வெள்ளி, 27 நவம்பர், 2009

திருவருட்சதகமாலை

தமிழாக்கமும் பொழிப்புரையும்

வைகுந்தவாஸி ஸ்ரீ ஆர். கேசவய்யங்கார்

அநுசரக்த்யாதி குணாமக்ரேஸர போத விரசிதாலோகாம் 
  ஸ்வாதீ நவ்ருஷகிரிசாம் ஸ்வயம் ப்ரபூதாம் ப்ரமாண யாமிதயாம் .11.

பின்னடைச் சத்தி யாதிப் பண்புநின் பாங்கு தாங்க
  முன்னடைப் போத வெள்ளச் சுடருனக் கொளிதெ ளிக்க
  நின்னயத் திருவ னென்றே நடைத்திரு விடப வெற்பன்
  தன்மையொன்றுணர்த்து மாட்சித்தயையுனைத் தெரியக் கண்டேன்
. 11.

சக்தி, பலம், ஐசுவரியம், வீரியம், தேசு என்னும் குணங்களைத் தனக்குப்பின் தொடரும் ஊழியக்காரர்களாகவும், ஜ்ஞாநம் என்னும் குணம் தனக்கு முன் கையில் விளக்கை வைத்துக்கொண்டு வழிகாட்டிக் கொண்டு போகும் வெளிச்சத்தை உடையவளாயும், வேங்கடவெற்பனைத் தனக்கு ஸ்வாதீநமாக உடையவளாயும், தானே பிரபுவாயும், தானே ஆவிர்பவிப்பவளாயும், உள்ள தயாதேவியே கதியென்று அவளைச் சரணம் புகுகின்றேன்.

அபிநிகில லோகஸுசரித முஷ்டிந்தய துரிதமூர்ச்சநாஜுஷ்டம் 
  ஸஞ்ஜீவயது தயேமாமஞ்ஜ நகிரிநாத ரஞ்ஜநீபவதி.                     .12.

உள்ளுநல் லுலகு வாழக் கொள்ளுநல் லொழுக்க முற்றும்
  கள்ளுமோர் சிறங்கை யாகக் குடித்தகம் தடித்த யர்ந்தே
  உள்ளவோர் விரகி லாத வென்னுயிர் தயையு னக்காய்த்
  தெள்ளருட் டேவ னாவித் தேவிநீ தெளிவிப் பாயே.
                        .12.

அகில புவநங்களும் செய்த புண்ணியம் அனைத்தையும் ஒரு கையால் எடுத்து உறிஞ்சி விடக்கூடிய பாவங்களைப் புரிந்து அந்தப் பாவ விஷமூர்ச்சை மிதமிஞ்சி ஏறியிருக்கும் என்னையும் அஞ்சநகிரிக்கு அதிபதியான அலர்மேல் மங்கை உறை மார்பனை ரஞ்சிப்பிக்கும் அவனது ஆவித்தேவியாகிய நீ என்னை உயர்த்தி எனது ஆத்மாவை உனதாகச் செய்யவேணும்.

பகவதி தயா பவத்யா வ்ருஷகிரிநாதே ஸமாப்லுதே துங்கே
  அப்ரதிக மஜ்ஜந நாநாம் ஹஸ்தாலம்போ மதாகஸாம் ம்ருஃய.  13.

பெற்றவெற் புடைய பெம்மான் பொற்புநீண் மகுடமூழ்கும்
  நிற்றனற் கருணைத் தேவி! நின்பெரு நீரே மல்க
  அற்றுடன் பற்றுக் கோடே முற்றுமென் குற்றந் தாழும்
  பெற்றியீ தொன்று கண்டேன் பின்னுமுன் மாண்பு காண்பேன்.
  .13.

பகவதியான கருணைத்தேவியே ! மிகவும் உயர்ந்த இடத்திலுள்ள வேங்கடகிரிநாதன் உன்னால் பெரிய கருணை வெள்ளத்தால் முழுகுமாறு செய்யப்பெற்றபொழுது அம்மாமலை முழுவதும் கரை புரண்ட தடுக்கவியலாத வெள்ளத்தில்  முழுகிப்போகிற எனது பாபங்களுக்கு எவ்வளவு தேடினாலும் கைப்பிடிப்பு அகப்படமாட்டாது.

க்ருபண ஜநகல்பதிலகாம் க்ருதாபராதஸ்ய நிஷ்க்ரியா மாத்யாம்
  வ்ருஷகிரிநாததயே த்வாம் விதந்தி ஸம்ஸாரதாரிணீம் விபுதா:   .14
.

கதியிலார் களித்து நாடும் கற்பகக் கொடிநீ தாயே!
  உதவிலார் பிழைக ழிக்க வோம்புமா நோன்புநீயே
  வதியெழும் பிறவி யாழி யொழியுநல் வழிய தாக்கும்
  ததியரம் பதியி னாதன் தயையுனைத் தொண்டர் கண்டார்.
  14. 

வேங்கடாத்ரி நாதனின் தயைத்தாயே! தீனர்களான கதியற்றவர்களுக்கு மெல்லிய கற்பகக் கொடியாயும், குற்றம் செய்தவருக்கு பிழைகழிக்கும் முதன்மையான  பிராயச் சித்தமாகவும், பிறவிப் பெருங்கடலின் அக்கரை சேரும்படி தாண்டுவிக்கிறவளுமாக சாஸ்த்ர ஆராய்ச்சிஉள்ள விபுதர்கள் உன்னைத் தீர்மானிக்கிறார்கள்.

திங்கள், 23 நவம்பர், 2009

திருவருட்சதகமாலை

திருவருட்சதகமாலை

வந்தே வ்ருஷகிரீசஸ்ய மஹிஷீம் விச்வதாரிணீம்
   தத்க்ருபா ப்ரதிகாதா நாம் க்ஷமயா வாரணம்யயா.  .7.

அன்னவன ருட்குறுத டக்குகள டக்கத்
   துன்னுகமை கொண்டுதனி முன்னுதவு நன்மைத்
   தன்னிலை யிலோங்கிமகி தாங்கியெனு நாமம்
   மன்னுவிடை யத்திரியன் பத்தினிது தித்தேன்.
   .7.

{ அகில புவனங்களையும் தாங்குகிறவளும், வேங்கடாத்ரி நாதனுக்குப் பத்தினியாயும், கமையெனும் பொறுமைக் குணத்தால் வேங்கடநாதனுடைய கிருபைக்கு விக்நங்கள் அனைத்தையும் தடுப்பவளுமான க்ஷமை எனப் பெயரிய பூமிப்பிராட்டியைத் துதிக்கிறேன்.}

நிசாமயதுமாம் நீளாயத்போக படலைந்த்ருவம்
   பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்ய பக்ததோ ஷேஷ்வதர்சநம்.  .
8.

ஏகசர ணன்பரக மேதுமது காணா
  வாகுதரு மாணிமறை யாணையன் விழிக்கோர்
  போகுறும யக்களிபி ணைப்படல டைத்தே
  ஈகைமிகு சீலநல நீளையெனை நோக்கும்.    .8.

[யாருடைய போக மயக்குகளினால் பக்தர்களின் குற்றங்களைப் பார்க்கவொட்டாமல் ஸ்ரீநிவாஸனுடைய கண் மறைந்தது போல, அவர் அக்குற்றங்களை அறவே நோக்காதது போல இருப்பாரோ அந்த நீளையென்னும் பிராட்டி அடியேனைத் தனது நீண்ட கண்களால் நோக்கி யருள வேண்டும்.]

கமப்யநவதிம் வந்தே கருணா வருணாலயம்
   வ்ருஷசைல தடஸ்தா நாம் ஸ்வயம் வ்யக்தி முபாகதம்.  .9.

செடித்தொட ரறுத்தெழு விழுத்தவர் வழுத்தும்
   விடைக்கிரி தடத்தம ரடைக்கல மலர்க்கே
   கொடைப்பெரு நடைப்புக ழுடைத்தனை விளக்கும்
   படித்திக ழளப்பரு மருட்கடல் பணிந்தேன்
.
              .9.

[ கருணையென்னும் குணத்தினால் நிரம்பிய வருணாலயம் என்கிற அளப்பரும் அருட்கடலாயும், திருவேங்கட மாமலையின் தடத்திலிருப்பவர்களுக்கு ஸ்வயம் வ்யக்தமாய் அணுகியவரும், இன்னார் இப்படிப்பட்டவர் என்று வருணிக்கக்கூடாதவருமான ஸ்ரீநிவாஸனைப் பணிகிறேன்.]

அகிஞ்ச நநிதிம் ஸூதிம்ப வர்கத்ரிவர்கயோ
   அஞ்ஜநாத் ரீச்வரதயாம பிஷ்டௌமி நிரஞ்ஜநாம்.  .10.

கைம்முதலி லர்க்கொருக ரத்துறுநி திப்போல்
   இம்மைநல னோடுதிரு வீடுநனி நல்கும்
   அம்மைவரை யெம்மிறைவர் தம்மருளி னன்மைச்
  செம்மைதெரி மும்மறையின் மெய்ம்மையிது ரைப்பேன்

[கைம்முதலில்லாத பேதைகளும், வேறு கதியற்றவர்களு மான  சரணம் அடைபவர்க்கு நிதி போன்றதும், அபவர்கமென்னும் மோக்ஷ புருஷார்த்தத்தையும், திரிவர்க்கம் என்னும் அறம் பொருள் இன்ப புருஷார்த்தங்களையும் அளிப்பவளும், அஞ்நம் என்கிற மாசு அடியோடு இல்லாதவளுமான அஞ்ஜநமலை யரசனுடைய தயையென்னும் தேவியைப் பல படியாகத் துதிக்க எண்ணுகிறேன்.]