வியாழன், 23 பிப்ரவரி, 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 35

அறுபதாவது ஸர்க்கம்

(அயோத்தியைச் சேர்ந்த லஷ்மணன், ஸ்ரீராமனிடம்,

அவனது கட்டளை நிறைவேற்றப்பட்டதைக் கூறி, அவரைத் தேற்றியது)

மறுநாள் உதயமானவுடன் லக்ஷ்மணன் கேசினியாற்றங்கரையை விட்டுப் புறப்பட்டு அன்று நடுப்பகலில் அயோத்தி போய்ச்சேர்ந்தான். லக்ஷ்மணன் ஸ்ரீராமனிடம் சென்று, தலை குனிந்து கொண்டு, வாடிய முகத்துடன் கண்களில் நீர் பெருக அவரை வணங்கி, “அண்ணா! தேவரீருடைய ஆஜ்ஞைப்படி, அடியேன் ஸீதா தேவியை கங்கா தீரத்திலுள்ள, பரிசுத்தமான ஸ்ரீவால்மீகி முனிவரது ஆச்ரமத்தினருகே விட்டுத் திரும்பி வந்து சேர்ந்துள்ளேன். புருஷச்ரேஷ்டரான தேவரீர் இனி இது விஷயமாக சோகிக்க வேண்டாம். காலத்தின் கதி இப்படியாக உள்ளது. கற்றுணர்ந்த மகான்கள், இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் (அதிகக்களிப்படையமாட்டார்கள்). துயரங்கள் மிகுந்தாலும் முனியார் (வாட்டமுறார்). அவர்களுக்குச் சுகதுக்கங்கள் இரண்டும் ஒன்றேயாகும். எவ்விதமான செழிப்புக்கும் இறுதியில் அழிவு என்பது ஒன்றுண்டே. உயர எழுகின்றவை யாவும் இறுதியில் கீழே விழுகின்றனவையே. அவ்வாறே சேர்க்கைக்கு பிரிவும், உயிர்வாழ்க்கைக்கு மரணமும், அவசியமுண்டாகின்றவையே. ஆகவே, புத்திரன், மனைவி சிநேஹிதன் முதலியோர்களிடமும், தனத்திலும், அதிகமான மனப்பற்று வைக்கலாகாது. என்றைக்கேனும் அவர்களது வியோகம் ஸம்பவிக்குமென்பது நிச்சயம்.

सर्वे शयान्ता नियाः पतनान्ता स्समुच्छ्रयाः ।
संयोग वियोगान्ताः मरणान्त ञ्च जीवितम् ॥
तस्मात् पुत्रेषु दारेषु मित्रेषु च धनेषु च ।
नातिप्रसङ्गः कर्तव्यः विप्रयोगो हि तं ध्रुवम् ॥

ஸர்வே க்ஷயாந்தா நிசயா: பதநாந்தா: ஸமுச்ரயா: ]
ஸம்யோகா விப்ரயோகாந்தா மரணாந்தம் ச ஜீவிதம்
||
தஸ்மாத் புத்ரேஷு தாரேஷு மித்ரேஷு ச தனேஷுச
|
நாதிப்ரஸங்க
: கர்தவ்ய: விப்ரயோகோஹி தைர் த்ருவம்

என்பதையறிந்துள்ளீரன்றோ?

அண்ணா! தேவரீர் இப்படி மனங் கலங்கினால் மீண்டும் நமக்கு உலகாபவாதம் ஸம்பவிக்கும். ஆதலால் தேவரீர் தைரியத்தைக் கைக் கொண்டு வீணான வியஸனத்தை விலக்கிடவும் என்று வேண்டினான். லக்ஷ்மணன் இப்படிக்கூறக் கேட்டு ஸ்ரீராமபிரான், சிறிது மகிழ்ச்சியுடன் அவனை நோக்கி 'லக்ஷ்மண! நீ கூறியவை யாவும் நியாயமானவையே. உனது வார்த்தையைக் கேட்டு நான், மானக்கவலையொழிந்து, மகிழ்ச்சியுறலாயினேன்” என்றருளிச் செய்தான்,

அறுபத்தி ஒன்றாவது ஸர்க்கம்

(அரசனிடம், நீதியைத் தேடி வருபவர்களை உபேக்ஷித்தல் கூடாது என்னும் விஷயத்தில் 'நீருகன்' எனகிற அரசனுக்கு ஏற்பட்ட சாபத்தை, ஸ்ரீராமன் லக்ஷ்மணனிடம் கூறி, தம்மிடம் நீதி வேண்டி வருபவர்களை உடனுக்குடன் விசாரித்து நீதியளித்து அனுப்புமாறு உத்திரவிட்டது)

                ஸ்ரீராமச்சந்திரன், லக்ஷ்மணன் கூறியதைக் கேட்டு சாந்தியை யடைந்தார். பிறகு அவர் லக்ஷ்மணனை நோக்கி,“ஸுமித்ரை பெற்ற செல்வனே! லக்ஷ்மண! நான் நான்கு தினங்களாக. (மனங்கலங்கியிருந்தபடியால்) ராஜ காரியங்களொன்றையும் விசாரித்துச் செய்யவில்லை. அப்படிச் செய்யாமலிருந்தது என் மனதை மிகவும் துன்புறுத்துகிறது. ஆகவே, உடனே. புரோஹிதர்களையும் மந்திரிகளையும், ஸ்த்ரீகளோ, புருஷர்களோ, தங்களுடைய காரியத்தின் பொருட்டு வந்துள்ள நாட்டு ஜனங்கள் அனைவரையும், இங்கு வரவழைக்கவேண்டும். விசாரித்து ஆவன செய்யவேண்டும். நகரத்து ஜனங்களுடைய காரியத்தை பிரதிதினமும் எந்த அரசன் கேட்டு விசாரிக்கவில்லையோ, அவன் இறந்தபின், மிகக் கொடிய நரகத்தில் விழுந்து வருந்துவான். இது. நிச்சயம். லக்ஷ்மண! இதைப்பற்றி, முன்பு நடந்த ஒன்றைக் கூறுகிறேன், கேள்.

                முன்னொரு காலத்தில், ஸத்யமும் நன்னடத்தையுமுடைய 'ந்ருகன்' என்கிற அரசன், கன்றுகளுடன் கூடிய ஒரு கோடிப் பசுக்களை, பொன்னாபரணங்களால் அலங்கரித்து, புஷ்கர க்ஷேத்திரத்தில் பிராம்மணர்களுக்கு தானம் செய்தான். அப்படி தானம் செய்யப் பட்ட பசுக்களில், ஓர் ஏழை பிராம்மணனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பசு, மற்ற பசுக்களுடனே கூடி வேறிடம் சென்று விட்டது. பசியால் வருத்தமடைந்த அவ்வந்தணன், தனது பசுவைத் தேட விரும்பி, பல ஆண்டுகள், பற்பல தேசங்களிலும் சென்று தேடினான். அப்படித் தேடுகையில், 'கன கலம்' என்கிற ஒரு கிராமத்தில், ஒரு பிராம்மணன் வீட்டில் அப்பசுவைக் கண்டான். அப்பசுவும் அதன் கன்றும் மிகவுமிளைத்து, அன்றே இறந்து விடுபவை போலிருந்தன. தனது பசுவைக் கண்ட பிராம்மணன், அதனைப் பெயரிட்டழைக்க, அதுவும் அவனது குரலை யறிந்து, அவனைப் பின் தொடர்ந்து செல்லலாயிற்று. அதைக் கண்ட அப்பசுவை வளர்த்த பிராம்மணன் அதனைப் பின்தொடர்ந்தோடி, அது தன்னுடையதென்று அவனிடம் வாதாடினான். அந்தப் பிராம்மணர்களிருவரும், அப்பசு விஷயமாக விவாதம் செய்து கொண்டு அதனுண்மையை விசாரித்தறிய, அதை தானம் செய்த அரசனிடம் போய்ச் சேர்ந்தனர். அவர்களிருவரும், அரசனின் அரண்மனையின் வெளியில், வெகு நேரம் காத்திருந்தும் உள்ளே செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை. எத்தனை நாட்கள் காத்திருந்தும் அவர்களுக்கு அரச தரிசனம் கிடைக்கவில்லை. அவர்களிருவரும் கோபமுற்று, 'ஓ அரசனே! உன்னிடம் ஒரு காரியம் வேண்டி வந்த, ஏழைகளான எங்களுக்கு' நீ, கண்ணிற் படாது மறைந்திருந்தமையால், நீ ஒரு ஓணானாகி. ஒரு குழியில் வீழ்ந்து, அனேகமாயிரம் வருஷங்கள் வஸித்திருப்பாயாக, என்று சபித்தனர். ஆயினும் அவ்விருவரும், அவ்வரசனிடம் கருணை கொண்டு. கலியுகம் வருவதற்கு முன்னே பூமியின் பாரத்தை நீக்கும் பொருட்டு, நரநாராயணர்களிருவரும் இப்பூமியின்கண் பிறக்கப் போகின்றனர். அவர்களில் நாராயணனான ஸ்ரீவாஸுதேவனை தரிசித்தவளவில் உனக்கு இச்சாபம் நீங்கும்', என்று கூறி, விவாதத்தை விட்டவர்களாகி, அப்பசுவை வேறெரு பிராம்மணனுக்கு தானங் கொடுத்து தம்மிடஞ் சென்றனர்.

                அவ்வரசன் மிகக் கொடியதான அந்த சாபத்தை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறான். லக்ஷ்மணா! ஆகவே நம்மைத் தேடி வருகின்றவர்களுடைய காரியத்தை விசாரியாது, வருந்தச் செய்வது, அவர்களுக்குப் பெரிய பாதகமாகும். ஆதலால் நம்மிடம் காரியமாக எவரேனும் வந்திருப்பார்களே யாகில், அவர்களை அதிசீக்கிரத்தில் இவ்விடம் வரவிடுக”, என்று கட்டளையிட்டார்.

அறுபத்தியிரண்டாவது ஸர்க்கம்

(ந்ருகராஜா தனது புத்திரனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து, தான் சாபத்தை அனுபவித்தது)

                லக்ஷ்மணன் இராமன் சொன்னதைக் கேட்டு, பிறகு இராமனை நோக்கி “அண்ணா! சிறிய பிழைக்குப் பெரிய தண்டனை போன்ற சாபத்தைப் பெற்ற அவ்வரசன் என்ன செய்தான்?” என்று கேழ்க்க ஸ்ரீராகவன் கூறியது—

                “ஸஹோதர! மேல் நடந்தவற்றைக் கூறுகிறேன் கேள். தனக்குப் பிராம்மணர்களால் நேர்ந்த கொடிய சாபத்தை, அவ்வரசன் தனது யோகத்ருஷ்டியினால் கண்டறிந்து, மந்திரிகள் நீதிமான்கள், புரோஹிதர்கள் முதலியவர்களை வரவழைத்துப் பின்வருமாறு கூறினான் - ‘பெரியோர்களே! நான் சொல்லப்போவதைக் கேளுங்கள். நாரதரும் பர்வதரும் பிராம்மணர்களாக வந்து எனக்குச் சாபமிட்டு வானுலகம் சென்றனர். நான் சாபத்தை அநுபவிக்க வேண்டி யுள்ளது. எனவே எனது குமாரனான வஸுவை அரசனாகச் செய்ய விரும்புகிறேன். அதற்கான காரியங்களைச் செய்யுங்கள். மேலும், நான் ஓணானாக உருக்கொண்டதும், வஸிப்பதற்கான குழிகளையும் நிர்மாணம் செய்யுங்கள். அவைகளில், ஒன்று, மழையிலிருந்து காப்பதாகவும், மற்றொன்று பனியினின்று காப்பதாகவும், மூன்றாவது வெய்யிலின் கொடுமையிலிருந்து காப்பதாகவும் இருக்க வேண்டும். அவைகளைச் சுற்றிலும், பழங்களாலும், வாஸனை நிறைந்த பூக்களும் நிரம்பிய செடி கொடிகள் இருக்குமாறும் செய்யுங்கள். நான் அவைகளில் ஸுகமாக வஸித்து எனது சாப காலத்தைப் போக்குகிறேன்," என்றான்.

                மேலும் தனது குமாரனான வஸுவை நோக்கி "குமார! நீ, சிறு பிழையின் பொருட்டு நான் சபிக்கப்பட்டதை யறிந்து எப்பொழுதும் தர்மிஷ்டனாகவே இருந்து கொண்டு பிரஜைகளை ரக்ஷித்து வரவும், இதற்காக நீ வருந்தாதே. தர்மதேவன் நேர்மை யானவனே.

प्राप्तव्यान्येव प्राप्नोति गन्तव्यान्येव गच्छति ।
सन्धव्यायेव लभत दु
:
खानि च सुखानिच।।
पूर्व जात्यन्तरे वत्स मा विषादं कुरुष्व ह ।

ப்ராப்தவ்யாந்யேவ ப்ராப்னோதி கந்தவ்யான்யேவ கச்சதி|
லப்தவ்யான்யேவ லபதே து
:கானிச ஸு-கானிச |
பூர்வே ஜாத்யந்தரே வத்ஸ
!
மா விஷாதம் குருஷ்வ ஹ|

                'மனிதன். அடைய வேண்டியகளையேதான் அடைகிறான். செல்ல வேண்டியவிடங்களுக்கே தான் செல்கிறான், ஸுகங்களையோ, துக்கங்களையோ அடைய வேண்டியவைகளையேதான் அடைகிறான். இவையனைத்தும் முன் வினைக்குத் தக்கவையாகவே ஆகின்றான்.இது நியதி.

                இப்படிக் கூறிய ந்ருகன், ஓணானுருவை யடைந்து, நிர்மாணிக்கப்பட்ட குழிகளில் புகுந்து சாபத்தை யனுடவிதது வருகிறான்." என்றார்.

அறுபத்து மூன்றாவது ஸர்க்கம்

[அரசனான நிமியும் வஸிஷ்ட முனிவரும், ஒருவரை யொருவர் சபித்துக் கொண்டு, சரீரத்தை விட்டது.]

                மேலும் ஸ்ரீராமன் தனது இளைய ஸஹோதானான். லக்ஷ்மணனைப பார்த்து-'இஃதொன்று மட்டுமேயன்று, இதற்கு திருஷ்டாந்தமாக வேறொரு கதையுமுண்டு,' என்றான்.

                இதைக் கேட்ட லக்ஷ்மணன், “அண்ணா! இப்படிப்பட்டவைகளைக் கேழ்க்க எனக்கு விருப்பமதிமாகவே உள்ளது, கூறவும்,” என்று பிரார்த்திக்க, ஸ்ரீராமன் கூறியது - “மஹாத்மாவான இக்ஷ்வாகு ரரஜனுக்குப் பனிரெண்டாவது புத்திரனாகிய 'நிமி' யென்னும்-சக்கரவர்த்தி யொருவர் இருந்தார். அவர் கௌதம முனிவரின் ஆச்ரமத்தருகே, அமராவதிக்கு நிகரான, 'வைஜயந்தம்' எனப் பெயர் பெற்ற, அழகிய நகரமொன்றை நிர்மாணம் செய்து அதில் வஸிக்கலானார்.

                அப்படி யிருக்கையில், அவ்வரசர், 'தீர்க்க ஸத்ரம்' எனப் பெயர் பெற்ற ஒரு யாகத்தைச் செய்யக் கருதி, அதற்குப் புரோஹிதராயிருந்து நடத்தி வைக்குமாறு தனது குல குருவான வஸிஷ்டரைப் பிரார்த்தித்தார். ஆனால் அவர் அரசனைப் பார்த்து "தேவேந்திரன் இதற்கு முன்பே, தனது வேள்விக்கு வருமாறு என்னை வேண்டிக் கொண்டான். அது முடிந்த பின்னர் நீ யாகத்தை ஆரம்பிக்கலாம்' என்று விடையளித்துச் சென்றார். வஸிஷ்டர் திரும்பிவரும் வரை காத்திருக்க மனமில்லாத நிமிச் சக்கரவர்த்தி, அத்ரி, அங்கிரஸ், பிருகு முதலிய தபோதனர்களைப் புரோஹிதர்களாக வரித்து, மற்றுமுள்ள வேதியர்களையும் வைத்துக் கொண்டு. இமயமலைச்சாரலில் தமது நகரத்தருகே கௌதம முனிவரைக் கொண்டு யாகம் செய்யலானார். ஐயாயிரம் வருஷம் தீக்ஷை கொண்டார் அரசர்.

                இஃது இவ்வாறிருக்க, தேவலோகஞ் சென்ற வஸிஷ்டர், இந்திரனது யாகம் முடிந்ததும், தம் அரசனான நிமிச் சக்கரவர்த்திக்கு யாகம் செய்விப்பதன் பொருட்டு விரைந்து வந்தார். வந்தவிடத்தில் அரசர் கௌதமரைக் கொண்டு யாகம் செய்வது அறிந்து, கோபம் கொண்டார். ஆயினும் அரசனைக் காண வேண்டும் எனக்கருதி, அவனரண்மனை வாயிலிற் சென்று ஒரு முகூர்த்த காலம் காத்திருந்தார். அப்பொழுது அரசர் களைப்பினால். நித்திரை செய்து கொண்டிருந்தபடியால் வஸிஷ்டர், அரசன் தன்னை வேண்டுமென்றே, எதிர் கொண்டழைக்காமல் காக்க வைத்தான் எனக் கருதி, கோபங் கொண்டு. ''அரசனே! நீ என்னை அவமதித்தபடியால், உனது உயிர் உடலை விட்டுப் பிரியக் கடவது'' எனச் சாபமிட்டார். பிறகு துயிலெழுந்த நிமிச் சக்கரவர்த்தி தனக்கு நேர்ந்த சாபத்தை யுணர்ந்து, அதிகமாகக் கோபங் கொண்டு. 'நான் உடம்பு தெரியாமல் துயிலுமளவில், நீர் கோபத்தினால் வீணாக என்னைச் சபித்தபடியால், உமது அற்புதமான உடலும், ஜீவனழிந்ததாகக் கடவது” என வஸிஷ்டருக்குச் சாபங் கொடுத்தார் இப்படியாக மஹாப்பிரபாவசாலிகளான, அந்தணர் பெருமானும், சக்கரவர்த்திப் பெருமானும். உள்ளங் கலங்கி ஒருவருக்கொருவர் சாபமளித்த வளவில் இருவரும் உடலை விட்டு உயிர் நீங்கினவர்களாயினர்.

புதன், 22 பிப்ரவரி, 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம்–உத்தரகாண்டம் 34

ஐம்பத்தி ஏழாவது ஸர்க்கம்

(ஸ்ரீராமனின் ஸந்தேகத்தைக் கேட்டு மூர்ச்சையடைந்த ஸீதாதேவி, தெளிந்து எழுந்து,
ஸ்ரீராமனின் பொருட்டு செய்தி கூறுவது, லக்ஷ்மணன் திரும்பிச் செல்வது.)

லக்ஷ்மணன் கூறிய கடுமையான இந்த வார்த்தையைக் கேட்டு, ஜனகநந்தினீ, துக்கம் மேலிட்டவளாய் சரேலெனப் பூமியில் விழுந்து, மூர்ச்சையடைந்தாள். ஒரு முஹுர்த்த காலம் சென்றபின், தெளிந்து எழுந்து, கண்ணுங் கண்ணீருமாய் லக்ஷ்மணனைப்பார்த்து **லக்ஷ்மண! என்னைப் பிரம்மதேவன், துக்கத்தையனுபவிப்பதற்கென்றே ஒரு பெண்ணாகப் படைத்துள்ளான் போலும். எனது தேகம் முழுவதுமே துக்க வடிவமாகவன்றோ காணப்படுகிறது. நான் முற்பிறவியில் என்ன பாபம் செய்தேனோ! யாரைப் பெண்டிருடன் சேரவொட்டாமல் தடுத்தேனோ? அப்படியில்லையேல், ஒரு பாபமுமறியாது, கணவனே கதியெனக் கொண்டு நல்வழியிற் செல்லுமென்னை இங்ஙனம் நம்மன்னவர் துறக்க நேரிடுமோ? ஐயோ!! யாருமில்லாத இந்த வனத்தில் நான் எவ்வாறு வஸிப்பேன்? இப்பெரிய துக்கத்தை யாரிடம் பகருவேன்? முனிவரிடம் நான் என்னென்று கூறுவேன்? ராகவன் ஏதோ ஒரு காரணம் பற்றி என்னைத் துறந்தனன். இது பொறுக்கத் தகுந்ததன்றாதலால், நான் இப்பொழுது இக்கங்கையில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம். லக்ஷ்மணா! இங்ஙனம் நான் செய்வேனாயின், அது களங்கமற்ற மகா குலத்தில் பிறந்த எனது கணவனுக்கு ஒரு பெரிய பழிப்பாகுமாதலால் அங்ஙனம் செய்யத் துணிகின்றிலேன். இனிச் செய்வதென்ன? மன்னவன் உனக்கிட்ட கட்டளைப்படிச் செய், நடந்தது நடந்து விட்டது. ஆயினும், நீ என் கணவரையும், மாமிமார்களையும், நான் கைகூப்பித் தலை வணங்கியதாகக் கூறுவாயாக. மேலும் தருமமே வடிவெடுத்த உனது தமையனாரிடத்தில், என் பேச்சாக மிக்க வினயத்துடன் ஒன்று கூற வேண்டும். அஃதென்னவெனில், ஹே ராகவ! இத்துணைகாலம் அடியேனுடன் பழகி, எனது உள்ளமும் ஒழுக்கமும் தூய்மையும் பக்தியும், எத்தன்மையானவையென்று தேவரீர் நன்கு உணர்வீர். ஆயினும் அபகீர்த்திக்கஞ்சி, அடியாளை அரண்யத்தில் விடச் செய்தீர். ஹே வீர! லோகாபவாதத்தினால் உங்களுக்கு ஏதேனும் அபகீர்த்தி யுண்டாகுமாகில் அதனைப் பரிகரிப்பது அடியாளுக்கும் கடமையாகும். கற்புடைய பெண்டிற்குக் கணவனன்றோ கதி!

ஹே லோகநாத! எனது சரீரத்தைப் பற்றி நான் அத்தனையாகக் கவலைப்படுகிறேனல்லேன். லோகாபவாதத்திற்கே நானும், மிகவுமஞ்சி ஆயாஸமுறுகின்றேன். ஸ்திரீகளுக்குக் கணவனே தெய்வம், கணவனே குருவும் பந்துவுமாவான். ஆகவே கணவனது காரியம், பெண்களுக்குப் பிராணனிலும் பிரியமானதாகும்” என இவ்வாறு யான் சொன்னதாக ஸ்ரீராமனிடம் விண்ணப்பம் செய். இப்பொழுது நான் ருது காலம் நீங்கி, கர்ப்பக்குறியுள்ளவளாயிருக்கிறேன். என்னை நன்றாக உற்றுப் பார்த்து, இதனையறிந்து கொண்டு செல்லவும்' என்றாள்.

இங்ஙனம் ஸீதை கூறியதைக் கேட்டு லக்ஷ்மணன் மனங்கலங்கியவனாகி, அவளைத் தரையில் விழுந்து வணங்கி, தேவி! இதுவரையில் அடியேன் தேவரீருடைய பாதாரவிந்தங்களைத் தவிர, திருமேனியை ஒருபொழுதும், ஸேவித்தவனல்லனே. ஸ்ரீராமனைவிட்டுப் பிரிந்திருக்கும் தருணத்தில், இவ்வனத்தில் தேவரீரது திருமேனியை அடியேன் எங்ஙனம் நோக்குவேன்? என்று கூறி அவளைப் பிரதக்ஷிணம் செய்து, மீண்டும் வணங்கி, விடைபெற்றுக் கொண்டு, ஓடமேறிக் கங்கையின் வடகரையை யடைந்தான். தென் கரையில் தனிமையில் விடப்பட்ட ஸீதை, தூரத்தில் செல்லும் லக்ஷ்மணனையும். தேரையும், பலதரம் பார்த்துத் துயரமதிகரித்தவளாகி, 'கோ'வென்று புலம்பலாயினள்.

ஐம்பத்தி எட்டாவது ஸர்க்கம்

(முனிகுமாரர்கள் மூலமாக ஸீதையின் ஆகமனத்தையறிந்த வால்மீகி மஹரிஷி,
அவளிருப்பிடஞ் சென்று, அழைத்து வந்து, ரிஷிபத்னிகளிடம் அவளை ரக்ஷிக்கச் சொன்னது).

அங்கு ஸீதா பிராட்டி துக்கத்துடன் அழுது கொண்டிருப்பதைக் கண்ட முனிகுமாரர்கள், ஓடோடிச் சென்று வால்மீகி முனிவரிடம் பின்வருமாறு கூறினர். - "ஹே முனிச்ரேஷ்டரே! நாங்கள் தங்களை வணங்குகிறோம். பகவானே! யாரோ ஒரு மஹானுடைய மனைவி, இதற்குமுன் பார்க்கப் படாதவள், மஹாலக்ஷ்மீ போன்று விளங்குமவள், பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருக்கிறாள். தேவலோகத்திலிருந்து நழுவிய தேவதை போலுள்ள அவள் கங்காதீரத்தில், ரக்ஷகனற்றவளாக துக்கித்திருக்கிறன். அவளைத் தாங்கள் வந்து காணவேண்டும்" என்றனர்.

அவர்களுடைய அந்த வார்த்தையைக் கேட்ட வால்மீகி மஹரிஷி, தனது ஜ்ஞான திருஷ்டியினால் நடந்தவற்றை யறிந்து, உடனே ஸீதையிருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றார். அவளைக் கண்டவுடன் அம்முனிவர், தமது தேஜஸ்ஸினாலேயே, களிப்புறச் செய்து மதுரமான குரலில் "ஹே ஜானகி! ஸ்ரீராகவனது பத்தினியே! நீ சிறந்த பதிவ்ரதா சிரோமணியல்லவா? உனக்கு ஒரு குறையுமில்லை. நீ இங்கு வருகையிலேயே, எனது யோக திருஷ்டியினால் உனது வரலாற்றை நானுணர்ந்தேன். ஹே ஸீதா தேவியே! நீ குற்றமற்ற குணபூஷணையென யான் நன்கறிவேன். இனி நீ துக்கத்தை விடுத்து மனத்தெளிவு பெறுவாயாக. எனது ஆச்ரமத்திற்கருகில் பல பெண்டிர்கள் தவம் புரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் உன்னைத் தங்களுடைய பெண் போலவே பாவித்துப் பாதுகாத்து வருவார்கள். இனி மனக்கவலையொழிந்து தைரியங் கொண்டு, உனது சொந்த மாளிகையிற் போலவே, நீ இங்கு வஸித்து வரவும்” என்று கூறினார். வால்மீகி முனிவருடைய, செவிக்கினிய சிறந்த வார்த்தையைக் கேட்டு, ஸீதா பிராட்டி அவருடைய திருவடிகளை வணங்கிக் கை கூப்பிக் கொண்டு, 'அப்படியே' யென்று உடன்பட்டு, அவரைப் பின் தொடர்ந்து அவருடைய ஆச்ரமத்திற்குச் சென்றள்.

ஸீதையுடன் வந்துள்ள வால்மீகியை, அங்கு உள்ள தாபஸப் பெண்மணிகள், எதிர்கொண்டு வந்து வணங்கி, ஸ்வாகதம் கூறினர். வெகுநாட்களுக்குப பிறகு தேவரீரை தரிசிக்கும ·பாக்யம் அடியார்களுக்கு கிடைத்தது, என்று கூறியதுடன், நாங்கள் செயயவேண்டியது ஏதேனுமுணடாகில், அருளிச் செய்யவும், செய்வதற்கு ஸனைத்தர்களாக உள்ளோம், எனறும் விணணப்பம் செய்தனர்.

அவர்களுடைய இவ்வார்த்தையைக் கேட்ட முனிவர், அவர்களை நோக்கி இவன் ஸ்ரீராமச் சந்திரனுடைய மனைவி, ஸீதாதேவி. தசரத மஹாராஜனின் நாட்டுப்பெண்ணும் ஜனகமகாராஜனுடைய புத்திரியுமாவாள். பழிபாவமொன்றுமில்லாத இவளைக் கணவன் விட்டுவிட்டமையால், இவள் இங்கு வந்து சேர்ந்தனள். இவளையென்றும் பரிபாலிப்பது எனது முக்கியமான கடமையாகும். இவளிடத்தில் நீங்கள் அதிகமானப் பிரீதியை செலுத்தி, இவளை ஒரு கண்போலப் பரிபாலித்து வரவேண்டும்" என உரைத்து ஸீதையை அவர்களிடம் ஒப்புவித்துச் சீடர்களுடன் வெளியில் சென்றார்.

ஐம்பத்தியொன்பதாவது ஸர்க்கம்

(லக்ஷ்மணன் துக்கமடைவதும், சுமந்திரர் அவனைத்தேற்றி, முன் நடந்ததைக் கூறுவதும்)

இது இப்படியிருக்க, ஸீதையை அங்குவிட்டுச் சென்ற லக்ஷ்மணன், அவள் வால்மீகியின் ஆச்ரமத்துள் சென்றதைக் கண்டு, மனங்கலங்கியவனாகி, ஸுமந்திரரை நோக்கி, "ஹே ஸூத! மிகவும் பரிசுத்தையான ஸீதையைப் பிரிந்த ராமன் தனியே வஸிக்க நேர்ந்தது முந்தைய ஜன்ம பாப விசேஷமேயென்று எண்ணுகிறேன். ஒன்றுமறியாத பட்டணத்து ஜனங்கள், ஏதோ பிதற்றினார்களென்று. ஸீதையின் விஷயத்தில், அபகீர்த்திக்கிடமாகிய, இப்படிப்பட்ட கொடிய செய்கையை, தருமத்தையே துணையாகக் கொண்டவனான, யாரேனும் செய்யத்துணிவானே?" என்று கூறி வருத்தமடைந்தான்.

அப்பொழுது ஸுமந்திரன் லக்ஷ்மணனை நோக்கி, 'இளையவனே! விதியை வெல்ல யாரால் முடியும்? ராமன் இப்படியாக, அற்ப பாக்யமுள்ளவனாகித் துன்பமே அதிகமனுபவிப்பானென்பது முன்பே முனிவர்களால், உனது தகப்பனரின் முன்பாகவே வெளியிடப்பட்ட ரகசியம். இஷ்ட ஜனங்களை விட்டுப்பிரிவது ராமனுக்கு விசேஷமாக ஸம்பவிக்கும். இப்பொழுது மஹாபதிவ்ரதையான ஸீதையை விட்டுப் பிரிந்தது மாத்திரமன்று; உன்னையும் பரதனையும் சத்ருக்னனையும் விட்டு வெகுகாலம் பிரிந்திருக்கப் போகிறான். இந்த விருத்தாந்தம் உனது தந்தையின் முன்னிலையில் நானும் வஸிஷ்டரும் இருக்கும்பொழுது துர்வாஸ முனிவர் கூறினார். அப்பொழுது, நாரதர் என்னை நோக்கி, “இவ்விருத்தாந்தத்தை நான் யாரிடத்திலும் வெளியிடக்கூடாதென்று” எனக்குக் கட்டளையிட்டார். அந்த ரகசியத்தைக் கேழ்க்க ஆசையிருக்குமாயின் சொல்லுகிறேன். கேள். ஆனால் நீ இதனை பரதனிடமோ, சத்ருக்னனிடமோ, கூறக் கூடாது" என்றார். லக்ஷ்மணன் இதைக் கேட்டு, அந்த ரகசியத்தை அறிந்து கொள்ள விரும்பியவனாகி "அப்படியே நான் யாரிடமும் சொல்லமாட்டேன். அதை எனக்குக் கூறவும்' 'என்று. ஸுமந்திரனை வேண்டினான்.

பிறகு ஸுமந்திரன் லக்ஷ்மணனைப் பார்த்து "லக்ஷ்மணா! முன்னொரு ஸமயம். உனது தகப்பனாரான தசரதர் தமது புரோஹிதரான வஸிஷ்ட மஹரிஷியை நமஸ்கரிக்க அவரது ஆச்ரமத்திற்குச் சென்றார். அது ஸமயம் அங்கு அத்ரி மஹரிஷியின் புதல்வரும், மஹாதபஸ்வியுமான துர்வாஸர் என்கிற மஹரிஷியும் இருந்தார். சுற்றிலும் மற்றும் பல மஹரிஷிகளும் இருந்தனர். அக்னிபோல் ஜ்வலிக்கும் அவ்விரு ரிஷிச்ரேஷ்டர்களையும் வணங்கிப் பூஜித்து, அவர்களால் உபசரிக்கப்பட்ட உனது தந்தை அந்த கோஷ்டியில் அமர்ந்தார். பகற்பொழுது நல்வார்த்தைகளைக் கேழ்ப்பதில் சென்று கொண்டிருந்த்து.  அப்பொழுது, ஸமய ஸந்தர்ப்பமாக உனது பிதா, அத்ரி குமாரரான துர்வாஸரைப் பார்த்து 'பகவன்! மஹரிஷே! அடியேனுடைய வம்சம் எவ்வளவு காலம் நீடித்திருக்கும்! எனது குமாரனான ராமன் எத்தனை வயது வரை ஜீவித்திருப்பான்? ராமனுக்குக் குமாரர்கள் எத்தனைபேர். அவர்களது வயது எவ்வளவு? இவைகளை அடியேனுக்கு உள்ளபடி அறிவிக்க வேண்டும்'என்று வினவினார் அது கேட்ட துர்வாஸர், தசரதரிடம் “தசரத! முன்பு தேவாஸுர யுத்தம் நடந்த காலத்தில் அஸுரர்கள் தேவர்களால் அடித்துத் துரத்தப் பட்டவர்களாகி, பிருகு முனிவரது மனைவியை, அடைக்கலம் புகுந்தனர்.

அவள் அவர்களுக்கு அபயம் அளிக்க, அவர்கள் பயமற்றவர் களாக அங்கேயே ஸந்தோஷமாக வாழ்ந்திருந்தனர். பிருகு பத்னி அஸுரர்களுக்கு. இவ்வாறு அபயமளித்ததை உணர்ந்து, தேவநாதனான ஸ்ரீமந்நாராயணன், தமது ஸுதர்சனமென்கிற சக்ராயுதத்தைப் பிரயோகித்து. அவளது தலையை வெட்டி வீழ்த்தினார். இது கண்டு பிருகு முனிவர், அந்த ஸ்ரீமந்நாராயணனை நோக்கி “ஹே ஜனார்தன! நீ வீணான விரோதங் கொண்டு, கொல்லத்தகாதவளான எனது வாழ்க்கைத் துணைவியைக் கொன்றனையாதலால் நீ பூலோகத்தில் மானிடனாகப் பிறந்து, அங்கு பலகாலம் மனைவியைப் பிரிந்து, பரிதபிப்பாயாக' என்று சபித்தார்.ஹே, தசரத! கோபத்துடன் இப்படிச் சபித்த பின்னர், அம்முனிவர், சற்று நிதானித்து, "ஹா! மதிகெட்டு, பகவானைச் சபித்து விட்டேனே. இது வீணாகாமலாகுமாயின் என் செய்வது?'. என்று பச்சாதபப்பட்டு, அந்த ஸ்ரீமந் நாராயணனை, தவத்தினால் ஆராதிக்கலானார். அது கண்டு ஸ்ரீமந் நாராயணன், அவரைப் பார்த்து -'முனிபுங்கவ! நீர் கொடுத்த சாபம், உலகத்திற்கு உபகாரம் செய்வதன் பொருட்டேயாகும். ஆதலால் நீர், இதைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்' என்று கூறினார்.

அரசே! அம்முனிவர் சபித்த சாபத்தினாலேயே ஸ்ரீமந்நாராயணன், 'ராமன்' எனப்பெயர் பூண்டு, இங்கு உனக்கு மகனாக வந்து அவதரித்துள்ளார். இராகவன் இவ்வயோத்தியில், ஸுகமாகப் பதினோராயிரமாண்டு. அரசுபுரிவான். அதன் பிறகு, பிரம்ம லோகம் செல்வான். அவன் அனேக யாகங்களைச் செய்வான்.

அனேக அரசர்களையும் ஸ்தாபிப்பான். இராமனுக்கு ஸீதையிடம் இரண்டு புதல்வர்கள் பிறப்பார்கள். அவர்கள் இவ்வயோத்திக்கு வெளியில், வேறோரிடத்தில், முனிவரது ஆச்ரமத்தில் பிறப்பார்கள். பிறகு அவர்கள் மண்டலாதிபதிகளாக உனது குமாரனால் அபிஷேகம் செய்யப் பெற்று ஸுகமாக வாழ்வார்கள்' என்று கூறினார். லக்ஷ்மண! துர்வாஸ முனிவர் இப்படிக் கூறிய பின்னர் உனது தந்தை அவரை வணங்கி விடை பெற்று நகரம் சென்றார். எனவே அம்முனிவர் கூறியது அப்படியே நடக்கும், இதற்காக நீ வருத்தமடைய வேண்டாம்” என்று கூறினான். இதுகேட்டு லக்ஷ்மணன் மனம் தேறி வருத்தத்தை விட்டான். பிறகு அவ்விருவரும், சூரியாஸ்தமனமான படியால் கேசினியாற்றின் அருகே தங்கி அன்றிரவை அங்கேயே கழித்தனர்.