செவ்வாய், 2 ஏப்ரல், 2013

ஸ்ரீஆண்டாள் திருமணம் 1

ஸ்ரீ ஆண்டாள் சகாயம்
1937ல்
ஆழ்வார்திருநகரி
திருமலைநல்லான்
ஸ்ரீஇராமகிருஷ்ணய்யங்கார்
இயற்றிய

மார்கழி நோன்புஅல்லதுஸ்ரீ ஆண்டாள் திருமணம்.
-----------------
இடம் : ஸ்ரீவில்லிப்புத்தூர், திருவாய்ப்பாடி, ஸ்ரீரங்கம்.

பாத்திரங்கள்

கண்ணன்  ---                                 தலைவன் – பின்  ரங்கராஜன்
கருடன், நற்செல்வன்    ---               நண்பர்கள்
விதூஷகன்
பெரியாழ்வார்  ----                          தலைவி தந்தை
ஆதிநாராயண கோபர்,              |     திருவாய்ப்பாடிக் கிழவர்கள்
அனந்த கோபர், கேசவ கோபர்  |
பாஜந்யன்    --- மழைத்தேவன்
திருவேங்கடாச்சாரியார், கிழவர்  --- ஸ்ரீவில்லிப்புத்தூர் கிழவர்கள்
வஸிஷ்டர், சுகர், வியாஸர், நாரதர் – திருவாய்ப்பாடிக்கு வந்த  
                                                              முனிவர்கள்

                         பெண்கள்
ஸ்ரீ ஆண்டாள்  ----                                  கதாநாயகி
அநுக்கிரகை, சுசீலை ---                         தோழிகள்
விரஜை     ----                                         தலைவியின் தாய்
நப்பின்னை   ---                                     கண்ணன் மனைவி
ரங்கநாயகி  ---                                       ரங்கராஜன் மனைவி
                               மற்றும் ஆய்ச்சியர்கள்


முதல் அங்கம்  --- முதற்களம்

நேரம் – மாலை            இடம் – சோலை

ஸ்ரீ ஆண்டாளும் அனுக்கிரகையும் வருகின்றனர்

ஆண்டாள்:--  சகி! இச்சோலையைப் பார்! என்ன நேர்த்தி! எத்துணை வனப்பு! அதிலும் மாலை நேரம். தங்கத்தை உருக்கியதுபோன்ற தன் செங்கிரணங்களை, ஏழைகள் குடிசைகளிலும், உத்யானத்திலும், பரிதி பரப்பிக் கொண்டிருக்கிறான். எங்கு பார்த்தாலும் தங்கக்கொடிகள், தங்கப்புஷ்பங்கள், தங்கப்பறவைகள். இவ்வுலகம் அழியக்கூடியதாதலால் வெறுக்கத்தக்கதென்று வேதாந்திகள் கூறுகின்றனரே, அது இயற்கைச் சுவை யறியாதார் வாதம் என்பதெனது அபிப்ராயம். தினந்தோறும் தங்கக் கதிரினைக் கதிரவன் இங்ஙனம் வீசவில்லையா? ப்ரளய காலத்திலும் இவைகளை யழிக்க மனமில்லாமல் ரஸிகக்கடவுள் தன் வயிற்றில் வைத்துக் காப்பாற்றுகிறான்.
அநுக்கிரகை:-  ஆம்! இயற்கையினில் எவர் மனந்தானீடுபடாது? இவ்விதமிருப்பது வழக்கந்தான் என்று அலக்ஷியம் செய்யும் மூடர்கள்தான் இதை வெறுக்கின்றனர். முற்றும் துறந்த முனிவர்கள்கூட இயற்கையினில் தம் திடமனதைக் கொள்ளை கொடுத்துவிடுகின்றனர்.  இஃது அவர்கள் இன்மொழியை ஆராய்ந்தால் நன்கு புலனாம். என்? நின் தந்தையும்கூட இயற்கையன்னைக்கே தங்கவி முழுதும் கப்பம் கட்டி விட்டனரன்றோ? இக்கொடியைப் பார். இக்கொள் கொம்பை எவ்வளவு இறுகத் தழுவுகிறது. இதில் வைத்த நாட்டத்தைத் திருப்ப யாரால் முடியும்?
ஆண்டாள்:- (ஆச்சரியத்தோற்றத்துடன் அதைப் பார்த்தவண்ணம்) சகி! நெடுநாள் பிரிந்த மணாளனை யணையும் பெண்மணி போன்று, இக்கொடி கொம்பைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அம்மடந்தையரின் மந்தஹாஸத்தை மலர்ந்த மலர்கள் பரிஹஸிக்கின்றன. மலர்களில் ததும்பும் தேனைப் பருகும் வண்டினங்கள் இனிது முரல்கின்றன. தென்றலுக்கசையும் அசைவு அதைத்தலையசைத்துப் புகழ்வதையொக்கும்.  இக்கொம்பை விட்டுப் பிரிந்தால்  “பிரியிற்றரியேன்” என்னும்  உத்தம நாயகிகள்போல இக்கொடி என்ன பாடுபடும்? பிரியேன் என்ற பெருமையால் அன்றோ இது அந்தமில் பேரின்பத்தை யநுபவிக்கிறது! உயரிய தம்பதிகளின் காதலின் மேம்பாட்டை யிக்கொடி நன்கு விளக்கிக் காட்டுகிறது.
அநுக்கிரகை:—(புன்னகையுடன்) நீ கூறுவது முற்றிலும் பொருந்தும். ஆனால் உன்னுடைய வார்த்தை நீ யிதைக்கண்டு பொறாமைப்படுவதை விளக்குகின்றது.
ஆண்டாள்:--  இல்லை சகி! நான் பொறாமைப்படவில்லை. உண்மையிலேயே இவ்வுலகினில் காதலுக்கிணை கிடைக்கவே கிடைக்காது. அதனால்தான் கவியரசர்கள்  அதனையே கையாளுகின்றனர். உலகிற் சிறந்தவையெல்லாம் கவிவாணர்களதின் மொழிகட்கிடமாவதியல்பேயன்றோ? ஸ்வாமியான பரமாத்மாவிடம் தாஸர்களான ஜீவாத்மாக்கள் செலுத்தும் பக்திக்குக் காதல்தான் தகுந்த திருஷ்டாந்தம். “ஞானிக்கு நான் பிரியன் எனக்கவன் பிரியன்” என்றான் கீதாரியன்.  இக்காதலின் உண்மையை யறிந்தே முற்றும் துறந்த முனிவர்களும் மறு ஜன்மம் கோபிகைகளாகப் பிறந்து கண்ணனை யநுபவித்தனர்.  முனிவரினும் பன்மடங்கு ஞானாதிகரான “பராங்குசர்” முதலிய நம் பெரியோரும் மறுபிறவி வரையிலுங்கூடத் தாங்க இயலாமல் அதே பிறவியில் ஆணாயிருந்தும் உண்மைப் பெண்டிர் நிலைமை எய்தி பரமாத்மாவிடம் காதல்கொண்டு உருகி நைந்தனர் எனின் காதலின் மேம்பாட்டை யான் இயம்பவும் வேண்டுமா?
அநுக்கிரகை:—ஆணாயிருந்தும் பெண்மையுற்ற பெரியோரினும் நீ பெரியை. ஏனெனில் உண்மையிற் பெண்மகளாகவே தோன்றிய நின் காதல் அவர்களுடைய காதலிலும் சீரியதா மன்றோ?
ஆண்டாள்:--  (சிறிது கோபத்துடன் தலை குனிந்து) நான் காதல் கொண்டேனா? யாரிடம்? இஃதென்ன விந்தை? நானறியாமல் என் காதலை நீ தெரிந்துகொண்டு விட்டனை போலும். இனியிதுபோன்ற அடுக்காத சொற்களை விடுக்காதே.
அநுக்கிரகை:--  ஏன் மறைக்கின்றனை? நீ நின் காதலனைக் காணாமற் படும்பாடுகளையெல்லாம் நான் நன்கறிவேன். நின் முகம் வெளுத்திருக்கிறது, ஒளி மழுங்கவில்லை. இதன் காரணம் விரஹத்தைத் தவிர வேறு ஏதாகவிருக்க முடியும்? நோயில்லாமல் உன் உடம்பு இளைக்கக் காரணம் யாது? நீ அடிக்கடி பெருமூச்சு விடுகின்றனையே, எதற்காக?  நீ ஏன் இப்பூஞ்சோலைக்கு அடிக்கடி வர விரும்புவதில்லை? குயிலோசையிலும் தென்றற்காற்றிலுமுள்ள பயந்தானே? அழகிய மணவாளனைப்பற்றிப் பேசும்போதெல்லாம் நின் மேனியிற் றோன்றும் மயிர்க்கூச்சலை யான் பன்முறை கண்டிருக்கிறேன். எனவே நின் மனதைக் கவர்ந்த கள்வன் அவனேயென நான் நன்கு அறிவேன். மேலும் இலக்குமன்போல் பிள்ளைப் பருவத்திலேயே பெருமாளிடம் பற்றுக்கொண்ட நீ அவன் திவ்ய வைபவங்களைப் பாடினால்மட்டுமே உறங்குவாயென்று உன் தந்தைகூற நாம் கேள்விப்படவில்லையா?  பாலியத்திலேயே இவ்விதமாயின் இப்பொழுது  --- அதாவது இந்த யௌவன தசையில் அவனிடம் பற்றுக் கொள்ளவில்லை என்பது ஏற்கற்பாலதாமோ?
ஆண்டாள்:—(தலைகுனிந்து)  சகி! நீ யென்னை இவ்வாறு பரிஹஸிக்கவோ இங்கு வந்தனை? பரிஹஸிக்கும் ஆற்றான் இல்லாத பழியைச் சுமத்துவதில் நீ கொஞ்சமும் அஞ்சுவதில்லை. நான் மறுத்திடிலோ ஒன்றுக்குப் பத்து வார்த்தை! அம்மா! போதும், நிறுத்திக் கொள்.
அநுக்கிரகை:- (புன்னகையுடன்) நீ யென்ன கூறினாலும் உண்மையை மறைக்க முடியுமோ? பிரிவாற்றாமை முற்றியபின்னர் நீயே வலியக் கூற வேண்டியிருக்கும். அப்பொழுது பார்த்துக் கொள்கிறேன். (சிறிது தூரம் சென்று பூக்கொய்கிறாள்)
ஆண்டாள்:—(தனக்குள்) சகியை நான் சினந்து கூறிவிட்டேன். வேறு வார்த்தையாடி என் சகியின் உள்ளமுவக்கச் செய்கிறேன். (வெளியில்) சகி! இச்சோலைக்கு ஈடு இவ்வுலகினிலேயே இல்லையென்கின்றனரே! இது உண்மைதானா? உன்னபிப்பிராயம் என்ன?
அநுக்கிரகை:—இச்சோலையைவிடப் பன்மடங்கு வனப்பு வாய்ந்த மற்றுமோர் சோலை யிருக்கிறது.
ஆண்டாள்:—அஃதெங்கேயுளது? அதை நான் காண அவாவுறுகிறேன்.
அநுக்கிரகை:--  அச்சோலை வெகு தூரத்திலில்லை. ஆழ்ந்த நாவியெனும் வாவியுடன் கூடியதும், மூன்று மடிப்புகளாகிய படிக்கட்டுக்களுடையதும், தோள்களென்னும் கொடிகளுடன் கூடியதும், கண்களென்னும் வண்டினங்களுடையதுமான நினது வடிவமே அச்சோலை. நின் வடிவச் சோலைக்கும், இச்சோலைக்கும் நெடுவாசியுண்டு என்பதெனதபிப்பிராயம்.
ஆண்டாள்:--  பரிஹஸிப்பது உன் பிறவிக்குணம் போலும்!
அநுக்கிரகை:— சகி! இங்கே என் பக்கம் வா. மணமலிமலர்களிங்கு மிகுந்திருக்கின்றன. பொற்கொடியாளான வுன்னையிக் கொடி, தன் வண்டொலியால் அழைக்கின்றது.
ஆண்டாள்:--  இங்கில்லாவிடிலன்றோ அங்கே வரவேண்டும்!
அநுக்கிரகை:--  ஆமா சகி! வரவேண்டாம். வந்தால் வண்டினங்கள் இம்மலர்களைவிட்டு நின் முகமலரின்கண் வீழ்ந்து “அதரமது”வைப் பருகி விடும். தேவர்கட்கெல்லாம் கடல் கடைந்தமுதமெடுத்தீந்த வள்ளலுக்கெனச் சேமித்துவைத்திருக்கும் மதுவைக் கேவலம் வண்டினங்கள் பருகக் கொடுப்பது நியாயமாகுமா?
ஆண்டாள்:--  சகி! உனக்கென்னாற் பதிற்கூற வியலாது. (என்று வேறோர் இடம் சென்று) சகியின் சாமர்த்தியந்தானென்ன! எவ்வளவு புத்திக்கூர்மையும் ஊஹமும் அவளுக்கு! என் விரஹ வேதனையை அவள் எவ்வாறோ அறிந்துகொண்டனளே? நான் எவ்வளவு மறைத்தாலுமவள் ஒப்பவில்லை.  இன்னாரிடம் காதல் கொண்டேனென்னும் உண்மையைத் துணிந்து பணிக்கின்றனள். ஆஹா! காமத்தீ யுள்புகுந்து கதுவக், கங்குல் யாமங்களில் தென்றலுக்கிங்கிலக்காய் நான் படும்பாடு மறைத்தற்குரியதோ? மெல்லமெல்ல  மலயாநிலம் வந்து வீசவே என் விரஹாநலம் விரைந்து பொங்கி யெழுகிறது. காற்றுக்கும் நெருப்புக்கும் ஸ்நேகமுண்டு என்று உலகினிற் கூறுகின்றனர். இவ்வுண்மையை என்போன்ற விரஹிதான் முதன்முதலில் உணர்ந்திருக்க வேண்டும். இவ்வனம் “வசித்தற்கினிய சோலை” எனும் மாற்றம்வெறும் ஏமாற்றமாகவே முடிந்தது. இதைக் காமதேவன் தன் கூரிய கணைகள் வைக்கும் படைச்சாலையாகவே யான் கருதுகின்றேன். ஆஹா! காமதேவனின் மஹிமை அளவிடற்கரிது. கடவுளாலுமவன் கட்டளையைக் கடக்க முடியாது. காமதேவா! என்னைக் கலக்க வேண்டாம். தொழுது முப்போதுமுன்னடி வணங்கித் தூமலர் தூவி யேத்துகின்றேன். பாற்கடல் வண்ணனென் கண்ணனுக்கே பணிசெய்து வாழவருள் புரிவாய். அம்மாயனுக்கன்றி மானிடவர்க்கென்று பேச்சுப்படில் யான் வாழகில்லேன் கண்டாய் . இது நிச்சயம். கேசவ நம்பியைக் கால்பிடிப்பாளென்னு மிப்பேறே எனக்கருளவேண்டும். அந்தோ! காமன் கழலடி வணங்கியு மென்னையேன் அவன் படைகள் அடர்க்கின்றன.  இதோ இக்குயிலின் கோலாஹலம் ஆலாஹலத்திலும் கொடிதாயுளது. ஏ குயிலே! என்று மிக்காவிலிருந்து என்னைத் ததர்த்தாதே. யான் என்புருகி நெடுங்கண்களிமை பொருந்தாமல் பலநாளாகத் துன்பக் கடலில் புக்குழல்கிறேன். அன்புடையாரைப் பிரிவதாலுண்டாகும் நோயை நீயும் அறிகின்றிலையோ? நற்பொழில்வாழ் நற்குயிலே! அக்கார்வண்ணக் கண்ணன் வரக் கூவ வேண்டும். இன்றேல் என் பொன்வளைகளைக் கொண்டு தருதல் வேண்டும். இரண்டித்திலொன்றைத் திண்ணமாய் நீ செய்தாக வேண்டும். இன்றேல் இப்பூங்காவில் வாழவொட்டாது நான் விரட்டுவேன். பூவிதழ்கள் மெல்லியனவன்றுஉண்மையில் அவை கத்தி முனையிலும் கூரியனவே. சந்தனம் என் தனத்திற்குச் செந்தணல்தான். பகலிலுள்ள வேதனையைவிட இரவு என்னை மிகவும் துன்புறுத்துகிறது. ஓர் கங்குல் ஆயிரமூழிகளே. அதிலும் சுக்கிலபக்ஷமாகில் கேட்கவேண்டியதில்லை. என்கதி அதோகதிதான். திங்கள் ஊடறுத்தென்னை நலியும் முறை மிகப் பெரிது. அமாவாஸையில் மறைந்த மதி மறுபடியும் ஏன் உதிக்கிறான்? பாபிகள் இவ்வுலகை எளிதில் விடுவதில்லை. ஆஹா! உலகில் தீயோர் வேஷம் வெகு விசித்திரமானது. சந்திரன் எவ்வளவு கொடியவன்! அவன் குளிர்ந்தவனாகக் கொண்டாடப் படுகிறான். இவன் கொடுமையை இவ்வுலகறிவதில்லை. நஞ்சரவமும் இவன் வெப்பந் தாங்கமாட்டாமலன்றோ இவனையுமிழ்ந்து விடுகிறது. இக்கொடியோன் தன் கிரணங்களாற் பனி என்னும் புனைபெயர் பூண்ட நெருப்புத் தணல்களை வாரிக்கொட்டுகிறான். இதை யாரால் பொறுக்க முடியும்? எல்லாமறிந்தவக்கள்வன் என் நிலைமையை மட்டும் உணர்கிலனோ? பாற்கடல் பள்ளிகொள்வானைப் புணர்வதற் காசையினால் கொங்கை கிளர்ந்து குமைந்து குதூகலித்து என்னாவியை ஆகுலம் செய்யவும், அவனிதை உணராதவன்போல் பஞ்சினும் மெல்லிய வரவணையில் திருமகளுடன் கூடிக் களிக்கின்றனனே. இது நியாயமாகுமா? தீமை செய்யும் சிரீதரா! நான் தினந்தோறும் உனக்கு மலர்மாலை சூட்டிப் பரிவுடன் தருகின்றேனே. நீ மட்டுமேன் என் கூந்தலில் மலர் சூட்டக் கூடாது? இன்றாவது வந்தெனதாசையை நிறைவேற்றித் தரவேண்டும். இன்றவன் வருவானாவென்று கூடலிழைத்துப் பார்ப்போம் (கீழே அமர்ந்து கூடலிழைக்கிறாள்)
பூமகன்புகழ் வானவர் போற்றுதற்
காமகன் அணிவாணுதல் தேவகி
மாமகன்மிகு சீர்வசுதேவர்தம்
கோமகன்வரில் கூடிடுகூடலே.
(இதற்குள் அநுக்கிரகை வந்துவிடுகிறாள்)
ஆண்டாள்:--  (சடக்கெனவெழுந்து) சகி! எவ்வளவு நேரம்! நான் போதுமான பூக்கொய்துவிட்டு நின் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கிறேனே!
அநுக்கிரகை:-  என் வரவை எதிர்பார்க்கத் தனியிடம் வேண்டுமா? நீ யெதிர்பார்க்கு மக்கார்க்கடல்வண்ணனைத் திண்ணமாய் நீயென் உதவியின்றி நண்ணமுடியாது. பிராணசகிக்குக்கூட மறைக்கும் ரஹஸியம் ஒன்றுண்டு போலும்.
ஆண்டாள்:—கோபக்குறியோடு பார்க்கிறாள்.
அநுக்கிரகை:--  சகி! தனியே பூக்கொய்யாமல் ஏதோ நினைந்து உருகியதால் இங்ஙனம் உன்னை நான் கூறினேன். இதற்கேன் கோபம்? (கையைப் பிடித்துக் கொள்ளுகிறாள்)
இருவரும் செல்லுகின்றனர்.
முதல் அங்கம் முதற்களம் முற்றிற்று.     

திங்கள், 1 ஏப்ரல், 2013

Saranagati deepikai tele-upanyasam dated 01-04-2013

भोग्यं मुकुन्द गुणभेदमचेतनेषु

भोक्तृत्वमात्मनि निवेश्य निजेच्छयैव।

पाञ्चालिका शुक विभूषण भोगदायी

सम्राडिवात्मसमया सह मोदसे त्वम् ||  11

போ⁴க்³யம் முகுந்த³ கு³ணபே⁴த³மசேதநேஷு

போ⁴க்த்ருத்வமாத்மநி நிவேஶ்ய நிஜேச்ச²யைவ|

பாஞ்சாலிகா ஶுக விபூ⁴ஷண போ⁴க³தா³யீ

ஸம்ராடி³வாத்மஸமயா ஸஹ மோத³ஸே த்வம் ||  11

is today’s slokam discussed in the tele-upanyasam by Natteri Sri Rajagopalacharyar on “Saranagati deepikai”

The upanyasam may be downloaded from

http://www.mediafire.com/?yi38nxbd5q2p6mx

For direct listening,