ஸ்ரீ:
மாமலர் மன்னிய மங்கை மகிழ்ந்துறை மார்பினன்றாள்
தூமலர் சூடிய தொல்லருள் மாறன் றுணையடிக்கீழ்
வாழ்வை யுகக்கு மிராமா நுசமுனி வண்மைபோற்றுஞ்
சீர்மைய னெங்கடூப் புற்பிள்ளை பாதமென் சென்னியதே.---- [தேசிகமாலை, பிள்ளையந்தாதி]
வேதமுடித் தேசிகனே வேதியர்கு லத்தரசே
சாது சனங்களுக்குத் தாவனமே – போதமரும்
நின்னடியை யென்று நினைத்திருப்பார் பாதமென்றன்
சென்னிதனிற் சூடு மலர்.--[தேசிகர் நூற்றந்தாதி]
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன் திருமால். அவன் திருவடிகளை எப்போதும் தம் திருமுடியிற்சூடி நிற்பவர் நம்மாழ்வார். அனைத்துலகும் வாழவேண்டும் என்று நெடுங்காலமாகத் திருவருள் சுரந்து நிற்கும் இச் சடகோபன் திருவடிகளையே உபாயமாகவும் பலனாகவும் நாடி நின்று பெருமை பெற்றவர் ஸ்ரீபெரும்பூதூர் வந்த வள்ளல். ஸ்ரீபாஷ்யம் முதலிய தம் திவ்ய ஸூக்திகளின் வாயிலாக உலகுக்கு க்ஷேமத்தை நல்கிய இந்த ஸ்ரீபாஷ்யகாரருடைய ஔதார்ய குணத்தை வாயாரப் புகழ்ந்து பேசுபவர் தூப்புல் ஸ்ரீதேசிகன்.
சீர் ஒன்று தூப்புல் திருவேங்கடம் உடையான் நம் வேதாந்தகுரு.
தேசிக னென்னு மாசான்
தெளிவொடு பொறுமைச் சீரும்
வீசிய கடல்நீர்ப் பாரில்
விளைத்தபல் விநோதக் கூட்டும்
பேசிட வல்லார் யாரே?
வயலூர் கந்தாடை மன்னப்பய்யங்கார் என்ற பாக்கியவான் வேதமுடித்தேசிகன் விஷயமாய் வெண்பாவில் ஒரு நூற்றந்தாதி பாடியுள்ளார். அது குறிப்புரையுடன் “வேதமுடித் தேசிகமாலை” என்ற திருநாமத்துடன் பிரசுரிக்கப் பெற்றுள்ளது. (வெளியீடு 58, 3.3.1954) அத்தூமறையோன் தேசிகபக்தியை அறிய அவாவுபவர் அம்மாலை முகவுரையைக் கற்பாராக. அத் தென் வடமொழி நாவலர் சந்த விருத்தத்தில் ஆறு பாக்கள் கொண்ட “ஸ்ரீவேதாந்த தேசிகன் சந்த விருத்தம்” என்ற அழகிய நூலைப் பாடியுள்ளார். பல்லாண்டுகட்கு முன் ஞானப் பெருந்தகவோராய் எழுந்தருளியிருந்த ஒருவரான ஸ்ரீவைஷ்ணவ சிகாமணியிடம் ஏட்டுப் பிரதியில் இவ் வேதாந்ததேசிகன் துதியை ஸேவிக்கும் பாக்கியம் பெற்ற அடியேன் அதனை அதிற் கண்டவாறே “வேதாந்தகுருமாலை” என்ற திருநாமத்துடன் இச்சந்தமிகு செந்தமிழ்ச்சங்கத்தின் 65-ஆவது வெளியீடாகப் பிரசுரிக்க முன்வரலானேன்.
இராமநாதபுரம் ஜில்லா பந்தல்குடி என்னும் ஸ்ரீக்ராமத்தில் அபிஜாதராய்த் திருநெல்வேலியில் வெகுகாலம் லௌகீக வ்ருத்தியில் ஸப்-ரிஜிஸ்த்ராராக யிருந்தவர் வேலாமூர் ராமஸ்வாமி ஐயங்கார் ஸ்வாமி. இவர் ஆயிரம் பிறை கண்டவர். இவ்வுத்தமரின் ஞான அநுட்டாந வைலக்ஷண்யங்களை வகுளமாலை (தொகுதி 3, பகுதி 5,6, பக்கங்கள் 51-53- பிரமாதி வைகாசி, ஆனி, 1939,மே, ஜூன்)யிற் பரக்கக் காண்கலாம். இவர் திருக்குமாரராய் விளங்கும் ஸ்ரீ உ.வே. வரதாசார் ஸ்வாமி இச்சங்கத்துப் பேரபிமானி. இந் நன்னெஞ்சரின் ஒரு தவப் புதல்வர் சிரஞ்சீவி ராமபத்திரனின் விவாஹத்தன்று இம்மாலை வழங்கப் பெறுவது இதன் தனிச்சிறப்பு.
இந்நற் பந்து மித்திரர் இம்மாலை வெளியிடும் பணியில் எம்மையேவி அதற்குரிய பூரண பொருள் உதவியும் புரிந்ததற்கு அந்த ஸ்வாமிக்கு எமது மனமார்ந்த வந்தனம்.
பொங்கும் மங்கலம்
எங்கும் தங்குக.
ப.ரெ.திருமலை அய்யங்கார், காரியதரிசி
ஸ்ரீரங்கவிலாசம்,
அம்பத்தூர்,
7-7-1954.
ஸ்ரீவேதாந்த தேசிகன் சந்த விருத்தம்.
பூவின்மன்னு மங்கைதாள் பொருந்துமார்ப னார்புகழ்
யாவுமங்கம் வேதநான்கு பாடுமாற னாகம
மேவியோங்கு பாச்சியம் விதித்தயோகி நாமமே
நாவிலங்கு தூப்புலய்யர் பாதநண்ணு செஞ்சமே. .1.
மூன்றுநான்கொ டேழுமூன்று நாலுமூன்று மூன்றுமாய்த்
தோன்றுபாக நாலிலாய தூயதத்துவ த்தையும்
நான்றிதந்த பேறுடன்ன வின்றசார மொன்றினான்
மூன்றிலுள்ள மொய்த்தருள் முயன்றதேசி கேசனே. .2.
முத்தர்பத்தர் கீர்த்தியர்க்கி தத்திலுற்ற நாரணன்
சித்தமுற்ற பேறுசேர்தல் பாவமே திகழ்ந்தவர்
வித்தியாறு பெற்றுவந்து வேந்தர்மைந்தர் நீதியே
சுத்தகஞ்சொல் மாறருள் சுரக்கு வேத சூரியே. .3.
அசாரபுத்த சங்கராதி யற்பசார மிம்மையுங்
குசாரமாஞ் சுவர்க்கமாய கோதில்தானு ரீயமும்
விசாரமற்று விட்டுயர்ந்து வேதமௌளி தன்னுடன்
சுசாரமூன்றை யுள்ளிநின்ற ருள்செய்தூயதேசிகா. .4.
திறங்கொண்மூல மாயவோ ரெழுத்திலுற்ற சேடமாய்
மறந்திகழ்ந்த வஞ்சமாற்றி றிரண்டில்வாய் விதேயமாய்
சிறந்தவஞ்சி லீசனிற் றிகழ்ந்திருந்த தங்கமா
மறந்திடாம லீதருண் மறைக்க மைந்த சூரியே. .5.
படைத்தமைக்கு நாரணன் பதத்திலுற்ற சீவர்கள்
கிடைப்பதான நியாசபத்தி கீழ்மைபோக்கு நன்பதம்
மிடையதாம் விரோதியுற்ற மேலறிந்து நான்பதைத்
தடைக்கலங்கொ ளென்னையென்று மாகாந்த தேசிகா. .6.
சயங்கொள்பத்தர் பாதமெய்த முத்தர்சுத்தர் நித்தியர்
வியங்கொண்மாய வீவின்வான மென்றுமேவு காலமும்
பயங்கொடன்ன தீனமாய பஞ்சமுத்தி மாதவன்
அயங் கொண்ஞான நன்னரு ணயந்து தேசி கேசனே. .7.
ஆயிரங்கொள் கோடியூழி யார்ந்துபோற்றி யுய்ந்தவந்
தாயபூவ னேற்றிதோன்றி யார்தவத்த சங்கரன்
றூயதாநி னைத்ததேவு சொல்லின்ஞான சீபதிக்
காயசார்வு ணர்த்திசேர்த் தனந்தசூரி மைந்தனே. .8.
எட்டின்முன் பதத்தின்மூன் றெழுத்தினா லெனக்கெனுங்
கட்டுமற்ற வர்க்கெனுங் கலங்குடம்பி னானெனும்
தொட்டமேற் பதங்களா லுபாயமுத்தி தொல்லைசேர்
விட்டநான் எனக்கெனும் மதிப்பரும் விரத்திதா. .9.
பத்திதான் னியாசமும் பறந்துகக்க மானிடர்க்
குத்திதான் குருக்களா லுகந்த நிட்டை யுய்ந்திடம்
வித்தமுத்தி யொத்ததீங்கு வேறுபாடு சேருமே
யித்தைநா னறிந்துகக்க வந்துபா ரெமீசனே. .10.
ஞானமாறு பேறுஞான நல்லதெய்வ யாகமாய்
ஞானயோக மொத்தபத்தி யானயோக மூன்றினால்
வானமெய்து வார்மிகுன்னி யாஸயோக மூன்றினால்
நானதின்றி நின்னபாத நண்ணுமெங்க ணாதனே. .11.
பத்திசக்தி யத்தன்ஞான மற்றபற்று நூற்றகை
வொத்தியாம் விளம்பமுற்ற வேற்றலென்ன நான்கினா
லொத்தநாலு மூன்றினா லிரண்டிலாறு நான்குமாய்ப்
பத்தொடஞ்சு தக்கவைக்கு மாயநின்ன பத்தியே. .12.
அய்யமாலி னானுங்கூடி விந்நினைத்த தன்றியும்
பொய்யன் மந்த செய்கைபோய்ப் புரிந்து வேறிலாமையா
லையமற் றுளந்தெளிந்து மாறுபாய மாய்நினை
கொய்யுமங்க மஞ்சுகூறு நின்னபாத மெய்தவே. .13.
நானுமென்ன தாமனைத்து நாதசீ பதிக்கிதாம்
வானுபாய மாம்பரங்கள் வல்லவன் றவன்றிறத்
தானபேறு மப்படிக் கிதென்றுதந்த துன்றகை
வான்பிற மடைக்கலங் கொளாகமாந்த தேசிகா. .14.
வல்லஞான முத்தியுற்ற வன்பரங்கொண் மாதவன்
சொல்லறிந் துளந்தெளிந்து சுற்றுமோர் பரந்துறந்
தொல்லைவா லுகப்புடன்னின் செய்கையோர் மனங்கடா
தொல்லைவேத மௌளிசூரி யானதூய தேவனே. .15.
முக்கியங்கொண் மந்திரங்கள் மூன்றினுள்ள மெய்துவார்
தக்கதன்மை யானசார்வு பேறுசின்ன மாமொறை
துக்கமுற்ற வச்சமின்மை தோற்றமுள்ள சிந்தையின்
மிக்குமாக மாந்தசூரி பாதபக்தி மேலையே. .16.
காலமொன்று மீதிலா துகந்துசெய்து காதலாய்
நாலிகைந் தருச்சைபோற்றி நோக்கு நங்குருக்களின்
மாலிலங் கிதஞ்சினாய வாய்ந்தமூன்று சார்வதா
வேலைவண்ணர் உள்ளமாய்ந்த வேங்கடேச சூரியே. .17.
ஆகமாந்த தேசிகர்க் கமைந்த்தொண்டர் தொண்டராய்
(ஆக?) குமத்தை நீங்கி மற்றைநீங்கு மிங்கு? மாவதோ
மாகமுற் றுயர்த்துமப்ப தப்பொருட்க ளீதிறே
போகமோடு தன்மைமுத்தி புறப்பயன்கள் வேண்டிலேன். .18.
பாசியத்தி லோர்தலும் பதின்மர்பாடல் சிந்தையாம்
வாசியின்றி நன்பதிக் குகந்தவல்ல தேவையாய்
மாசறைந்து மூன்றுபத் தெழுத்தில்வாய்ந்த நிட்டையா
யாசையற்ற தொண்டர்தொண்டு மாம்படிக்கு நீயருள். .19.
வேதமௌலி தேசிகர்க்கு வீவில் தொண்டரானநாம்
போதலர்ந்த பூவின்மங்கை மன்னுநாதன் புன்தயைக்
காதரங்கொள் பாத்திரங்க ளாயபாவ முற்றலு
மேதுவோடு நாசமெய்தி யீனமொன்று மின்றியே. .20.
பொன்னரங்கர் தாமுகந்த புண்ணியங்கள் தொண்டர்சேர்
நன்னலங்கொள் தேசமே நயந்து நாமிருக்கவும்
நின்னபாத மொன்றிசிந்தை நீடுநிற்கு மின்பமர்
மின்னபே றெனக்கருட் சிறக்கவெங்க ணாதனே. .21.
தேவுமற் றிராதுநின்று சேர்நிமித்த மொன்றினாற்
றேவர்தென்னர் பூவமௌலி யுன்னினைந்த போதுமா
நாவுடன் புலன்மனம் மருத்தருக்க ளைந்துடன்
றேவுணர்த்த மத்திமத்தை நாடிசேரெ மீசனே. .22.
அங்கிபூவர் தென்னர்தேவர் நற்பகற்க ளாண்டுடன்
றங்குவாயு பானுதிங்கள் சேர்மினும் சலேசனும்
பொங்குமிந்தி ரன்விரிஞ்ச னன்றுபோய் நடத்தவே
யிங்கிருந்து மீதுமாயை யீறுதாவெ மீசனே. .23.
அனைத்தவர்க்கு மீதுசேரு மன்றுமாத வன்றனைத்
தினைக்கொள்போதி லும்விடாது தேர்ந்துமீட்சி யின்றியே
நினைத்ததேன் வயங்குசெய்ய நீயுகந்து நன்றருள்
வினைக்கொளெண்ணி லீவடர்த்த வேங்கடேச சூரியே. .24.
ஞானசத்தி சேர்தயைக்கு நற்குறிக்கண் பார்த்தருள்
ஆனமித்த னைத்தசீவர் மேலிலுற்ற நாதனார்
வானிலங்கு மொத்தமாது டன்கொள்சித்த வேதுவே
நானறிந்த துய்யநின்ற ருட்கொள்வேங்க டேசனே. .25.
ஆதிசாதி யைந்தினோர்தல் வேறிலாமை யாக்கடி
லாதரங்கொண் மால்பதத்த ரும்பரங்கள் வைக்கலாம்
ஓதுமங்க மைய்ந்தினோடு முத்தியேது வென்கையுங்
கோதில்கால மைந்துள்செய்கை கூறவும் பரிந்தருள். .26.
பாதமீன்ற சாதியாலு முற்றசெய்கை யாற்பணிந்
தேதமின்றி யேத்துமெந்தை தேவர்தூய தொண்டரே
போதிலொத்த சீலமார்ந்து மொத்தபொன்னொ டொப்பரே
யீதிலென்னை நாட்டுவேத மௌலியேத்து சூரியே. .27.
உண்மைசொல்லு மாகமாந்த மோதுசீல முற்றவர்
வண்மையெண்ணின் மீதியன்ற சந்தராதல் தீதிலாத்
தண்மையுற்ற சூரிநேரிற் றாதர்பாத பங்கயங்
கண்மனங்கள் பற்றலிங்கு கார்மறைக்கு நாதனே. .28.
வித்திகாவ லீசன்மாயை வேறுஞான மாக்கினான்
புத்தியோடெ னக்கறாத போதமெய்தி பத்தர்தான்
பத்தனாய்ச் சரண்படைத்து நண்ணநார ணன்பதம்
முத்திதாவ னாதியா மொழிக்கமைந்த சூரியே. .29.
குணங்கொடுத் தவங்கெடுத்து கோதுகேட்ட ணர்த்தியும்
வணங்கிநாம் வணங்கிநின்ற சீர்மிகுந்த நாரணன்
குணஞ்சரண் சரண்புகுந்து கோதில்சீர் பரன்பதம்
மணங்கொடேவை யேயநா மகிழ்ந்தருள் கொளீசனே. .30.
குறிக்கொண்ஞான முற்றிகழ்ந்து கோதில்பேறு மாறுமாம்
வெறிக்கொள்போத மாதுசேர்ந்த வீவில்தன் சரண்புகக்
குறிக்களேந்தி நம்வினைகள் பத்திசேம மேத்தினார்
குறிக்கொள்வேத மௌலிதேவிற் கோய்வுதா வுணர்த்தியே. .31.
நங்கிடாம்பி யப்புளார் நவின்ற ஞானதீபமா
றங்கமைந்து ளாறுதந்த வாகமாந்த தேசிகா
வெங்குமுன்த யைக்குநா னினைத்தமாத் திரங்கிடா
யிங்குநானு ரைத்துவாழ்வ னென்றுமொக்கு மீதையே. .32.
தத்துவத்து ணர்த்திஞான தீபமேற்று மாரியர்
பத்திமுத்த சேவையாதி னய்யகுன்ற சீலமே
எத்திசைக்கு மிங்கெதிர்க்க ளில்லையென்ற சந்தமே
யத்தனைக்கு நீயருட்கொ ளாகமாந்த சூரியே. .33.
மன்னனாதி மாமலர்க்கொண் மங்கைசேனை நாதனார்
மாறனாத யோகிபங்க யக்கண்மாலி ராமனார்
அன்னையாமு னேயர்நம்பி யாரெதீச னெம்பிரான்
ஆங்கடாம்பி மாண்பிலா ரரங்கராச ரப்புளார். .34.
வேங்கடேச தேசிகாவி ளங்குநான்கு பேரினா
யோங்குமுன்கு ணங்கள்வேத மோதுநாமி தெண்ணிலார்
ஆங்குணங்கள் போற்றினேனி தானதுண்மை நீபொறுத்
தீங்கிருட்த ருக்கள்மீது நின்னநீர்மை யெண்ணியே. .35.
ஆகமந்த னைக்கனைத்து மீசனில்ல தொன்றுமொன்
றாகமாந்த சொல்லுறுத்து மைத்தியங்கு சாரமே
யாகமாந்த மூன்றினுள் ளமர்ந்தவீ டகற்றவ
ராகமாந்த தேசிகர்க் கமர்ந்துவாய்ந்து வாழ்வரே. .36.
***************************************************