வினா 51.- இப்படிப் பரசுராமரைத் தரிசித்ததும் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்? பின் என்ன நடந்தது?
விடை.- அகஸ்திய தீர்த்தம் முதலிய தீர்த்தங்களுக்குப் போய் கடைசியாய்ப் ப்ரபாஸதீர்த்தம் வந்து சேர்ந்தார்கள். இங்கு கிருஷ்ண பகவான், பலராமர் முதலிய யாதவ குலத்தோர் யாவரும் பாண்டவரை ஸந்தித்து, அவர்களுக்கு வந்த துக்கங்களைத் தமக்கு வந்தவைகளாகப் பாராட்டி, உடனே துர்யோதனாதியரைக் கொல்லக் கிளம்பத் தர்மபுத்திரர் அவர்களை ஸமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பிவிட்டார்.
வினா 52.- ப்ரபாஸ தீர்த்தத்தை விட்டுப் பாண்டவர்கள் எங்கு சென்றார்கள்? அங்கிருந்த மஹத்வமென்ன?
விடை.- இதன் பின்பு பாண்டவர்கள் நர்மதா நதி தீரம் சென்றார்கள். இங்கு சியவனரிஷி அருகாமையிலுள்ள குளக்கரையில் தபஸு செய்யுங்கால் அவர் மேல் இவ்வாறு புற்று மூடியது என்பதையும், அங்கு வந்து சரியாதி ராஜன் தண்டிறங்க அவனது பெண்ணாகிய ஸுகந்யை விளையாடி வருங்கால் புற்றுள் இருந்த சியவனரது கண்ணை மின்மினி என்றெண்ணி ஒரு குச்சியால் குத்தியதையும், ரிஷியின் சாபத்தால் அரசனது பரிவாரங்க.ளெல்லாருக்கும் வயிறு ஊதியதையும், அரசன் தன் பெண் செய்த அபராதத்தைக் கண்டுபிடித்து ரிஷியின் வேண்டு கோளின்படி ஸுகந்யையை அவருக்குக் கொடுத்ததையும், இதன்பின்பு அசுவநீ தேவதைகள் வந்து இவளது கற்பை பரீக்ஷித்ததையும், கடைசியில் சியவனரும் அசுவநீ தேவதைகளும் அக்குளத்துள் முழுகி ஒரே மாதிரியான யெளவன புருஷராக எழுந்திருக்க, ஸுகந்யை தனது கற்பின் மஹத்வத்தால் சியவனரைக் கண்டு பிடித்ததையும், இந்த உபகாரத்திற்காக சியவனர் அசுவனிதேவதைகளுக்கு யாகங்களில் ஹவிர்ப்பாகமுண்டாக்க சரியாதி ராஜாவுக்கு ஒரு புதிய யாகம் செய்து வைத்ததையும், அதைத் தடுக்கவந்த இந்திரனது கையை அசையாதிருக்கும்படி செய்து அசுவனி தேவதைகளுக்குச் சியவனர் ஹவிர்ப்பாகம் கொடுத்ததையும், மதன் என்கிற ஒரு அஸுரனை சிருஷ்டித்து இந்திரனைக்கொல்ல யத்தனிக்க அவன் புதிய ஹவிர்ப்பாகத்தை ஒப்புக்கொண்டதையும், லோமசர் விஸ்தாரமாய்ச் சொன்னார்.
வினா 53.- பின்பு பாண்டவர்கள் எந்த மஹத்வமுடைய தீர்த்தத்திற்கு போனார்கள்?
விடை.- மாந்தாதா தானே யாகம் செய்த யமுனா நதிக்கரையை அடைந்தார்கள். மாந்தாதா, பிள்ளையை உண்டாக்கும் சக்தியை உடைய மந்திரித்த தீர்த்தத்தைத் தாக மிகுதியால் குடித்த யுவனாசுவ ராஜாவின் இடது விலாப்புற மிருந்து வெளிவந்து,இந்திரனது கட்டை விரலைச் சப்பிக்கொண்டு வளர்ந்தான் என்கிற கதையை இங்கு லோமசர் விஸ்தரித்தார். அவ்விடத்திலேயே ஸோமகர் 100 பிள்ளைகளை அடைவதற்காக, ரித்விஜர் என்ற அவரது புரோஹிதர் அரசனுக்கிருந்த ஜந்து என்ற பிள்ளையை ஹோமம் செய்யக் கடைசியில் அவர் நரகத்தில் கஷ்டப்பட்டார் என்றும், இதைக் கண்ட ஸோமகர் தமது புரோஹிதரோடு கஷ்டப்பட்டு கடைசியில் ஸ்வர்க்கமடைந்தார் என்றும் உள்ள கதையையும் லோமசர் சொன்னார்.
வினா 54.- இதன் பின்பு பாண்டவர்கள் எங்கே சென்றார்கள்? அந்தத் தீர்த்தத்தின் மஹத்வம் என்ன?
விடை.- யமுனா நதியில், உசீனரன் என்று பெயர் பெற்ற சிபிச்சக்கிரவர்த்தி விசேஷ யாகம் செய்த தீர்த்தத்திற்கு வந்தார்கள். இந்திரன் வல்லூறு ரூபமாய் புறா ரூபமான அக்கினியைத் துரத்திவர, புறா சிபியின் மடியில் வந்து விழுந்து சரணமடைந்த தென்றும், வல்லூறு வந்து தான் பசியாலிறப்பதாகவும் தனக்குப் புறாவே தகுந்த ஆகாரம் என்றும் சொல்லிக் கடைகியில் புறாவின் கனத்திற்கு ஸமானமான சிபியது மாம்ஸத்தால் தான் திருப்தி யடைவதாக வல்லூறு சொல்லியதென்றும், உடனே சிபி தனது மாம்ஸத்தை அறுத்துப்போடவே புறா கனமாகிக்கொண்டு வருவதைக் கண்டு, தானே தராசில் ஏறும் பொழுது இந்திரனும் அக்கினியும் தமது உருவத்தை வெளிப்படுத்தி சிபிக்கு வரமளித்தனர் என்றும் லோமசர் சொல்லி முடித்தார்.
வினா 55.- இதன் பின்பு பாண்டவர்கள் எந்தத் தீர்த்தம் சென்றார்கள்? அங்கு லோமசர் என்ன கதையைச் சொன்னார்?
விடை.- பாண்டவர்கள் ஹரிச்சந்திர தீர்த்தம் சென்றார்கள். அங்கு லோமசர், ஸத்யத்திற்காக ஹரிச்சந்திரன் பட்டபாட்டை விஸ்தாரமாக எடுத்துச் சொன்னார்.
வினா 56.- ஹரிச்சந்திரன் யார்? இவன் யாரை எவ்வாறு மணம் புரிந்துகொண்டான்? இவனுக்கு எத்தனை பிள்ளைகள்?
விடை.- இவன் ஸுூர்யவம்சத்தரசன். இவன் அயோத்திமா நகரில் அரசாண்டு வந்தான். கன்னபுரி யரசனது குமாரத்தி சந்திரமதியினது அழகைக் கேள்வியுற்று, இவன் அவளை மணம்புரிய வேண்டுமென்கிற விருப்பத்துடன் அவளது ஸ்வயம்வரத்துக்குப் புறப்பட்டான். அப்பொழுது, 'சிவபெருமானால் அவளுக்குக் கொடுக்கப்பட்ட இரகஸிய வஸ்துவை யார் பார்த்து அறிகிறார்களோ அவர் தான் சந்திரமதிக்கு ஏற்பட்ட புருஷனாவார்' என்ற விசேஷ ஸமாசாரத்தையும் அவன் கேள்விப்பட்டான். ஸ்வயம்வர மண்டபத்தில் அரசன் சந்திரமதியைக் கண்டதும் அவள் கழுத்தில் திருமாங்கல்யம் இருப்பதைக் கண்டு முன் கல்யாணமான பெண்ணை மறுபடியும் கல்யாணம் செய்துகொள்வது நியாயமல்லவே என்று ஹரிச் சந்திரன் வாய்விட்டுச் சொன்னான். அப்பொழுது சந்திரமதி தனது கழுத்திலிருந்த இரகஸியமான தாலி இவன் கண்ணில் பட்டதைக் கண்ணுற்று, இவனே நமக்குத் தகுந்த நாயகனெனத் தீர்மானித்து மணமாலையை ஆகாயத்தி லெறிய, அது ஹரிச்சந்திரன் கழுத்தில் வந்து விழுந்தது. பின்பு இவர்கள் விவாகம் வெகுகோலாஹலமாய் நடந்தேறியது. இவர்களுக்கு லோஹிதாஸன் என்ற ஒரு அருமைப்பிள்ளை உண்டானான்.
வினா 57.- இவ்வரசனை விசுவாமித்திர மஹரிஷி கஷ்டப்படுத்தக் காரணம் என்ன?
விடை.- இந்திர ஸபையில் வஸிஷ்டர், விசுவாமித்திரர் முதலிய மஹரிஷிகள் கூடி இருக்குங்கால் பூமியில் ஸத்யம் முதலிய நற்குணங்களில் சிறந்தவன் யார்?' என்கிற கேள்வி பிறந்தது. அப்பொழுது தனது சிஷ்யனான ஹரிச்சந்திரனே சிறந்தவன் என்றும், அவனுக்கு ஸமானமானவர் உலகில் வேறொருவர் இல்லை என்றும் வஸிஷ்டர் வெகுவாகப் புகழ்ந்து பேசினார். இதை ஸகியாத விசுவாமித்திரர், முன்னமே வஸிஷ்டரிடமிருந்த துவேஷத்தால், ஹரிச்சந்திரனை வெகுவாகப் பழித்துரைக்க இருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. முடிவில் வஸிஷ்டர் 'ஹரிச்சந்திரன் எந்தக் கஷ்டத்திலாவது ஒரு பொய் சொன்னால் நான் எனது பிராம்மண்யத்தை விட்டுப் பறையரது தர்மத்தை மேற்கொள்ளுகிறேன்' என்றும், விசுவாமித்திரர் அப்படி எந்த கஷ்ட திசையிலும் ஒரு பொய்கூடச் சொல்லாமல் ஹரிச்சந்திரன் இருந்தால் எனது தபஸில் பாதி அவனுக்குக் கொடுக்கிறேன் என்றும் இந்திரன் முன்பு கொடிய சபதம் செய்துகொண்டார்கள். உடனே ஹரிச்சந்திரனது உண்மை உரைக்கும் உறுதியைச் சோதிக்க விசுவாமித்திரர் பூமிக்குப் புறப்பட்டார்.
வினா 58.- முதலில் ஹரிச்சந்திரனைக் கஷ்டப்படுத்த விசுவாமித்திரர் எவ்வாறு தொடங்கினார்?
விடை.- முதலில் சில பிராம்மணர் மூலமாய் தனக்கு யாகத்திற்கு வேண்டிய பொருளுதவி செய்வதாக அரசனிடமிருந்து வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, பின்பு விசுவாமித்திரர் அரசனிடம் சென்று பொருள் வேண்டுமென்று சொல்லி அரசனால் கொடுக்க முடியாததாகிய ஏராளமான பொருள் கேட்க, அவன் அதைக்கொடுக்க யத்தனம் செய்தான். அப்பொழுது தமக்குவேண்டாம் என்று சொல்லிவிட்டு, ரிஷி போய் துஷ்டமிருகங்களை சிருஷ்டித்து இவன் இராஜ்யத்துப் பயிர்களை அழிக்கும்படி ஏவினார். இவ்வாறு அழிக்கவந்த கொடிய பிராணிகள் எல்லாவற்றையும் அரசன் வேட்டையாடிக்கொல்ல, ரிஷி ஒரு மாயப் பன்றியைச் சிருஷ்டித்து அனுப்பினார். அதையும் அரசன் வென்று ஒரு தடாகம் அமைந்த சோலையில்வந்து தண்டிறங்கினான்.
வினா 59.- இந்தப் பன்றியால் என்னவிபரீதம் அரசனுக்கு உண்டானது?
விடை.- இது சென்று ரிஷியினிடம் நடந்த செய்தியைச் சொல்ல, அவருக்கு அடங்காக் கோபமுண்டாயிற்று. அப்பொழுது அவரிடமிருந்து அழகுள்ள புலைச்சியர் இருவர் உண்டாக, ரிஷி அரசனைக் காமவலையில் சிக்கும்படி செய்து அவனைத் தம்மிடம் இழுத்துவரும்படி அவர்களை ஏவினார். இவர்கள் அரசனிடம் சென்று பாட அவன் "உங்களுக்கு வேண்டுவதென்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள் “உம்மைக்கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றனர்." அரசன் இதற்கு இசையாதது கண்டு, உடனே இவர்கள் அரசனைப்பழிக்க, அவன் கோபங்கொண்டு இவர்களை தனது வேலைக்காரர் மூலமாகத் துரத்தியடித்தான். இதைக்கேள்வியுற்ற கெளசிகருக்குக் கோபாவேசம் வர அரசனிடம் வந்து தமது பெண்களை வருத்தப்படுத்தியதற்காக அவன் தலையில் உதைத்தார். உடனே அரசன் மிகுந்த பொறுமையோடு "எனது இராஜ்யத்தைக் கேட்டாலும் கொடுப்பேன், இந்தத் தகாத காரியத்தை நான் செய்யமாட்டேன்” என, கெளசிகர் "கொடுத்துவிடு" என்றார். அரசன் கூசாது தனது இராஜ்யம் முழுவதையும் கொடுத்துவிட்டான்.
வினா 60.- இவ்வாறு இராஜ்ய மிழந்ததும் இவனுக்கு வேறு என்ன கஷ்டமுண்டா யிற்று? அதைத் தீர்ப்பதற்கு அரசன் என்ன ஏற்பாடு செய்தான்?
விடை... இப்படி அரசன் இராஜ்யம் முழுவதையும் கொடுத்து விட்டபின்பு, கெளசிகர் "நான் முன் கொடுத்து வைத்திருந்த பொருளை நீ இன்னும் எனக்குக் கொடுக்க வில்லை, அதை எனக்குக்கொடு” என்று கேட்டார். அப்பொழுது அரசன் தான் அவஸரத்தில் செய்த தப்பிதத்தைக்கண்டு, அந்தப்பொருளைக் காசிநகரம் சென்றதும் கொடுத்துவிடுவதாக வாக்களித்தான். அதை அவனிடம் இருந்து வாங்குவதற்காக கெளசிகர் நக்ஷத்திரீகன் என்ற கொடிய விடாமுண்டனை அரசனோடு காசிக்குப் போய் வரும்படி அனுப்பி, ஹரிச்சந்திரனைத் தன்னால் கூடியவரையில் கஷ்டப்படுத்தும்படி அவனுக்கு உத்தரவும் கொடுத்தார். சற்று நாழிகைக்கு முன் பரிவாரங்களோடு இருந்த அரசன் இப்பொழுது பாதசாரியாய் சந்திரமதி, லோஹிதாஸன், நக்ஷத்திரீகன் முதலியவர்களைக் கூட்டிக்கொண்டு ஒரு எளியவன் போல் காசி நோக்கிப் புறப்பட்டான்.
வினா 61.- காசிப்பட்டணம் போகும் வழியில் ஹரிச்சந்திரனுக்கு என்ன கஷ்டங்கள் உண்டாயின?
விடை.- கெளசிகர், போகும் வழியெல்லாம் முள்ளும் கல்லுமாயிருக்கும்படி செய்ய, நல்ல ஸ்திதியிலிருந்த அரசன் முதலியோர் மிகுந்த வருத்தமடைந்தார்கள். இதுபோதாதென்று வெயில் தாபம் அதிகரிக்கும்படியாகவும், வழியில் மரமே இல்லாதிருக்கும்படியாகவும் ஏற்பாடு செய்தார். இவ்வாறு இவர்கள் கஷ்டப்படு ங்கால் நக்ஷத்திரீகன் இவர்களை மிகக் கஷ்டப்படுத்தி, கடைசியில் தன்னால் நடக்க முடியவில்லை என்று அரசன் தோளில் ஏறிக் கொண்டான். அவன் தோளில் இருந்து படுத்தும்பாட்டைப் பொறுமையோடு ஸஹித்துக்கொண்டு அவனை அரசன் வெகுதூரம் தூக்கிக்கொண்டு சென்றான். இரவில் கெளசிகர் காட்டுத்தீ, புயல்காற்று துஷ்டமிருகம் முதலியவைகளால் அரசனை வருத்தி, அவன் அதிகக்கஷ்டப்படு ங்கால் எதிரே தோன்றி "நீ எனக்கு இப்பொருள் கொடுக்கவில்லை என்கிற ஒரு பொய் சொல்லி விடு. உனக்கு ஸகல துக்கங்களும் நீங்கிப்போம், இராஜ்யமும் திரும்பி வந்துவிடும்" என்றுசொல்லி அடிக்கடி ஆசை காட்டிப் பார்த்தார். இவைகள் ஒன்றிற்கும் ஹரிச்சந்திரன் இசையவில்லை. இவ்வளவு கஷ்டத்தையும் பொறுத்துக் கொண்டு. அரசன் காசிப்பட்டணம் வந்து சேர்ந்தான்.
வினா 62.- காசிப்பட்டணம் வந்ததும் அரசன் எவ்வாறு கெளசிகர் கடனைத் தீர்த்தான்? உடனே வேறு என்ன கஷ்டம் வந்தது?
விடை... காசிப்பட்டணம் சென்றதும் காலகண்டன் என்கிற கொடிய பிராம்மணனுக்குத் தனது சந்திரமதியையும், பிள்ளையையும் விற்று கெளசிகருக்குக் கொடுக்க வேண்டிய பொருளை நக்ஷத்திரீகனிடம் ஒப்புவித்தான். இதைப் பெற்றுக்கொண்டு, "நான் கஷ்டப்பட்டதற்குக் கூலி எங்கே" என்று நக்ஷத்திரீகன் கேட்டான்.
வினா 63.- இவ்வாறு இரக்கமின்றிக் கேட்ட நக்ஷத்திரகனை எவ்வாறு ஹரிச்சந்திரன் திருப்தி செய்வித்தான்?
விடை.- இந்த ஸங்கதியைக் கேட்டதும் அந்நகரத்தில் மயானம்காக்கும் வீரபாகு என்ற பறையனிடம் தான் அடிமைப்பட்டு நக்ஷத்திரீகனுக்கு வேண்டிய பொருளை வாங்கிக்கொடுத்து அவனைக் கெளசிகரிடம் அனுப்பி விட்டான். இதன் பின்பு மஹாராஜனான ஹரிச்சந்திரன் வீரபாகுவுக்காக அன்று முதல் இரவில் சுடலைக் காக்கத் தொடங்கினான்.
வினா 64.- காலகண்டனிடம் அடிமையான சந்திரமதியின் பாடு என்னமாயிற்று? இது கடைசியில் என்ன விபரீதமாய் முடிந்தது?
விடை.- காலகண்டனும், அவன் பெண்சாதியாகிய காலகண்டியும் ஈவு இரக்கமின்றி சந்திரமதியையும், அவள் பிள்ளையையும் கஷ்டப்படுத்தி வந்தார்கள். இப்படி இருக்கையில் ஒரு நாள் லோகிதாஸனைக் காலகண்டி சில பிள்ளைகளோடு ஸமித்துக் கொய்துவரும்படி அனுப்பினாள். அவன் சென்று காட்டில் ஸமித்து ஒடித்துக் கொண்டிருக்கையில் ஒரு கொடிய ஸர்ப்பம் தீண்டி இறந்தான். இந்த ஸ்ங்கதியைப் பிள்ளைகள் சந்திரமதியிடம் சொல்ல, அவள் தன் பிள்ளையைத் தேடிப்பார்க்கவேண்டுமென்று எவ்வளவோ நயமாய்க் கேட்டும் காலகண்டி அவளுக்குக் காட்டுக்குப்போக அனுமதி கொடுக்கவில்லை. இரவில் காலகண்டன், காலகண்டி இருவர்களும் நித்திரை செய்யப்போகையில் ஸகல வேலைகளையும் முடித்துவிட்டு அவர்களிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு சந்திரமதி பிள்ளையைக் காணப் பயமின்றி காட்டை நோக்கிப் புறப்பட்டாள்.
வினா 65.- சந்திரமதிபோய்ப் பிள்ளையை எவ்வாறு அடக்கம் செய்யப்பார்த்தாள்? அதற்கு என்ன தடை நேரிட்டது?
விடை.- பிள்ளைகள் சொன்னவிடத்தைக் குறிப்பாய் வைத்துக் கொண்டுபோய் அன்று நடு இராத்திரியில் சந்திரமதி பாம்பு கடித்து இறந்து கிடக்கும் தன் சிறுவனைக் கண்டு மனம் பதைத்து கொஞ்சகாலம் வாய்விட்டலறினாள். அதன் பின்பு வழியில் அகப்பட்ட சுள்ளிகளைப் பொறுக்கி எடுத்துக்கொண்டு சுடலை அடைந்து ஒரு சிதை உண்டாக்கித் தனது அருமைக் குழந்தையை அதில் வைத்து நெருப்பை மூட்டினாள். உடனே அங்குக் காவல்காத்திருந்த ஹரிச்சந்திரன் ஓடி வந்து எங்களுக்குச் சேரவேண்டிய பணமும், ஒரு முழத் துண்டும் எங்கே? அதைக் கொடுக்காது யார் இராத்திரியில் பிணம் எரிப்பது? என்று அதட்டிக்கொண்டு சிதையைக் கலைத்து குழந்தையின் தேகத்தை வெளியே இழுத்து எறிந்து விட்டான்.
வினா 66.- இந்தத் தடையை நிவர்த்திசெய்யச் சந்திரமதி என்ன ஏற்பாடு செய்தாள்? அதிலிருந்து என்ன விபரீதம் விளைந்தது?
விடை.- தான் மிகுந்த ஏழை என்றும், தன்னால் பணமும் ஆடையும் கொடுக்க முடியாதென்றும், தனக்கு இனாமாய்ப் பிணம்சுட அனுமதி யளிக்கவேண்டுமென்றும் சந்திரமதி சுடல்காப்போனை கெஞ்சிக் கேட்டுப்பார்த்தாள். அவன் இவள் கழுத்தில் விளங்கும், பரமசிவனால் அனுக்கிரகிக்கப்பட்ட தாலி இருப்பதைக் கண்டு, 'உன் கழுத்தில் பிரகாசிக்கும் தாலியை எனக்குக் கொடு, இந்தப் பணம் எனது எஜமானனைச் சேர்ந்தது, ஆகையால் நான் இதை அவசியமாய் வாங்கியே தீரவேண்டும்' என்றான். சந்திரமதி 'என் கழுத்துத் தாலி ஹரிச்சந்திரராஜனைத் தவிர வேறொருவரது கண்ணிலும் படமாட்டாதே. இப்பறையன் கண்ணில் ஏன் விழுந்ததென்று வாய்லிட்டலற அப்பொழுது தான் தன்னுடை குழந்தை இறந்தான் என்று அரசனுக்குத் தெரிய வந்தது. அவனும் வெகு நாழிகை துக்கித்துவிட்டு, சந்திரமதியைக் காலகண்டனிடமிருந்து பணத்தையும் ஒரு முழத்துண்டையும் வாங்கிவர அனுப்பிவிட்டு, தான் குழந்தையைக் காத்துக்கொண்டிருந்தான். வெகு பரபரப்போடு சந்திரமதி ஓடும்பொழுது திருடர்களால் கொல்லப்பட்ட காசிராஜன் குழந்தையை வழியில் கண்டு தன்குழந்தை என்று எண்ணி வழியிலேயே உட்கார்ந்து துக்கிக்கத் தொடங்கினாள். கொஞ்சநாழிகைக் கெல்லாம் குழந்தையைத் தேடிக்கொண்டு வந்த அரசன் ஸேவகர்கள், இங்கு வந்து இவள் தான் பிள்ளையைக் கொன்றவள் என்கிற பெரும்பழி சுமத்தி இவளை அரசனிடம் கொண்டுபோய் விட்டார்கள்.
வினா 67.- அரசன் என்ன தண்டனை இவளுக்கு விதித்தான்? யார் அந்தத் தண்டனையை நடத்தும்படி நேரிட்டது?
விடை... அரசனுக்கு இவளைப் பார்த்ததும் இந்தப்பெண் கொலையாளி யல்லவென்று தோன்றியபோதிலும், அடுத்திருந்தவர்களது துர்ப்போதனைகளால் இவளைக் கொல்லத்துணிந்து, இவளைக் கொல்லும்படி வீரபாகுவினிடம் ஒப்புவித்தான். அவன் இவளை ஹரிச்சந்திரனிடம் ஒப்புவிக்கக் கடைசியாய் ஹரிச்சந்திரனே தனது கபடமற்ற பெண்சாதியைக் கொல்லும்படி நேர்ந்தது.
வினா 68.- ஹரிச்சந்திரனுக்கு என்ன தடை உண்டாயிற்று? அவன் பின்பு என்ன செய்தான்? உடனே என்ன விசித்திரம் நடந்தது?
விடை.- தன் எஜமான் உத்தரவின்படி ஹரிச்சந்திரன் சந்திரமதியை வெட்டத் தொடங்குகையில் விசுவாமித்திரர் ஓடிவந்து “இத்தருணத்தில் ஒரு பொய் சொல்லிவிடு, உனக்கு ஸகல ஸுகமும் உண்டாகும்" என்று வேண்ட, அரசன் "என் அருமைப் பெண்சாதியை வெட்டினாலும் வெட்டுவேனே ஒழிய நான் ஒருநாளும் பொய்யுரைக்கமாட்டேன்" என்று மன உறுதியோடு தன் கத்தியை உயர்த்தி சந்திரமதி கழுத்தில் போட்டான். அது உடனே அவள்கழுத்தில் ஒரு பூமாலையாய் விழுந்தது. உடனே ஸகல தேவர்களும் பரமசிவனை முன்னிட்டுக் கொண்டு ஹரிச்சந்திரனுக்குத் தரிசனம் கொடுக்க அம்மயானம் கைலாஸமாகவே மாறியது. லோகிதாஸனும் காசிராஜன் பிள்ளையும் உயிருடன் எழுந்து வந்தார்கள்.
வினா 69.- இதன் பின்பு ஹரிச்சந்திரன் என்ன செய்தான்? அவன் ஸபையில் என்ன நடந்தது?
விடை... பரமசிவன் உத்திரவின்படி இந்திரனது ஸகாயத்தால் அவன் இராஜ்யத்தில் மறுபடியும் அரசாளத் தொடங்கினான். உடனே விசுவாமித்திரர் வந்து தன் சபதப்படி ஹரிச்சந்திரனுக்குத் தான் செய்த தவத்திற் பாதியை வெகு ஸந்தோஷத்தோடு தாரைவார்த்துக் கொடுத்தார். இதன் பின்பு அருகிலிருந்த வஸிஷ்டரிடம் சென்று தான் செய்த பிழையைப் பொறுக்கவேண்டும் என்று விநயத்துடன் கேட்டுக்கொண்டு விசுவாமித்திரர் தபோவனம் சென்றார்.