13ம் கண்டம் மாதவின் மடியில் சிசுவை விட மந்த்ரம்
1. மாதே குமாரம் :- உன் பிள்ளைக்கு ரக்ஷஸ், பிசாசங்கள் (பாலாரிஷ்டம்) போன்ற தொந்திரவுகள் ஏற்படாமலிருக்கட்டும். கன்றை நினைத்து ஓடிவரும் பசு போன்றவற்றாலும் எந்தக் கெடுதியும் உண்டாகாதிருக்கட்டும். உனக்கு அபிவ்ருத்தி உண்டாகட்டும். புத்ர ரூபமான தனத்தில் விருப்பமுள்ளவளாய் இரு.
வல மார்பில் தாய்ப்பால் அருந்தக்கொடுக்க மந்த்ரம்: தாய்ப்பால் அருந்தும் உபாயத்தால் இவன் நீண்ட ஆயுளைப்பெறட்டும். ஏ ஸ்தனமே! இக்குழந்தைக்கு ஆயுள், வர்சஸ், யசஸ், பலங்களை அபிவ்ருத்தி செய். (உரிய காலத்தில் இந்தக் கர்மாவைச் செய்யாவிடில் இந்த பாக்யங்களை இழக்க நேரிடுகிறது).
சிசுவை பூமியில் விட்டு பூமியை ஸ்பர்சிக்கச் செய்யும் இரு மந்திரங்கள்:
1. சந்திரனிடத்தில் காணப்படும் கறை அல்லது களங்கமானது பூமியின் நிழலே ஆகும். பூமியின் இதயம் ஆகாயத்தில் உள்ள சந்திரனிடத்தில் இருக்கிறது. அதை நான் பார்க்கிறேன். இவனுக்காக நான் கண்ணீர்விடும் சூழல் வரக்கூடாது. (நாங்கள் இருவரும் வெகுகாலம் இருக்கவேண்டும் என்று ப்ரார்த்திக்கப்படுகிறது).
2. யத்பூமே: :- நல்ல எல்லையை உடைய ஓ பூமிதேவியே! உன் திருவுள்ளம் ப்ரஜைகளைக் காத்து ரக்ஷிக்கும் சந்திரனிடத்தில் இருப்பதை நான் அறிவேன். இப்போது பூமியாகிய உன்னைத் தொடுவதால், நான் வெகுகாலம் சந்திர தரிசனம் செய்யும் பாக்யத்தைப் பெறவேண்டும். உன் க்ருபையினால் எனக்கு புத்ர சோகம் ஏற்படாமலிருக்கட்டும்.
யத்தே ஸுஸீமே :- கீழ் மந்திரத்தால் குழந்தையை பூமியில் படுக்கவைக்கவேண்டும். பூமியின் எந்தப் பகுதியைத் தொட்டு இம் மந்திரத்தைச் சொல்கிறோமோ, அவ்விடத்தில் கிடத்தப்படும் இவனுக்கு நோய், சோகம் (அழுகை) உண்டாகாதிருக்கட்டும். (நாமயதி)
குழந்தையின் தலைக்கருகில் தீர்த்த கும்பத்தை வைக்க மந்த்ரம்:
ஓ தீர்த்த தேவதைகளே! நாங்கள் தூங்கும்போது நீங்கள் விழித்திருங்கள். இங்கு வரும் ரக்ஷஸ், பிசாசங்களை விரட்டி விடுங்கள். ஆபஸ்ஸுப்தேஷு.
குழந்தையை பீடிக்கும் தொல்லைகள் நீங்க 8 மந்திரங்களைக் கொண்ட பலிகரண ஹோமம்
தவிடு, வெண் கடுகு, அரிசி மாவுக் கலவையினால் குழந்தையின் தந்தை ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் மும்மூன்று முறை ஹோமம் செய்யவேண்டும். பாக்கி உள்ள கலவையினால் குழந்தையின் அறையில் மற்ற ஒவ்வொருவரும் ப்ரவேசிக்கும்போதும், பிறந்தது முதல் 10ம் நாள் வரை, மந்திரமில்லாமல் அக்னியில் சேர்க்கவேண்டும் என்று ப்ரயோகம்.
(தற்காலத்தில் மருத்துவ மனையில் குழந்தையைப் பார்க்கச் செல்பவர்களை, நன்கு கை அலம்பி, ஒரு ரசாயனக் கலவையை கையில் பூசிக்கொண்டுதான் குழந்தையைத் தொடவேண்டும் என்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. மேற்படி ஹோமத்திலிருந்து வரும் புகை கையை மட்டுமின்றி மற்ற அங்கங்கள், உடைகளில் உள்ள க்ருமிகளையும் நசிக்கச் செய்யும் என்பதும் குறிப்பிடத் தக்கது.)
1. அயம் கலிம் :- ஓ மருத் தேவதைகளே! வெறிபிடித்த நாயைப் போல் கலியென்ற ஒரு பூதம் இந்தக் குழந்தையை நோக்கி ஓடிவருகிறது. தலை வேதனையாகக் கத்தும் மாட்டைத் துரத்துவது போல இதைத் துரத்துங்கள். (ஸ்வாஹா என்பதால் இதை உமக்கு ஹோமம் செய்கிறேன் என்று பொருள்).
2. சண்டேரத: :- சண்டேரதன், சண்டிகேரன், உரலை ஆயுதமாக உடைய உலூகலன், கர்ப்பச் சிதைவை உண்டுபண்ணும் (கர்பத்தை உறிஞ்சும்) ச்யவனன் ஆகிய இந்த நான்கு அஸுரர்களும் நசித்துப்போகட்டும். (சண்டன் என்ற அசுரனுக்கு மேற்பட்டவன் சண்டேரதன், சண்டனின் சேனாதிபதி சண்டிகேரன் என்று வேறொரு புத்தகத்தில் குறிப்பு காணப்படுகிறது).
3. அய:சண்ட: :- இரும்பு முகம் உள்ளவன், சண்டன், மர்க்கன், உபவீரன், உலூகலன், ச்யவனன் ஆகிய ஆறு அசுரர்களும் நசித்துப் போகட்டும்.
4. கேசிநீ: :- விஹாரமான மயிர் நிறைந்தவர்களும், நாயின் ரோமம் போன்ற மயிர் உள்ளவர்களும், நொண்டிகளும், ஆடு போன்ற வடிவம் உள்ளமுள்ளவர்களான பிசாச ஸ்த்ரீகளே நீங்கள் அழிந்து போய்விடுங்கள்.
5. மிச்ரவாஸஸ: :- குபேரன் அசுர ராக்ஷஸர்களுக்கு யஜமானன். அவனால் அனுப்பப்பட்டு வரும் ராக்ஷஸர்கள் தங்ள் பார்யையுடன் கூடியவர்களாய் மக்கள் வஸிக்கும் பகுதிகளுக்கு வந்து உபநயனம் ஆகாதவர்களை உண்ண விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட துர்தேவதைகள் அழியட்டும்.
6. ஏதாந் :- மலையின் சிகரம் போல் நீண்ட பற்கள் உள்ளவர்களும், தலை விரித்தவர்களும், தொங்குகின்ற முலைகளை உடையவர்களுமான பைசாசங்கள் பாலர்களை துன்புறுத்த வருவதை நானறிவேன். தேவதைகளில் ப்ராஹ்மணர்களான அக்நி, இந்த்ரன், ப்ருஹஸ்பதி ஆகிய தேவதைகளே நீங்கள் அந்த பைசாசங்களை ‘பிடி, கொல்" என்று அச்சுறுத்தி விரட்டியடிப்பீர்களாக.
14ம் கண்டம்
7. நக்தஞ்சாரிண: :- ராத்ரியில் உலவுகிறவர்களும் ப்ரகாசமான மார்பை உடையவர்களும், சூலாயுதத்தைத் தரித்தவர்களும், மண்டை ஓட்டை உபயோகித்து நீர் அருந்துகிறவர்களுமான பிசாசங்களுக்கு பிதாவான கர்ணகன் என்ற பிசாசமானது, (தன் பரிவாரங்களிடம்) இங்கு வந்து இந்தக் குழந்தையை கொன்று தின்னுங்கள் என கூச்சலிட்டுக்கொண்டு முன்வருகிறது. இவற்றின் தாய் பிசாசு ஊரிலுள்ள நோய்வசப்பட்டுள்ள, நலிவுற்றுள்ள குழந்தையை உண்ண விரும்பி தொடர்ந்து வருகிறது. ஓ அக்னி தேவனே நீர் அவைகளை நாசம் செய்வீராக.
8. நிசீதசாரிணீ :- மேற்படி பிசாசங்களின் ஸஹோதரியும் நள்ளிரவில் உலவுபவளுமான பிசாசி கதவுகளில் உள்ள துவாரங்களின் வழியாக உள்ளிருப்பவர்களைப் பார்க்கிறாள். எந்த பிசாசமானது தூங்குகிற குழந்தை, குழந்தையைப் பெற்றவளை துன்புறுத்துவதிலேயே குறியாக இருக்கின்றதோ, அந்தப்பிசாசத்தின் ஹ்ருயம், யக்ருத், க்லோமானம், கண்கள் போன்ற அங்கங்களை தஹிக்கச் செய்து அழிக்கவேண்டும் என்று கரியசெம்மலான அக்நி தேவன் ப்ரார்த்திக்கப்படுகிறான்.
மேற்படி நல்ல கருத்துள்ள மந்த்ரங்களைக் கூறி செய்ய விதிக்கப்பட்ட இந்த ஜாதகர்மா எனும் ஸம்ஸ்காரத்தை குறிப்பிட்ட காலத்தில் செய்வதால் எல்லாவித தோஷங்கள், உபாதைகள், நோய்கள் போன்றவற்றிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் இதை விடுத்து சிலர் குழந்தைக்கு நோய் வந்தால் அரசமரத்தடி முநிக்குப் பொங்கல் வைத்தல், அம்மன் கோயிலைச் சுற்றுதல் போன்ற க்ஷூத்ர தேவதைகளை உபாஸிக்கிறார்கள்.
பெற்றோர் வெளியூருக்குப் போய்வந்தாலும் முன்னர் சொல்லப்பட்ட உச்சி முகர்தல், அபிமந்த்ரணம் ஆகிய மந்த்ரங்களைச் சொல்லவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வலது காதில் மந்த்ர ஜபம் போன்றவை ஒவ்வொரு குமாரனுக்கும் செய்ய வேண்டும்.
குமாரனின் காதில் சொல்லவேண்டிய மந்திரங்கள் ஐந்து.
1. அக்நிராயுஷ்மாந் :- அக்நி தீர்காயுள் உடையவன். அவன் நீண்ட ஆயுளுக்கு அக்நியில் இரையாகும் மரங்கள் காரணம்.
2. ஸோமன் எனும் சந்திரன் மருந்துகளான ஓஷதிகளால் நீண்ட ஆயுளைப் பெறுகிறான்.
3. யஜ்ஞம் - யாகம் இவை தகுந்த தக்ஷிணை கொடுத்து நடத்தும் தனவான்களால் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
4. வேதம் தன்னை அத்யயனம் செய்துவரும் ப்ராஹ்மணர்களால் இன்றும் அழியாமல் காக்கப்பட்டு வருகிறது.
5. தேவர்கள் தேவாம்ருதம் அருந்துவதால் அமரர்களாய் மரணமற்று விளங்குகிறார்கள்.
கல்யாணமாகாத சிறுவயது கன்னிப் பெண்களையும் தகப்பனார் வெளியூர் சென்று வந்தால் தந்தை அபிமந்த்ரணம் செய்யவேண்டும். ஆனால் உச்சி முகர்தல், காதில் மந்திரம் ஓதுதல் இவற்றைச் செய்யத் தேவையில்லை.
ஸர்வஸ்மாத் :- (ஓ பெண்ணே! நீ) என் எல்லாவிதமான அங்கத்திலிருந்து உண்டானவள் ஆகிறாய். நீ நூறு வருடங்கள் வரை ஜீவித்திருப்பாயாக. குமாரன், குமாரததிக்கு ஒவ்வொரு ப்ரயாண முடிவிலும் இம் மந்திர ப்ரயோகத்தைச் செய்யவேண்டும் என்று சிலர் அபிப்ராயப் படுகிறார்கள்.
நாமகரண ப்ரகரணம்
ப்ரஸவித்த 11ம் நாள் மாதா பிதாக்கள் சிசுவுக்குப் பெயரிடவேண்டும். ஆண் குழந்தைக்கு பெயரிலுள்ள எழுத்துக்கள் இரட்டைப் படையாகவும், பெண் குழந்தைக்கு எழுத்துக்கள் ஒற்றைப்படையாகவும் அமையவேண்டும். நாரதர் போன்ற ரிஷிகளின் பெயரையோ, முன்னோர்களின் பெயரையோ வைக்கவேண்டும். பெயரிட்டுக் கூப்பிடும்பொழுதெல்லாம் முழுப் பெயரையும் சொல்லி அழைக்க வேண்டுமே தவிர, கொச்சையாக அரைகுறையாகக் கூப்பிடக்கூடாது. இதை முன்னிட்டாவது பகவானின் திருநாமத்தை உச்சரிக்கும் ப்ராப்தம் உண்டாகவேண்டும். மரண தருவாயில் அஜாமிளன் தன் நாராயணன் என்று பெயரிடப்பட்ட தன் பிள்ளையை அழைத்ததால் நற்கதி அடைந்த கதையை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும். அப்படியன்றி வாஸுதேவனை வாசு என்றும், நாராயணனை நாணு, என்றும் நரஸிம்மனை நச்சு என்றும், க்ருஷ்ணனை கிச்சு என்றும், சீனிவாஸனை சீனு - சீமாச்சு என்றும் கூறி அழைப்பது பிழையாகும். பெயரின் முடிவில் ‘சர்மா" என்னும் பதத்தையும் சேர்த்துச் சொல்லவேண்டும். க்ஷத்ரியர்கள் வர்மா என்றும, மற்றவர்கள் தாஸன் என்றும் சேர்த்துக்கொள்ளவேண்டும். சுபாசுப கர்மாக்களில் சர்மா என்று சொல்லியே கர்மாவைச் செய்கிறோம். மற்றபடி ஐயர், ஐயங்கார், சாஸ்த்ரீ(சாஸ்த்ரம் அறிந்தவர்), தீக்ஷிதர் (யாகம் செய்தவர்), ஐயர் (ஆர்ய-பூஜ்யர்) என்ற பொருள் தோன்றும் லௌகீக பதங்களை உபயோகிக்கக் கூடாது. ஒவ்வொருவருக்கும் குறைந்தது இரு பெயர்கள் இருக்கும். அவற்றில் அபிவாதனத்தின்போது சொல்லப்படுவதே சரியானதாகும் மற்றொன்று செல்லப் பெயராக இருக்கும். சில ஆண்களுடைய பெயர்கள் ஒத்தைப்படையில் இருந்தால் அதன் முன்பாக ஸ்ரீ என்பதைச் சேர்த்து அதை இரட்டைப்படை ஆக்கலாம். மற்றபடி ஸ்ரீ சேர்க்க அவசியமில்லை. நடைமுறையில் பெரியோர்களின் பெயரைக் குறிப்பிடும்போது மரியாதைக்காக ஸ்ரீதேசிகன் ஸ்வாமி, ஸ்ரீசங்கராச்சார்ய ஸ்வாமி என்பதுபோல பெயருக்கு முன்னால் ஸ்ரீ சேர்த்துச் சொல்லவேண்டும்.
நாமகரணத்தை பெண் குழந்தைக்கு மந்திரமின்றிச் செய்யும்படி மனு ஸ்ம்ருதியில் விதி உள்ளது. சிஷ்டாசாரத்திலும் அதுவே கடைபிடிக்கப்படுகிறது. (ஆபஸ்தம்ப ஸூத்ரப்படி ஆண்களுக்கு நாமகரணம் பண்ணவும் எந்த ஹோமமும் இல்லை).
அன்ன ப்ராசன ப்ரஹரணம்
குழந்தைக்கு அன்னம் ஊட்டுவது என்பதே அன்னப்ராசனம் என்ற பதத்திற்கு அர்த்தமாகும். குழந்தை பிறந்த தினத்திலிருந்து 150 நாட்களுக்குப் பிறகும், 180 நாட்களுக்கு முன்பாகவும் இந்த கர்மாவைச் செய்யவேண்டும் என்பது விதி. அவைதிகர்கள் இதனை உபநயன காலத்தில் செய்கின்றனர். அவர்களால் மந்த்ர ரீதியாக கிடைக்கப்பெறும் ஜல தேவதை, ஓஷதி தேவதைகளின் அநுக்ரஹமும் அதனால் உண்டாகும் ஆரோக்யமும் எதிர்பார்க்க இயலாது.
இந்த கர்மாவுக்கு அங்கமாக ப்ராஹ்மண போஜனம் செய்து வைத்து, அவர்களின் ஆசீர்வாதம் பெற்று, ஸ்வர்ண பாத்திரத்தில் தயிர், நெய், தேன் இவைகளை அன்னத்துடன் கலந்து உரிய நான்கு மந்தரங்களைச் சொல்லி பிறகு ஒரு முறை அன்னத்தை ஊட்ட வேண்டும்.
அன்னப்ராசன மந்த்ரார்த்தம்
பூரபாம் த்வா :- பூ: - புவ: - ஸுவ: இந்த வ்யாஹ்ருதிகளைச் சொல்லி அஸெள என்ற இடத்தில் குழந்தையின் நாமகரணத்தில் வைக்கப்பட்ட சர்மாவை ஸம்போதனமாக (விளிவேற்றுமையுடன் - ஹே ராமா - க்ருஷ்ணா - கோவிந்தா என்று கூப்பிடுவதுபோல்) கூறவேண்டும்.
இந்த அந்நத்தால் தீர்த்தங்கள், ஓஷதிகளுடைய ஸாராம்சத்தைச் சாப்பிடச் செய்கிறேன். அந்த ஜலமும் ஓஷதிகளும் உனக்கு எல்லா நலன்களையும், தேஹ ஆரோக்யத்தையும் கொடுக்கட்டும். ஒவ்வொரு வ்யாஹ்ருதிக்கும் ஒரு முறை இந்த மந்த்ரத்தைக் கூறவேண்டும்.
அன்னப்ராசனம் ஆனவுடன் குழந்தையின் எதிரில் புத்தகம், பொம்மை, ஆயுதம் என வெவ்வேறு தொழிலுக்கு அடையாளமாக ஒவ்வொரு பொருள் என வைக்கவேண்டும். குழந்தை முதலில் எந்தப் பொருளைத் தொடுகிறதோ, அந்தப்பொருளுக்குரிய தொழிலையே அது பின்னாளில் மேற்கொள்ளும் என மார்கண்டேயர் கூறுகிறார்.
சௌள ப்ரகரணம்
குடுமி எனும் சிகை வைக்கும் ஸம்ஸ்காரத்திற்கு சௌளம் என்று பெயர். இது விதிவத்தாய் - விதிப்படி வைக்கப்பட்டிருந்தால்தான் சூடாகரணம் என்று சொல்லத் தகுந்ததாகும். இதை 1, 3, 5ம் வயதிலாவது அவச்யம் செய்துவிடவேண்டும். நெற்றிக்கு மேல் ஒரு விரல்கடை (நான்கு விரல் அகலம்) வரை உள்ள ரோமங்களை வட்டமாக எடுத்துவிடவேண்டும். சிகையை யஜ்ஞோபவீதத்திற்கு சமமாக பாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை பிறகு வேறுவிதமாக மாற்றி அமைக்கவோ, எடுத்துவிடவோ சாஸ்த்ரம் அனுமதிப்பதில்லை. அத்வைதிகள் ஸந்யாஸம் மேற்கொள்ளும்போது பூணலை எடுக்கும்போது சிகையையும் எடுத்து மொட்டையாக்கிவிடுகிறார்கள். இதனாலும் சிகையும், பூணலும் சமம் என்பது நிரூபணமாகிறது. க்ருஹஸ்தன் மாதத்திற்கொருமுறை ஸர்வாங்க க்ஷவரம் செய்துகொள்ளவேண்டும். ஸர்வாங்க க்ஷவரம் செய்துகொள்ளாவிடில் அது தீட்டுள்ளவனுக்குச் சமம். அப்படிப்பட்டவன் ஓர் ஆசமனம் செய்வதற்குக் கூட அருகதை அற்றவன் ஆவான். திருப்பதி முதலிய க்ஷேத்ரங்களுக்குச் செல்பவர்கள் கூட ப்ரார்த்தனை இல்லாவிடில் சிகையை எடுக்கக்கூடாது. நோயாலோ, காராக்ரஹ வாஸம் போன்ற தண்டனையாலோ மயிர் எடுக்கப்பட்டிருக்குமானால், பசுவின் வால் மயிரையோ, தர்பத்தையோ சிரசில் சிகையின் ஸ்தானத்தில் வைத்துக்கொண்டுதான் கர்மா செய்யவேண்டும். தலையில் வைத்துக்கொள்ள முடியாவிடில் காதிலாவது சொருகிக்கொள்ளவேண்டும்.
ஒவ்வொரு நாளும் தீர்த்தமாடியதும், கரைக்கு வந்து பித்ருக்களின் த்ருப்திக்காக சிகையின் தலை மயிரை முன்பக்கமாகத் தொங்கவிட்டு ஜலத்தைப் பிழிந்து சிகோதகம் கொடுக்கவேண்டும். வீட்டிற்குக் கூரை போல, நம் தேஹமாகிய வீட்டிற்கு சிகை அவசியம் ஆகும். வேதத்திலும் க்ஷௌர க்ரமம் சொல்லப்பட்டுள்ளது. முதலில் கட்கங்கள், பின் முகம், அதன்பின் தலை என்ற வரிசையில் க்ஷெளரம் செய்யவேண்டும்.
மாத்ரு பித்ரு மரணத்தில் ஒரு வருடமும், பார்யை கர்பம் தரித்தது உறுதியானது முதல் அவள் ப்ரஸவித்து 10நாள் ஆகும் வரையிலும், விவாஹம், உபநயனம் இவை ஆனபின் ஆறு மாதங்களும், மாதா - பிதாக்களின் ச்ராத்தம் வருகிற ஒரு மாதம் அல்லது ஒரு பக்ஷம் ஆகிய காலங்களில் வபநம் செய்துகொள்ளக் கூடாது.
ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளிலும், சதுர்த்தீ, சதுர்தசீ, ஷஷ்டீ, அஷ்டமீ, நவமீ, ஏகாதசீ, த்வாதசீ, பௌர்ணமீ, அமாவாஸை, ப்ரதமை ஆகிய திதிகளிலும் வபநம் செய்து கொள்ளக் கூடாது. இதனால் ஏற்படும் கெடுதல்களை தர்மசாஸ்த்ர நூலில் படித்து அறியவும். க்ருத்திகை, பூரட்டாதி, உத்ரட்டாதி ஆகிய நக்ஷத்திரங்களிலும் வபநம் கூடாது.
சௌள ஸம்ஸ்காரம் செய்ய புநர்வஸு நக்ஷத்திரம் மிகுந்த பொருத்தமாகும். சௌளத்திற்கு முன்பாக ப்ராஹ்மண போஜனம் செய்வித்து ஆசீர்வாதம் பெறவேண்டும். ஸீமந்தத்தில் வகுடெடுத்தல் போலவே இதிலும் செய்யவேண்டும். உபநயன ப்ரகரணத்தில் இதற்கான மந்த்ரங்களுக்குரிய அர்த்தங்களை பார்த்துத் தெரிந்துகொள்ளவும். தலையில் இரண்டு விசேஷமான இடங்களை வபநம் செய்வது கோதாநம் என்னும் கர்மாவிற்கு அங்கமாகும்.