ஞாயிறு, 14 அக்டோபர், 2018

இராமாய‌ண‌ த‌ருமம்

--- 5 ---

II உப‌தேச‌ கிர‌மம்.



(1) வான்மீக முனிவர் நாரத மஹரிஷியை நோக்கி –
கோந்வஸ்மிந் ஸாம்ப்ரதம் லோகே குணவாந் கச்சவீர்யவாந் |”
என ஆரம்பித்து,
ஏததிச்சாம்யஹம் ஶ்ரோதும் பரம் கௌதூஹலம் ஹி மே|”
என்றபடி,
! ஸ்வாமி! இவ்வுலகில் இக்காலத்தில், அனந்த கல்யாண குணங்களும், ஸௌஶீல்யாதி குணங்களுமுடைய உத்தம புருஷன் யார்? என்பதை அடியேன் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.. தேவரீர் அடியேனுக்குக் கிருபை செய்தருள வேண்டும்" என்று (பாலகாண்டம் சரு 1. சுலோ 2 முதல் 5 சுலோகங்கள் மூலமாக) ப்ரஶ்நம் பண்ணினார். அதைக் கேட்டு நாரத மஹரிஷி மிகுந்த சந்தோஷமடைந்தவராய் (பால கா. சரு 1. சுலோ 8 முதல் 96 சுலோகங்களடங்கிய) ஸ்ரீராம சரிதத்தைப் பூராவாகவும், ஸம்க்ஷேப மாகவும் வான்மீக முனிவருக்கு உபதேசித்தருளினார்.
இதனால்,

தத்விஜ்ஞாநார்த்தம் ஸ குருமேவாபி கச்சேத்" என்றபடி வேதாந்தார்த்தங்களை ஒரு குருவினிடத்தில் போய்க் கேட்டே அறிய வேண்டுமென்ற தருமமும்,
நாப்ருஷ்ட: கஸ்ய சித்ப்ருயாத்" என்றபடி ஶிஷ்யன் கேட்காமல் இருக்கும்போது குரு உபதேசஞ் செய்யலாகாதென்ற தருமமும் ஸூசிதம்.


(2) விஶ்வாமித்ர மஹரிஷி யாக ஸம்ரக்ஷணார்த்தமாக ஸ்ரீராம லக்ஷ்மணர்களை அழைத்துக்கொண்டு, ஶரயூ நதியின் தென்கரையில் சேர்ந்தவுடன் மகரிஷி ஸ்ரீராமபிரானை நோக்கி,

மந்த்ரக்ராமம் க்ருஹாணத்வம் பலாமதிபலாம் ததா|
த்ரிஷுலோகேஷுவா ராம ந பவேத் ஸத்ருஶஸ்தவ||
பிதாமஹஸுதே ஹ்யதே வித்யே தேஜ: ஸமந்விதே|
ததாமி தவ காகுத்ஸ்த ஸத்ருஶஸ்த்வம் ஹி தார்மிக ||

ஸ்ரீராம! பலை, அதிபலையென்னும் மந்திரங்களை உபதேசிக் கின்றேன். பெற்றுக் கொள்க. மூன்று லோகங்களிலும் உனக்குச் சரியாக ஒருவனுமாகமாட்டான். மிகுந்த பிரகாசம் பொருந்திய பிரஹ்மபுத்திரி களான இம்மந்திரங்களை கிரஹிப்பதற்குத் தார்மிகனான நீயே தகுந்தவன். ஆகையால் உனக்கு உபதேசஞ் செய்கிறேன்" என்றுரைத்து உபதேசஞ் செய்தருளினார்.

"நோக்கின்னவர்முக நோக்க நோக்குடைக்
கோக்கு மாருமடிகுறுக நான்முகன்
ஆக்கிய விஞ்ஞைகளிரண்டு மவ்வழி
ஊக்கினனவையவ ருள்ளத்துள்ளினார்"
                                   (கம்ப.ராமா. பா.கா., தாடகை 18)

என்ற கம்பராமாயணம் நோக்கத்தக்கது.

பின்னும் விஶ்வாமித்திர முனிவர் ஸ்ரீராமபிரானை நோக்கி,

பரிதுஷ்டோஸ்மி பத்ரம் தெ ராஜபுத்ர மஹாயஶ:
ப்ரீத்யா பரமயா யுக்தோ ததாம்யஸ்த்ராணி ஸர்வஶ:
தேவாஸுர கணாந்வாபி ஸகந்தர்வோரகாநபி
ஸயாமித்ராந் ப்ரஸஹ்யாஜௌ வஶீக்ருத்ய ஜயிஷ்யஸி||
ஸ்திதஸ்து ப்ராங்கஃமுகோ பூத்வா ஶுசிர்முநிவரஸ்ததா|
ததௌ ராமாய ஸுப்ரீதோ மந்த்ரக்ராமமநுத்தமம்||”
                                                                      (வா.ரா. பா.கா. சரு.27, சுலோ. 2,3, 21)

சக்கரவர்த்தி திருக்குமாரரான ஸ்ரீராம! உன்னிடத்தில் யான் மிகுதியும் சந்தோஷ முடையவனானேன். உனக்கு மங்களமுண்டாகட்டும். யான் அறிந்ததான எல்லா அஸ்த்திர ஶஸ்த்திர மந்திரங்களையும் உனக்கு உபதேசிக்கிறேன். அதனால் தேவாஸுர கந்தருவாதி கணங்களை யுத்தத்தில் வஶ்யஞ் செய்து ஜெயிப்பாய்" என அருளிச் செய்து முனிவர் கிழக்கு முகமாயிருந்து மிக்க ப்ரீதியுடன்கூடி அஸ்த்திர ஶஸ்த்திரங்களின் மந்திரங்கள் யாவற்றையும் ஸ்ரீராமபிரானுக்கு உபதேசஞ் செய்தருளினார்.

மறுபடியும் விஶ்வாமித்திர முனிவர் ஸ்ரீராமபிரானை நோக்கி,
க்ருஶாஶ்வதநயாந்ராம பாஸ்வராந்நாமரூபிண:|
ப்ரதீச்ச மம பத்ரம் தெ பாத்ரபூதோஸி ராகவ||
                                                      (வா.ரா. சரு.28, சுலோ.10)
ஸ்ரீராம! க்ருஶாஶ்வபுத்திரர்களும், பிரகாசத்தோடு கூடியவர்களும், காம ரூபிகளுமான உபஸம்ஹார மந்திரங்களையெல்லாம் உனக்கு உபதேசம் செய்கிறேன் பெற்றுக்கொள். உனக்கு க்ஷேமமுண்டாகும். இவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நீயே தகுதியுடையவன்" என அருளிச்செய்து அம் மந்திரங்களையும் உபதேசஞ் செய்தருளினார்.

இதனால் ஆசார்யன் தகுந்த சீடனுக்கே உபதேசம் செய்ய வேண்டுமென்பது ஸூசிதம்.