http://www.mediafire.com/file/3dduqhk2mw2s2eh/VKRRTS%206.pdf
<a href='http://www.mediafire.com/?3dduqhk2mw2s2eh'>http://www.mediafire.com/?3dduqhk2mw2s2eh</a>
ஏற்கனவே பலமுறை இங்கு குறிப்பிட்டதுபோல, திருப்புல்லாணி போன்று சிறு கிராமங்களில் வாழ்வதிலே பல பாக்யங்கள் உண்டு. அதிலும் திருப்புல்லாணியோ, பெருமாளின் திருவடி என்று வர்ணிக்கப் படுவது. அதனாலேயே அங்கு வாழ்பவர்களுக்கு பல விதமான பாக்யங்களைப் பெருமாள் அருள்கிறார்.
பெரு நகரங்களில் வாழ்வதில் பல சௌகர்யங்கள் உண்டுதான். ஆனால், அங்கெல்லாம், யதிகளையோ, மஹான்களையோ, பற்பல துறை வல்லுநர்களையோ தேடிச் சென்று சந்திக்க வேண்டும். அவர்கள் இருப்பது தெரிய வேண்டும். அவர்களைச் சந்திக்க நேரம் கிடைக்க வேண்டும் இத்யாதி இத்யாதி எத்தனையோ பிரச்சினைகள். ஆனால், திருப்புல்லாணியில் அதெல்லாம் கிடையாது. ஸ்ரீ ஆதி ஸேது மஹிமையால், ஆசார்ய சிரேஷ்டர்கள், வேத விற்பன்னர்கள், ஆசார சீலர்கள், நாடு அறிந்த பெரும் புகழாளர்கள் என்று எத்தனையோ பேர் இங்கு எங்களைத் தேடி வந்து எங்களை ஆசீர்வதித்து, மகிழ்வித்துச் செல்லும் பெரும் வாய்ப்பு எங்களுக்கு உண்டு. ஊரோ உள்ளங்கை அகலமே அதனால் யாருக்கும் தெரியாமல் இங்கு வந்து செல்லவும் முடியாது.
(கதை வேண்டாம் விஷயத்துக்கு வா! தலைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? தமிழ் சினிமா மாதிரி இருக்கிறது என்று நங்கநல்லூரில் ஒருவர் பல்லைக் கடிக்கும் சப்தம் கேட்கிறது)
இப்படி இங்கு இன்று வந்தவர் இன்னொரு 74 வயது மூதாட்டி. தற்சமயம் மதுரையில் வாழ்ந்தாலும், எங்களூர் தான். திருப்புல்லாணியில் மிகச் சமீபத்தில் கொடி கட்டிப் பறந்த என்று சொல்வார்களே அப்படி வாழ்ந்த ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் நாட்டுப் பெண். இந்த ராஜகோபாலாச்சாரியார்தான் 42ம் பட்டம் அழகியசிங்கர் காலத்திலே, அன்று சிறு சந்நிதியாக இருந்த ஸ்ரீ அஹோபில மடத்தை புனருத்தாரணம் செய்து பெரும் மண்டபமாகக் கட்டி வைத்தவர். அன்று மடத்துக்கு அழகிய சுதை கோபுரமும் இருந்தது. (அதை இப்போது வசதிப்படுத்துகிறேன் என்று இடித்து விட்டது ஒரு வருத்தமான சேதி) பங்குனி ப்ரும்மோத்ஸவத்தில் அவர் நடத்திய ததீயாராதனம் பிரமிக்கத் தக்கது. அதைக் காட்டிலும், அருளிச் செயல், வேத பாராயண கோஷ்டிகளைப் பெரிய அளவில் வரவழைத்து பெருமாளை மகிழ்வித்தவர் அவர். காஷ்மீர் ராஜா முதல் அந்த நாளில் இருந்த பெரிய மனிதர்கள் வீட்டுக் கதவுகள் அவருக்காக என்றும் திறந்திருக்கும். அப்படி வாழ்ந்தவர். சமீபத்தில் இங்கு வந்திருந்த TVS ஸ்ரீ வேணு ஸ்ரீநிவாசன், தங்கள் மாளிகைக்கு அவர் வந்து சென்ற அனுபவங்களைப் பரவசத்துடன் பகிர்ந்து கொண்டார். அப்படி வாழ்ந்தவர்.
இந்த மூதாட்டியைப் பெற்றவரோ திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள ஏமப்பூர் கோசகாச்சார் ஸ்வாமி. இங்கு ஸ்ரீ அஹோபில மடத்தில் வெகு காலம் முத்ராதிகாரியாகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.
வெகு சிறப்பாக இந்த ஊரில் வாழ்ந்தாலும், பல வேறு காரணங்களால் இப்போது மதுரையில் வாழ்கின்ற இந்த ஸ்ரீமதி கமலா --- எங்களுக்கெல்லாம் பேபி மன்னி – மதுரை டிவிஎஸ் நகர் அதிமுக கவுன்ஸிலர் ராஜா ஸ்ரீநிவாசனின் தாயார். இன்று இங்கு வந்திருந்தார்.
அவரே பாட்டும் எழுதுவார். இனிமையாகப் பாடவும் செய்வார். ஓரிரு மணி நேரமே இருக்க முடிந்த நிலையில் வந்த அவரை வழக்கம் போல் வற்புறுத்தி பாடச் சொன்னேன். அவர் பாடிய பாடல் “புல்லாணியில் அமர்ந்த புருஷோத்தமா” இங்கே!
17-1-1958ல் திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பட்ட “ஸ்ரீ துவரிமான் துய்யமாமுனி தூமணி மாலை” ஸ்ரீஅஹோபிலமட 40வது பட்டத்தில் வீற்றிருந்த ஸ்ரீவண் சடகோபஸ்ரீ ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்திரரின் 35வது வார்ஷீக மஹாராதனத் திருநாளில் துவரிமானில் உள்ள அவரது பிருந்தாவனத்தில் வெளியிடப் பட்ட நூலாகும். பல அருமையான விஷயங்களை, பந்தல்குடி ரெ. திருமலை அய்யங்கார், அவருக்கே உரித்தான அசாதாரண முறையில் தொகுத்து அளித்திருக்கிறார். அவற்றுள் ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யான சோபானம் ஒன்று. இது 41ம் பட்டம் அழகியசிங்கர் அருளியது. இதற்கு 43ம் பட்டம் ஒரு மணிப்பிரவாள உரை எழுதியிருக்கிறாராம். அந்தக் காலத்திலும், அடியேனைப் போல, சம்ஸ்க்ருதம் தெரியாதவர்கள் நிறைய இருந்திருப்பார்கள் போலும். அப்படித் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் மேல் இரக்கப் பட்டு, ஸ்ரீ திருப்பூந்துருத்தி கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் என்பவர் இந்த ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யான சோபானத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். ஸ்ரீ அஹோபில மட நண்பர்களுக்காக அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யாந ஸோபாநம்
வெள்ளிய தோர்தெய்வ மண்டபமாம் --- அதில்
விளங்குந் தூண்களோர் நான்குளவாம்.
ஒள்ளிய பொன்றிக ழூசலுண்டாம் -- அது
ஒளிவிடும் நவமணி குயின்றதுவாம். .1.
பொன்றிகழ் பீடமும் சேர்த்துளதாம் --- அதில்
பூமக ளார்வன் வீற்றுளராம்.
தன்சரண் சார்வதோ ராசையினால் சாரும்
தமர்கள்தாம் பற்றுதற் கேற்றவண்ணம். .2.
நீட்டிய பாதத்திற் பாதுகையாம் --- அதை
நேசமாய்க் கருடன்றான் தாங்கிநிற்பான்.
தேட்டமா மிவ்வலத் திருவடியை எண்ணும்
திருவுடை யார்பவக் கடல்கடந்தார். .3.
மடக்கிய திருவடி மற்றொன்றது --- செழு
மலர்மக ளெழுந்தருள் பீடமாகும்.
கடக்கரும் பவக்கடல் கடப்பதற்கு அவர்
கணுக்கால்கள் வாய்த்ததோர் தெப்பமாகும். .4.
முழந்தாள்க ளிரண்டுமிக் கெழிலுடைத்தாம் -- அவர்
முன்றொடை கதலியின் தண்டுநிகர்.
மழுங்காத வழகுடன் கடிவிளங்கும் -- பொன்
மணிக்காஞ்சி பீதக வாடைசூழ. .5.
புரைதீர்ந்து விளங்கிடும் நாபிமலர் -- இப்
புவனிக்கெ லாமது பிறந்தகமாம்.
திரையாடு கடல்தந்த மாமகள்வாழ் அவன்
திருமார்வுக் கலங்காரம் திருமறுவாம். .6.
நரசிங்கன் கண்டத்துக் கலங்காரம் -- ஒளி
நலமிக்க கௌஸ்துப மாமணியாம்.
திருவங்கு மடிதன்னி லிடப்பாகத்தில் வீற்று
தேவனார் அணைந்திட மகிழ்ந்திடுவாள். .7.
மார்புற வணைந்தங்கு வீற்றிருப்பாள் -- அலை
மாக்கடல் பூத்ததோர் மடக்கொடிதான்.
சார்புறத் தானின்ற வண்ணமதை அவர்
சரணக்கு றிகாட்டுங் கையுணர்த்தும். .8.
அங்கையொன் றபயத்தைக் காட்டிநிற்கும் -- இரு
அழகிய நீண்டபெ ரும்புயங்கள்.
சங்கமும் சக்கரமும் தாங்கிநிற்கும் -- முகம்
தாமரை நாண்மலர் போன்றுளதாம். .9.
பற்பல வண்ணவில் வீசுமணி -- அங்குப்
பகலவன் காந்திபோல் சோதிதிகழ்
நற்கன கம்முடி சாற்றினராம் -- திரு
நரசிங்க னெழிலுடை முடிக்கணியா. .10.
மேற்புறம் பொன்மயப் பணியரசாம் --- அவர்
மிக்கசெஞ் சோதிநற் பணிமுடியால்
நாற்புறமும் விரித்துநற் குடைகவிப்பார் -- மேலே
நலமிகப் பொற்ப்ரபை விளங்கிடுமாம். .11.
பொன்மய மாம்சத்ரம் மேலுண்டு அது
புரையற்று நலமிக்கு விளங்கிடுமாம்.
தன்மடி மேற்றிரு மாமகளை -- இடத்
தாமரைத் திருக்கண்ணால் நோக்கிடுவார். .12.
வலதுதி ருக்கண்ணால் பத்தியொடு -- ஆங்கே
வந்தெதிர் நிற்பாரை யாதரிப்பார்.
பொலன்மாலை கண்டத்திற் பூண்டிருப்பார் -- மற்றும்
பூஷணம் பற்பல தரித்திருப்பார். .13.
சாலக்ரா மத்தாலே மாலையுண்டாம் -- இன்னும்
ஸ்வர்ணத்தால் யஜ்ஞோப வீதமுண்டாம்
மாலுக்க லங்காரம் காசுமாலை -- முத்து
மாலைகள் சம்பக மாலையுண்டாம். .14.
மதிப்புக் கடங்காத விலைபெற்றதாம் -- காஞ்சி
மட்டற்ற மாணிக்க மிழைத்துளதாம்.
துதிப்பார்க் கநுகூலம் செய்பவராம் -- ஹரி
தொண்டரைப் புரப்பதில் தீக்ஷிதராம். .15.
மாலோல தேவனைக் கருதுவார்க்கு --அடி
மலர்முதல் முடிவரை யெண்ணுவார்க்கு
மாலோலன் திருவடிப் பத்திதன்னை -- மிக
மட்டற்று வளர்த்திடும் பெற்றியதாய்
மாலோல சடகோப யோகிவரர் -- பெரு
மகிழ்ச்சியால் ஸோபான மியற்றித்தந்தார். .16.
ஆச்ரம கைங்கர்யங்களில் அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருவது , ஸ்ரீமத் ஆண்டவனின் நியமனம் மற்றும் அவரது அனுக்ரஹ விசேஷத்தால் திருப்புல்லாணி ஆச்ரமத்தில் நடந்து வரும் ததீயாராதன கைங்கர்யங்கள். ஆடி, தை, மஹாளய பக்ஷ அமாவாசைகள், பங்குனி, சித்திரை ப்ரும்மோத்ஸவங்கள் என்று இப்படிப் பல நாட்கள் நடக்கும் இந்த ததீயாராதனங்களில், எங்கெங்கிருந்தோ வருகின்றவர்கள், வயிறு நிறைந்து மனமும் நிறைந்து சந்தோஷப் படுவதைப் பார்ப்பது ஒரு பாக்யம். அப்படி வருகிறவர்களில் சிலரது அசாதாரணத் திறமைகளைக் கண்டு வியந்து அவர்களை ஸேவிப்பதும் இன்னொரு பாக்யம். அதிலும், அப்படிப் பட்ட சிலர் அடிக்கடி வந்து அடியேனை சந்தோஷப்பட வைப்பதும் மேலும் ஒரு பாக்யம். அப்படிப் பட்டவர்களில் ஒருவரைப் பற்றி ஏற்கனவே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.
பாடவே பிறந்தாரோ என்று அடியேன் ஆச்சர்யப்படும் அந்த 70 ப்ளஸ் யங் மாமி இன்றைய மஹாளய பக்ஷ அமாவாசையன்றும் சென்னையிலிருந்து வந்திருந்தார். நங்கநல்லூர் பாட்டுக்கார மாமி என்று பிரபலமான அந்த ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மீ மாமி, கிளம்புகிற அவசரத்திலும், அடியேனுடைய வேண்டுகோளை ஏற்று இன்றும் சில பாடல்களைப் பாடி அடியேனை ஆசீர்வதித்தார். அந்த சில நிமிடங்களை வழக்கம்போல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களில் பலருக்கும் அது பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்.
இன்னொன்று தெரியுமோ! மாமி பெருமாள் ஆச்சார்யன் மேலுள்ள பிரபந்தங்கள், பாட்டுக்களை மட்டுமே பாடுவார். இசைத் திறமை அபாரம் என்றாலும் வேறு பாடல்களுக்கு Strictly No தான்.
இந்தப் பதிவு பெரியவர்களுக்கு – ஆனால் அவர்களுக்காக மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டுக் குழந்தைகளை குஷிப் படுத்துவதற்காக அதே சமயத்தில் அவர்களுக்குப் பெருமாளைப் பற்றியும் சொல்வதற்காகவும் பயன்படலாம் என்ற நோக்கில் எழுதுகின்ற பதிவு.
இரா.ராகவய்யங்கார் --- இவரைப் பற்றி அறியாத தமிழ் மக்கள் இருக்கவே முடியாது. எங்கள் சேது மண்ணிற்கு உள்ள பல பெருமைகளில் மிகப் பெரும் பெருமை இவர் இந்த மண்ணில் வாழ்ந்தார், மூன்று சேதுபதிகளின் அவையிலே ஆஸ்தானப் புலவராய் புகழுடன் வாழ்ந்தார் என்பது. அரிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகள், பல பல தலைப்புகளிலே அருமையான நூல்கள், அந்தாதிகள் பல என்று இப்படிப் புலவர் பெரு மக்களுக்காகவும், தமிழ் அறிஞர்களுக்காகவும் பல எழுதிய அவர், தன்னுடைய பேரனுக்காகவே எழுதிய ஒரு சிறு பாடல் அன்றைய இராமநாதபுரம் அக்ரஹாரத்திலே பிரபலம். அந்தப் பேரன் திரு டாக்டர் விஜயராகவன், மும்பை அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் முக்கிய பொறுப்பு வகித்து ஓய்வு பெற்று இப்போது சமீபத்தில் தன்னுடைய சதாபிஷேகத்தைக் கொண்டாடவிருக்கிறார். தாத்தாவிடமிருந்தும், அதன்பின் பெரும் தமிழறிஞராக விளங்கிய தன் தந்தை ஸ்ரீ ராமாநுஜம் அய்யங்காரிடமிருந்தும் கற்று, தானும் ஒரு நல்ல தமிழறிஞராக விளங்குபவர். இவர்களுக்கு அடியேன் உறவினன் என்பது ம், ஸ்ரீ ராமாநுஜம் அய்யங்காரின் மாணவர்களில் அடியேனும் ஒருவன் என்பதும் அடியேனுக்கு ஒரு பெருமை. தாத்தா தனக்காவே எழுதிய பாடலுக்காக, டாக்டர் ஸ்ரீ விஜயராகவன் காலில் கொலுசு கட்டி ஆடிய அந்தப் பாடல், நம் எல்லோர் வீட்டுக் குழந்தைகளுக்காகவும் இங்கே.
சங்குச் சக்கரச் சாமி வந்து
சிங்கு சிங்கென ஆடுமாம் – அது
சிங்கு சிங்கென ஆடுமாம்!
உலகம் மூன்றும் அளக்குமாம் – அது
ஓங்கி வானம் பிளக்குமாம்!
கலகல எனச் சிரிக்குமாம் – அது
காணக் காண இனிக்குமாம்!
கொட்டுக் கொட்டச் சொல்லுமாம் – அது
கூத்தும் ஆடப் பண்ணுமாம்!
எட்டு எழுத்துச் சொன்ன பேர்க்கு
எந்த வரமும் அளிக்குமாம்!
யாரும் காண அரியதாம் – அது
யாரும் காண எளியதாம்!
பேரும் ஊரும் உள்ளதாம் – அது
பெரிய பெருமை கொண்டதாம்!
ஆதிமூலம் என்று சொன்ன
யானை முன்பு வந்ததாம்!
ஜோதி ரூபம் ஆனதாம் – அது
தூய வீடு தருவதாம் (சங்குச் …. )
என்ன எளிமையான வார்த்தைகளில் எம்பெருமானின் பெருமைகளையெல்லாம் குழந்தைகளையும் பாடி ஆட வைத்திருக்கிறார்!