||ஶ்ரீ:||
ஸ்ரீமஹா பாரத வினாவிடை
ஸ்ரீ கிருஷ்ணாய பரப்பிரஹ்மணே நம:
நீடாழி யுலகத்து மறையாலொ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராஜன் மாபாரதஞ் சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக வங்கூ ரெழுத்தாணிதன்
கோடாக வெழுதும் பிரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ
பீடிகை
வினா 1.- முதலில் ஸ்ரீ கிருஷ்ணாய பரப்பிரஹ்மணே நம: என்று சொல்வானேன் ?
விடை.- கடவுளது பூரண அவதாரமாகிய ஸ்ரீ கிருஷ்ணபகவானது அருளால் பாரதத்தில் யாவும் ஒழுங்காக நடந்தன. ஆதலால், முதலில் ஸ்ரீ கிருஷ்ணாய பரப்பிரஹ்மணே நம: என்றோம்.
வினா 2.-பாரதம் என்பது என்ன ? அது யாரால் செய்யப் பட்டது?
விடை.- இது சந்திர வம்சத்தில் உண்டான பரதன் என்னும் அரசனது மரபில் தோன்றின பாண்டவர்கள் கௌரவர்கள் என்பவர்களது சரித்திரத்தைச் சொல்லும் இதிஹாஸம். இது வேதவியாஸ மஹாரிஷியால் செய்யப் பட்டு, தமது கொம்பை எழுத்தாணியாக உபயோகித்து மேருமலையில் விநாயகரால் எழுதப்பட்டது.
வினா 3. - இதற்கு மஹாபாரதமென்று பெயர் வருவானேன் ?
விடை - அநேக அரிய விஷயங்களாகிய தர்மங்களும் ஞானங்களும் இச்சரித்திரத்தில் அடங்கி இருப்பதால் இதற்கு மஹாபாரதம் என்று பெயர் வந்தது. இதுபற்றியே இதற்கு ஐந்தாம் வேதம் என்று ஒரு பெயரும் உண்டு.
வினா4 -இந்தச் சரித்திரம் யாருக்கு யாரால் சொல்லப்பட்டது?
விடை - பஞ்சபாண்டவர்களுள் ஒருவனாகிய அர்ஜுனனது கொள்பேரனாகிய ஜனமேஜய மஹாராஜனுக்கு வேதவியாஸ மஹரிஷியின் சிஷ்யர்களுள் ஒருவராகிய வைசம்பாயன மஹா முனிவரால் சொல்லப்பட்டது.
வினா5.-ஜனமேஜய மஹாராஜனுக்கு வைசம்பாயனர் இந்த பாரதகதையைச் சொல்லக் காரணமென்ன?
விடை.- ஜனமேஜய மஹாராஜன் ஸர்ப்ப யாகத்தை ஒருவாறு பூர்த்திசெய்தான்்.பின்னர், அவரைப்பார்க்க வியாஸ மஹாரிஷி அவரது ஸபைக்கு வந்தார். அவரைப் பார்த்து தனது முதாதைகளாகிய பாண்டவ கௌரவரது சரித்திரத்தை விஸ்தாரமாய்க் கேட்க வேண்டுமென்று அரசன் வேண்டிக்கொள்ள அப்பொழுது வியாஸர் தனது சிஷ்யனான வைசம்பாயனருக்குப் பாரதக்கதையைச் சொல்லும்படி உத்திரவு செய்தார்.
வினா 6.- ஸர்ப்பயாக மென்பது என்ன?
விடை.- ஹோமம் செய்து மந்திர பலத்தால் ஸகல ஸர்ப்பங்களையும் ஹோமாக்கினியில் விழுந்து பிராணனை விடும்படி செய்யும் யாகமே ஸர்ப்பயாக மெனப்படும்.
வினா 7. இந்தக் கொடிய யாகத்தை இவ்வரசன் செய்யக் காரணம் என்ன?
விடை. -தனது தகப்பனார் ஒரு ரிஷியினது சாபத்தால் தக்ஷகன் என்ற பாமபு தீண்ட இறந்தார் என்று கேள்விப்பட்டு இவ்வரசன் ஸர்ப்ப குலத்தை எல்லாம் நாசம் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு இந்தயாகத்தை செய்ய ஆரம்பித்தான்,
வினா 8.-இந்த யாகம் ஒருவாறு பூர்த்தியாயிற்று என்று சொன்னோமே, ஏன் ?
விடை -- இந்த யாகத்தில் ஸகல பாம்புகளும் வந்து தீயில் விழுந்திறக்க, தக்ஷகன் பயம்கொண்டு இந்திரனது கட்டிற் காலில் சென்று சுற்றிக்கொண்டான். இவ்வாறு இருக்கையில், அஸ்தீகர் என்ற ரிஷி ஒருவர் வந்து அரசனைத் தனக்கு ஒரு உபகாரம் செய்யவேண்டுமென்று கேட்டார். அப்படியே செய்வதாக அரசன் ஒப்புக்கொண்டான். அப்பொழுது மந்திரபலத்தால், இந்திரன் இருக்கும்பொழுதே அவனது கட்டில் ஹோமகுண்டத்திற்கு நேர் வந்து விட்டது. அரசனை நோக்கி இந்த யாகத்தை இப்படியே நிறுத்திவிட வேண்டும் என்று அஸ்தீகர் கேட்டுக்கொள்ள, அரசனுக்கு தன் வார்த்தைக்கு விரோதமாய் நடக்க மனம் வராமல், யாகத்தை நிறுத்திவிட்டான். ஆகையால்தான் இந்தயாகம் ஒருவாறு முடிந்தது என்று சொன்னது.
வினா 9.- இப்படி அஸ்தீகர் கேட்டுக்கொள்ளக் காரணம் என்ன?
விடை.- இவர் வாஸுகி என்னும் ஸர்ப்ப ராஜனது ஸகோதரியும், தனது தாயுமாகிய ஜரத்காருவினுடைய குலத்தைக் காப்பாற்ற வேண்டுமென்று இந்த யாகத்திற்கு வந்தார்.
வினா 10.- ஸர்ப்ப வம்சத்தில் ரிஷி பிறக்கக் காரணம் என்ன?
விடை :- ஜரத்காரு என்ற ஒரு ரிஷி பிரம்மசாரியாயும், ஜிதேந்திரியராயும் உலகத்தில் உலாவுங்கால், ஒரு பாழும் கிணற்றில் ஒருசிறிய கொடியில் மாட்டிக்கொண்டு தலைகீழாய்த் தனது பிதுருக்கள் தொங்குவதையும் அவர்களைத் தாங்கும் கொடியைக் கூட எலிகள் அறுப்பதையும் அவர்கள் அலறுவதையும் கண்ணுற்றார். பின்பு அவரது வேண்டுகோளின்படி தான் விவாகம்செய்து வம்சவிருத்தி செய்வதாகவும், தனது பெயரையே உடைய ஒரு கன்னிகை கிடைத்தால்மாத்திரம் விவாகஞ் செய்து கொள்ளுவதாகவும் சொல்லிப் போனார். கொஞ்ச காலம் தேடிப்பார்த்து தனக்குப் பத்தினி அகப்படாதது கண்டு தனது எண்ணத்தை வாயால் உறக்க வெளியிட்டார். உடனே அதை தனது தூதரால் அறிந்து வாஸுகி தனது ஸகோதரியான ஜரத்காருவை ரிஷி ஜரத்காருவுக்குக் கொடுத்தான். இந்த ரிஷிக்கு ஸர்ப்ப கன்னிகையிடத்து அஸ்தீகர் உண்டானார்.
வினா 11.- இப்படி முன் சொன்ன காரணங்களுக்காக வைசம்பாயனர் ஜனமேஜய மஹாராஜருக்குச் சொன்ன பாரதம் எத்தனை பிரிவுகளை உடையது?
விடை - பதினெட்டு பிரிவுகளை உடையது. ஒவ்வொரு பிரிவிற்கும் பர்வம் என்று பெயர்.
வினா 12.-அப் பர்வங்களுக்கு முறையே பெயர் என்ன ?
விடை. -அவைகளின் பெயர் முறையே ஆதி பர்வம், ஸபா பர்வம், ஆரண்ய பர்வம், விராட பர்வம், உத்தியோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், சல்லியபர்வம், ஸௌப்திக பர்வம், ஸ்திரீ பர்வம், சாந்திபர்வம், அனுசாஸன பர்வம், அசுவமேத பர்வம், ஆசிரமவாஸ பர்வம், மெளஸல பர்வம், மஹாப் பிரஸ்தான பர்வம், ஸ்வர்க்காரோஹண பர்வம் ஆகிய இவைகளே.
னா 13. இவற்றுள் ஆதி பர்வத்திலடங்கியகதையின் சுருக்கம் .என்ன ?
விடை-சந்திர வம்சத்தவரது உற்பத்தியும் பாண்டவர் கௌரவர்கள் பிறந்து, வித்தை பயின்று, விவாகம் செய்து கொண்டு, கௌரவரது கெட்ட குணத்தினால் இரு திறத்தாரும் வெவ்வெறு இடங்களில் சில காலம் ஸுகமாய் இராஜ்யம் ஆண்டதுமே இப்பர்வத்திலடங்கிய கதையாம்.
வினா 14.- ஸபா பர்வ கதைச் சுருக்கம் என்ன ?
விடை - தருமபுத்திரரது இராஜதானியில் அமைக்கப்பட்ட ஸபையின் வைபவமும், அவர் செய்த இராஜஸூயயாக வைபவமும், அதைக் கண்ட துரியோதனாதியர் பொறாமை கொண்டு பாண்டவரைச் சூதாட அழைத்து அவர்கள் இராஜ்ய வைபவங்கள் யாவையும் தோற்கும்படி செய்ததும், பாண்டவர் காட்டிற்குச் சென்று பன்னிரண்டு வருஷம் வனவாஸம் செய்து ஒரு வருஷம் அஜ்ஞாத (எவராலும் கண்டுபிடிக்க முடியாதபடி மாறுவேஷம்பூண்டு பட்டணங்களில்) வாஸம்செய்தால் பின்பு இராஜ்யம் கொடுப்பதாக துரியோதனன் சொன்னதும் இப்பர்வத்தின் கதை.
வினா 15.- ஆரண்ய பர்வத்தின் கதை என்ன ?
விடை - பாண்டவர்கள் பிராம்மண சிரேஷ்டர்களோடு வனவாஸம் செய்ததும், அப்பொழுது மார்க்கண்டேயர் முதலிய மஹான்களிடத்திலிருந்து ஸத்விஷயங்களை யறிந்தும், அர்ஜுனன் பரமசிவனைத்தெரிசித்து பாசுபதம் பெற்று ஸ்வர்க்கத்தில் இந்திரனோடு சிவ காலம் வாஸம் செய்ததும், பாண்டவர்களுக்கு மலைபோல் வந்த ஆபத்துக்கள் சூரியனைக்கண்ட பனிபோல் நீங்கியதுமே இப்பர்வத்தி லடங்கிய கதையாம்.
வினா 16.-விராட பர்வத்திலடங்கிய கதை என்ன?
விடை - பன்னிரண்டு வருஷம் வனவாஸம் செய்த பின்பு ஒரு வருஷம் பாண்டவர்கள் விராடராஜன் பட்டணத்தில் அஜ்ஞாதவாஸம் செய்ததும், அவ்வரசனது மைத்துனனாகிய கீசகனைக் கொன்றதும், அவர்களைக் கண்டு பிடிக்க வந்த துரியோதனாதியரைத் தோல்வி யடையும்படி செய்ததுமே இப்பர்வத்திலடங்கிய கதையாம்.
வினா 17.- உத்தியோக பர்வத்தின் கதை என்ன?
விடை.. ஸபா பர்வத்தில் சொன்னபடி வனவாஸமும், அஞ்ஞாதவாஸமும் செய்தபின்னர் துரியோதனாதியரிடமிருந்து தாம் அடையவேண்டிய இராஜ்ய பாகத்தைப் பாண்டவர்கள் தூதர்கள் மூலமாய் அடைய முயன்றதும், கிருஷ்ணபகவான் பாண்டவர்களுக்காகக் கடைசியாய் தூது சென்றதும், அப்பொழுது துரியோதனன் இராஜ்பம் கொடுக்கிறதில்லை யென்று பிடிவாதமாய்ச் சொன்னதைக்கேட்டு யுத்தத்திற்கு வேண்டிய உபாயங்கள் செய்ததுமே இப்பர்வத்தி லடங்கிய கதையாம்.
வினா 18.-பீஷ்ம பர்வத்தி லடங்கிய கதை என்ன ?
விடை--. -தனது உறவினரை அநியாயமாய்க் கொல்லவேண்டுமே என்று பரிதபித்த அர்ஜுனனை பகவத்கீதை சொல்லி யுத்தம் செய்யும்படி ஸ்ரீகிருஷ்ண பகவான் ஏவிய பிரபாவமும், பீஷ்மர்கௌரவர் பக்கத்தில் ஸேனாதிபதிப் பட்டம் பற்று அதிவிசித்திரமாய்ப் பத்துநாள் யுத்தம் செய்த வலிமையும், இப்பர்வத்திலடங்கிய கதையாம்.
வினா 19.-துரோண பர்வக் கதை என்ன?
விடை பத்தாம் நாள் மாலை பீஷ்மர் அடிபட்டு யுத்தகளத்தில் யுத்தம் செய்யத் திறமின்றி விழுந்தவுடன் துரோணரை ஸேனாதிபதி யாக்கியதும், அவர் மேல் ஐந்துநாள் விசித்திர யுத்தம் செய்ததும், இரு பக்கத்திலும் சிறந்தவீரர்கள் இறந்ததும், 14 -ம் நாள் இரவில் யுத்தம் நடந்ததும், கடைசியாய் 15-ம் நாள் தருமபுத்திரர் ஒரு பொய்சொன்ன காரணத்தால் துரோணர் இறந்ததுமே இப்பர்வத்தி லடங்கிய கதையாம்.
வினா 20.-கர்ண பர்வத்தி லடங்கிய கதை என்ன?
விடை.- மேல் இரண்டு நாள் கர்ணன் ஸேனாதிபதிப் பட்டம் பெற்று சண்டை செய்ததும், அப்பொழுது தைரியம் குறையும்படி அவனுக்கு ஸாரத்தியம் செய்த சல்லியன் அவனோடு ஸம்பாஷித்ததும், 17-ம் நாள் மாலை எல்லா அஸ்திரங்களையும் மறந்து, தத்தளித்துக்கொண்டு புதைந்திருக்கும் தன் தேரைத் தூக்கமுயலும் தருணத்தில் அர்ஜுனனது பாணத்தால் கர்ணன் இறந்ததுமே, இப்பர்வத்தின் கதை.
வினா 21.- சல்லிய பர்வத்தின் கதை என்ன?
விடை.-18-ம் நாள் காலை முதல் உச்சி காலம் வரை சல்லியன் ஸேனாதிபதியாகிச் சண்டை செய்ததும், அவன் இறந்ததும், பின்பு, ஓர் குளத்தில் சென்று ஒளித்துக்கொண்டு தன் பலத்தை விருத்திபண்ண முயன்றுகொண் டிருந்த துரியோதனனுக்கும், பீமஸேனனுக்கும் அக்குளக்கரையிலே கதாயுத்த முண்டாய்க் கடைசியாய் துரியோதனன் தன்தொடையில் அடிபட்டு யுத்தகளத்தில் விழுந்ததுமே இப்பர்வத்தின் கதையாம்.
வினா 22 --ஸௌப்திக பர்வத்தி லடங்கிய கதை என்ன?
விடை பதினெட்டாம் நாள் இரவில், பாண்டவர்கள் படை வீட்டில் புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த இளம் பஞ்சபாண்டவரையும், இதர பாண்டவ வீரரையும் அசுவத்தாமன் கொடுங்கொலை புரிந்ததும், பின்பு பகவான் ஏற்பாட்டால் அன்று வேறிடத்தில் தங்கியிருந்த பாண்டவரிடம் மிகுந்த அவமானத்தை அடைந்து அவன் ஓடிப் போனதும் மேலே அவன் அபாண்ட வாஸ்திரப் பிரயோகம் செய்ததுமே இப்பர்வத்தி லடங்கிய கதையாம்.
வினா 23. ஸ்திரீ பர்வத்தி லடங்கிய கதை என்ன?
விடை.- பதினெட்டுநாள் யுத்தத்தில் மாண்ட வீரரது ஸ்திரீகள் யாவரும் யுத்தகளம் வந்து பிரலாபித்ததும், பாண்டவர் முதலியவர்கள் தமது உறவினர்களுக்குத் தர்ப்பணம் செய்ததும், அப்பொழுது குந்தியால் கர்ணன் தமது தமையன் என்று தருமபுத்திரர் அறிந்து துக்கித்தது இப் பர்வத்தின் கதையாம்.
வினா 24.- சாந்தி பர்வத்தின் கதை என்ன?
விடை. - தமது உறவினரை அநியாயமாய்க் கொன்றுவி்டோமே என்ற துக்கத்தாலும், தமது தமையனாகிய கர்ணனைக் கொல்லும்படி வந்ததே என்ற துக்கத்தாலும் இராஜ்யமாள மனம் வராத தருமபுத்திரருக்கு நாரதர் காணன் சரித்திரங் கூறிப் பின்பு அர்ஜுனன் பகவான் முதலியோர் தெளிவுண்டாகும்படி செய்து அவருக்குப் பட்டாபிஷேகம் செய்ததும், இதற்கு மேலும் தருமபுத்திரர் மனம் தெளியாதது கண்டு சாந்தமும், திடமும் வந்து அவர் ஸுகமாய் இருக்கும்படி, யுத்தகளத்தில் பத்தாம்நாள் அடிபட்டு விழுந்து மரணமடைய உத்தராயணத்தை எதிர்பார்த்திருந்த பீஷ்மரால், பகவானது வேண்டுகோளின்படி தருமங்கள் உபதேசிக்கப்பட்டதுமே இப்பர்வத்திலடங்கிய கதையாம்.
25.- -அநுசாஸன பர்வத்தின் கதை என்ன?
விடை.-சாந்தி பர்வம் சொல்லியும், தருமபுத்திரர். ஸமாதானமாகாததைக் கண்டு மறுபடியும் விசேஷ தருமங்களைச் சொன்னதே இப் பர்வத்தின் கதை.
வினா 26.-அசுவமேத பர்வத்தின் கதை என்ன?
விடை.- தருமபுத்திரர் அசுவமேத யாகம் செய்ததும், பின்பு பகவான் கீதையில் சொல்லிய விஷயங்களை அர்ஜுனன் மறந்து போய்விட்டபடியால் அவனுக்கு அவர் கீதையின் ஸாரத்தை அநுகீதா ரூபமாகச் சொன்னதுமே இப் பர்வத்தின் கதையாம்.
வினா 27.-ஆச்ரமவாஸ பர்வத்தினது கதை என்ன?
விடை - திருதராஷ்டிரர், காந்தாரி முதலியவர்கள் விதுரரது உபதேசத்தால் வைராக்கியமடைந்து குருக்ஷேத்திரத் தருகில் சென்று பர்ண சாலையில் தியானாதிகள் செய்து கொண்டு கடைசியில் ஸ்வர்க்க மடைந்ததே இப் பர்வத் தின் கதையாம்.
வினா 28-மௌஸல பர்வத்தின் கதை என்ன?
விடை - ஒரு ரிஷியின் சாபத்தால் யாதவர்கள் எல்லோரும் ஸமுத்திரக்கரையில் முளைத்திருந்த கோரைப்புற்களை பிடுங்கி அடித்துக்கொண்டு இறந்ததும், ஸ்ரீ கிருஷ்ண பகவான் வைகுண்டத்திற் கேகியதுமே இப் பர்வத்தின் கதைகளாம்.
வினா 29.-மஹாப்பிரஸ்தான பர்வத்தி லடங்கிய கதை என்ன?
விடை.-ஸ்ரீ கிருஷ்ணபகவான் வைகுண்டம் அடைந்ததையும் அர்ஜுனன் வலிகுறைந்ததையும், கலியுகம் ஆரம்பித்ததையும் அறிந்த யுதிஷ்டிரர் தமது தம்பிமார் திரௌபதி இவர்களோடு வடமேருவைநோக்கி மௌனமாகப் போக ஆரம்பித்ததும், வழியில் ஒவ்வொருவராய் தருமபுத்திரரும், ஒரு நாயும் தவிர மற்றை யாவரும் இறந்து விழுந்ததுமே இப்பர்வத்தின் கதையாம்.
வினா 30.- ஸ்வர்க்காரோஹண பர்வத்தின் கதை என்ன?
விடை - தருமபுத்திரர் தமது தேகத்தோடு ஸ்வர்க்கத்திற்குப் போகும் வழியில் அவர் சொன்ன ஒரு பொய்க்காக நரகத்தைப் பார்க்கும்படி நேரிட்டதும், பின்பு ஸ்வர்க்கம் சென்று தமக்கு வேண்டியவர்களோடு ஸுகமாய் இருந்ததுமே இப் பர்வத்தி லடங்கிய கதைகளாம்.