புதன், 19 ஏப்ரல், 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 50

நூற்றிப் பத்தொன்பதாவது ஸர்க்கம்

[ராமன் பரமபதம் செல்லச் சித்தமானது.]

            இவ்வாறு லக்ஷ்மணனைத் துறந்த ராமன் துக்கம் மேலிட்டவனாகிப் புரோகிதர்களையும், மந்திரிகளையும் பார்த்து யான் இப்பொழுது மகாசூரனும் தர்மிஷ்டனுமான பரதனை அயோத்யாதிபதியாக அபிஷேகஞ்செய்து யான் மஹாப்ரஸ்தானமாய் காட்டிற்குச் செல்லுகின்றேன். அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் கால தாமதமின்றி செய்க. லக்ஷ்மணன் சென்ற வழியே பற்றி யான் இப்போது செல்கின்றேன் என்றான். அது கேட்டு பரதன் துக்கம் அதிகரித்தவனாகி அரசாட்சியை இகழ்ந்து, ராமனைப் பார்த்து, “ரகுநந்தன! அடியேன் சத்யமாக ஆணையிட்டுக் கூறுகின்றேன். தேவரீரை விட்டுப் பிரிந்து அடியேனுக்கு சுவர்க்கலோகம் கிடைப்பினும் அதனை விரும்பவில்லை. அவ்வாறே தேவரீரின்றித் தனியே இவ் வரசாட்சியையும் விரும்பவில்லை. தேவரீருக்குத் திருவுள்ளமாயின் இந்தத் தெற்கேயுள்ள கோசல நாட்டில் ·குசனுக்கும் வடகோசலத்தில் லவனுக்கும் முடி சூட்டலாம். நாம் மஹாப்ரஸ்தானம் புறப்படுகின்ற வ்ருத்தாந்தத்தைச் சீக்கிரம் சத்ருக்னனுக்குத் தெரிவிப்போம் என்றள். பரதன் இவ்வாறு கூறியது கேட்டு பட்டணத்து ஜனங்களனைவரும் துன்பத்தினால் தவிப்புண்டவராகித் தலைசாய்த்து தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்ட வஸிஷ்ட மஹரிஷி ராமனைப் பார்த்து, “ராமா! இதோ தவித்துக் கொண்டு பூமியில் வீழ்ந்து கிடக்கின்ற இந்த ஜனங்களைப் பார்! நீ இவர்களின் மனதை அறிந்து அதனை நிறைவேற்ற வேண்டும்,” என்று ப்ரார்த்திக்க ராமன் எல்லோரையும் எழுப்பி அவர்களைப் பார்த்து, 'யான்' உங்களுக்குச் செய்ய வேண்டியது எது' எனக் கேட்டான். ராமனது சொல் செவிப் பட்ட மாத்திரத்தில் எல்லா ஜனங்களும் மகிழ்ச்சியடைந்தவர்களாகி “ஆண்டவனே! தேவரீருக்கு எங்களிடத்தில் அன்பும் அருளும் உண்டாகில் தேவரீர் செல்கின்ற நல்வழிக்கு நாங்கள் எல்லோரும், புத்திர, மித்திர, களத்திராதிகளுடன் கூட வருமாறு அருள் புரிக. ராமா! தேவரீர் எவ்விடத்திற்கு எழுந்தருளுகின்றதோ அந்த இடத்திற்கு நாங்களும் தேவரீரை விடாது பின்தொடர்ந்து வருகின்றோம்.” என ப்ரார்த்தித்தனர். பட்டணத்து ஜனங்களுடைய திடமான பக்தியை ராமன நன்கறிந்து அவ்வாறே செய்வதாக அவர்களுக்கு வாக்களித்து அன்றைய தினமே தனது புத்ரர்களுக்கு பட்டாபிஷேகம் செய்தான்.

            அப்பால் அவ்விருவர்களையும் மடி மீது உட்கார வைத்துக் கொண்டு அவர்களைக் கட்டி அணைத்து அடிக்கடி உச்சி முகர்ந்து போதிக்க வேண்டியவற்றை போதித்து பிறகு அவ்விருவர்க்கும் ஆயிரக்கணக்கான ரதங்களும் பத்தாயிரக்கணக்கான யானைகளும் கோடிக் கணக்கான குதிரைகளும், எண்ணற்ற ஐச்வர்யங்களும் அளித்து, துஷ்டியும், புஷ்டியும் அடைந்த ஜனங்களுடன் அவ்விரு ஸஹோதரர்களான குசலவரையும் அவரவருடைய நகரத்திற்கு அனுப்பினான். பிறகு ராமன் சத்ருக்னனிடம் சீக்கிரம் சென்று செய்தி கூறுமாறு தூதர்களை அனுப்பினான்.

நூற்றியிருபதாவது ஸர்க்கம்
[ஸ்ரீராமன் விபீஷணன் முதலியோருக்கு ஆஞ்ஞாபித்தல்]

            அவ்வாறே தூதர்கள் விரைவில் சென்று மூன்று தினங்களில் மதுராபுரி போய்ச் சேர்ந்து சத்ருக்னனைப் பார்த்து 'ராஜனே! ராமன் லக்ஷ்மணணைத் துறந்து விட்டான். பிரம்மலோகஞ் செல்வதாகக் கால புருஷனுக்கு வாக்களித்தான் குசனுக்கு விந்தியமலைக்கருகில் குசாவதி யென்னும் ஒரு நகரமும். லவனுக்கு சிராஸவதி யென்னும் சிறந்த பட்டணமும் நிருமித்து, அப்புரிகளிலிருந்து அரசு புரிந்து வருமாறு, அவர்களுக்கு நியமித்து, அயோத்யாபுரியில் எவருமில்லாதபடி அதனை சூன்யமாக்கி விட்டு ஸ்ரீராமனும், பரதனும் சுவர்க்க லோகஞ் செல்லச் சித்தமாயிருக்கின்றனர். தம்மைப் பின் தொடர்ந்து பட்டணத்து ஜனங்கள் எல்லோரும் வருமாறு ராமன் அனுமதியளித்திருக்கின்றார். ஆதலால் தேவரீர் காலதாமதஞ் செய்யாது அயோத்திக்கு எழுந்தருள்க” என்றனர். சத்ருக்னன் அது கேட்டுத் தனது குலம் க்ஷீணமாகுங் காலம் வந்தது எனத் தெரிந்து தனது மந்திரிகளையும், புரோகிதரான காஞ்சன முனிவரையும் வரவழைத்து, நடந்த விருத்தாந்தங்கள் அனைத்தையும் அவரிடம் கூறித் தானும் தனது சேனைகளையும் செல்வங்களையும், அவ்விருவர்களுக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்து சுபாகு மதுராபுரியிலும், சத்துருக்காதி வைதீச பட்டணத்திலுமிருந்து ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருமாறு கட்டளையிட்டுப் பிறகு தான் மட்டும் ஒற்றைத் தேரோடு புறப்பட்டு விரைவில் சென்று அயோத்தியை அடைந்து ராமனை வணங்கி, “எங்களாண்டவனே! அடியேன் நம் சிறுவர்களிருவருக்குமே ராஜ்ய பரிபாலனம் செய்து வருமாறு விதிப்படி முடி சூட்டி தேவரீர் திருவடி நிழலை யொற்றி வரச் சித்தமாகி இப்பொழுது இங்கு விடை கொண்டேன். யாதொன்றும் மறுத்துரையாது அடியேனது விண்ணப்பத்தை நிறைவேற்றும்படி ப்ரார்த்திக்கிறேன்” என்றான். ராமன் சத்ருக்னனது சலியாத திடமான பக்தியை அறிந்து ‘அப்பனே! அப்படியே யாகுக’ என்றான். அப்பொழுது இச் செய்தியைக் கேள்வியுற்ற எல்லாரும் ராக்ஷஸர்களும் வானரர்களும் முறையே தேவேந்திரனையும், விபீஷணனையும், சுக்ரீவனையும் முன்னிட்டுக் கொண்டு ராமனிடம் வந்து சேர்ந்தார்கள். வானரர்களும், ராக்ஷஸர்களும் ராமனைப் பார்த்து, ‘சுவாமி! தேவரீரைப் பின் தொடர்ந்து வர ஆயத்தமாகி நாங்கள் அனைவரும் வந்து சேர்ந்தோம்.ஹே புருஷோத்தமா! எங்களை இங்கு தனியே விட்டுத் தேவரீர் மட்டும் எழுந்தருளுவதாயின் எங்களை யம தண்டத்திற்குக் காட்டிக் கொடுத்ததாகி விடும்’ என முறையிட்டுக் கொண்டனர். அப்பொழுது ராமன் சுக்ரீவனைப் பார்த்து “மித்ர! நான் கூறுவதைக் கேள். தேவலோகத்திற்காயினும், பரமபதத்திற்கே யாயினும் நான் உன்னை விட்டுப் போகிறவனில்லை’, என உறுதி மொழி கூறினான். பிறகு ராக்ஷஸ ராஜனான விபீஷணனைப் பார்த்து ‘விபீஷணா! எவ்வளவு காலம் இப் பூமியில் ஜனங்கள் வாழ்கின்றனரோ அவ்வளவு காலம் நீயும் இலங்காபுரியில் உயர்வு பெற்று வாழ்வாய். சந்திர சூரியர்கள் எவ்வளவு காலம் ப்ரகாசிக்கின்றனரோ. இப் பூமி யெவ்வளவு காலம் அழியாதிருக்கின்றதோ, என்னுடைய கதை இப் பூமியில் எவ்வளவு காலம் மேன்மை பெற்று விளங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ அழியாது அரசு செலுத்தி வருக. விபீஷணா! இந்த்ராதி சகல தேவதைகளாலும் எப்பொழுதும் ஆராதிக்கப் படுகின்றவரான இக்ஷ்வாகு குலதேவதையான ஸ்ரீஜகந்நாதனை ஆராதிதது வரக்கடவது’ என்று சொல்ல, விபீஷணனும் திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கின்றேன், என ஒப்புக் கொண்டான் பிறகு ராமன் மாருதியைப் பார்த்து “பவனதனய! நீ சிரஞ்சீவி யாயிருக்க ஆசை கொண்டவன். இவ்வுலகத்தில் எனது காதை எவ்வளவு காலம் வழங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ இப்பூமியில் புகழுடன் வாழ்க” என்று சொல்ல, வாயுகுமாரன் உள்ளம் மகிழ்ந்து சுவாமி திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கிறேன் என்றான். அப்பால் ஜாம்பவானையும் மைந்ததுவிவிதகர்களையும் பார்த்து ராமன் அவ்வாறே கூறினான். விபீஷணன் முதலான சிரஞ்சீவிகளாகிய இவ்வைவரையும் பார்த்துக் கலி வரும் சமயம் தமது புத்ர பௌத்ராதிகளைப் பாதுகாத்துக் கொண்டு இப்பூமியிலே வசித்திருக்குமாறு ராமன் உத்தரவிட்டு, மற்றவர்கள் எல்லோரையும் தன்னுடன் புறப்பட்டு வருமாறு அருள் புரிந்தான்.

நூற்றி இருபத்தியொன்றாவது ஸர்க்கம்

(எல்லோரும் ஸ்ரீராமனைப் பின் தொடர்ந்து சென்றது]

            மறுநாள் விடிந்தவளவில் ராமன் தன் புரோகிதரான வசிஷ்டரைப் பார்த்து “வாஜபேயத்தைப் பற்றிய வெண் கொற்றக் குடை யாம் செல்லும் ராஜ வழியிலே திகழ ப்ராஹ்மணர்களுடனே அக்னி ஹோத்ரம் ஜொலித்துக்கொண்டு முன்னே செல்க” என நியமித்தான். பிறகு வசிஷ்டரிஷி மஹாப்ரஸ்தானத்திற்குச் செய்ய வேண்டிய சடங்குகள் யாவும் செய்து முடிக்க ஸ்ரீராமன் மெல்லிய பீதகவாடை சாத்திக் கொண்டு விரல்களில் தர்ப்பையிலான பவித்ரங்கள் விளங்க, பிரம்ம மந்த்ரத்தை வாய்வெருவிக் கொண்டு ஒருவருடனும் பேசாமல் தனது இந்திரியங்களனைத்தையம் மேயாமல் அடக்கித் திருவடிகளில் பாதுகைகளின்றியே உதயகிரியினின்று எழுகின்ற சூரியனைப் போல ப்ரகாசித்துக் கொண்டு தனது மாளிகையினின்றும் அழகாகப் புறப்பட்டான். ஸ்ரீராமன் பட்டணத்தை விட்டு எழுந்தருளுகையில் அவனது வலப் பக்கத்தில் பத்மமலர் கை கொண்ட மலர் மகளும், இடது பக்கத்தில் நிலமகளும் ஆகிய இருவரும் அடுத்துச் சென்றனர். அன்றியும் ஸங்கல்பம், பராக்ரமம், நானாவிதமான கணைகள் கார்முகம் எல்லாப் படைக்கலங்கள் பலவும் புருஷ ரூபங் கொண்டு கூடவே சென்றன. வேதங்கள் நான்கும் வேதியர் ரூபமெடுத்துப் போயின. பரிசுத்தமான காயத்ரீ மந்திரமும் ப்ரணவம், வஷட்காரம் முதலான வேறு பல மஹாமந்த்ரங்களும் காகுத்தனைப் பின் தொடர்ந்தன. மஹரிஷிகளும் ப்ராஹ்மணர்களும், பரமபதவாயில் திறக்கப்பட்டிருக்கிறதென்று உணர்ந்து ராமனுடன்சென்றனர். அந்தப்புரத்தின் த்வாரபாலர்களும், விருத்தர்களும், தாசிகளும். சேவகர்களும் எல்லா ஸ்த்ரீகளும், அலிகளும் (பேடிகளும்) பின் பற்றினர். பரத சத்ருக்னர்கள் ராமனையே தங்களுக்கு கதியாக நினைத்து அந்தப்புரத்துடனே காகுத்தனைத் தொடர்ந்தனர். பட்டணத்து மக்கள் எல்லோரும் ராமனைப் பின்பற்றினர். இவ்வாறு இராமன் ஸம்பந்தம் பெற்ற எல்லா ஸ்த்ரீ புமான்களும், பக்ஷி, பசு வாகனம் முதலிய சகல சராசங்களுடன் எல்லாப் பாபங்களும் நீங்கினவராகி பெரும் மகிழ்ச்சி கொண்டு ஸ்ரீராமனுடன் சென்றனர். அந்த சமயத்தில் அந்நாட்டில் கஷ்டமுள்ளவன் இல்லை. வெட்கமடைந்தவனுமில்லை. சகலமான பேர்களும் பேரானந்தக் கடலில் மூழ்கியிருந்தனர். ஸ்ரீராமன் பட்டணத்தை விட்டு எழுந்தருளுவதைப் பார்க்க வந்தவர் எவரோ அவர்களும் காகுத்தனைக் கண்டவளவில் மகிழ்ச்சி யடைந்தவராகிப் பரமபதஞ் செல்லப் பின்தொடரலாயினர். ஸ்ரீராமன் பரமபதமெழுந்தருளப் புறப்படுகையில் அயோத்யாபுரியில் ஒருவர் கண்ணிலும் தென்படாமல் மூலைமுடுக்குகளில் மறைந்திருந்த பூதங்களும், ஜங்கமஸ்தாவரங்களான எல்லா ஜீவன்களும் கூடவே புறப்பட்டுச் சென்றன அக்காலத்தில் அயோத்யாபுரியில் உயிருள்ள பொருள் ஒன்றேனும் ராமனைப் பின் தொடராது நிற்கவில்லை.

நூற்றியிருபத்தியிரண்டாவது ஸர்க்கம்

[காகுத்தனுடன் சென்ற எல்லா ஜீவன்களும் பரமபதம் பெற்றது.)

            இவ்வாறு ஸ்ரீராமன் அயோத்தியினின்றும் புறப்பட்டு மேற்கு முகமாய் அரை யோஜனை தூரம் எழுந்தருளி புண்ணிய நதியான ஸரயூ நதியை அடைந்தான். அப்பொழுது சதுர்முகன், எல்லா தேவதைகளும் தேவரிஷிகளும், கோடிக்கணக்கான தேவ விமானங்களும் புடை சூழ அங்கு வந்து ஆகாயத்தில் நின்று ராமனைப் பார்த்து ‘ரகு குல திலகனே! உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு. ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணின் அவதாரமான தேவரீர் இனி இவ்விண்ணுலகத்திற்கு எழுந்தருள்க. இனித் தம்பிமார்களுடன் கூடித் தம் தமக்குரிய ஸ்வபாவமான திருமேனியில் பிரவேசித்து அருள்க. வைஷ்ணவமான திருமேனியில் பிரவேசிக்கத் திருவுள்ளம் ஆயின் பிரவேசித்தருள்க. அல்லது நலமந்தம் இல்லதோர் நாட்டிற்கு நேரே எழுந்தருளத் திருவுள்ள மாயின் அப்படியே செய்தருளலாம். மனோ வாக்குகளுக்கு எட்டாதவரும். ஆதியந்தமில்லாதவரும் எல்லா உயிர்களையும் ஆதரித்து காப்பாற்றுபவரும் எங்கும் நிறைந்த பரம் பொருளும் நீரேயாதலின் எந்தத் திருமேனியில் ப்ரவேசிக்கத் திருவுள்ளமோ அதில் பிரவேசித்தருளலாம்” என்றார். காகுத்தன் திருவுள்ளத்தில் சற்று ஆராய்ந்து நன்கறிந்து தம்பிமார்களுடன் கூடித் தனது திருமேனியுடனே வைணவமான தனது சோதியில் கலந்து அருளினார். மஹா விஷ்ணுவினது மூர்த்தியில் ராமன் சேர்த்தியானது கண்டு எல்லா தேவதைகளும் அப்பெருமானை வணங்கி விசேஷமாகப் பூஜித்தனர். ஸ்ரீராமன் எழுந்தருளியவளவில் தேவலோகம் எல்லா பாபங்களுமொழிந்து நிர்மலமாகியது. அப்பொழுது விஷ்ணுதேவனது திருமேனியில் புகுந்த ராமன் நான்முகனைப் பார்த்து என்னிடத்து என்றும் இடைவிடாது அன்புள்ளவர்களாய் என்னைப் பிபைற்றி வந்திருக்கின்ற இந்த எல்லா மக்களும் புகுதற்கு மேலான உலகம் தருக” என்று கூற, சதுர்முகன் பகவானின் திருவுள்ளத்தை அறிந்து “சுவாமி! இவர்கள் ஸாந்தானிக மென்கிற உலகம் புகுந்து அங்கிருந்து நலமந்த மில்லதோர் நாட்டிற்போலவே பெரிய மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள்.

            இவர்கள் மட்டுமேயன்றி பக்தி பண்ணுகின்றவைகளுமாகிய பசு, பக்ஷி முதலான திர்யக்குகளும் ப்ராணனை விட்டதால் ஸத்யலோகத்திற்கு மேற்பட்டதும் திரும்பி வருதல் இல்லாமை முதலிய பரமபதத்தின் பெருமைகள் பலவும் பெற்றுள்ள ஸாந்தானிக லோகம் சேர்ந்து பேரின்பம் பெறலாகும். வானர வீரர்கள் ஒவ்வொரும் ஒவ்வொரு அதிகார தேவதையின் அம்சமே ஆதலால் எவரெவர் எந்த எந்தத் தேவதையின் அம்சமாய் அவதரித்தனரோ அவரவர் அந்தந்த தேவ சரீரத்தில் பிரவேசிக்கலாகும் என்றார். நான்முகன் இவ்வாறு கூறியதும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையில் சுக்ரீவன் சூரிய மண்டலத்தில் போய்ச் சேர்ந்தான். பிறகு அங்குள்ள ஜீவராசிகளும் சரயூ நதியில் கோப்ரதாரம் என்னும் துறையில் இறங்கி பெரும் மகிழ்ச்சியுடன் ஆனந்தக்கண்ணீர் விட்டுக் கொண்டு மூழ்கின. மானிடர்கள் மானிட சரீரமொழிந்து தேவ விமானத்தில் ஏறினர். பசு, பக்ஷி முதலான எல்லா ப்ராணிகளும் அந்த நதியில் நீராடியவுடன் மிகப் பிரகாசமான திவ்ய சரீரம் பெற்று தேவலோகத்தை யடைந்து தேவதைகள் ஆயின. எல்லா ராக்ஷஸ வானரர்களும் தம் தம் சரீரத்தை ஒழித்து சுவர்க்கம் புகுந்து தம் தம் பிதாவான தேவதைகளின் சரீரத்தில் சேர்ந்து போயினர். இவ்வாறு ஸ்ரீராமன் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் மிகச் சிறந்த மேலான நாட்டை யடையும்படி செய்து மகிழ்ச்சியுடன் முன் போல் எல்லாவற்றிலும், மூன்று லோகங்களிலும் வியாபித்திருக்கும் ஸ்ரீவிஷ்ணுவாகத் தன் லோகத்தில் எழுந்தருளினார்.

நூற்றி இருபத்தி மூன்றாவது ஸர்க்கம்

[ஸ்ரீராமாயண பாராயணத்தால் உண்டாகும் பலன்]

            இந்த ஸ்ரீராமாயணத்தை இப்பூலோகத்தவர் மட்டுமில்லாமல் தேவலோகத்திலுள்ள எல்லா தேவதைகளும், அதிகமான ஆதரத்துடன் அனுதினமும் கேட்டு மகிழ்ச்சி யடைகின்றனர். இந்த ராமாயண மென்னும் ஆதிகாவ்யமானது படிப்போர், கேட்போர் ஆதரிப்போர் ஆகிய எல்லோருக்கும் சகல பாபங்களையும் போக்கி ஆயுளும் ஐஸ்வர்யமும் அளிக்கவல்லது. வேதத்திற்குச் சமமான சிறப்புடைய இந்த ராம சரிதத்தை சிராத்த காலங்களில் அக்ஷ்ய பித்ரு திருப்தியின் பொருட்டு பித்ரு தேவதைகள் கேட்குமாறு படிக்கக் கடவர்கள், இந்த ராமாயணத்தில் ஒரு பாதம் படித்தாலும் புத்ரன் வேண்டுவோன் புத்திரனைப் பெறுவான பொருள் வேண்டுவோன் பொரும் அடைவான். அவன் செய்த பாபமனைத்தும் அழிந்து போகும். ஸ்ரீராமாயணத்தைப் படிப்பவருக்கு விசேஷமாக வஸ்த்ரமும், பசுவும் பொன்னும் அளித்தல் வேண்டும். ஸ்ரீராமாயணத்தைப் படிப்பவர் திருப்தி அடைவாராயின் சகல தேவதைகளும் திருப்தி அடைவார்கள். சகல சம்பத்தையும் கொடுப்பதான ஸ்ரீராமாயணத்தை கிரமமாகப் பாராயணஞ் செய்கின்ற புருஷன் இவ்வுலகில் புத்ர பௌத்ராதிகளுடனே கூடிப் பெருமை பெற்று வாழ்வது மட்டுமல்லாமல் மறுமையிலும் மோக்ஷத்தை யடைவான். தாசரதி திருநாட்டிற்கு எழுந்தருளிய பின் அயோத்யை பல வருஷ காலம் பாழாயிருந்து பிறகு குஷபன் என்பவன் ராஜாவாக வரும் காலத்து சிறப்பும் செல்வமும் பெற்று செழிப்புடைய நகரமாகும். என்று இவ்விதமாக ஸ்ரீராமாயணத்தை உத்தரகதையையும், பவிஷ்யத்கதையையும் சேர்த்துப் ப்ராசேதஸரான வால்மீகி பகவான் செய்து அருளினார். இதனை நான்முகன் பெருமையாகக் கொண்டாடி பிரதி தினம் படித்து வருகின்றார். இந்த ராமாயணத்தில் ஒரு ஸர்க்கமேனும் படிக்கக் கேட்பவன் கேட்ட மாத்திரத்தில் ஆயிரம் அசுவமேதமும், பதினாயிரம் வாஜபேயமும் செய்த பலனைப் பெறுகிறான். பிரயாகம் முதலான புண்ய தீர்த்தங்களிலும், கங்கை முதலிய புண்ய தீர்த்தங்கனிலும், நீராடினவனாகிறான். நைமிசாரணியம் குருக்ஷேத்ரம் முதலிய ஸ்தலங்களுக்கு யாத்ரை சென்றவனாகிறான். சூரிய க்ரஹண காலத்தில் குருக்ஷேத்ரத்தில் துலாபாரம் தானம் செய்பவனும் ஸ்ரீராமாயண பாராயணம் செய்யக் கேட்பவனும் ஒருவர்க்கொருவர் சமமானவர்களாம். இவ்விராமாயணம் முழுவதையும் சிரத்தையுடன் எவனொருவன் கேட்கிறானோ அவன் சகல பாபங்களிலிருந்து விடுபட்டு விஷ்ணு லோகத்திற்குச் செல்கிறான். பிராம்மணர் மூலமாகப் ப்ரதி தினமும் இந்த காவ்யத்தை கேட்குமாறு செய்து வரக் கடவர். இந்த ஸ்ரீராமாயணத்தை எவனொருவன் ஸம்பூர்ணமாகப் பாராயணஞ் செய்கின்றானோ அவன் தேகத்தை விடுங்காலத்தில் விஷ்ணு லோகம செல்கிருன என்பது ஸத்யம் (உண்மை). அவனும், பிதாவும், பாட்டனும், பிதாவுக்குப் பாட்டனும். இன்னும் அவருடைய தந்தைப் பாட்டன் முதலியவர்களும் விஷ்ணு லோகத்தை அடைகின்றனர். இதில் சிறிதும் ஸம்சயமில்லை. ஸ்ரீராமசரிதமானது எப்பொழுதும் அறம்,பொருள், இன்பம்,வீடு என்னும் நான்கு பேறுகளையும் கொடுக்கக் கூடியது ஆதலின் இதை ஒவ்வொருவரும் தினந்தோறும் படிக்கவாவது கேட்கவாவது வேண்டும். இதனைப் பூரண பக்தி, ச்ரத்தை விசுவாசங்களுடன் பாடிப் பாராயணஞ் செய்க. அவ்வாறு பாராயணம் செய்யும் உங்களுக்குப் பல்லாண்டு ஸ்ரீமஹாவிஷ்ணுவினது திருவருள் மேன் மேலும் உயர்ந்தோங்கும்.

இவ்வாறு வால்மீகி முனிவர் செய்தருளிய உத்தர ஸ்ரீமத் ராமாயணம் முற்றும்

ஸ்வஸ்தி ப்ரஜாப்ய: பரிபாலயந்தாம்
            ந்யரய் யே ந மார்கேண மஹீம் மஹீசா:
|
கோ ப்ராம்மணோப்ய: சுபமஸ் நித்யம்
            லோகா ஸ் ஸமஸ்தாஸ் ஸுகினோ பவந்து||

மங்களம் கோஸலேந்த்ராய மஹநீய குணாப் தயே |
சக்ரவர்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம் ||

சுபமஸ்து


ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


பலர் படிக்காத ராமாயணக் கதைகள்
முற்றும்



திங்கள், 17 ஏப்ரல், 2023

வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 49

நூற்றிப் பதினைந்தாவது ஸர்க்கம்

[ஸ்ரீராமனிடம் பிரம்மதேவன் தூதனுப்பியது]

                ஸ்ரீராமபிரான் இவ்வண்ணம் தருமம் தழைத்தோங்க ராஜ்ய பரிபாலனஞ் செய்து வருகையில் ஒரு நாள் கால ருத்ரமூர்த்தி தவசி வேஷந்தரித்து, ராமனது அரண்மனை வாயிலில் வந்து, அங்கே வெகு தீரமாக நின்ற லக்ஷ்மணனைப் பார்த்து ‘யான் மகாப்ரபாவசாலியான அதிபல மகா முனிவரது தூதன். யான் ஒருபெரிய காரியத்தின் பொருட்டு வந்திருப்பதாக நீ வேந்தனிடம் விரைவில் அறிவிக்க’, என்று கூற, லக்ஷ்மணன் அங்ஙனமே விண்ணபஞ்செய்ய அத்தவசி யாவரினும் அற்புதமானதோர் ஒளிதிகழ ராஜசபையிற் சென்று ராமரை வாழ்த்த,ராமன் அவரை நன்கு வரவேற்றுப் பூஜித்து ஓர் சித்ராசனத்தில் எழுந்தருளச் செய்த பின் அவரைப் பார்த்து "தபோதனரே! தேவரீரது வரவு நல்வரவாகுக. தேவரீர் யாவருடைய தூதராக எழுந்தருளியதோ அவரது பணிப்பை யருளிச் செய்க" என்றான். அது கேட்டு அம்முனிவர் ‘ராமா என்னைத் தூதனுப்பிய தபோதனர் மொழிந்த இதவசனத்தைக் கேட்க விருப்பமாயின் நாமிருவர் மாத்திரமே தனித்திருக்கையில் அதனைப் ப்ரஸ்தாவித்தல் வேண்டும். அப்படி நாம் சம்பாஷிக்கு மளவில் யாவரேனும் அதைக் கேட்டாலும் அத்தருணத்தில் யாவரேனும் இங்கு வந்து பார்த்தாலும் அவர் உடனே மரணத்திற்கு ஆளாவாரென உக்ரமாகக் கட்டளையிட வேண்டும்’ என்றார். ராமன் ‘அங்ஙனமே ஆகுக’ என்று கூறி லக்ஷ்மணனை விளித்து ‘லக்ஷ்மணா! நீ வாயிலோனை அப்புறம் போக விடுத்து நீயே வாயிலில் காவல் காத்திருத்தல் வேண்டும். யானும் இம் முனிவரும் ஏகாந்தமாக சம்பாஷணை செய்கையில் எவரேனும் இங்கு வந்து பார்த்தாலும் இதனைக் கேட்டாலும் மரண தண்டனைக்கு ஆளாகுவர்’ என்று கட்டளையிட்டு லக்ஷ்மணனை அரண்மனை வாயிலில் காவல் இருக்கும்படி செய்து இருவரும் தனியே நின்றபோது ராமன் முனிவரைப் பார்த்து சுவாமி ‘இங்கு ஒருவருமில்லை இனி விசாரமின்றி மனத்திலுள்ளதை கூறலாம்’, என்றான்.

நூற்றிப் பதினாறாவது ஸர்க்கம்

(காலனுக்கும் காகுத்தனுக்கும் உரையாடல்]

            அப்பொழுது அத்தவசி ராமனைப் பார்த்து "ராஜனே நான் பிரம்ம தேவனால் இவ்விடம் தூது அனுப்பப்பட்டவன். ஹே வீர! பூர்வத்தில் நான் உனக்கு புத்திரனாகப் பிறந்தவன். உலகங்களை அழிக்கும் நிமித்தமாக நீ என்னை உனது திவ்ய சக்தியினால் உண்டாக்கினை. நான் திரிபுர ஸம்ஹாரஞ் செய்த கால ருத்ரமூர்த்தியே யாவேன், பிரம்மதேவன் சொல்லியனுப்பியது யாதெனில் படைப்பு, அழிப்பு, அளிப்பென்னும் முத்தொழிலுக்கும் உரியனான நீ, சகல லோகங்களையும் ரக்ஷிப்பதே பெரிய விரதமாகக் கொண்டவனன்றோ? ஆதலின் அதன் பொருட்டு நீ உன்னடிச் சோதிக்கு (ஸ்ரீவைகுண்டத்திற்கு) வந்து சேர வேண்டிய சமயம் வந்து விட்டது. ஆதியில் நீ உனது திவ்ய சக்தியினால் எல்லா உலகங்களையும் வயிற்றிலடக்கிப் பெரும்புறக் கடலில் பள்ளி கொண்டு முதலில் என்னைப் பிறப்பித்துப் பிறகு உனக்குப் படுக்கையான ஆதிசேஷனை தோற்றுவித்தாய். அப்பால் மகாபலிஷ்டர்களான மதுகைடபர்களைப் படைத்தனை. அவர்களில் கைடபன் என்னும் அசுரன் முதலை முத்துச் சிப்பி முதலியபோல் உடம்பில் எலும்புகளே மேலிட்டவனானது பற்றி பின் எலும்புகள் இப் பூமியெங்கும பரவி மலைகளும், மேடுகளுமாயின. மற்றவனான மதுவினுடல் மீன் முதலியவற்றின் உடலென நிணமே மேலிட்டிருந்தமையின் அது படிந்து பூமியெங்கும் புல் பூண்டு முதலியவை முளைக்கும் படியான செழிப்புடையதாகி மேதினியென்னும் பெயர் பெற்றது.

                ராமா! நீ மனோ வாக் காயங்களுக்கு எட்டாத பரவாசுதேவன் என்ற ஆதி மூர்த்தியினின்றும் மகாவிஷ்ணுவாக தோன்றினாய். தவிர அதிதியினிடத்தில் உபேந்த்ரனாக வந்து பிறந்து தேவதைகளுக்கு நேர்ந்த துன்பங்களைப் போக்கினாய். இது இங்ஙனமாக, ராவணனை ஸம்ஹரிப்பதற்காக தசரதனுடைய புத்ரனாய் தோன்றினாய். ஆதியில் செய்த ஸங்கல்பப்படி நீ பூலோகத்தில் வசிக்க வேண்டிய ஆயுளளவு பூரணமரகி உன்னடிச் சோதிக்கு எழுந்தருள வேண்டிய காலம் நெருங்கி விட்டது. மறுபடி சில காலம் இங்ஙனம் பூலோகத்திலேயிருந்து ஜனங்களைப் பரிபாலித்து வரவேண்டுமென விருப்பமாயின் அப்படியே செய்க. உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு. தேவலோகத்திற்கு உனக்கு வர விருப்பமாகில் சகலமான தேவர்களும் உனது  வரவை எதிர்பார்த்திருக்கின்றனர். அங்கே எழுந்தருளி அவர்கட்கு சேவை சாதித்து அவர்களுடைய விருப்பத்தை தணித்தருள்க,’ என விண்ணப்பஞ் செய்யுமாறு இங்கு அனுப்பினர்” என்றார். நான்முகன் சொல்லியனுப்பியதாகக் கால ருத்ர மூர்த்தி கூறியதைக் கேட்டு ராமன் சிரித்தவாறு "ஹே! தேவ! மூவுலகத்தவர்க்கும் ஆக வேண்டிய கார்யத்தை முடித்தலின் பொருட்டே நான் இங்கு வந்து பிறந்தேன், இனி யான் வந்தவிடம் போய்ச் சேருகிறேன். மனத்தில் நினைத்ததையே சதுர்முகன் கூறியனுப்பினான். ஆதலின் அது விஷயத்தில் எனக்கு விசாரம் ஒன்றுமில்லை. எனது பக்தர்களான தேவதைகளுக்கு வசப்பட்டவனாதலின் அத் தேவர்களில் முதல்வனான பிரமதேவன் கூறுகின்றவாறே நடக்கக் கடமை உள்ளவன்" என்றான்.

நூற்றிப் பதினேழாவது ஸர்க்கம்

[துர்வாச முனிவர் வந்ததும் லக்ஷ்மணன் பிரிந்ததும்]

            காலனும் காகுத்தனும் இவ்வாறு சம்பாஷணை செய்து கொண்டிருக்கையில் துருவாச ரிஷி ஸ்ரீராமனைத் தரிசிக்க வேண்டி அரண்மனை வாயிலை அடைந்து அங்கு காவல் காத்திருந்த லக்ஷ்மணனைப் பார்த்து, ‘சீக்கிரம் என்னை ராமனிடம் அழைத்துச் செல்லுக’ என்றார். லக்ஷ்மணன் அது :கேட்டு முனிவரை நமஸ்கரித்து ‘தேவர்க்கு ஆக வேண்டிய கார்யம் எதுவோ அதை அடியேன் நிறைவேற்றுகிறேன். மன்னவன் மற்றெரு கார்யத்தை மேற்கொண்டிருப்பதால் அவனைப் பார்க்க ஒரு முகூர்த்த காலம் பொறுத்தருள வேண்டுகிறேன்’ என, துர்வாசர் கோபத்தினால் கண்கள் சிவந்து ‘யான் வந்திருப்பதை நீ இந்த நிமிஷமே ராமனிடம் தெரிவிக்க வேண்டும். தவறினால் உன்னையும் இத்தேசத்தையும், நகரத்தையும் நான் சபித்துவிடுவேன். ராமனையும்,பரதனையும், உங்கள் ஸந்ததிகளையும் சபித்துவிடுவேன். மேலெழுந்த கோபத்தை நான் மீண்டும் உள்ளடக்க வல்லவன் அல்லேன்’ என கோபமாகக் கூறினார். சொன்ன வண்ணஞ் செய்யும் தவப் பெருமை பெற்ற துருவாச முனிவர் கூறிய க்ரூரமான வார்த்தைகளைக் கேட்டு லக்ஷ்மணன் சிறிது யோசித்து என்னொருவனுக்கு மரணம் நேர்ந்தாலும் நேரட்டும். இம் முனிவரின் கோபத்திற்கு ஆட்பட்டு யாவும் அழியாதிருந்தால் போதும்' என மன உறுதி செய்து கொண்டு உள்ளே சென்று முனிவர் வந்திருக்கின்ற செய்தியை ராமனிடம் விண்ணப்பஞ் செய்தான். கோபமுனிவர் வந்திருப்பது கேட்டு காகுத்தன் காலமூர்த்திக்கு விடை கொடுத்தனுப்பிவிட்டு உடனே துர்வாசரை எதிர்கொண்டு சென்று அவரை வணங்கி பூஜித்து கைகூப்பியவாறு அவரைப் பார்தது ‘சுவாமி அடியேனுக்கு இப்போது என்ன கார்யம் நியமிக்கின்றது’ என்று வினவ அந்த ரிஷி ராமனைப் பார்த்து ‘தருமமே துணையாகக் கொண்ட கரகுத்த! யான் ஆயிரம் வருஷங்களாக எந்தவிதமான ஆகாரமும் இன்றி அருமையான தவம் புரிந்தேன். ஆதலால் எனக்குப் பசி அதிகமாக இருக்கின்றது. விதிமுறைப்படி எனக்குப் போதுமான போஜனமளிக்க வேண்டுகின்றேன், என்றார் ராமன் அது கேட்டு மகிழ்ச்சியுடன் அவருக்கு முறைப்படி போஜனம் அளிக்க, அமுதமயமான அவ்வுணவை அருந்தவ முனிவர் அருந்தி உள்ளம் மகிழ்ந்தவராகி ராமனை ஆசீர்வதித்து விடைபெற்று தமது ஆச்ரமத்திற்குச் சென்றார். அப்பால் ராமன் கால ருத்ரமூர்த்தி கூறிய க்ரூரமான வார்த்தையை நினைத்து தவித்தவனாகி மிகவும் தீனனாய்த் தலை குனிந்து ஒன்றும் சொலல வாய் எழாமல் நின்று நமக்கு சகோதரனேது? வேலைக்காரனேது? ஒருவருமில்லை என்று நிச்சயித்து மௌனமாய் இருந்தான்.

நூற்றிப் பதினெட்டாவது ஸர்க்க்கம்
[ராமன் லக்ஷ்மணனை பிரிந்தது.]

            இவ்வாறு வாய் திறவாமல் மௌனமாய் நின்ற இராமனை பார்த்து லக்ஷ்மணன் மகிழ்ச்சியடைந்தவனாகி "எனக்காக தேவரீர் வருந்துவது உசிதமில்லை. அன்று விதித்தவாறே யன்றோ யாவும் நடந்தேற வேணும். காலகதி இப்படிப்பபட்டதுதான். ஆதலால் தேவரீர் அடியேனைத் துறந்து, செய்த ப்ரதிக்ஞையை நிறைவேற்றி அருள்க. செய்த ப்ரதிக்ஞயைப் பரிபாலியாது தவறினவர்கள் நரகமே புகுவார்கள். தேவரீருக்கு அடியேனிடம் அன்பும் அருளும் உள்ளனவாயின், மனதில் சிறிதும் கலக்கமில்லாமல் அடியேனைத் துறந்து தர்மத்தை வளரச் செய்க”, என்றான். லக்ஷ்மணன் இவ்வரறு கூறியதைக் கேட்டு ராமன் துக்கம் அடைந்தவனாகி மந்திரிமார்களையும், புரோகிதரையும் உடனே வரழைத்து, துர்வாசமுனிவர் எழுந்தருளியதையும், அவருக்கு முன் வந்த தவசியிடம் தான் செய்த ப்ரதிக்ஞயையும், அதன் மேல் நடந்த வ்ருத்தாந்தத்தையும். அவர்களிடம் கூற, அது கேட்டு அவர்கள் ஒன்றும் தோன்றாமல் மௌனமாய் இருந்தனர். அப்பொழுது வஸிஷ்டர் ராமனைப் பார்த்து ‘ஹே, தாசரதே! உனக்கு இப்படிப்பட்ட சங்கடங்களும் இளையவனோடு பிரிவும் உண்டாகும் என முன்பே தெரிந்த விஷயமே. அதைப் பற்றி விசனமுறுவதில் பயனில்லை. விதியே வலியுள்ளதால் லக்ஷ்மணனைப் பிரிந்திடுக. செய்த ப்ரதிக்ஞயை வீணாக்கலாகாது. ப்ரதிக்ஞை வீணாகுமாயின் தர்மம் நசியும். தர்மம் நசித்தால் மூவுலகங்களும் தேவ ரிஷிகணங் களும் நசியும்; ஸந்தேஹமில்லை. ஆதலின் இம் முவுலகங்களின் நன்மைக்காக அவற்றின் பரிபாலகனாய் இருக்கின்ற நீ லக்ஷ்மணனைத் துறந்து ப்ரதிக்ஞையைக் காப்பாற்று ‘ என்றார்.

            மந்திரிகள் பலருங் கூடிய பெரிய சபையில் வஸிஷ்ட பகவான் இவ்வாறு கூறக் கேட்டு இராமன் லக்ஷ்மணனைப் பார்த்து ‘லக்ஷ்மணா தர்ம நிலை அழியாமைக்காக யான் உன்னை இன்றோடு இழந்து விடுகிறேன். சாதுக்களுக்குத் த்யாகமும் வதமுமாகிய இரண்டும் சமமென விதிக்கப்பட்டிருக்கின்றனவன்றோ’ என்றான். இவ்வாறு இராமன் சொல்லியதும் லக்ஷ்மணன் கண்களில் நீர் ததும்ப ஐந்து இந்த்ரியங்களும் உள்ளமும் கலங்கினவனாகி நேராக சரயு நதிக்குச் சென்று ஸ்நாநம் செய்து கை கூப்பி வணங்கி ப்ராணாயாமஞ் செய்து பரவாசுதேவனது என்றும் அழிவில்லாத திருவடியையே மனதில் எண்ணி மரணமடைந்தான். அப்பொழுது இந்திராதி தேவர்கள் அப்ஸரஸ்ஸுகள் தேவரிஷிகள் எல்லோரும் லக்ஷ்மணன் மீது பூமாரி பொழிந்தனர். பிறகு மானிடர் ஒருவர் கண்ணுக்கும் புலப்படாமலேயே இந்த்ரன் லக்ஷ்மணனை அத்தேகத்துடனேயே தேவலோகத்திற்கு எழுந்தருளச் செய்துகொண்டு போனான் --- ஸாக்ஷாத் ஸ்ரீமஹா விஷ்ணுவினது அம்சத்தில் நாலில் ஒரு பாகமான அம் மஹாநுபாவன் எழுந்தருளியது கண்டு தேவர்களும், தேவரிஷிகளும், பெரும் மகிழ்ச்சி கொண்டவர்களாகி அவனைப் பூஜித்தனர்.