வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

நம்மாழ்வார் வைபவம்

எம்பெருமான் தொடக்கமாக ஓராண் வழியாய் அவிச்சின்னமாய்த் தமக்குக் கிடைத்த இந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்குக் கூடஸ்தர் என்றும், குலபதி என்றும், கலியுகத்தின் ஆரம்பத்தில் ப்ரவர்த்தனம் செய்தவர் என்றும், த்ரமிடோபநிஷத் த்ரஷ்டா என்றும், போற்றப்பட்ட நம்மாழ்வாரால் ஓரவஸரத்திலே யோகதசையில் இந்த ஸம்ப்ரதாயத்தை உபதேசிக்கப் பெற்றவரும், தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளலுமான ஸ்ரீமந் நாதமுனிகளால் ப்ரவர்த்தனம் செய்யப்பட்ட சிறப்பையுடையதாய்; ஆழ்வார்களுடைய ப்ரபந்தங்களை அனுஸந்தானம் செய்ததினால் பெற்ற அனுபவத்தின் பரீவாஹமாக ஸ்தோத்திர ரத்தினம் முதலிய நூல்களை அருளிச் செய்த ஸ்ரீமத் யாமுன முனியினால் பாலூட்டி வளர்க்கப் பட்டதாய், இதத்தாய் எனப்பட்ட பகவத் ராமானுஜ முனியினால் நன்றாக ஸம்ரக்ஷிக்கப்பட்டதாய், அவரால் உபய வேதாந்த ப்ரவர்த்தத்தினாலே முடிசூட்டப்பட்ட திருக்குருகைப்பிரான் பிள்ளான் முதலான ஆசார்யர்களினால் அவரவர்கள் சக்திக்கு அனுகுணமாகப் போஷிக்கப்பட்டு வந்ததாய்த் தமக்குக் கிடைத்த ஸம்ப்ரதாயத்தை அஸுர ப்ரக்ருதிகள் வாயில் அகப்படாமல் காத்து, அதாவது இந்த ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகரான ஆழ்வாருடைய அவதார ப்ரபாவத்தையும், அவருக்கு அர்ச்சா ப்ரதிஷ்டாதிகள் செய்வது சாஸ்த்ரீயம் என்பதையும், அவருடைய ப்ரபந்தம் தமிழ் பாஷையிலிருந்தாலும் கான ப்ரதானமாயிருந்தாலும் பாஷையும் ப்ரசஸ்தமானது, பகவத் விஷயமான கானமும் ப்ரசஸ்தமானது என்கிற காரணத்தால் எம்பெருமானுக்கு மிகவும் உகப்பானது என்பதையும், அவன் முன்னால் கானம் செய்யத்தக்கது என்பதையும், ஆழ்வாருடைய அனுக்ரஹமின்றி எம்பெருமானின் திருத்தாள்களில் தலைவைக்கமுடியாது என்பதையும் நிரூபித்து, ‘அகில தம: கர்சனம் தர்சனம் ந:’ என்றும், ‘ஆபாதசூடமநபாயிநி தர்சநேஸ்மிந் ஆசாஸநீயம்பரம் ந விபக்ஷஹேதோ:’ என்றும் தாமே உத்கோஷிக்கும்படியான ஏற்றத்தை உண்டாக்கி, அது இனித்தானே தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும்படியாகச் செய்திருந்த ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாகச் சுற்றி,

இத்தால் இந்த க்ரந்தத்தின் விச்வஸநீயதமத்வம் தெரிவிக்கப் பட்டதாகிறது.

விமத்நந்

கடைந்தருளி என்றபடி.

அந்த க்ஷீராப்தியைக் கடைவதற்கு தேவர்களும் அஸுரர்களும் இருபக்கங்களிலும் நின்று இழுத்தார்கள். இங்கு ஸ்வாமி தேசிகன் ஒருவராகவே கடைந்தமை காட்டப்பட்டதாகிறது.

ஸ்வாதுகாதா லஹரி தச சதீ நிர்கதம் ரத்நஜாதம்

முரமதன குண ஸ்தோம கர்ப்பங்களாய், செவிக்கினிய செஞ்சொற்களாய், தொண்டர்க்கதுதுண்ணச் சொன்ன சொல்மாலைகளாய், நாநா கல்லோல நாதானுபவ ரஸ பரீவாஹங்களாய் இருக்குமவைகளான திருவாய்மொழி ஆயிரம் பாட்டுக்களாகிற அலைகளிலிருந்து பகவத் குணங்களாகிற அநர்க்கங்களான ஆயிரத்தி நூற்றுப் பதினொரு ரத்தினங்கள் வெளிப்பட அவற்றில் முக்கியமான 111 குணங்களை (ரத்தினங்களை)

த்ரமிடோபநிஷத் என்னப்படும் திருவாய்மொழி 1102 பாட்டுக்கள் அடங்கியது. பத்துப் பகவத் குணங்களை ப்ரதிபாதிக்கும் பத்துப் பாட்டுக்களும் பலச்ருதியாக ஒரு பாட்டுமாகப் பதினோரு பாட்டுக்கள் கொண்ட பாகத்தை ஒரு திருவாய்மொழி என்றும், இப்படிப் பத்துத் திருவாய்மொழிகள் கொண்ட 110 பாட்டுக்கள் அடங்கிய பாகத்தை ஒரு பத்து என்றும், இப்படிப் பத்துப் பத்துக்கள் சேர்ந்த 1102 (கேசவன் தமரில் மட்டும் 12 குணங்கள்) பாட்டுக்கள் கொண்டது திருவாய்மொழி என்றும் சொல்லுவர்கள். முதல் திருவாய்மொழியிலுள்ள பத்துப் பாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் ப்ரதிபாதிதமான நிஸ்ஸீமோத்யத் குணத்வம் முதலிய பத்துக் குணங்களால் பரத்வம் என்கிற ஒரு பெரிய குணம் கூறப்படுகிறது. இப்படியே முதல் பத்து திருவாய்மொழிகளினால் சொல்லப்படுகிற பத்து ப்ரதான குணங்களினால் ஸேவ்யத்வமாகிற ஒரு முக்ய குணம் ப்ரதிபாதிக்கப்படுகிறது. இப்படிப் பத்துப் பத்துக்களினால் ஏற்பட்ட பத்துக் குணங்களும் சேர்ந்து ஸாரதமமான ஓர் அர்த்தத்தைக் குறிக்கிறது. இதுதான்

ச்ரிய:பதியான எம்பெருமான்

தன்னை அடைவதற்குத் தானே காரணம்

என்பது.

இப்படிக் குணப்ரதானமான ஆயிரம் ரத்தினங்களையும் பகவத் நாம ஸஹஸ்ரமாய் வைத்துக்கொண்டு பகவானை ஆராதிக்கவேண்டும் என்பது ஸ்வாமியின் திருவுள்ளம் என்று தோன்றுகிறது.

க்ஷீராப்தியோ பக்குவம் செய்யப்படாத பாலாகையினால் அதிலிருந்து உண்டான அம்ருதத்திற்கு மொச்சை வாஸனை இருந்திருக்கலாம். ஆழ்வாருடைய ஸ்ரீஸூக்தியோ ‘தேனும் பாலும் அமுதம் ஒத்தே’ என்கிறபடியே ஸ்வாதுதமங்களான வஸ்துக்கள் கலந்தாற்போல் இருக்கிறபடியால் இதிலிருந்து உண்டானவை மிகவும் போக்யமாயிருக்கும் என்பது கைமுதிக ந்யாய ஸித்தம்.

ஆக இப்படித் திருவாய்மொழியிலிருந்து 113 குணங்களாகிற ரத்தினங்களை எடுத்து, அவற்றில் நூறு திருவாய்மொழிகளினால் ப்ரதிபாதிக்கப்பட்டவைகளான நூறு பெரிய ரத்தினங்களையும் ஒவ்வொரு பத்தினால் ஏற்பட்ட முக்ய குணங்களான பத்து ரத்தினங்களையும், ப்ரபந்தம் முழுவதினாலும் ப்ரதிபாதிக்கப்பட்ட ஸாரதமமாய் நடுநாயகம் போன்ற ஒரு ரத்தினத்தையும் கொண்டு,

க்ரத்நாதி

ஒரு மாலையாகத் தொடுத்தருள்கிறார்.

ஆழ்வார் ‘கோமின் துழாய்முடி ஆதியஞ்சோதி குணங்களே என்று நியமித்தருளியதை இப்படி ஆழ்வார் திருவாய்மொழியில் பாட்டுக்கள் தோறும் அனுபவித்த குணங்களையே ரத்தினங்களாக்கி அவற்றை மாலையாக்கி அந்வர்த்தமாக்கிய பாக்யம் ஸ்வாமி தேசிகனுக்கே கிட்டிற்று. இந்த ஹாரத்தை எப்பொழுதும் பாகவதோத்தமர்கள் எவ்வித பயமும் உண்டாகாமல் இருப்பதற்காகத் தரித்துக்கொள்ள வேண்டும் என்று மேலே பத்தாம் சுலோகத்தில் அருளிச் செய்திருப்பதை இங்கனுஸந்திக்கவும். இந்த சுலோகத்தின் பாவத்தை ஒரு சித்திர ரூபமாகவும், இன்னம் பல விசேஷார்த்தங்களுடனும் திருவாய்மொழியாகிற ஆராவமுதக் கடைதல் என்னும் ஒரு புஸ்தகமாக நம்மால் வெளியிடப் பட்டிருக்கிறது.

இப்பிரபந்தத்தில் காமுகர்களின் நூநப்ரேக்ஷண விரஹ க்லேசாதிகள் அனுஸந்திக்கப் பட்டிருப்பது எப்படிப் பொருந்தும்? என்கிற ஸாமாந்ய ஜனங்களுடைய ஆக்ஷேபத்திற்கு ஸமாதானம் அருளிச் செய்துகொண்டு இப்பிரபந்தத்தின் ஏற்றத்தை நிரூபித்தருளுகிறார்.