தசாவதாரம்.
திருமால்,
(1) மச்சம் (2) கூர்மம் (3) வராகம் (4) நரசிங்கம் (5) வாமநம் (6) பரசுராமர் (7) பலராமர் (8) ஸ்ரீ ராமர் (9) கிருஷ்ணன் (10) கற்கி என்று சொல்லப்பட்ட தசாவதாரமுஞ் செய்தருளினர். இந்தப்பத்து அவதாரங்களுள்ளே, வேதத்தைத் திருடிக் கடலிலொளித்த சோமுகாசுரனைக் கொல்லும்பொருட்டு மச்சாவதாரமும், திருப்பாற்கடல் கடையும் போது மந்தரமலையைத் தாங்கும் பொருட்டுக் கூர்மாவதாரமும், இரணியாக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டின போது அதை விரிக்கும் பொருட்டும், அவனைக் கொல்லும் பொருட்டும் வராகாவதாரமும், தமையன் பழிவாங்க சருவதேவ வணக்கத்தை விலக்கின இரணியனைக் கொல்லும்பொருட்டு நரசிங்காவதாரமும், மாவலியை யடக்கும் பொருட்டு வாமனாவதாரமும், அரசரால் தாழ்த்தப் பட்ட வேதியர் நிமித்தமாக அவ்வரசரைக் கொல்லும் பொருட்டுப் பரசுராமாவதாரமும், இராவணன் முதலி யோரைக் கொல்லும் பொருட்டு ஸ்ரீ ராமாவதாரமும், பிரலம்பன் முதலியபல ராக்ஷஸரை வதைக்கும் பொருட்டுக் கிருஷ்ணாவதாரமும், தருமத்தை நிலை நிறுத்தும் பொருட்டுக் கற்கி யவதாரமும் செய்தருளுவர்.
இத்தசாவதார வைபவத்தை,
தேவுடைய மீனமாய் ஆமையாய்ஏனமாய் அரியாய்க் குறளாய்மூவுருவி னிராமனாய்க் கண்ணனாய்க்கற்கியாய் முடிப்பான் கோயில்- (பெரியாழ்வார் திருமொழி 4-9-9)
என்று விட்டுசித்தனும்;
“ மீனோடாமை கேழலரி குறளாய் முன்னுமிராமனாய்த்
தானாய்ப் பின்னுமிராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியுமானான்
--(பெரிய திருமொழி 8-8-10)
என்று திருமங்கைமன்னனும் ,
"மீனாமை கோலநெடு நரசிங்கமாகி
நிலம் விரகாலளந்த குறளா
யானாது சீறுமழுவல் வில்லுவெல்லுமுனை
யலமுற்ற செங்கையவராய்
வானாடர்வந்து தொழ மன்ணாடர் யாவரையு
மடிவிக்க வந்த வடிவாய்
நானாவிதங்கொள் பரியாளாக நின் றருளு
நாராயணாய நமவே
(மகாபாரதம், சல்லிய பருவம். 1)
என்று வில்லிபுத்தூராழ்வாரும் பாடியுள்ளனர்.
ஸ்ரீ வேதாந்த தேசிகன் அமைத்துப் பாடிய அடைவினைக்
கண்டு களிமின்.
" மீனோடாமை கேழல் கோளரியாய்
வானார் குறளாய் மழுப்படை முனியாய்ப்
பின்னு மிராம ரிருவராய்ப் பாரில்
துன்னியபரந் தீர் துவரை மன்னனுமாய்க்
கலி தவிர்த்தளிக்கும் கற்கியாய் மற்றும்
மலிவதற்கென்று வல்வினை மாற்ற
நானா வுருவங்கொண்டு நல்லடியோர்
வானாரின்ப மிங்குறவருதி.''
(மும்மணிக்கோவை. 4)
[கேழல் - வராகம் ; கோளரி நரசிங்கம் ; குறள்-வாமனன் ; மழுப்படை முனி - பரசுராமன் ; இராமரிருவர் தசரத ராமன், பலராமன் ; துவரை மன்னன் கிருஷ்ணன்.)
மகரம் வளருமளவில் பௌவமடைய வுற்றலைத்தனை
வடிவு கமடமெனவமர்ந்து கிரிதனைத் தரித்தனை
மலியு மசுரனுரமிடந்து வசுதை பேர்த்தெடுத்தனை
வலிகொள வுணனுடல் பிளந்து மதலைமெய்க் குதித்தனை
பகரு முலகமடியளந்து அமரர்கட் களித்தனை
பரசு முனிவன் வடிவு கொண்டு பலவரைத் துணித்தனை
பணிய விசைவில் தசமுகன்றன் முடிகள் பத்து திர்த்தனை
படியு முருவில்வரு பிலம்ப வசுரனைத் தகர்த்தனை
சகரி துவரையென வுகந் துவரை கரத்தெடுத்தனை
நடமொடியலு பரியில் வந்த நலிவறுக்கவுற்றனை.
- (நவமணிமாலை. 2)
(மகரம் - மச்சம்; பௌவம் சமுத்திரம்; கமடம்-ஆமை; கிரி மந்தர பருவதம்; அசுரன் - இரணியாக்ஷன்; உரம்-மார்பு; வசுதை-பூமி, அவுணன் - இரணியகசிபு, மதலை - பிரஹ்லாதன்; பரசுமுனிவன் பரகராமன் : பலவரை அசுராம்சமான அநேகம் அரசர்களை ; இசைவு இல் - அங்கீகாரம் இல்லாமல்; தசமுகன் - இராவணன் ; வரை - கோவர்த்தன கிரி ; பரி குதிரை.)
நம் வேதாந்தவாரியன் "ஸ்ரீ தசாவதார ஸ்தோத்திரம் '' பாடியுள்ளார். இத் தோத்திரம் பொதுவாக அவதாரங்களைப் பற்றிய ஒரு சுலோகமும், பகவதவதாரங்களில் பிரதானமாக வெண்ணப்பெற்றுவரும் பத்து அவதாரங்களைப்பற்றிப் பத்து சுலோகங்களும், அனைத்தையுஞ் சேர்த்தநுஸந் திக்கிற ஒரு சுலோகமும், பல ச்ருதியாக, ஒரு சுலோகமும் ஆக பதின்மூன்று சுலோகங்கள் கொண்டது.
இச்சாமீந விஹார கச்சப மஹா போத்ரி ந்யத்ருச்சாஹரே ரக்ஷா வாமந் ரோஷ ராம கருணா காகுத்ஸ ஹோலாஹலிந்| க்ரீடாவல்லவ கல்கவாஹந தசா கல்கிந்நிதி ப்ரத்யஹம் ஜல்பந்த புருஷா: புநந்தி புவநம் புண்யௌக புண்யா பணா://
இச்சையால்வரு மீனமே ! யொரி லீலையா லிலகாமையே!
யீடிலாப்பரு வேனமே ! யியதேச்சையா நரசிங்கமே!
வச்சிராயுதன் ரக்ஷணத்தின் பொருட்டு வாமனமாணியே!
மன்னு ரோஷ விராமனே ! யருள் மின்னுரூப விராமனே !
மெச்சியே படையல முறும்பல ராமனே! வெகு லீலையை
மேவு வல்லவ! கற்கி வாகன கற்கியே! யென நித்தமு
நச்சியே பலகான வில்பவர் பாடெலாஞ் சுசிபண்ணுவார்
நல்வினைக்குவை விற்க வாங்கடை போன்றவப் புருடர்களே.''
- (தசாவதார ஸ்தோத்ரம். 12. பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாசாரியர்)
"தயாசதகம் " எனுந் தோத்திரத்தில் 81 முதல் 90 வரை
யுள்ள சுலோகங்கள் திருவவதாரப் பதிகமே; முறைவைப்பும்
முன்னர்க் கூறியாங்கே.
"ஸ்ரீ ஸங்கற்ப சூரியோதயம்" எனும் அரிய நாடகம் சுபாசிரய நிர்த்தாரணம் (தியானத்திற்குரிய பகவத் விக்ரஹத்தை நிச்சயித்தல்) என்னும் ஏழாமங்கம் தசாவதார வைபவத்தைப் பரக்கக் காட்டுகின்றது.
பரமபத ஸோபாநம்.
"பரமபத ஸோபாநம்" என்ற ரஹஸ்ய கிரந்தத்தில் ஶ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் பரமபதமென்னும் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைவதற்கு ஒன்பது விஷயங்களைப் படிகளாகக் கற்பித்து விளக்கியிருக்கிறார்.
அவற்றின் வரிசை இவர் தாமே
"விவேக நிர்வேத விரக்தி பீதய: ப்ரஸாதஹேதூத் க்ரமணார்ச்சிராதய:
ப்ரக்ருத்ய திக்ராந்த பதாதிரோஹணம் பராப்திரித்யத்ரது பர்வணாக்ரம: " .
என அருளிச்செய்துள்ளார்.
அதாவது :- இக்கிரந்தத்திலே பகுத்தறிவு, வெறுப்பு, வைராக்கியம், பயம், பகவானுடைய அநுக்ரஹத்திற்குக் காரணமான பக்தி, ப்ரபத்தி, சரீரத்தை விட்டு ஆத்மா வெளியேறுதல், அர்ச்சிராதிமார்க்கம், ப்ரகிருதி மண்டலத்திற்கு மேற்பட்டதான பரமபதத்தையடைதல், அங்கு பரமாத்மாவை அநுபவித்தல் என்பன படிகளுடைய வரிசை.
எனவே இதிலுள்ள ஒன்பது பர்வங்களாவன --
(1) விவேகபர்வம் (தத்துவங்கள் முதலியவற்றை அறிதல்); (2) நிர்வேத பர்வம் (ஸம்ஸாரத்தில் வெறுப்பு); (3) விரக்திபர்வம் (உலக சுகங்களில் ஆசையறுதல்) ; (4) பீதி பர்வம் (தன் பாபங்களின் மிகுதியால் இனி வரக்கிடக்கும் நரகாநுபவம் முதலிய துன்பங்கட்கு அஞ்சுதல்); (5) ப்ரஸாதநபர்வம் (எம்பெருமான் மோக்ஷத்தை அருள் வதற்குக் காரணமான உபாயங்களை அநுஷ்டித்தல்); (6) உத்க்ரமண பர்வம் (இச்சரீரத்திலிருந்து ஜீவன் வெளியேறு தல்); (7) அர்ச்சிராதிபர்வம் (அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லுதல்); (8) திவ்ய தேச ப்ராப்திபர்வம் (ஸ்ரீ வைகுண்ட மென்னும் திவ்யலோகத்தைச் சேர்தல்); (9) ப்ராப்திபர்வம் (அங்கு பகவானைக் கண்ணாரக்கண்டு, களித்து, அநுபவித்து, அந்த அநுபவத்திலேயே மூழ்கிக்கிடத்தல்)
“தேனேறு தாமரையாள் திருமார்பன்றன்
திண்ணருளால வனடியில் விவேகம் பெற்றிங்கு
ஊனேறு பவக்குழியை வெறுத்ததற்பின்
ஊர் விரத்தியுடன் வினையின் திரளுக்கஞ்சிக்
கூனேறு பிறை யிறையோன் சாபந் தீர்த்தான்
குரைகழலே சரணடைந்து குரம்பை விட்டு
வானேறும் வழிப் படிகளடைவே கண்ட
வண்புகழ்த் தூப்புல் வள்ளலருள் பெற்றோமே."
என்ற தனியனும் காண்க. இங்கு ஸோபாந அடைவு அமைக்கப்பெற்றுள்ளது குறிக்கொள்க.
இக்கிரந்தத்தின் இருபதாவது பாசுரமான ,
" மண்ணுலகில் மயல் தீர்த்து மனந்தளும்பி
மன்னாத பயனிகந்து மாலேயன்றிக்
கண்ணில தென்றஞ்சி யவன் கழலே பூண்டு
கடுஞ்சிறை போய்க்கரையேறுங் கதியே சென்று
விண்ணுலகில் வியப்பெல்லாம் விளங்கக்கண்டு
விண்ணவர்தங் குழாக்களுடன் வேதம் பாடிப்
பண்ணுலகிற்படியாத விசையாற் பாடும்
பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே.''
[(1) மண் உலகில் மயல் தீர்ந்து (விவேகம்); (2) மனந் தளும்பி (நிர்வேதம்); (3) மன்னாத பயன் இகந்து (விரக்தி); (4) மாலே யன்றிக் கண் இலதென்று அஞ்சி (பீதி); (5) அவன் கழலே பூண்டு (ப்ரஸாதநம்); (6) கடும் சிறைபோய் (உத்க்ரமணம்); (7) கரையேறும் கதியே சென்று (அர்ச்சிராதி); (8) விண் உலகில் வியப்பெல்லாம் விளங்கக்கண்டு (திவ்யதேச ப்ராப்தி) ; (9) விண்ணவர்தம் குழாங்களுடன் வேதம் பாடி (ப்ராப்திபர்வம்).)
என்பதில் இக்கிரந்த பர்வங்களின் அர்த்தத்தை அடைவாக அமைத்துள்ள அழகு அறிஞர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளவல்லது.
அயிந்தைச் செல்வன் விஷயம்.
திருவயிந்தைமா நகரமர்ந்துள்ள செல்வத் தெய்வநாயகன் விஷயமாக ப்ராக்ருத பாஷையில் ஸ்ரீ அச்யுத சதகம், (101 சுலோகங்கள்), ஸம்ஸ்க்ருத பாஷையில் ஸ்ரீ தேவநாயக பஞ்சாசத் (53 சுலோகங்கள்), த்ரமிட பாஷையில் மும்மணிக் கோவை, பந்துப்பா, கழற்பா, அம்மானைப்பா, ஊசற்பா, ஏசற்பா, நவமணிமாலை முதலியன நம் வேதாந்த குரு அருளிச்செய்துள்ளார். இதனை, இவர்தாமே,
அந்தமில் சீரயிந்தை நகரமர்ந்த நாத
னடியிணைமேல் அடியுரையாலைம்ப தேத்திச்
சிந்தைகவர் பிராகிருத நூறு கூறிச்
செந்தமிழ் மும்மணிக்கோவை செறியச்சேர்த்துப்
பந்து கழலம்மானை யூசலேசல்
பரவு நவமணிமாலை யிவையுஞ் சொன்னேன்
முந்தைமறை மொய்ய வழிமொழி நீயென்று
முகுந்தனருள் தந்தபயன் பெற்றேன் நானே."
-
(நவமணிமாலை 10)
என அடைவு அமைத்து அற்புதமாக அருளிச் செய்திருத்தல் நோக்கி இன்புறற்குரியது.