வெள்ளி, 29 ஜூலை, 2022

ஶ்ரீ மஹாபாரத வினா விடை 13

3. ஆரண்ய பர்வம்‌

இரணியமகனுமுன்ன ரிழையுரைக்கே தங்கண்ட

துரணியன்மகனுமற்ற யானையுஞ்சரனணென்றேத்தி

முரணியசிறியொர்வெஃக முதன்மை கொண்மாதுங்கண்ட

பிரணவப்பொருளையின்றும்‌ பேணுவார்காணுவாரே.

வினா 1 – வினா 15

வினா 1.- பாண்டவர்களோடு காட்டிற்குச்‌ சென்றவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை... பாண்டவர்களைப்‌ பிரிந்து இருக்க மனம்வராத நகர வாஸிகளும்‌, பிராம்மணோத்தமர்களும்‌ அவர்களோடு வெகுதூரம்‌ செல்ல, தர்மபுத்திரர்‌ அவர்களைப்‌ பட்டினத்திற்குத்‌ திரும்பிப்போய்‌ தம்தாயாகிய குந்திக்குத்‌ தேறுதல்‌ சொல்லும்படி விநயத்தோடு ஏவ, நகரவாஸிகள்‌ யாவரும்‌ ஹஸ்தினாபுரிக்குத்‌ திரும்பிவிட்டார்கள்‌. பிராம்மணோத்தமர்கள்‌ மாத்திரம்‌ பாண்டவர்களை விடாது காட்‌டிற்குத்‌ தொடர்ந்து சென்றனர்‌.

வினா 2.- பிராம்மணோத்தமர்கள்‌ விஷயத்தில்‌ பாண்டவர்கள்‌ எவ்வாறு நடந்து

கொண்டார்கள்‌? அதற்கு அவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை... தம்‌ கூடவேவரும்‌ மஹான்களை நோக்கி தாம்‌ காட்டிற்குப்‌ போவதாகவும்‌,தமக்கு அவ்வளவு பிராம்மணர்களை ஆராதிக்கும்‌ வழி தோன்றவில்லை என்பதாகவும்‌, ஆகையால்‌ அவர்கள்‌ வேறு எவ்விடமாவது சென்று வாழ்ந்திருப்பது நலம்‌ என்பதாகவும்‌ தர்மபுத்திரர்‌ மஹாதுக்கப்பட்டுக்கொண்டு சொன்னார்‌. அப்பொழுது அந்த ஸங்கத்தில்‌ இருந்த பிராம்மணர்களுள்‌ பெரியவரான செளனகர்‌ பாண்டவர்களைச்‌ சாஸ்திரபூர்வமாய்‌ ஸமாதானம்‌ செய்தார்‌. பாண்டவர்கள்‌ படும்‌ தர்ம ஸங்கடத்தை நோக்கி ஸூர்யனது நாம விசேஷங்களைச்‌ சொல்லி, அதை ஜபம்செய்து அதன்‌ மூலமாய்‌ அந்தப்‌ பிராம்மணர்களை விட்டுவிடாது பாதுகாத்துக்‌ கொண்டு வனவாஸம்‌ செய்வதற்கு வேண்டிய வஸ்துவை ஸம்பாதிக்கும்படி பாண்டவர்களைச்‌ செளனகர்‌ ஏவினார்‌.

வினா 3.- ஸூர்ய பகவான்‌ தர்மபுத்திரருக்கு என்ன உபகாரம்‌ செய்தார்‌? அதன்‌

விசேஷம்‌ என்ன?

விடை.- அக்ஷய பாத்திரம்‌ என்ற ஒரு திவ்ய செப்புப்பாத்திரத்தை ஸூர்யன்‌ தர்மபுத்திரரிடம்‌ கொடுத்தார்‌. அந்தப்‌ பாத்திரத்திலிருந்து எவ்வளவு போஜனங்கள்‌ வேண்டுமானாலும்‌ வெளிவரும்‌. ஆனால்‌ கடைசியாய்‌ திரெளபதி சாப்பிட்டுவிட்டால்‌ அதன்‌ பிறகு அதிலிருந்து அன்றைய தினம்‌ ஒன்றும்‌ வெளிவரமாட்டாது. இதை வைத்துக்‌ கொண்டு தர்மபுத்திரர்‌ ஸகல பிராம்மணர்களை ஒழுங்கு தவறாது, வனவாஸம்‌ 12-வருஷம்‌ முடியும்‌ வரையில்‌ ஆராதித்து வந்தார்‌. இவ்வளவு சிறந்த உபகாரத்தை ஸூர்ய பகவான்‌ பாண்டவர்களுக்கு நல்ல தருணத்தில்‌ செய்தார்‌.

வினா 4- இவ்வளவும்‌ எங்கு நடந்தது? பின்பு பாண்டவர்கள்‌ எங்குச்‌ சென்றார்கள்‌?

விடை.- முன்சொன்ன காரியங்கள்‌ யாவும்‌ கங்கைக்கரையில்‌ முதல்‌ நாள்‌ பாண்டவர்கள்‌ தங்கிய ஆலமரத்தடியில்‌ நடந்தது. மறுநாள்‌ ஸூர்யனிடம்‌ அக்ஷய பாத்திரம்‌ பெற்று, பிராம்மணர்கள்‌ எல்லோருக்கும்‌ போஜனம்‌ அளித்த பின்பு, பாண்டவர்கள்‌ காம்யக வனத்திற்குப்‌ பிராம்மணர்கள்‌ சூழ்ந்துவரப்‌ புறப்பட்டுப்‌ போனார்கள்‌.

வினா 5.- இங்கு இப்படி இருக்க ஹஸ்தினாபுரத்தில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.-பாண்டவர்கள்‌ காடுசென்ற பின்பு திருதிராஷ்டிரன்‌ தன்‌ தம்பியாகிய விதுரரை அழைத்துத்‌ தனக்கு அப்பொழுது எது செய்தால்‌ நன்மையாய்‌ இருக்கும்‌ என்று கேட்க, அவர்‌ தான்‌ முன்சொன்னபடி துர்யோதனனைக்‌ கொல்ல வேண்டு மென்றும்‌, தர்மபுத்திரருக்குப்‌ பட்டாபிஷேகம்‌ செய்துவிடவேண்டு மென்றும்‌, பயப்படாது தமது நிஜ அபிப்பிராயத்தை வெளியிட்டார்‌. இதைக்‌ கேட்டதும்‌, விதுரர்‌ தனக்கு விரோதி என்ற கெட்ட எண்ணம்‌ வர, திருதிராஷ்டிரன்‌ அவரைப்‌ பலவாறு நன்றிகெட்டவன்‌ என்று வைது, தன்‌ ஊரைவிட்டுக்‌ காட்டுக்குப்‌ போகும்படி கட்டளை யிட்டான்‌.

வினா 6.- விதுரர்‌ எங்கே சென்றார்‌? பின்பு திரும்பிவந்தாரா என்ன?

விடை... இதைக்கேட்டதும்‌ மனம்‌ கோணாது விதுரர்‌ தர்மபுத்திரர்‌ இருக்கும்‌ காம்யகவனம்‌ சென்று நடந்த விஷயங்களைச்‌ சொல்லி, தர்மபுத்திரரால்‌ மரியாதை செய்யப்‌ பெற்று ஸுகமாய்ச்‌ சிலகாலம்‌ வாழ்ந்திருந்தனர்‌. இப்படி இருக்கையில்‌ திருதிராஷ்டிரனுக்கு நல்லபுத்தி வர, தான்‌ தன்‌ தம்பி விஷயத்தில்‌ செய்தது பெரிய அநியாயம்‌ என்று தோன்றிற்று. உடனே ஸஞ்சயனை அழைத்து விதுரரைத்‌ திரும்பி அழைத்துவரும்படி ஏவினான்‌. ஸஞ்சயன்‌ காம்யக வனஞ்சென்று நடந்த விஷயங்க ளைச்‌ சொல்லி யுதிஷ்டிரர்‌ அனுமதியின்பேரில்‌ விதுரரை ஹஸ்தினாபுரிக்கு அழைத்து வந்தான்‌.

வினா 7.- விதுரர்‌ திரும்பிவந்ததைக்‌ கேள்வியுற்றதும்‌ துர்யோதனாதியர்‌ என்ன

செய்ய யத்தனித்தார்கள்‌? இதை யார்‌ எவ்வாறு தடுக்க யத்தனித்தார்‌?

விடை... விதுரர்‌ வந்ததைக்‌ கேள்வியுற்ற துர்யோதனாதியர்‌ ஆலோசனை செய்து கடைசியில்‌ பாண்டவர்களைக்‌ கொன்றுவிடுவது நலம்‌, 'இல்லாவிடில்‌ இந்த விதுரன்‌ எப்படியாவது நமது இராஜ்யத்தை அவர்களிடம்‌ சேர்ப்பித்துவிடுவான்‌ என்று தீர்மானித்து அவர்களைக்‌ கொல்லத்‌ தயாராய்த்‌ துர்யோதனாதியர்‌ புறப்பட்டார்கள்‌. இதைத்‌ தமது ஞானக்‌ கண்ணால்‌ அறிந்த வியாஸர்‌ திருதிராஷ்டிரனிடம்‌ வந்து அவன்‌ பிள்ளைகளைச்‌ சண்டைக்குப்‌ போகாது தடுத்து விட்டால்தான்‌ அவர்கள்‌ பிழைப்பார்கள்‌, இல்லாவிடில்‌ அவர்கள்‌ பாண்டவர்களால்‌ இறப்பார்கள்‌, என்று உறுகியாய்ச்‌ சொல்லி துர்யோதனாதியரைப்‌ படை எடுத்து காட்டிற்குச்‌ செல்லாது தடுக்க யத்தனித்தார்‌. மேலும்‌ வியாஸர்‌, திருதிராஷ்டிரனுக்கு, முன்காலத்தில்‌ ‌ ஸுரபி என்கிற காமதேனு தனது கன்றுகளுள்‌ கஷ்டப்படும்‌ கன்றிற்காக இந்திரனிடம்‌ சென்று அழுத உபாக்கியான மூலமாய்த்‌ தனக்கு அப்பொழுது கஷ்டப்படும்‌ பாண்டு புத்திரர்களிடம்‌ இருந்த ஆசையை வெளியிட்டு, துர்யோதனாதியரைப்‌ பாண்டவர்களோடு சிநேகம்‌ செய்துகொள்ளும்படி வியாஸர்‌ திருதிராஷ்டிரனுக்குப்‌ புத்திமதி கூறினார்‌.

வினா 8.- இப்படி வியாஸர்‌ சொல்லிப்‌ போனவுடன்‌ யார்வந்து துர்யோதனாதியருக்கு என்ன புத்திமதி கூறினார்‌?

விடை... மைத்ரேயர்‌ என்ற மஹரிஷி தர்மபுத்திரரைக்‌ காம்யக வனத்தில்‌ ஸந்தித்துப்‌ பேசிவிட்டு, துர்யோதனன்‌ ஸபைக்கு வந்து வியாஸர்‌ சொல்லியபடியே பாண்டவர்களது பலத்தைப்பற்றி விஸ்தாரமாய்ச்‌ சொல்லி, பீமன்‌, பகன்‌ ஜராஸந்தன்‌ கிம்மீராஸுரன்‌ முதலியவர்களைக்‌ கொன்ற பிரபாவத்தை எடுத்துக்காட்டி, பாண்டவர்களோடு அவசியம்‌ துர்யோதனாதியர்‌ ஸந்திசெய்துகொள்ள வேண்டும்‌ என்று வற்புறுத்தினார்‌.

வினா 9.. இதை தூர்யோதனன்‌ அங்கீகரித்தானா? இதனால்‌ என்ன பிரமாதம்‌ விளைந்தது?

விடை... துர்யோதனன்‌, மஹரிஷி மிகுந்த ஆவலோடு புத்திமதி கூறுங்கால்‌ அதைக்‌ கவனியாது தனது துடையைத்‌ தட்டிக்கொண்டிருக்க, ரிஷி அதிக கோபத்தோடு "உனது துடையை யுத்தத்தில்‌ பீமன் கதையால்‌ அறுத்துத்‌ தள்ளட்டும்‌” என்று சபித்துவிட்டு, மேல்விஷயங்களை விதுரர்‌ எடுத்துச்சொல்லுவார்‌ என்று சொல்லி மைத்ரேயர்‌ தாம்‌ வந்த வழியை நோக்கிச்‌ சென்றார்‌.

வினா 10.- மைத்ரேயர்‌ கோபித்துக்கொண்டு சென்றதும்‌, விதுரர்‌ என்ன சொன்னார்‌?இதனால்‌ என்ன பிரயோஜனம்‌ உண்டாயிற்று?

விடை... கிம்மீரன்‌ என்ற அஸுரன்‌ பாண்டவர்களைக்‌ காட்டில்‌ ஸந்தித்ததும்‌, அவர்களில்‌ பீமனே தனது ஸகோதரனாகிய பகாஸுரனைக்‌ கொன்றவன்‌ என்று அறிந்து அவனோடு இவன்‌ சண்டை செய்ததும்‌, கொஞ்சநேரம்‌ கோர யுத்தம்‌ செய்தபின்பு பீமன்‌ கிம்மீரனைக்‌ கொன்றதுமாகிய இந்த விசித்திரக்‌ கதையைச்‌ சொல்லி துர்யோதனனது கெட்ட எண்ணப்படி ஒன்றும்‌ நடவாதபடி விதுரர்‌ தகுந்த ஏற்பாடுகள்‌ செய்தார்‌.

வினா 11.- இப்படிப்‌ பாண்டவர்கள்‌ காம்யக வனத்தில்‌ வஸிக்குங்கால்‌ அவர்களைப்‌ பார்க்க யார்‌ வந்தது? அங்கு என்ன நடந்தது?

விடை... கிருஷ்ண பரமாத்மாவும்‌, அவரைச்சேர்ந்த பரிவாரங்களும்‌ பாண்டவர்கள்‌ சகுனி இவர்கள்‌ ஆடிய மாயச்‌ சூதில்‌ தோற்று காட்டில்‌ கஷ்டப்படுகிறார்கள்‌ என்று கேள்வியுற்று மிக வருத்த மடைந்து, பாண்டவர்களைத்‌ தேற்ற காம்யக வனம்‌ வந்தார்கள்‌. இவர்கள்‌ வந்து, சீக்கிரத்தில்‌ துர்யோதனாதியரை ஹதம்‌ செய்தால்தான்‌ ‌ நலமென்று சொல்ல, அர்ஜுனன்‌ பகவானது பூர்வச்செயல்களைச்சொல்லி அவரை ஸமாதானப்படுத்தினான்‌. உடனே திரெளபதி வந்து பீமன்‌, அர்ஜுனன்‌ முதலியவர்களது பல வைபவங்களை எடுத்துச்சொல்லி, அவர்கள்‌ பல விசேஷங்கள்‌, தன்னை ஸபையிலிழுத்துவந்து கொடிய அவமானம்‌ செய்தத்‌ துச்சாஸனன்‌ விஷயத்தில்‌ உபயோகப்படாததை நினைத்து மனமுருகிக்‌ கதறினாள்‌. அப்பொழுது விரோதிகள்‌ யாவரும்‌ சீக்கிரத்தில்‌ இறக்கத்‌ திரெளபதிக்கு நல்ல காலம்‌ வரும்‌ என்று கிருஷ்ணபகவான்‌ தேற்ற, அப்பொழுது தான்‌ துரோணரையும்‌, சிகண்டி பீஷ்மரையும்‌, பீமன்‌ துர்யோதனனையும்‌, அர்ஜுனன்‌ கர்ணனையும்‌ கொல்லப்போகிறதாக திருஷ்டத்யும்னன்‌ சபதம்‌ செய்தான்‌.

வினா 12.- இவ்வளவு மன உருக்கத்தோடு பாண்டவர்களைத்‌ தேற்றிய கிருஷ்ண பகவான்‌ பாண்டவர்கள்‌ சூதாடி அவமானப்படுங்கால்‌ எங்கிருந்தார்‌? ஏன்‌ வரவில்லை?

விடை... இராஜஸூய யாகம்‌ முடிந்து கொஞ்ச நாளானதும்‌ பகவான்‌ துவாரகைக்குப்‌ போனார்‌. அங்கு முன்னமேயே ஸெளபவ விமானத்தில்‌ ஏறிக்கொண்டு படை எடுத்து வந்த ஸால்வராஜா துவாரகையை அழிக்க யத்தனித்துத்‌ தோல்வியடைந்துஅப்பொழுது தான்‌ ஓடிப்போயிருக்தான்‌. கிருஷ்ணபகவான்‌ வந்ததும்‌ ஸங்கதியை அறிந்து ஸால்வராஜனைத்‌ துரத்திச்சென்று அவனோடு வெகுகாலம்‌ யுத்தம்செய்து அவன்‌ பிரயோகித்த மாயைகள்‌ எல்லாவற்றையும்‌ நீக்கிக்‌ கடைசியில்‌ அவனது விமானத்தை அழித்து அவனைக்கொன்று துவாரகைக்குத்‌ திரும்பினார்‌. அப்பொழுது தான்‌ பாண்டவர்களுக்கு வந்த ஆபத்தைக்‌ கேள்விப்பட்டு, உடனே காம்யக வனத்திற்கு வந்து அவர்களை ஸந்தித்தார்‌. இதனால்‌ தான்‌ சகுனி மாயச்‌ சூதாடுங்கால்‌ கிருஷ்ணபகவான்‌ வர முடியவில்லை.

வினா 13.- பின்பு கிருஷ்ண பகவான்‌ என்ன செய்தார்‌? பாண்டவர்கள்‌ எங்குச்‌ சென்றார்கள்‌? அங்கு அவர்களைப்‌ பார்க்க யார்‌ வந்தது?

விடை.- சாஸ்திரப்படி பாண்டவர்களிடம்‌ விடைபெற்று, ஸுபத்திரையையும்‌, அபிமன்யுவையும்‌ கூட்டிக்கொண்டு கிருஷ்ண பகவான்‌ துவாரகை நோக்கிச்‌ சென்றார்‌.உடனே பாண்டவரும்‌ காம்யக வனத்திலிருந்து, அர்ஜுனனது அபிப்பிராயப்படி துவைத வனத்திற்குச்‌ சென்றார்கள்‌. அவர்களைப்‌ பார்க்க மார்க்கண்டேய மஹாமுனி வந்து தர்மபுத்திரரைச்‌ சாஸ்திரோக்த வசனங்களால்‌ தேற்றினார்‌. அவரோடுகூட இருந்த ரிஷிகளும்‌ தர்மபுத்திரரைத்‌ தேற்றினார்கள்‌.

வினா 14.- இவ்வாறு மார்க்கண்டேயர்‌ வந்து போனதும்‌ பாண்டவர்கள்‌ என்ன செய்தார்கள்‌? அது எவ்வாறு முடிந்தது?

விடை.- பாண்டவர்களும்‌, திரெளபதியும்‌ ஓரிடத்தில்‌ உட்கார்ந்து கொண்டு தாங்கள்‌ பட்டகஷ்டத்தையும்‌, தாங்கள்‌ நடந்துகொண்ட விதத்தையும்பற்றி வெகுவாக ஸம்பாஷித்தார்கள்‌. இதில்‌ திரெளபதி முதலில்‌ தர்மபுத்திரரை ஆண்மையற்றவரென்றும்‌, மிகுந்த கஷ்டம்‌ வந்தவிடத்தும்‌ கோபத்தைக்‌ காட்ட சக்தியற்றபேதை என்றும்‌, ‌ வெகுவாகத்தூஷித்து, சிற்சில ஸமயங்களில்‌ கோபத்தைக்‌ காட்டாமல்‌ எப்பொழுதும்‌ சாந்தமாகவே இருந்தால்‌ கிரஹஸ்தனாயிருப்பவன்‌ மிகுந்த ஹீனஸ்திதிக்குவருவதற்கு இடம்‌ உண்டாகும்‌ என்றும்‌ ப்ரஹலாத பலி ஸம்வாதத்தால்‌ திரெளபதி நிரூபித்தாள்‌. இதைக்கேட்டு “கோபம்‌ சண்டாளம்‌” "சாந்தம்‌ ஸர்வார்த்த ஸாதகம்‌' என்பதைப்பற்றி தர்மபுத்திரர்‌ வெகு விஸ்தாரமாய்‌ திரெளபதிக்குப்‌ புத்திமதி உரைத்தார்‌. இதைக்‌ கேட்டதும்‌ திரெளபதி 'திவ்ய யக்ஞாதி கிருதுக்கள்‌ செய்து கஷ்டம்வந்த விடத்திலும்‌ ஸதா தருமத்தில்‌ இருக்கும்‌ உமக்கு மஹா அதர்மமான சூதாட்டத்தில்‌ புத்தி செல்லுவானேன்‌? மேலும்‌ இவ்வளவு தர்மாத்மாவான உமக்கு இந்த மஹத்தான கஷ்டம்‌ வருவானேன்‌? கொடிய துர்யோதனாதியர்‌ ஸுகமாய்‌ வாழுவானேன்‌? தெய்வச்செயல்‌ ஏன்‌ இவ்வளவு விபரீதமாய்‌ இருக்கிறது? என்று கேள்வி கேட்டாள்‌. வேதவாக்கியங்களில்‌ நம்பி நாம்‌ ஸத்‌ விருத்தியில்‌ இருக்க வேண்டும்‌ என்றும்‌, அதன்‌ பலன்களை உத்தேசித்து மனம்‌ வருந்தல்‌ கூடாது என்றும்‌, ஸுகதுக்கங்கள்‌ அனுபவிப்போர்‌ மனதைப்‌ பொறுத்தனவே ஒழிய, வெளி வஸ்துக்களிலிருந்து ஜனிப்பவை யல்லவென்றும்‌, ஸத்துக்களுக்கு ஈசுவரச்‌ செயலால்‌ உண்டாகும்‌ துக்கங்கள்‌ தோற்றமாத்திரமே ஒழிய உண்மையில்‌ ஸுகங்களே என்றும்‌, அஸத்துக்கள்‌ அனுபவிக்கும்‌ ஸுகம்‌ யாவும்‌ துக்கமே ஒழிய வேறில்லை என்றும்‌, தர்மபுத்திரர்‌ ஸுகதுக்க ரகஸியத்தை எடுத்துக்காட்டினார்‌. திரெளபதி இதை அங்கீகரிக்காது, "எல்லாம்‌ ஈசன்செயல்‌ என்று சும்மா முயற்சி இல்லாமல்‌ இருந்துவிடலாமா? நமக்குக்‌ கஷ்டம்‌ வருங்கால்‌ அதை நிவர்த்திக்க உபாயம்தேடாது அது துக்கரூபமாய்வரும்‌ ஸுகம்‌ என்றிருந்தால்‌ ஸதா நாம்‌ கஷ்டத்திலிருக்க வேண்டியது தான்‌" என்று மறுமொழி கூறினாள்‌. இப்படித்‌ திரெளபதி தர்மபுத்திரரிடம்‌ பயனில்லாச்‌சொற்களைச்‌ சொல்லிக்‌ கொண்டிருக்கும்‌ பொழுது பீமன்‌ முன்‌ வந்து,உம்மிடத்தில்‌ஸகல குணங்களும்‌ பொருந்தி இருக்கின்றன. அதனால்‌ எங்களுக்குப்‌ பலம் யாவும்‌ குறையாதிருக்கின்றன. இவ்வளவு நல்ல விஷயங்கள்‌ அமைந்திருந்தும்‌ இவைகளை உபயோகிக்கத்தகுந்த கஷ்டகாலம்‌ வருங்கால்‌ ஏன்‌ நீங்கள்‌ எங்கள்‌ கஷ்டத்தை நிவர்த்தி செய்யும்படி ஏவாதிருக்கவேண்டும்‌? நீர்‌ உமது கஷ்டத்தை நிவர்த்திசெய்துகொண்டு உமது பிரஜைகளுக்கு நன்மை செய்யத்தக்க நிலையை அடையாவிட்டால்‌ உமக்கு அபகீர்த்தியே நிச்சயமாய்வரும்‌. ஆகையால்‌ இப்பொழுதே படைஎடுத்துச்சென்று துர்யோதனாதியரை வென்று இராஜ்யத்தைக்‌ கைப்பற்றிக்கொள்ளும்‌" என்று தனது அபிப்பிராயத்தை வெளியிட்டான்‌. இதற்குத்‌ தர்மபுத்திரர்‌, 'நான்‌ என்னமோ விதிவசமாக அதர்மமான சூதாட்டத்தில்‌ புகுந்துவிட்டேன்‌. இப்பொழுது நாம்‌ படும்‌ கஷ்டத்திற்கெல்லாம்‌ நான்‌ தான்‌ காரணம்‌ என்பதற்கு ஸந்தேகமே இல்லை. அப்படியிருந்தும்‌ இனி மேலும்‌ அதர்மத்தை செய்வது நன்றன்று. ஆகையால்‌நான்‌ ஸபையில்‌ செய்துவந்த பிரதிக்ஞைக்கு விரோதமாய்‌ இப்பொழுது துர்யோதனாதியரைக்‌ கொல்லுவது தகாதகாரியம்‌" என்று மறுமொழி கூறினார்‌. பீமன்‌ இதற்கு “நீர்‌ செய்த பிரதிக்ஞை மிக அஸாத்தியமானது. இதை நம்மால்‌ நிறைவேற்ற முடியாது. நம்முள்‌ ஒருவரை எப்படியாவது நமது விரோதிகள்‌ 13-வது வருஷத்தில்‌ நிச்சயமாய்க்‌ கண்டுபிடித்துவிடுவார்கள்‌.  நாமோ இப்பொழுது 13-மாஸம்‌ காட்டில்‌ வாஸம்‌ செய்தாய்‌ விட்டது. இப்பொழுதே நாம்‌ படை எடுத்துச்‌ சென்று துர்யோதனாதியரைக்‌ கொல்லலாம்‌” (வருஷம்‌ என்பதற்கு சில ஸந்தர்ப்பங்களில்‌ மாஸம்‌ என்ற அர்த்தமும்‌ உண்டு) என்றும்‌ பீமன்‌ சொன்னதும்‌, தர்மபுத்திரருக்குப்‌ ‌ பீஷ்மர்‌ முதலிய பெரியவர்கள்‌, கர்ணன்‌ முதலிய வில்லாளிகள்‌ நிறைந்த துர்யோதன ஸைந்நியத்தை எவ்வாறு வெல்வது என்ற ஏக்கமுண்டாயிற்று.

வினா 15.- இவ்வாறு ஏக்கமடைந்த தர்மபுத்திரரை யார்வந்து எவ்வாறு தேற்றியது?பின்‌ என்ன நடந்தது?

விடை.- இந்த ஸமயத்தில்‌ வியாஸர்‌ தர்மபுத்திரரிடம்வந்து “பிரதிஸ்மிருதி" என்ற மந்திரத்தை உபதேசித்து இதை அர்ஜுனனுக்கும்‌ உபதேசித்து அவனைத்‌ தபஸுக்கு அனுப்பி, மஹாதேவர்‌ முதலிய ஸகல தேவதைகளிடத்திலிருந்தும்‌ அஸ்திர விசேஷங்களை ஸம்பாதித்து வரும்படி செய்யச்சொன்னார்‌. தர்மபுத்திரர்‌ துக்கந்தெளிந்து இந்த விஷயங்களை அர்ஜுனனிடம்‌ சொல்ல, அவன்‌ இந்த மந்திரத்தைப்‌ பெற்றுக்கொண்டு, எல்லாரிடத்தும்‌ விடைபெற்றுத்‌ தபஸுக்காக வடக்கு நோக்கிச்‌ சென்றான்‌.

திங்கள், 25 ஜூலை, 2022

ஶ்ரீ மஹாபாரத வினா விடை 12

வினா 51.- இவைகள்‌ எவ்வாறு முடிந்தன? ஏன்‌?

விடை- அப்பொழுது திருதிராஷ்டிரனது ஸபை முதலிய இடங்களில்‌ அபசகுனங்கள்‌ உண்டாக, விதுரரும்‌, காந்தாரியும்‌ திருதிராஷ்டிரனுக்குப்‌ புத்திமதிகள்‌ சொன்னார்கள்‌. அப்பொழுது அவனுக்குப்‌ புத்தி தெளிந்திருந்தமையால்‌ தனது பிள்ளைகளை வெகுவாகத்‌ திட்டித்‌ திரெளபதியை அருகிலழைத்து வேண்டிய வரங்களைக்‌ கேட்டுக்‌ கொள்ளும்படி இடங்கொடுத்தான்‌. திரெளபதி தனது பதிகளாகிய பாண்டவர்‌ ஐவரும்‌ அடிமைத்தனத்திலிருந்து நீங்கி ஸுகம்‌ அடையும்‌ படி செய்ய வேண்டும்‌ என்று கேட்டுக்கொண்டு எல்லாரையும்‌ மீட்க, திருதிராஷ்டிர னது அனுமதியின்‌ பேரில்‌ இந்திரப்ரஸ்தத்தை நோக்கி பாண்டவர்கள்‌ தமது இரதங்களில்‌ ஏறிச்சென்றார்கள்‌.

வினா 52.- திருதிராஷ்டிரனுக்கு எவ்வளவு நாழிகை இந்தப்‌ புத்தி இருந்தது? புத்திமாறியதும்‌ இவன்‌ என்ன செய்தான்‌?

விடை.- துரியோதனனோடு கொஞ்சநாழிகை திருதிராஷ்டிரனுக்குப்‌ புத்திமாறித் தனது பிள்ளைகளிடம்‌ அபிமானம்‌ விருத்தியாக, ஊருக்குப்‌ போய்க்கொண்டிருக்கும் பாண்டவரைத்‌ திரும்ப அழைத்து மறுபடியும்‌ சகுனியோடு சூதாடும்படி ஏவினான்‌. காந்தாரி, விதுரர்‌ முதலியவர்கள்‌ என்ன சொல்லியும்‌ இச்‌ சமயத்தில்‌ இவன்‌ காதில்‌ ஏறவில்லை

வினா 53.- இம்மறு சூதாட்டத்தில்‌ பந்தயம்‌ என்ன வைத்தார்கள்‌? அது என்னமாய் முடிந்தது?

விடை... இந்தச்‌ சூதாட்டதில்‌ தோற்றவர்கள்‌ 12-வருஷம்‌ வனவாஸமும்‌, 1-வருஷம்‌ அஜ்ஞாதவாஸமும்‌ (ஜனங்கள்‌ நிறைந்த பட்டணத்தில்‌ உருமாறி வஸித்தலும்‌) செய்து திரும்பிவரவேண்டுமென்றும்‌, 13ம்வருஷத்தில்‌ எப்பொழுதாவது அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால்‌ மறுபடியும்‌ வனவாஸ அஜ்ஞாதவாஸாதிகள்‌ ஒழுங்காய்ப் பூர்த்தி யாகிற வரையில்‌ செய்தே தீரவேண்டும்‌ என்றும்‌ தீர்மானித்து மறு சூதாட ஆரம்பித்தார்கள்‌. இதிலும்‌ சகுனி ஜயிக்கப்‌ பாண்டவர்கள்‌ முன்செய்த நிபந்தனைக்குட்பட வேண்டி வந்தது.

வினா 54.- பாண்டவர்கள்‌ வனவாஸம்‌ செல்லுங்கால்‌ நடந்த விஷயங்கள்‌ என்ன?

விடை. பாண்டவர்கள்‌ தமது இராஜ உடமைகளை உதறி எறிந்துவிட்டு ரிஷி உருக்கொண்டு மிகுந்த வணக்கத்தோடு புறப்பட்டார்கள்‌. திரெளபதியும்‌ ரிஷி பத்தினி உருக் கொண்டு இவர்கள்‌ பின்னே தொடர்ந்து சென்றாள்‌; குந்தியைப்‌ பாண்டவர்கள் விதுரரிடம்‌ ஒப்புவித்துவிட்டு அவளது துக்கத்தை ஒருவாறு ஆற்றிவிட்டு வனம் நோக்கிச்‌ செல்ல, அநேகம்‌ பிராம்மணோத்தமர்களும்‌, நகரவாஸிகளும் பாண்டவர்களை விட்டு நகரத்திலிருக்கப்‌ பொறுக்காது அவர்கள்‌ பின்னே சென்றார்கள்‌. அப்பொழுது ஹஸ்தினாபுரம்‌, புருஷனை இழந்த பூவைபோல ஒளி மழுங்கிக்‌ கிடந்தது.

வினா 55.- இவ்வாறு பாண்டவர்கள்‌ மனங்கொதிக்க வனம்‌ சென்றதும்‌, யார் திருதிராஷ்டிரரிடம்‌ வந்து என்ன சொன்னார்‌? அவர்‌ பின்பு என்ன செய்தார்‌?

விடை. நாரதமகாமுனி வந்து திருதிராஷ்டிரரிடம்‌ அவரது பிள்ளைகள் பதிநான்காவது வருஷம்‌ இருந்தவிடம்‌ தெரியாது பாண்டவர்களால்‌ நாசமடையப் போகிறார்கள்‌ என, திருதிராஷ்டிரரும்‌ அப்பொழுது மாத்திரம்‌, தாம்‌ செய்தது தப்பிதம்‌ என்று எண்ணித்‌ துக்கிக்கத்‌ தொடங்கினார்‌.

 

---- சபா பர்வம் நிறைவு பெற்றது. தொடர்வது ஆரண்ய பர்வம் ------