செவ்வாய், 26 ஏப்ரல், 2011

திருவல்லிக்கேணி குதிரை வாகனப் புறப்பாடு

இந்த பத்து நாள்களாக அடியேன் பெரிதும் பிரமித்துப் போய் நிற்கிறேன். அடிக்கடி மற்றவர்கள் சொல்லிக் கேட்டதுண்டு “திருவல்லிக்கேணி உத்ஸவம் பிரமாதமாக இருக்கும் என்று”. ஆனால் இதுவரை ஒரு உற்சவத்தையும் அடியேன் கண்டதில்லை. இந்த வருடம் (அலுவலகத்தில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டதால்) அம்மாவுடன் சில நாட்கள் இருக்கலாம் என வந்த இடத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் ப்ரும்மோத்ஸவம் காணும் வாய்ப்பினால் ஏற்பட்ட பிரமிப்பு அது.  அன்று கருட ஸேவையில் ஏற்பட்ட பிரமிப்பே இன்னும் மாறாத நிலையில் இன்று குதிரை வாகன கோலாகலம் கண்டு ஏற்பட்ட அனுபவம் சொல்ல முடியாதது.  குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பதற்கு திருவல்லிக்கேணி ஒரு நல்ல உதாரணம். பெருமாள் புறப்பாடு கண்டருள்கின்ற திருவீதிகளிலே, சர் புர் என்று பாய்கின்ற வாகனங்களை அலட்சியம் செய்து  6 வயதிலிருந்து 80 வயது வரை பெண்கள் ஆசையுடன் கோலமிடுகிற அழகு என்ன! எங்கள் பார்த்தசாரதியை ஏளப் பண்ணுகிறோமென்ற பெருமிதத்தால் எவ்வளவு பெரிய வாகனத்தையும் அதில் எத்தனை பட்டர்கள் ஏறி நின்றாலும் அனாயாசமாக உற்சாக நடை போட்டு ஸ்ரீபாதம்தாங்கிகள் ஏளப் பண்ணுகிற சிறப்பு என்ன! முன்னால் ப்ரபந்த கோஷ்டியும் சரி, பின்னால் வேத பாராயணக்காரர்களும் சரி அவர்கள் பாராயணம் செய்வதை நிச்சயம் பார்த்தசாரதி திருச்செவி சாற்றுகிறான் என்ற நம்பிக்கையோடு முழு அர்ப்பணிப்போடு செய்யும் அந்த கைங்கர்யம்! அர்ச்சக பரிசாரகர்களுக்கோ ஓய்வு என்பதே இருக்கமுடியாது என்றாலும்  வெகு சந்தோஷமாக அவர்கள் செய்கின்ற கைங்கர்யங்கள்   எல்லாமே இந்தப் பாமரனுக்கு பிரமிப்போ பிரமிப்பு.

இன்றைய குதிரை வாகன ஏசலையும் வீடியோவாக பதிந்துள்ளேன். வெளிச்சம் போதுமானதாக இல்லை என்பதால் வெகு சுமாராக இருக்கும். அதுபோக திடீர் திடீரென்று யாராவது ஒரு கோவில் கைங்கர்யபரர் படம் எடுப்பதற்குத் தடை சொல்வார். மறுபடியும் வேறு யாராவது எடுக்க ஆரம்பித்த பிறகு எடுக்க வேண்டி வந்ததாலும், இரவு நேரத்தில் கூட்டத்தில் தள்ளுமுள்ளுகளிடையே எடுக்க நேரிட்டதாலும் சில நேரங்களில் பெருமாளுக்கு பதிலாக காமிரா எங்காவது பார்த்துக் கொண்டிருக்கும். பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். ஒவ்வொரு லிங்காகப் பார்த்தால்  திருவல்லிக்கேணியில் முகாமிட்டிருந்த ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் இருவரும் பார்த்தசாரதிப் பெருமாளை மங்களாசாசனம் செய்கின்ற பல காட்சிகளையும் காணலாம்.

சொல்ல மறந்துவிட்டேனே!
பெருமாள் புறப்பாட்டைப் பின் தொடர்ந்த சிறுவர்கள் பொம்மைப் புறப்பாட்டையும் பெரிய அழகியசிங்கர் அருகில் கொண்டு வரச்சொல்லிக் கடாக்ஷித்து சந்தோஷப்பட்டு, சாத்துப்படி பண்ணிய சிறுவனை அருகில் அழைத்துப் பாராட்டி உற்சாகப் படுத்தி அனுக்ரஹித்தாயிற்று.

குதிரை வாகனக் காட்சிகளைக் காண 

http://youtu.be/AiVtiodIbnc
http://youtu.be/yUJsnEbt8ag
http://youtu.be/ATt-VjdVSrc
http://youtu.be/TgtWxnMvj3E
http://youtu.be/EWjroczzCLE
http://youtu.be/HHrASvXYfME
http://youtu.be/3rhjGn7qeVA