புதன், 5 மே, 2010

மேல்கோட்டை வைரமுடி ஸேவை

திரு TES வரதன் ஸ்வாமி யாஹு குழுவில் இட்ட "மேல்கோட்டை வைரமுடி ஸேவை" இங்கே அந்தக் குழுக்களில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்காக. ஸ்ரீ வரதன் ஸ்வாமிக்கு அடியேனது நன்றிகள். வாழ்வில் முதல் முறையாக இந்த பாக்யத்தைப் பெற உதவியதற்காக!

ஞாயிறு, 2 மே, 2010

திருப்புல்லாணி உத்ஸவங்கள்

எட்டாம் நாள் இராமன் வேட்டைக்குப் போனதோடு நீரும் காட்டிற்குப் போய்விட்டீரா என்று சில பேர் தனி மெயில் அனுப்பியுள்ளார்கள். இல்லை திருமங்கை ஆழ்வார் பிடிபடவில்லையா என வேறு சில கேள்விகள். சித்திரைத் திருநாளை முன்னிட்டு எங்கள் ஆண்டவன் ஆச்ரமத்தில் நடந்து கொண்டிருந்த ததீயாராதன கைங்கர்யங்களில் முழு கவனமும் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம். தவிர இரண்டு நாட்களாக யூட்யுபுக்கு என்னவாயிற்று என்று தெரிய வில்லை. Finishing upload என்று சொல்லிக் கொண்டு மணிக் கணக்கில் பொறுமையைச் சோதித்து ஒரு வழியாக இன்று தான் பதிய முடிந்தது.
 எட்டாம் திருநாள் மாலையில் வேட்டைக்குப் போன இராமன் பின் இரவில் குதிரை வாகனம் ஏறி திருவீதிப் புறப்பாட்டில் திருமங்கை ஆழ்வாரைத் திருத்திப் பணி கொண்டு அதன்பின் தேர் கடாக்ஷம் செய்து ஆஸ்தானம் எழுந்தருளினார். மறுநாள் அதிகாலையில் தேரில் சீதை, லக்ஷ்மணருடன் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் இரதோத்ஸவம் கண்டருளினார். மறுநாள்  பெருமாள் சிறிய திருவடியாம் அனும வாகனத்தில் துணை வர ஸ்ரீ ஆதி ஸேதுவுக்கு பெரிய திருவடி (கருட) வாகனத்தில் அமர்ந்து அங்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியைக் கடாக்ஷித்து பின் பெருமாள், சக்கரத்தாழ்வாரோடு ஏக சிம்மாசனத்தில் விசேஷ திருமஞ்சனம் கண்டருளி இரவில் இருவருமாக கோவில் வந்து, உள்ளே விட மறுத்த சீதையை நம்மாழ்வார் துணையுடன் சமாதானம் செய்து ஆஸ்தானம் அடைந்து அதன்பின் (சந்திரப் பிரபை என்று பத்திரிகையில் மட்டும் காணும்) சப்பரத்தில் திருவீதி வலம் வந்து உத்ஸவம் நிறைவடையச் செய்தார்.
  காலை 10 மணிக்கு வடம் பிடித்து இழுக்கும் வரை பங்குனி போலவே மந்தாரமாகவே இருந்தது. ஆனால் வடம் பிடித்தவுடன், "ஆஹா! இராமன் நம் இரவி குலத் தோன்றலாயிற்றே! அவன் தேரேறி வீதி வரும் அழகை நான் காண வேண்டாமோ?" என்று நினைத்தானோ என்னமோ, அந்த "இரவி"யும் பிரகாசமாய் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டான். பங்குனித் தேர் போலில்லாமல், ஒவ்வொரு வீதி முக்கிலும் தேர் சரியாகத் திரும்பாமல் போராடிப் போராடி மக்கள் நிலை கொண்டு வந்து சேர்க்க மூன்று மணி நேரம் ஆயிற்று. இந்த முறை இளைஞர்கள் கூட்டம் அதிகம். அதனால் தகிக்கும் வெயில், அருவியாய்ப் பொங்கிய வேர்வை, காலோடு நெருப்பாய் ஒட்டிக் கொள்ளும் தார் ரோடு எதையும் பொருட்படுத்தாமல் உற்சாக ஆரவாரங்களோடு தேரை நிலைக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். அவர்கள் எதிர்பார்க்கின்ற பெருமாள் தீர்த்தம் கிடைத்ததை மிக்க சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு மனது நிறைய சந்தோஷத்துடன் திரும்பினர்.
 ஏன் இப்படி இராமன் மட்டும் இப்படி சோதனை செய்கிறான்? அவனோ காருண்ய மூர்த்தியாயிற்றே! அதுவும் இந்த திருப்புல்லாணி சேதுக்கரையில்தானே "கருங்கடல் நோக்கி கருணைஅம்கடல் " சயனித்ததாகக் கம்பன் சொன்னானே! பிறகு ஏன் கருணை இல்லாமல், பெருமாளைப் போல் வேகமாய் நிலை வந்து சேராமல் மக்களை இப்படித் தவிக்க விடுகிறான்? என்று ஒரு கேள்வி அடிக்கடி எனக்குள் எழும். பெருமாளுக்கு உள்ள இரக்கம் இராமனுக்கு ஏன் இல்லை என்ற ஐயம் வரும். தேரன்று ஒரு பெரியவரிடம் இப்படித்தான் வருடா வருடம் எங்கள் இராமன் படுத்துவார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். "நீர் நினைப்பது பெரும் பிசகு. இருவருமே கருணையால்தான் இப்படிச் செய்கிறார்கள்" என்றார் அவர். வழக்கம்போல் விழித்தேன். வதைப்பது கருணையா? பெரியவர் என்ன சொல்கிறார்? 'புரியல்லியா" -- பெரியவர். உதட்டை நான் பிதுக்குவதைப் பார்த்து அவரே தொடர்ந்தார். "இராமன் ஏன் இப்படிப் பண்ணுகிறார்? அவர் யாருடன் நட்பு பூண்டார்? ஒரு படகோட்டி, ஒரு பறவை, ஒரு வானரக் கூட்டம், ஒரு இராக்ஷஸ வம்சத்தவன் என்றுதானே பட்டியல் நீள்கிறது? அவனுக்கு யாராவது மன்னர்கள், சக்கரவர்த்திகள் சகவாசம் இருந்திருக்கிறதோ?  எங்காவது அவன் சரிதத்திலே மற்ற மன்னர்களைப் போல் அவன் உல்லாசமாக இருந்திருக்கிறானோ? சின்ன வயதிலேயே விசுவாமித்திரரோடு காட்டுக்குப் போய்க் கஷ்டப் பட்டானே தவிர, கண்ணனைப் போல் என்றாவது குறும்புகள் செய்து மகிழ்ந்திருந்தானோ? இல்லயே! ஆக அவனுக்குப் பாமர மக்கள் என்றால் கொள்ளை ஆசை! கிராமத்து மக்கள் கொள்ளை ஆசையோடு வடம் பிடிக்க வந்திருக்கிறார்கள். அவர்களைக் கண் குளிரக் கடாக்ஷிக்க வருடம் ஒரு நாள்தான் வாய்ப்புக் கிடைக்கிறது. தவிர, கிராமத்து ஜனங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் வந்து விட முடியாது. முன்னே பின்னேதான் வர முடியும். பின்னால் வருபவர்கள் தங்களுக்கு வடம் பிடித்து இழுக்கும் பாக்யம் இல்லாமல் போய்விட்டதே என்று ஏமாந்து மனம் நோகக் கூடாது  என்ற கருணையால் தான் இப்படி சற்று நேரம் எடுத்துக் கொள்கிறான்" என்றார். அவர் கூறுவதும் சரிதான் என்று தோன்றுகிறது.

     தேரன்று நிகழ்வுகள் ஒரு சிறிய வீடியோவாக இங்கே !



    தீர்த்தவாரிக் காட்சிகள் இங்கே!