளாவிட்டால் ‘பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே’ என்கிற பாட்டின் வ்யாக்யானத்தில் ‘ஸமஸ்த துக்க’ என்றதுடன் விரோதிக்கும். ப்ரஹ்மசர்ய வேஷத்தைப் பூண்டு மஹாபலி யஜ்ஞவாடத்திற்குச் சென்ற காலத்திலும் அவனுடைய திருமார்வத்தை விட்டு அகலாதவள் இப்பொழுது தன்னுடைய தாஸபூதன் சரணாகதி செய்யும் ஸமயத்தில் எங்கு சென்றாள், ஏன்சென்றாள் என்றால் ஸமாதானம் சொல்லமுடியாதன்றோ?
இத்திருவாய்மொழியின் நாலாம் பாட்டிலும் ‘திருமாமகள் கேள்வா! தேவா’ என்று இவளுடைய ஸம்பந்தத்தால் அவன் ஏற்றம் பெற்றமை கூறப்பட்டிருக்கிறது,
இந்தத் திருவாய்மொழியின் நிகமனப்பாட்டிலும் ‘அடிக் கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்றென்று அருள் கொடுக்கும் படிக்கேழில்லாப் பெருமானை’ என்று அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் திருவுள்ளத்தில் கொண்டு இங்கே ‘தேவ: ஸ்ரீமாந்.........ஏகமர்த்தம்’ என்று ஸங்க்ரஹிக்கப் பட்டது.
இந்த ஒரு அர்த்தத்தை ஸ்தாபிப்பதற்காகப் பத்துப் பத்துக்களிலும் அவன் ஸேவ்யன், அதிபோக்யன் என்றிவை முதலாகப் பத்து அர்த்தங்களையும், அப்படியே அவன் ஸேவ்யன் என்பதை நிரூபிப்பதற்காக பரம், நிர்வைஷம்யம் என்னும் பத்துக்குணங்களையும், அந்தப் பரத்வத்தை ஸ்தாபிப்பதற்காக நிஸ்ஸீமோத்யத்குணத்வம், அமிதரஸத்வம் முதலிய பத்துக் குணங்களையும் அனுஸந்தித்தருளினார் என்றபடி. அதாவது திருவாய்மொழியில் பல ச்ருதியான நூறு பாட்டுக்களை விட்டு விட்டால் 1002 பாட்டுக்கள் உள. இவை ஒவ்வொன்றிலும் ஒரு குணமாக 1002 குணங்களும், இவைகளில் பத்துப் பத்துக் குணங்களினால் 100 திருவாய்மொழிகளில் 100 குணங்களும், இந்த 100 குணங்களில் பத்துப் பத்துக் குணங்களாகப் பத்துப் பத்துக்களில் 10 குணங்களுமாக 1112 குணங்கள் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கின்றன. எப்படி எல்லா வேதங்களும் பகவானுடைய ப்ராப்யத்வத்தையே கூறுகின்றனவோ, அப்படியே ஸர்வீய சாகையான ஸ்ரீத்ரமிடோபநிஷத்தில் அவன் ப்ராப்யன் மாத்திரமல்லன், ப்ராபகனும் அவனே என்றும், அப்படி ப்ராப்யனுமாய் ப்ராபகனுமாய் இருக்கும் ஆகாரம் திருமாமகளுடன் சேர்ந்து நிற்பவனுக்கே என்றும் ஆழ்வார் இத்திருவாய் மொழியில் உபபாதித்தருளினார் என்று ஆழ்வார்கள் மகிழ்ந்து பாடிய தமிழ்மறைகள் தெளியவோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிந்தவரான சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்த குரு நிஷ்கர்ஷித்தருளினாராயிற்று.
இந்த ச்லோகத்திற்கு இப்படி அர்த்தம் என்று நிர்வஹித்தருளிய அஸ்மத் ஸ்வாமி, ஓருருவில் உபய வேதாந்தங்களைப் போலே ப்ரமாண தமமாக அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீகீதோபநிஷத்திலும் இவ்வர்த்தமே நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்பது ஸ்ரீஆளவந்தார் ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹத்தில் பரப்ரஹ்மமே ப்ராப்யமாகையால் அந்தப் பரப்ரஹ்மம் நாராயணனே என “நாராயண: பரம்ப்ரஹ்ம கீதா சாஸ்த்ரே ஸமீரித” என்று அருளிச்செய்தார். இதின் மொழிபெயர்ப்பு என்று சொல்லக்கூடிய ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹப் பாட்டில் இந்த ச்லோகத்தின் கருத்தை “அருமறை உச்சியுள் ஆதரித்தோதும் அரும் பிரமம் திருமகளோடு வரும் திருமால் என்று தானுரைத்தான் தருமமுகந்த தனஞ்சயனுக்கு அவன் சாரதியே ” என்று அருளிச் செய்திருப்பதைப் பராமர்சித்தால் இவ்வர்த்தம், அதாவது ச்ரிய:பதியான பகவானே பரப்ரஹ்மம் என்னுமர்த்தம் தாம் கூறுவதொன்றன்று, இது ஸ்ரீகீதாசார்யனாலே சொல்லப்பட்டது என்றேற் படுகிறது. தத்துவார்த்தம் இப்படியிருக்க இந்த லோகத்தில் இப்பொழுது இதற்கு மாறாகப் பலர் பலபடிகளில் கூறிப் பரம பலத்தைத் தாங்களும் பெறாமல் போவதுடன் தங்களை நம்பியிருப்பவர் களுக்கும் அது கிட்டாமலிருக்ககும்படி செய்கிறார்களே, ஐயோ! கலியின் கொடுமை! “ என்று கண்ணீர் விட்டுக் கதறும்படியாய் இருந்தது.