வியாழன், 24 மே, 2012

வைத்தமாநிதி 33

ருக்மிணி கல்யாணம்

    இன்துணை பதுமத்து அலர்மகள் உருப்பிணி நங்கை, அவ்வூர்த் துவரைத் திருநாமம் கற்றதன் பின்னையே, சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும், தேவபிரானையே அவரைப் பிராயம் தொடங்கி, தூராத மனக்காதல் கொண்டு, கரங்கள் கூப்பித் தொழும், அத்திசை உற்றுநோக்கியே இருந்து நாள்தொறும் அரவிந்தலோசன என்று என்றே நைந்து இரங்கும்; துன்பக் கடல்புக்கு வைகுந்தன் என்பது ஓர் தோணி பெறாது உழன்று, பெருமையும் நாணும் தவிர்த்து, வடமொழி மறைவாணரை, தன் தூதாய், தாமரைக்கண் பெருமானார்க்கு வாயில் தூது மொழிந்து, “வைதிகரே! தொண்டீர் வம்மின்! தொழுது இரந்தேன்! முன்னம் அவரிடம் நீர் செல்வீர்கள்! மறவேல்மினோ” என் கனிவாய்ப் பெருமாளைக் கண்டு, பாதம் கைதொழுது, பணியீர்; உடலம் நைந்து ஒருத்தி உருகும் என்று உணர்த்துமினே! பிரானார் புனைந்துழாய் மலர்க்கே மாலாகி மெலியும் என்னைச் சொல்லி இசைமின்கள்

                                                            ……….தொடரும்….

(எதிர்பாராத வேலைப் பளுவின் காரணமாக, ஒரே தடவையாக இந்த ருக்மிணி கல்யாணத்தை இங்கு இடமுடியவில்லை. தொடர்பவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.) .   

செவ்வாய், 22 மே, 2012

வைத்தமாநிதி 32

குரு தக்ஷிணை கொடுத்ததும்
முதுதுவரைக் குலபதி ஆனதும்

            ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும், முந்து நூலும் முன் ஈந்த அந்தணாளன் ஒருவன், “காதல் என் மகன் புகலிடம் காணேன். கண்டு நீ தருவாய்” என்று கோதுஇல் வாய்மையினான் வேண்ட; குற்றம் இன்றிக் குணம் பெருக்கி குருக்களுக்கு அனுகூலராய், மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய் மாண்டானை; ஓதுவித்த தக்கணையா அஞ்ஞான்று உருவுருவே கொடுத்து; குறை முடித்தான் கோவலர் குரிசில்.

         வட மாமதுரை நாட்டில் தலைப்பழி எய்தி நன்மை இழந்து தலையிடாதே சமரில் தோற்றுச் சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் பொங்கு முந்நீர்க்கடல் சூழ், நித்திலங்கள் பவ்வத்திரை உலவு துவராபதி சென்றான்; அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம்தொழ, இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப, ஒரு நாயகமாய் உலகு ஆண்டான் ஆயர்தம் பெருமான்.

[ நாளை “ருக்மணி கல்யாணம்” மிக விரிவாக]

திங்கள், 21 மே, 2012

Guru Paramparai Vaibhavam (21-5-2012)

Sri Natteri Rajagopalachariar swamy's tele-upanyasam on 21-5-2012 is on Srimad Chinnandavan To enjoy the upanyasam, download from this MediaFire link

Those interested in online listening may visit

 

ஞாயிறு, 20 மே, 2012

வைத்தமாநிதி 31

மதுரை வந்து கஞ்சனுக்கு அருள் பாலித்தல்

     “தீயபுந்திக் கஞ்சன், கடியன் கறவு எட்டு நாளில், என் கைவலத்து ஆதும் இல்லை” என்று ஆயர் கலங்க; இடர் நீக்குவான் எண்ணி, அவுணர்க்கு என்றும் இரக்கம் இலாத ஆயர் கொழுந்து, இசைஏழ், ஆறு அங்கம், ஐந்துவளர் வேள்வி, நால் மறைகள்,மூன்று தீயும், சிந்தனை செய் தூய நான்மறையாளரை, வஞ்சம் செய்யும் தீங்கு நினைத்த கஞ்சன் கருத்தைப் பிழைப்பித்து, அவன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமால், வில் ஆர் விழவில் வேலைக்கடல்போல் நெடுவீதி விண்தோய் சுதை வெண்மணி மாடத்து, ஆலைப்புகையால் அழல் கதிரை மறைக்கும் வடமதுரை விரும்பிச் சென்று செம்பொற் கழலடி செல்வன் பலதேவன் உடன்தொடர, தேரோடும் போய், வழியில் பொய்ம்மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன், மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை அடைந்து, சந்தி செய்ய நின்றான், குடைந்து நீராட. ஆங்கே ஐந்து பைந்தலைஆடு சுடர்வாய் அரவு அணைமேவிப் பாற்கடல் யோக நித்திரைசெய், துயில்கொண்ட மாயனார், திரு நன்மார்வும், மரகத உருவும் தோளும் தூய தாமரைக் கண்களும், துவர் இதழ் பவள வாயும், ஆயசீர் முடியும் தேசும் கண்டு, கண்கள் பனிஅரும்பு உதிர, “இருந்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக்கீழ் என்று அருத்தித்து எனைத்து ஓர் பலநாள் அழைத்தேற்கு என் கருத்து உற வீற்றிருந்தான் கண்டுகொண்டே! பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறகொண்டிட்டு நீ வாசமலர்த் தண்துழாய் மாயவனே அருளாய்” என்ன தாளும் கையும் கூப்பிப் பணிந்து நிறைபுகழ் ஏத்தியும் ஆடியும் பாடியும் நின்றான். நினைந்து நைந்து உள்கரைந்து வணங்கினான்.

        பின் தெளிந்து, வளஏழும் தவளமாட மதுரை மாநகரம் அடைந்து, வீதியூடே குனித்து ஆயரோடு ஆலித்து வருகின்ற ஆயப்பிள்ளை அழகு கண்டு, காவி மலர் நெடுங்கண்ணியர் கைதொழ, வாள்நெடுங்கண்ணியர் காமுற்று அயர்க்க கைவளை கழல நின்றனர். வரைச்சந்தனக் குழம்பும், வான்கலனும் பட்டும் விரைப்பொலிந்த வெண்மல்லிகையும் நிரைத்துக்கொண்டு ஏகும் கூன் மங்கையைத் தடுத்து, தெருவின் நடுவே வந்திட்டு “நாறிய சாந்தம் நமக்கு இறை நல்கு” என்னத் தேறி அவளும் திருவுடம்பிற் பூச, ஊறிய கூனினை உள்ளே ஒடுங்க ஏற உருவ, அணங்கும் “என்றும் இவனை ஒப்பாரைக் கண்டறியேன்! சோராத காதல் பெருஞ்சுழிப்பால் யான் இரந்தேன், மையல் செய்து என்னை மனம் கவர்ந்தானே! வெகுளாது மனக்கொள் ஆண்டாய்!” என்ன, கார்மலி மேனி நிறத்துக் கண்ணனும் அவள் மூத்தார் கொங்கை மேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புணர்ந்தான், காளமேகத் திரு உருவன் கண்ணன் . வில்பெருவிழவில் வில்லும் வீழச் செற்று, வஞ்சம்செய் கஞ்சனுக்கு நஞ்சாய், அரங்கில் புக, புகுவாய் நின்ற போதகம், கஞ்சன் விட்ட வெம்சினத்த, வார்கடா அருவி ஒரு மாயப்போர் ஆனை தூம்புஉடைக்கை வேழம் வெருவ மாமலையின் மருப்பு இணைக்குவடு இறுத்து உருட்டி கவளமால் யானை, பனைத்தாள் மதகளிறு கொன்று, ஊர்கொள் திண்பாகன் அஞ்சிக் கலங்க உயிர் செகுத்து, கஞ்சன் ஏவிற்றுச் செய்வான் என்று, வலியம் என நினைந்து எதிர்ந்து வந்த ஆயம் அறிந்து பொருவான், இருமலை போல் எதிர்ந்த மல்லர் இருவரை, வலிமுடி இடியவாங்கி, வலியப் பொன்ஆழிக் கையால் புடைத்து, சாந்துஅணி தோள் சதுரனாய்ச் சாலத்தகர்த்து, அந்தரம் இன்றி அழித்து, ஆழ்பரண்மேல் போர்கடா அரசர் புறக்கிட, பின் கதவி மாடமீமிசை, விரும்பா கல்ஆர் திரள்தோள் கதம் சிறந்த கஞ்சனை குஞ்சி பிடித்து அடித்து, உதைத்து, , மாளப்புரட்டி, அண்டர்கள் முன்கண்டு மகிழ்வு எய்த, அடியார் குடிகுடி ஆகநின்று ஆயர் குணங்களே பிதற்றி நின்று ஏத்த, கஞ்சனைக் காய்ந்து தன் பெற்றோர் கோத்தவன் தளைகோள் விடுத்து, அவன் தந்தை காலில் பெருவிலங்கு தாள்அவீழ அரசு அளித்தான், அந்தம் இல்புகழ் மாயன், ஓதம்போல் கிளர் வேத நீரன்.