ஶ்ரீ மஹா பாரதம் வினா விடை
முதல் பாகம்
ஆரண்ய பர்வம்
வினா 102 முதல் வினா 114 வரை
வினா 102.- இந்த திவ்ய கதையைச் சொன்னதும் மார்க்கண்டேயர் மற்றெந்த திவ்ய கதையைச் சொன்னார்?
விடை... ஸ்கந்தர் எவ்வாறு பரமசிவனிடம் உண்டாகி அக்கினியில் ஸம்பந்தப்பட்டு கங்கையில் முளைத்திருந்த சரவணத்தில் கிருத்திகா நக்ஷத்திரங்களால் வளர்ந்தார் என்றும், அவர் எவ்வாறு தேவஸேனாதிப் பட்டம் பெற்று சூரபத்மா முதலிய அஸுசிரேஷ்டர்களை ஸம்ஹரித்தார் என்றும், பின்பு அவருக்கு எவ்வாறு விவாஹம் நடந்தது என்றும் சொல்லி மார்க்கண்டேயர் கடைசியில் ஸ்கந்த ஸ்தோத்திரத்தைச் சொல்ல, ஸகலரும் எழுந்து அது முடிந்ததும் தமது ஆஸனங்களில் உட்கார்ந்தார்கள்.
வினா 103.- இதன் பின்பு என்ன விசேஷம் நடந்தது? பின்பு பாண்டவர்கள் எங்கு சென்றார்கள்?
விடை... இவ்வாறு புருஷர்கள் எல்லாரும் ஸத்கதா சிரவணம் செய்து வருகையில் மஹாகர்வங்கொண்ட ஸத்தியபாமை திரெளபதியை நோக்கி “அம்மா, நீ எவ்வாறு உனது ஐந்து புருஷர்களையும் திருப்திப்படுத்தி அவர்களை வசப்படுத்தியிருக்கிறாய். என்னால் ஆனமட்டும் கிருஷ்ணனை வசப்படுத்தப் பார்த்தும், என்னால் முடியவில்லை. சில ஸமயங்களில் நான் வசப்படுத்தி விட்டேன் என்று எண்ணிக் கர்வப் பட்டால் அதற்குப் பங்கம் உடனே வந்து விடுகிறதே" என்று கேட்டாள். அதற்கு திரெளபதி பதிவிருதா ஸ்திரீகள் எவ்வாறு வீடு முதலியவைகளை மேல்பார்வை பார்த்துக்கொண்டு, கணவன் யாருக்கிட்ட வேலையையும் தாமே செய்துகொண்டு வந்தால் அவர்களுக்குப் புருஷர்கள் அனுகூலமாய் இருப்பார்கள் என்றும், மருந்து, மாயம், நகை போட்டுக்கொண்டு அழகுகாட்டி மயக்கல், கோபம் முதலிய அமார்க்கங்களால் கணவனை வசப்படுத்த எண்ணுதல் தீராத் துக்கத்திற்கு இடமாகும் என்றும், விஸ்தாரமாக ஸ்திரீ தர்மத்தை ஸத்தியபாமைக்கு எடுத்து வெளியிட்டுத் தனது மனோ தர்மத்தை ஸத்தியபாமா நன்றாய் அறியும்படி திரெளபதி காட்டினாள். இதன் பின்பு பாண்டவர்கள் காம்யகவனம் விட்டு துவைதவனம் சென்று அங்கு ஒரு ஏரிக்கரையில் வஸிக்கத் தொடங்கினார்கள்.
வினா 104.- இவர்கள் இருக்கும் நிலை திருதிராஷ்டிரனுக்கு எவ்வாறு தெரியவந்தது? அவன் என்ன செய்தான்?
விடை... பாண்டவர்கள் துவைதவனத்தில் வஸிக்குங்கால் அவர்கள் காற்று, மழை, வெயில் முதலியவைகளில் அடிபட்டு மெலிந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதை அங்கு வந்திருந்த சில பிராம்மணர்கள் அறிந்து தாம் போகும்வழியில் திருதிராஷ்டிரராஜனிடம் தெரிவித்தார்கள். அவன் இதைக்கேட்டு ஸபையில் மிகுந்த வருத்தமடைந்து பிரலாபித்தான்.
வினா 105.- இதைத் துர்யோதனாதியர் கேட்டதும் என்ன செய்தார்கள்?
விடை.- பாண்டவர்களறு நிலையைக் கேள்விப்பட்டதும் துர்யோதனாதியருக்கு மிகுந்த ஸந்தோஷ முண்டாயிற்று. அவர்களது துக்கத்தை அதிகப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் அவர்களுக்கு வர, எல்லாரும் அவ்வாறு செய்யத்தக்க உபாயத்தை ஆலோசித்தார்கள். கடைசியில் தாம் எல்லாரும் தமது பெண்சாதிகளோடு துவைதவனத்திலிருக்கும் ஏரிக்குப் போய் அங்கு ஜலக்கிரீடை முதலியவைகளைச் செய்து விலையுயர்ந்த ஆடை யாபரணங்களை அணிந்து சுகமாயிருந்தால் அருகிலிருக்கும் பாண்டவர்களுக்குக் கஷ்ட மதிகமாகும் என்றும், அங்கு போவதற்கு அங்கு அப்பொழுது மேய்ந்துகொண்டிருக்கும் தமது பசுக்கூட்டங்களை மேல்பார்வையிடப் போகிறோம் என்ற வியாஜத்தை வைத்துக்கொண்டு புறப்பட்டால் அரசன் சீக்கிரத்தில் அனுமதிகொடுப்பான் என்றும் தீர்மானித்தார்கள். இதன்படி அரசனிடம் விடைபெற்று யாவரும் துவைத வனம் வந்து ஸுகிக்கத் தொடங்கினார்கள்.
வினா 106.- கெட்ட எண்ணத்தோடு வனம் வந்த துர்யோதனாதியருக்கு யாது காரணத்தால் என்ன கேடு விளைந்தது?
விடை... இவர்கள் பசுக்கூட்டங்களை நன்றாய்ப்பார்த்து ஆனந்தித்து விட்டு பாண்டவர்கள் தங்கி இருக்கும் ஏரிக்கரை யண்டை வந்து ஜலக்கிரீடை முதலியவைகள் செய்து காலங் கழித்துப் பாண்டவர்களது துக்கத்தை அதிகப்படுத்த வேண்டுமென்கிற எண்ணத்துடன் வர, அங்கு இவர்களுக்கு முன்னமேயே குபேர பட்டணத்திலிருந்து சித்திரஸேனன் என்ற ஒரு கந்தர்வராஜன் ஜலக்கிரீடைக்காக வந்திருந்தான். இதனால் கந்தர்வர்களுக்கும் துர்யோதனாதி யருக்கும் யுத்தம்நேரிட, அதில் கந்தர்வர்கள் தூர்யோதனாதியர்களை தோல்வியடையும்படி செய்து அவர்களோடு வந்த பெண்களையும் ஒழுங்கின்றிப் பரபுருஷர்களோடு வரிந்துகட்டி, அவர்கள் எல்லாரையும் சிறைபிடித்துக்கொண்டு போனார்கள்.
வினா 107.- இவர்களை யார் இந்நிலையிலிருந்து எவ்வாறு காப்பாற்றியது? பின்பு இவர்கள் என்ன செய்தார்கள்?
விடை... இவ்வாறு முக்கியமானவர்களைச் சித்திரஸேனன் சிறைப்படுத்திக் கொண்டு போனதும், துர்யோதனாதியரது ஸேவகர்கள் அருகிலிருந்த தர்மபுத்திரரிடம் வந்து முறையிட, அவர் கருணாநிதியாகையால் துர்யோதனாதியரைச் சிறைமீட்டு அழைத்துவரும்படி பீமார்ச்சுனர்களுக்குக் கட்டளையிட்டார். அவர்கள் முதலில் துர்யோதனாதியருக்கு ஸகாயம் செய்ய இசையாதது கண்டு தர்மபுத்திரர் “நம்முள் சண்டைவருமாயின் நாம் ஐந்துபேரும் 100-பேர்களுமாகப் பிரியலாம், வெளியிலிருந்து ஒருவன் நம்மோடு சண்டைக்கு வருவானாயின் நாம் 105-பேர்களாகத்தான் இருக்கவேண்டும்” என்று புத்திமதி கூறினார். உடனே பீமார்ஜுனர்கள் சீக்கிரத்தில் சென்று கந்தர்வர்களோடு சண்டையிட்டு துர்யோதனாதியரை விடுவித்து தர்மபுத்திரர் முன்பு கொண்டுவந்து நிறுத்தினார்கள். அவர்கள் வெட்கத்தால் தலை குனிந்தவராய் தர்மபுத்திரரது நயவாக்கியங்களைக் கேட்டுக் கொண்டு மிகுந்த துக்கத்தோடும் அவமானத்தோடும் ஹஸ்தினாபுரியை அடைந்தனர்.
வினா 108.- ஹஸ்தினாபுரம் சென்றதும் துர்யோதனன் நிலை என்னமாய் இருந்தது? அதை எவ்வாறு அவனது ஸ்நேகிதர்கள் மாற்றத் தலைப்பட்டார்கள்?
விடை... துர்யோதனனுக்கு அடங்காத் துக்கம்வர, அவன் சாப்பிடாது ஆகாரமின்றி இறப்பதாகத் தீர்மானித்து வெகு துக்கத்தோடு ஓர் இடத்தில் உட்கார்ந்தான். உடனே கர்ணன், தான் ஸகல இராஜாக்களையும் ஜயித்து வருவதாகவும், அதன்பின்பு அவனுக்கு இராஜஸூய யாகத்தை நடத்திவைப்பதாகவும் சொல்லி, திக்கு விஜயத்திற்குப் புறப்பட்டு ஸகல இராஜாக்களையும் வென்று, கர்ணன் துர்யோதனனிடம் திரும்பி வந்தான். இந்த வேலைகளாலும் இராஜஸுூய யாகம் செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தாலும் துர்யோதனன் ஒருவாறு தனது துக்கத்தை மறந்திருந்தான்.
வினா 109.- இராஜஸுய யஜ்ஞம் நடந்ததா இல்லையா? வேறு என்ன நடந்தது?
விடை- துர்யோதனன் பிராமணர்களைக் கூப்பிட்டு யோஜிக்குங்கால் அவர்கள், தகப்பனாராவது, தமையனாராவது இருக்கிற அரசர்கள் அதைச் செய்யக்கூடாதென்று சொல்லி அதற்கு ஸமானமாகிய வைஷ்ணவ யாகம் ஒன்றைச் செய்யும்படி சொல்ல, இந்த யாகம்தான் நடந்தது. இதற்குத் துர்யோதனன் பாண்டவர்களை அழைக்கத் தூதனை அனுப்புவித்திருந்தான். பாண்டவர்கள் தமது பிரதிக்கினையைக் காப்பாற்றுவதற்காக யாகத்திற்கு வரவில்லை. யாகம் நன்றாய் நடந்தது.
வினா 110.- இதன் பின்பு பாண்டவர்கள் எங்கு சென்றார்கள்? ஏன்?
விடை.- துவைத வனத்திலிருந்து பாண்டவர்கள் காம்யகவனத்திற்குப் போனார்கள். இதற்குக் காரணம் பின்வருமாறு: ஒரு நாள் தர்மபுத்திரர் தூங்கிக்கொண்டிருக்கையில் துவைத வனத்து மான்களில் சில அவரது ஸ்வப்னத்தில் வந்து தமது குடும்பம் குறுகிப்போய் விட்டதென்றும், அதற்காகத் தம்மை வேட்டையாடாது வேறு காட்டிற்குப் பாண்டவர்கள் சென்றால் நலம் என்றும் பிரார்த்தித்தன. தர்மபுத்திரர் எழுந்தவுடன் கூடிய சீக்கிரத்தில் காம்யகவனத்திற்குப் போகப் புறப்பட்டார்.
வினா 111- இங்கு யார் பாண்டவர்களைப் பார்க்க வந்து எந்த அரிய விஷயத்தைப்பற்றி எவ்வாறு பேசினார்கள்?
விடை.- இராஜ்யமிழந்து 11-வருஷ காலமாய் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் தர்மபுத்திரரைக் காம்யகவனத்தில் வியாஸர் பார்க்க வந்தார். வந்தவர் தர்மபுத்திரைத் தேற்றுவதற்காகச் சுத்த மனதோடு தானம் செய்தால் சிறந்த பதவி கிடைக்குமென்ற விஷயத்தில், முத்கலரிஷி உஞ்சவிருத்தியி லிருந்தபோதிலும் அதிதிகளை ஒழுங்காய் சுத்த மனதோடு பூஜித்து வந்தார் என்றும், அவரைத் துர்வாஸ மஹரிஷி அநேகம்தரம் திடீரேன்று அதிதியாக வந்து பரிசோதித்து அவரது சாந்த நிலையை வெளிப்படுத்தினார் என்றும், அவரை ஸ்வர்க்கம் அழைத்துப்போவதற்கு வந்த தேவதூதரிடமிருந்து ஸ்வர்க்க ஸுகங்கள், அங்கிருந்து புண்யம் குறைந்த காலத்தில் கீழேவிழுதல், ஆகிய ஸ்வர்க்கத்தின் நிஜஸ்வரூபத்தை, அறிந்து,அவர் அதை வேண்டாது மேலான மோக்ஷமாகிய பரமபதத்தை அடைந்தார் என்றும், கதையை விஸ்தாரமாக எடுத்துரைத்தார். அதன் பின்பு கூடிய சீக்கிரத்தில் இராஜ்யம் வந்து அவர்கள் ஸுகமடைவார்கள் என்று பாண்டவர்களைத் தேற்றிவிட்டு, வியாஸர் தமது இருப்பிடம் சென்றார்.
வினா 112.- இதன் பின்பு என்ன காரியமாக யார் பாண்டவர்களைப் பார்க்கவந்தது? ஏன்?
விடை.- தூர்வாஸ மஹரிஷி தமது சிஷ்யக் கூட்டங்களோடு, திரெளபதி சாப்பிட்டுவிட்டு அக்ஷயபாத்திரத்தைக் கவிழ்த்த பின்பு, போஜனார்த்தம் பாண்டவர்களிடம் வந்து சேர்ந்தார். இவர் ஒருநாள் துர்யோதனன் விட்டிற்குப் போக, அங்கு துர்யோதனனைப் படுத்தாத பாடெல்லாம் படுத்தினார். துர்யோதனன் பொறுமையோடு அவருக்கு மரியாதை செய்து வர அவர் திருப்தி யடைந்து, துர்யோதனனுக்கு வேண்டிய வரனைக் கொடுப்பதாகச் சொன்னார். துர்யோதனனுக்குப் பாண்டவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்ததால் முன் காட்டியபடி பாண்டவரிடம் அதிதியாகப் போகவேண்டும் என்று அவன் கேட்டுக்கொள்ள தூர்வாஸ மஹரிஷியும் அவ்வாறே செய்தார்.
வினா 113- பாண்டவர்கள் எவ்வாறு அந்த அகாலவேளையில் இவர்களுக்குப் போஜன மிட்டார்கள்?
விடை.- ரிஷியையும், சிஷ்யக் கூட்டங்களையும் கண்டதும் தர்மபுத்திரர் அவர்களை அருகிலிருந்த நதியில் நீராடி வரும்படி அனுப்பிவிட்டார். திரெளபதிக்கு இவர்களுக்குச் சோறிடும் வகை தோன்றவில்லை. அப்பொழுது கிருஷ்ணபரமாத்மாவாகிய பரம்பொருளைத் தியானித்தாள். உடனே அவர் வெகு பசியோடு வருவதுபோல் அங்குவந்து, தமக்குப் புஜிக்க அன்னம் வேண்டுமென்று திரெளபதியைக் கேட்டார். சோறுண்டாக்கும் வகையறியாத திரெளபதி மனங்கலங்கித் தான் இருக்கும் கஷ்டஸ்திதியைச் சொல்ல, பகவான் அக்ஷய பாத்திரத்தை உடனே கொண்டு வரச்சொல்லி அதில் ஒரு கீரையும், சோறும் ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அவைகளை எடுத்துக் கொஞ்சம் ஜலத்தோடு சேர்த்து 'ஸர்வாந்தர்யாமியாகிய கடவுள் திருப்தியடையட்டும்' என்று சொல்லிக் கொண்டு குடித்து விட்டார். உடனே ஆற்றில் நீராடி எழுந்திருக்கும் ரிஷியும், ரிஷி சிஷ்யர்களும், பூர்ண திருப்தியை அடைய, வயிறு நிரம்பி யிருந்ததால் நடந்து கரையேற முடியாது தத்தளித்தனர்.
வினா 114.- இந்த ரிஷி முதலியவர்களது கதி என்னமாயிற்று பாண்டவர்கள் பின்பு என்ன செய்தார்கள்?
விடை... இப்படித் திடீரென்று தமது வயிறு நிரம்பி இருப்பதைக் கண்ணுற்ற ரிஷிக்கு 'அநியாயமாய்த் தர்மபுத்திரரைப் போஜனம் சித்தம் செய்யும்படி சொல்லி வந்து விட்டோமே. இவர் நமக்காக எவ்வளவு நஷ்டத்தையடையப்போகிறார் என்று வருத்தமுற்று யோஜனை செய்தார். அதன் பின்பு தர்மபுத்திரர் கிருஷ்ண பக்தர் என்ற ஞாபகம்வர, மிகவும் பயந்து தமது சிஷ்யர்களோடு ஓடிப்போய்விட்டார். ஆகையால் கிருஷ்ண பகவானது வேண்டுகோளின்படி இவர்களை அழைக்க வந்த ஸகாதேவன், இவர்களை எங்குதேடியும் காணாது திரும்பி வந்து தர்மபுத்திரரிடம் ஸங்கதியைச் சொல்லிவிட்டான். பாண்டவர்கள் தூர்வாஸரால் கேடுவருமே என்ற பயம் நீங்கி ஸுகமாய் அங்கு வஸித்திருந்தார்கள்.