திங்கள், 16 மார்ச், 2026

ஸித்தாந்த த்ரய சங்க்ரஹம் 9 -- ஜகத் சத்யத்வ நிரூபணம்

 

जगत्सत्यत्व निरूपणम्

ஜகத் ஸத்யத்வ நிரூபணம்


       ப்ருதிவீ, ஜலம், தேஜஸ் ,வாயு, ஆகாசம் என்கிற ஐந்து பூதங்களும்,அவைகளின் கலப்பினால் உண்டான சராசரரூபமான இந்த ப்ரபஞ்சமும் ஸத்யமாயுள்ளது. 1கானல் நீர்போல் அஸத்யமன்று. கானல்நீரில் ஸ்நாநம் பானம் முதலியவை செய்யமுடியாது. அவ்வாறில்லாமல் நதியிலுள்ள ஜலம் ஸ்நாநம் முதலியவைகளுக்கு உபயோகப்படுகிறபடியால், கானல் நீரைப்போல இதுவும் பொய்யாயிருக்க முடியாது. பொய்யாயிருந்தால் அதைக்கொண்டு கார்யம் நடவாது. ஆகையால் ஆற்றின் ஜலம் ஸத்யமானது. அது ஸத்யமானால், 2ப்ரவாஹத்திற்கு முன்னும் பின்னும் ஜலம் காணவேண்டுமே, அவ்விதம் இல்லாததை எப்படி உண்மையானது என்று சொல்லலாம் என்னில், முன்னும் பின்னும் காணாததால் ப்ரவாஹம் அநித்யமென்று கிடைக்குமேயொழிய அஸத்யமென்று கிடைக்காது. அஸத்யமாவது- ஒரு கார்யத்திற்கும் உதவாதது. அநித்யமாவது- கார்யத்திற்கு உபயோகப்பட யோக்யதையோடு சிலகாலமிருந்து அழிந்துபோவது. இதற்கு த்ருஷ்டாந்தம்-மண்ணை ஜலத்தைச் சேர்த்துப் பிசைந்தால் அது உருண்டையாகிறது. பிறகு குயவனால் பானையாகச் செய்யப்படுகிறது. அப்போது ஜலம் கொண்டுவருவது முதலிய கார்யங்களுக்கு உபயோகப் படுகிறது.. கல், தடி முதலானவைகளால் அந்தப் பானையை அடித்தால், அது பானை என்னும் 3ஆகாரத்தை விட்டு ஓடாகிறது. அந்த ஓட்டை உடைத்தால் பொடியாய் மண்ணாகிறது. ஆகையால் மண் என்னும் வஸ்து நித்யமாயுள்ளது. இடையிடையே வரும் ஆகாரங்கள் அநித்யம். முதலிலுள்ள வஸ்து எப்பொழுதும் உள்ளதுதான். ஆனால் நதிஜலமும் முன்னும் பின்னும் இருக்கவேண்டாவோவென்றால் - அதில் சிறிதுபாகம் மணலில் மறைந்தும், சிறிது ஸூர்ய கிரணங்களில் கலந்தும் போகிறபடியால் காணப்படுவதில்லை. வஸ்து உள்ளதுதான். ஆனால் ப்ரவாஹ மாயுள்ள ஆகாரம் அப்போது இல்லாதபடியால் 4கார்யகாரியாவதில்லை. இதனால் அது அஸத்யமாக மாட்டாது, அநித்யமாகும். நித்யமாவது எப்போதும் அநுவர்த்திக்கும் வஸ்து. ப்ரவாஹாகாரம் எப்போதும் அநுவர்த்தித்து வராமையால் அநித்யமாய் முடிகிறது. இப்படியே, மண்பொன் முதலியவைகளுக்கு அப்போதைக்கப்போது வரும் பானை, காப்பு முதலிய ஆகாரங்களிலும் கண்டு கொள்வது. அநித்யமாயிருப்பது தான் அஸத்யமாகை என்றால், இப்படிப்பட்ட அஸத்யமாகை விருத்தமன்று. இந்த அஸத்யமாகையும் ப்ரவாஹாகாரத்திற்கே தவிர எப்போதும் அநுவர்த்திக்கும் ஜலத்திற்கு இல்லை


    ஸத்யமாவது- எப்போதும் அநுவர்த்திக்கும் வஸ்து. இது இரண்டு விதம்-ஒன்று ஸ்வரூபத்தில் மாறுபாடில்லாமல் அநுவர்த்திக்கும்; மற்றொன்று ஸ்வரூபத்தின் மாறுபாட்டோடு அனுவர்த்திக்கும். முதலில்சொல்லியது அபரிணாமி, நித்யம். பரப்ரஹ்மமும் ஜீவாத்மாக்களும் இவ்வகைப்பட்டன. இரண்டாவது 5பரிணாமி, நித்யம் ; ப்ரக்ருதி, காலம் முதலியவைகள் இதைச் சேர்ந்தன.

_________________________________________________

1கானல் -- பாலைவனத்தில் மத்யானத்தில் ஸூர்யகிரணங்கள் பரவுவதால் காணப்படும் ஜலம் போன்ற பொய்த்தோற்றம்; 2 ப்ரவாஹம் -- வெள்ளம். 3 ஆகாரம் -- आकारः உருவம் 4.कार्यकारि –– குளிப்பது , குடிப்பது முதலிய கார்யங்களுக்கு உபயோகமாயிருப்பது. 5. परिणामि  -- மாறுதல் அல்லது விஹாரத்தை உடையது. அது இல்லாதது அபரிணாமி.

சனி, 21 பிப்ரவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 8

 

॥ विशिष्टाद्वैत सिद्धान्तप्रकरणम् ॥
விசிஷ்டாத்வைத ஸித்தாந்த
ப்ரகரணம்.

இனி விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிரூபிக்கிறோம்.

இதற்கு ப்ரவர்த்தகர்
ஸ்ரீ பகவத் ராமாநுஜன்.

श्रीमल्लक्ष्मणयोगिनस्तु भुवनं सत्यं तदीशः श्रियः-
कान्तो ब्रह्म स एव सोऽखिलतनुः भिन्नास्ततश्चेतनाः ।
सत्या संसृतिरीशनिग्रहकृता- मुक्तिस्तु भक्त्यादिना
तत्प्राप्तिः परमे पदे तदनुभूत्यारव्येति संचक्षते ||
ஸ்ரீமல் லக்ஷ்மண-யோகிநஸ்து புவநம் ஸத்யம் ததீச : ஸ்ரீய:
காந்தோ ப்ரஹ்ம ஸ ஏவ ஸோகில் -தந பிந்நாஸ்-தத: சேதநா ;
ஸத்யா ஸம்ஸ்ருதி-ரீச-நிக்ரஹ-க்ருதா முக்திஸ்து பக்த்யாதிநா
தத்-ப்ராப்தி: பரமே பதே ததநு பூத்யாக்யேதி ஸஞ்சக்ஷதே!

இது இந்த ஸித்தாந்தத்திற்கு ஸங்க்ரஹ சலோகம். இதனர்த்தம்:-

ஸ்ரீ பகவத் ராமாநுஜரோ பின்வருமாறு ஸாதித்தருளுகிறார்:-'புவநம் ஸத்யம்'—ப்ரபஞ்சம் வாஸ்தவமாயுள்ளது. முத்துச்சிப்பியில் தோன்றும் வெள்ளியைப்போல் பொய்யன்று. அது ப்ராந்தியினால் காணப்படுவதே யொழிய ஒரு காரியத்துக்கும் உபயோகப்படுகிறதன்று. கடையில் காணப்படும் வெள்ளி பாத்திரம் முதலியவைகளாக செய்யப்பட்டு, அந்தப் பாத்திரங்கள் ஜலம் முதலியவை கொண்டுவர உபயோகப்படுகிறது. ஆகையால் இது பொய்யன்று. மேலும் ஈச்வரன் ப்ரக்ருதி என்கிற வஸ்துவைக்கொண்டு இந்த ப்ரபஞ்சத்தை தன் ஸங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்டிக்கிறான் என்று ச்ருதி சொல்லுகிறபடியால், ஸ்ருஷ்டிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த ப்ரபஞ்சம் பொய்யாகமாட்டாது. பொய்யான வஸ்துவுக்கு ஸ்ருஷ்டி ஸம்பவியாதன்றோ ? மாயையை உபகரணமாகவுடைய ஈச்வரன் இந்த ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கிறான். 'மாயையாவது ப்ரக்ருதி,' என்று ச்ருதி சொல்லுகிறது. இங்கு ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்கு மாயை உபகரணமென்றும், அந்த மாயையாவது ப்ரக்ருதி என்றும் கிடைக்கிறது. இங்கு ப்ரபஞ்சத்துக்கு மூலமாகச் சொன்ன ப்ரக்ருதி விசித்ரமான ப்ரபஞ்சரூப கார்யத்தை உண்டாக்குகிறபடியால் மாயை என்று சொல்லப்பட்டதேயொழிய, அவாஸ்தவம் என்கிற அபிப்ராயத்தால் அன்று. மாயை என்கிற சப்தத்துக்கு அவாஸ்தவம் என்கிற அர்த்தமும் கிடையாது.

मम योनिर्महद्ब्रह्म तस्मिन् गर्भ दधाम्यहम् ।
संभवः सर्वभूतानां ततो भवति भारत ॥

மமயோநிர் மஹத் ப்ரஹ்ம
தஸ்மிந் கர்ப்பம் ததாம் யஹம்|
ஸம்பவஸ்ஸர்வ பூதாநாம்
ததோ பவதி பாரத||

(பகவத் கீதை அத்.14. ச்லோகம் 3)

ஜகத்துக்கு மூலகாரணமான என்னுடையதான ப்ரக்ருதி என்கிற வஸ்துவில் ஜீவஸமுதாயத்தை நான் சேர்க்கிறேன். இந்தக் காரணத்தால் ஸர்வபூதங்களும் உண்டாகின்றன என்று இந்த ச்லோகத்தின் அர்த்தம். இதில் அசேதனமான ப்ரக்ருதியோடு சேதனவஸ்துவை பகவான் சேர்ப்பதால் இந்த ப்ரபஞ்சம் உண்டாகிறது என்று சொல்லியிருப்பதால் இந்த ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தின் அஜ்ஞானத்தால் கல்பிதமாகிறது என்று சொல்லுவதற்குக் கொஞ்சமும் இடமில்லை.
'
ததீச:--காந்த:'--ஶ்ரீ:பதியான ஸ்ரீமந்நாராயணன் அந்த ப்ரபஞ்சத்துக்கு ஈச்வரன்.

ப்ரஹ்ம ஸ ஏவ” அவன்தான் பரப்ரஹ்மம். தைத்திரீயோபநிஷத்தில் ப்ருகுவல்லியில், 'எது ஜகத்காரணமோ அது ப்ரஹ்மம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாராயணோபநிஷத்து முதலான சில உபநிஷத்துக்களில் நாராயணன் ஜகத்காரணம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் நாராயணன் தான் ப்ரஹ்மம் என்று கிடைக்கிறது. நிர்குணப்ரஹ்மம் என்று வேறொன்று கிடையாது. உபநிஷத்தில் ப்ரஹ்மம் என்று எதனால் சொல்லப்படுகிறது? என்று ஒரு கேள்வியைக் கேட்டு, இதனிடத்தில் பெரியதான குணங்கள் இருக்கிறபடியால், இது ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது என்று பதில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகையால், ப்ரஹ்மசப்தம் பெரியதான குணங்களையுள்ள வஸ்துவைச் சொல்லுகிறது என்று கிடைக்கிறபடியால், குணமில்லாத வஸ்துவை இது சொல்லமாட்டாது. ஆகையால், ஸகல கல்யாண குணங்களையும் உடையவனாஸ்ரீமந்நாராயணனைத்தான் இந்த ப்ரஹ்ம சப்தம் சொல்லுகிறது. அவன் தான் ப்ரஹ்ம சப்தத்துக்குப் பொருள்.

:அகிலதநு:--அந்த ஈச்வரன் சேதனர்கள், அசேதன வஸ்துக்கள் இவை எல்லா வற்றையும் சரீரமாக உடையவன். ஒரு சேதனனுக்கு நியதாதேயமுமாய் (नियताधेय) நியத சேஷமுமான த்ரவ்யம் அந்த சேதனனுக்கு சரீரம் என்று சொல்லப்படுகிறது.

நியதாதேயமாகையாவது—அந்த சேதனனுடைய ஸ்வரூபத்தை எப்பொழுதும் ஆச்ரயித்திருக்கை, அதாவது, அவன் ஸ்வரூபத்தின் ஸம்பந்தத்தால் நிலைபெற்று அழியாமலிருக்கை.
நியதநியாயம்யகையாவது- சேதனனுடைய ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டிருக்கை.

நியதசேஷத்வமாவது- அந்த சேதனன் ப்ரயோஜனத்துக்காகவேயிருக்கை.

   நம்முடைய சரீரம் இந்த ஜீவாத்ம ஸ்வரூபத்தின் ஸம்பந்தம் இருக்கும்வரையில் இருந்து, அது தப்பிப்போனபோது அழிந்து போகிறது. ஆகையால் இந்த சரீரத்துக்கு சேதனஸ்வரூபம் ஆதாரமாய், அதனை ஆச்ரயித்திருக்கிறபடியால் இந்த சரீரம் ஆதேயமாய் இருக்கிறது. விழித்திருக்கும்போது அவனுடைய ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு கீழே விழாமல் இருக்கிறது. அவனுடைய புண்ய பாபங்களாகிற கர்மத்தின் பலங்களான ஸுக துக்கங்களின் அநுபவமாகிற, அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே இந்த சரீரம் உண்டாயிருக்கிறது. ஆகையால் இது அவனுக்கு சரீரமாகிறது. இப்படியே சேதனாசேதன வஸ்துக்களெல்லாம், ஈச்வரனுடைய ஸ்வரூபத்தின் ஸம்பந்தத்தால் நிலைபெற்று அழியாமல், அவன் ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு லீலா ரஸம் போகரஸம் ஆகிய அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே யிருக்கிறபடியால், இவையெல்லாம் ஈச்வரனுக்கு சரீரமாகிறது. இந்த அம்சம் பலச்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிந்நா.......சேதனா:'-இந்த ஜீவாத்மாக்களெல்லாம் ஈச்வரனைக்காட்டில் ஸ்வத: வேறுபட்டவர்கள்.

' ஸத்யா. க்ருதா' இஜ்ஜீவாத்மாவுக்கு கர்மத்தால் நேர்ந்த ப்ரக்ருதி ஸம்பந்தம் ஸம்ஸாரம். அந்த ஸம்பந்தம் ஈச்வரனுடைய நிக்ரஹ ஸங்கல்பத்தால் உண்டாகிறபடியால் வாஸ்தவமாயுள்ளது. அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் உண்டாகும் ஆசை, த்வேஷம், ஸுகம், துக்கம், இவை முதலானவைகளும், அவற்றின் அனுபவங்களும், வாஸ்தவமாயுள்ளபடியால் அது ப்ராந்தியன்று.

முக்திஸ்து ..… ததநுபூத்யாக்யா" -- ஈச்வரன் விஷயத்தில் இந்த சேதனன் பண்ணும் பக்தி, ப்ரபத்தி இவையிரண்டில் ஒன்றால் பரமபதம் என்கிற ஒரு லோகத்தில் அந்த ஈச்வரனைக் கிட்டி அவனை அனுபவிப்பது மோக்ஷம்.

ச்வேதாச்வதரோபநிஷத்தில் ஈச்வரனைத் தொடங்கி 'ப்ரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் பதி' என்றும் 'ஸம்ஸாரத்தினின்றும் மோக்ஷத்துக்கும் ஸம்ஸார பந்தத்துக்கும் ஹேதுவானவன்' என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு, ஈச்வரன் ஜீவாத்மாவுடைய ஸம்ஸார பந்தத்துக்கும் ஸம்ஸாரத்தினின்றும் விடப் படுவதற்கும் காரணபூதன் என்று சொல்லுகிற படியால், ஈச்வரன் ஜீவாத்மாவுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தையும் மோக்ஷத்தையும் உண்டாக்குகிறான் என்று கிடைக்கிறது.

तानहं द्विषतः क्रूरान् संसारेषु नराधमान् ।
क्षिपाम्यजस्रमशुभानासुररीष्वेव योनिषु ॥

"தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாங் ! க்ஷிபாம்யஜஸ்ரமசுபாநாஸுரீஷ்வேவ யோநிஷ'" (. கீ. 16-19. )

இந்தச்லோகத்தில் என்னிடத்தில் த்வேஷம் முதலான துஷ்கர்மங்களைச் செய்யுமவர்களை ஸம்ஸாரத்தில் தள்ளுகிறேன்அதிலும், அஸுர ஜன்மத்தில் தள்ளுகிறேன் என்று பகவான்தானே சொல்லியிருக்கிறபடியாலும்

तेषामहं समुद्धर्तामृत्यु संसारसागरात् ।
भवामि न चिरात् पार्थ मय्यावेशित चेतसाम् ॥ 

"தேஷாமஹம் ஸமுத்தர்த்தாம்ருத்யு-ஸம்ஸார-ஸாகராத்|
பவாமி நசிராத் பார்த்தமய்யாவேசிதசேதஸாம்]] ".   (.கீ.அத்-12, ச்லோ-7,)

    இந்தச்லோகத்தில், "என்னிடத்தில் மிகவும் பக்தி பண்ணுபவர்களை ஸம்ஸாரமாகிற ஸாகரத்தினின்றும் எடுத்து விடுகிறேன் மோக்ஷத்தை அடையும்படி செய்கிறேன்” என்று பகவானே சொல்லியிருக்கிறபடியாலும், பாபகர்மங்களைச் செய்பவர்களுக்கு அதற்குப் பலனாக ஜந்ம பரம்பரையாகிற ஸம்ஸாரத்தையும், பகவத்பக்தி பண்ணுபவர்களுக்கு மோக்ஷத்தையும் உண்டாக்குகிறான் என்று கீழ்ச்சொன்ன ச்ருதியின் அர்த்தம் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இதனால்,பகவானுடைய நிக்ரஹத்தால் (தண்டனையால்) ஸம்ஸாரம் என்றும், அநுக்ரஹத்தால் மோக்ஷம் என்றும் கிடைக்கிறது. ஆகையால் பகவானுடைய நிக்ரஹத்தால் ஏற்படும் ஸம்ஸாரம் ஸத்யம் என்று ஸ்பஷ்டமாகிறது.

     தைத்திரீயோபநிஷத்தில் ஆநந்தவல்லியில், பகவானுடைய உபாஸனத்தைச் செய்யுமவன் பரம வ்யோமத்தில் (ஸ்ரீவைகுண்டத்தில்) ப்ரஹ்மத்தோடுகூட ப்ரஹ்மத்தின் குணங்களையும் அநுபவிக்கிறான் என்று சொல்லியிருக்கிற படியால் ஸ்ரீவைகுண்டத்தில் பகவானையும், அவனுடைய கல்யாண குணங்களையும் அநுபவிப்பது மோக்ஷம் என்று கிடைக்கிறது. ஆகையால் ஜீவனும் ப்ரஹ்மமும் வேறு என்கிற ப்ரமம் ஸம்ஸாரமென்றும், ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்ய ஜ்ஞானத்தால் உண்டாகும் அந்த ப்ரமநிவ்ருத்தி முக்தி என்னும் பக்ஷம், ச்ருதி ஸம்மதமன்று என்று ஸ்ரீ பகவத் ராமாநுஜரின் அபிப்ராயம்.

जगत्सत्यत्व निरूपणम्  (ஜகத் ஸத்யத்வ நிரூபணம்)
தொடரும்
.

சனி, 31 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்கரஹம் 7

 இந்தப் பதிவை ஜனவரி 23 அன்று பதிவிட்ட பதிவின் தொடர்ச்சியாகக் கருதிப் படிக்க வேண்டுகிறேன்.

बन्धमोक्षनिरूपणम्
பந்தமோக்ஷநிரூபணம்
*
    இப்படி ப்ரஹ்மம் அந்தக்கரணத்தில் ப்ரதிபலிப்பதால் ஏற்பட்ட ஜீவாத்மா உண்மையில் நிர்விகாரமான ப்ரஹ்மமே. இப்படி இருந்தபோதிலும், அழுக்கற்ற ஸ்படிகத்தில் அதன் ஸமீபத்தில் வைக்கப்பட்ட செம்பரத்தம்பூவின் சிவப்புத் தோன்றுவதுபோல, இந்த ஜீவனுக்கு *உபாதியான அந்தக்கரணத்தின் விகாரமான ராகம், த்வேஷம் முதலியவை இவனிடத்தில் தோன்றுகின்றன. இந்த ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

*उपाधि –– உபாதி-- ப்ரதிபலனத்திற்கு ஆதாரமாயிருப்பது.

   இப்படி ஜீவனுக்கு வந்த ஸம்ஸாரம் நீங்குவதற்கு வழி என்னவென்றால் யாகம், தானம், ஹோமம் முதலிய வைதிக கர்மங்களைக் கொண்டு இந்த ஜீவாத்மா ஈச்வரனை ஆராதித்தால், அவனுடைய அநுக்ரஹத்தால் சித்த சுத்தி பிறக்கிறது. பிறகு மோக்ஷத்தில் ஆசையுண்டாய், அதற்காக வேதாந்த ச்ரவணத்தில் முயற்சிக்கிறான். பிறகு குருவினுபதேசத்தால் 'தத்த்வமஸி' என்கிற வேதாந்த வாக்யத்தின் அர்த்தஜ்ஞானம் உண்டாகிறது. இந்த வாக்யத்தில் 'தத்' என்கிற பதத்துக்கு ஸச்சிதாநந்த ரூபமாய், ஸர்வவிகாரரஹிதமாய் அத்விதீயமான ப்ரஹ்மம் பொருள். த்வம் என்கிற பதத்துக்கு, முஞ்ஜம் என்று சொல்லப்படும் புல்லின் மேல் புரைகளைக் கழித்து அதன் நடுவிலிருக்கும் குருத்தை வேறாக எடுக்குமாப்போலே, சரீரம், இந்திரியம் முதலிய #உபாதிகளோடு கலந்திருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபத்தை விசாரத்தினால் அவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாக விவேகிக்கப்பட்ட சுத்தாத்ம ஸ்வரூபம் பொருள். இவையிரண்டுக்கும் +அபேதம் தத், த்வம் என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்.

#இங்கு உபாதி என்றால் தனக்கு ஸ்வபாவமாகவே இல்லாமல் நடுவில் வந்தவை என்று அர்த்தம்.

+அபேதம் -- பேதமின்மை

  இப்படி குரூபதேசத்தாலே பரோக்ஷரூபமான நிர்விசேஷசிந்மாத்ர ப்ரஹ்மாத்மைக்ய ஜ்ஞானம் உண்டாகிறது. பின்பு குரு முகத்தாலே கேட்ட அர்த்தத்தை இடைவிடாமல் பாவனை பண்ணுவதால், 'தத் த்வமஸி' வாக்யத்தால் ஸாக்ஷாத்காரரூபமான முன்சொன்ன ஜ்ஞாநம் உண்டாகிறது. அப்போது ஸகல ப்ராந்தியும் கழிந்து ப்ராந்திகளுக்கு மூலமான அவித்யையும் கழிந்து சக்கரத்தை சுற்றிவிட்டு, நாம் கையை எடுத்துவிட்டாலும் சுழலுவது சிலகாலம் அநுவர்த்திக்கிறாப்போல இந்தக் கர்மத்தால் ஆரம்பிக்கப்பட்ட சரீரம் மாத்திரம் சிலகாலம் நிற்கிறது. இந்த நிலைமைதான் ஜீவன்முக்த்யவஸ்தை என்று சொல்லப்படுகிறது. பின்பு *ப்ராரப்தகர்மம் கழிந்ததும் சரீரம் கழிந்து விடுகிறது. இந்த நிலை +விதேஹமுக்தி என்றும் கைவல்யம் என்றும் சொல்லப்படும் பரமமோக்ஷம். அதாவது அவித்யாரூபமான ஆவரணம் நிச்சேஷமாய்க் கழிந்து அகண்டாநந்த ப்ரஹ்மஸ்வரூபாவிர் பாவம். இந்த மோக்ஷத்தைப் பெறுவதற்கு வேறு உலகங்களுக்குப் போகவேண்டா. இருந்த இடத்திலேயே கிடைக்கும்.
இந்த ஸித்தாந்தத்தில் ப்ரஹ்மம் தவிர வேறொன்றும் ஸத்யமானது இல்லை என்றும், ஜீவ ப்ரஹ்மங்கள் அபின்னமென்றும் ஒப்புக் கொள்ளுகிறபடியால் இதற்கு அத்வைத ஸித்தாந்தம் என்ற பெயர் உண்டாயிற்று.

பரோக்ஷரூபமான – கண் முதலிய இந்திரியங்களால் நாம் ஒரு விஷயத்தை அறியும்போது உண்டாகும் ஞானத்திற்கு ப்ரத்யக்ஷம் அல்லதுஅபரோக்ஷ ஞானம் என்று பெயர்.அநுமானம் அல்லது சாஸ்திரத்தினால் உண்டாவதற்கு பரோக்ஷஞானம் என்று பெயர்.

நிர்விசேஷ – ஒருவித குணமும் தர்மமுமற்றது.

சிந்மாத்ர –தானாகவே ப்ரகாசிக்கின்ற ஞான ஸ்வரூபமானது.

ப்ரஹ்மாத்மைக்யம் --ப்ரஹ்மமும் ஆத்மாவும் ஒன்றே என்பது.

ப்ராரப்தகர்மம் -- பலத்தைக்கொடுக்க ஆரம்பித்த புண்ய பாபகர்மம்.

அகண்டாநந்த -- பூர்ண ஆனந்த ரூபமான

ஆவிர்பாவம் --மறைந்து இருந்த வஸ்துவினுடைய தோற்றம்.

அத்வைத ஸித்தாந்த ப்ரகரணம் முடிந்தது.

புதன், 28 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 3 தொடர்ச்சி

 இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வரும் சிலர் அடியேனை மன்னிக்க வேண்டும். இதில் ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 3 என்ற தலைப்பில் ஜனவரி 7ம் தேதி இட்ட பதிவு பாதியில் நிற்கிறது. கவனக்குறைவாக அடுத்த பகுதிக்குச் சென்றிருக்கிறேன்.  அதனால் இந்தப் பகுதியை த்வைத சம்ப்ரதாய ஸித்தாந்தத்தின் தொடர்ச்சியாகப் படிக்க வேண்டுகிறேன். விடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய திரு குமரன் அவர்களுக்கு நன்றி. 

த்வைத ஸித்தாந்த ப்ரகரணம் (தொடர்ச்சி)


            மனுஷ்யோத்தமர்கள் த்ருண-ஜீவர், தத்வ்யதிரிக்த- ஜீவர் என்று இருவகைப்பட்டிருப் பார்கள். த்ருண - ஜீவர் ப்ரஹ்மத்தின் 'ஆத்மா' என்கிற ஒரு குணத்தை உபாஸிக்கிறவர்கள் இவர்கள் அபரோக்ஷ-ஞானம் பிறந்த பிறகு தேஹநாசாநந்தரம் இங்கேயே முக்தியை அடைகிறார்கள். த்ருண-ஜீவரைக் காட்டிலும் வேறுபட்ட மனுஷ்யோத்தமர் ப்ரஹ்மத்தின் ஸத், சித், ஆநந்தம், ஆத்மா என்கிற நான்கு குணங்களை உபாஸிப்பார்கள். இந்த முக்தி-யோக்யர்கள் மோக்ஷ-ஸாதன அநுஷ்டானத்தால் மோக்ஷத்தை அடைய யோக்யதையுடையவர்கள். இவர்கள் ஸதாசாரம், பகவத் பக்தி முதலான நல்ல குணங்களை யுடையவராயிருப்பார்கள். இவர்களில் சிலருக்கு சில காலத்தில் துர்குணம் உண்டாவது அஸுராவேசத்தாலே.

   எப்போதும் ஸுக-துக்கங்களைக் கலந்து அனுபவிப்பார்கள் நித்ய ஸம்ஸாரிகள்.  இவர்கள் புண்ய-கர்மங்களால் ஸ்வர்க்கம் போவதும், பாப-கர்மங்களால் நரகம் போவதும், பூலோகத்திற்கு வருவதுமாக சுற்றிக் கொண்டேயிருப்பார்கள்.

     தமோயோக்யர் தைத்யர், அஸுரர், பிசாசர், மனுஷ்யாதமர் என்று நான்கு விதம். இவர்கள் முடிவில் நித்யமான நரகத்திலேயே விழுந்துவிடுவார்கள். இவர்கள் பகவானிடத்திலும், பகவத் பக்தர்களிடத்திலும் த்வேஷம், துராசாரம் முதலான துர்க்குணங்களையுடையவராயிருப்பர்.

   ஜீவாத்மாக்கள் எல்லாரும் ஞான ஆநந்த-ஸ்வரூபர்கள். மிகவும் அணு-பரிமாணமுடைய வர்கள். பகவானுக்குக் கிங்கரர்கள். முக்தி-யோக்ய-ஜீவர்களில் ஸ்தாவர ஜீவர்களைக் காட்டிலும் பசு-பக்ஷ்யாதி-ஜங்கம-ஜீவர்கள் பக்தி, பகவத் ப்ரியத்வங்களிலும், அதன் மூலமாக மோக்ஷதசையில் வரும் ஆநந்தானுபவத்திலும் மேற்பட்டவர்கள். இவர்களைக் காட்டிலும் மனுஷ்யர் உத்தமர்; இவர்களைவிட ப்ராஹ்மண-னுஷ்யர் உத்தமர்இவர்களைக் காட்டிலும் சக்ரவர்த்திகள் நூறுபங்கு குணாதிகர். சக்ரவர்த்திகளைக் காட்டிலும் மனுஷ்ய-கந்தர்வர் நூறு பங்கு குணாதிகர்கள். இப்படியே மேல் மேல் சதுர்முக-ப்ரஹ்ம-பர்யந்தமான ஜீவர்கள் ஞானாதிகளில் தாரதம்யமுள்ளவர்கள். இந்த தாரதம்யம் இந்த ஸித்தாந்தத்திற்கு முக்யாம்சம்.

மோக்ஷமாவது ஸ்வரூப-ஆநந்த-அனுபவம். இந்த அனுபவம் ஸம்ஸார-தசையில் கர்மத்தா லுண்டான ப்ராக்ருத-தேஹ-ஸம்பந்தத்தால் தடைபட்டு பகவதனுக்ரஹத்தால் மோக்ஷ-தசையில் இந்தத் தடை நீங்கியபிறகு வைகுண்டலோகத்தில் வரும். இதில் ஜீவர்களில் அவரவர்கள் யோக்யதைக்குத் தக்கப்படி சிலருக்கு ஸாலோக்யமும், சிலருக்கு ஸாமீப்யமும், சிலருக்கு ஸாரூப்யமும், சிலருக்கு ஸாயுஜ்யமும் வரும்.

ஸாலோக்யமாவது (सालोक्य) :-- வைகுண்டலோகத்தில் எங்கேயாவது இருந்து யதேஷ்டமான போகத்தை அனுபவிப்பது.

ஸாமீப்யமாவது( सामीप्य) :- பகவத்-ஸமீபத்திலிருந்து யதேஷ்டமானபோகத்தை அனுபவிப்பது.

ஸாரூப்யமாவது (सारूप्य):-பகவானைப்போல் நான்கு கைகள், சங்கு, சக்கரம் முதலியவைகளை யுடையவர்களாய் யதேஷ்டமாய் போகத்தை அனுபவிப்பது.

ஸாயுஜ்யமாவது(सायुज्य.) :-பகவானுடைய சரீரத்தில் ப்ரவேசித்து யதேஷ்ட போகத்தை அனுபவிப்பது. இப்படி முக்தர்கள் எல்லாரும் தாரதம்யமுள்ளவர்களாயிருப்பார்கள்.

இந்த மோக்ஷத்திற்கு பக்தியோடு கூடின பகவதுபாஸனம் ஸாதனம். இந்த உபாஸனம் மனுஷ்யோத்தம-கணம் முதல் ப்ரஹ்ம-கணம் வரையில் ஏக-குணோபாஸனம், சதுர்-குணோ பாஸனம், அநேக குணோபாஸனம் என்று பஹுவித-தாரதம்யத்தோடு கூடியதாயிருக்கும்.

ப்ரத்யக்ஷம், அநுமானம். ஆகமம் என்னும் இவை மூன்றும் வஸ்துக்களை அறிவதற்கு ஸாதனமான ப்ரமாணங்கள். ஸர்வ- வேதங்களுக்கும் பொருள் பரப்ரஹ்மமே என்று இந்த ஸித்தாந்தத்தில் ஒப்புக்கொள்ளப்படுகிறது.

இந்த ஸித்தாந்தத்தில் ஜீவ-ப்ரஹ்மங்களுக்கு ஸ்வரூப-பேதம் ஒப்புக்கொள்ளுகிற படியால் இது த்வைத-ஸித்தாந்தம் என்று சொல்லப்படுகிறது.

த்வைத-ஸித்தாந்த ப்ரகரணம் முடிந்தது.