செவ்வாய், 23 மார்ச், 2010

திருப்புல்லாணி பங்குனி ப்ரும்மோத்ஸவம் 2ம் நாள்.

நேற்றைய பதிவிலே வருத்தப்பட்டதெல்லாம் உண்மை என்பது ஒருபுறம் இருந்தாலும், எங்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் ஏதேனும் நூதன ஆபரணங்கள், வாகனங்கள் என அடிக்கடி சமர்ப்பிக்கப் படுவதும் வாடிக்கையான விஷயம். இன்று கோவில் கைங்கர்யபரர் ஒருவரால் பல்லக்கு புது மேல்கட்டிகளுடன் புதுப் பொலிவு கண்டது. அதிலே இன்று காலை ஆனந்தமாக திருவீதிப் புறப்பாடு கண்டருளிய பெருமாள் 
ஆராவமுதே புல்லாணிக் கரசே எந்தை பெருமானே
நீரார் சடையா ரிரவொழித்த நிதியே! விதியே துதிக்கவளர்

காரார் முகிலே அடியேற்குக் கண்ணே! கண்ணின் மணியொளியே
தாரார் புயனே பழவடியார் தானே எனைவந் தாளாயே!
என்று பார்ப்பவரெல்லாம் மனம் கசிந்து உருகி நிற்கும் வண்ணம் மாலையிலே சாத்துமுறையில் கண்ணாடி அறையில் காட்சி அளித்து அதன் பின்னே 
மறமழுத்தரித்த வரனார் பிரமர் இருபாலும்
    வணங்கியே நிற்ப தொருபால்
வச்சிரதரனும் சுரரும் வருணனும் தொழுதுபதம்
    வணங்கியே வருவ தொருபால்
பொறிவழி மனஞ்செலா முனிவரர் பரவியே
   போற்றியே வருவ தொருபால்
பூலோக புவலோக சுவலோக முதலான
   புவனந் துதிப்ப தொருபால்
நெறிநின்ற வழிநின்ற பொரு ளென்று
   ததியோர்கள் நேசித்து வருவதொருபால்
நித்திய சூரியர்வந்து வைகுண்ட வாசனென
   நிருமித்து வருவ தொருபால்
திரிகரட மதயானை யான சமயங்களைத்
    தின்று தின்றுமிழும் வேக
சிங்க வாகனமீது புல்லாணிமீது வரு
   தெய்வச் சிலைக் கடவுளே!
என முன்னொரு காலத்தில் அனுபவித்த சிங்க வாகனத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார்.

ஆந்திர மகளிர் கோலாட்டம் இன்றும் உண்டா என்று யாரோ கேட்பது போல் இருக்கிறதே! இருந்தது. தேரடியில் வழக்கம்போல் ராஜ மரியாதை ஆனதும் ஆரம்பித்தார்கள். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கு எங்கள் பெருமாள் மீது எங்களுக்குள்ள அதீத அக்கறை தெரிந்தது. 74 சதுர் யுகம் கண்ட மிக வயதான ஒருவரை அதிக நேரம் சிரமப்படுத்தக் கூடாது, 10, 15 நிமிடங்களுக்குள்ளேயே அவரை புறப்பாட்டை முடித்து ஆஸ்தானம் சேர்த்து விட வேண்டும் என்ற எங்கள் கரிசனத்தைப் புரிந்து கொண்டு ஆரம்பித்த வேகத்திலேயே நிறுத்திக் கொண்டார்கள். புத்திசாலிகள்!

1 கருத்து:

  1. //சிங்க வாகனமீது புல்லாணிமீது வரு
    தெய்வச் சிலைக் கடவுளே!
    //

    சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு-வா? :)

    திருப்புல்லைணை இரவுச் சிம்மம் போல! :)
    திருமலையில் பகல் சிம்மம்!

    இரவு பகலா சீறிய சிங்கம் மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்படுகிறது போல! :)

    பதிலளிநீக்கு