சனி, 25 செப்டம்பர், 2010
Click on the image
தேசிகப்ரபந்தம் --முன்னுரை
சாதி
துர்வாதியர்க்கு:- சலம். சாதி. நிக்ரஹஸ் தாநம் என்னும் விதண்டையின் பாற்படும் குற்றவாதமாகும். துர்வாதியர்க்கு சாதி, ஒன்றே தஞ்சமாகும்.
வெறிநாய்க்கு: சாம்பர்மேடு: நாய்க்குக் குப்பைமேடே தஞ்சமாகும்.
ஒழுக்கம் கெட்ட பார்ப்பானுக்கு: பிறப்பு ஒன்றே தஞ்சமாகும். வேதவுணர்வு தரும் ஒழுக்கம், அருள், துறவு என்ற எதுவும் அறவே இல்லாது பிறப்பு என்ற ஒன்றையே பற்றித் தடித்துத் திரிபவன்.
புறம்பட்டார்
துர்வாதியர்: துய்ய நீதிவாதியர்களால் வாதமேடைக்குப் புறம்பே தள்ளப்பட்டவர்கள்.
வெறிநாய்: வீட்டுக்குப் புறம்படுத்தி விலக்கப்பட்டுள்ளது, அதைத் தீண்டக்கூடாது.
ஒழுக்கம் கெட்ட பார்ப்பான்: உண்மைக்கும், அறத்துக்கும், கோட்டிக்கும், நற்கிரிசைகளுக்கும், மற்றும் எல்லா விதநன்மைகளுக்கும் புறம்பட்டவன், அவனை அறவோர் கூட்டிக்கொள்ளார்.
சகனியவிருத்தி:
துர்வாதியர்க்கு:- சகனிய விருத்தி என்பது இலக்கணை என்னும் விருத்தி. சொல்லின் குறித்தொழிலை இலக்கணை என்பர். மொழிதானே நேரே உணர்த்தும் முக்கிய விருத்தியை (அதாவது நேரிய பொருளை)க் கைக் கொள்ளாது ஒருபடி அதனடியாகப் பிறக்கும் இலக்கணை என்னும் குறிப்பு ஒன்றையே கைக் கொள்வார் என்றபடி. சொல் உணர்த்தும் நேரிய பொருளைக் கைக்கொள்ள ஏலாவாறு வலிய வாதைகள் உறும் இடத்தில் மட்டிலுமே வேறுவழி இல்லாமை பற்றி சகனியவிருத்தி என்னும் இலக்கணையை நீதிவாதியர் இசைவார்கள். எவ்விடத்திலுமே இலக்கணை ஒன்றையே பற்றுதல் வாதியர்க்கு இழுக்கு. குறித்தொழில் ஒன்றையே கைக்கொண்டு சொற்பொருளைக் கைவிடுபவர் வாதியர் என்று கருதப்படார் என்றபடி.
நாய்க்கு: சகனியவிருத்தி என்றது குறித்தொழில்.
ஒழுக்கம்கெட்ட பார்ப்பானுக்கு: சகனியவிருத்தி என்றது இழிதொழில். வகுத்த செய்தொழிலை விடுத்து விலக்கிய இழி தொழில்களையே கைக்கொள்ளல் இழுக்கு.
வெகுண்டு:
மூவருமே வெறிபிடித்தவர்கள் என்றது கருத்து. துர்வாதியரும் ஒழுக்கம் கெட்ட பார்ப்பானும் நெறிப்பட நல்லார் சொல்லும் பொருளைக் கேளாது அவர்கள்மீது சீறி வெறிப்பார்கள்.
எதிர்மேல் விழப் பாய்வர்கள்
மூவருமே மேல்விழுந்து பிடுங்குவார்கள். நெறியில் அடக்க முயலும்நல்லார்களை மூவரும் கடித்துப் பிடுங்குவார்கள். ஒன்றுபல்லாற் கடிக்கும். இருவர் நாவினால் சுடுவார்கள். வகையே அவர்களது கைம்முதல், வெறியே அவர்களது இயல்பு.
ஓரிலச்சையாதுமிலர்: மூவரும் வெட்கத்தை உதிர்த்துத் திரிபவர்கள்.
நரர்யாவரும் நாண ஆடுவர்: மூவருமே மானமற்றுச் செய்யும் இழிதொழில்களால் மானிகளான நன்மக்கள் அனைவரையும் நாணச் செய்வார்கள். இவர்கள் வெறியாட்டம் மானிகளை நாணச்செய்யும்(எ-று)
மூதறிஞர்களின் வாதமேடை துய்யதோர் வேள்வி மேடை என்ற உண்மை தெளிக. உண்மை என்னும் திருவைக் காண்டலே இவ்வேள்விக்கு அவபிரதம். துய்யர்க்கே வாதம். பொய்யர்க்கல்ல. நான்மறைகளின் உள்ளக்கருத்தை உணர்த்தும் உபநிடதமொழிகளைச் சான்ற ஊகங்களை உதவியாகக் கொண்டு, ஐயந்திரிபறத் தெளிந்து துணிந்து, அத்தெள்ளியதுணிபுக்குத்தக ஒழுகி ஒழுக்கத்துத் துறந்து, பரம்பொருளின் திருவடிக்கு உயிர்ப்பொருளை அவியாக வடித்திட்டு மீளாத பேரடிமைக்கு அன்பு பெறுதலே சிறப்புணர்வு, சிறப்பொழுக்கம், சிறப்புத்துறவு என்னும் மதிநலப்பெருந்திருவாகும். வீட்டுப்பாலின் பாற்படும் சிறப்புமறை நூல்களுக்கு ஒருமை உயிர்நிலையாகும். ஒருபொருண்மையற்றல் ஒரு நூன்மை அற்றேபோம். இறைநிலை உணர்வு பலதலை உணர்வையும் கலப்புணர்வையும் பொறாது. இறைநிலை உணர்வுக்கு ஒருமை என்றது பெயர். ஒருமையென்றது இறையுணர்வாகும் என்றது நிகண்டு. ஆதலால் ஒருமையில் தலைக்கட்டும் பெருஞ்சமய நூல்களுள் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. ஒவ்வொருமறைப்பெருஞ் சமயமும் உணர்தற்கரியதோர் நன்மறைக் கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அக்கருத்து அச்சமயத்தின் சிறப்புக்கோட்பாடு ஆகும். அச்சிறப்புக் கோட்பாட்டை ப்ரதாந ப்ரதிதந்த்ரம் என்பர். ஒவ்வொரு சித்தாந்தத்திலும் ப்ரதிதந்த்ரம் அமைந்திருக்கும். அஃது இல்லையேல் அது சிந்தாந்தமாகாது. இது சித்தாந்திகள் எல்லாரும் இசைந்ததே. இதை:- சித்தாந்தம் என்பது யாதெனில் சான்று தெளியக்காட்டும் பொருள் என்பர். அது ஸர்வதந்த்ரம், ப்ரதிதந்த்ரம், அப்யுபகமம் என்னும் வேற்றுமையால் மூவகைத்து ஆம். யாது ஒன்று இல்லையேல், வாத வழக்கு என்பது அறவே உறதோ அது அனைவரும் உடன்பட்டுள்ள ஸர்வதந்த்ரம் என்னப்படும். அதற்கு உதாரணம்:- ப்ரமாணத்தால் ப்ரமேயசித்தி என்பது முதலியன. மாத்தியமிகர்கள் (சூரியவாதராகும் பௌத்தசமயத்துள் ஒருவகுப்பினர்) போல்வாரும் ஸம்வ்ருதம் முதலியபேரால் ப்ரமாணப்ரமேயவழக்கை உடன்பட்டுள்ளார்கள். தமது சமயம் ஒன்றிலேயே சித்தமாயும் சமயத்தார் பிறரால் மறுக்கப்பட்டதாயும் உள்ள சித்தாந்தம் ப்ரதிதந்த்ரசித்தாந்தம் என்னப்படும். அதற்கு உதாரணம்:- (பிற்காலத்து) வையாகரணர்க்கு ஸ்போடம் பௌத்தர்க்கு ஷணபங்கம், திகம்பரர்க்கு ஸப்தபங்கி, கௌமாரிலர் முதலியர்க்கு சப்தபாவனை முதலிய ஏவற்பொருண்மை, வேதாந்தம் வல்லார்க்கு இறைவனது ஸர்வசரீரித் தன்மை முதலியது. இவைகள் ஏனைய சித்தாந்தங்களுக்கு உடன்பாடற்ற ப்ரசித்தநிலையில் பிரதிதந்த்ரங்கள் என்னப்படும். மற்றோர் சித்தாந்தியும் அந்த (ப்ரதிதந்த்ர)ப் பொருள்களை உடன்படுவாரேல் அப்பொழுது அவை அந்த சித்தாந்திக்கு அப்யுபகமசித்தாந்தத் தன்மையை (உடன்படுசித்தாந்தத் தன்மையை) அடையும், என்று ந்யாயபரிசுத்தியில் இம்மஹாதேசிகர் விளக்கினார். நீதிநெறியில் தத்துவங்களைக் கசடற ஆய்ந்து தெளியக் கண்டு மதிநலத்தில் நிலையுற்று ஒழுகும் துய்யரே நல்லாராவார் என்ற இம்மஹாதேசிகர் தெளிவிக்கும் நயப்பொருள் காண்க.
வியாழன், 23 செப்டம்பர், 2010
தேசிகப்ரபந்தம்
ப்ரபந்த வுணர்வு : பொது: சிறப்பு:
இம்மாலை திருமாலடியார்க்குச் சிறப்புமறையாயும் பெருஞ்சமயத்தாரனைவர்க்கும்பொதுமறையாயும் ஒருபடி சிறப்புமறையாயும் விளங்கும் சீர்மை உடையது. “மூன்றி லொருமூன்று மூவிரண்டு முந்நான்குந் தோன்றத் தொலையுந் துயர்” 1 என்ற இம்மாலைக்குறள் வெண்பா, திருமாலடியார்க்குச் சாலச் சிறக்குமோர் மூலமந்திரஸாரமாயிருக்கச் செய்தே பெருஞ்சமயத்தார் பிறர்க்குமே ஒப்பச் சிறப்புமறையாமாறு பணிக்கப் பெற்றுள்ள வள்ளன்மையை பெருஞ்சமயத்தார் பிறர்2 விளக்கிப் போற்றியுள்ளதுகண்டு இம்மாலை வைதிக சமயத்தார் அனைவர்க்கும் பொதுமறையாமாறும் வைணவர்கட்குச் சிறப்பு மறையாயும் திகழும் சால்பு நன்கு நோக்கி உணரற்பாலது. இம்மாலையுள் சில பாடல்களை இங்கு எடுத்துக் காட்டுவாம்:--
குறள் வெண்பா
முத்திக் கருள்சூட மூன்றைத் தெளிமுன்ன
மித்திக்கா லேற்கு மிதம்.3
வெண்பா
தத்துவங்க ளெல்லாந் தகவா லறிவித்து
முத்திவழி தந்தார் மொய்கழலே – யத்திவத்தில்
ஆரமுத மாறா மிருநிலத்தி லென்றுரைத்தார்
தாரமுத லோதுவித்தார் தாம்.4
எனதென் பதுமியா னென்பது மின்றித்
தனதென்று தன்னையுங் காணா – துனதென்று
மாதவத்தான் மாதவற்கே வன்பரமாய் மாய்ப்பதனிற்
கைதவத்தான் கைவளரான் காண்.5
எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
ஊன்றந்து நிலைநின்ற வுயிருந் தந்தோ
ருயுராகி யுள்ளொளியோ டுறைந்த நாதன்
தான்றந்த வின்னுயிரை யெனதென் னாமல்
நல்லறிவுந் தந்தகலா நலமுந் தந்து
தான்றந்த நல்வழியாற் றாழ்ந்த வென்னைத்
தன்றனக்கே பரமாகத் தானே யெண்ணி
வான்றந்து மலரடியுந் தந்து வானோர்
வாழ்ச்சி தர மன்னருளால் வரித்திட்டானே.6
கழியாத கருவினையிற் படிந்த நம்மைக்
காலமிது வென்றொருகாற் காவல் செய்து
பழியாத நல்வினையிற் படிந்தார் தாளிற்
பணிவித்துப் பாசங்க ளடைய நீக்கிச்
சுழியாத செவ்வழியிற் றுணைவ ரோடே
தொலையாத பேரின்பந் தலைமே லேற்றி
அழியாத வருளாழிப் பெருமான் செய்யு
மந்தமிலா வுதவியெலா மளப்பா ராரே.7
வேரொப்பர் விண்முதலாங் காவுக் கெல்லாம்
விழியொப்பார் வேதமெனுங் கண்ட னக்குக்
காரொப்பார் கருணைமழை பொழிந்தி டுங்காற்
கடலொப்பார் கண்டிடினுங் காணாக் கூத்தால்
நீரொப்பார் நிலமளிக்குந் தன்மை தன்னால்
நிலமொப்பார் நெடும்பிழைகள் பொறுக்கு நேரால்
ஆரொப்பா ரிவர்குணங்க ளனைத்துங் கண்டால்
அருளாளர் தாமெனினுந் தமக்கொவ் வாரே.8
நிலைமண்டிலவாசிரியப்பா
பயின்மதி நீயே பயின்மதி தருதலின்
வெளியு நீயே வெளியுற நிற்றலின்
தாயு நீயே சாயைதந் துகத்தலின்
தந்தையு நீயே முந்திநின் றளித்தலின்
உறவு நீயே துறவா தொழிதலின்
உற்றது நீயே சிற்றின்ப மின்மையின்
ஆறு நீயே யாற்றுக் கருள்தலின்
அறமு நீயே மறநிலை மாய்தலின்
துணைவனு நீயே யிணையிலை யாதலின்
துய்யனு நீயே செய்யா ளுறைதலின்
காரண நீயே நாரண னாதலின்
கற்பக நீயே நற்பதந் தருதலின்
இறைவனு நீயே குறையொன் றிலாமையின்
இன்பமு நீயே துன்பந் துடைத்தலின்
யானு நீயே யென்னு ளுறைதலின்
எனது நீயே யுனதன்றி யின்மையின்
நல்லாய் நீயே பொல்லாங் கிலாமையின்
வல்லாய் நீயே வையமுண் டுமிழ்தலின்
எங்ஙன மாகு மெய்யநின் வியப்பே
அங்ஙனே யொக்க வறிவதா ரணமே.9
இவ்வாறு பொதுவாயும் சிறப்பாயும் ஆரணப் பொருளை இனிது விளக்கியுள்ளவாற்றை ஓர்ந்துணர்க. “முத்தமிழ் சேர்ந்த மொழித்திரு”10 என்றும் “ திருமாறன் கருணை”11 என்றும் வேதப்பொதுமையும் உபநிடதச் சிறப்பும் ஒன்ற நூற்றுள்ள ஆற்றல் இவரது உபய வேதாந்த வள்ளன்மையை நன்கு விளக்கும். பொது சிறப்பு என்ற பாகுபாட்டையும் அதன் நன்மையையும் நன்கு உணரவேண்டும். பொது சிறப்பு என்றது பாகுபாடே அன்றி முரண்பாடு அன்று என்ற உண்மை இம்மஹாதேசிகரது நூல்களில் நன்கு காணலாம். இவரது ‘ஸுபாஷிதநீவி’ போன்ற நூல்கள் முற்றுமே பொது. அவை மக்கள் அனைவர்க்குமே ஒக்க உதவும் முறையில் ஆக்கப் பெற்றுள்ளன. பாதுகாஸஹஸ்ரத்தில் “ஸுபாஷித பத்ததி” என்ற ஓர் பத்ததியை அமைத்துள்ள அருமை காண்க. அப்பத்ததி யிரதம்சுவைப்பார்க்கு அவ்வாயிரநூல் முற்றுமே எல்லாப் பெருஞ் சமயத்தினர்க்கும் சிறப்பு நூலாமாறு ஆக்கப் பெற்றுள்ள நீர்மை சாலப் புலனாகும். பொது சிறப்பு என்ற பாகுபாட்டின் நலத்தை இம்மஹாதேசிகரது நூல்கள் தெரியக்காட்டும் அருமை நன்கு ஓர்ந்து உணர வேண்டும். மறை என்பது மக்கள் அனைவர்க்கும் பொது. அது சிறக்குங்கால் விகற்பிக்கும். இவ்வுண்மை நன்கு உணர்ந்து தெளிய வேண்டியதோர் அடிப்படையான பேருண்மை. பொது சிறப்போடு முரணாது. சிறப்பு பொதுவோடு முரணாது. பொதுவை நோக்கவே சிறப்பு. சிறப்பை நோக்கவே பொது. ஒன்று பொதுமையின் சிறப்பு. மற்றொன்று சிறப்பின் பொதுமை. மெய்யுணரும் மக்கள் பொதுவில் தொடங்கிச் சிறப்பில் முற்றி நிலைபெறுகின்றார்கள். பொதுமையின் முதிர்வும் கனிவுமே சிறப்பு. பொதுமை சிறவாக்கால் நிலையுற்ற பெரும்பேறாகிய வீடு என்னும் அந்தமில் பேரின்பத்தைப் பயத்தற்காகாது என்றது எல்லாப் பெருஞ் சமயத்தார்க்கும் ஒத்ததோர் உடன்பாடு. பொது முப்பாலின் பாற்படும். சிறப்பு வீட்டின் பாற்படும். முப்பாலில் ஒற்றுமை. வீட்டுப்பாலில் வேற்றுமை. வீட்டுப்பால் ஒருமையாயே தலைக்கட்டும். உயிர்கள் பரங்கதி பெற்று உய்யும் உணர்வானது பலதலைப்படாது ஒருதலையாய் விகற்பற, ஒருமைத் தெளிவின் உறுதிப்பாட்டில் நிலைகொண்டு நிகழும் கற்புணர்வாகும். இவ்வுணர்வை மறைமூதுவர் மெய்யுணர்வு என்பர். “வேதங்கள் மீண்ட நிலமெல்லாம் மெய்யுணர்ந்து “12 என்று இம்மஹாதேசிகர் பணித்துள்ளது காண்க. மெய்யுணர்வு என்றதால் சிறப்புணர்வு சொல்லப்பட்டது. பலதலையான உணர்வை அறுத்து ஒருதலையாய் உண்மை தெளியும் உணர்வு மெய்யுணர்வாகும். ஆதலால் இது சிறப்புணர்வு கற்புணர்வு இற்பிறப்புணர்வு. “உய்யப்போ முணர்வினார்கட் கொருவனென்றுணர்ந்த பின்னை, ஐயப்பா டறுத்துத்தோன்று மழகனூரரங்கம்” 13 என்றும், “புந்தியுட் புகுந்து தன்பாலாதரம் பெருகவைத்த வழகனூ ரரங்கம்” 14 என்றும் இச்சிறப்புணர்வை ஒருவனுணர்வு என்றும் அகமுடையானுணர்வு என்றும் தொண்டரடிப் பொடியாழ்வார் விளக்கினார். மெய்ப்பொருளனைத்தையும் திருமாலிடத்து நேரே பெற்றுணர்ந்த வேதமூர்த்தி யாகிய திருமங்கையாழ்வார், திருமந்திர உணர்வில்லாதாரை “இற்பிறப்பறியீர்”15 என்று பாடியுள்ளது கண்டு சிறப்புணர்வு என்றது கற்புணர்வு என்ற உண்மை தெளியலாம். இப்பொருளை “இற்பிறப்பென்ப தொன்று மிரும்பொறை யென்பதொன்றும் கற்பெனும்பெயர தொன்றுங் களிநடம் புரியக் கண்டேன்”16 என்று கம்பர் விரித்து விளக்கினார். “நல்கரி பாது நிற்கென்றொரு கற்பிற் பல்குவி ருத்திவி கற்புப யக்கும் தொல்கவி வேங்கட வன்கலை வாணி,மல்களி நீகொ ளரங்கினிலாடும்”17 என்று இம்மஹாதேசிகர் இப்பொருளைத் தொனிப்பொருளாய்ப் பின்னும் அழகுறப் பாதுகாஸஹஸ்ரத்தில் பாடியருளியது காண்க. வேத உணர்வு பொது உணர்வு. அதன்முடியாகிய உபநிடதவுணர்வு சிறப்புணர்வு. பொதுவான வேதத்தின் முற்பாகம் உபநிடதமாகிய மேற்பாகத்தில் சிறக்குங்கால் சமயவிகற்புகள் தோன்றுகின்றன. அவ்வாறு விகற்புகள் தோன்றுவது இயல்பே. அது பொதுமைக்கு முரணன்று. பொதுவாகிய வேதத்தின் முற்பாகத்தை சிறப்பாகிய உபநிடதத்தில் ஒருமைப் படுத்துங்கால் சமயங்கள் வேறுபாடுறுகின்றன. அவை அறிஞர்களின் மதிவிகற்பினடியாகப் பிறக்கும் வேறுபாடுகளே அன்றிப் பொதுமைக்கு முரண்பாடன்று. நீதிவல்லார்களாகிய மதிமிக்க மறைமூதுவர்களின் சிறப்பு நூல்களில் இவ்வுண்மை நன்கு காணலாம். அறிஞர்க்கே உற்றது வாதம். அறியாதார்க்கு வாதத்தில் இடமில்லை. அறிஞர்களின் மதிவிகற்பில் நிகழ்வதே வாதமாகும். அது நெறியில் நிகழும் மதியின் செயல். அறிஞர்க்கே நெறி. அறியாதார்க்குற்றது வெறியே. குருட்டுக் கண் இருட்டுக்கஞ்சாது என்ற கணக்கிலே அறியாமையைக் கொண்டு அறிவைத் தாக்கப் புகும் அறிவிலிகளின் வெறியை வாதம் என்று மருள்வார்கள் அறிவிலிகளே. அறிவிலிகளாகிய வெறியர்களைப் பற்றிய பேச்சுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் வாதத்துக்கு அறவே புறம்பட்டவர்கள். நீதிநல்லார்கள் அவர்களை வாதமேடையில் ஏறவிடார். இவ்வுண்மையைக் கவிவாதியர் போரேறாகிய இம்மஹாதேசிகர்
“சாதிய தொன்றே தான்சர ணாகப் புறம்பட்டார்
ஆதர மேவிச் சகனிய விருத்தி யாழ்வர்சிலர்
மோதவெ குண்டெதிர் மேல்விழப் பாய்வர்க ளோரிலச்சை
யாதுமி லார்நரர் யாவரும் நாணிட வாடுவரே”18
என்று ஸங்கல்பஸூர்யோதயத்திலும் ஸுபாஷிதநீவியிலும் கூறியுள்ளது காண்க. இது முப்பொருட் சிலேடைப்பா. துர்வாதியர், (வெறி) நாய், பிறப்பொழுக்கம் கெட்ட (பார்ப்பான்) இம்மூவர்க்கும் சிலேடை.
1. தேசிகமாலை அமிர்தரஞ்சனி 4.; 2. இது ந்ருஸிம்ஹ ப்ரியா ஸம்புடம் 6 பக்கங்கள் 84-85 எடுத்து எழுதப் பட்டிருக்கிறது.; 3. அமிர்த 4; 4 அமிர்தரஞ்சனி 9; 5 ௸25; 6 அமிர்தரஞ்சனி 32; 7 அமிர்தஸ்வாதினி 30; 8 அத்திகிரிமான்மியம் 22; 9 மும்மணிக்கோவை 7; 10 அதிகார 40;
11 ப்ரபந்தஸாரம் 18; 12 பரமபதஸோபாநம்; ப்ராப்திபருவம்; 13 திருமாலை 15; 14 திருமாலை 16; 15 பெரியதிருமொழி 1-1-7; 16 இராமாவ சுந்தர, திருவடி 62; 17 பாதுகா 17 (தமிழ் செய்தது) திருப்பாதுகமாலை. 18 ஸங்கல்பசூர் 5-3-9; ஸுபாஷித 4 –11; (தமிழ் செய்தது)