சனி, 2 ஜனவரி, 2010

கதவு திறவாய் ! நப்பின்னாய்!

18. இராமாநுஜர் உகந்த பாசுரம்




இராமாநுஜர் துறவி ஆனதால் பல இல்லங்களில் பிட்சை கொண்டு பசியை ஆற்றிக்கொள்வார். பெரியோர் பிட்சைக்குப் போகும்போது வடமொழிச் சுலோகங்களையோ, தமிழ்ப் பாசுரங்களையோ சொல்லிக் கொண்டு போவது வழக்கம். இராமாநுஜர் திருப்பாவைப் பாசுரங்களை ஓதிக்கொண்டு பிட்சைக்காக எழுந்தருளுவதுண்டு.

ஒருநாள் பெரிய நம்பி திருமாளிகையை நோக்கிப் போய், திருப்பாவையைப் பாடிக்கொண்டு வாசலில் நின்றார். அப்போது மாளிகையின் கதவு திறந்திருக்கவில்லை. இராமாநுஜர் பாசுரம் பாடிக் கொண்டே இருந்தார். அது கேட்டுப் பெரிய நம்பியின் அருமைத் திருமகளான அத்துழாய் உள்ளேயிருந்து வந்து கதவைத் திறந்தாள்.

அவளைக் கண்ட உடனே மூர்ச்சித்து விழுந்தார் இராமாநுஜர். அத்துழாய் உள்ளே ஓடிப் போய்த் தந்தையிடம், "ஐயா, கதவைத் திறந்து சென்றேன். ஜீயர் என்னைக் கண்டவுடன் காலில் விழுந்தார்! நான் பயந்து உடனே விரைந்து உள்ளே வந்து விட்டேன்" என்று செய்தி சொன்னாள். ஜீயர் என்று இராமாநுஜரைக் குறிப்பது வழக்கம்.

பெரிய நம்பியின் உள்ளத்திலே ஒரு கலக்கமும் ஏற்படவில்லை. அவர் அகமகிழ்ந்து தம் அருமை மகள் முகம் நோக்கி, "ஓஹோ! 'உந்து மதகளிறு' ஓதப் பெற்றிருக்க வேணும்" என்றார். 'உந்து மதகளிறு' என்றதும், 'உந்து மதகளிற்றன்' என்று தொடங்கும் திருப்பாவைப் பாசுரத்தைத்தான் குறிப்பிடுகிறார் தந்தையார் என்பதை உடனே தெரிந்து கொண்டாள் அத்துழாய்.

'எனக்கு நீங்கள் சொல்வது விளங்கவில்லையே; அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு அப்பா?' என்று கேட்டாள். பெரிய நம்பி சிரித்துக் கொண்டே 'உனக்குத்தான் பாசுரம் முழுவதும் வருமே' என்றார். அத்துழாய் பதில் சொல்லாமல் திகைத்து நின்றாள்; சற்று ஆலோசனையில் ஆழ்ந்தாள். பெரிய நம்பியோ,

உந்து மதகளிற்றன்
    ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன்
   மருமகளே! நப்பின்னாய்!

என்று மெல்லப் பாடத் தொடங்கினார்.

பளிச்சென்று இருட்டைக் கிழித்துக்கொண்டு மின்னல் எழுந்ததுபோல் உண்மை புலனாகிவிட்டது அத்துழாயின் உள்ளத்திற்குள்ளே. 'அப்பா! எனக்குத்தான் என்ன பேதமை! கண்ணை மறைத்திருந்த திரை விலகிவிட்டது. ஜீயருடைய பக்தி உள்ளத்தைக் கண்ணாடியில் காண்பதுபோல் காண்கிறேன்' என்று சொன்னாள்.

பிறகு பெரிய நம்பியும் அத்துழாயும் இராமாநுஜரின் அரும் பெருங் குணாதிசயங்களைக் குறித்தும் பேசத் தொடங்கினார்கள். அத்துழாய் தந்தையை நோக்கி,

செந்தா மரைக்கையால்

   சீரார் வளைஒலிப்ப

வந்து திறவாய்
   மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

என்று 'உந்து மதகளிற்றன்' பாசுரத்தின் இறுதிப் பகுதியைப் பாடிக் காட்டினாள். 'இதை அவர் பாடியதுதான் தாமதம், நான் பளிச்சென்று வளைகுலுங்கப் போய்க் கதவைத் திறந்துவிட்டேன்' என்று கூறி முடித்தாள்.

அதே சமயம் தம் குருவாகிய பெரிய நம்பியை வணங்குவதற்காக வந்து காத்திருந்த இராமாநுஜர் 'நப்பின்னையைச் சேவிக்கப் பெற்றேன்' என்று சொல்லிக் கொண்டே வந்து பெரிய நம்பி திருவடி வணங்கி நின்றார்.

__________________________________________________________________________________________________

வாசல் காப்பானையும் நந்தகோபனையும் பலதேவனையும் பற்றுவது போதுமா? கன்னிகை யின்றிக் கண்ணாலம் கோடிப்பதுண்டா? ஆய்க்குலப் பெண்கள் நப்பின்னையைத் துயிலுணர்த்துகிறார்கள் இந்தப் பாசுரத்திலும். பெருமானைப் பிராட்டி முன்னாகப் பற்றவேண்டுமல்லவா – தாயைக் கொண்டு தந்தையை அறியும் பிள்ளைபோல? கிருஷ்ணாவதாரத்தில் பிராட்டியின் நிலையில் இருப்பவள் நப்பின்னை. அவள் அருளால் அவன்தாள் வணங்கவேண்டுமென்று நப்பின்னையை உணர்த்துகிறார்கள் இவர்கள்.

கண்டிப்புள்ள தந்தையைக் கண்டு குழந்தை அஞ்சும்போது, 'அஞ்சவேண்டாம், அப்பாதானே!' என்று அணைத்துக் கொண்டு அபயம் அளிக்கிறது தாயின் கை. அந்த அன்புக் கையின் அணைப்பு ஒரு குழந்தைக்குப் பூவைத் தொடுவது போலத் தோன்றக் கூடுமல்லவா? எனவே தங்களுக்கு அபயமளிக்கும் நப்பின்னைப் பிராட்டியின் கையைச் 'செந்தாமரைக் கை' என்கிறார்கள். இவள் கை பார்த்திருக்கிறார்களல்லவா இப்பெண்கள்?

'அம்மா! உன் கையில் வளைகுலுங்க, அந்த ஒலியைக் கேட்டு எங்கள் நெஞ்சு குளிரவேணும்' என்கிறார்கள். தாயின் கையைப் போல் கையிலுள்ள வளைகளும் அவற்றின் ஓசையும் குழந்தைக்கு இனிமையானவை தாம். 'உன் வளைக் கையால் நீயே எழுந்து வந்து கதவைத் திறக்கவேணும்' என்கிறார்கள்.

'இந்த வளைகளின் ஓசை கேட்டு இவர்களுக்கும் திருப்தி ஏற்படும்; கண்ணனும் கண் விழித்துக் கொள்வான்' என்று எதிர்பார்க்கிறார்கள். 'கத்துகிறார்களே, கதவைத் திறப்போம்' என்று திறவாமல், திறந்த உள்ளத்துடன் மகிழ்ந்து திறக்கவேணும் என்கிறார்கள்.



கைவளை குலுங்க வந்து கதவைத் திற



உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயில்இனங்கள் கூவினகாண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தா மரைக்கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்



விளக்கம்

இந்தப் பாட்டில் கண்ணன் தேவியான நப்பின்னைப் பிராட்டியைத் துயில் எழுப்புகிறார்கள். பிராட்டியை முன்னிட்டு – அதாவது புருஷாகாரமாகக் கொண்டு – பகவானைச் சரணமடைய வேண்டும் என்பது வைணவர் கொள்கை. அம்மையின் அருள் பெற்று அப்பனைச் சரணடைய வேண்டும் என்று சிவநேசர்களும் சொல்வதுண்டு. எனவே, நப்பின்னைப் பிராட்டியைத் துயில் எழுப்பி இவளை முன்னிட்டுக் கண்ணனைச் சரணமடைய விரும்புகிறார்கள் இப் பெண்கள்.

அத்தை மகனை மைத்துனன் என்று கூறுவதுண்டு. மாமன் மகளைக் கலியாணம் செய்து கொள்ளும் முறைமை ஒன்று இருக்கிறதல்லவா? அந்த முறைமை பற்றி நப்பின்னைக்குக் கண்ணன் மைத்துனன் ஆவதாகக் கூறுகிறார்கள். தந்தைக்கு மகள் என்ற பெருமையைக் காட்டிலும் மாமனாருக்கு மருமகள் என்பதையே பெருமையாகக் கொள்ளும் நப்பின்னை, பிறந்தகத்தைக் காட்டிலும் புகுந்த அகத்தையே மதிக்கிறாள் என்பது குறிப்பு.

இது இராமாநுஜர் உகந்த பாசுரம்.

வெள்ளி, 1 ஜனவரி, 2010

அம்பரமே!தண்ணீரே!சோறே!

17. தந்தையும் தாயும் அண்ணனும் தம்பியும்

வாசல் காப்போரின் அனுமதி பெற்று உள்ளே புகுந்த பெண்கள் கண்ணபிரானைத் துயிலுணர்த்துவதற்கு முன் நந்தகோபனைத் துயில் உணர்த்துகிறார்கள்.; யசோதைப் பிராட்டியையும் துயில் உணர்த்துகிறார்கள். பிறகு கண்ணனையும் பலராமனையும் எழுப்புகிறார்கள்.

மாளிகையின் முதல் பகுதியில் நந்தகோபன் படுத்திருக்கிறான் என்றும், அடுத்த பகுதியில் யசோதை படுத்திருக்கிறாள்என்றும்,மூன்றாம் பகுதியில் கண்ணன் பள்ளிகொண்டிருக்கிறான் என்றும், நான்காம் பகுதியில் அண்ணனாகிய பலதேவன் பள்ளிகொண்டிருக்கிறான் என்றும் கருதலாம்.இந்த முறையிலே ஆய்க்குலப் பெண்கள் துயில் உணர்த்திக் கொண்டே பொவதைக் காணலாம்.

முதல் முதல் நந்தகோபனைத் துயில் உணர்த்தும்போது அவனைப் புகழ்ந்து பேசவேண்டுமல்லவா? அவனது கொடைப் புகழை இவர்கள் பேசுகிறார்கள். அவன் ஆடைகள் விரும்புவோருக்கு ஆடைகளைக் கொடுக்கிறானாம். தாகமுள்ளவர்களுக்குத் தண்ணீரை உதவுகிறானாம். பசித்தவர்களுக்குச் சோற்றுத் தருமம் (அன்னதானம்) செய்தவண்ணமாய் இருக்கிறானாம். புகழைப் பயனாகக் கருதாமல் கொடையையே பயனாகக் கருதிக் கொடுத்தவண்ணமாய் இருக்கிறானாம்.

ஒரு யாசகன் ஏதாவது பெற்றுக்கொள்ளாமல் போக விரும்ப மாட்டான். நந்தகோபனோ கொடுக்காமல் வீடு திரும்புவதில்லை. இவன் ஆடைகளைத் தானம் செய்வதைப் பார்ப்பவர்கள் 'வஸ்திரதானமே செய்து கொண்டிருக்கிறான் இவன்!' என்று நினைப்பார்களாம். பேசுவார்களாம். இவள் பருகும் நீரை வழங்கும்போது 'தண்ணீர் கொடுப்பதே இவன் கொடை' என்று தோன்றுமாம். சோறு கொடுக்கும்போது 'அன்னதானமே இவன் மேற்கொண்டிருக்கும் தருமம்' என்று தோன்றுமாம்.

நீதிபதி ரானடே ஒரு சமயம் கிறிஸ்து மதம் குறித்துப் பேசினார். கேட்டவர்கள், இவர் கிறிஸ்தவர்தாம் அல்லது கிறிஸ்தவர் ஆகிவிடுவார் என்று பேசிக் கொண்டார்கள். மறு வாரத்திலோ, வேறொரு சமயத்திலோ, நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசினார். இவரை முஸ்லிம் அறிஞர் என்றே நினைத்தார்கள் இந்த சொற்பொழிவைக் கேட்டவர்கள். பிறகு பௌத்த சமயம் குறித்துச் சொற்பொழிவு செய்தார். இந்தச் சொற்பொழிவைக் கேட்டவர்கள் இவரைப் பௌத்தர் என்றே கருதினார்கள். கடைசியாகக் கண்ணபிரானின் கீதை குறித்துப் பேசினார். இவரே உத்தம ஹிந்து என்று தீர்மானித்தார்கள் இந்தப் பேருரை கேட்டவர்கள். அப்படியே நந்தகோபனையும் வஸ்திரதானமே செய்பவன், அன்னதானமே செய்பவன், தண்ணீரே வழங்குபவன் என்றெல்லாம் பாராட்டுப் பேசிக் கொண்டார்களாம். இத்தகைய கொடைச் சிறப்பை எடுத்துரைத்துப் புகழ் மலர்கள் தூவி நந்தகோபனைத் துயில் உணர்த்தியவர்கள் அடுத்தபடியாக கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! என்று யசோதைப் பிராட்டிக்குப் புகழுரை கூறி இவளையும் துயிலுணர்த்துகிறார்கள். எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய் என்றவர்கள் எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய் என்று கூறித் துயில் உணர்த்துகிறார்கள் யசோதையை.

இந்த ஆய்ச்சியருக்கோ 'உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்!' என்றே இருப்பதால் 'எங்களுக்கு அம்பரமும்(ஆடையும்), தண்ணீரும் சோறுமாய் உள்ள கண்ணனை எங்களுக்குத் தந்தருள வேணும்' என்ற பிரார்த்தனையை உள்ளத்தில் கொண்டுதான் 'நந்தகோபாலா! எழுந்திராய்' என்றார்கள்.

செடிக்கோ மரத்திற்கோ வேரில் ஒரு தீங்கு நேர்ந்தாலும் கொழுந்திலேதான் முதலில் வாட்டம் காணப் படும். அப்படியே பெண்களில் தாழ்ந்தபடியில் உள்ளவர்களுக்கு ஒரு கேடு வந்தாலும் யசோதை முகத்தில் வாட்டம் காணப்படுகிறதாம். இத்தகைய 'கொழுந்தே! ....... யசோதாய்! அறிவுறாய்!' என்கிறார்கள்.அறிவுறாய் என்பதற்குத் துயில் உணர்ந்து எழுந்திராய் என்பது பொருள். எனினும், 'இவள் அறிய அமையும்; பின்பு தங்களுக்கு ஒரு குறை இல்லை என்று இருக்கிறார்கள்' என்பது குறிப்பு.

நந்தகோபனும் யசோதையும் இவர்கள் உள்ளே புகுவதற்கு இசையவே, இவர்கள் மாளிகையின் மூன்றாம் பகுதியில் புகுந்து கண்ணனைத் துயில் உணர்த்துகிறார்கள். கண்ணனை ஏற்கனவே 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று குறிப்பிட்டவர்கள் இப்போது,

அம்பரம் ஊடுஅறுத்து
        ஓங்கிஉலகு அளந்த

உம்பர்கோ மானே!
        உறங்காது எழுந்திராய்

என்று பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.

அப்பால் கண்ணனின் அண்ணனாகிய பலதேவனைச் 'செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!' என்று கூப்பிட்டு எழுப்புகிறார்கள். கண்ணன் பின்னே பிறக்க முன்னே பிறந்த செல்வன் அல்லவா? லட்சுமணன் இராமனுக்குப் பின்னே பிறந்து கைங்கரியச் செல்வம் பெற்றுச் சீமானாகத் திகழ்ந்ததுபோல், பலதேவன் கண்ணனுக்கு முன்னே பிறந்து கைங்கரியச் செல்வம் பெற்ற சீமானாகப் பொலிந்தான்.

நால்வரை எழுப்புதல்

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடுஅறுத்து ஓங்கிஉலகு அளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல்அடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்

விளக்கம்

நந்தகோபனின் கொடைச் சிறப்பைக் கூறி, அத்தகைய வள்ளல் தங்கள் வேண்டுகோளையும் அளிக்க உதவி செய்வான் என்ற குறிப்புடன் பேசுகிறார்கள். பிறகு யசோதையை அழைக்கிறார்கள். பிறகு கண்ணனை அழைக்கிறார்கள். கடைசியாகப் பலதேவனைக் கூவி அழைத்து, அண்ணனும் தம்பியும் உறங்காமல் எழுந்திருந்து அருள் புரிய வேண்டும் என்கிறார்கள்.

'உறங்கேல் ஓர் எம்பாவாய்' என்று இருப்பது தவறு என்றே துணியலாம். 'ஏலோர் எம்பாவாய்' என்ற மகுடத்திற்குப் பொருள் கூறாது இதை அடி நிறைக்க வந்த சொற்றொடராகக் கருதி அல்லவா பாடல்களுக் கெல்லாம் பொருள் கூறி வருகிறோம்? அப்படி இந்தப் பாட்டுக்குப் பொருள் கூறும்போது 'உறங்கு' என்றல்லவா எடுத்துக் கொள்ள வேண்டும்? எனவே 'உணர்ந்து' என்று இருக்கவேண்டும் என்பர் ஆராய்ச்சிப் பேரறிஞர் திரு மு. இராகவைய்யங்கார்.

புதன், 30 டிசம்பர், 2009

நேய நிலைக் கதவம் திறப்பாய்

வழக்கமான தமிழ் விளக்கத்துக்குப் போவதற்கு முன்

Adiyen share the explanation from a book that was downloaded from Scribd .I thank the author whose name is not known.

Paasuram 16  NAAYAGANAAI NINDRA         

Raagam – DARBAR / MOHANAM

naayaganaay ninRa nandhagOpan udaiya
kOyil kaappaanE! kodi thOnRum thOraNa
vaayil kaappaanE! maNi(k) kadhavam thaaL thiRavaay
aayar siRumiyarOmukku aRai paRai
maayan maNi vaNNan nennalE vaay nErndhaan
thooyOmaay vandhOm thuyil ezha(p) paaduvaan
vaayaal munnam munnam maatraadhE ammaa! nee
nEya nilai(k) kadhavam neekkElOr embaavaay

tp1

     (Nayaganaai   nindra   nandhagopanudaiya   koyil   kaapaane   kodi thondrum thorana vaayil kaapane manikadhavam thazh thiravaai). After having awakened her friends, Shri Andal and her friends go together to Shri Krishnan’s house to sing in praise of him. There is a guard who is standing in front of His house. He stops the gopikas and questions about them. tp2 Shri Andal says “Oh! The temple guard (koyil   kaapaane)   of   (udaiyaa)   the   Lord  Nandagopan  who   stood (nindra) as our hero (nayaganaai)! The guard (kaapaane)  for the arched, ornamented (thorana) door (vaayil) that is well decorated (thonrum)  by garlands  (kodi)!   (mani  kadhavam  thaazh  thiravaai) Shri Andal says “Please open (thiravaai) the latch (thaazh) of the door   (kadhavam)   that   is  made   of   jewels”   (mani).   In  Naachiaar Thirumozhi,  the 10 Paasuram following “Varanamayiram”  is quite famous.  Shriman Narayanan comes   in her  dreams   in which  the wedding   ceremony   between   her   and   Shriman   Narayanan   is beauti fully described. She sings about the various activities that go ahead  in a  wedding.  She  says   “Varanamaayiram  soozha   valam seydhu   narana   nimbi   nadakindran   en   edhir   poorana   porkudam vaithu puram engum thoranam naata kanaa kanden thozhee naan (NT   6,   1).   She  means   that   the   place   is   well   decorated   and oranamented with thoranams that take the shape of an arch. She mentions about the wor “thornam” and says that in this situation she sees Shriman Narayanan surrouned by an army of elephants. (Aayar   sirumiyaromuku   aria  parai  maayan  manivannan   nennele vaai nerndhaan). The great Lord (maayan manivannan) has himself (nennele)  promised  (vaai  nerndhaan)  yesterday   to us,   the  little girls (sirumiyaromuku) in aayarpaadi (aayar), that he would give us the drum (parai) for beating (arai)”. The gopikas or the ayar paadi girls are very innocent that they do not know which is left hand and which is right hand (“Idakai valakai theriyadha ayarpadi gopigal”).
All   they know  is  Krishnan bhakti.   In Naachiaar  Thirumozhi,  Shri Andal says “mutrilaadha pilaigalom mulai pondhilaa naadroum (NT2, 5)” and “Yaadhum ondru ariyadha pilaigalomai (NT 2, 6). In the katru   karavai   Paasuram we  discussed   about  why   Shri  Krishnan prefers the innocent young girls compared to all others. The drum is to be used  for the viratham that the gopikas adopt.  The word “parai”   that   is   associated   with   the   word   drum   has   another connotation.  As  discussed   in  the  first   Paasuram,   it   could mean moksham too. (Thooyomaai vandhom thuyil ezha paaduvan vaayal munnam munnam maatradhe  amma  nee)  Shri  Andal   says   “We have come  (vandhom)  up with pure  (thooyomaai)  heart   to  sing (paaduvaan) in praise so that He would get up (thuyil ezha).

tp3
(Vaayal munnam munnam maatraadhe amma nee) Shri Andal says “Ah (amma)! Firstly (munnam munnam), please open the door. Do not deny (maatraadhe) or discuss (vaayaal) our request and open the door.  The   significance of   this  Paasuram  is   that   it  mentions about   the  role of  acharya.  We  should not   try  to  reach Shriman Narayanan directly. It should be through a way of the acharyas. He prefers this method rather than one’s own bhakti.  There may be many obstacles and hinderances  in  this path according  to one’s own karma.  But   the  role of  acharya  is  to see  that   the  jeevatma reaches the Paramatma. The guard who was standing, obstructing the path of the gopikas, represented one such obstacle. However, we should not be perturbed by these and should constantly seek to reach Him through the acharyas. The guard can also be thought of as an agent that recommends to Him that there are people waiting to see Him just like Shri Andal and her friends were waiting outside
His temple to see Him. The guard performed the role of an acharya by examining the people who enter His abode.

இனி தொடர்வது

16. நேச நிலைக் கதவம் நீக்குவாய்

  பத்துப் பாடல்களால் பள்ளியெழுச்சி பாடித் தோழிமார்களைப் பெண்கள் எழுப்பி வருவதைக் கண்டோம். ஒன்பது பாட்டுக்களில் உரையாடல் வெளிப்படையாக அமைந்திருக்கவில்லை. பத்தாவது பாட்டில் மட்டும் பந்தை மாறி மாறி அடிப்பதுபோல் அமைந்திருக்கிறது உரையாடல். செய்யுளின் முதல் அடி எழுப்புகிறவர்களின் வாக்கு. இரண்டாம் அடி உள்ளே இருந்து வரும் பதில் – கிளிமொழியாளின் பதில். மூன்றாம் அடி மறுபடியும் வெளியே இருந்து வரும் பதில், இதற்குப் பதில் நான்காம் அடி. ஐந்தாம் அடியில் மேலும் துயில் எழுப்ப வந்திருப்பவர்களின் வார்த்தை. ஆறாம் ஆடியின் முற்பகுதியில் உள்ளே இருப்பவளின் இறுதிக் கேள்வி. அப்பால் வெளியே இருப்பவர்கள் முடிவாகச் சொல்லும் பதில்.

எனவே 'திருப்பாவை ஆகிறது இப்பாட்டு' என்று கூறுவதும் உண்டு. 'நானேதான் ஆயிடுக!' என்று குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் நிலையில் கிளிமொழியாள் பேசுகிறாள் அல்லவா? இதில் வைணவ லட்சணம் குறிக்கப்படுகிறது எனக் கூறுவதுண்டு. குற்றம் சாட்டப்பட்டவன் பாகவதர்களை வணங்கி, 'பொறுத்தருள வேணும்; குற்றத்தை அடியேன் ஏற்றுக் கொள்கிறேன். நானேதான் குற்றவாளி என்று ஒப்புக்கொள்ளுகிறேன்' என்று கூறுவதே வைணவ லட்சணம் என்பர். 'நானேதான் ஆயிடுக!' என்ற சூத்திரத்தை வைணவன் மறந்து விடலாகாது.

-----------

    இனி எல்லாரும் திரண்டு நந்தகோபர் திருமாளிகைக்குப் போகிறார்கள். அங்கே கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும் நோக்கி, 'வாசல் திறக்கவேணும்' என்று வேண்டிக்கொள்ளுகிறார்கள் இந்தப் பதினாறாவது பாசுரத்திலே. இப்பாட்டில் கோயில் காப்பானையும் வாசல் காப்பானையும் துயில் உணர்த்துகிறார்கள். வெளிப்புறத்து வாசலைக் காப்பவன் கோயில் காப்பான் என்று கூறப்படுகிறான். உட்புறத்து வாசலைக் காப்பவன் வாசல் காப்பான் என்று கூறப்படுகிறான்.

         தங்களைப் பெயர் சொல்லாமல் தங்கள் பணியைக் குறிப்பிட்டுப் பெண்கள் அழைத்ததும் இவர்கள் உள்ளம் குளிர்ந்து ;உள்ளே போங்கள்' என்று சம்மதம் தெரிவிக்கிறார்கள். வாயால் அல்ல; கண்ணால் என்பது குறிப்பு. கோயில் காப்பானும் வாயில் காப்பானும் ஒருவனே என்று பொருள் கொள்வதும் உண்டு.

'மணிக்கதவம் தாள் திறவாய்' என்று இப்பெண்கள் கூறும்போது அந்தக் கதவின் அழகிலே இவர்கள் உள்ளம் ஒருவாறு கவரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 'அந்த அழகிலே எங்கள் கண்ணும் கருத்தும் ஈடுபடாதவாறு கதவைத் திறந்து எங்களை உள்ளே விட வேணும்' என்று ஆத்திரப் படுவதையும் அதே வாக்கில் காணலாம்.

        இவர்கள் கதவு திறக்கச் சொல்லும்போது, கண்ணன் நேற்றே பறை தருவதாக வாக்களித்தான் என்ற செய்தியையும் தெரிவிக்கிறார்கள். 'ஆயர் சிறுமியராகிய எங்களுக்குக் கருணை கூர்ந்து அப்படி வாக்களித்தான்' என்று கூற வந்தவர்கள் கண்ணனை மாயன் என்றும் மணிவண்ணன் என்றும் குறிப்பிடுகிறார்கள். கண்ணன் தங்களிடம் காட்டும் அன்பும் கருணையும் ஆச்சரியமானவை என்ற குறிப்பை மாயன் என்ற சொல்லால் புலப்படுத்து கிறார்கள். 'மணிவண்ணன்' என்று குறிப்பிடும்போது, 'தங்களைக் கிடந்த இடத்தில் கிடக்கவொட்டாதே இப்படிப் படுத்துகிற வடிவழகு' என்ற குறிப்பைத் தங்களை அறியாமலே வெளியிடுகிறார்கள்.

                'கண்ணன் துயிலுணர்ந்த பின் விண்ணப்பம் செய்து, நீங்கள் சந்திக்கும்படி ஏற்பாடு செய்து தருகிறேன், நில்லுங்கள்' என்று வாசல் காப்பான் சொல்லி யிருக்கக் கூடுமல்லவா? அதற்காகத்தான், 'இன்று விண்ணப்பம் செய்ய வேண்டியதில்லை, நேற்றே பறை தருவதாக மாயன் மணிவண்ணன் வாக்களித்து விட்டான்' என்று தெரிவித்தார்கள்.

         'அவன் வாக்களித்திருந்த போதிலும் நாங்கள் எங்கள் கடமையைச் செய்யவேண்டாமா? வந்தவர்களின் நிலையை ஆராய்வது எங்கள் கடமை அல்லவா?' என்று வாசல் காப்பான் சொல்லக் கூடுமே; அதற்கு விடையாக இவர்கள் தூயோமாய் வந்தோம், துயில்எழப் பாடுவான் என்கிறார்கள்.

இவர்களைப் பார்த்ததுமே வாசல் காப்பானுக்கு இவர்களது அகத்தூய்மை முகத்திலேயே தெரிந்து விட்டது. இவர்கள் பேச்சின் இனிமையும் அவன் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. இந்தப் பேச்சை மேலும் செவியால் பருக விரும்புகிறான் அவன். எனவே, 'இந்த அகாலத்தில் நீங்கள் உள்ளே போகக் கூடாது' என்று மறுத்துக் கூறுவதுபோல் முகத் தோற்றத்தை அமைத்துக் கொண்டான். அதுகண்ட இப்பெண்கள் வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே, அம்மா!நீ என்று வேண்டிக்கொள்கிறார்கள்.

'முதல் முதல் உம்முடைய வாயால் மறுக்காமல் இருக்க வேணும்' என்று விநயமாகக் கூறுகிறார்கள். அவன் கருத்தை அறிந்தே இப்படி உசிதமாகப் பேசுகிறார்கள். 'வாயால் தீயைச் சொரிவதுபோல் மறுத்துப் பேசாமல் இருக்கவேணும் சாமி!' என்று பணிவாக வேண்டிக் கொள்ளுகிறார்கள்.

'நேயநிலைக் கதவம் நீக்கு' – அதாவது கண்ணனிடம் பரிவுற்றிருக்கும் நிலையுள்ள இக்கதவை நீயே நீக்கவேணும் --- என்றதும் வாசல் காப்பான் கதவைத் திறந்து இவர்களை உள்ளே விடுகிறான்.

வாசல் காப்பானே! தாள் திறவாய்

நாயக னாய்நின்ற நந்தகோபன் உடைய
கோயில்காப் பானே!கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே!மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

விளக்கம்

முற்பட எழுந்து நீராடப் புறப்பட்டுப் பஜனை செய்துகொண்டு வந்த பெண்கள் பத்துப் பாட்டுக்களால் பத்துப் பெண்களைத் துயில் எழுப்பினார்கள். ஆய்ப்பாடியிலுள்ள பெண்களை யெல்லாம் துயில் எழுப்பியதற்கு இதை அறிகுறியாகக் கொள்ளலாம். இனி, இது முதல் ஏழு பாசுரங்களில் ஆயச்சிறுமியர்கள் தங்கள் சொற்களுக்கு வாய் ஊறி நின்ற கண்ணபிரானை எழுப்ப விரும்பி, அங்கே உள்ளவர்களையும் கண்ணனையும் துயில் எழுப்பப் போகிறார்கள்.

இந்தப் பாட்டினால் இப் பெண்கள் நந்தகோபன் மாளிகைக்குப் போய், கோயில் காப்பானை எழுப்புகிறார்கள். பின்பு வாயில் காப்பானையும் எழுப்புகிறார்கள். பேரைச் சொல்லத் தெரியாததால் தொழிலை முன்னிட்டு அழைக்கிறார்கள். ஆயச் சிறுமிகளின் இத்தகைய 'ஆயாப் புன்சொற்'களுக்கு வாயூறி நிற்பவன் கண்ணன் என்பதில், கடவுளின் தனிப் பெருங் கருணை உணர்த்தப் படுகிறது.

இளங்கிளியே ! இன்னம் உறங்குதியோ!

திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தைப் பற்றி இங்கு அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறேன். 27-7-1941ல் அச்சங்கம் வெளியிட்ட "ஆண்டாள் மாலை" என்ற புத்தகம் கிடைத்தது. அதில் நான் படித்து ரசித்த ஆண்டாள் கல்யாணம் இங்கு pdf வடிவில் நீங்களும் அனுபவிக்க! திருப்பாவையும் தொடர்கிறது.



andalkalyanam

15. இளங்கிளியே ! எழுந்திரு

எல்லாப் பெண்களும் திரண்டு வந்துதான் தன்னை எழுப்ப வேண்டும், அந்தக் கூட்டத்தைத் தான் கண்ணாரக் காண வேண்டும் என்று துணிந்து படுக்கையை விட்டு எழுந்திராமல் கிடக்கிறாள் ஒருத்தி. இவள் வீட்டு வாசலில் பெண்கள் திரண்டு வந்து நிற்கிறார்கள்.
முந்திய பாட்டில் 'பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோர் எம்பாவாய்' என்ற கடைசி அடியை உச்சஸ்வரத்தில் பெண்கள் பாடியது இந்த வீட்டுக்காரியின் காதில் விழுந்தது. அசல் அகத்துப் பெண்ணை எழுப்பிய அந்த வாக்கின் இனிமையில் ஈடுபடுகிறாள் இவள். ஈடுபட்டு இவளும், பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய் என்று தனக்குத்தானே பாடத் தொடங்கி விட்டாள். இனிமையாகப் பாடுகிறாள். இந்தக் குரலின் இனிமை வாசலில் நிற்பவர்களை வசீகரிக்கிறது. அதனால் அவர்கள் இவளை 'இளங்கிளியே!' என்று கூப்பிடுகிறார்கள்.
அசல் அகத்துப் பெண்ணை 'நாணாதாய்! நாவுடையாய்!' என்றெல்லாம் பரிகசித்தவர்கள் தன்னை 'இளங்கிளியே!' என்று அழைத்ததைக் கேட்டதும், 'இதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும்' என்று எண்ணி இவள் சும்மா இருக்கிறாள்: பதில் ஒன்றும் சொல்லவில்லை. 'இவர்கள் கூறுவதைப் புகழ்ச்சியாக எப்படிக் கருதுவது? அந்த அசலகத்துப் பெண்ணையும் உறக்கத்தில் வென்று விட்டவள் போலல்லவா நான் இன்னும் எழுந்து வெளியே போகாமல் இருக்கிறேன்? அப்படி இருந்தும் என்னை இகழ்வதற்குப் பதிலாக புகழ்ச்சி தோன்றக் கூப்பிடுகிறார்களே, இந்தப் புகழ்ச்சியின் உட்பொருள் இகழ்ச்சியாகத்தான் இருக்கவேண்டும்! இந்த நிலையில் மௌனமே தக்க பதில்!' என்றெல்லாம் எண்ணமிட்டவண்ணம் வாய் பேசாமல் கிடக்கிறாள்.
அவர்களோ 'இன்னம் உறங்குதியோ?' என்று கேட்கிறார்கள் ஆச்சரியமாக. 'இப்போதுதானே பாடிக் கொண்டிருந்தாள் இந்தக் கிளிமொழியாள்? "இளங்கிளியே" என்று நாங்கள் கூப்பிட்டதும் உறக்கம் வந்து விடுமா, என்ன!' என்பது அதிசயத்திற்குக் காரணம். எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ? என்று பெண்கள் கேட்டதும் கிளிமொழியாள் பதில் சொல்லுகிறாள்.
'இதோ எழுந்து வருகிறேன்; அதற்குள்ளே ஏன் சிலுசிலு வென்று கூச்சலிடுகிறீர்கள்?' என்பது இவள் பதில். இதைக் கேட்டதும் இக்கிளி மொழியாள் மீதும் இவர்களுக்கு ஆத்திரம் வந்துவிடுகிறது. வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும் என்கிறார்கள். இவளுடைய கட்டுரைத் திறனை – அதாவது கட்டிச் சொல்லும் பேச்சுத் திறனை – ஏற்கனவே தாங்கள் மெச்சியதாகவும், இப்போதும் மெச்சுவதாகவும் சொல்லுகிறார்கள். 'உன் வாயை முன்னமும் அறிவோம்; இப்போதும் அறிகிறோம்' என்கிறார்கள்.
இதற்குக் கிளிமொழியாள், 'நீங்கள் சாமர்த்தியசாலிகள்!' என்று சுடச்சுடப் பதில் சொல்லத் தொடங்கி விட்டாள். எனினும் பளிச்சென்று தன் வாயை அடக்கிக்கொண்டு, ' நானே சாமர்த்தியசாலி என்று நீங்கள் சொன்னபடியேதான் இருக்கட்டும்!' என்று பணிந்து பதில் சொல்லுகிறாள். வல்லீர்கள் நீங்களே! நானேதான் ஆயிடுக! என்ற பதிலில் முரண்பட்ட இருவகை உணர்ச்சிகள் தொனிக்கக் காண்கிறோம்.
வெளியே இருப்பவர்கள் இவளது விநய வார்த்தையைக் கேட்டதும் தாங்களும் பணிந்து பேசத் தொடங்கி, ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுஉடையை? என்று கேட்கிறார்கள். 'விரைவாக நீ எழுந்து வா; உனக்கு என்று தனியாக என்ன வேறுபாடு இருக்கிறது?' என்று சமாதானமாகவே பேசுவதைக் காண்கிறோம்.
இப்போது கிளி மொழியாள் மேலும் பணிவாகப் பேசுகிறாள். ;எனக்கு என்ன, கொம்பா முளைத்திருக்கிறது அசாதாரணமாக? அதிசயம் ஒன்றும் உங்களுக்கு இல்லாதது என்னிடம் இல்லைதான்; தோழிகளே! உங்களோடு கூடுவதைக் காட்டிலும் எனக்கென்று ஒரு தனிக் காரியமும் உண்டோ? சரி, பெண்கள் எல்லாரும் வந்து விட்டார்களா?' என்கிறாள். எல்லாரும் தன் வீட்டு வாசலில் வந்து கூடி நிற்கும் அந்தக் கூட்டத்தின் காட்சியைக் காணவேண்டும், கண்ணாரக் காணவேண்டும் என்பதுதானே இவள் மனப்பான்மை? எனவே, எல்லாரும் போந்தாரோ? என்று முடிவாக ஒரு கேள்வி போடுகிறாள்.
அதற்கு இவர்கள் 'போந்தார், போந்து எண்ணிக்கொள்' என்று பதில் சொல்லுகிறார்கள். பெண்கள் எல்லாரும் உன்னைக் காண்பதற்காக உன் வீட்டு வாசலில் வந்து காத்துக் கிடக்கிறார்களே!' என்று சொல்லிவிட்டு, 'உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கொள்' என்றும் சொல்லுகிறார்கள்.
முடிவில் எல்லாரும் கண்ணனது பிரதாபத்தைப் பாடத் தொடங்குகிறார்கள் ஒருமுகமாக.

குரல் காட்டி உறங்குதியோ!

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்!
வல்லீர்கள் நீங்களே! நானேதான் ஆயிடுக!
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுஉடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றுஅழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

விளக்கம்
'இளங்கிளியே!' என்று இவளை அழைப்பதற்குக் காரணம் இவளுடைய பேச்சினிமை என்பர். கிளிப்பிள்ளை போல் இனிய மழலை ததும்ப இவள் அவர்களிடம் உரையாடுவதுண்டு எனக் கருதலாம். உண்மையில் இவள் உறங்கிக் கொண்டிருக்கவில்லை. தன் குரலின் இனிமை தோன்ற மெல்லப் பாடிக் கொண்டிருந்தாள் என்றும், இந்தக் குரலின் இனிமையை அனுபவித்தே வெளியில் இருப்பவர்கள் 'இளங்கிளியே!' என அழைத்தனரென்றும் கருதலாம்.

இப்பாட்டில் ரசமான சம்பாஷணையைக் கேட்கிறோம்.

செவ்வாய், 29 டிசம்பர், 2009



மின் தமிழ் குழுமம் கூகுள் குழுமங்களில் ஒன்று. தமிழுக்கு அற்புதமாக சேவை செய்யும் பல தமிழன்பர்கள் கலந்து சங்கமித்து எல்லாரையும் தங்கள் தமிழறிவால் மனம் மகிழ வைக்கும் ஒரு நல்ல தளம். அதில் இன்று வந்து ரசித்த ஒரு கவிதை. ஷைலஜா என்பவர் எழுதியது. 

சீராரும் மார்கழித்திங்கள் வளர்பிறையின்

ஏரார் விழாவிற்கே ஏகிடுவோம்-பாரேத்தும்

காவிரியில் நீராடிக் களித்துக் கடவுளைத்தான்

பூவினால் போற்றியே பூசித்து-மேவினால்

மங்கலமாய் உள்ள மதுரப் பிரசாதம்

எங்கும் கிடைக்கும் இனிதுண்போம்-அங்கதன்பின்

வாசத் திருமாமணி மண்ட  பந்தன்னில்

தேசிகர்கள் சூழும் திருமுன்பில்-பாசமுற

வீற்றிருக்கும் தேவன் திருப்பாதம் தன்னைப்

போற்றிப்புகழ்ந்துள்ளே போயமர்வோம்  ஆட்சிபுரி

மன்னன் திருமுன் வணங்கி அரையர்கள்

பொன்னிலுறும்தாளத்தைப்போட்டபடி -இன்னிசையால்

சீரார் திருமொழியின் இன்பம் செவிக்களிப்பர்

ஊரார் வியக்க  உரைபகர்வர்-பேரருளால்

அண்ணல் சுவைக்க அபிநயமும் தாம் செய்வர்

கண்ணும் செவியும் களிப்படையும்  -நண்ணுவிழா

பத்துப்பகல் நடக்கும் பாற்கடலில் மோகினிபோல்

உத்தமன் அங்கே உலா வருவான் -பக்தர்கள்

எங்கும் நிறைந்திருக்க ஏகா தசியன்று

பொங்கும் பரிவால் புறப்பட்டு-மங்கலமாய்

அந்தணர்கள் போற்ற அருமறைகள் தாமேத்த

சிந்தித்து மக்களெலாஞ் சேவிக்க-  முந்துற்று

மின்னுமெழில் வைகுந்த வாயில் வழியாக

அன்னநடையோ டழகாகப் பொன் னரங்கன்

ஏராரும் ஆயிரக்கால் மண்டபத்தை எய்தியங்கு

சீரார் அமளியிலே சென்றமர்வான்  - அந்தமிழின்

ஆளிக ளாயுள்ள அரையர்கள் முன்னுற்றுத்

தாளத்தைக் கூட்டித் தமிழிசைப்பார் -கொஞ்சும்

தமிழுக்கவர் செய் அபிநயத்தைப் பார்த்தே

நெஞ்சம் மகிழ்ந்து நெகிழ்வுறுவர்-குமிழ்சிரிப்பால்

சிந்தை கவரும் சிறப்பார் கலியன் தான்

வந்து புரியும் வழிப்பறியும்  முந்துற்று

நாடும் பராங்குசநாயகியைக் கண்டிறைவன்

ஈடில்லா இன்பமிக எய்துவதும் - நீடுவளர்

மாட்சி யுறுகின்ற மகிழ்மாலை நம்மாழ்வார்

மோட்சமுறு நாடகமும் முற்றும் அந்தக்-காட்சியிலே

கண்டு மகிழ்ந்து களைதீர்வோம் -அன்னதன்பின்

அண்டர்கோன் ஆழ்வார்க்கருள் புரிவான் -மெய்யன்தான்

நம்பால் நண்ணியே  நலம் தருவான் அதன்பின்னே

நம்போல் உறுவாரார் உண்டு?  

நாணாதாய்! நாவுடையாய்!

14. நாணாதாய் ! எழுந்திராய்!

‘நான் எல்லாருக்கும் முன்னே எழுந்து வந்து உங்களையெல்லாம் எழுப்புவேன்!’ என்று ஏற்கனவே சொல்லியிருந்தவள், அந்த வார்த்தையை மறந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது பெண்கள் கூட்டம். இப்போது பின்வரும் உரையாடல் நிகழ்வதாகக் கருதலாம்.

                ‘நாங்கள் உன் வீட்டு வாசலில் வந்து நெடும்போதாக நின்று கொண்டிருக்க, நீ சுகமாக உறங்கிக் கொண்டிருக்கிறாயே!’

‘பொழுது விடியவேண்டாமா?’

‘பொழுது விடிந்ததையும் தெரிந்து கொள்ளாமல் தூங்குகிறாயா?’

‘அதற்குச் சாட்சி?’

‘அம்மா ! உன் புழைக்கடைத் தோட்டத்திலேயே சாட்சி இருக்கிறது!’

‘என்ன சாட்சியோ?’

பெண்கள் பாடுகிறார்கள்;

உங்கள் புறங்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

               உள்ளே இருப்பவள் ‘உங்கள் மயக்கம்தான் அதற்குக் காரணம்!’ என்கிறாள். தன் வீட்டு வாசலில் வந்த குதூகலத்தால் அவர்கள் கண்கள் மலர்ந்தனவாம். அவர்கள் விரும்பியபடி இவள் முகம் காட்டாததாலும், வாதப் போரில் தோற்றுப் போனதாலும் அவர்களில் பலர் வாய்களும் மூடிப்போயிருக்க வேண்டும் என்கிறாள். அதனால்தான் செங்கழுநீர் மலர்ந்ததாகவும், ஆம்பல் கூம்பினதாகவும் அவர்கள் பிரமித்ததாகக் கூறுகிறாள்.

     தலைவாசலில் நின்று வீட்டிற்குள்ளே புகுவதற்கும் வழி பெறாது தவித்துக் கொண்டிருப்பவர்கள் இவள் வீட்டுப் புழைக்கடையில் செங்கழுநீர் மலர்ந்திருப்பதையும் ஆம்பல் கூம்பியிருப்பதையும் அறிந்துகொண்டது தான் எப்படி? அதனால்தான் இவர்களைப் பரிகசித்து உள்ளே இருப்பவள் பதில் சொல்லுவதாக ஊகித்துக் கொள்ள இடம் இருக்கிறது. இவர்களோ பொய் சொல்லவும் இல்லை. மற்றை இடங்களில் உள்ள வாவிகளில் செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் குவிந்திருப்பதைப் பார்த்துக்கொண்டு வந்திருப்பதால், இவள் வீட்டுப் புழைக்கடைத் தோட்டத்து வாவியிலும் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று நிச்சயித்துப் பேசுகிறார்கள்.

             ‘உங்கள் புறங்கடைத் தோட்டத்து வாவியுள்’ என்று இவர்கள் தொடர்பை விட்டுப் பேசுவதுபோல் பேசுவதற்குக் காரணம் இவள் இன்னமும் துயில் உணராது உறங்கிக் கொண்டிருக்கிறாளே என்பதுதான். இப்படித் தோழமைக்கு உரிய அன்பை மறந்து பேசத் தொடங்கிய போதிலும், உள்ளுக்குள்ளே அன்பிற்கு ஒரு குறைவும் இல்லை.

         புழைக்கடைத் தோட்டத்து வாவி குறித்து இவர்கள் பேசியதை இவள் நம்பவில்லை என்று தெரிந்து கொண்டதும் வேறொரு அடையாளம் சொல்லுகிறார்கள்:

செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
 
தங்கள் திருக்கோவில் சங்குஇடுவான் போகின்றார்

      காவியாடை புனைந்து வெண்ணிறமான பற்களையுடைய துறவிகள் தங்களுடைய கோயிலில் சங்கு இடும் பொருட்டுப் போகிறார்களே, அது ஒரு சாட்சி என்கிறார்கள். பண்டாரங்கள் தங்கள் கோயிலில் பூஜைக்குச் சங்கு ஊதப்போவதை இங்கே இவர்கள் குறிப்பிடுவதாகக் கருதலாம். அவர்கள் கோயில்களையும் ‘திருக்கோயில்’ என்று குறிப்பிடுவது இவர்கள் சமரச உணர்ச்சியைக் காட்டுகிறது. அதாவது, ஆண்டாள் இவர்கள் வாயிலாகத் தன்னுடைய சமரச உணர்ச்சியை வெளியிடுகிறாள் எனலாம்.

             இங்கே குறிப்பிடும் துறவிகளை வைணவத் துறவிகள் என்று கருதுவோரும் உண்டு. கோவில் கதவைத் திறக்கும்போது மங்களச் சங்கு ஊதுவதை இங்கே குறிப்பிடுவதாகக் கருதலாம். கோவில் கதவைத் திறவுகோலிட்டுத் திறப்பதையும் சங்கிடுதல் என்று குறிப்பிடுவதுண்டு. இந்த அடையாளமும் உள்ளே இருப்பவளுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று கண்டதும், வெளியே இருப்பவர்கள் ஆத்திரம் அடைந்து பேசுகிறார்கள்.

‘நங்காய்! நீ எங்களிடம் சொன்னது என்ன? இப்போது செய்வது என்ன? எல்லாருக்கும் முன்பு படுக்கையை விட்டுக் குதித்து எழுந்து ஓடிவந்து எழுப்புவேன் என்றாயே! இப்போது உன்னை எழுப்ப வந்தவர்களையும் எதிர்த்துப் பேசுகிறாயே!’ என்றெல்லாம் சுடச்சுடப் பொருள் படும்படி பேசுகிறார்கள்.

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
என்று எவ்வளவு ஆத்திரமாய்ப் பேசுகிறார்கள்.

       ‘நீ எழுந்து வராமல் போனாலும் குற்றமில்லை: வாயால் அளந்தபடி ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று கொஞ்சமும் வெட்கப்படவு மில்லையே, அம்மா!’ என்பதை உள்ளடக்கித்தான் சுருக்கமாக ‘நாணாதாய்!’ என்கிறார்கள். இன்றைய பாஷையில் ‘அடி, சொரணை கெட்டவளே!’ என்று கூப்பிடுகிறார்கள் எனலாம்.

      ‘நாணாதாய்! நாவுடையாய்!’ என்று பரிகசிப்பவர்கள் இவளை இதற்குமேலும் பரிகசிக்க ‘பெண்களில் சிறந்தவள்’ என்று பொருளுடைய ‘நங்காய்’ என்ற விளியையும் உபயோகிக்கிறார்கள்.

முன்னே வந்து எழுப்புகிறவளா நீ?

உங்கள் புறங்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்குஇடுவான் போகின்றார்
எங்கள் முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாஉடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

விளக்கம்

பொழுது விடிந்ததற்குச் சாட்சியை உங்கள் வீட்டுப் புழைக்கடையிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். அங்கே தோட்டம் இருக்கிறது: வாவி இருக்கிறது. வாவியுள் செங்கழுநீர்ப்பூக்கள் மலர்ந்திருக்கும் அழகைப் பார் என்கிறார்கள். அந்த அழகே பொழுது விடிந்ததற்கும் சாட்சி என்கிறார்கள். ஒருவன் வாழ, ஒருவன் தாழ்ந்திருப்பதையும் காண்கிறோமல்லவா? அந்த விதமாக, செங்கழுநீர் மலர ஆம்பல் கூம்பியிருப்பதையும் சாட்சியாகக் காட்டுகிறார்கள். தவத்தவர் சங்கிடுவதைப் புழைக்கடைக்கும் போகாமல் படுத்த படுக்கையிலிருந்தே கேட்கலாம் என்கிறார்கள்.

‘நாணாதாய்! நாவுடையாய்!’ என்று ஏசியும், ‘நங்காய்!’ என்று புகழ்ந்தும் பேசுவதில் இவர்களுக்கு இடையே உள்ள நட்பு எவ்வளவு இனிமையாகப் புலனாகிறது பாருங்கள்!

----------------------------------------------------------------------------------------

இங்கு அடியேனுக்கு ஒரு சந்தேகம். பொதுவாக பழைய நூல்களை வலையேற்றுகையில் அவற்றுள் உள்ள எதையும் மாற்றாமல் – பல நேரங்களில் அச்சுப் பிழை என்று தெரிந்தும்கூட- உள்ளது உள்ளபடியே எழுதுவது அடியேன் வழக்கம். இங்கும் அதைப் போலவே “புறங்கடை” என ஆசிரியர் எழுதியபடியே இட்டிருக்கிறேன். ஆனால், இதுவரையில் பார்த்த படித்த பல்வேறு திருப்பாவைப் புஸ்தகங்களிலும் “புழக்கடை” என்றே கண்டுவந்திருக்கிறேன் இங்கு புறங்கடை என்றிருப்பது பாடபேதமா அச்சுப்பிழையா? .யாராவது சொல்வீர்களா?

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

கண்ணழகி ! கள்ளம் தவிர்ந்து கலந்து கொள்!

13. கள்ளந் தவிர்ந்து கலந்து கொள்வாய்

இவளைக் கண்ணழகி என்று ஆய்ப்பாடி முழுவதும் அறிந்திருந்தது. மான்போல் மருண்டு நோக்குவாள்; தாமரைபோல் மலர விழித்தும் பார்ப்பாள். இந்தக் கண்ணழகைக் குறிப்பிட்டுப் பெண்கள் போதுஅரிக் கண்ணினாய்! என்று இவளைக் கூப்பிடுகிறார்கள். பொழுது புலர்ந்தது; ‘புள்ளும் சிலம்பின காண்!’ என்கிறார்கள்.

புள்ளும் சிலம்பினகாண் போதுஅரிக் கண்ணினாய்! என்று இவர்கள் கூவி அழைத்தும் உள்ளே இருப்பவள் வெளியே வந்து சேரவில்லை. ‘என் கண்ணழகின் சிறப்பை நினைத்துக் கண்ணனே நான் இருக்கும் இடம் நோக்கி வந்து சேரவேண்டியதுதான்!’ என்று கருதியவள்போல் சும்மா இருக்கிறாள். கண்ணனுடைய குணாதிசயங்களையும் திவ்ய சரித்திரங்களையும் தியானித்தபடியே படுத்திருக்கிறாள்.

இவர்கள் கண்ணனுடைய வீர சரித்திரம் ஒன்றை முதல் முதல் நினைப்பூட்டுகிறார்கள். பறவையின் உருவம் கொண்டு வந்த அசுரனுடைய வாயைப் பிளந்தவன் கண்ணன் என்பதை நினைப்பூட்டி, புள்ளின் வாய் கீண்டானை என்று பாடத் தொடங்குகிறார்கள்.

பொல்லா அரக்கனை அநாயாசமாகக் கிள்ளிக் களைந்த இராம வீரத்தையும் நினைவூட்டிப் பாடுகிறார்கள். இத்தகைய வீர சரித்திரங்களைப் பாடிக்கொண்டு பெண்கள் எல்லாரும் நோன்புக்கு என்று ஏற்பட்டிருக்கும் சங்கேத ஸ்தலமாகிய பாவைக்களம் போய்ச் சேர்ந்தார்கள் என்று செய்தி சொல்லுகிறார்கள்.

‘நாங்கள் போய் எழுப்பிக்கொண்டு போகவேண்டிய சிறுமியராக இருப்பவர்களும் தாமே துயில் உணர்ந்து போகும்போது, நீ இப்படிக் கிடந்து உறங்குவது மிகவும் அழகாயிருக்கிறது!’ என்ற குறிப்புடன், பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் என்கிறார்கள்.

இதற்கு உள்ளே இருப்பவள், ‘அவர்கள் சிறு பெண்கள் ஆனதால் காலம் அறியாமல் போயிருக்கக் கூடும்’ என்று சொல்லக்கூடுமல்லவா? எனவே இவர்கள் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்று உறுதி கூறுகிறார்கள்.

வெள்ளி எழுதல் – அதாவது சுக்கிர உதயம் – பொழுது விடிந்த தற்கு அறிகுறி. ‘சுக்கிர உதயம் ஆயிற்று’ என்று மட்டும் இவர்கள் சொன்னால் போதும். ஆனால் கோதை வாழ்ந்த காலத்தில் வெள்ளி எழுந்தவுடன் வியாழனது அஸ்தமனமும் நிகழ்ந்தது என்றும் , அதையும் சேர்த்து இவர்கள் கூறுகிறார்கள் – அதாவது, ஆண்டாள் இவர்கள் வாயிலாகக் கூறுகிறாள் – என்றும் ஆராய்ச்சிக்கார்கள் அபிப்பிராயப்படுகிறார்கள்.

உள்ளே இருப்பவள் இதற்கும் கற்பனையாக ஒரு சமாதானம் சொல்வதாகக் கருதலாம். ‘பொழுது விடிந்ததென்று கருதிக் காலமறியாமலே பாவைக்களம் புகுந்த சிறுமியர் போல் நீங்களும் போக வேணுமென்ற ஆத்திரத்தால் சுக்கிரன் எழுந்ததாகக் கற்பனை செய்து பேசுகிறீர்கள் ‘ என்று உள்ளே இருப்பவள் சொல்லக் கூடுமல்லவா?

அதற்கும் சமாதானமாக பேசுகிறார்கள் இப்பெண்கள். இந்த நிலையில்தான் ‘புள்ளும் சிலம்பின காண், போதுஅரிக் கண்ணினாய்!’ என்கிறார்கள். ஏற்கனவே ஒரு பெண்ணை எழுப்பும்போது சொன்ன அடையாளம் தான் இது. அங்கே கூட்டிலிருந்து புள் சிலம்பியதைக் குறிப்பிட்டதாகவும் இங்கே இரை தேடப்போன இடங்களிலெல்லாம் சிதறி ஒலிப்பதைக் குறிப்பிடுவதாகவும் ஊகித்துக் கொள்ளலாம்.

இவ்வளவு சொல்லியும் கண்ணழகி எழுந்து வந்தபாடில்லை. எனவே இவர்கள் நீராட்டத்தை வருணித்து இவளை வசீகரிக்கப் பார்க்கிறார்கள்.

குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
  பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ?
என்று கூறுவதைக் கேளுங்கள்.

‘உடம்பு ஜில் என்று குளிர்ந்து போகும்படி குளத்தில் படிந்து ஆனந்தமாக நீராடுவதை விட்டு இப்படிப் படுக்கையில் கிடந்து வீண்பொழுது போக்குகிறாயோ? இது என்ன ஆச்சரியம்!’ என்கிறார்கள். ‘இது நன்னாள்’ என்பதையும் நினைவூட்டுகிறார்கள். இந்த நல்ல நாளில் கண்ணழகி கள்ளம் தவிர்ந்து தங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

இவள் கள்ளம்தான் என்ன? கிருஷ்ண சரிதத்தை நினைத்துக் கொண்டு ‘அவன்தான் என் கண்ணழகிற்கு ஆசைப்பட்டு நான் இருக்கும் இடம் நோக்கி வரட்டும்’ என்று தனியே கிடக்கிறாளே, அதைத்தான் இவர்கள் கள்ளம் என்று குறிப்பிடுகிறார்கள். தனியே பக்தி யனுபவம் பண்ணித் திருப்தி அடைவதைக் காட்டிலும் பிறருடன் கூடி நெஞ்சு குளிர இறைவனுடைய அன்பு நெறியைப் பற்றி நிற்பதே மேலானது என்பது குறிப்பு.

கண்ணழகியும் கள்ளந் தவிர்ந்து இவர்களுடன் கலந்து கொண்டாள் எனலாம்.

கண்ணழகியின் கள்ளத்தனம்

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதுஅரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்!நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்

கிருஷ்ணனுடைய வீர சரித்திரத்தையும் இராமனுடைய வீர சரித்திரத்தையும் பாடிக்கொண்டு வருகிறவர்கள் ஒப்பற்ற கண்ணழகு வாய்ந்த தங்கள் தோழி ஒருத்தியை எழுப்புகிறார்கள். கள்ளத்தனத்தை விட்டுத் தங்களுடன் கலந்து கொள்ளவேண்டுமென்று சொல்லுகிறார்கள். இவளுடைய கள்ளத்தனம்தான் எது? கண்ணனையும் அவனுடைய கல்யாண குணங்களையும் நினைத்துக் கொண்டிருப்பதுதான் இவள் கள்ளம்! ஏன்? எப்படி? பக்தியைப் பொதுவுடமை ஆக்கிக் கொள்ளாமல் தனியே கிடந்து தியானம் செய்து கொண்டிருப்பதுதான் கள்ளம்.

A guide for 108 Divya Desams

IMG Just this evening one of my friends presented me a book titled “Divya Desangalum thiruththala yaaththiraiyum” written/prepared by Sri Saikumar of Chennai. Sri Saikumar has taken much pains to collect all information about all the 108 divya desams, has provided the route guide and map for Chola, Pandia, thondai and mel nattu thiruppathikal and also for vada naattu divya desams.IMG_0005 It will be really a very helpful guide for those planning to visit Divya dsams as information regarding temple authorities, places for stay, arrangements for meals etc. has been provided with phone numbers also. But the author should have checked up the  brief sthala puranams IMG_0002 . There areIMG_0006 many mistakes. But it may be ignored as many of us will have a chance to know them from the temples we visit. The book priced at Rs.60/= can be had from

Sri K. Sai Kumar, 16/28, II Main Road, Jai Nagar, Arumbakkam, Chennai 600 106. Phone number 93828 72358 /044- 24757212.
email: saikumarlalitha@yahoo.com

மூவகை வெள்ளம்

12. நற்செல்வன் தங்காய், ஈதென்ன பேருறக்கம்?




இவள் தமையன் கண்ணனை விட்டுப் பிரிவதில்லை. எருமைகளைச் செல்வமாக உடைய இவன் கிருஷ்ண பக்திச் செல்வமும் பெற்று இருப்பதால் 'நற்செல்வன்' என்று கொண்டாடப் பெறுகின்றான். நாட்டிலும் காட்டிலும் இராமனைப் பின்தொடர்ந்து திரிந்த லட்சுமணன் போல், கண்ணபிரானை அன்றி வேறொருவரையும் அறியாதவனாய் அவனையே பின்தொடர்ந்து அவனிடத்திலேயே அன்பு பூண்டு திரிகின்றான் இவன்.

அப்பேர்ப்பட்ட நற்செல்வன் தங்கையைக் கூவி அழைக்கிறார்கள் இவர்கள்.

கனைத்துஇளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி


நினைத்து முலைவழியே நின்றுபால் சோர


நனைந்து இல்லம் சேறுஆக்கும் நற்செல்வன் தங்காய்!

பாலைக் கறவாததால் இளங்கன்றையுடைய எருமைகள் கனைத்துக் கதறிக் கொண்டு, கன்றை நினைத்துப் பால் சோர நிற்கின்றனவாம். அதனால் இல்லம் நனைந்து சேறாவதாகக் கற்பனை செய்து இந்த வீட்டின் பால் வளத்தைச் சிறப்பித்துப் பேசுகிறார்கள் பெண்கள். 'இத்தகைய உன் வீட்டு வாசலில் நாங்கள் வந்து நிற்கும் போது, பனியும் வெள்ளம்போல் எங்கள் தலைமீது விழுகிறதே!' என்கிறார்கள். பனித்தலை வீழநின் வாசல்கடை பற்றி என்கிறார்கள்.

எனினும் இந்தப் பனியையும் லட்சியம் செய்யாமல் 'மனத்துக்கு இனியானை' (இராமபிரானை)ப் பாடிக் கொண்டிருக்கிறார்களாம். விரைவில் இவளை அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்பது நோக்கம். இவளோ வாய் திறக்கவில்லை.

பெண்களோ 'நாங்கள் இராமனைப் பாடியும் நீ வாய் திறக்கவில்லையே!' என்கிறார்கள். இராமனை மனத்துக்கு இனியான் என்று கூறுகிறவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ண பக்தி தங்களைப் படுத்தும் பாட்டை உள்ளத்தில் கொண்டு பேசுவது போலத் தோன்றுகிறது.

மனத்துக்கு இனியானுக்கும் சினம் வருவதுண்டா? இராவணன் சாது ஜனங்களை ஹிம்சித்தபோது இராமனுக்கும் தர்மாவேசமாகிய சினம் பொங்கி விட்டதாம். சீதையைக் கவர்ந்தான் என்பதை வியாஜமாகக் கொண்டு இராவண வதம் செய்து உலகத்திற்கு தலம் விளைத்தான் இராமபிரான். இவர்கள் பாடுகிறார்கள்:

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!

'எங்களுடைய விருப்பத்திற்கு இணங்க நீ எழுந்திராவிட்டாலும், மனத்துக்கு இனியானுடைய பாடல்களைக் கேட்க விருப்பம் கொண்டாவது துயில் உணர்ந்து எழுந்து வரலாமே' என்ற பொருள்பட இனித்தான் எழுந்திராய் என்கிறார்கள்.

இப்படிச் சொல்லியும் இந்த 'நற்செல்வன்' தங்கை எழுந்து வரவில்லை என்று அறிந்ததும் ஆத்திரமாக, ஈதுஎன்ன பேருறக்கம்? என்று கேட்கிறார்கள்.

எல்லா வீடுகளிலும் உள்ளவர்கள் துயில் உணர்ந்த பின்பும் இவள் இப்படிப் பெருந் தூக்கம் மேற்கொண்டிருப்பது கண்டு அதிசயப்படுகிறார்கள் என்பதையும் 'ஈதென்ன பேருறக்கம்?' என்ற வாக்கில் கண்டு கொள்கிறோம்.

'மேலே, தலைக்கு மேலே, பனி வெள்ளமிடுகிறது; கீழே பால் வெள்ளமிடுகிறது; உள்ளத்திலோ கிருஷ்ண பக்திக் காதல் வெள்ளமிடுகிறது' என்று மூவகைப் பெரு வெள்ளத்திற்கு இடையே அகப்பட்டுக் கொண்டவர்களைப் போல் பெண்கள் பேசுகிறார்கள், இந்த வீட்டுக்காரியை நோக்கி. ஒரு சிறிய ஊரில் கிழக்கேயிருந்து ஆற்று வெள்ளம் பெருகி வந்ததாம். மேற்கேயிருந்து கால்வாய்க்கரையை உடைத்துக் கொண்டு வெள்ளம் பெருகி வந்ததாம். தெற்கே குளத்தை உடைத்துக்கொண்டு அந்த வெள்ளமும் ஓடி வந்ததாம். இப்படி மூவகை வெள்ளத்திற்கும் இடையே சிக்கிக் கொண்டவர்கள் வடக்கு நோக்கிப் போய் மேடான ஒரு இடத்தில் தப்பி ஓடித் தங்க உத்தேசித்தார்களாம்! அப்படியே இந்தப் பெண்களும் மூவகை வெள்ளத்திற்கும் ஆற்றாது தப்பிக் கண்ணன் இருக்கும் திசையை நோக்கிப் போக விரும்புகிறார்களாம்.

போகும்போது இந்த நற்செல்வன் தங்கையாகிய அன்புச் செல்வியையும் அழைத்துப் போக விரும்புகிறார்கள். இவளை விட்டுப் போகத் துணியவில்லை. எனவேதான் கண்ணனைப் பாடியவர்கள் இராமனையும் பாடி, 'நாங்கள் இப்போது துஷ்டக் கண்ணனைப் பாடவில்லை அம்மா! சாதுவாகிய இராமனைத் தான் பாடுகிறோம்' என்கிறார்கள். எப்படியாவது இவளுடைய பேருறக்கத்தைக் கலைத்துத் தங்களுடன் அழைத்துப் போகவேண்டும் என்பது இவர்கள் சங்கற்பம்.

நற்செல்வன் தங்கையும் அந்தப் பழக்கத்தாலும் அந்த உறவாலும் கிருஷ்ண பக்திக்கு இசைந்த நற்செல்வியாகத்தானே இருக்கவேண்டும்?



மூவகை வெள்ளம்



கனைத்துஇளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி


நினைத்து முலைவழியே நின்றுபால் சோர


நனைத்துஇல்லம் சேறுஆக்கும் நற்செல்வன் தங்காய்!


பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றி


சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற


மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்


இனித்தான் எழுந்திராய் ஈதுஎன்ன பேருறக்கம்?


அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.



விளக்கம்

இந்த வீட்டில் வசிக்கும் பெண்ணின் அண்ணன் கண்ணனை விட்டுப் பிரியாத ஒரு நண்பன். 'அவனுடைய தங்கையாகிய நீயும் இப்படி உறங்கிக் கொண்டிருக்கலாமா?' என்று கேட்கிறார்கள். 'தலைக்கு மேலே பனி விழ நாங்கள் வாசலில் நின்று கொண்டிருக்கிறோமே; எழுந்து வாராய்' என்கிறார்கள். தாங்கள் உய்ந்துபோகும்படி இவள் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள்.

எருமைகளைச் செல்வமாக உடையவன் கிருஷ்ண பக்திச் செல்வமும் உடையவனாக இருப்பதால் 'நற்செல்வன்' என்று குறிக்கப் படுகிறான். பணத்தைக் காட்டிலும் எருமைகளைச் செல்வமாக மதிக்கிறவர்கள் கிருஷ்ண பக்தியைத் தங்கள் அடிப்படைச் செல்வமாகிய தனிப் பெருஞ் செல்வமாக மதிக்கிறார்கள்.

கறவை எருமைகள் கன்றை நினைத்துப் பால் சோர நிற்பதும், அந்தப் பால் நனைத்து இல்லத்தைச் சேறாக்குவதும் செல்வச் செழிப்பை நினைவூட்டு கின்றன. இத்தகைய இல்லத்திலே கிருஷ்ண பக்திச் செல்வமும் வழிந்து பொங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பு.