புதன், 10 நவம்பர், 2010

செவ்வாய், 9 நவம்பர், 2010

தேசிகப்ரபந்தம்

.

சடகோபரந்தாதி: முத்தமிழ்: சிறப்பு: பொது:

உபநிடதம் உணர்த்தும் சித்து அசித்து இறை என்னும் மூவகைத்தத்துவங்களை  விளக்கும் தமிழ் முத்தமிழ். அது சடகோபர் திருவாய்மொழி என்ற இச்சிறப்புப் பொருளை:- “தோன்றா உபநிடதப் பொருள் தோன்றலுற்றார் தமக்கும் சான்றாமிவை யென்றபோது மற்றென் பலகாலும் தம்மின் மூன்றாயினவும் நினைந்து ஆரணத்தின் மும்மைத் தமிழை ஈன்றான் குருகைப்பிரான் எம்பிரான்த னிசைக்கவியே1 என்று கவிச்சக்ரவர்த்தியாகிய கம்பநாட்டாழ்வார் சடகோபரந்தாதியில் விளக்கியுள்ளது காண்க. இவ்விருவர் பாடல்களும் ஒன்றினுக்கொன்று கைசெய்யும் சால்பை ஓர்ந்துணர்க. அதைச்சிறுது விளக்குவல்.

“தேற இயம்பினர்” “வெள்ளைப்பரிமுகர்” என்ற பாடல்களின் பொருள்:- “தேற இயம்பினர்” என்றும் “நான்மறையுள்ளக் கருத்தில் உரைத்துரைத்த முப்பத்திரண்டு இவை முத்தமிழ் சேர்ந்த மொழித்திருவே” என்றும் அருளியுள்ள இம்மஹாதேசிகர் பாடல்கள் “உணர்ந்துணர்ந்துணரிலும் இறைநிலை உணர்வரிது உயிர்காள்! உணர்ந்துணர்ந்து உரைத்துரைத்து அரியயனரனெனுமிவரை, உணர்ந்துணர்ந்து உரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே2 “திண்ணம் நாம் அறியச் சொன்னோம்”3 “வண்புகழ் நாரணன் திண்கழல்”4 “திண்ணம் நாரணமே”5 என்று அருளப்பெற்ற முத்தமிழாகிய சடகோபர் திருவாய்மொழியின் விளக்கமாதல் காண்க. “தேற இயம்பினர்” என்ற பாடலின் வசனநடை: “சித்தும் அசித்தும் இறையும் என வேறுபடும் வியன்தத்துவம் மூன்றும், வினை உடம்பில் கூறுபடும் கொடுமோகமும், தான் இறையாம் குறிப்பும், மாறநினைந்து, அருளால் மறைநூல் தந்த ஆதியரே தேற இயம்பினர்” என்றபடி. இதன் பொருள்: சித்து என்பது விகாரப்பாடு அற்ற உணர்வுடைய உயிர்ப்பொருள். அசித்து என்பது விகாரப்பாடு உடைய உணர்வற்ற சடப்பொருள். இறை என்பது சித்த சித்திரண்டையும் தனக்கு உடம்பெனக் கொண்டுள்ள “சாரீரன்”6 என்னும் பரம்பொருளாகிய இறைப்பொருள். இம்மூன்று பொருள்களும் அறவே வேறுபட்டுள்ள தனித்தனித் தத்துவமாய் இருக்கச் செய்தே உயிரும் உடலும் போல் ஒன்றிய ஒருமையில் ஒன்றென இராநின்ற அற்புதமான முத்தத்துவங்கள். இறைப்பொருளானது “உயிருமுடலும் உடலாக ஓங்கி”7 என்றபடி உயிர்ப்பொருள் அனைத்திலும் உள்ளுயிராய் உரைந்து பரந்திருக்கச் செய்தே உணர்தற்கு அரிதாய்க் கரந்து நின்று அவற்றை ஆட்டிவைக்கும் அற்புதமுடையது. அஃதே இறைப்பொருளின் பெருமாயம். இறைப்பொருள் உயிர்ப்பொருள்களை அவற்றின் வினைவயமாய் அதற்குத்தக அசிற்பொருளினுடைய விகாரப்பாட்டின் வேறுபாடுற்ற தூலவினையுடம்பில் கூறுபடப் பூட்டிக் கட்டுவித்து அக்கூட்டில் தானே உள்ளுயிராய் மறைந்து மறைந்து விளையாடும் தகவுடைது. “பேதிப்பன நீயவை பேர்கிலையால், வேதப் பொருளே விளையாதியோ”8 என்று வேதப்பரம்பொருளின் இவ்விளையாட்டைக் கம்பர் கூறினார். இதை இம்மஹாதேசிகர்“கண்புதையல் விளையாட்டு”9 என்றார். மேற்காட்டிய கீதைப் பாடலை10 இங்கும் நோக்குக. அக்கண் புதையல்விளையாட்டில் உயிர்ப்பொருள் மெய்யுணர்தற்கு ஏலாது கொடியமோகத்தில் அழுந்தித் தனது உடம்பையே “தான்” என்றும், இறைப்பொருளுக்குத் தான் உடம்பு என்றதை உணராது தானே. இறை என்றும் மருள்கின்றது. அம்மருளும் விபரீதஉணர்வும் அறவே மாற அப்பொருள்களின் உண்மையையும் தன்மையையும் உள்ளவாறு தெளிவுற விளங்கவைக்கும் பேரருளால் மறைநூல் என்னும் திருமந்திர நூலாகிய திருவாய்மொழி ஆயிரத்தை நினைந்து தந்த ஆதியராகிய சடகோபரே தேற இயம்பினர் என்றவாறு. இப்பாடலில், ஆதியரே அருளால் தேற இயம்பினர் என்ற சொற்களால் சடகோபர், ஆமுதல்வன் இவனென்று தற்றேறப் பெற்றவராய் அருள்மிகுந்து நினைந்து ஐய விபரீத உணர்வுகளை அறுத்து இறைநிலை தேறுமாறு இயம்பினர் என்றது கூறப்பெற்றது. இதனால் விளங்கிய உண்மை தத்துவமும்மை. அதைக் கீழே விளக்குவாம். ஆதியர் என்றதால் ஆதிகுலபதியாகிய சடகோபரைக் கூறினார். “குருகையில் வந்து கொழுப்படக்கிய குலபதி தந்த குறிப்பில் வைத்தனர்”11அணி குருகை நகர் முனிவர் நாவுக் கமைந்தன12 என்ற இவர் ப்ரயோகங்கள் காண்க. சடகோபர் கருத்தால் திருமால் ஆதி (இறை), தமது கருத்தால் சடகோபர் ஆதி (இறை), என்ற ஒருமை தோற்ற இம்மஹாதேசிகர் பாடியுள்ள அருங்குறிப்புக் காண்க. ஆதலால் ப்ரபந்த ஸாரத்தில் “திருமாறன் கருணை13 என்றார். திருமால் தன் கருணையும் திருமாறன் கருணையும் இம்மஹாதேசிகர்க்கு ஒன்றே என்றது தோற்றத் திருமாறன் கருணை என்றார். அருளாளர்களாகிய இருவரையும் ஒருவராமாறு சேரப்படித்துத் “திருமாறன் கருணை” என அரியதோர் சந்தியில் ஒருமை இசைத்தருளிய உபயவேதாந்த தேசிக வள்ளன்மையை ஓர்க. அக்கருணையை இப்பாடலில் “அருள்” என்றார். “வண்தமிழ் நூற்க நோற்றேன்”14 என்றபடி ஒப்பற்ற திவ்ய யோகத்தில் சடகோபர் நோக்குக்குத் திருவாய்மொழி ஆயிரத்தை “தோற்றங்களாயிரம்”15 என்று திருமால் இலக்காக்கிய சிறப்புப் பொருள் தோற்ற “நினைத்து மறைநூல் தந்த ஆதியர்” என்றார். இச்சிறப்புப் பொருளை பாதுகாஸஹஸ்ரத்தில் ஒரு சித்திரப்பாடலாக16 அமைத்துள்ள நறுமை காண்க. அது திரும்பா மெய்யெழுத்துச் சித்திரம். “அவநீறுஞ், சடகோபர், தலைமாணே, ழனளாயே”17 என்றது அதன் சித்திரத்தமிழ். அங்குக் கூறிய “குலபதி” “குருகை நகர்முனிவர்” இங்கு மறைநூல் தந்த ஆதியர் என்று ஓதப்பெற்றார். உபநிடதப் பொருளைத் தேற விளக்கும் திருமந்திர நூலே திருவாய்மொழி என்றது இதனால் சொல்லப்பட்டது. “ஆமுதல்வனிவனென்று தற்றேற்றி”18 என்ற திருவாய்மொழிப்பொருளை உட்கொண்டுள்ள சொற்றொடர் “தேறஇயம்பினர்” என்றது தேறுக. இதன் பொருள் கீழே விளக்கப்பெறும்.


1. சடகோபரந்தாதி 6; 2. திருவாய் 1.3.6; 3. ௸; 10.2.5; 4. ௸ 1.2.10; 5. ௸ 10.5.1; 6 ஸ்ரீபாஷ்யம் ஆநந்தமயாதிகரணம். 7 தேசிக அமிர்தரஞ்சனி 5; 8 இராமாவதாரம், உயுத்த, இரணியன்வதை. 110; 9 தேசிக அதிகாரஸங். 46;    10 கீதை, 18.61; 11 பரமதபங்கம், 2; 12 அதிகாரஸங். 51; 13 ப்ரபந்தஸாரம் 18; 14 திருவாய் 4.5.10; 15 ௸ 6.5.11; 16 பாதுகாஸஹஸ்ரம் சித்ர பத்ததி 920;
17. ௸ திருப்பாதுகமாலை  (தமிழ் செய்தது); 18 திருவாய் 7.9.3;